சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தபடி அம்பையின் சிறகுகள் முறியும் சிறுகதை தொகுப்பைப் பற்றியதுதான் இந்த பதிவும். சிறகுகள் முறியும் என்ற கதை பொன்ஸின் பாஷையில் சொல்வதானால் சற்றே பெரிய கதை. எனவே என் வழக்கப்படி முழுக் கதையையும் இங்கே தட்டச்சு செய்ய முடியவில்லை. எனவே சில பகுதிகளை இங்கே உங்கள் முன் வைக்கிறேன்.
ஆண்கள் உடம்பெல்லாம் வயிறாக, மார்புச் சதை தொங்க ஊதக்கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள் சாயா.
இப்படி மனத்தளவில் பல சட்டங்களை சாயா உருவக்கியிருக்கிறாள்.
1. ரோமம் இல்லாத வழவழத்த மார்பு உள்ள ஆண்கள் மணக்கக் கூடாது என்றொரு சட்டம்.
2. வெற்றிலை சாப்பிட்டுச் சாப்பிட்டுத் தகரம்போல் நசுங்கிக் கிடக்கும் பற்களை உடைய ஆண் முத்தமிடக் கூடாது என்றொரு சட்டம்.
3. ஆவலுடன் மனைவியின் கண்கள் ஒரு பொருளின் மீது படியும்போது பர்ஸைக் கெட்டியாக மூடிக்கொள்ளும் கணவனின் பர்ஸ் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றொரு சட்டம்.
இப்படி எத்தனையோ.
அத்தனை சட்டங்களும் அமுலாக்கப்படும் பட்சத்தில் வெகுவாக பாதிக்கப்படப்போகும் ஒருவன் அவள் முன் அமர்ந்து, மலை மாதிரி உடம்பில் வியர்வை பெருக "ரஸம் ஒரே சூடு" என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
"நிதானமா சாப்பிடலாமே, என்ன அவசரம்?" என்றாள் சாயா.
"என்னது?" என்று அந்த "எ...ன்...ன...து"வை வாயில் அரைத்தவாறே அவன் கேட்டான்.
ஒதுங்கிப்போகும் பெண் நாயைப் பார்த்து உறுமும் ஆண் நாயின் உறுமலில் கூட இன்னும் மென்மை இருக்கும் என்று நினைத்தாள் சாயா.
"அம்மா, சாதம் ஜாஸ்திம்மா" என்று சிணுங்கினான் சேகர்.
"என்னடா ஜாஸ்தி ராஸ்கல்? அரிசி என்ன விலை விக்கறது? உதை விழும். சாப்பிடுடா."
சேகரின் கன்னங்கள் இரண்டும் அழுகையை அடக்கியதால் பிதுங்கின. சாயா மனதில் அவசர சட்டம் ஒன்றைத் தீர்மானித்தாள்.
மென்மையே இல்லாத ஆண்களுக்குக் குழந்தையே பிறக்கக்கூடாது என்று கட்டாய வாசக்டமி செய்துவிட வேண்டும்.
பாஸ்கரன் பெண் பார்க்க வரும்போதே பருமன் தான். தமிழ்ப்பட ஹீரோக்களை பார்த்துப்பார்த்துப் பழகிவிட்டதாலோ என்னவோ சற்றே ஸ்தூல சரீரம் ஆண்மைக்கு அழகு என்றொரு கற்பனை சாயாவுக்கு.
அம்மா மெல்லச் சொன்னாள் "மாப்பிள்ளைக்கு நல்ல வேலை. ஆனால் கொஞ்சம் ஸ்தூல சரீரம். நம்ப சாயா கொடி மாதிரி ஒல்லி. பொருத்தம் இல்லையே?" என்று இழுத்தாள்.
சந்துரு மாமாவுக்கு கோபம் வந்துவிட்டது. "என்ன அத்திம்பேர், இவ உளர்றா? நல்ல ஆரோக்கியமா இருக்கான் பையன். ஜுரத்தில் அடிபட்டவன் மாதிரியா ஆம்பளை இருப்பான்? இவ மட்டும் என்ன? பிள்ளை கிள்ளை பெத்தா பருத்துடுவா" என்று கத்தினார்.
சாயாவுக்கு பரிபூர்ண சம்மதம். அவள் மனதில் பாஸ்கரன் ஸ்டைலாக தொந்தி குலுங்க நடந்து, காதல் டூயட் பாடிக்கொண்டிருந்தான்.
சாயா - பாஸ்கரன் - என்ன பெயர்ப் பொருத்தம்!
அகத்து சாஸ்திரிகள் சொன்னார் "ஹாங்! பெயர்ப் பொருத்தத்தைப் பார்த்தேளா? ராமர் ஸீதை ஜோடின்னா இது?"
"சாயா, அந்த மாங்காய் ஊறுகாய் போடேன். ஒரு மாசமா போட்டுக்கவேயில்லை."
மாங்காய் ஜாடியைத் திறந்தாள். பஞ்சுப்படுக்கை விரித்தாற்போல் பூஞ்சைக்காளான் பூத்து கிடந்தது.
"ஐயையோ..."
"என்ன? கெட்டுப் போயிடுத்தா?" என்றான் பாஸ்கரன்.
தலை அசைத்தாள்.
"பணத்தைக் கொட்டி வாங்கினது. உனக்கு ஆனாலும் கவனம் போறாது."
உதட்டைக் கடித்துக் கொண்டாள் சாயா. அவள் தவறுதான். ஜாடியைக் குலுக்கிவிட வேண்டும் என்கிற ஞாபகமே இல்லை. "அத்தனை உப்பும், காரமும், எண்ணையும் வீண். பணத்தோட அருமை தெரிஞ்சால்தானே?" என்று கத்திவிட்டு கையலம்பப் போய்விட்டான் பாஸ்கரன்.
உப்பும், காரமும், எண்ணெயும்...ஹூம்! எங்கேயும் போய்விடவில்லை. அத்தனை உப்பும் காரமும் சேர்ந்துதான் நெஞ்சில் பற்றிக்கொண்டு எரிகிறதே? எண்ணெய் முகத்தில் வழிகிறதே?
