Friday, July 27, 2007

படித்ததில் பிடித்தது (6)

சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தபடி அம்பையின் சிறகுகள் முறியும் சிறுகதை தொகுப்பைப் பற்றியதுதான் இந்த பதிவும். சிறகுகள் முறியும் என்ற கதை பொன்ஸின் பாஷையில் சொல்வதானால் சற்றே பெரிய கதை. எனவே என் வழக்கப்படி முழுக் கதையையும் இங்கே தட்டச்சு செய்ய முடியவில்லை. எனவே சில பகுதிகளை இங்கே உங்கள் முன் வைக்கிறேன்.

ஆண்கள் உடம்பெல்லாம் வயிறாக, மார்புச் சதை தொங்க ஊதக்கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள் சாயா.
இப்படி மனத்தளவில் பல சட்டங்களை சாயா உருவக்கியிருக்கிறாள்.
1. ரோமம் இல்லாத வழவழத்த மார்பு உள்ள ஆண்கள் மணக்கக் கூடாது என்றொரு சட்டம்.
2. வெற்றிலை சாப்பிட்டுச் சாப்பிட்டுத் தகரம்போல் நசுங்கிக் கிடக்கும் பற்களை உடைய ஆண் முத்தமிடக் கூடாது என்றொரு சட்டம்.
3. ஆவலுடன் மனைவியின் கண்கள் ஒரு பொருளின் மீது படியும்போது பர்ஸைக் கெட்டியாக மூடிக்கொள்ளும் கணவனின் பர்ஸ் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றொரு சட்டம்.


இப்படி எத்தனையோ.

அத்தனை சட்டங்களும் அமுலாக்கப்படும் பட்சத்தில் வெகுவாக பாதிக்கப்படப்போகும் ஒருவன் அவள் முன் அமர்ந்து, மலை மாதிரி உடம்பில் வியர்வை பெருக "ரஸம் ஒரே சூடு" என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

"நிதானமா சாப்பிடலாமே, என்ன அவசரம்?" என்றாள் சாயா.

"என்னது?" என்று அந்த "எ...ன்...ன...து"வை வாயில் அரைத்தவாறே அவன் கேட்டான்.
ஒதுங்கிப்போகும் பெண் நாயைப் பார்த்து உறுமும் ஆண் நாயின் உறுமலில் கூட இன்னும் மென்மை இருக்கும் என்று நினைத்தாள் சாயா.

"அம்மா, சாதம் ஜாஸ்திம்மா" என்று சிணுங்கினான் சேகர்.

"என்னடா ஜாஸ்தி ராஸ்கல்? அரிசி என்ன விலை விக்கறது? உதை விழும். சாப்பிடுடா."

சேகரின் கன்னங்கள் இரண்டும் அழுகையை அடக்கியதால் பிதுங்கின. சாயா மனதில் அவசர சட்டம் ஒன்றைத் தீர்மானித்தாள்.
மென்மையே இல்லாத ஆண்களுக்குக் குழந்தையே பிறக்கக்கூடாது என்று கட்டாய வாசக்டமி செய்துவிட வேண்டும்.

பாஸ்கரன் பெண் பார்க்க வரும்போதே பருமன் தான். தமிழ்ப்பட ஹீரோக்களை பார்த்துப்பார்த்துப் பழகிவிட்டதாலோ என்னவோ சற்றே ஸ்தூல சரீரம் ஆண்மைக்கு அழகு என்றொரு கற்பனை சாயாவுக்கு.

அம்மா மெல்லச் சொன்னாள் "மாப்பிள்ளைக்கு நல்ல வேலை. ஆனால் கொஞ்சம் ஸ்தூல சரீரம். நம்ப சாயா கொடி மாதிரி ஒல்லி. பொருத்தம் இல்லையே?" என்று இழுத்தாள்.

சந்துரு மாமாவுக்கு கோபம் வந்துவிட்டது. "என்ன அத்திம்பேர், இவ உளர்றா? நல்ல ஆரோக்கியமா இருக்கான் பையன். ஜுரத்தில் அடிபட்டவன் மாதிரியா ஆம்பளை இருப்பான்? இவ மட்டும் என்ன? பிள்ளை கிள்ளை பெத்தா பருத்துடுவா" என்று கத்தினார்.

சாயாவுக்கு பரிபூர்ண சம்மதம். அவள் மனதில் பாஸ்கரன் ஸ்டைலாக தொந்தி குலுங்க நடந்து, காதல் டூயட் பாடிக்கொண்டிருந்தான்.

சாயா - பாஸ்கரன் - என்ன பெயர்ப் பொருத்தம்!
அகத்து சாஸ்திரிகள் சொன்னார் "ஹாங்! பெயர்ப் பொருத்தத்தைப் பார்த்தேளா? ராமர் ஸீதை ஜோடின்னா இது?"

"சாயா, அந்த மாங்காய் ஊறுகாய் போடேன். ஒரு மாசமா போட்டுக்கவேயில்லை."

மாங்காய் ஜாடியைத் திறந்தாள். பஞ்சுப்படுக்கை விரித்தாற்போல் பூஞ்சைக்காளான் பூத்து கிடந்தது.

"ஐயையோ..."

"என்ன? கெட்டுப் போயிடுத்தா?" என்றான் பாஸ்கரன்.

தலை அசைத்தாள்.

"பணத்தைக் கொட்டி வாங்கினது. உனக்கு ஆனாலும் கவனம் போறாது."
உதட்டைக் கடித்துக் கொண்டாள் சாயா. அவள் தவறுதான். ஜாடியைக் குலுக்கிவிட வேண்டும் என்கிற ஞாபகமே இல்லை. "அத்தனை உப்பும், காரமும், எண்ணையும் வீண். பணத்தோட அருமை தெரிஞ்சால்தானே?" என்று கத்திவிட்டு கையலம்பப் போய்விட்டான் பாஸ்கரன்.

உப்பும், காரமும், எண்ணெயும்...ஹூம்! எங்கேயும் போய்விடவில்லை. அத்தனை உப்பும் காரமும் சேர்ந்துதான் நெஞ்சில் பற்றிக்கொண்டு எரிகிறதே? எண்ணெய் முகத்தில் வழிகிறதே?


இப்படி தொடங்கும் கதையில் தன் மனசுக்குள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சட்டத்தை கற்பனை செய்துகொள்ளும் பெண்ணாக சாயாவின் பாத்திரம் விரிகிறது. அவளது இந்த விசித்திரக் கற்பனைகளோடே வாழும் வாழ்வில் அவளடையும் ஒவ்வொரு ஏமாற்றமாக சொல்லிக்கொண்டே போய் கடைசியில் அவளது சிந்தனைகளையும் தன்னுடையதைப் போலவே மாற்றும் கணவனின் சிந்தனைப் போக்கும் விவரிக்கப்படுகிறது. ரொம்பவே அழகாய் 70களின் இல்லத்தரசிகள் நிலையை சொல்லிச்செல்லும் கதையிது. வழக்கமாய் எல்லாப் பெண்களும் செய்வது போல அம்மாவின் அருமையும் அவளைத் தான் படுத்திய பாடுகளும் திருமணத்துக்குப் பின் உரைக்க நினைத்து ஏங்குகிறாள் சாயா.

சாயா சாப்பிட உட்கார்ந்தாள். சேகர் மீதம் வைத்த சாதத்துடன் கொஞ்சம் சாதம் போட்டு பிசைந்தாள். வற்றல் குழம்பில் பிசைந்து கொண்டபோது அம்மா ஞாபகம்தான் வந்தது. என்னமாய் படுத்தி வைத்திருக்கிறாள் அவளை!

வற்றல் குழம்பு தட்டில் விழுந்தாலே, தட்டு பறந்து முற்றத்தில் போய் விழும். கையை உதறிக்கொண்டு எழுந்து விடுவாள். "எனக்குப் பிடிக்காததை நீ எப்படி சமைக்கலாம்?" என்று கத்துவாள்.

பிடிக்காதது!

சிறையில் கைதிக்கு கஞ்சி விடும்போது "ஆஹா, எங்கே கத்திரிக்காய் பஜ்ஜி? வெறும் கஞ்சி பிடிக்காதே" என்றானாம்!

அம்மாவை அலைக்கழித்ததற்குத்தான் இந்த தண்டனையோ?

ஒரு தடவை பள்ளியிலிருந்து வந்ததும் "என்னம்மா டிபன்" என்று கத்தினாள்.

"இட்லி."

தட்டில் இட்லி விழுந்ததும் "மிளகாய்ப் பொடி" என்றாள்.

மிளகாய்ப் பொடி வரவில்லை. சட்னி வந்தது.

"மிளகாய்ப் பொடி இல்லை." என்றாள் அம்மா.

பாவாடையை உதறிக் கொண்டு எழுந்துவிட்டாள் சாயா.

அப்புறம் அரைமணிக்குள் அம்மா வறுத்து இடித்துவிட்டாள்.

"இதை அப்பவே இடிச்சுத் தொலைக்கறதுதானே?"

"இடிச்சிருக்கலாம். இன்னிக்கு என்னவோ ஒரே மார்வலி." குபுக்கென்று நெஞ்சையடைத்தது சாதம். அம்மா! கரகரவென்று கண்ணில் நீர் பெருகியது. எச்சிற் கையோடு உட்கார்ந்துகொண்டே இருந்தாள். நெஞ்சம் கேவியது.

