Wednesday, May 30, 2007

படித்ததில் பிடித்தது (1)

படித்ததில் பிடித்தது அப்படிங்கற வரிசைல நான் எனக்கு பிடிச்ச சில புத்தகங்களை பற்றி எல்லோருடனும் பகிர்ந்துக்காலாம்னு ஒரு எண்ணம். (1) அப்படின்னு போட்டிருக்கறதில்லேயே தெரிஞ்சிருக்குமே, இது இன்னியோட முடியற தொல்லை இல்லை. இது தொடரும்....(இப்படி நான் போட்டு வச்சிருக்கற லிஸ்ட் கொஞ்சம் பெருசுதான். நானே மறந்துடுவேனேன்னு சில சமயம் நினைப்பேன். ஆனால் நம்மை விட அதை மற்றவர்கள் நன்றாகவே நினைவு வச்சுக்கறாங்களே. அதுனால அப்புறமா கேட்டுகிட்டா போச்சு :) )

ஜெயந்தனின் சிறுகதைகள் தொகுப்பு - மீண்டும் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்னை ரொம்பவே கவர்ந்த ஒரு புத்தகம். முதலில் ஆசிரியரை பற்றி - 70களில் இருந்து எழுதிவரும் இவர் சிறுகதை, நாவல் மட்டுமின்றி சிறந்த நாடகங்களையும் படைத்துள்ளார். இவரது பெயரை கேட்டு இவரை ஜெயகாந்தனோடு குழப்பிக்கொள்பவர்கள் உண்டு. நர்மதா வெளியீடான இந்த புத்தகத்தில் மொத்தம் 9 சிறுகதைகள் உள்ளன. இவரோட சிறுகதைகள் வழக்கமான ஒரு நாட், சில சம்பவங்களின் வர்ணணை கடைசியில் ஒரு நீதிபோதனை அல்லது பொட்டிலறைகிற திருப்பம்ன்ற வழக்கமான வடிவத்துல பொதுவா உள்நுழையறதில்லை. பெரும்பாலும் கதாபாத்திரங்களின் படைப்புத்தான் முக்கியமான விஷயமா இருக்கும். கடைசியில் கதைகள் வாசக மனதில் எழுப்பற கேள்விகள்தான் அவரோட இலட்சியம். மத்தபடி இந்த சுவாரசியமான நடை ,திடீர் திருப்பங்கள் எல்லாம் இவர் எழுத்திலிருக்காது. எளிமையான நீரோடை போன்ற நடை.

சிறுகதை தொகுப்பு என்கிறதால இதை பத்தி அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் பிச்சு பிச்சு எடுத்து போட்டு விமர்சனம் எழுதறதை விட, ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ன்ற அடிப்படைல ஒரு கதையையே எடுத்து பொட்டுடலாம்னு எண்ணம்.
இப்போ கதை.

************************
ஆகஸ்ட்

சாந்தி டீச்சர் எந்த முகாந்திரமுமில்லாமல் ருத்ரா டீச்சர் முடியை பிடித்து ஆட்டி கீழே தள்ளி மிதித்ததாகச்சொன்னார்கள். இவ்வளவிற்கும் ருத்ரா டீச்சர்தான் பலசாலியாக இருக்க வேண்டும்.

ருத்ரா டீச்சர் கூச்சலை கேட்டு ஒடி வந்த, பக்கத்தில் இருந்த வகுப்புகளின் ஆசிரியர்களும், மாணவர்களும் அவளை சாந்தியிடமிருந்து பிரித்துக்காப்பாற்றிய போது சாந்தி காட்டிய 'வேகம்' அவர்களுக்கு மேலும் ஆச்சரியத்தை தந்திருக்கிறது. அப்போதே அவர்கள் 'ஒருவேளை இவளுக்கென்ன பைத்தியமா' என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

"ஏன் டீச்சர், ஏன் அடிக்கறீங்க?" என்று கேட்டதற்கு சாந்தியிடமிருந்து மூசு மூசுவென்று பெருமூச்சுதான் வந்திருக்கிறது.

ருத்ராவை கேட்டிருக்கிறார்கள்.

"ஒன்னுமில்லைங்க, என்னமோ என் கஷ்டத்தை நான் சொல்லிகிட்டு இருந்தேன். இவ திடீர்னு இப்படி செஞ்சுட்டா." என்றிருக்கிறாள் அவள்.

அப்போதும் சாந்தி சீறியிருக்கிறாள். "இவ சொல்றா, அந்த மனுஷன் இருந்தா நான் ஏன் இப்படி லோல் படறேன்னு."

"சொல்லக்கூடாதுங்களா? தாலியறுத்தவளுக்கு ஒரு கஷ்டம் வந்தா அவ, அந்த மனுஷன் இல்லியேன்னு புருஷனை நினைக்க மாட்டாளா?"

சாந்தி மறுபடியும் ருத்ராவின் மயிரை பிடிக்க பாய்ந்திருக்கிறாள். "பாத்தீங்களா? மறுபடியும் சொல்றா?"

"ஏன் டீச்சர், சொல்லக்கூடாதா?" என்று கருப்பையா வாத்தியார் கேட்டதற்கு அவரை ஒரு முறை முறைத்திருக்கிறாள். அவர் தான் உண்மையிலேயே பயந்துவிட்டதாக மறுநாள் சொல்லியிருக்கிறார்.

நிலைமை ஒரு வழியாக பூரணமாக புரிந்து விட்ட பிறகு, சாந்தியை அந்த ஆசிரியர்கள் ஒய்வறையிலேயே விட்டு வெளியே கதவை சாத்திவிட்டார்கள். அவள் வீட்டிற்கு ஆளனுப்பியிருக்கிறார்கள்.

************************

சாந்தியை 13 நீதிபதிகள் விசாரித்துக்கொண்டிருந்தார்கள். 13 பேரும் ஆண்கள். ஆளுக்கொரு வகையிலான கோமாளி உடை அணிந்திருந்தார்கள்.

"உன் பேரு என்ன?"
"சாந்தி, ஒம் சாந்தி"
"ஏன் இப்படி இருக்கே?"
"எப்படி?"
"எளச்சு எளச்சு, கொத்தவரங்கா வத்தலாட்டம்"
"தின்னவனப்போயி கேளுங்க"
"எதைத் தின்னவன?"
"என் உடம்பைத்தான்"
"யாரு தின்னா?"
"யாரு திம்பா? புருஷங்காரந்தான்"

நீதிபதிகள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். நீதிபதி 13 , நீதிபதி 12 இடம் கேட்டார், "நாமெல்லாம் திங்கறோமா என்ன?"

நீதிபதி 12 சொன்னார், "திங்கலாம் அல்லது திங்காமலும் இருக்கலாம்".

ஆனால் நீதிபதி 8 அழுத்தமாக மறுத்தார். "இல்லை. நாம் அப்பர் க்ளாஸ் ஆகிவிட்டவர்கள். நம்மால் லோயர் க்ளாஸ் அல்லது மிடில் க்ளாஸ் மாதிரி காரியமாற்ற முடியாது."

சாந்தி சிரித்தாள். பின்பு சொன்னாள், "இருக்கலாம், ஒருவேளை நீங்கள் மென்று தின்னாமல் அப்படியே விழுங்கி விடுகிற க்ளாசாக இருக்கலாம் - விழுங்கியது விழுங்கப்பட்டதற்கு தெரியாமலே."

"ருத்ரா டீச்சருக்கும் உனக்கும் என்ன விரோதம்?"
"அவள் அதிர்ஷ்டத்தில் விடப்பட்டிருந்தாள்."
"அப்படியென்றால்?"
"அவள் புருஷன் செத்துபோய்விட்டான்."
"நீ?"
"நான் சபிக்கப்பட்டிருக்கிறேன்."
"அப்படியென்றால்?"
"என் புருஷன் உயிரோடிருக்கிறான்."

நீதிபதிகள் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
நீதிபதி 8 நீதிபதி 11 இடம் கேட்டார், "இது சரியா இருக்குமா?"
நீதிபதி 11 ஆங்கில முறைப்படி தோளை மட்டும் குலுக்கினார்.
"சாந்தி, நீ ஏன் கால் மாற்றி தலை வைக்கிறாய்? புருஷன் உள்ளவள்தான் அதிர்ஷ்டக்காரி என்றும் கம்மனாட்டி துரதிர்ஷ்டக்காரி என்றும் உலகம் சொல்லும்."