இப்படி தொடங்கும் கதையில் தன் மனசுக்குள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சட்டத்தை கற்பனை செய்துகொள்ளும் பெண்ணாக சாயாவின் பாத்திரம் விரிகிறது. அவளது இந்த விசித்திரக் கற்பனைகளோடே வாழும் வாழ்வில் அவளடையும் ஒவ்வொரு ஏமாற்றமாக சொல்லிக்கொண்டே போய் கடைசியில் அவளது சிந்தனைகளையும் தன்னுடையதைப் போலவே மாற்றும் கணவனின் சிந்தனைப் போக்கும் விவரிக்கப்படுகிறது. ரொம்பவே அழகாய் 70களின் இல்லத்தரசிகள் நிலையை சொல்லிச்செல்லும் கதையிது. வழக்கமாய் எல்லாப் பெண்களும் செய்வது போல அம்மாவின் அருமையும் அவளைத் தான் படுத்திய பாடுகளும் திருமணத்துக்குப் பின் உரைக்க நினைத்து ஏங்குகிறாள் சாயா.
சாயா சாப்பிட உட்கார்ந்தாள். சேகர் மீதம் வைத்த சாதத்துடன் கொஞ்சம் சாதம் போட்டு பிசைந்தாள். வற்றல் குழம்பில் பிசைந்து கொண்டபோது அம்மா ஞாபகம்தான் வந்தது. என்னமாய் படுத்தி வைத்திருக்கிறாள் அவளை!
வற்றல் குழம்பு தட்டில் விழுந்தாலே, தட்டு பறந்து முற்றத்தில் போய் விழும். கையை உதறிக்கொண்டு எழுந்து விடுவாள். "எனக்குப் பிடிக்காததை நீ எப்படி சமைக்கலாம்?" என்று கத்துவாள்.
பிடிக்காதது!
சிறையில் கைதிக்கு கஞ்சி விடும்போது "ஆஹா, எங்கே கத்திரிக்காய் பஜ்ஜி? வெறும் கஞ்சி பிடிக்காதே" என்றானாம்!
அம்மாவை அலைக்கழித்ததற்குத்தான் இந்த தண்டனையோ?
ஒரு தடவை பள்ளியிலிருந்து வந்ததும் "என்னம்மா டிபன்" என்று கத்தினாள்.
"இட்லி."
தட்டில் இட்லி விழுந்ததும் "மிளகாய்ப் பொடி" என்றாள்.
மிளகாய்ப் பொடி வரவில்லை. சட்னி வந்தது.
"மிளகாய்ப் பொடி இல்லை." என்றாள் அம்மா.
பாவாடையை உதறிக் கொண்டு எழுந்துவிட்டாள் சாயா.
அப்புறம் அரைமணிக்குள் அம்மா வறுத்து இடித்துவிட்டாள்.
"இதை அப்பவே இடிச்சுத் தொலைக்கறதுதானே?"
"இடிச்சிருக்கலாம். இன்னிக்கு என்னவோ ஒரே மார்வலி." குபுக்கென்று நெஞ்சையடைத்தது சாதம். அம்மா! கரகரவென்று கண்ணில் நீர் பெருகியது. எச்சிற் கையோடு உட்கார்ந்துகொண்டே இருந்தாள். நெஞ்சம் கேவியது.
ஒவ்வொன்றிலாய் ஈடுபாட்டை இழக்கும் அவள் கடனே என்று வாழத்தொடங்குகிறாள். இன்றைய குடும்பத்தலைவிகள் பலருக்கும் சீரியல்களிலும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு அம்மன் படங்களிலும் வரும் ஈடுபாடுகளெல்லாம் இதுபோன்ற வெற்றிடத்தை ஏதேனும் இட்டு நிரப்பும் ஒரு முயற்சிதான்.
"நாக்கு நீளம் சாப்பாட்டு விஷயத்தில்." என்று அம்மாவிடம் குட்டுப்பட்டவள்தான்.
கல்யாணமான புதிதில் சேலத்துக்கு வேலை விஷயமாய்ப் போனான் பாஸ்கரன். அப்போது மாம்பழக்காலம். மாம்பழத்தை நறுக்காமல், கையில் அதன் ரஸம் ஒழுக, சதைப்பகுதியில் பற்கள் அழுத்திப் பதித்து வெண்ணெய்க்கட்டியாய் மாம்பழம் வாயில் போகும்படி சாப்பிடுவதில் அவளுக்கு அலாதிப் பிரியம்.
"வரும்போது கட்டாயம் மாம்பழம், ம்?"
அவன் திரும்பி வரும்போது முகமெல்லாம் ஆர்வம் கொப்பளிக்க, "எங்கே நான் கேட்டது?" என்றாள்.
"ரொம்ப விலை ஜாஸ்தி, வாங்கலை."
அன்றைக்குத் தன் நாக்கை அவள் அறுத்து எறிந்துவிட்டாள்.
சரோஜாவே அவளிடம் கேட்டதுண்டு.
"ஒண்ணுலேயும் ஆர்வம் இல்லாமல் இருக்கயே மன்னி, எதுக்காகத்தான் நீ இருக்காய்?"
"இருக்கணுமே, அதுக்காக. இதைவிட வேற காரணம் என்னடி இருக்கு?"
தன் கணவனின் குணம் தன்மேலும் படிந்துவிட்டதை அவள் உணர்ந்து கொள்ளும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறாள் சாயா.
"சாயா, அந்த கோபாலன் பையனுக்குப் பூணூலாம். நீ போயிட்டு வந்துடு, நான் பகல்லயே போயிடுவேன்."
"சரி."
"நாளைக்குச் சமைக்க வேண்டாம். அங்கேதான் சாப்பாடு."
"என்ன ப்ரஸன்ட் தரப்போறேள்?"
"பூணூலுக்கெல்லாம் ஒண்ணும் தரவேண்டாம்."
"சாப்பிட மட்டும் போலாமாக்கும்?"
"என் சிநேகிதன் பிள்ளை பூணூலூக்குச் சாப்பிடாம வேற எங்கே சாப்பிடறது?"
"நீங்க போங்கோ. நான் வரலை."