ஒவ்வொன்றிலாய் ஈடுபாட்டை இழக்கும் அவள் கடனே என்று வாழத்தொடங்குகிறாள். இன்றைய குடும்பத்தலைவிகள் பலருக்கும் சீரியல்களிலும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு அம்மன் படங்களிலும் வரும் ஈடுபாடுகளெல்லாம் இதுபோன்ற வெற்றிடத்தை ஏதேனும் இட்டு நிரப்பும் ஒரு முயற்சிதான்.

"நாக்கு நீளம் சாப்பாட்டு விஷயத்தில்." என்று அம்மாவிடம் குட்டுப்பட்டவள்தான்.

கல்யாணமான புதிதில் சேலத்துக்கு வேலை விஷயமாய்ப் போனான் பாஸ்கரன். அப்போது மாம்பழக்காலம். மாம்பழத்தை நறுக்காமல், கையில் அதன் ரஸம் ஒழுக, சதைப்பகுதியில் பற்கள் அழுத்திப் பதித்து வெண்ணெய்க்கட்டியாய் மாம்பழம் வாயில் போகும்படி சாப்பிடுவதில் அவளுக்கு அலாதிப் பிரியம்.

"வரும்போது கட்டாயம் மாம்பழம், ம்?"

அவன் திரும்பி வரும்போது முகமெல்லாம் ஆர்வம் கொப்பளிக்க, "எங்கே நான் கேட்டது?" என்றாள்.

"ரொம்ப விலை ஜாஸ்தி, வாங்கலை."

அன்றைக்குத் தன் நாக்கை அவள் அறுத்து எறிந்துவிட்டாள்.

சரோஜாவே அவளிடம் கேட்டதுண்டு.

"ஒண்ணுலேயும் ஆர்வம் இல்லாமல் இருக்கயே மன்னி, எதுக்காகத்தான் நீ இருக்காய்?"

"இருக்கணுமே, அதுக்காக. இதைவிட வேற காரணம் என்னடி இருக்கு?"


தன் கணவனின் குணம் தன்மேலும் படிந்துவிட்டதை அவள் உணர்ந்து கொள்ளும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறாள் சாயா.

"சாயா, அந்த கோபாலன் பையனுக்குப் பூணூலாம். நீ போயிட்டு வந்துடு, நான் பகல்லயே போயிடுவேன்."

"சரி."

"நாளைக்குச் சமைக்க வேண்டாம். அங்கேதான் சாப்பாடு."

"என்ன ப்ரஸன்ட் தரப்போறேள்?"

"பூணூலுக்கெல்லாம் ஒண்ணும் தரவேண்டாம்."

"சாப்பிட மட்டும் போலாமாக்கும்?"

"என் சிநேகிதன் பிள்ளை பூணூலூக்குச் சாப்பிடாம வேற எங்கே சாப்பிடறது?"

"நீங்க போங்கோ. நான் வரலை."

"சரி, வரலைன்னா வேண்டாம்."

அவ்வளவுதான். பஸ் காசாவது மிச்சம். அவன் இன்னொரு முறை கூப்பிட மாட்டான்.
அவளே மீண்டும் கேட்டாள்.

"அப்படின்னா, நீங்க மாத்திரம் போறேளா?"

"நீதான் வரமாட்டேன்கிறாயே?"

"ப்ரஸன்ட் இல்லாம எப்படிப் போறது?"

"குடேன், நீயும்தான் தைச்சு சம்பாதிக்கறயே, அது மட்டும் பணம் இல்லையா?"

கேள்வியை கேட்டு அவள் அதிர்ந்து விட்டாள். சரியான கேள்விதான். அதை உபயோகப்படுத்தலாம் என்று அவளுக்கு ஏன் ஒரு நாளும் தோன்றவில்லை? இப்போது கூட அதிலிருந்து எடுக்க மனமில்லை. அவள் உடல் வெடவெடவென்று நடுங்கியது. அவள் மனதார வெறுக்கும் குணம் அவளிடம், அவளையும் மீறி தொற்றிக் கொண்டுவிட்டதா என்ன? சேகர் சைக்கிள் கேட்டபோதுகூட அவள் அதைப்பற்றி எண்ணவே இல்லையே? சில்லிட்டுப் போன கைகளால் அவள் பக்கத்திலிருந்த நாற்காலியை அவள் பற்றிக்கொண்டாள்.

அவள் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ளும் இந்த இடத்துக்குப் பின்னும் கதை நீள்கிறது. அது அவளது தாயின் கதையையும் விவரிப்பதாக போய் கடைசியில் சாயா தான் மீண்டும் கருவுற்றிருப்பதை இயந்திரத்தொனியில் கணவனிடம் சொல்வதில் முடிகிறது.

அம்பையின் எழுத்து சற்று அதீதப் பெண்ணியம் பேசுவதாயிருக்கிறது என்று முந்தைய பதிவிற்கான பின்னூட்டத்தில் உஷா குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது படைப்புக்களை அந்த காலகட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போது அது உறுத்தலாய் தெரிவதில்லை என்பதே என் கருத்து. வெறும் பெண்ணியம் மட்டுமில்லாது நல்ல அங்கதம் தெறிக்கும் அவரது எழுத்து நடையும் வசீகரமானதே. இந்த தொகுப்பிலேயே கூட

திரிசங்கு - தன்னுடைய சராசரித்தனத்துக்கும் தன்னுடைய லட்சியங்களுக்கும் இடையில் போராடும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை (இந்த இடத்தில் அந்த வயதில் ஒத்த குணாதிசயமுடைய ஒரு ஆணை பொருத்தினாலும் கதையோட்டம் நிச்சயம் கெடாது)
சூரியன் - போரினால் நிலத்தடியில் இருக்கும் பதுங்கு குழியில் வாழ நேரும் ஒரு தாய் தன் மகனுக்கு சூரியன் என்பதையே ஒரு அதிசயமாய் காட்ட வேண்டியிருப்பதின் அவலத்தை சொல்லும் கதை - வியட்நாம் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இக்கதை.
உடம்பு - ஒரு ஆண் நாட்டியக் கலைஞரின் குமுறல்களைச் சொல்லும் கதை.

போன்றவற்றில் பெண்ணியச் சாயலற்ற ஒரு தேர்ந்த படைப்பாளியைப் பார்க்கலாம்.

Tuesday, July 24, 2007

படித்ததில் பிடித்தது (5)

புத்தகம் - சிறகுகள் முறியும்
ஆசிரியர் - அம்பை (சி.எஸ். லக்ஷ்மி)
முதல் பதிப்பு - 1976
சமீபத்திய பதிப்பு - டிசம்பர், 2003
பதிப்பகம் - காலச்சுவடு

ஆசிரியரைப் பற்றி:

வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடீஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியும் கன்னடமும் அறிந்தவர். The Economic and Political Weekly, The Times of India, Free Press Bulletin, The Hindu போன்ற இதழ்களில் கட்டுரைகளும் நூல் விமர்சனங்களும் எழுதி வருகிறார். பெண் இசைக் கலைஞர்கள் மற்றும் நடனமணிகள் பற்றி இவர் எழுதிய நூலை Singer and the Song, Mirrors and Gestures என்ற இரு தொகுதிகளாக டில்லியிலுள்ள பதிப்பகம் வெளியிட்டுள்ளது. SPARROW(Sound & Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவியவர். அதன் இயக்குனர். பல டாக்குமென்டரி படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதி, உதவி இயக்குனராகவும் இருந்திருக்கிறார். வீட்டின் மூலையில் ஒரு சமையலறை(1988), காட்டில் ஒரு மான் (2000) இவரது பிற சிறுகதைத் தொகுதிகள்.2005 ஆம் ஆண்டுக்கான விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் நினைவு விருதைப் பெற்றவர்.

விளக்கு அமைப்பு அம்பைக்கு இவ்விருது வழங்கியபோது வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவரைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

அமெரிக்காவில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பான விளக்கு நிறுவனத்தின் புதுமைப் பித்தன் இலக்கிய விருது இவ்வாண்டு எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. லதா ராமகிருஷ்ணன், க்ருஷாங்கினி, திலீப் குமார் ஆகியோரடங்கிய விளக்கு நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் அம்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடகம், கட்டுரை சிறுகதை என்று பல தளங்களில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர் இம்முப்பதாண்டுக் கால இலக்கியப் பங்களிப்பைக் கணக்கில்கொண்டு விளக்கு விருது வழங்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள வெளிச்சத்திற்கு வராத பல பெண்களின் வாழ்க்கைச் சிக்கல்களை வாய்வழிப் பதிவு செய்ய 'ஸ்பேரோ' என்ற அமைப்பையும் நடத்திவருகிறார். மும்பையில் வசிக்கும் இவர், அல்லலுறும் இந்தியப் பெண்களுக்கென ஒரு எழுத்து இயக்கம் நடத்தி வருகிறார் என்றால் மிகையாகாது.

"தனது படைப்புக்களில் பெண்சார் மரபார்த்த பார்வைகளையும் பிம்பங்களையும் தொடர்ந்து கேள்விக் குட்படுத்தியும்,தோலுரித்துக் காட்டியும் வந்திருப்பவர் அம்பை" என்கிறர் லதா ராமகிருஷ்ணன்.