"ஐயா, உலகம் என்பது...?"
"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே."
"இல்லை. மாட்டார் மாட்டே. அதாவது எருமை மாட்டார் மாட்டே." - சாந்தி கபகபவென்று சிரித்தாள்.
"சரி, இலக்கிய சர்ச்சைகளில் புகுந்து கோர்ட்டார் நேரத்தை வீணடிக்க வேண்டாம். இதற்கு பதில் சொல். அப்படியே இருந்தாலும் அதிர்ஷ்டத்தில் விடப்பட்டவர்களும் சபிக்கப்பட்டவர்களும் ஏன் விரோதமாக இருக்கவேண்டும்?"
"இதென்ன கேள்வி, அதிர்ஷ்டத்தில் விடப்பட்டவர்களும்க்கும் சபிக்கப்பட்டவக்கும் இடையே விரோதமில்லையென்றால் வேறு எந்த இருவருக்குமிடையே விரோதம் இருக்க முடியும்?"
"விளங்கவில்லையே, அளவுக்கு மீறி படிக்கிறாயா?"
"உண்மைதான். நான் நிறைய படிக்கவும் சபிக்கப்பட்டிருக்கிறேன்."
நீதிபதி 11, நீதிபதி 10 இடம் கண் சிமிட்டிச்சொன்னார். "நான் சட்டத்தை தவிர வேறு எதுவும் படித்ததில்லை. அதுவும் கூட கல்லூரியோடு சரி."
நீதிபதி 10 சொன்னார் "கல்லூரியில் கூட நான் பாஸ் மார்க் வரம்போடு சரி."
சாந்தி சொன்னாள், "மனிதரில் நீரே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்."
"சரி, விரோதமும் விரோதிகளும் எங்கும் உண்டு. ஆனால் எல்லா நாட்களும் போர்க்களமாயிருப்பதில்லை. விரோதம் நிலவுகிற சமாதான காலங்கள்தான் அதிகம். ஏதாவது உடனடிக்காரணம் ஏற்பட்டுவிடுகிறபோதுதான் போர் மூளுகிறது."
"நீ ருத்ராவை தாக்க ஆரம்பித்ததற்கு உடனடிக்காரணம் என்ன?"
"எல்லைகளில் எதிரி விஷமம் செய்வது போல அவள் என்னை சீண்டிக்கொண்டேயிருந்தாள்."
"என்ன சொல்லி அல்லது செய்து சீண்டினாள்?"
"அந்த மனுஷன் இருந்தால் நான் ஏன் இப்படி லோல்படுறேன் என்று என்னிடமே இந்த இரண்டு மாதத்திற்குள் ஐந்தாவது முறையாக சொல்லி விட்டாள்."
"அது அவளது கஷ்டம். அவளது நஷ்டம். அவளது ஆதங்கம். இது எந்த விதத்தில் உன்னைச்சீண்டியதாகும்? இதற்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?"
"இல்லை. அது அவளது கஷ்டமல்ல. அவளது வசதி. அவளது நஷ்டமல்ல, லாபம். அவளது ஆதங்கமல்ல, சந்தோஷம்."
"என்ன, ஒரு புருஷனின் மரணம் ஒரு மனைவியின் வசதி, லாபம் , சந்தோஷமா?"
"இன்னும் கூட ஒன்று உண்டு, கட்டை விரல் மாதிரி."
"என்ன அது?"
"ஆகஸ்ட் 15."
"நான்சென்ஸ்." என்றார் நீதிபதி 1.
"ஒன்னாம் நம்பர் மடத்தனம்." என்றார் நீதிபதி 2.
சாந்தி வானத்தை நோக்கி இரு கைகளையும் ஏந்தி கேட்டாள். "கடவுளே, நீ எனக்கு புருஷன் என்ற ரூபத்தில் ஒரு Hang manஐத்தான் கொடுத்தாய். நீதிபதிகளையாவது நீதிபதிகளாக கொடுத்திருக்க கூடாதா? சிந்திப்பவர்களுக்கு பதிலாக திட்டி தீர்ப்பவர்களை கொடுத்திருக்கிறாயே?"
அதுவரை அங்கு இல்லாத சர்க்கார் தரப்பு வக்கீல் எழுந்து சொன்னார்,"கோர்ட்டார் அவர்களே, இது கோர்ட்டை அவமதிக்கும் காரியம்."
"ஆமாம் சாந்தி. உன்னை எச்சரிக்கிறோம். மறுபடியும் நீ இப்படி பேசினால்..."
"நீதிபதிமாரே"
"ஒ.கே. தொடர்ந்து சொல்."
"தொடர்ந்து நான் சொல்ல என்ன இருக்கிறது. நீங்களோ அரசுத்தரப்பு வக்கீலோதான் சொல்ல வேண்டும்."
"உன் புருஷன் சரியில்லாததன் காரணமாக நீ மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறாய் என நாங்கள் நம்புகிறோம்."
"அதில் முதல் பாதிதான் உண்மை. பிற்பாதி உங்கள் கற்பனை. நான் பக்காவாக சுயபுத்தியோடுதான் இருக்கிறேன்."
"இது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாருமே சொல்கிற கூற்றுதான்"
தலைமை நீதிபதி சொன்னார், "இவள் மனநிலை பாதிக்கப்பட்டவளா என்றறிய வேண்டுமானால் இவளது புருஷன் அப்படி இவளது மனநிலை பாதிக்கும்படியாக நடந்துகொள்ளக்கூடியவனா என்பதை நாம் அறிய வேண்டும். ஆகவே நீதிபதி 6ன் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை நியமிக்கிறேன்."
நீதிபதி 6 உடனே எழுந்து, "ஏற்கனவே விசாரணை கமிஷன் ரிப்பொர்ட் ரெடி" என்றார்.
"சரி, இப்போது கூட நாம் அதை பார்க்கலாம். இவளது கணவன், என்ன வேலை அல்லது தொழில் செய்கிறான்?"
"தொழில் அல்லது வேலை ஒன்றும் இல்லை. யாராவது கேட்டால் எழுதுவதாக சொல்கிறான்."
"எழுதுவதென்றால் இந்த கதை, கிதை..."
"ஆமாம்"
"அதில் என்ன வருமானம் வரும்?"
"எந்த வருமானமும் வருவதாக தெரியவில்லை."
"எந்த வருமானமும் தராதது எப்படி தொழில் அல்லது வேலையாகும்?"
"அது ஒரு தொழில் அல்லது வேலை ஆகாதுதான்."
"பரவாயில்லை. அது சட்டப்படி குற்றமில்லை. சட்டம் சம்பந்தப்படாத விஷயங்களில் நமக்கு அக்கறையுமில்லை. ஆனால் வருமானம் இல்லாத நிலையில் பூவாவுக்கு என்ன செய்கிறான் என்ற கேள்வி கமிஷனின் வரம்புக்கு உட்பட்டதுதான். அந்த கேள்வியை கமிஷன் கேட்டதா?"
"கமிஷன் விசாரித்தது. பூவாவுக்கும், துணிமணிக்கும், கஞ்சாவுக்கும் அவன் மனைவியை சார்ந்திருக்கிறான்."
சாந்தி மறித்தாள் "சார்ந்திருக்கவில்லை. சார்ந்திருத்தல் என்பது மனைவிக்கான சொல். மனைவிதான் கணவனை சார்ந்திருப்பாள்."
நீதிபதிகள் திகைத்தார்கள்.
"சார்ந்திருத்தல் என்பதை கணவனுக்கும் பொருத்துவதில் மொழியியல் சிக்கல் என்ன?"
"இல்லை. மொழியிலேயே கணவன் மொழி மனைவி மொழி என்கிற பேதம் இருக்கிறது. மனைவியை 'தீர்க்க சுமங்கலி பவ' என்று வாழ்த்த வேண்டும். ஆணை வாழ்த்தும் போது -
சதமானம் பவதி சதாய புருஷ
சதேந்திரிய ஆயுஹூ
ப்ரதி திருஷ்டதி

என்று வாழ்த்த வேண்டும்.
"அதாவது, பெண் கடைசிவரையிலயும் தாலியோட இருக்கணும். அதுக்கு மேல பெரிய பேறு ஒன்னுமில்லை. ஆனா ஆண் பல்லாயிரம்.. பல்லாயிரம்.. பல்லாயிரத்தாண்டு வாழணும். மனைவியை பத்தி ரெபரன்ஸ் ஒன்னும் இல்லை. தேவையில்லை. அவந்தான் அறுபதாயிரம் கட்டிக்கலாமே? கடைசி வரயிலயும் ஒரு பத்து பேராச்சும் உயிரோட இல்லாமயா போயிடுவா?"
நீதிபதிகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். "சாந்தி டீச்சர், நீ ஏன் சுருக்கமாகவும் புரியும்படியாகவும் பேசக்கூடாது?"
"நல்லது, கோர்ட்டார் அவர்களே, இனிமேல் நான் A for Apple , B for Biscuit என்று பிரித்தே பேசுகிறேன்."
அரசு வக்கீல் மறுபடியும் எழுந்து "குற்றம் சாட்டப்பட்டவர் மறுபடியும் கோர்ட்டை அவமதிக்கிறார்." என்றார்.
"இல்லை. கனம் கோர்ட்டார் அவர்களே. நீங்கள் புரியும் படியாக பேச வேண்டுமென்று கேட்டதற்கு இணங்கத்தான், அப்படி நான் ஆகக்கூடிய சிரத்தையுடன் பேசப்போகிறேன் என்று சொன்னேன்."
"அப்ஜெக்ஷன் ஒவர் ரூல்ட்" என்று சொல்லிவிட்டார் தலைமை நீதிபதி.
சாந்தி பேசினாள் "அதாவது சம்பாதிக்கும்போது கணவன் மனைவிக்கு மனமுவந்து தானம் கொடுக்கிறான். கொடுத்தால் உண்டு. இல்லையென்றால் இல்லை. அதுதானே தானம்? ஆனால் மனைவி சம்பாதிக்கும்போது கணவன், எடுத்துக்கொள்கிறான் அல்லது பறித்துக்கொள்கிறான். அதாவது தானாகவே எடுத்துக்கொள்ளும் அல்லது பறித்துக்கொள்ளும் உரிமையில் இருப்பவனை எப்படி சார்ந்திருப்பதாக சொல்லமுடியும்?"
"நீ மறுக்கவில்லையா?"
"லேசான மறுப்பின்போது பறித்துக்கொண்டான். பலமாக மறுத்தபோது அடித்து பிடுங்கிக்கொண்டான்."
"ஏன்?"
"அது அவனால் முடிந்தது."

தலைமை நீதிபதி ஸ்டெனோவிடம், " அடித்து பிடுங்கிக்கொண்டான். அது அவனால் முடிந்தது." என்றார்.

நீதிபதி 10 கேட்டார் "அவன் உன்னை அடித்தால் நீயும் அவனை எதிர்த்து அடிக்க சட்டத்திலேயே இடமிருக்கிறதே, வீட்டுக்குள் நுழைந்த கொள்ளைக்காரனை வீட்டுக்காரன் தாக்குவதற்கு உரிமையிருப்பதை போல, நீ ஏன் எதிர்த்து அடிக்கவில்லை?"

"அடிக்க முடியவில்லையே...."

நீதிபதி 9 ஒரு விஷம புன்னகையோடு கேட்டார் "அதனால்தான் உன்னால் அடிக்க முடிந்த ருத்ரா டீச்சரை அடித்தாயோ?"

"அப்படியானால், அதுதான் இதுவென்றால், இவளை அடித்தது என் புருஷனை அடித்ததே என்றால், இதற்கு சட்ட சம்மதமே இருக்கிறதென்றால், நான் ஒத்துக்கொள்கிறேன். நான் ருத்ரா டீச்சரை via mediaவாக வைத்து என் புருஷனைத்தான் அடித்தேன். உடனே என்னை விடுதலை செய்யுங்கள், கனம் கோர்ட்டார் அவர்களே."

கோர்ட்டில் இருந்தவர்கள் எல்லோரும் குபீரென்று சிரித்தார்கள். நீதிபதி முகத்தில் அசடு வழிந்தது.

தலைமை நீதிபதி கமிஷன் நீதிபதியிடம் கேட்டார் "இந்த மனிதனின் அந்த மாதிரியான நடத்தைக்கு அவனிடம் காரணம் கேட்கப்பட்டதா?"

"கேட்கப்பட்டது கனம் தலைமை நீதிபதி அவர்களே. ஆனால் அவன் சொல்வது என்னவென்றே கமிஷனால் புரிந்து கொள்ளமுடியவில்லை. கமிஷனுக்கு இன்னொரு சந்தேகம் கூட உண்டு. அவன் சொல்வது என்னவென்று அவனுக்கே தெரியுமாவென்று..."

"அப்படி என்னதான் சொல்கிறான்?"

"அவன் மேலை நாடுகளில் சமீபத்தில் உருவாகியுள்ள இரண்டொரு வாழ்வியல் மற்றும் இலக்கிய கோட்பாடுகளின் பெயர்களை சொல்கிறான். அதன்படிதான் அவன் வாழ்கிறானாம், எழுதுகிறானாம்."

"அப்படியா?"

"அவன் தான் உழைக்க வேண்டியதில்லையென்று சொல்கிறான். தான் எதற்கும் கட்டுப்படவேண்டியதில்லை, எதையும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை என்றும் சொல்கிறான்."

"எல்லாரும் இப்படி நினைத்துவிட்டால் நிலைமை என்னாகும்?"

"அதைப்பற்றி தான் கவலைப்படவில்லையென்றும் கமிஷனும் கவலைப்பட வேண்டமென்றும் சொல்லிவிட்டான்."