"சரி, வரலைன்னா வேண்டாம்."
அவ்வளவுதான். பஸ் காசாவது மிச்சம். அவன் இன்னொரு முறை கூப்பிட மாட்டான்.
அவளே மீண்டும் கேட்டாள்.
"அப்படின்னா, நீங்க மாத்திரம் போறேளா?"
"நீதான் வரமாட்டேன்கிறாயே?"
"ப்ரஸன்ட் இல்லாம எப்படிப் போறது?"
"குடேன், நீயும்தான் தைச்சு சம்பாதிக்கறயே, அது மட்டும் பணம் இல்லையா?"
கேள்வியை கேட்டு அவள் அதிர்ந்து விட்டாள். சரியான கேள்விதான். அதை உபயோகப்படுத்தலாம் என்று அவளுக்கு ஏன் ஒரு நாளும் தோன்றவில்லை? இப்போது கூட அதிலிருந்து எடுக்க மனமில்லை. அவள் உடல் வெடவெடவென்று நடுங்கியது. அவள் மனதார வெறுக்கும் குணம் அவளிடம், அவளையும் மீறி தொற்றிக் கொண்டுவிட்டதா என்ன? சேகர் சைக்கிள் கேட்டபோதுகூட அவள் அதைப்பற்றி எண்ணவே இல்லையே? சில்லிட்டுப் போன கைகளால் அவள் பக்கத்திலிருந்த நாற்காலியை அவள் பற்றிக்கொண்டாள்.
அவள் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ளும் இந்த இடத்துக்குப் பின்னும் கதை நீள்கிறது. அது அவளது தாயின் கதையையும் விவரிப்பதாக போய் கடைசியில் சாயா தான் மீண்டும் கருவுற்றிருப்பதை இயந்திரத்தொனியில் கணவனிடம் சொல்வதில் முடிகிறது.
அம்பையின் எழுத்து சற்று அதீதப் பெண்ணியம் பேசுவதாயிருக்கிறது என்று முந்தைய பதிவிற்கான பின்னூட்டத்தில் உஷா குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது படைப்புக்களை அந்த காலகட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போது அது உறுத்தலாய் தெரிவதில்லை என்பதே என் கருத்து. வெறும் பெண்ணியம் மட்டுமில்லாது நல்ல அங்கதம் தெறிக்கும் அவரது எழுத்து நடையும் வசீகரமானதே. இந்த தொகுப்பிலேயே கூட
திரிசங்கு - தன்னுடைய சராசரித்தனத்துக்கும் தன்னுடைய லட்சியங்களுக்கும் இடையில் போராடும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை (இந்த இடத்தில் அந்த வயதில் ஒத்த குணாதிசயமுடைய ஒரு ஆணை பொருத்தினாலும் கதையோட்டம் நிச்சயம் கெடாது)
சூரியன் - போரினால் நிலத்தடியில் இருக்கும் பதுங்கு குழியில் வாழ நேரும் ஒரு தாய் தன் மகனுக்கு சூரியன் என்பதையே ஒரு அதிசயமாய் காட்ட வேண்டியிருப்பதின் அவலத்தை சொல்லும் கதை - வியட்நாம் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இக்கதை.
உடம்பு - ஒரு ஆண் நாட்டியக் கலைஞரின் குமுறல்களைச் சொல்லும் கதை.
போன்றவற்றில் பெண்ணியச் சாயலற்ற ஒரு தேர்ந்த படைப்பாளியைப் பார்க்கலாம்.
Friday, July 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
//இப்படி எத்தனையோ.
அத்தனை சட்டங்களும் அமுலாக்கப்படும் பட்சத்தில் வெகுவாக பாதிக்கப்படப்போகும் ஒருவன் அவள் முன் அமர்ந்து, மலை மாதிரி உடம்பில் வியர்வை பெருக "ரஸம் ஒரே சூடு" என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.//
அப்பா என்ன வார்த்தை அமைப்புங்க அது.... இதுலயே அப்படியே மலைச்சு போய் உக்காந்துட்டேன்.
அப்புறம் லக்ஷ்மி உங்க வீட்ல சொத்து பிரிக்கறப்போ எனக்கும் ஒரு பாகம் பிரிச்சு கொடுக்கச் சொல்லுங்க. பின்ன நீங்க பாட்டுக்கு இப்படி இழைச்சு இழைச்சு புத்தகங்களைப் பத்தி எழுதிட்டுப் போயிடறீங்க.
அப்புறம் நாங்க அந்த எழுத்தாளர்ரோட 4 - 5 புத்தகங்களை வாங்க வேண்டியதா இருக்கு. எங்க காசெல்லாம் இதுக்கே போகுது. அந்த பாவம் உங்களைத்தான் சேரும்.
மாசக்கடைசி வேற....
http://blog.nandhaonline
சிறிது நாட்களுக்கு முன் ஒரு பிரபல நாவலின்(பெயர் குறிப்பிட விரும்பவில்லை) விமர்சனம் என்ற பெயரில் அம்மணி ஒன்றை எழுதியிருந்தார்(அதை விமர்சனம் என்று சொல்லக்கூட மனம் வரவில்லை).
அதைப் பார்த்த பின் எனக்குத் தெரிந்து எழுத்துலக நண்பர்களிடம் கேட்டேன், ஏன் இப்படி என்று. அதற்கு பதிலாய்
"அவருடைய பிரதிகளுக்கு வரவேற்பில்லாததால் அப்பப்ப இப்படி பிரபலமான எழுத்துக்களை எடுத்து வைச்சிக்கிட்டு பொளம்புவாங்க" என்று.
இதை முழுமையாக நம்பினேனா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் அந்த ரிவ்யூவை மட்டும் வைத்து இவரை சொல்லமுடியும் ஒன்று அதீத பெண்ணியம் பேசுபவராயோ இல்லை பிரபலங்களின் மீது பொறாமைப் படுபவராயோ.
இதனாலெல்லாம்,
//போன்றவற்றில் பெண்ணியச் சாயலற்ற ஒரு தேர்ந்த படைப்பாளியைப் பார்க்கலாம்.//
கஷ்டம் என்றே தெரிகிறது.