"குடும்பத்தில் வாழும் பெண்ணின் இடத்தைஇலக்கியத்தில் துணிவுடனும் உண்மையாகவும் சிறுகதைகளின் மூலம் பதிவு செய்தவர்" என்று க்ருஷாங்கினி குறிப்பிட்டுள்ளார்.

"தன்னை ஒரு பெண் எழுத்தாளர் என்று பறைசாற்றிக் கொள்ளவோ அத்தகுதியை எதற்கும் பயன்படுத்திக் கொண்டதோ இல்லை" என்று அம்பையின் தெள்ளிய நிலைப்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறார் திலீப் குமார்.

தற்காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தரம் வாய்ந்த ஆனால் வெளிச்சத்துக்கு வராத படைப்பாளிகளைப் பரவலாக அறிமுகப் படுத்தும் விளக்கின் நோக்கத்துக்கு மிக உகந்ததாகிறது இத் தெரிவு. நடுவர் குழுவுக்கும் இந்தியத் தொடர்பாளரான வெளி ரங்கராஜனுக்கும் விளக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

மொத்தம் 13 சிறுகதைகள் உள்ள இந்நூலைப் பற்றி அம்பையின் முன்னுரை இது.

1976ல் வெளிவந்த புத்தகத்தின் மறுபதிப்பை வெளியிட, கதைகளை மீண்டும் அச்சில் காணும் ஆசை அல்லது தைரியம் இவற்றைத் தவிர வேறு வலுவான காரணங்கள் தேவை. ஒன்று கதைகள் இறவா இலக்கியமாக இருக்க வேண்டும் அல்லது உடனடியாகக் கதைகளின் மேல் கவனம் செலுத்துவதற்கு நிமித்தமாக படைப்பாளியாவது இறந்திருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களும் இந்தத் தொகுப்பை பொறுத்தவரை செல்லாது. இதிலுள்ள கதைகள் 'இறவா இலக்கியம்' எனும் தகுதியைப் பெற்றவை அல்ல. 1967ல் சென்னையில் தொடங்கி 1976ல் டில்லியில் முடியும் வாழ்க்கைப் பயணத் தடத்தினூடே விளைந்த பதிவுகள் இவை எனலாம். இப்பயணம் உள்ளடக்கிய இலக்கிய ஊடாடல், மொழி, ஒரு நபரின் வளர்ச்சி, கற்பனை, அப்போதைய சூழல் இவற்றின் வரைபடமாக இத்தொகுதியைக் கொள்ளலாம். இலக்கியச் சரித்திரத்தின் சில கண்ணிகளை இணைக்க இத்தகைய வரைபடங்கள் பயன்படலாம்.

சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிற்குப் பின் வளர்ந்து, ஐம்பதுகளில் பள்ளிக்குச் சென்று, மேற்படிப்புக்காகச் சென்னைக்கு வந்து, பின் சிறு ஊரில் பள்ளி ஆசிரியையாக வேலை செய்து, பின் தலைநகரம் போய் முனைவர் பட்டத்துக்குப் படித்து, ஆராய்ச்சி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் வேலை பார்த்த பெண் வாழ்க்கையை சந்தித்த தருணங்களின் சிதறல்கள் இக்கதைகள்.

மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் 1967ல் சிறகுகள் முறியும் கதையை எழுதியபோது பெண் என்ற ரீதியில் வாழ்க்கையை எதிர்கொண்ட முயற்சியில் சில அடிகள் விழுந்தாகி விட்டது. உடல் என்ற ஒன்று இடையில் வராமல் எந்த ஆண் - பெண் நட்பும் பார்க்கப்படுவதில்லை போன்ற பெரிய படிப்பினைகளை ஒரு சிறு ஊரிடமிருந்து பெற்றாகிவிட்டது. பலமுறைகள் ஒதுக்கித் தள்ளினாலும் சில சமயம் சோர்ந்ததுண்டு. ஒரு பின்னிரவு நேரம் நானும் இன்னொரு டீச்சரும் எழுத்தாள நண்பர் மெய்யடியானுடன் ஒரு சினிமா பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். படம் பற்றியும் கதை பற்றியும் ஏதேதோ பேசியபடி நடை. திடீரென்று, "ஏண்டா, ஈர்க்குச்சி மாதிரி இருக்கான். எப்படிடா ரெண்டுரெண்டு பொம்பளைகளைச் சமாளிக்கிறான் இந்தச் செட்டியார்?" என்று உரக்க ஒரு குரல் எழுந்தது பின்னால். தூக்கிவாரிப் போட்டது. எங்கள் உரையாடலை விடாமல் தொடர்ந்தபடி, அவர்கள் பேசிய ஆபாசங்களையும் செவிமடுத்தபடி, வீட்டை எட்டிய பிறகு, மெய்யடியானுக்கு நன்றி கூறி அவர் விடைபெற்றபின், ஒலியே இல்லாக் கேவல்கள். விம்மலை அடக்கிய தொண்டையில் வலி. கண்கள் எரியஎரிய கண்ணீர். பெண்ணின் உடலை மையமாக்கிய அந்த ஆபாச மொழி ஏற்படுத்திய உடல் கூச்சம் - இப்படிக் கழிந்தது அந்த இரவு. உடலைப் பற்றிய அறிவோ பிரக்ஞையோ இல்லாமல் எழுதிய ஒரு வெள்ளைமனது நாவல் அப்போதுதான் 'கலைமக'ளில் தொடர்கதையாக வெளிவந்துகொண்டிருந்தது. இரண்டே ஆண்டுகளில் உடலையே பிரதானமாக்கிய நிகழ்வுகள். எல்லாவற்றையும் தாண்டி 1967ல் எழுத உட்கார்ந்ததும் பிறந்தது 'சிறகுகள் முறியும்'.

சிறுகதையின் இலக்கணம், வரைமுறைகள், தமிழிலக்கியத்துடன் ஆழ்ந்த பரிச்சயம், மற்ற மொழி இலக்கியங்களுடன் தொடர்பு இவை எதும் இல்லாமலே அந்தரத்தில் கரணம் போடுவது போல் செய்த முயற்சிகள் மற்ற சில கதைகள். சில நல்ல இலக்கிய மனங்களின் தூண்டுதலையும் ஊக்குவிப்பையும் பலமாகப் பற்றிக்கொண்டு, குழந்தைகளுக்கான ஆங்கிலக் கதைகளில் வரும் ரெபுன்ஸலின் முடியைப் பற்றிக் கொண்டு கோட்டை மேல் ஏறும் அரசிளங்குமரன் போல ஒரு சாகசம்; எல்லைகளை அறியாததால் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக ஒரு உலாத்தல். ஒரு களம், ஒரு மண், ஒரு மொழி, ஒரு ஆற்று நீர் என்றில்லாமல் பல இடங்களை தொட்டு மீளும் ஆனந்தம் - இவை அனைத்தும் உண்டு இக்கதைகளில்.

தமிழ்நாட்டில் இல்லாமல் வெளியில் இருப்பவர்களுக்கு, தமிழ்மொழி ஒரு பற்றுக்கோல். விரல்சூப்பும் குழந்தைக்கு கட்டைவிரல் போல மொழி ஒரு ஆற்று. தனிமைப்படும்போது தோழியாகவும், உறவு பூணும்போது சங்கேதமாகவும், கருத்துப் பரிமாற்றத்துக்குப் பாலமாகவும், கட்டுப்படாத கற்பனையை தொட்டு மாற்றும் மந்திரமாகவும் ஆகிவிடுகிறது மொழி. இந்த மொழி தரும் போதையில், அதனுடன் விளையாடியபடி, குதூகலித்தபடி, திளைத்தபடி எழுதியவை இதிலுள்ள சில கதைகள்.

இக்கதைகளின் அடித்தளத்தில் இவை எல்லாம். ஒரு தசாப்தத்தின் புழுதியைப் பூசிக்கொண்டு. முதற் பதிப்பில் இருந்த பயங்கள் நாடகம் இதில் இல்லை. அப்பதிப்பிலிருந்த அச்சுப் பிழைகளும் இல்லை. இவற்றை எழுதிய படைப்பாளியும் இப்போது இல்லை. இக்கதைகளை இறக்கி வைத்துவிட்டு, வேறுவேறு கதைகளை, வெவ்வேறு சமயத்தில் தூக்கியபடி வேறு பயணங்களை மேற்கொள்ளும் முயற்சியில் அவள். ஒர் இடத்தில் வைத்துச் சென்ற ஒன்றை மீண்டும் எடுத்து, தூசி தட்டி பத்திரப்படுத்தும் சுகம்தான் மறுபதிப்பில். இந்தக் காலகட்டத்தில் இதைப் படிப்பவர்களை இந்த வரைபடம் சில இலக்குகளுக்கு இட்டுச் செல்லலாம். வெறும் வரைபடமாகவே நின்றும் போகலாம். அவரவர் மேற்கொள்ளும் பயணத்தைப் பொறுத்தது அது.