சாந்தி டீச்சர் குறுக்கிட்டு சொன்னாள் "அவன் அப்படித்தான். எதற்கும், யாருக்கும் தான் பதில் சொல்லக் கடமைப்படவில்லை என்று சொல்லிவிடுகிறான். உதாரணமாக என்னிடமிருந்து பறிக்கும் காசிலும் எட்டணா நாணயத்திற்கு குறைவான நாணயங்கள் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் அவற்றை பொறுக்கி திண்னையில் நின்று சாக்கடையில் போட்டு விடுவான். ஒரு தடவை நான் "நீயேன் இப்படி செய்கிறாய்? அது நான் தொண்டை வரள் பிள்ளைகள் முன் நின்று கத்தியதற்காக கிடைத்த கூலியல்லவா? உனக்கு எந்த வகையிலாவது அது பிடிக்காமல் போயிருந்தால் அதை என்னிடம் திருப்பிக்கொடுத்திருக்கலாமே? அதை சாக்கடையில் எறிய உனக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று கேட்டதற்கு அவன் "உரிமை, கடமை , கிஸ்தி, வசூல் ... யாரை கேட்கிறாய், அடி மானங்கெட்டவளே" என்று சிரித்தபடியே கட்டபொம்மன் வசனம் சொல்லிக்கொண்டே போய்விட்டான்."

"கல்யாணத்திற்கு முன்பு உனக்கு அவனை பற்றி ஒன்றும் தெரியாதா?"

"கல்யாணத்திற்கு முன் யாருக்கு யாரை பற்றி தெரிகிறது? குறிப்பாக பெண், கல்யாணம் நடந்தால் போதுமென்றிருப்பவள். அவளுக்கு ஆராய்ச்சி செய்யவெல்லாம் திராணி ஏது? நம்பிக்கை! நம்பிக்கை! அதுதான் அப்போது அவளது சரணாலயம்."

"ஆங். ஞாபகம் வருகிறது. எங்கள் கல்யாணத்தை ழான்பால் சார்த்தர்தான் நடத்தி வைத்தார். அவர் இவனிடம் - என்னா காம்ரேட், நீ எதுக்கும் கட்டுப்படாத ஆளாச்சே. இப்ப திருமண ஒப்பந்தத்துல கையெழுத்து போடுறியே, ஒப்பந்தம் என்றாலே கட்டுபடறதாச்சே? என்ன விஷயம் - என்று கேட்டார். இவன் எந்த பதிலும் சொல்லாம சிரிக்க மட்டும் செஞ்சான். நான் அவங்க ரெண்டு பேரும் எதோ தமாஷ் பண்ணிக்கறாங்கன்னு மட்டும்தான் நினைச்சேன். கை பிடிக்கறபோதே ஒருத்தனை எப்படி நம்பாம போறது?""ஆனா இப்ப தெரியுது. அவர் அப்படி கேட்டப்ப இவன் - அட அசடே, நீ என்ன ஒரு அறிஞன்? ஒப்பந்தத்துல கையெழுத்து போடறதால மட்டும் ஒருத்தன் அதை மீறக்கூடாதுன்னு என்னா இருக்க்னு உள்ளுக்குள்ள சிரிச்சிக்கிட்டு இருந்திருக்கான்."

கமிஷன் நீதிபதி சொன்னார் "அவன் ஒரு கலகக்காரனாக இருக்க விரும்புபவன் போல தெரிகிறது."

சாந்தி மீண்டும் குறுக்கிட்டாள் "இல்லை. இவன் கலகக்காரன் போல வேஷம் போடுகிறவன். இது ஒரு சுகமான வாழ்க்கைக்கு சுலபமான வழியென்று நினைக்கிறவன். அவன் தனது கஞ்சா மயக்க வாழ்க்கைக்கு நியாயங்களை தேடுகிறவன். அதற்கு ஏதேதோ தத்துவச்சாயங்க்களை பூசிக்காட்டுகிறவன்."

கமிஷன் நீதிபதி சொன்னார் "இருக்கலாம். அவன் சொல்கிறான் - கஞ்சா குடிக்காதவன் வாழ்க்கையை பாழடித்து விட்டவனென்று."

"எழுதுகிறான் என்று சொன்னீர்களே, எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறான்?"

"அப்படியும் அதிகமில்லை. ஒன்றோ இரண்டோதான் போலிருக்கிறது."

"அதன் தரம் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?"

"சிலர் பாராட்டத்தான் செய்கிறார்கள்."

"அவனது வாழ்க்கையை....."

"அதையும் அவர்கள் சிலாகிப்பதாகவே தெரிகிறது."

"அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? இவனை போலத்தான் அவர்களும் வாழ்க்கை நடத்துகிறார்களா?"

"இல்லை. அவர்கள் தங்கள் குடும்பம், குழந்தை குட்டிகளோடு அழகாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வீடு இருந்தால் வீட்டோடு. பங்களா இருந்தால் பங்களாவோடு. உத்தியோகம் இருந்தால் உத்தியோகத்தோடு நிம்மதியாகவே இருக்கிறார்கள்."

"பின் ஏன் அவர்கள் இவன் வாழும் வாழ்க்கையை ஆதரிக்கிறார்கள்?"

"அது கமிஷனின் அலுவல் எல்லைக்குள் வரததால் கமிஷன் அதை விசாரிக்கவில்லை."

"சரி, மேலே சொல்லுங்கள்."

"அவன் கொலையை கூட ஒரளவு ஆதரிக்கிறான். எப்போதோ போகப்போகிற உயிரை ஒரு காலகட்டத்திற்கு முன்னால் விட்டுவிடுவதோ அல்லது போக்குவதோ அடாத செயல் இல்லையென்று சொல்லுகிறான்."

"அப்படியா?" என்று வியந்த தலைமை நீதிபதி சாந்தியை பார்த்தார்.

"கமிஷன் சொல்வது உண்மைதான் நீதிபதி அவர்களே. அவன் தனது முதல் மனைவியை கூட கொலை செய்துவிட்டதாகவே என் காதுக்கும் வந்திருந்தது. இப்போதும் அவன் கண்களில் அடிக்கடி அதையே பார்க்கிறேன். அந்த முதல் மனைவியின் மரணத்தை விட என்னுடைய மரணத்தில் அவனுக்கு ஆதாயம் அதிகம். எனது மரணத்தால் உடனடியாக அரசாங்கம் அளிக்கும் அறுபதாயிரம் ரூபாய் கருணைத்தொகையும் மாதாமாதம் குடும்ப பென்ஷனும் அவனுக்கு கிடைக்கும்."

தலைமை நீதிபதி ரொம்பத்தீவிரமாக சிந்திப்பது தெரிந்தது. "இந்த நினைப்பு உன்னை ரொம்ப வேட்டையாடுகிறதா, சாந்தி?"

"எந்த நினைப்பு?"

"அவன் உன்னை கொன்று விடலாம் என்ற நினைப்பு."

"ஆம். ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு நிமிஷமும்."

தலைமை நீதிபதி சொன்னார் "இப்போது நமது கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதென்று நினைக்கிறேன். இவளது மனநிலை பாதிக்கப்படுமளவுக்கு இவள் புருஷனின் நடவடிக்கைகள் நிச்சயமாக இருக்கிறது."

சாந்தி மீண்டும் கத்தினாள். "இல்லை. இதனால் எல்லாம் என் மனநிலை பாதிக்கப்படவில்லை. நான் அதீத கோபமாய் இருக்கிறேன். அவ்வளவுதான்."

"வெறும் கோபம் என்றால் இன்னொரு பெண்ணை நீ ஏன் அடிக்க வேண்டும்?"

"நாந்தான் சொன்னேனே, அவள் என்னை சீண்டினாள்."

"அவள் சீண்டவில்லை. அப்படி அவளுக்கு எந்த நோக்கமும் இல்லை. அவளது கஷ்டத்தை அவள் சொன்னாள். அந்த மனுஷன் இருந்தால் நான் ஏன் இப்படி லோல் படுகிறேன் என்று ஒருத்தி சொல்வது பொதுவான எந்த அகராதி அர்த்தங்கள் படியும் நீ சொல்லும் அர்த்தமாகாது. அது நீ சொல்லும்படியெல்லாம் அர்த்தமாக வேண்டுமானால் அது ஒரு மனநிலை சரியில்லாதவரின் அகராதிப்படியாகத்தான் இருக்க முடியும்."

"பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஒஷோ ரஜனீஷ், பெரியார் இவர்கள் அகராதிகளையெல்லாம் தூக்கி எறிந்துவிடுகிறீர்களா?"

தலைமை நீதிபதி முணுமுணுத்தார் "ஒஷோ, பெரியார், ரஸ்ஸல்.... நமது முந்தைய அனுமானங்களுக்குத்தான் சாட்சியங்கள் கூடி வருகின்றன."

நீதிபதி 2 சொன்னார் "தவிர, இவள் ஆரம்பத்தில் சொன்ன காரணங்களும் உங்கள் முடிவுக்கு சாதகமாகவே உள்ளன. ஒரு மனிதனின் சாவு அவன் மனைவிக்கு துன்பமல்ல, அது அவளது வசதி, நஷ்டமல்ல லாபம், அவளது சந்தோஷம் ,சுதந்திரம் என்றெல்லாம் சொல்வதென்றால் அது ஒரு பிறழ்வுண்ட மனத்தின் கற்பனையாகவே இருக்க முடியும். "

"இல்லை. இது கற்பனையில்லை. நான் நிரூபிக்கிறேன். இது முக்காலும் உண்மை. நான் நிரூபிக்கத்தவறினால் என் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு நானும் விழுந்து விடுகிறேன்."

"எப்படி நிரூபிப்பாய்?"

"நான் சொல்லும் சாட்சியங்களை கூப்பிட்டு விசாரியுங்கள்."

"சரி, சொல்லு."

"முதலாவதாக கோடி வீட்டுப்பொன்னம்மா."

கோர்ட் ஊழியர் மூன்று முறை கோடி வீட்டுப்பொன்னம்மா பெயர் சொல்லிக்கத்தினார்.

கோடி வீட்டுப்பொன்னம்மா, உடம்பு இதற்கு மேல் பருத்தால் விபரீதமாகிவிடும் என்ற அளவில் இருந்தாள். தஸ்புஸ் என்று மூச்சு வாங்க வந்தவள், அந்த லட்சணத்தில் நாணிக்கோணிக்கொண்டு வேறு சாட்சி கூண்டில் ஏறினாள்.

"அய்யோ, யாருங்க அப்படி சொன்னது? அந்த மனுஷன் செத்ததுக்கு அழுதேனே அழுதேனே அப்படி அழுதேனே? சும்மா நெஞ்சுல துக்கம் இல்லாம அப்படி அழுகை வருங்களா?" என்றாள் கேட்ட கேள்விக்கு.

சாந்தி அவளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கேட்டாள். "பொன்னம்மா, உன் புருஷன் சாகறத்துக்கு முன்னாடி நீ எப்படி இருந்தே?"

"அப்படின்னா?"
"கண்ணுக்கு கீழே கருவளையம் விழுந்து என்னப்போலவே கொத்தவரங்கா வத்தலாட்டமாத்தானே இருந்தே?"
"ஆமா"
"இப்போ எப்படி இருக்கே?"