//விமர்சனம் என்ற பெயரில் அம்மணி ஒன்றை எழுதியிருந்தார//
இல்லை நான் படித்திருந்தேன் என்பது தான் சரி. அதை எழுதி ஆண்டுகள் இருக்கு.
பொறாமைக்கும் பெண்ணியத்துக்கும் என்னய்யா மோகனா சம்பந்தம்? பொண்ணுங்கன்னா பொறாமைப்படக்கூடாதுன்றீங்களா, இல்லை பொறாமைப்படறவங்கன்னா பெண்ணியம்தான் எழுதுவாங்கன்றீங்களா? என்ன சொல்ல வர்ரீங்க? வழக்கம்போல குழப்புறயே ராசா... :)
அப்புறம் நந்தா, சொத்து பிரிக்கறவரையெல்லாம் போகவேணாம். எப்போ வேணுமோ என் புக்ஸ்ல எது வேணுமோ சொல்லுங்க, தர்ரேன். படிச்சுட்டு திருப்பித்தந்தாக்க போதும். :)வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நான் சொல்வது சொல்ல வந்தது ஒன்றுதான்; இவரிடம் அதீத பெண்ணீய சாயலில்லாத ஒரு பிரதியை எதிர்பார்க்கமுடியாதென்பதைத்தான்.
அம்பையின் "வீட்டின் மூலையில் ஒரு சமையலறை"யில் அந்த ராஜஸ்தானிக் குடும்பப் பெண்கள் நாள் முழுக்க வேலை செய்தபடியே இருப்பார்கள்; "உல்லாசப்பயணம்" - ஒரு பிக்னிக் போகும்போதும் வீட்டு ஆண்கள் மற்றும் குழந்தைகள் தேவைகளை கவனிப்பது, உணவு பரிமாறுவது, அடுக்குவது, சுத்தம் செய்வது என்று வேலை...ஓயாது. படித்த மருமகள்களும் இதே கதிதான். கதையில் ஒரு பாத்திரம் இதைப் பற்றிக் கேட்கும்போது அந்தக் குடும்பத்து ஆணின் பதில் - " ஆங்.. பெண்கள் இதுக்கெல்லாம் பழக்கப்பட்டவர்கள்தானே?" மாமியார் இதன் நடுவில் தன் இன்னொரு மகனுக்கு வரன் தேடுகிறார். " நிறையப் படித்த, ( இது மிக முக்கியம்!!)ஆனால் "அமைதியான, அடக்கமான" ( வாய் திறக்காத)நல்ல நிறமான, அழகான, பணிவான, பெண் தேவை" !!! :-)
அவர் இந்தக் கதையை எழுதி கால் நூற்றாண்டு ஆகப் போகிறது. திருமண விளம்பரங்களைப் பார்த்தால், இன்றைக்கும் வித்தியாசமில்லை என்றே தோன்றுகிறது. இன்னும் ஒருபடி மேலே போய், 'என் பெண் வீட்டு வேலைகள் நன்றாகச் செய்வாள் - சமைப்பாள்" என்ற ரீதியில் குறிப்பிடும் விளம்பரங்களும் அதிர்ச்சியளிக்கின்றன. குறிப்பாக மிக அதிகமாகப் படித்த பெண்களின் படிப்பு விஷயங்களைப் பற்றி குறிப்பிட்ட அடுத்த வரியில் மேலே சொன்ன குறிப்பும் இருக்கும் - ஏதோ தெரியாத்தனமாக என் பெண் படித்துவிட்டாள் - ஆனால் "குடும்பப்பாங்கானவள்" என்று ஒரு மன்னிப்பு கேட்கும் தொனியுடன் !!!! அதிகம் படித்தால் குடும்ப வேலைகளில் மனம் செல்லாது என்பது ஏதோ எழுதப்படாத நியதி என்று இவர்கள் கவலைப்படுகிறார்களோ? வீட்டு வேலைகள் / குடும்பப்பொறுப்புகள், மற்றும் நல்ல மருமகளாக / மருமகனாக இருப்பது போன்றவை இருபாலருக்கும் அவசியம் என்ற உணர்வு இன்னும் வரவில்லையோ என்று தோன்றுகிறது.
அம்பையின் நீண்ட நேர்காணலொன்று காலச்சுவடில் (ஏழெட்டு வருடங்கள் இருக்குமா?) வாசிக்கத் தொடங்கியதிலிருந்து, அவரது ஆளுமையும், கதைகளும் இன்றுவரை என்னைத் தொடர்ந்து வசீகரிப்பவை. அவரது தொகுப்புக்கள் கூட - பலரின் தொகுப்புக்கள் போலன்றி- அலுப்பு ஏற்ப்டாதவகையில் நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தந்திருந்தன. அண்மையில் வந்த 'உயிர்நிழல்', 'காலம்' இதழ்களில் கூட அமபையின் கதைகள் வந்திருந்தன. மூன்று வருடங்களுக்கு முன் அம்பையின் சிறுகதையொன்றை வாசித்துவிட்டு எழுதிய சிறுகுறிப்பை இங்கே வாசிக்கலாம்...
http://djthamilan.blogspot.com/2004/12/blog-post_10.html
உங்களின் பகிர்தலுக்கு நன்றி லஷ்மி.
லக்ஷ்மி அக்கா,
அம்பை கதைகளை நானும் சிலசமயம் வாசித்ததுண்டு. அவரது குரலிலேயே அவரது கதைகளை கேட்பது ஒரு சிலிர்ப்புதான்.
கீழே அவரே அவரது சிறுகதையைப்படிப்பதை கேட்டுப்பாடுங்களேன்.
63 வயதானதின் வயோதிகமும் அவரது குரலில் தொனிக்கிறது.
மஞ்சள் மீன் http://lcweb2.loc.gov/mbrs/master/salrp/01802.mp3
அம்மா ஒரு கொலை செய்தாள் http://lcweb2.loc.gov/mbrs/master/salrp/01801.mp3
நல்லாருக்கில்ல? ஆமாமில்ல?