பி.கு: ஆசிரியரைப் பற்றிய குறிப்பும் முன்னுரையுமே மிகவும் நீண்டு விட்டதால் இப்புத்தகத்திலிருந்து ஒரு சிறுகதையை ப.பி தொடரின் அடுத்த பாகத்தில் தட்டச்சு செய்து போடுகிறேன். தொடர்ச்சி விட்டுப் போகாதிருக்க இடையில் வேறு எந்த பதிவும் போட்டு உங்களைப் படுத்தாமலிருக்கவும் உத்தேசித்திருக்கிறேன். :)

என்னாத்தை சொல்வேனுங்கோ?

பத்திரிக்கை தர்மத்தை பத்தி போன பதிவுல எழுதியிருந்தேனில்லையா, நண்பரொருவர் கூப்பிட்டு குமுதம் ஜோதிடத்துல சனிப் பெயர்ச்சி பலன் பாத்தியான்னு கேட்டார். இன்னும் இல்லையேன்னு சொன்னேன். உன் ராசிக்கு பாக்குறயோ இல்லையோ பொதுப் பலன்கள்ன்ற தலைப்புல தமிழ்நாட்டுக்கு போட்டிருக்கறதை மட்டும் கண்டிப்பா பாத்துடுன்னார் அவர். சரின்னு பாத்ததோட பலன்தான் இந்த பதிவு... இதுதான் பத்திரிக்கை தர்மத்தின் அழகு... இதுல நான் சொல்ல என்ன இருக்கு.. ஹைலைட் செய்திருக்கற விஷயங்கள் இவங்க கணிச்ச பலன்களா இல்லை இவங்களோட வேண்டுதலா????

*******************************************************

தமிழ்நாடு!

தமிழகத்தைப் பொறுத்தவரையில், இந்த சனிபகவானின் சிம்மராசி சஞ்சார காலத்தில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நிகழவிருக்கின்றன. ‘இப்படியும் நடக்குமா?’ என்ற அளவிற்குக் கூட்டணி மாறுதல்கள் ஏற்படும்.

துறவிகள் சிலர் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கி, பண்டைய தெய்வீகப் புகழையும், பெருமையையும் பெற்றுத் திகழ்வார்கள் எனவும், சனிபகவானுக்கு ஏற்படும் குருபகவானின் சுபப்பார்வை எடுத்துக்காட்டுகிறது.

அரசியல் கட்சிகள், தலைவர்கள் ஆகியோரிடையே போட்டியும், பொறாமையும் குறையாது
. பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் தமிழகம் மேலும் மேலும் முன்னேற்றமடையும். மக்களின் பொருளாதார நிலை உயரும். நோய்கள் குறையும். தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரிக்கும். மக்களிடையே தெய்வ பக்தியும், ஆன்மிகச் சிந்தனைகளும், தர்மநெறியும் ஓங்கும். புராதன திருக்கோயில்கள் பல புனர்நிர்மாணம் செய்யப்பட்டு ஒளிவீசித் திகழும். ராமர் பாலத்தைப் தகர்த்தெறியும் முயற்சி தோல்வியுறும்.

********************************************************

டீச்சர் சொன்னா மாதிரி அட்டைய கிழிச்சுட்டா உள்ள எல்லா பத்திரிக்கையும் ஒரே மாதிரிதான்னாலும் கூட விகடன் அளவு குமுதத்தின் மேல பெருசா மதிப்பில்லைன்றதால இதை நான் பெரிய விஷயமா நினைக்கலை. இருந்தாலும் ஒரு நல்ல காமெடிய மக்களோட பகிர்ந்துக்கலாமேன்னுதான்....

Friday, July 20, 2007

இன்னமும் இருக்கிறதா பத்திரிக்கை தர்மம்????

இந்த வார ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை - தலைப்பு "பச்சைக் காய்கறி பயங்கரம்".

அந்த கட்டுரை விரிகிறது இப்படி.

சரசரவென்று வளர்ந்து லாபங்களைக் குவிக்கத் தொடங்கிய சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றின் உரிமையாளர் அவர். அன்பான மனைவி, பாசமான இரண்டு குழந்தைகள் என குதூகலமான குடும்பம். வாழ்க்கை அமைதியாகவும் அழகாகவும் சென்றுகொண்டிருந்த வேளையில், ஜூன் மாத சனிக்கிழமை ஒன்றில், அவருக்குத் திடீர் என வலிப்பு நோய் கண்டது. தொட்டுவிடும்தூரத் தில் மரண வாசலுக்கே போய்விட்டவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை அளித்துப் பத்திரமாக மீட்டெடுக்கும்படி ஆயிற்று!

வலிப்பு காரணமாக முது கெலும்பில் ஏழு இடங்களில் விரிசல்கள்! குறைசொல்ல முடியாத ஆரோக்கியத்துடன் இருந்தவரின் திடீர் வலிப்புக்கான காரணம் புரிபடவில்லை! அதிகாலை வாக்கிங் முதல் ஆழமான உறக்கம் வரை கச்சிதமாக இருந்த அவரது லைஃப் ஸ்டைலை ஆராய்ந்த மருத்து வர்கள், கடைசியாகச்சொன்னது... “நீங்கள் என்றைக்கோ சாப்பிட்ட பச்சைக் காய்கறி தான் உங்களுடைய இந்த நிலைமைக்குக் காரணம்!”

இதற்கு பின் பாதிக்கப் பட்டவரது பேட்டி - அதன் சாராம்சமும் கிட்டத்தட்ட இப்படித்தான். அவர் முடிக்கையில் இப்படி சொல்கிறார்.

"இனிமேல் காய்கறிகளைச் சாப்பிடுறப்போ ரொம்ப உஷாரா இருக்கணும். எந்தக் காய்கறியையும் பச்சையா சாப்பிடவே கூடாது. வேகவெச்சுதான் சாப்பிடணும். இல்லேன்னா, தோலை சுத்தமா சீவிட்டுச் சாப்பிடணும்னு சொல்லியிருக்காங்க. மெத்த படிச்சவன் நான். ஆனா, இந்த சாஃப்ட்வேர் ஆசாமியின் கவனக்குறைவால் வைரஸ் புகுந்து ஆட்டிவெச்சிடுச்சு!" என்று சொல்லி முடித்தார்.

கொஞ்சம் மேலோட்டமாக படிக்கும் வழக்கம் உள்ள ஒருவர் இத்தோடு இக்கட்டுரையை இந்த இடத்தோடு நிறுத்தி விட்டாரானால் என்ன ஆகும்? அவர் பச்சை காய்கறிகளை சேர்ப்பதே ஏதோ ரொம்ப அபாயமான விஷயம் என்று கருதிவிடுவார். சரி, உண்மையில் பச்சை காய்கறிகள் பயங்கரமானவையா? இந்த கட்டுரை முடியுமிடத்தில்தான் உண்மை வெளிவருகிறது.

இவருக்குச் சிகிச்சை அளித்த, அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் யோகராஜிடம் விளக்கமாகக் கேட்டோம்.

"நாடாப் புழு முட்டைகள் (Tae nia solium) மூலமாக வரும் இந்த நோய்க்கு நியூரோ சிஸ்டி செர்கோஸிஸ் (neuro cysti cercosis) என்று பெயர். பன்றிகளும், பன்றிகள் சார்ந்த இடமும்தான் அந்தப் புழுக் களின் இருப்பிடம். பெரும் பாலும் சுத்தமில்லாத பன்றிக் கறியை உண்பதன் மூலம், அந்தப் புழுக்கள் மனித உடலில் ஊடுருவும். முதல் வலிப்பு ஏற்படும் வரை, அப்படியரு புழு நம் உடலில் இருப்பதை உணரவே முடியாது! குறிப்பிட்ட இந்த மனிதரின் கன மான உடம்பு காரணமா, வலிப்பின் அதிர்ச்சி தாங்க முடியாமல் முதுகெலும் பில் விரிசல் விட்டிருக்கு. மற்றபடி, வலிப்பினால் எல்லோருக்குமே முது கெலும்பு பாதிக்கும்னு சொல்ல முடி யாது" என்றவர் தொடர்ந்து...

"இந்த ஒரு கேஸைப் பார்த்து மொத்தமா பயப்படவும் வேண்டாம். பிரச்னை பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுவதால் இல்லை. அவற்றை கவனமாகப் பார்த்து சுத்தப்படுத் தாமல், தோல் நீக்காமல் சாப்பிடுவது தான் பிரச்னையே! பன்றியின் கழிவுகளில் புரண்ட நாய், மாடு போன்ற கால்நடைகள் காய்கறித் தோட் டத்தில் மேயும்போது, அவற்றின் உடம்பிலிருந்து காய்கறிகளின் மேல்தோலில் நாடாப் புழுக்களின் முட்டைகள் ஒட்டிக்கொள்ள வாய்ப் பிருக்கிறது. எனவே, காய்கறிகளை நன்றாகக் கழுவிய பிறகும் 30 நொடி களாவது வெந்நீரில் வேகவைத்து சமைத்துச் சாப்பிடுவதுதான் நல்லது. திரும்பவும் சொல்றேன்... இந்த ஒரு உதாரணத்தைப் பார்த்து ஒரேயடியாக பயந்து போய்விட வேண்டாம்" என்கிறார் டாக்டர் யோகராஜ்.

ஆகவே, பச்சைக் காய்கறி பிரியர்களே... அலற வேண்டாம். ஆனா, கொஞ்சம் அலர்ட்டா இருக்கலாமே!