பொன்னம்மா அந்த கோர்ட் நெடுக தன் கண்களை ஒரு முறை நிதானமாக ஓட்டினாள். பிறகு சொன்னாள்"இந்த நீதிபதி 8 மாதிரி இருக்கேன்."

குண்டு நீதிபதி என்று பெயரெடுத்த ஜஸ்டிஸ் 8 உட்பட எல்லாரும் சிரித்தார்கள்.

"புருஷனை இழந்து கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு, ஆதங்கப்பட்டு சதா புலம்பிகிட்டு இருக்கறவளுக்கு 5 வருஷத்துல எடை இப்படி கூடுமா?"

நீதிபதி 4 "அது சந்தோஷம் போட்ட எடை என்றா சொல்லுகிறாய்?" என்று கேட்டுவிட்டு நிதிபதி 8ஐ ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தார்.

"பின்ன சந்தோஷம்னா சாதாரண சந்தோஷமா?" சொல்லிவிட்டு சாந்தி தொடர்ந்தாள். "புருஷன் செத்துபோனதால் வந்த இன்ஷூரன்ஸ் தொகை வட்டிக்கு போய் போடு போடென்று வளர்கிறது - இவள் உடம்பு மாதிரியே. அவன் குடித்து அழித்த காசு மிச்சம். அடி கிடையாது.. உதை கிடையாது.. வசவு கிடையாது... அதிகாரம் கிடையாது."

"பின் எதற்காக இவள் இப்படி சொல்கிறாள்?"
"அதை அவளிடமே கேளுங்கள்."

கேள்வி கேட்ட நீதிபதி இப்போது அதை பொன்னம்மாவிடமே கேட்டார்."இதென்னாங்க வெக்கக்கேடா இருக்கு. மனசுல இருக்கறதையெல்லாம் வெளியில சொல்லிட முடியுங்களா? ஊரு என்ன சொல்லுங்க? காறி துப்பிடாதுங்களா?"

"இது தோசையை திருப்பி போட பூரி வந்த கதையாக இருக்கிறது." என்றார் நீதிபதி 5.

இரண்டாவது சாட்சியாக கொடிக்கால் ராமாயி வந்தாள். அவள் யாரையோ அடிக்க வருவது போல் கைகளை வீசி வீசி நடந்து வந்தாள். அவள் தெளிவாக நேரடியாகவே பேசினாள்.

"ஆமாங்க. சந்தோஷந்தாங்க. ரொம்ப சந்தோஷம். சந்தோஷப்படாம என்னங்க செய்யறது? ஒரு குஷ்டரோகி மனுஷனை விஷயத்தை மறைச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. ஒரு அஞ்சு வருஷத்துல கைவிரலு கால் விரலெல்லாம் குறைய ஆரம்பிச்சுடுச்சு. ஆனா அந்த ஆளுகூடதாங்க எனக்கு எல்லாம். புரியுதுங்களா? மனுஷன் குளிக்கக்கூட மாட்டாரு. ஊத்த வாயி அதுக்கு மேல ஊத்த. என்னாப்பேச்சு! என்னா அசிங்கம்! சொறி நாயி குறுக்கால போகாது. சகிச்சு சகிச்சே என் உசுரு போச்சுங்க. இப்பதாங்க நானும் என் பசங்களும் சந்தோஷமா இருக்கோம். என்னமோ எங்களுக்கே குஷ்டம் வந்து பளிச்சுனு விலகின மாதிரி இருக்குங்க. அப்புறம் சந்தோஷமா இருக்கேன்னு சொல்லாம வேற எப்படி சொல்றது?"

சந்தான லெட்சுமி சொன்னாள் "கொஞ்சம் மன உறுத்தலாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் சங்கடமாகவுந்தான் இருக்கிறது. புருஷன் செத்து போனது குறித்து சந்தோஷப்பட்டேன் என்று சொல்வது நியாயமாக தோன்றவில்லைதான். ஆனாலும் உண்மை இந்த சாந்தி டீச்சருக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது."

ஒரு நாள் திடுதிப்பென்று ஒருத்தியை கூட்டிக்கொண்டுவந்து நடு வீட்டில் நிறுத்திக்கொண்டு "இன்றிலிருந்து இவளும் என் பொஞ்சாதி. இங்கேதான் இருப்பாள்" என்றார். வந்த ஆத்திரத்தில், கோபதாபமான வாக்குவாதங்களின் சூட்டில் இந்த மாதிரி நான் ஒரு ஆம்பிளைய கொண்ணாந்து நிறுத்தியிருந்தா நீ சும்மாயிருப்பயானு கேட்டதுக்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா? பளார்னு ஒரு அறை.அன்றிலிருந்து என் வீட்டில் அவள்தான் வாழ்ந்து வந்தாள். 5 வருஷம்! நான் கூசிக்குறுகி, வெக்கங்கெட்டு, எப்போதாவது பத்திருவது நாள் அவள் இல்லாது போய்விடுகிறபோது அவருக்கும் ஒரு பெண் உடல் தேவையாயிருந்தால்...என்ன மானங்கெட்ட பிழைப்பு...

அவள் சம்பாதித்தாள். எனவே வீட்டிலும் அதிகார தோரணை. நான் வேலைக்காரி.

இந்த கொடுமை கனம் கோர்ட்டார் அவர்களே, தங்களை என் இடத்தில் வைத்துப்பார்த்தால்தான் புரியும். அவள் காலை 8 மணிக்கு எழுவாள். குளிப்பாள். அலங்காரம் செய்து கொண்டு சாப்பிட்டு விட்டு 9 மணிக்கு அவர் பின்னால் கேரியரில் ஏறி உட்கார்ந்துவிடுவாள். என் வயிறு எறியும். எறியாதா பின்னே?

அப்படி போகும்போதுதான் ஒரு நாள் எவனோ ஒரு லாரிக்காரன் ஒரே இடியில் இரண்டு பேரையும் தூக்கி ஒரு குழியில் போட்டுவிட்டு போய்விட்டான்.

இவள் முடிக்கும் முன்னரே நான்காவது சாட்சியான காண்டாமிருகம் கந்தசாமி சூப்பர் இம்போஸில் வந்து பேசத்தொடங்கினான்.பெரிய முரடனாக கடா மீசை வைத்துக்கொண்டிருந்த அவன் தன்னை ஒரு செத்துப்போன ஹெட் கான்ஸ்டபிள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.

"என்னையத்தாங்க காண்டாமிருகம் கந்தசாமினு சொல்லுவாங்க. அவ்வளவு பலசாலிங்க. கைதிகளை மட்டுமில்லைங்க பொஞ்சாதியையும் பெல்ட்டாலதாங்க அடிப்பேன். வழிக்கு கொண்டுவரணும்னா ஆம்பள என்ன பொம்பள என்ன, போக்கிரி என்ன பொண்டாட்டி என்ன? ஒரு தடவை தண்ணி வேற போட்டுட்டேனா? வீட்டுக்கு வந்து பொஞ்சாதிக்காரிய விட்டேன் ஒரு ஒதை. அப்படியே அந்தரத்துல ஆறடி தூரம் போய்ட்டு வந்தா." சொல்லிவிட்டு சிரித்தான்.

"அதுக்காவ தலையில கிருஷ்ணாயில ஊத்திகிட்டு நெருப்பு வச்சுக்குவேன்னு பயமுறுத்தினா. வச்சுக்கடின்னு சொல்லிட்டேன். எங்கிட்டயே பூச்சாண்டி காட்டினா நடக்குமா? பேசாம கொல்லையில போயி ஒரு மணி நேரம் உக்கார்ந்து இருந்துட்டு எவளோ போயி சமாதானம் சொன்னான்னு வீட்டுக்குள்ள வந்துட்டா. வ....லக்கிடி."

ஆனா பாருங்க, என்ன இருந்தாலும் நான் புருஷன் இல்லியா? ஒரு கலவரத்த அடக்கப்போன இடத்துல நான் கல்லடி பட்டு செத்து போயிட்டேன். அதுக்கு வீரபதக்கமும் பணமும் தராங்க. அதை தந்த அந்த அதிகாரி மூஞ்சில கூட கொஞ்சம் வருத்தம் இருந்துச்சுங்க. ஆனா இவ போயி, அதாங்க என் பொஞ்சாதி, சர்வ சாதாரணமா கெடச்ச வரையிலும் ஆதாயம்னு வாங்கிட்டு சிரிக்காத கொறயா வர்றா. இப்ப பென்ஷன் கணக்குல என்னமோ தப்புனு கோர்ட்டுக்கு பொயிருக்காளாம். எப்படிங்க பொம்பளை நியாயம்?"