அருணா
//அதிகம் படித்தால் குடும்ப வேலைகளில் மனம் செல்லாது என்பது ஏதோ எழுதப்படாத நியதி என்று இவர்கள் கவலைப்படுகிறார்களோ? வீட்டு வேலைகள் / குடும்பப்பொறுப்புகள், மற்றும் நல்ல மருமகளாக / மருமகனாக இருப்பது போன்றவை இருபாலருக்கும் அவசியம் என்ற உணர்வு இன்னும் வரவில்லையோ என்று தோன்றுகிறது// மாற இன்னும் காலம் ஆகும்.
லஷ்மி: படித்ததில் பிடித்தது எனக்கு பிடித்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
பதிவிற்கு நன்றி லக்ஷ்மி...
mp3 பகிர்தலுக்கு நன்றி பொற்கொடி...
அம்மா ஒரு கொலை செய்தாள் .. என்னுடைய favourite கூட..(லக்ஷ்மி கொடுத்த கதைகளில் திரிசங்கு மட்டும் தான் ஞாபகம் இருக்கு)
இயலாமை ...அங்கீகாரம் இல்லாமையால்..மனம் படும் வேதனையை நல்லா வெளிப்படுத்தியிருப்பாங்க..
வேகமா படிச்சா ஒரே நாளில் முடிஞ்சுடும்னு...ஒவ்வொரு நாளும்...ஒவ்வொரு கதையா...ரசிச்சு படித்த புத்தகம்...
யமுனை ஆற்றங்கரை....ரங்கா...இடம்பெறும்..இரண்டு கதைகள் எனக்கு பிடித்தமானவை..(தலைப்பு சரியா ஞாபகம் இல்லை)
லக்ஷ்மி,
இதுவரை அம்பையின் கதைகள் ஒன்றைக்கூட நான் படித்ததில்லை(-:
அது என்னவோ அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. இந்த முறை
ஊருக்குப்போனாக் கட்டாயம் வாங்குவேன்.
என்னமாதிரி ஒரு கூர்மையான எழுத்து!!!!!
பதிவிட்டதிற்க்கு நன்றி
வேலைகளுக்கு நடுவில் புத்தகத்திலிருந்து குறிப்புகளை தட்டச்சு செய்வதின் சிரமங்கள் புரிந்து கொள்ள முடிந்த ஒன்றே.இந்த ஒரு சின்ன பாராட்டு விரல்களின் அசைவுகளுக்கு ஆசுவாசத்தை அளிக்கலாம் :)
வீட்டின் மூலையிலே என்னாலும் மறக்க முடியாத சிறுகதை..மற்றதை தேடிப் படிக்க வேண்டும்
அனைவருக்கும் நன்றி. நம்மையறியாமல் ஏதோ ஒரு கணிப்பு, தவறாகவும்தான் :-) மனிதர்கள் மற்றும் அவர்களின் எழுத்துக்கள் மீதும் நாமே உண்டாக்கிவிடுகிறோம். உங்கள் அனைவரின் பின்னுட்டங்கள் அம்பையின் எழுத்தைத் தேடிப் படிக்க வேண்டிய ஆவலைத் தூண்டுகிறது.
அருணா, //குறிப்பாக மிக அதிகமாகப் படித்த பெண்களின் படிப்பு விஷயங்களைப் பற்றி குறிப்பிட்ட அடுத்த வரியில் மேலே சொன்ன குறிப்பும் இருக்கும் - ஏதோ தெரியாத்தனமாக என் பெண் படித்துவிட்டாள் - ஆனால் "குடும்பப்பாங்கானவள்" என்று ஒரு மன்னிப்பு கேட்கும் தொனியுடன் !!!// சரியான அவதானிப்பு. நானும் இவ்வகை விளம்பரங்களை பார்த்து வியந்திருக்கிறேன்.
பொற்கொடி - பகிர்ந்தமைக்கு நன்றி. கேட்டுட்டு சொல்றேன், எப்படியிருக்குன்னு.
பத்மா, துளசி, காளி, உஷா, அய்யனார் - அனைவருக்கும் நன்றி.
அடடா... மோகனா, உங்களோட தூங்குறாப்போல நடிக்கற விளையாட்டை மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா? பரவாயில்லை. இன்னொரு முறை என் கேள்விய விளக்கறேன். அய்யா, அவங்க பொறாமையோட விமர்சனம் எழுதறவங்களாவேகூட இருக்கலாம் - எந்த பிரதிய அடிப்படையாக்கொண்டு நீங்க இந்த குற்றச்சாட்டை சொல்றீங்கன்னு தெரியாததால நான் இதுல எதும் கருத்துச் சொல்ல விரும்பலை. எதை வச்சுட்டு நீங்க பேசுறீங்கன்னு முடிந்தால் நினைவுபடுத்தி சொல்லுங்க, நானும் அதை படிச்சுட்டு வந்து என் கருத்தை சொல்றேன். என்னோட வாதம் அவங்க பொறாமை கொண்டவங்களாக இருந்திருக்கவே முடியாது என்பதல்ல. எல்லோரும் எல்லா வகையான சின்னத்தனங்களோடிருக்கவும் சாத்தியமுள்ளவர்கள்தான் - யாரும் வானிலிருந்து குதிக்கவில்லை என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. ஆனா என்னோட கேள்வி, பொறாமையுடையவங்களா அவங்க இருக்கறதுனாலேயே அவங்ககிட்ட பெண்ணியம் தாண்டின எழுத்துக்கள் எதுவுமே இருக்காதுன்னு எப்படி நீங்க முடிவு பண்றீங்கன்றதுதான்.