பேட்டி கொடுத்த மருத்துவர் தெளிவா ஒரு முறைக்கு இரு முறை அழுத்திச் சொல்லியிருக்கிறார் - இந்த ஒரு கேசை பாத்து பயந்துடாதீங்கன்னு. பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவதில்லை ப்ரச்சனை - அதை சரியா சுத்தம் செய்யாம சாப்பிடுவதுதான் பிரச்சனை. சரியா சுத்தம் செய்ய நேரமிருக்காதுன்னு நினைக்கறவங்க நேரடியா வேகவைத்தே சாப்பிடுங்க. இதுதான் அவர் சொல்ல வரும் கருத்து. கட்டுரையும் இதைச் சொல்லவே எழுத்தப் பட்டது. நல்ல விஷயம்தான். அவசியம் மக்களைச் சென்றடைய வேண்டியதுதான். காசு கொடுத்து வாங்கும் மக்களுக்கு ஒரு வெகுஜன பத்திரிக்கை செய்ய வேண்டிய கைம்மாறுதான் இது. மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் சொல்லியிருக்கும் தொனியைப் பாருங்கள்.

சரி, பத்திரிக்கைகளின் செய்தி தலைப்பு என்பது கவர்ச்சிகரமாக அதிர்ச்சியூட்டி வாசகனை செய்தியை நோக்கி இழுப்பதாக இருக்க வேண்டுமென்பதெல்லாம் சரிதான். எந்தெந்த விஷயங்களில் இந்த டெக்னிக்கை பயன்படுத்தி பார்ப்பது என்றில்லையா? அரசியல் அல்லது சினிமா சம்பந்தப் பட்ட விஷயங்களில் இப்படியெல்லாம் போட்டால் ஒன்றும் தப்பில்லை. மேலோட்டமாக பார்த்து யார் எப்படி புரிந்து கொண்டுவிட்டாலும் ஒன்றும் குடி முழுகிவிடப்போவதில்லை. ஆனால் படிப்பவரது உடல் நலம் சம்பந்தப் பட்ட ஒரு கட்டுரை, அவர்களுக்கு விழிப்புணர்வூட்ட எடுத்துக் கொண்ட விஷயமே தவறான புரிதலை விதைத்துவிடும் சாத்தியமுள்ளதை உணராதவர்களா இந்த பத்திரிக்கை கனவான்கள்?? உடனே படிக்கிறவந்தானே முழுசா படிச்சு விஷயத்தை தெரிஞ்சுக்கணும் அப்படின்னு எனக்கு வந்து உபதேசம் பண்ணப்போற அறிவு ஜீவிகளே, நம்ம சமூகமொன்னும் ரொம்பவே அறிவுபூர்வமான சமூகமாயிடலை இன்னமும். அதுலயும் விகடனையோ இல்லை குமுதத்தையோ வாங்குறவங்க பெரும்பாலும் அரசியல்/சினிமா துணுக்குகளையும் ஜோக்குகளையும் குறிவச்சு வாங்குவதுதான் அதிகமா இருக்கும். அது போன்ற முக்கியமான விஷயங்களை படிச்சு முடிச்சப்புறம் அப்படியே கொடுத்த காசுக்கு இந்த அட்டைலேர்ந்து அந்த அட்டை வரை ஒரு புரட்டு புரட்டுவாங்க. அப்போ அவங்க கண்ணுல இந்த தலைப்பு பட்டுத் தொலைச்சா என்ன ஆகும்? உடம்புக்கு நல்லதுன்னு அன்னிக்கு வரை எப்பவாச்சுமாவது செஞ்சுகிட்டிருந்த ஒரு நல்ல விஷயத்தையும் நிறுத்தி தொலைப்பாங்க. இதுதானா பத்திரிக்கை தர்மம்? ஒரளவு நல்ல பெயருடைய(அல்லது நிறைய பேர் இன்னமும் அப்படி நம்பிகிட்டிருக்கற) ஒரு பத்திரிக்கையே இப்படி நடந்துக்கிட்டா, அப்புறம் வேறென்னத்தை சொல்றது போங்க...

பி.கு: நுனிப்புல் மேய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கைன்னுதான் தலைப்பு வைக்க நினைச்சேன். அப்புறம் தலைப்பை மட்டும் பாத்துட்டு நம்ம உஷாக்காவோட வாசகர்கள் டென்ஷனாயிடப் போறாங்களேன்னுதான் மாத்திட்டேன். :)

என்னோட எட்டு

எட்டுப் போடணுமாம். கண்மணியக்கா கூப்பிட்டாஹ... அய்யனாரய்யா கூப்பிட்டாஹ....அப்புறம் வெட்டி பாலாஜி அய்யாவும் கூப்பிட்டாஹ... அப்புறமா அய்யானார் ஒரு ரிமைன்டரும் விட்டாரு.. இதுக்கப்புறமும் என்னமோ நம்ம தலைலதான் கம்பெனியவே தாங்குறா மாதிரி சீன் போட்டா யாருனா வந்து மொத்தினாலும் மொத்திடுவாங்கன்றதாலயும், எட்டு பெருமையான விஷயங்கள்ன்றதுலேர்ந்து என்னை மாதிரியான சாமானியப்பட்டவங்களையும் மனசுல வச்சு உங்களைப் பத்தி எதுனா எட்டு விஷயம் அப்படின்னு ஆட்டத்தோட விதிமுறைகளை தளர்த்திட்டதாலயும் தைரியமா ஆட்டத்தை ஆரம்பிக்கறேன்...

1. வெளிப்படையா பேசுறது - முதுகுக்கு பின்னாடி இதையே ஒட்டை வாய்னும் சொல்லுவாங்க. :)
2. புத்தகப் பித்து - புத்தகம்னு இல்லை. எங்கம்மா சொல்லுவாங்க, கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் போது மாப்பிள்ளைகிட்ட "இவ பாலை அடுப்புல வச்சா மட்டும் கொஞ்சம் பாத்துகுங்க மாப்பிள்ளை , ஏன்னா அப்பத்தான் இவ சுவாரசியமா எதுனா கடுகு மடிச்சு வந்த பேப்பரை படிச்சுகிட்டிருப்பா, பால் பொங்கிடும். அதை மட்டும் நீங்க பாத்துகிட்டா போதும் ,மத்தபடி என் பொண்ணு வீட்டை நல்லாவே பாத்துப்பா" அப்படின்னு மறக்காம சொல்லியே ஆகணும்னு சொல்லிகிட்டிருப்பாங்க. அந்த அளவு எந்த குப்பையானாலும் படிச்சுட்டுதான் கீழ வைப்பேன்.
3. இசை - கேக்க மட்டுந்தாங்க. பாடி சுத்தி இருக்கறவங்களை படுத்துமளவு கெட்ட எண்ணமெல்லாம் கிடையாது. ஆனா பிரச்சனை என்னான்னா, அது திரைப்பாடலாயிருந்தாலும் சரி சாஸ்திரிய இசைப் பாடலாயிருந்தாலும் எனக்கு வெறும் நல்ல இசை மட்டும் பத்தாது. வரிகளும் இயன்ற வரை நல்ல தமிழில் சந்த நயத்தோடு கவித்துவத்தோடு இருக்கணும். கொஞ்சம் கஷ்டந்தாங்கறீங்களா? அதும் சரிதான்.
4. அப்பா மேல இருக்கற பாசம் - அவர் எனக்கு அப்பா எனக்கு அப்பா மட்டுமில்லை. வழி நடத்துற குரு, என் சுக துக்கங்களை பகிர்ந்துக்கற நல்ல நண்பர், இப்ப அம்மா போனதுக்கப்புறம் அவர் தாயுமானவரும் கூடத்தான். அதுனால அவரை கேக்காம ஒரு துரும்பையும் அசைக்க மனசு வராது எனக்கு.
5. ஞாபக சக்தி - இந்த ஒரு விஷயத்தை வச்சுத்தான் முதுநிலை வரைக்குமான என் படிப்பை ஒப்பேத்த முடிஞ்சுது. இது மட்டுமில்லைன்னா நான் படிப்புல காட்டின அக்கறைக்கு, கதை கந்தலாயிருந்திருக்கும். ஒரு முறை கேட்டதை மறந்ததா சரித்திரமே கிடையாது (ஆனா நான் உண்மையிலேயே கவனிச்சு கேட்டிருக்கணும். பெரும்பாலான சமயத்துல வெறும் பாவ்லாதான் பண்ணுவேன் கவனிக்கறா மாதிரி. ஆனா ரொம்ப நம்பும்படியா இருக்கும் என் ஆக்டிங்க்....)
6. குத்தி காமித்தல் - இது #5 அதிகமா இருக்கறதால வர்ர வினை. ஒரு முறை நடந்தது ரொம்பவே ஞாபகம் இருந்து தொலைக்கறதால, அடுத்த முறை அவங்ககிட்ட பேசும் போது இந்த குத்தி காமிக்கறதை தவிர்க்கவே முடியறதில்லை. அதும் எப்படின்றீங்க, வாழைப்பழ ஊசின்னுவாங்களே அது மாதிரி ரொம்பவே உள்குத்தா இருக்கும். எதிராளிக்கு வலிக்கும் ஆனா காமிச்சுக்கவே முடியாது. என்கூட பழகின யாரை கேட்டாலும் சொல்லுவாங்க. எவ்வளவு நெருங்கினவங்களா இருந்தாலும் என்னிக்கோ எப்பவோ பண்ணினதுக்கு கூட இன்னமும் அனுபவிச்சுகிட்டிருப்பாங்க. எங்க அப்பாவே இதுலேர்ந்து தப்பிக்க முடியாதுன்னா பாத்துக்குங்க. பிரச்சனை என்னான்னா, நானும் இது கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனாலும் இந்த பழக்கத்தை மாத்திக்க முடியலை.
7. மன உறுதி - தற்பெருமை போலத் தெரிஞ்சாலும் நிஜமாவே எனக்கு இது கொஞ்சம் அதிகம்தான். சொல்லப்போனா பிரச்சனைகள் அதிகமாக அதிகமாகத்தான் ஜெயிச்சே ஆகணும்ன்ற என்னோட உறுதியும் அதிகமாகுதோன்னு கூட தோணும். எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டாலும் தினசரி நடவடிக்கைகளைக்கூட மாத்திக்க மாட்டேன். அழுதுகிட்டே சாப்பிடாமலோ தூங்காமலோ இருந்ததா சரித்திரமே கிடையாது. ரொம்ப சகஜமா சுத்தியிருக்கறவங்ககிட்ட சிரிச்சு பேசிகிட்டே சமாளிச்சுகிட்டிருப்பேன்.
8. சுயமரியாதையை விட்டுக் கொடுத்து அடைய வேண்டியிருக்கும் எதையும் தூக்கிப்போட தயங்கினதேயில்லை - அது எப்பேர்ப்பட்ட விஷயமாயிருந்தாலும் சரி. ரொம்பவே மன நிறைவைத் தரும் விஷயம் இது. எங்கேயும் நான் காம்ப்ரமைஸ் செய்துகிட்டதேயில்லைன்றது ஒரு பெருமைக்குரிய விஷயம். இதுக்கு நான் எங்க அப்பா அம்மாக்குதான் நன்றி சொல்லணும். ஏன்னு கேட்டால் அவங்க தலையிட்டால் நான் எதையும் விட்டுக் கொடுத்திருப்பேன்ற நிலையிலும், அதுதான் ஒரு பெண்ணுக்குரிய இயல்புன்னு இருந்த சில விஷயங்களில் கூட நான் வளைஞ்சு கொடுக்கணும்னு அவங்க வற்புறுத்தினதேயில்லை. அவங்க கேட்டிருந்தா, இன்னிக்கு எனக்கு இருக்கற சுதந்திரம் இருந்திருக்காது. ஆனாலும் சில ரொம்ப பெரிய பிரச்சனைகளில் அவங்க அதை செய்யாம என்னை, என் சுயத்தை மதிச்சிருக்காங்க. அதுனாலயே அவங்க மீதான என் மதிப்பு எங்கேயோ போயிடுச்சு.