சாந்தி அவனை குறுக்கு விசாரணை செய்தாள்.
"காண்டாமிருகம் கந்தசாமி..."
"என்னா?"
"என்னா இந்த பொம்பள நியாயத்துல அநியாயம்?"
"பணம் வாங்க வந்தப்ப பொம்பள முக்காடு போட்டுகிட்டு குமுறி குமுறி அழுதிருக்க வேணாமா?"
"எதுக்கு?"
"எதுக்குன்னா? இதென்ன கேள்வி?"
"நீ பெல்ட்டால அடிச்சயே அதுக்கா?"
காண்டாமிருகம் கந்தசாமி விழித்தான்.
"அவ அந்தரத்துல ஆறடி போய்ட்டு வந்து விழற மாதிரி உதைச்சயே அதுக்கா?"
காண்டாமிருகம் கந்தசாமி பேந்த பேந்த விழித்தான்.
"அவ நெருப்பு வச்சுக்க போனப்ப வச்சுக்கன்னு சொன்னியே அதுக்கா?"
"இல்ல, அவளுக்கு நாந்தானே தாலி கட்டுனேன். அதுக்காக...."
"அதுதான் அந்த தாலிய நீ செத்துட்டேன்னு அறுத்தாச்சே?"
காண்டாமிருகம் கந்தசாமி பேந்த பேந்த விழித்தான்.
ஐந்தாவதும் கடைசியுமான சாட்சி ஜோதி, வரும்போதே சிரித்துக்கொண்டே வந்தாள். "பேருங்களா? ஜோதி." சிரித்தாள்.
"வயசுங்களா? இருவத்தாறு. " சிரித்தாள்.
"ஆமாங்க ,செத்துட்டாரு." சிரித்தாள்.
"ஆமாங்க. வீட்ட விட்டு போறப்ப என்ன வீட்டுக்குள்ள வச்சி பூட்டிட்டுதாங்க போவாரு. ஆனா சாவிய என்கிட்டத்தான் கொடுத்துட்டு போவாரு." சிரித்தாள்.
நீதிபதி 5 அவள் எதற்காக இப்படி தொட்டதற்கெல்லாம் சிரிக்கிறாள் என்று கேட்டதற்கும் சிரித்தாள்.
"ஆமாங்க, இதென்னமோ ஒரு சீக்கு போலிருக்குஙக. முன்னயெல்லாம் இப்படி இல்லைங்க. அவரு இருக்கறப்ப யாரும் நான் சிரிச்சே பாத்திருக்க மாட்டாங்க." சிரித்தாள்.
சாந்தி கேட்டாள், "சாட்சியங்கள் போதுமா கோர்ட்டார் அவர்களே?"
"போதும். போதும்." என்ற தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகளை பார்த்து "இனி நாம் கலந்தாலோசிக்கலாம்." என்றார்.
அவர்கள் ஒரு மாய நொடியில் கலைந்து வட்டமாய் உட்கார்ந்தார்கள்.காற்று கொஞ்சம் உரத்து வீச ஆரம்பித்தது.
தலைமை நீதிபதி: இங்கே குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சாந்தி டீச்சர், ஒரு தேவையில்லாத முரண்பாட்டிற்குள் தன்னைத் தானே திணித்துக்கொண்டிருப்பது தெரிகிறது. அது நல்ல கோடைக்காலத்தில் குளிர் காலத்துக் கம்பளி ஆடையை தேர்ந்தெடுத்துவிடுபவரை நமக்கு நினைவூட்டுகிறது.
நீதிபதி 12: அல்லது நல்ல குளிர் காலத்தில்....
த.நீ: அதுவும் ஒரு நல்ல உதாரணம்தான். அது இருக்கட்டும். இவர் ஒரளவு நல்ல படிப்பாளியென்றும் தெரிகிறது. ஆனால் அந்த படிப்பே அவரை மேற்படி கம்பளி ஆடைகளை தேர்ந்தெடுக்க வைத்திருப்பது அவரது துரதிர்ஷ்டம். நிதர்ஸனத்தை அவர் உணரவேயில்லை.
சாந்தி: நிதர்ஸனம் என்றால்?
த.நீ: நிதர்ஸனம் என்றால் உண்மை, உண்மை நிலை. மரபு, மரபு சார்ந்தது... மரபு சார்ந்த சட்டம் சார்ந்தது. சட்டம் அனுமதிப்பது.
சாந்தி: மரபு மரபென்றால் எதையுமே புதிதாக சிந்திக்க மாட்டீர்களா?
த.நீ: இல்லை. தேவையில்லை. எல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன.
சாந்தி: சரி, உங்கள் மரபு, அலையாஸ் சட்டம் அலையாஸ் நிதர்சனம் என்னை பற்றி என்ன கூறுகிறது?
த.நீ: ரோமார்களின் நாட்டில் ரோமானிய சட்டங்கள்தான் இருக்க முடியும். அது போல இங்கு ஆணாதிக்கச் சட்டங்கள்தான் இருக்க முடியும். எந்தச்சட்டமாயிருந்தாலும் அமுலிலிருக்கும் சட்டங்களுக்கு பிரஜைகள் கட்டுப்பட வேண்டியவர்கள். அப்படிக் கட்டுப்பட்டு, பணிந்து நடப்பதுதான் ஒரு நல்ல பிரஜையின் ஆரோக்கியமான மனநிலையாக இருக்க முடியும்.
சாந்தி: ஆரோக்கியம் என்றால்?
நீ.8: எது ஆரோக்கியமற்றதோ அதற்கு எதிர் நிலை.
நீ.11: அதாவது நோயற்ற நிலை.
சாந்தி: நீங்கள் திடீரென்று வடதுருவத்தில் எஸ்கிமோக்களோடு விடப்படுகிறீர்கள். குளிரால் நடுங்கி செத்துப்போகிறீர்கள். அப்போது நீங்கள் நோயாளியா?
நீ.11: அந்த சூழலுக்கு தகுதியில்லாத நான் அங்கு போயிருக்கக்கூடாதில்லையா?
சாந்தி: நீங்கள் அங்கு தூக்கியெறியப்பட்டிருந்தால்?
த.நீ: அப்படியானால் நீ இந்த சமுதாயத்துக்குள் தூக்கியெறியப்பட்டிருப்பதாக சொல்கிறாயா?
சாந்தி: அதே, அதே.
த.நீ: இது உண்மையாக இருக்க முடியாது. கோடானு கோடி பெண்கள் இதை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதன் நிழலில் மிகப்பிரியமான- பவித்திரமான வாழக்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சாந்தி: இங்கு சாட்சி சொன்ன பெண்கள் முன்பு மாங்கல்யம் தரித்துக்கொண்டு வாழ்ந்ததை போல, இல்லையா?
நீ.7: இல்லை. இவர்கள் வழிதவறிய ஆடுகள். இந்த ஆணாதிக்க சமுதாயம் உண்மையில் ஆண்களுக்காக அமைக்கப்படவில்லை. பரிபூரணமாக பெண்களின் நலனுக்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளாமல் போய்விட்டவர்கள்.

சாந்தி கபகபவென்று சிரித்தாள்."ரொம்ப அருமையான கண்டுபிடிப்பு. எங்கே கண்டுபிடித்தீர்கள்?"

"கண்டுபிடிப்பல்ல. ஏற்கனவே சொல்லப்பட்டவைகள். மதித்து படித்தால் தானாகவே தெரியும்."

"ஏற்கனவே சொல்லப்பட்ட இவைகளை மதித்துவிட்டு படிக்க தொடங்குவதா இல்லை படித்துவிட்டு மதிக்கத்தொடங்குவதா?"

நீதிபதி 8 ரொம்ப ரோஷமாக சொன்னார், "கும்பிட்டு விட்டுத்தான் படிக்க வேண்டும்."

"ஒன்றை அது என்னவென்றே அறியாமல் எப்படி கும்பிட முடியும்?"
"முடியும். நம்பு....முடியும்."
"அதாவது ஏற்கனவே சொல்லப்பட்டவைகள் அவைகளை பற்றியே அப்படித்தான் சொல்கின்றன போலும்."
"ஆமாம்."

"ஆனால் அவை ஆளுமை மிக்கவை என்றால் இப்படியல்லவா சொல்லியிருக்க வேண்டும்? அதாவது - நீ என்னை மதிக்க வேண்டாம். நம்ப வேண்டாம். வெறுப்பை வேண்டுமானாலும் வளர்த்துக்கொள். ஆனால் படி. படித்த பிறகும், நம்பாத, மதிக்காத, வெறுப்புக்கொண்ட உன்னாலும் எங்களை தவிர்க்க முடிகிறதா என்று பார்த்துவிடுவோமென்று..."

நீதிபதி 8 மேலும் உக்கிரமானார். "இது ஒன்றும் உன் புருஷன் மாதிரி ஆட்கள் எழுதுகிற புத்தகங்கள் அல்ல. படித்துவிட்டு பிடித்தால் சந்தோஷப்படவும் பிடிக்காவிட்டால் தூக்கியெறிந்துவிட்டு போகவும்."

"அதாவது சாந்தி டீச்சர் வகையறாக்களும் வாலையறுத்துக்கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறீர்கள்?"

வெளியே எங்கிருந்தோ யாரோ முன்பு சாந்தி சிரித்ததைப்போலவே சிரித்தார்கள்.

தலைமை நீதிபதி, நீதிபதி 8ஐ அதட்டினார். "இதென்ன, இந்த பெண்ணோடு போய் சரிக்கு சரி வாதம் ஜஸ்டிஸ் 8. யாரோடு யார் வாதாடுவது என்ற கணக்கு இருக்கிறது. குறைந்தது இந்தப்பொன்மொழியாவது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் - முட்டாளோடு வாதிடாதே. வாதாடினால் பார்ப்பவர்களுக்கு அவன் முட்டாளா, நீ முட்டாளா என்று தெரியாது என்று சொல்லும் அது."

சாந்தி சட்டென்று "தேங்யு, மை லார்ட். இனி நான் உங்கள் யாரோடும் வாதாட மாட்டேன்." என்று சொல்ல, நீதிமன்றத்தில் நீதிபதிகள் அல்லாத எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.

தலைமை நீதிபதி, நீதிபதி 8ஐ பார்த்து "பார்த்தீர்களா? பொன்மொழி சொன்னது சரியாக போய்விட்டதல்லவா?" என்று கோபத்துடன் கூற, பின்னவர் மயக்கம் போட்டு சரிந்தார்.

காற்று மிக பலமாக வீசியது. நீதிபதிகளின் ஆடைகள் படபடத்தன. ஒரிருவரின் விக்குகள் பறந்தன.

தலைமை நீதிபதி எழுந்து அவசரத்தோடும், படபடப்போடும் தீர்ப்பை படிக்க ஆரம்பித்தார்."வாதங்கள் ஆலோசனைகள் எல்லாவற்றிற்கும் பிறகு இந்த கோர்ட்டின் தீர்ப்பை அளிக்கிறேன்.

குற்றம் சாட்டப்பட்டவர் பற்றி ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கோடைக்காலத்து கம்பளி ஆடை உதாரணத்திற்கு மேல் மாற்றமோ முன்னேற்றமோ எதுவும் இல்லை. தவறான தேர்வுக்காக நாம் அவர் மேல் அனுதாபப்படலாம். ஆனால் சட்டத்திற்கும் அனுதாபத்திற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? வேண்டுமானால் அனுதாபத்தோடு தீர்ப்பளிக்கலாம். அவ்வளவுதான்.
ஆகவே குற்றவாளி சாந்தி டீச்சர், ருத்ரா டீச்சர் தலைமுடியை பிடித்து ஆட்டி கீழே தள்ளி மிதித்த குற்றத்திற்காக 12 மாத கடுங்காவல் தண்டனையும் 13 கசையடிகளும் கொடுக்க தீர்ப்பளிக்கிறேன்."

தீர்ப்பை கேட்ட சாந்தி சண்டாளமானாள்.சாட்சி கூண்டின் முன் கட்டையை பிய்த்து தலைமை நீதிபதி மேல் எறிந்தாள். கோர்ட் அங்குமிங்கும் கலைந்தோடியது. ஒரே கலவரம். அவள் வலது பக்கக் கட்டைகள், இடது பக்கக் கட்டைகள் எல்லாவற்றையும் பிய்த்து எறிய ஆரம்பித்தாள்.

ஓய்வறைக்கு வெளியே இருந்தவர்கள் கலவரமானார்கள்.

"அய்யய்யோ முத்திப்போச்சு போலிருக்கே. கையில கெடச்சத எடுத்து வீசுது." என்று கத்தினார் ஒருவர்.

"அட, என்னய்யா இது? லேடீஸ் டீச்சர்ஸை கூப்பிட்டு கைய கால கட்டுங்கப்பா" என்றார் கருப்பையா ஆசிரியர்.

"லேடீஸ் டீச்சர்ஸ் ரெண்டு பேர் வாங்க" யாரோ ஒருவர் குரல் கொடுத்தார்.

கதவை திறந்து அந்த முயற்சியிலீடுபட்ட அந்த பெண் ஆசிரியர்களால் அது முடியாமல் போகவே ஆண்களும் உதவி செய்ய வேண்டியதாயிருந்தது.

"வீட்டுக்கு சொல்லிவிட்டமே, என்னப்பா ஆச்சு?"

"தெரியலையே, போனவனக்கூட இன்னும் காணமே.."

"இந்தா இருக்கானே. ஏய், போய்ட்டு வந்துட்டு ஏன் சும்மா நிக்கறே? என்னா ஆச்சு? வீட்டுல யாராச்சும் ஆள் இருக்காங்களா இல்லையா?"