பொறாமையோ இல்லை வேறு ஏதேனும் சில்லறைத்தனங்களோகூட இருபாலருக்கும் பொதுவான குண நலன்கள்தானே? நீங்க நான் குறிப்பிட்டிருக்கும் கதைகளை படிச்சுட்டு அதுலயும் கூட பெண்ணிய தொனிக்குதுன்னு நினைச்சால் அப்ப அதை பத்தி பேசினா சரியா இருக்கும். நான் சொன்னது ஒரு மூணுதான். ஆனா யோசிச்சு பாத்தா அந்த 13 கதைல ஒரு 4 இல்லைன்னா 5 கதைகளில்தான் பெண்ணியம் ஒலிக்கும். ஆனா இந்த தொகுப்பின் தலைப்புக்கான கதைன்றதாலும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததாலும் சிறகுகள் முறியும் கதைய நான் தேர்ந்தெடுத்தேன். ஒரு வேளை அது உங்களுக்கு அப்படியான ஒரு அனுமானத்தை கொடுத்திருக்கும்னா, நான் வேற எதுனா கதைய போட முயற்சிக்கறேன்.. ஆனா அதுனால எல்லாம் நீங்க முயலுக்கு 4 கால்னு ஒத்துக்கப்போறதில்லைன்னு தெரியுமெனக்கு. ஆனா மத்தவங்களுக்காவது இந்த மாதிரி தப்பான அபிப்ராயமெல்லாம் போகுமில்லையா, அதுக்காக.
what happened to my comment. haven't you received?
இதுவரை உங்களிடமிருந்து வந்த பின்னூட்டமெதுவும் இல்லையே உமையணன். சிரமம் பாராது மீண்டும் உங்கள் கருத்தை சொல்ல முடியுமா?
நானுமொரு பின்னூட்டம் -சென்ற வெள்ளிக்கிழமை- எழுதியிருந்தேன். கிடைக்கவில்லையா?
டிசே, உங்களது பின்னூட்டம்(அம்பையின் நேர்காணல் பற்றிய குறிப்பு மற்றும் உங்களது பதிவு ஒன்றின் சுட்டி ஆகியவை அடங்கியது) அன்றே பிரசுரிக்கப் பட்டுவிட்டதே. அது தவிரவும் ஏதேனும் எழுதியிருந்தீர்களா என்ன? ஸ்ஸப்பா... ப்லாகர் ரொம்ப குழப்புது போலிருக்கே. அப்படியெதும் இன்னொரு பின்னூட்டமிருந்தால் சிரமம் பாராது தயவு செய்து மீண்டும் இட முடியுமா?
// உமையணன் said...
what happened to my comment. haven't you received? //
லக்ஷ்மி, சில நேரங்களில் மடல்கள் Spam folder-க்குச் சென்றுவிடும். தயவு செய்து அந்த ஃபோல்டரையும் திறந்து பார்க்கவும்.
லக்ஷ்மி மன்னிக்கவும். முதல் சில தடவைகள் பார்த்தபோது பின்னூட்டம் தொலைந்துவிட்டதுபோன்று தோன்றியது. இப்போது தெரிகிறது :-). மேலேயுள்ள பின்னூட்டம் தவிர வேறெதுவும் எழுதவில்லை. சிரமத்திற்கு மன்னிக்கவும்.
அன்புள்ள லக்ஷ்மி,
ரொம்ப நாட்களுக்குப்பிறகு இன்றுதான் எனது வலைப்பூவின் டேஸ்போர்டுக்குள் நுழைந்தேன். அதனால் உங்களுடைய பின்னூட்டத்தையும் பார்த்தேன். உí¸ளுடைய பதிவில் நீங்கள் பதில் பின்னூட்டம் போட்டவுடனேயே நான் பதில் போடமுடியாததற்கு காரணம் நான் எங்கள் அலுவலத்தில் இன்னும் எ-கலப்பையை தரவிறக்கவில்லை. அதானாலேயே உடனே பின்னூட்டம் போட முடியவில்லை. மேலும் உங்கள் இடுகை அதன் பிறகு தமிழ்மண முகப்பில் வராததனால் இனிமேல் நீங்கû பின்னூட்டங்க¨Ç மட்டுறுத்தமாட்டடீர்கள் போலிருக்கிறது என்று விட்டு விட்டேன்.
//அத்தனை சட்டங்களும் அமுலாக்கப்படும் பட்சத்தில் வெகுவாக பாதிக்கப்படப்போகும் ஒருவன் அவள் முன் அமர்ந்து, மலை மாதிரி உடம்பில் வியர்வை பெருக "ரஸம் ஒரே சூடு" என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.// இந்த மாதிரி தன் கணவரைப் பார்க்கிற பெண்ணுக்கும் ஒதுங்கிப்போகும் பெண் நாயைப் பார்த்து உறுமும் ஆண் நாயைப்போன்ற ஆணின் பார்வைக்கும் எனக்கு வித்தியாசம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. இரண்டுபேரின் பார்வையிலும் இருப்பது ஒரு விட அறுவெறுப்பு. பெரும்பாலும் பெண்ணியம் பேசுபவர்கள் தவறுகளையெல்லாம் ஆண்களின் மேல் சுமத்தி விட்டு தாங்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு சந்தேகம். உலகில் ஆண்களெல்லாம் பெண்களாகவும் பெண்களெல்லாம் ஆண்களாகவும் பிறந்திருந்தால் ஆணாதிக்கமே இருந்திருக்காதா? அப்படியிருந்திருக்க முடியாதென்றால் தவறு ஆண்களாய் பிறந்ததால் மட்டுமே இருக்காது.
உங்களின் மீள் பதித்தலுக்கு நன்றி உமையணன்.
// தவறு ஆண்களாய் பிறந்ததால் மட்டுமே இருக்காது.// நான் எப்போதும் எங்கும் ஆணாய் பிறந்தவர்கள் எல்லோரும் ஆணாதிக்கவாதிகளென்று சொன்னதாய் நினைவில்லை. சொல்லப்போனால் பெண்களின் மீதான அக்கறை கொண்டு அவர்களையும் மனித நேயத்தோடு நடத்தியேயாகவேண்டுமென்று உறுதியோடு சொல்லத்தொடங்கிய பலர் ஆணாகப் பிறந்தவர்கள்தான் - பெரியாரைப்போல, பாரதியைப்போல.