சரி, இப்போ நான் பெற்ற இன்பத்தை இன்னும் எட்டு பேருக்கு கொடுக்கணுமாம். இன்னும் யாரு மிச்சமிருக்காங்கன்னே தெரியலை. இருந்தாலும் ஒரு குத்து மதிப்பா போட்டு வைக்கிறேன்.

1. மகா
2. சாக்ரடீஸ்
3. பொற்கொடி
4. நந்தா
5. ஆழியூரான்
6. செல்வ நாயகி (மேடம் இன்னும் அழகு விளையாட்டையே ஆரம்பிக்கலை.. )
7. சேதுக்கரசி(இதை சாக்கிட்டாச்சும் ஒரு பதிவு போடுங்க தாயி... எவ்ளோ நாள்தான் பின்னூட்டத்துலயே வாழ்க்கைய ஓட்டுவீங்களாம்?) -
8. நொந்தகுமாரன்

Wednesday, July 18, 2007

அழ மாட்டேன் அம்மா

உச்சிவெயிலில் கூட அரையிருட்டாகவே இருக்கும் அந்த ரேழியில் எப்போதும் நிறுத்தி வைக்கும் அப்பாவின் டி.வி.எஸ் 50யையும், ஹைதர் காலத்து சைக்கிளையும் எடுத்துவிட்டு அங்கே உன்னை கிடத்தியிருந்தார்கள் அன்று. ரோஜா மாலை குவியலுக்கு இடையில் உன் வழக்கமான ஒற்றை நாணய அளவு குங்குமப்பொட்டு தெரிந்து கொண்டிருந்தது. ஏனோ அன்று எனக்கு அழுகையே வரவில்லை அம்மா.

ஒரு நாள் என்னை சினிமாவிற்கு அழைத்துப் போவதற்கு நீ அனுமதி கேட்டபோது விசிறியடிக்கப் பட்ட சில்லறைக் காசுகளை பொறுக்கியெடுத்து மேசை மீது வைத்துவிட்டு தலை குனிந்து நீ சமையலறை நோக்கி நடந்தாயே, அப்போது அழுதிருக்கலாம் நான் உனக்காக. ஆனால் அன்று தோன்றவில்லை அம்மா, பதிலாய் என்னை நீ சினிமாவிற்கு அழைத்துப் போகவில்லையென்று உன்னிடம் கோவிக்கத்தான் தெரிந்தது எனக்கு. ஒரு கையாலாகாத புன்னகையோடு என்னை சாப்பிட வைக்கவென்று நீ நாளை அழைத்துப் போகிறேன் என்ற நைந்த பல்லவியையே பாடினாய். அதற்கு மசியாமல் கொஞ்ச நேரம் உர்ரென்று உட்கார்ந்திருந்து விட்டு பின் வயிற்றின் கூப்பாட்டுக்கு மசிந்து சாப்பிட்டுத் தொலைத்தேன். உருப்படியாய் அன்று அழுதிருக்கலாம் உனக்காக.

காமிரா அறையை கூட்டிபெருக்கிவிட்டு நீ நகர்ந்த அடுத்த நொடி எண்ணெய்க் குளியலுக்காய் கழற்றி அரிசிப் பானைக்குள் வைத்திருந்த சங்கிலியில் நான்கு அங்குலம் குறைவதாய் அத்தை பிரலாபித்த போது முற்றத்தின் ஓரத்தில் நடுங்கும் கரங்களுடன் கண்ணில் நீர் வழிய அப்பாவின் வருகைக்காய் காத்திருந்தாய் நீ. வந்தவர் உன் தன்னிலை விளக்கங்களை காது கொடுத்தும் கேளாது கம்பீரமாய் தமக்கையின் கண்ணீரைத் துடைத்துவிட்டு "கவலைப் படாதே, மீனா. உன் பெண்களிருவர் திருமணத்திற்கும் தாய் மாமன் சீர் தவிரவும் இரண்டு பவுன் தனியாய் தந்து விடுகிறேன், அழாதே" என்றபோது இறுகிய முகத்துடன் தலைய கவிழ்ந்து உட்கார்ந்திருந்தாயே நெடுநேரம், அப்போது அழுதிருக்கலாம் உனக்காய் நான். தோன்றவில்லயே எனக்கு, என்ன செய்ய?

அதன் பிறகு எதன் பொருட்டும் அந்த காமிரா அறைக்குள் செல்வதில்லை என்று முடிவெடுத்து, தினமும் அந்த அறையை மட்டும் பெருக்குவதையும் துடைப்பதையும் என்னை செய்யச் சொன்னாயே, அப்போது உன் மேல் கோபம்தான் வந்தது எனக்கு - என் தலையில் உன் வேலையை கட்டுவதாய். அது உன் வரையிலான சத்தியாகிரகம் என்று புரியவெயில்லை அம்மா எனக்கு.

அந்த அறைக்குள் போவதை தவிர்க்க, தினசரி தேவைகளுக்கான பணத்தை காலையில் கேட்டு வாங்கி சமையலறையின் ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ள ஆரம்பித்தாயே அப்போது அதன் பின்னாலிருக்கும் வலியெனக்கு புரியவில்லை. அதிலிருந்து கொஞ்சம் காசு கொடு, பள்ளிக்குள் நுழையும் முன் கமர்கட்டு வாங்க வேண்டுமென்று கேட்டு உன்னது இயலாமையின் விளிம்பை உணராது ஒரு கருமியென்றே மனதுள் உன்னை திட்டியவாறு பள்ளி சென்றேனே, அன்று உன் முகத்திலிருந்த வேதனை இரவு அந்த கிண்ணத்திலிருக்கும் மீதி சில்லறைக்கும் நீ சொல்லும் பால் மோர் கணக்குக்கும் சரியாய் பொருந்தி வர வேண்டுமே என்பதற்கானது என்று எனக்கு புரியவில்லையம்மா. ஒரு வேளை அன்று நான் உனக்காய் அழுதிருந்தால் சரியாகவே இருந்திருக்கும்.

அன்றெல்லாம் விட்டு விட்டு இன்று எதற்காய் நான் அழவேண்டுமாம்? மாட்டேனம்மா, மாட்டவே மாட்டேன்.