"இல்ல சார், வந்து..."

"என்னா, சொல்லுய்யா?"

"இன்னொரு மோசமான செய்தி சார், இவங்க வீட்டுக்காரர் பத்து மணிவாக்குல லாரியில அடிபட்டு செத்து போயிட்டாராம். பிள்ளைங்க எல்லாம் அங்கதான் ஓடியிருக்காங்க."

சாந்தி செய்தி சொன்னவனை திரும்பி பார்த்தாள். அவளுக்கு கணவன் இறந்த செய்தி உரைக்கும் முன்பாக, தெளிவாக, தான் இந்த ருத்ராவை அடித்திருக்க வேண்டாமே என்று தோன்றியது.

அதற்கு பிறகு அவளை பலவந்தமாக பிடித்து வைத்துக்கொண்டிருக்கும் தேவையெல்லாம் இருக்கவில்லை.

Monday, May 28, 2007

கனிமொழியின் அரசியல் பிரவேசம்

இப்போதைய சூடான விவாதம் கனிமொழியின் அரசியல் பிரவேசம்தான். அதை பத்தி நாமும் கருத்து சொல்லலைன்னா எப்படிங்க? நம்ம கருத்தை யாரு கேட்டாலும் கேக்கலைன்னாலும் நம்ம கருத்து சொல்றதுன்றது எப்பவுமே நமக்கு ஒரு வழக்கந்தான். அதுலயும் இந்த ப்லாக் ஆரம்பிச்சப்புறம் ஒரு வியாதியாவே மாறி கருத்து கண்ணம்மாவா ஆயாச்சு(கருத்து கந்தசாமிக்கு பெண்பால் ஒன்னு வேணுமேன்னு யோசிச்சதுல கிடைச்சதுதான் இந்த க.க.).

சரி பேச ஆரம்பிச்ச விஷயத்துக்கு வருவோம். முதலில் ஒரு விஷயம். ஒரு பதவியிலிருப்பவரின் வாரிசு என்பதற்காகவே ஒருத்தருக்கு வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு தவறோ அதே அளவு தவறு அவருக்கு அதே காரணத்துக்காக வாய்ப்பு மறுக்கப்படுதலும். ஆனா இவரோட அவரை சம்பந்த படுத்தி மனசுக்குள்ள வந்து உக்காரற முன்முடிவுகளை தவிர்த்துட்டு பாக்கறதும் ஒரு கஷ்டமான விஷயம்தான். ஆக இந்த மாதிரி விஷயங்களில் இரு தரப்பிலிருந்தும் மன முதிர்ச்சி தேவைப்படுகிறது. உண்மையிலேயே திறமையிருந்தால் மட்டுமே தன் வாரிசை தன் துறையிலிறங்க அனுமதிக்க வேண்டும். அதுவும் அவருக்கு எந்த சலுகையும் வழங்கப்பட்டுவிடவில்லை என்று தெளிவாகவே பொதுமக்களுக்கு தெரியவைக்குமளவு ஒளிவு மறைவற்ற நடவடிக்கைகள் வேண்டும். இது வாரிசை களமிறக்குபவர்களுக்கு. தள்ளி நின்று பார்க்கும் மக்களுக்கு(குறிப்பாக பத்திரிக்கையாளர்கள்) தேவையானவை: முன்முடிவுகளை தவிர்த்து வாரிசுகளின் செயலை விமர்சித்தல். தந்தை/முன்னோடியோடே ஒப்பிட்டு எப்போதும் விமர்சிப்பது என்பதை ஒதுக்கி வைக்க வேண்டும். அப்பாவை அடியொட்டி ஏதேனும் செய்தால் சொந்த சிந்தனை இல்லை - அவர் நிழலில் வாழ்கிறார் என்று குமுற வேண்டியது. மாற்றாக ஏதேனும் செய்தால் தந்தையை மதிக்காது தாந்தோன்றித்தனமாக செயல்படுவதாக குதிக்க வேண்டியது. இரண்டுமின்றி ஒரு மூன்றாவது மனிதர் இதே விஷயத்தை செய்திருந்தால், எப்படி பார்ப்போமோ அப்படி பார்க்க பழக வேண்டும்.

சரி, இவையெல்லாம் வாரிசுகள் களமிறங்குதலை பற்றிய என் பொதுவான சிந்தனை. குறிப்பாக கனிமொழியை பற்றி பேசுவோம். ஒரு குறிப்பிடத்தகுந்த கவிஞர், பத்திரிக்கை துறை அனுபவம் உள்ளவர். எனினும் பெரும்பான்மை மக்களால் தந்தையை ஒட்டியே அறியப்படுபவர். இவர் நேரடியாக ஒரு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்படுவது எவ்வளவு தூரம் சரியானது? அநேகமாய் மத்திய அமைச்சராகவும் ஆகிவிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்த திடீர் பாய்ச்சல் தயாநிதி மாறனுக்கும் இப்போது கனிமொழிக்கும் மட்டுமே சாத்தியமாவது நிச்சயம் வாரிசு அரசியல்தான். ஸ்டாலினை பற்றி வெறும் வாரிசு அரசியல் என்று ஒற்றை வரியில் இப்படி கூற முடியாது. பல வருடங்களாக கட்சியிலும் அரசிலும் பணியாற்றி வருகிறார். எனவே அவரது குறை நிறைகளை நேரடியாக எடை போட முடியும். அவர் செயல்களை விமர்சிக்க முடியும். மேலும் தொடர்ந்து அவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளுக்கே இது வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தயாநிதி மாறனும் தேர்தலில் போட்டியிட்டாரே என்ற கேள்வி இங்கே எழலாம். இப்போது கனிமொழி அமைச்சராவது எப்படி எம்.பியாவதற்கு முன்னரே எளிதில் ஊகிக்கக்கூடியதாக இருக்கிறதோ அப்படியே தயாநிதி தேர்தலில் நிற்பதற்கும் முன்னரே அவர் அமைச்சராவார் என்பதும் உறுதியாகத்தெரியும். ஒரு சாதாரண வேட்பாளர் ஜெயிப்பதற்கும் அமைச்சராக பிரகாசமான வாய்ப்புள்ள ஒருவர் அந்த தொகுதியில் ஜெயிப்பதற்கும் எந்த அளவு வேறுபாடிருக்கும் என்பது சாதாரண வாக்காளருக்கும் தெரியும். எனவேதான் சோ போன்றவர்களுக்கும் கூட ஸ்டாலினின் அரசியலை பற்றி வாரிசு அரசியல் என்று ஒற்றை பார்வைக்குள் தள்ளிவிட முடிவதில்லை . ஆனால் முன்பு தயாநிதி விஷயத்திலும் சரி இப்போது கனிமொழி விஷயத்திலும் சரி, இந்த குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரமுண்டு.

ஆரம்பத்தில் எனக்கு அவர் மேல் அவ்வளவு நல்ல அபிப்ராயமெல்லாம் இல்லை. சுஜாதா, சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்களின் செல்லப்பிள்ளை என்கிற அளவில்தான் முதலில் அவர் எனக்கு அறிமுகமானார். அதிலும் சாரு நிவேதிதாவின் அதிகப்படியான புகழல்(அழகாய் இருக்கிறாய் பயமாயிருக்கிறது வகையறா) எனக்கு ஒரு விதமான எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தி வந்தது. அவர் கருத்து.காம் துவக்கிய போது கூட இதுவும் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் எனவே தோன்றியது. ஆனால் ஒரே விஷயம் அவரை பற்றின எனது கருத்தை மாற்றிப்போட்டது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரதம்தான் அது. சாதாரணமாய் பழ. நெடுமாறனோ அல்லது வை.கோவோ இத்தகைய உண்ணாவிரதத்தை நடத்தினால் பெரிது யாரும் அதை படுத்தியிருக்கப்போவதில்லை. ஆனால் கலைஞர் சென்னை வந்த ஈழ பிரதிநிதிகளை சந்திப்பதை கூட தவிர்த்து வந்த நிலையில் அவர் மகளான கனிமொழி பகிரங்கமாக பந்தலில் உட்கார்ந்து உண்ணாவிரதமிருந்தபோது தன் கருத்துக்களை உணர்வுகளை யாருக்காகவும் வளைத்துக்கொள்ளாதவராய் இருக்கிறாரே என்று ஆச்சரியமானது. அதற்கு பிறகு அவரது கருக்கும் மருதாணி புத்தகத்தை (எப்போதோ ஏதோ ஒரு மனநிலையில் வாங்கி ஒரு ஒரமாய் போட்டு வைத்திருந்தது) எடுத்து ஒரே மூச்சில் படித்தேன். அவரது எழுத்துக்களின் மீது ஒரு ஆர்வத்தை தூண்டியது அது. தோழி.காமில் அவர் எழுதிய தலையங்கங்கள் எல்லாவற்றையும் தேடி பிடித்து படித்தேன். தந்தையின் சாயல் சிறிதுமின்றி அழகாய் தெளிவாய் எளிமையாய் இருக்கும் அவரது எழுத்துக்கள் இப்போது என் விருப்பமானவை பட்டியலில் இருக்கிறது. அடுத்த சந்தர்ப்பங்களில் அவரது புத்தகங்களை முடிந்த அளவு வாங்க குறித்து வைத்திருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கு கனிமொழி மீது மிகுந்த அபிமானமுண்டு. ஒரு தெளிவான சிந்தனையும் நல்ல ஆளுமையும் உடையவர். ஆனால் அவரை இப்படி அவசர கதியில் அரசியலுக்கு இழுத்து வந்து அவரது திறமைகளை விட முதல்வரின் மகள் என்ற ஒரே தகுதியில்தான் அவர் இந்த உயரத்தை எட்டினார் என்பது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட முதல்வரே காரணமாகிவிட்டாரோ என்பதுதான் என் எண்ணம்.

ஆனால் அதைவிடவும் வருத்தமான விஷயம் ஒரு பெண் அரசியலுக்கு வந்தால்தான் என்றில்லை, வரப்போவதாய் தெரிந்தாலே போதும் நாங்கள் அவர் உடலமைப்பை பற்றியோ இல்லை அவரது நடத்தை பற்றியோ அஷ்டோத்திர சஹஸ்ரநாம அர்ச்சனைகளையெல்லாம் ஆரம்பித்து விடுவோமாக்கும் என்று தொடை தட்டி கிளம்பியாயிற்று ஒரு கும்பல். ஏதோ ஒரு பேட்டையின் டீக்கடையில் இல்லைங்க, மெத்த படித்த நாகரீக கனவான்கள் உலாவும் தமிழ் வலையுலகாகிய புண்ணிய பூமியிலேயே இந்த கதிதான். இங்கனயே இப்படின்னா எஸ்.எஸ். சந்திரன் தொடங்கி இதுக்காகவே மானியம் வாங்கி வாழ்ந்துகிட்டிருக்கற கும்பல் நாளைக்கு என்ன என்னல்லாம் பேசப்போகுதோ தெரியலை. அதை நினைத்தால்தான் குலை நடுங்குகிறது(இங்கே கனிமொழி தி.மு.க சார்பா களமிறக்கப்பட்டிருப்பதால்தான் அ.தி.மு.க ஆட்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். இதே ஜெயலலிதாவை பற்றி பேச ஆரம்பித்தால் வெற்றி கொண்டான் வகையறாக்களும் இதே ரீதியில்தான் பேச்சு சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வார்கள் என்பதை அறிவேன் நான். எனவே எனக்கு உடனடியாக எந்த கட்சி சாயத்தையும் பூசிடாதீங்க மக்கா...).