தினந்தோறும் உலகில் எத்தனையோ இடங்களில் எத்தனையோ விதமான மனித உரிமை மீறல்கள் நடந்துதான் வருகிறது - வலுத்தவன் இளைத்தவன் மீது தனது அதிகாரத்தை காட்டுவது ஒரு போதை போன்றது. அதனின்றும் விலகித்தூய்மையாய் இருக்கும் ஒரு பிரதேசத்தையும் கண்டுபிடித்துவிட முடியாதுதான். ஆனால் ஆண் பெண் பிரிவென்பது எல்லா இன/நிற/சாதி/மத பிரிவுகளுக்குள்ளும் இருப்பதால் இந்த ஆணாதிக்கமென்பது அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறது. எங்கு தான் சிறுமைப்பட்டாலும் கூட தன் வீட்டிற்குள் வந்துவிட்டால் ஒரு சர்வாதிகாரியாகிவிட முடியும் ஒரு ஆணுக்கு. அது தரும் சுகத்தை மறுத்து அது கீழான போதையென்பதை உணர்ந்து தனக்கு வலிக்குமென்றால் அதே சிறுமை தன்னில் பாதியானவளுக்கும் வலிக்கும் என்று உணர முடிந்த ஆண்களின் எண்ணிக்கை வெகு சொற்பம் - ஆனால் அப்படியும் சிலர் உண்டென்பதை மறுத்துவிடுமளவு நன்றிகெட்டவள் அல்ல நான். பெண்ணியமென்பது பெண்ணையும் மனித உயிராகவே பாருங்கள் - அவளுக்கும் சுயகௌரவம் உண்டென்று உணருங்கள் என்று சொல்வதேயன்றி, ஆண்களின் மீது வெறுப்பை வாரித்தெளிப்பதல்ல. பெண்ணியம் பேசும் எல்லா இடங்களிலும் இந்த கேள்வியை எதிர்கொண்டாகி விட்டது - மாய்ந்து மாய்ந்து பதிலும் சொல்லியாகிவிட்டது. ஹ்ம்ம்... ஆண்களை வெறுத்துவிட்டு நாங்களெல்லோருமென்ன காட்டுக்குள் போய் தவம் செய்வதா? இல்லை பெண்ணியம் பேசும் எல்லோரும் அப்படித்தான் தத்தமது துணையை தூக்கியெறிந்துவிட்டு அலைகிறோம் என்று நினைக்கிறீர்களா? ஏன், அம்பையையே எடுத்துக்கொள்ளுங்களேன், பொற்கொடி தந்திருக்கும் சுட்டியில் அவர் தனது சிறுகதைகளை வாசிக்கும் ஒலிக்கோவையிருக்கிறது. நேரம் கிடைக்கையில் கேட்டுப்பாருங்களேன், அவர் தனது துணைவரை என் நண்பனும் கணவனுமான விஷ்ணு என்றுதான் சொல்கிறார். எனவே, வெறுப்பை விதைப்பதற்கல்ல பெண்னியம் பேசுவது என்பதை புரிந்துகொள்ளுவீர்கள் என நம்புகிறேன்.
lakshmi ,I have read Ambai only in Vikatan.
inimel puththakam vaangip padikkiREn.
romba NanRimmaa.
//எங்கு தான் சிறுமைப்பட்டாலும் கூட தன் வீட்டிற்குள் வந்துவிட்டால் ஒரு சர்வாதிகாரியாகிவிட முடியும் ஒரு ஆணுக்கு. அது தரும் சுகத்தை மறுத்து அது கீழான போதையென்பதை உணர்ந்து தனக்கு வலிக்குமென்றால் அதே சிறுமை தன்னில் பாதியானவளுக்கும் வலிக்கும் என்று உணர முடிந்த ஆண்களின் எண்ணிக்கை வெகு சொற்பம் //
மிக தெளிவான பதில். ஏற்றுக்கொள்கிறேன்.
//நான் எப்போதும் எங்கும் ஆணாய் பிறந்தவர்கள் எல்லோரும் ஆணாதிக்கவாதிகளென்று சொன்னதாய் நினைவில்லை.//
நான் சொல்ல வந்ததன் பொருள் அதுவல்ல. பிறப்பவர்களில் பலர் தங்களை அறியாமலே ஆணாதிக்கவாதிகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் பெண்களாக இருந்தாலும். ஆணாதிக்க சிந்தனை என்பது எல்லோருடைய இரத்தத்திலும் ஊறியிருக்கிறது. இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்தும். பெண்களில் சிலர் அதே ஆணாதிக்க சிந்தனையில் எழுந்த அடக்குமுறைகளை பிற பெண்களின் மீது ஏவுவதும் நடக்கிறது. அதை நீங்கள் அதிகம் கண்டிப்பதில்லை. ஆணாதிக்கத்தை கட்டிக்காப்பது பெரும்பாலும் பெண்களே. அப்போதும் ஆண்களின் மீதே குற்றம் சுமத்துகிறீர்கள். வல்லமை தரும் சுகத்தை மறுத்து எளியோரின் உரிமையை மதிப்பது பெண்களுக்கும் தேவைப்படுகிறது. மிக நுண்ணிய விசயங்களிலெல்லாம் ஆணாதிக்கத்தை தோண்டித் துருவி கண்டுபிடித்து கடுமையான மொழிகளில் விமர்சனம் செய்யும்போது அதையே பெண்களும் செய்கிறார்களே என்று தோன்றியதனாலேயே இதை எழுதினேன். அதை நீங்கள் செய்தீர்கள் என்று சொல்லவில்லை. பல இடங்களில் இம்மாதிரி விமர்சனங்களை கேட்டதனால் என்னால் சொல்ல முடிந்த இந்த இடத்தில் சொல்கிறேன்.
மேலும் அந்த கதையில் வரும் கணவன் மனைவி இருவரிடமும் ஒருவர்மீது இன்னொருவருக்கு தங்கள் விருப்பங்களின் பேரில் எழுந்த வெறுப்புணர்ச்சியும் அதனால் ஏற்பட்ட அருவருப்பும் சமமாகவே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதில் கணவன் செயலின் மூலம் அதைக்காட்டுகிறான். மனைவி வெறும் நினைப்பிலேயே வைத்திருக்கிறாள். அந்த மனைவிக்கு கணவனைப்போல வல்லமை இருக்கும் பட்சத்தில் அவளும் அதையே செய்திருப்பாள். இதுவே நான் சொல்ல நினைத்தது.
நன்றி வல்லி அம்மா.