வாழ்நாள் முழுவதும் நம் குடும்பத்தினரின் நன்மைக்கு அடுத்தபடியாய் உன் வேண்டுதல் பட்டியலில் உனக்கே உனக்கானதாய் இடம் பெற்ற ஒரே வேண்டுதல் - நான் சுமங்கலியாய் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்பதுதான். இத்தனை வருட வாழ்வில் முதல் முறையாக இன்றுதான் நீ கேட்டது எந்த அவமானமுமின்றி உனக்கு முழுசாய் கிடைத்திருக்கிறது. அப்பா இல்லாமல் நீ சுமக்க வேண்டிய அவமானங்கள் அவரிடமிருந்து சுமந்ததை விடவும் அதிகமிருக்கும் என்று நீ நினைத்திருக்கலாம். சுமங்கலித்துவம் குறித்தான என் எதிர்ப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உனது இந்த வாழ்நாள் சாதனையை நானும் கொண்டாடுகிறேன் அம்மா.

உனது பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நான் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்திருக்கிறேன். புரிந்து கொள்ளும் வயது வந்தபோதோ உன்னுடன் இருந்து உனக்காய் போராட நேரமில்லையே அம்மா, என் வாழ்வு என் வேலை என்று பிரிந்து சென்றாயிற்று. இப்போதேனும் உன்னை நான் அவமதிக்காதிருக்க வேண்டுமில்லையா?

Monday, July 16, 2007

படித்ததில் பிடித்தது (4)

புத்தகம் - ஒற்றன்
ஆசிரியர் - அசோகமித்திரன்
வகை - நாவல்
முதல் பதிப்பு - நவம்பர், 1985
சமீபத்திய பதிப்பு - டிசம்பர், 2005
பதிப்பகம் - காலச்சுவடு

நான் சுலபமாய் வகை நாவல் என்று போட்டு விட்டேன். ஆனால் படிக்கையில் இதை நாவல் என்றோ, இல்லை பயணக் கட்டுரைத் தொடர் என்றோ சுலபத்தில் வகைப் படுத்திவிட முடிவதில்லை. சொல்லப்போனால் இதன் படைப்பாளியே கூட முதல் பதிப்பிற்கான முன்னுரையில் "இப்படைப்பை வகைப்படுத்துவதில் சிறிது தயக்கம் இருக்கத்தான் செய்தது. தமிழுக்குப் புதிதான அந்த அமைப்புக்கு ஒரளவு அருகாமையில் இருக்கும் புனைகதை வடிவம் நாவல்தான் - ஒரு நாயகன், ஒரு களம் (ஐக்கிய அமெரிக்கா), ஒரு கால கட்டம்(1973 - 1974)." என்றே குறிப்பிடுகிறார். அந்த முன்னுரையில் மறக்கவியலா ஒரு வரி "மனமிருந்தால் யாவரும் கேளிர் என்பதுதான் எவ்வளவு சாத்தியமானது!" (இந்த வரிகளை படிக்கையில் நம்ம தமிழ்மண வாசகர்களுக்கு ஒரு பெருமூச்சு நிச்சயம் :) )

சர்வதேச எழுத்தாளர் சந்திப்பிற்காய் அயோவா சிட்டி பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் தான் அமெரிக்கா சென்று வந்த அனுபவத்தையே அசோகமித்திரன் புனைகதை உருவில் இந்நூலில் படைத்திருக்கிறார். ஒற்றன் பிறந்த கதயில் இவர் அமெரிக்கப் பயண ஏற்பாடுகளை விவரிக்கிறார் இப்படி - "அந்த நாளில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி கையெழுத்திட்டால் பாஸ்போர்ட் பத்து நாளில் வாங்கி விடலாம். அம்மை மற்றும் மஞ்சள் சுரத்திற்குத் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு இரு வாரம் காத்திருக்க வேண்டும். பெட்டி 20 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. " இந்த வரிகளை படிக்கும் அமெரிக்க விசாவிற்கு முயற்சி செய்த/செய்ய இருக்கும் யாரும் இன்று ஒரு ஏக்கப் பெருமூச்சை விடாதிருக்க முடியாது.

"சந்தித்தவர்கள் சொன்ன யோசனைகளை எல்லாம் கேட்டுக் கொண்டு இரண்டு ஜதை ஜோடு, இரண்டு கம்பளி, இரண்டு ஸ்வெட்டர், நான்கு ஸாக்ஸ், நன்கு பொட்டலம் கட்டப்பட்ட ரசப்பொடி எல்லாவற்றையும் அந்தக் கால சூட்கேஸ் ஒன்றில் அடைத்துக்கொண்டு அக்டோபர் 6ந்தேதி சென்னையிலிருந்து கிளம்பினேன்."
எத்தனை வருஷமானாலும் இன்னமும் நம்ம டுபுக்கு உட்பட யாருமே இந்த ரசப்பொடி இல்லாமல் மட்டும் வெளிநாட்டு விமானமேறுவதில்லை. அது என்ன மாயமோ தெரியலை. ஆனால் அசோகமித்திரனும் தான் எடுத்துப் போன பொருட்களிலேயே உபயோகமாய் இருந்தது ரசப்பொடி மட்டுந்தான் என்கிறார். :)

"ஏழு மாதம் அங்கிருந்தேன். எனக்குத் தெரிந்த சமையலை சமைத்துக் கொண்டு சமாளித்தேன். எனக்கு மனிதர்கள் பிரச்சனையாக இருக்கவில்லை. நிறையவே மனிதர்கள். கறுப்பு, சிவப்பு, மஞ்சள், மாநிறம், கண்ணைப் பறிக்கும் வெள்ளை. ஆங்கிலம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், கொஞ்சம் தெரிந்தவர்கள், நிரம்பப் படித்தவர்கள், படித்தவர்கள் போல பாவனை செய்பவர்கள். ஆனால் துக்கம், சங்கடம் என்று வந்தபோது எல்லோரும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள். நான் மெத்த தெரிந்தவன் என்று என்னிடம் யோசனை கேட்க வரும்போது எனக்கு கூச்சமாக இருக்கும். நான் ஒவ்வொரு கணமும் அவர்களிடமிருந்துதான் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று அவர்களுக்குத் தெரியாது."

"ஒற்றன் நாவலில் எல்லோரும் அப்பாவிகள். எல்லோருக்கும் அயோவா சிடி வெளியூர், வெளிநாடு. எல்லோருக்குமே பெரிய எதிர்காலம் கிடையாது. அவர்களேதான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்து பாதிப்பேர் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார்கள். எனக்கு அன்றும் இன்றும் நம் நாடுதான் என் இருப்பிடமாகத் தோன்றுகிறது."

இந்த நாவலிலிருந்து சில இடங்களை எடுத்துப் போடாமல் முன்னுரையிலிருந்தே கிள்ளிப் போட்டிருக்கிறேன். வழக்கமாய் புத்தகங்களின் உள்ளடக்கத்திலிருந்து சில வரிகளை எடுத்துப் போட்டுதான் இந்த புத்தகம் இதைப் பற்றியது என்று சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் இங்கேயோ அ.மி யே அதை தெளிவாய் தன் முன்னுரையில் சொல்லிவிட்டார். அதனால் நான் புதிதாய் சொல்ல எதுவுமேயில்லை.

மொத்த நாவலும் ஒரு சிறுகதை தொகுப்பு போலவும் இருப்பது இதன் தனிச் சிறப்பு. ஏனெனில் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை மையமாய் கொண்டிருக்கும். அவர்களுடனான அ.மியின் நட்பு அந்த அத்தியாயத்தில் விவரிக்கப் பட்டிருக்கும். ஆக அதனளவில் அது ஒரு சிறுகதையின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியுமிருக்கும். எனவே ஒரே ஊரில் ஒரு குறிபிட்ட காரணத்துக்காய் சேர்ந்து வசித்த சில எழுத்தாளர்களின் உறவை பற்றியது என்னும் பொதுமைத் தன்மையிருக்கும் அதே சமயம் ஒவ்வொன்றையும் ஒரு தனி கதையாகவும் ரசிக்க முடியும்.

Thursday, July 12, 2007

மங்களம்

இது யாரோ ஒரு பெண்ணின் பெயரல்ல. மங்களம் என்பது கச்சேரிகளில் கடைசியாக பாடப்படும் பாடல். மோகன்தாஸுக்கும் எனக்கும் இடையில் நடக்கும் என்னுடைய சிவாஜி பட விமர்சனத்தின் மீதான விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த பதிவு. அதுதான் இந்த தலைப்புக்கு காரணம்.

மோகன் தனது கடைசி பதிவில் ஏதோ தனக்கு வலுச்சண்டைக்கு விருப்பமில்லாதது போலவும் தன் மீதான தனிநபர் தாக்குதலுக்கு பிறகும் தான் சமாதானத்தையே நாடும் ஒரு சாத்வீகப் பிறவியாகவும் தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறார். அருமையான முயற்சி. நல்ல பலனும் இருந்ததாக தெரிகிறது. நான் வரிகளுக்கு இடையிலிருந்து எடுத்து வீசுவதாக அவர் மீதான குற்றசாட்டுகளை சொல்கிறார். ஆனால் அவரது பதிவில் இருக்கும் எனக்கான எள்ளல்கள் பல என்னுடைய தனி வாழ்க்கை தொடர்புடையன. அவற்றை பற்றியெல்லாம் நானும் கூட எங்கும் போய் அழுவதாயில்லை. :) எனவே நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

நான் கதாநாயகிகளை கொஞ்சமே கொஞ்சம் அறிவுடன் காட்டுங்களேன் என்று சொன்னதற்கு இல்லையில்லை நான் உட்பட பலபேருக்கு இன்ன இன்ன தகுதிகளுடைய பெண்களைத்தான் பிடிக்கும். எனவே சமூக வழக்கத்திற்குட்பட்டுத்தான் அந்த படத்தில் அந்த கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னவர் நீங்கள் - அந்த தகுதிகளை ஒரு முட்டாள் அல்லது அறிவிற் குறைந்தவரோடு ஒப்பிட்டது நீங்களேயொழிய நான் என் பதிவில் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன்.