சரி, கடைசியா நீ என்னதான் சொல்ல வரேன்னு பொறுமையிழக்கும் கண்மணிகளே, பொறுமை. என் எழுத்தை படிக்கறதுன்னு முடிவு பண்ணி இந்த லிங்கை க்ளிக்கிட்டீங்க இல்ல, அப்புறம் இப்போ வந்து ஃபீல் பண்ணி என்ன பிரயோசனம்? சரி, சரி, ரொம்ப அழுவாதீங்க. இதோ மாரல் ஆப் தி ஸ்டோரி - கனிமொழியின் திட்டமிடல், சிந்தனை போன்றவற்றில் எனக்கு நிச்சயம் நம்பிக்கை உண்டு. ஆனால் அவரது வருகை தவறான பாதையில்தான் அமைந்திருக்கிறது. அதனால் இந்த குற்றச்சாட்டையும் மீறி முதல்வரின் தேர்வு சரியே என பெரும்பான்மை மக்களை நம்பவைக்கும் வண்ணம் நடந்து கொண்டாக வேண்டிய கட்டாயம் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அதை அவர் செய்வார் என்றே நான் நம்புகிறேன். அவரேனும் ஒரு கண்ணியமான அரசியல்வாதிக்கு முன்னுதாரணமாக திகழ்வார் என்று நம்புவோமாக. நம்பிக்கைலதானேங்க நம்ம வாழ்க்கையே ஒடுது?

Friday, May 18, 2007

முற்றுப்புள்ளி

வாரந்தோறும் வந்து போகும்
வெள்ளி மாலை குதூகலமும்
திங்கள் காலை சிடுசிடுப்பும் போல
நம் உறவும் பிரிவும் நம்மை சுற்றியிருப்பவர்களின்
பிரக்ஞையில் பதிந்து போயாகிவிட்டது.
பிரியப்போகிறோமென்றோ இணைந்துவிட்டோமென்றோ நண்பர்களிடை சொல்கையில் அவர்களின் இதழோரத்தில் நெளியும் குறுநகையில் தெரிக்கும் ஏளனம்
என்னுள் இறக்கும் ஊசிகளின் வலியறிவாயா நீ?
இந்த சுழற்சி உனக்கு பிடித்திருக்கலாம்.
ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே காயத்தை
மீண்டும் மீண்டும் கீறுவதை போலிருக்கிறதெனக்கு.
எப்படி நிறுத்த என்றுதான் புரியவில்லை.
நசுங்கிய நம்பிக்கைகளும்
சிதைந்த எதிர்பார்ப்புகளும்
அவமான அமிலங்களால் பொசுங்கிய தழும்புகளும்
எனக்கு மட்டுமென்றால் கூட பரவாயில்லை
என்னிலிருந்து எழும் அதிர்வுகள்
என் வீடு முழுவதும் பரவி அடங்குவது அறிவாயா நீ?
எத்தனை முறைதான் சுற்றியிருப்பவர் பதறி விடாமலிருக்க
ஒன்றுமே நடக்காதது போல நான் நடிப்பது?
ஒவ்வொரு முறையும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு
ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்பதும்
அதே இடத்தில் வந்து முடிப்பதும்
இனியும் என்னாலாகாது.
போதுமென்னை விட்டுவிடு.

Wednesday, May 02, 2007

ஓடிப்போனவளின் தங்கை

தோள்பட்டையிலிருந்து சுளீரென ஒரு வலி கைமுழுதும் பரவியது. கையிலிருந்த துவைத்த துணிகளடங்கிய இரும்பு வாளி கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்தில் கலா அதை இன்னும் கொஞ்சம் இறுக்கி பிடித்தவாறு மொட்டைமாடிக்கு போகும் படிகளில் கவனமாக ஏறினாள். சிமென்ட் தரை அந்த பன்னிரண்டு மணி வெய்யிலில் காலைப்பொசுக்கியது. ஒரு கால் மாற்றி இன்னொரு கால் என்று ஊன்றியவாறே வேகவேகமாய் துணிகளை உதறி உணர்த்த ஆரம்பித்தாள். இப்படி சுடும் தரைக்கு பயந்து ஆரம்பத்தில் செருப்பு போட்டுக்கொண்டு வந்து அதனால் தான் பட்ட பாடு நினைவுக்கு வந்தது அவளுக்கு.

துணிகளனைத்தையும் உணர்த்தி முடித்துவிட்டு பொங்கிய வியர்வையை சேலைத்தலைப்பில் துடைத்தவாறே கீழே இறங்கியவள் வீட்டைச்சுற்றியிருந்த சிமென்ட் தளப்பாதையில் நடந்து நேரே பின் கட்டிற்கு போய் குழாயடியில் வாளியை வைத்தாள். அடிப்பாத எரிச்சலிலும் வியர்வையில் கசகசக்கும் தலைமுடி தந்த எரிச்சலிலும் சற்று வேகமாகவே வாளியை கீழிறக்கியதில் ணங்கென்ற ஒலி சிதறியது. வீட்டிற்குள் நுழைந்தபோது கூடத்திலிருந்த ஊஞ்சலில் படுத்திருந்த மாமியார் தலைதூக்கி பார்ப்பது தெரிந்தது. உள்ளுக்குள் சற்றே உதறலெடுத்தது கலாவுக்கு. ரொம்பத்தான் வேகமா வச்சுட்டமோ வாளிய, கும்பகர்ணனுக்கு தங்கச்சியா தூங்கற ஆளே எழுந்தாச்சே என்று எசகு பிசகாய் எண்ணங்கள் ஓட, "காபி வேணுமா அத்தை?" என்றாள் பவ்யமாய். பதிலெதுவும் வரவில்லை அங்கிருந்து. என்ன செய்வது என புரியாமல் சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு உள்ளே போய் கிரைன்டரில் போடுவதற்காய் அரிசியையும் உளுந்தையும் களையத்தொடங்கினாள்.

குமாரின் மோட்டார் சைக்கிள் சத்தம் தெரு முனையை தாண்டும்போதே அவளது அத்தனை புலன்களும் கூர்மையாயின. காபிக்கு அடுப்பை பற்ற வைத்தாள். குமாரின் செருப்பு கழட்டியெறியப்படும் விதத்திலிருந்தே அவனது கோபத்தினளவை கண்டுகொள்ளும் கலை இந்த 8 மாதத்தில் அவளுக்கு கை வந்திருந்தது. கை கால் கழுவி அவன் உள்ளே நுழைந்துவிட்டானென்பதை ஒலிக்குறிப்புகள் கொண்டே அறிந்து காபி டம்ப்ளருடன் ஹாலில் நுழைந்தவள் சற்றே அதிர்ந்தாள்.

மாமியார் கனகவல்லியம்மாள் குமாரின் காதருகே ஏதோ கிசுகிசுத்துக்கொண்டிருந்ததை பார்த்தவளுக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்தது. தயக்கத்துடன் மெல்ல நடந்து அவனருகில் சென்று காபி டம்பளரை நீட்டினாள். அம்மாவின் அருளுபதேசம் முடிந்து அவன் ஆக்ரோஷமாய் நிமிரவும் கலா காபி டம்பளரை நீட்டவும் சரியாயிருந்தது.
அடுத்த நொடி டம்ப்ளர் ஒரு மூலைக்கு பறந்தது. கொதிக்கும் காபி முழுதும் அவள் முகத்தில் பட்டு வழிந்து கொண்டிருந்தது. முகம் முழுதும் எரிய தொடங்கியது கலாவுக்கு. அனிச்சையாய் இரண்டடி பின்னால் எடுத்து வைத்தாள். ஊஞ்சல் சங்கிலிகள் கிறீச்சிட எழுந்தவனின் கைகள் அவள் கன்னத்தில் இடியென இறங்கின.

"ஒடுகாலி குடும்பத்துல பொண்னெடுத்துக்கு நமக்கு இதும் வேணும், இதுக்கு மேலயும் வெணும்டா. மொட்டை மாடிக்கு போனா லேசுல எறங்கறதில்ல மகாராணி. எந்த மன்மதனுக்கு தூது விடறாளோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்."

"நான் ஒருத்தி இவளோட கூத்துக்கெல்லாம் எடஞ்சலா குத்துக்கல்லாட்டமிருக்கேனேன்னு அவளுக்கு ஒரே எரிச்சல்டா. அதை எப்படி காமிக்கறாங்க? சாமஞ்செட்டையெல்லாம் எந்தலைல போடறாப்ல நங் நங்குன்னு வைக்கறது. ஒன்னை கண்ணால காணற வரை ஒரு சொட்டுத்தண்ணி தரதில்லைடா எனக்கு. அப்படியே நா விக்கி விக்கி போய்ச்சேந்துட்டா இவளை கண்காணிக்க ஆளிருக்கதில்ல, அதுக்குத்தான்."

"பொழுது சாஞ்சு எவ்ளோ நேரமாச்சு, இப்போ வரக்கும் என் கண்ணுல காபித்தண்ணியா காட்டலடா இவ. இப்ப ஒனக்கு மட்டும் ஆட்டிக்கிட்டு கொண்டாறா. அதுல என்ன விஷத்த கலந்து வச்சிருந்தாளோ மகராசி... "

இப்படியாக பின்னணியில் அர்ச்சனை தொடர்ந்த வண்ணமிருக்க, குமாரின் கைகள் தன் பணியை செவ்வனே செய்துகொண்டிருந்தன. அடித்து களைத்தவன் பக்கத்திலிருந்த ஈஸிச்சேரில் சாய்ந்த வண்ணம் "ஒழுங்கா போய் எங்க ரெண்டு பேருக்கும் காபி கொண்டு வா" என்று உறுமினான். முகத்தை துடைத்தவாறே சமையலறைக்குள் நுழைந்தாள் கலா.

அதற்குபின் அவளுக்கு இரவு 10 மணி வரை நிற்க நேரமில்லாது வேலையிருந்தது. எல்லாம் முடித்தபின் ஒரு குளியல் போட்டால் தேவலாமென்றிருந்தது. நாள் முழுதும் வேலை செய்ததில் வியர்வை ஒரு மெல்லிய உப்பு படலமாய் மேலே படர்ந்திருப்பது போலிருந்தது. பத்தாதற்கு மாலை குமார் காபியபிஷேகம் செய்ததில் தன் மேல் பாலின் வீச்சம் வருவதாய் தோன்றியது. ஆனால் திருமணமான புதிதில் சினிமாவிலும் கதையிலும் பார்த்திருந்ததை நினைத்துகொண்டு இரவு வேலையெல்லாம் ஆனதும் முகம் கழுவி பவுடர் பூசி அறைக்குள் நுழைந்தபோது கிடைத்த பாராட்டு - இதென்ன தேவடியாளாட்டமா சிங்காரிச்சுகிட்டு படுக்க வர? ஒன்னோட ஓடுகாலியக்காக்காரி சொல்லிக்கொடுத்தாளா இந்த தந்திரமெல்லாம்? இதெல்லாம் எங்கிட்ட வேணாம் சொல்லிட்டேன் என்பதுதான்.