உமையணன், ஆணாதிக்கத்தை கட்டிக்காக்கும் பெண்களும் இல்லாமலில்லை (ஆனால் அதுதான் பெரும்பான்மை என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது) நான் எப்போதும் அவர்களையும் சேர்த்தே விமர்சித்து வந்திருக்கிறேன். அதில் எனக்கும் இரண்டாவது கருத்தில்லை.
இந்த கதையை பொறுத்தவரையில் அந்த மனைவியின் எண்ணப்போக்கையும் கணவனுடையதையும் ஒரே தட்டில் வைத்துப்பார்ப்பதும் சரியல்ல. இதில் பெண் ஆண் என்பதையெல்லாம் எடுத்துவிட்டுப் பாருங்களேன் - வாழ்க்கைத்துணையில் ஒருவர் கஞ்சத்தனத்தோடு எதையும் பணம் கொண்டே அளக்கிறார், அப்போது அழகுணர்ச்சியும் ரசனையுமுடைய அவரின் துணை எப்படி பாதிக்கப்படுவார் என்று நமக்கே தெரியும். இதில் யார் செய்வது சரியென்று நீங்கள் நினைப்பீர்கள்?
ஆனால் நீங்கள் சொல்வதில் ஒரு விஷயம் ஒப்புக்கொள்கிறேன் - இதே ரசனை இருவருக்கும் இடம் மாற்றியிருந்தால் அந்த கணவன் அதை வெளிப்படுத்தியிருக்கக் கூடிய விதம் நிச்சயம் வேறாகத்தான் இருந்திருக்கும். இவள் பெண் என்பதால் அதை மனதுக்குள்ளேயே நினைத்து குமைய வேண்டியிருக்கிறது. அது வரையில் ஒப்புக்கொள்கிறேன். அவ்வகையில் வெளிப்படுத்தும் சுதந்திரம் அவளுக்கில்லாது போனதன் காரணம் நிச்சயம் நம் சமூகத்தின் பார்வையேயல்லவா?
//இந்த கதையை பொறுத்தவரையில் அந்த மனைவியின் எண்ணப்போக்கையும் கணவனுடையதையும் ஒரே தட்டில் வைத்துப்பார்ப்பதும் சரியல்ல. //
நீங்கள் வீனஸிலிருந்து பார்க்கிறீர்கள். நான் மார்ஸிலிருந்து பார்க்கிறேன். இந்த விசயத்தை பொறுத்த வரையில் ஒரு முடிவுக்கு வர இயலாது என்று தோன்றுகிறது.
//அவ்வகையில் வெளிப்படுத்தும் சுதந்திரம் அவளுக்கில்லாது போனதன் காரணம் நிச்சயம் நம் சமூகத்தின் பார்வையேயல்லவா?//
இதில் சமூகம் என்ற வார்த்தைதான் நான் எதிர்பார்த்தது. பெரும்பாலும் பெண்ணியவாதிகள் find and replace போட்டு ஆண்கள் என்று திருத்திவிடுகிறார்கள் என்பதுதான் என் ஆதங்கம்.
நாளை ஊருக்கு கிளம்புகிறேன். இன்னும் கொஞ்ச நாளைக்கு பின்னூட்டம் இடுவது கடினம். ஆதலால் உடனடி பதிலை எதிர்பார்க்க வேண்டாம்.
உங்களுக்கு திருமணம் என்று கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள்.
ஏதேனும் ஒரு புள்ளியிலேனும் நம் விவாதத்தில் ஒத்த கருத்தினை எட்ட முடிந்தது எனக்கு மிக்க மகிழ்வைத் தருகிறது உமையணன். ஏனெனில் பொதுவாகவே இந்த பெண்ணியம் தொடர்பான விவாதங்களில் தான் பிடித்த முயலுக்கு மூன்று காலென்று நிறுவ முயலுபவர்களோடே தொடர்ந்து வாதிட்டு நொந்து போயிருந்தேன் நான். நீங்கள் விவாதம் ஆரம்பித்த போது உங்களையும் அதிலொருவரென்றே எண்ணியிருந்தேன். என் நண்பரொருவர் கூட கேட்டார், அதெப்படி லக்ஷ்மி நீங்க மட்டும் இப்படியானவங்க கிட்டயே மாட்டறீங்க, அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லுங்களேன்னு கிண்டலடித்துக் கொண்டிருந்தார். அப்படியல்லாது ஒரு ஆரோக்கியமான விவாதமாய் இதை கொண்டு சென்றமைக்கு மறுபடி ஒரு முறை நன்றி.
அப்புறம், நீங்க கேள்விப்பட்ட தகவல் தவறானது. இது பற்றி என்னிடம் கேட்கும் இரண்டாவது ஆள் நீங்கள். இன்னும் எத்தனை பேர் இப்படி தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்களோ என்பது தெரியாததால், நான் ஒரு தன்னிலை விளக்க பதிவே போட்டுவிட்டேன். அப்படியெதுவும் மீளாத்துயர் நிகழ்வு நடக்கையில் இணைய நட்பு வட்டத்திற்கு தெரிவிக்காது விடுவேனா என்ன?
//அப்படியெதுவும் மீளாத்துயர் நிகழ்வு நடக்கையில் இணைய நட்பு வட்டத்திற்கு தெரிவிக்காது விடுவேனா என்ன?//
நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஆனர், இந்தப் பதிவை எழுதியவர் கல்யாணம் என்பது மீளாத்துயர் என்றே குறிப்பிடுகின்றார்...
இதன் மூலம் இவர் ஆண்களை மறைமுகமாக ஆணாதிக்க வாதிகள் என்று பொதுமைப் படுத்திக் கூறுகிறார்....
யாராவது இப்படி பேசி சண்டைக்கு வாங்கப்பா... ரொம்ப போரடிக்குது.
http://blog.nandhaonline.com
ஐயா நந்தா, என்ன பிரச்சனையாயிருந்தாலும் பேசி தீத்துக்குவோம். இப்படி வம்புல மாட்டி விட்டு தர்ம அடி வாங்க வைக்கறதெல்லாம் வேணாம், விட்டுடுங்க.... இல்லாட்டி அழுதுருவேன்...
Post a Comment