எனவே புடவையை உதறி கட்டிக்கொண்டு குமாருக்கான பாலை டம்பளரில் நிரப்பி எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள். நிதானமாய் பாலை குடித்துமுடித்து பின் விளக்கை அணைத்தான். அவள் தோளில் கைபோட்டு தன்னருகே இழுத்தவன் அதே வேகத்தில் எரிச்சலுடன் அவளை தூரத்தள்ளினான். ஏங்க என்று பதறியவாறு மீண்டும் கட்டிலருகே வந்தவள் அதற்குள் அவன் விளக்கை போட்டு விட்டு எரிமலையாய் நிற்பதை பார்த்து மிரள விழித்தாள்.

"ஏண்டி, எங்கம்மா சொல்றாப்ல நீ அழுத்தக்காரிதான்டி, சாயந்தரம் மேல காபிய கொட்டினதுக்கு பழிவாங்கறயா அதே நாத்தத்தோட படுக்கைக்கு வந்து? இதே ஒனக்கு புடிச்சவனா எவனாச்சும் கூப்பிட்டா இப்படியா போவ? அந்த வெறும்பய வெங்கடேஷ் சும்மா தெருவுல போனாலே சீவி சிங்காரிச்சு போய் நின்னு தரிசனம் தரவளுக்கு, ராத்திரி கட்டின புருஷங்கிட்ட வரப்போ கொஞ்சம் சுத்தமாவாச்சும் வரணும்னு தோணாதா? திமிர் புடிச்ச கழுதை."

அறைக்கதவை திறந்து அவளை வெளித்தள்ளினான். கூடவே ஒரு பாயும் தலைகாணியையும் வெளியே எறிந்தான். அதற்குள் அரவம் கேட்டு அங்கே வந்தார் அவனதருமைத்தாயார் "என்னாடா ஆச்சு?" என்ற கேள்வியையும் ஒரு கொட்டாவியையும் ஒன்றாய் வெளியிட்டவாறு. நடந்ததை லேசாக சொன்னான் குமார். அவன் முடிக்கும் முன்னரே அவர் தனது கச்சேரியை துவக்கியாயிற்று. இருவரும் சேர்ந்து ஒரு ஆவர்த்தனம் முடித்தபின் அவரவர் படுக்கைக்குச்சென்றனர்.

கலாவும் தனக்கு தரப்பட்ட பாயை விரித்து படுத்தாள். தூக்கம்தான் வருவதாக தெரியவில்லை. +2வில் மாநில அளவிலான இடங்களை குறி வைத்து அவள் படித்துக்கொண்டிருந்த நேரம். அக்கா மாலதி தட்டச்சு பயிலகத்தில் வேலை செய்த வேற்று சாதி இளைஞனோடு ஓடிப்போன செய்தி இடியென அவர்களது குடும்பத்தின் தலையில் விழுந்தது.

அவளது தந்தை இடிந்து போய் திண்னையில் அமர்ந்தார். அப்போது இந்த கனகவல்லியம்மாளின் தம்பி, மாணிக்கம் தானே முன்வந்து காரெடுத்துக்கொண்டு எல்லாப்புறமும் தேட கிளம்பினார். அப்பாவின் கையிருப்பு மளமளவென கரைந்தது. வழக்கு ஏதும் பதியாமல் காவல் துறை உதவியையும் நாட மாணிக்கம் தெரிந்து வைத்திருந்தார். அக்காவின் திருமணம் சுவாமிமலை கோவிலில் முடியும் வரை மாணிக்கம் குழுவினரின் இந்த தேடல் தொடர்ந்தது.

இடைப்பட்ட அந்த இரன்டு நாட்களில் மாணிக்கத்தின் வாயிலிருந்து அதிகம் வந்த ஒரே விஷயம், நம்ம ஜாதிமானத்தை விட்டுடக்கூடாது என்பதுதான். கலாவுக்கு அப்போது அவ்வளவாக உலக ஞானம் கிடையாது. வெளியில் டவுனுக்குரிய சகல வசதிகளோடும் இருந்தாலும் அவள் வாழ்ந்த ஊர் இவ்வகையான பிரச்சனைகள் வரும் போது தன் அசல் முகத்தை வெளிக்காட்டுவதை அப்போதுதான் பார்த்தாள். ஊர் முழுவதும் பரவிய வதந்திகள், முதுக்குப்பின்னால் பரிமாறப்பட்ட குசுகுசு பேச்சுக்கள், மாணிக்கம் குழுவினரின் வீராவேசம், அப்பாவின் சோகம், அம்மாவின் ஹிஸ்டீரிக்கான பாவனைகள் இவை எதுவுமே அவளுக்கு புரியவில்லை. ஏன் இப்படி, ஏன் இப்படி என்ற கேள்வி மட்டுமே சுற்றி சுற்றி வந்தது. பதில் சொல்வார்தான் யாருமில்லை. ஆனாலும், ஒரு சினிமாத்தனமான த்ரில் இருப்பதை உணர்ந்தாள். அக்கா சினிமா கதாநாயகி போல அத்தானின் கைபிடித்து ஒடுவது போலும் மாணிக்கமும் மற்றவர்களும் துரத்திப்போவது போலும் கற்பனை செய்து பார்ப்பதில் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத மகிழ்ச்சி இருந்தது அவளுக்கு. ஆனால் இந்த நிகழ்ச்சிகளெல்லாம் அவளுக்கு எவ்வளவு விபரீதமான சிக்கலை தரப்போகிறதென்று அப்போது தெரியவில்லை.

அக்காவின் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் மாணிக்கம் கொஞ்ச நாள் வீட்டுக்கு வந்து அப்பாவுக்கும் அம்மவுக்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். அவரே கலா தன் கடைசி பரிட்சையை எழுதி முடிப்பதற்காக காத்திருந்தவர் போல அவளது திருமணப்பேச்சை எடுத்தார். "ஆமா, கலாவை என்ன செய்யப்போறீங்க?" என்கிற அவரது கேள்வி அப்பாவுக்கு முதலில் சரியாக புரியவில்லை.

"ஏன், என்ன செய்யணுங்கற? +2 எழுதியிருக்கா. நல்ல மார்க் வாங்குவான்னு நம்பறேன். மேற்கொண்டு எதுனா மார்க்குக்கு ஏத்தாப்புல சேக்க வேண்டியதுதான்" என்றார்.

அதற்குள் அம்மா வேகவேகமாய் அப்பா முன்னால் வந்து நின்றாள். "இப்படியே எடம் கொடுத்து கொடுத்துத்தான் மூத்தவ நம்மளை சந்தி சிரிக்க வச்சுட்டு போய்ட்டா. இப்போ இவளையும் ஒட விடணுமா ஒங்களுக்கு?" என்றவள் மாணிக்கத்திடம் திரும்பி "இவர் இப்படித்தாண்ணே அசமந்தமா இருப்பாரு. நீங்களே பாத்து எதுனா நல்லதாச்செய்யுங்க" என்றாள்.

அப்போதுதான் மாணிக்கம் சொன்னார் "எந்தங்கச்சி பையன் ஒருத்தன் இருக்கன். வழுத்தூர்ல கடை வச்சிருக்கான். நல்ல குடும்பம். ஒத்த பையன். எந்தங்கச்சி மட்டும்தான். அவ வூட்டுக்காரர் இறந்து 8 வருஷமாகுது. கூட பிறந்ததுங்க எதும் கிடையாது. நான் சொன்னா கேக்கக்கூடிய குடும்பம். இப்போ இருக்கற நிலமைல நீங்க வெளியாளுங்க யாருக்கும் பேசி முடிக்க முடியும்ன்னு எனக்கு தோணலை. அப்புறம் ஒங்க இஷ்டம்."
அதுக்கப்புறம் யாரும் கலாவின் இஷ்டத்தை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஒரு ஓடுகாலிப்பெண்ணை பெற்ற பாவத்துக்காய் இரண்டாவது பெண்ணின் திருமணத்துக்கு தன் முக்கால்வாசி சொத்தை விற்று கப்பம் கட்டினார் அப்பா. திருமணம் ஒருவழியாய் முடிந்தது.

"எங்க வீட்டுல முதராத்திரிக்கு தனி முகூர்த்தம் பாத்துத்தான் வப்போம். கல்யாணத்தன்னிக்கே வைக்கற வழக்கமில்லை.ஆனா பொண்ணை இப்போவே எங்க கூட அனுப்பிருங்க" என்றார் கனவல்லியம்மாள். இந்த சில நாட்களில் அப்பாவின் தலை யார் என்ன சொன்னாலும் சரிங்க என்று ஒரே திசையில் ஆடப்பழகியிருந்ததால், அனிச்சையாக தலையாட்டினார்.

வந்து ஒரு மாதம் வரை முதலிரவு பற்றி பேச்சே எடுக்கவில்லை யாரும். அந்த மாதத்திற்கான மாதவிலக்கு அவளுக்கு வந்த பிறகே ஜோசியர் வீடு சென்றூ நாள் பார்த்து வந்தார் அந்த அம்மாள். அப்போது கூட கலாவிற்கு அதன் தாத்பரியம் விளங்கவில்லை. ஆனால் பால் சொம்புடன் நுழைந்தவளிடம் குமார் கேட்ட கேள்விகள்தான் அவளுக்கு இந்த செயல்களின் உள்ளர்த்தத்தை உணர்த்தின. "ஒன்னோட ஒடுகாலி அக்காவோட புத்தி ஒனக்குமிருக்காதுன்னு என்ன நிச்சயம் சொல்லு? அதுனால அம்மாகிட்ட மொத மாச விலக்குக்கு அப்புறம்தான் முதராத்திரி வைக்கணும், அப்போத்தான் வரவ வயிறு சுத்தமா இருக்கான்னு தெரியும்னு மாணிக்கம் மாமா சொன்னாரு. ஆனா வயிறு இப்போதைக்கு சுத்தமாயிருந்து மட்டும் என்ன பிரயோஜனம் சொல்லு? ஒனக்கு இது நிஜமாவே மொதராத்திரிதான்னு சாமி மேல சத்தியம் பண்ணு" என்றான் குமார். கலாவும் கண்களில் வழியும் நீருடன் சத்தியம் செய்தாள். அன்று தொடங்கிய கண்ணீர் இன்றுவரை நிற்கவில்லை. இப்போதெல்லாம் கலா கடவுளிடம் வேண்டிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அடுத்த பிறப்பிலாவது என்னை ஓடிப்போகும் ஒருத்திக்கு தங்கையாக படைத்துவிடாதே என்பதுதான் அது. அன்றும் அதே கண்ணீருடன் தூங்கிப்போனாள் கலா.