//ஒருவரது படிப்பு தகுதிகளும்(பட்டப்படிப்பு) அவரது ஆர்வமும் (சமையல் அல்லது தையல்) ஒருவரது அறிவுத்திறனை முடிவு செய்வதில்லை. என் கருத்துக்கள் பெண்ணை பெரிய படிப்பாளியாக காட்டவேண்டுமென்பதில்லை//

இதற்கு பிறகும் நீங்கள்

// நீங்கள் சார்த்தரையும் நீட்ஷேவையும் தெரியாத பெண்களை முட்டாள்கள் என்று எடுத்துக்கொண்டால் நான் பொறுப்பில்லை//

என்பதாக சாமர்த்தியமாய் பழியை என்மீது தூக்கி போட முயற்சிக்கிறீர்கள். நீங்கள் என்னதான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்த்தாலும் அதை படிப்பவர்கள் நம்பிவிட மாட்டார்கள் என்று எனக்கு தெரியும். எனவே இதற்கு மேல் இவ்விஷயத்தில் நான் அதிகம் நோண்ட விரும்பவில்லை.

//உங்களுக்கு முட்டாள் பெண் மனைவியாக வர வேண்டுமென்று ஆசையிருப்பின் நீங்களும் அப்படியே இருப்பதாகத்தான் அர்த்தம்.//

இந்த வரிகள் உங்களை புண்படுத்தியிருக்குமானால மன்னிக்கவும். அதை இப்படி மாற்றிக் கொள்ளலாம் - நீங்கள் எந்த அளவு தகுதிகளுடைய துணை வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதே அளவுதான் உங்களுக்கும் தகுதியிருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள். நேர்மறை விகிதாச்சாரமென்பார்களே - directly proportional, அதுபோல. இதுதான் அங்கே நான் சொல்ல வந்தது.

கடைசியாக ஒரேஒரு விஷயத்தை மட்டும் இங்கே தெளிவு படுத்தி விடுகிறேன். பத்மாவதி தாயாரின் தாலி கழண்டு விழுந்ததற்காய் பரிகாரம் செய்தவர்கள் முட்டாளா இல்லையா என்ற கேள்விக்கு வருவோம். என்வரையில் சந்தேகத்திற்கிடமின்றி அது முட்டாள் தனம்தான். ஆனால் ஒரே ஒரு விஷயம் - அப்படி நம்புவது யாரென்பதை பொறுத்து நான் அந்த விமர்சனத்தை வெளியிடுவதும் அடக்கிக்கொள்வதும் இருக்கும். என் வீட்டிலேயே எடுத்துக் கொண்டால் என் அம்மா அதையே செய்தால் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். ஏன் சொல்லப்போனால் பூஜைக்கு ஏதேனும் தேவையா என்று கேட்டு வாங்கி வந்துகூட கொடுப்பேன். எனக்கும் கொஞ்சம் குங்குமம் கொடுத்தால் அதையும் வாங்கி நெற்றியில் இட்டும் கொள்வேன். ஆனால் அதையே என் தங்கை செய்தால், என்னம்மா இது இப்படி கூட உன்னால் எப்படி யோசிக்க முடிகிறது என்று கேட்டு முடிந்த வரை அவளுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன். இந்த இரு அணுகுமுறைகளுக்கும் உள்ள வித்தியாசத்திற்கான காரணம் உங்களுக்கு புரியவில்லையென்றால் அதற்கு மேல் உங்களிடம் பேசுவதே பொருளற்றது. முந்தைய தலைமுறையில் பெண்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அவர்களது நம்பிக்கையை அங்கே நிறுத்தியிருக்கிறது. ஆனால் இன்றும் விஞ்ஞான முன்னேற்றத்தையும் என் படிப்பையும் நான் வயிற்றுப் பிழைப்புக்கும் வாழ்க்கை வசதிகளுக்கும் மட்டுமே பயன் படுத்திக்கொள்வேன். அதைத்தாண்டி என் அறிவை நான் உபயோகிக்க மாட்டேன் என்று ஒருவர் சொன்னால் அது நிச்சயம் முட்டாள்த் தனம்தான்.

அடுத்தது நம்பிக்கைகளுக்குள்ளேயே நிறைய படிநிலைகள் உண்டு. அதாவது கடவுள் என்று ஒரு சக்தியிருப்பதை மட்டும் நம்புவது ஒரு வகை. தெருமுனையிலிருக்கும் சித்தி விநாயகரை விட மலைக்கோட்டைப் பிள்ளையார் சக்தி மிக்கவர் என்று சொல்வது இன்னொரு வகை. முன்னது உணர்வு பூர்வமான நம்பிக்கை. பின்னது மூட நம்பிக்கை. இரண்டுக்குமான வேறுபாடு உங்களுக்கு புரியவில்லையென்றால் என் வாதம் உங்களுக்கு புரியாது போவதில் ஆச்சரியமொன்றுமில்லை. இன்னொரு உதாரணம் - உங்க தலைவர் படங்களிலிருந்தே சொல்கிறேனே. ராகவேந்திராவும் பக்தி படம்தான். பாபாவும் பக்தி படம்தான். முன்னது நன்றாகவே ஒடியது. பின்னது தோல்வியை தழுவியது. இத்தனைக்கும் ராகவேந்திரா அவரது 100வது படம் - அப்போது அவர் இளைஞர், ஆக் ஷன் ஹீரோவாக புகழடைந்திருந்தவர். படம் ஆரம்பித்தபோது நிறைய பேர் அவருக்கு இது விபரீத முயற்சியென்று அறிவுரை சொல்லவும் செய்தார்கள். மீறி அவர் அந்த படம் செய்தார். வெளிவந்து படம் நன்றாகவே ஒடியது. ஆனால் பாபா ஏன் ஒடவில்லை என்று யோசித்துப் பாருங்கள். பிறகு உங்களுக்கு வருடாவருடம் கேதார கௌரி விரதமிருப்பவர்களுக்கும் திருப்பதி தாயாரின் தாலி கீழே விழுந்ததற்காய் பரிகாரம் செய்பவர்களுக்கும் என்ன வித்தியாசமென்று புரியும். அது புரிந்தால்தான் நான் ஏன் சிவாஜியின் கதாநாயகியை முட்டாளென்று சொன்னேனென்பதும் புரிந்துவிடும்... ஹ்ம்ம்.. ஆனால் மோகனா நீங்கள் தூங்குவது போல் நடிப்பவரென்பதால் அதையெல்லாம் நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.

சரி, சில விஷயங்களில் புலம்புவதை ஒரு அளவோடு நிறுத்திகொள்ள வேண்டும். புலம்பாமலே இதுதான் யதார்த்தமென்று புரிந்துணர்ந்து புன்னகையோடு நிஷ்காம்ய கர்மமாக பதிவெழுதும் மக்கள் புண்ணியாத்மாக்கள். நானும் மெல்ல அந்த நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறேன். அவ்ளோதான் சொல்ல முடியும் இப்போதைக்கு.

பி. கு: பின்னூட்டப் பெட்டி காரணமாகவே மூடப்படுகிறது. ஆதரவு எல்லாம் மனதிலிருந்தாலே போதும்பா.

Monday, July 09, 2007

தமிழ்க் கலாச்சாரத்தோடு ஒரு பெண்

முன்கதைச் சுருக்கம்

முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்

ஆறாம் விரல்களும் அர்த்தமற்ற முட்டாள்தனங்களும்

பின்கதை விளக்கம்

பாடல்களும் கதாநாயகிகளும் தேவையா என்பதை கதையின் போக்கும் அதை நகர்த்துகிறவர்களும் முடிவு செய்ய வேண்டிய விஷயமே தவிர நாம் முடிவு செய்ய வேண்டிய விஷயமன்று. அவர்கள் தேவையென்று எண்ணி வைத்து அது உண்மையில் கதைபோக்குக்கு எந்தவிதத்திலும் தேவையற்றதாக தெரிந்தால் அதை படம் பார்க்கும் நாம் நம்மிஷ்டத்துக்கு விமர்சிக்கலாம் - சுஜாதா போல் பத்தி எழுதும் வாய்ப்பு கிடைத்தவர்கள் பார்த்ததில் ஜீரணமாகாதது என்ற தலைப்பிலும் நம் போன்றவர்கள் நமது வலைப்பதிவில் அவைகளும் இவைகளும் என்ற தலைப்பிலும். எனது முந்தைய பதிவில் நான் சொல்ல வந்தததும் அத்தகைய ஒரு விமர்சனமே - இது வரை வந்த படங்களில் பெரும்பாலானவை ஆறாம் விரல் போல் தேவையற்ற ஒரு இணைப்பாகவே கதாநாயகிகளை உபயோகித்து வருகின்றன. எனவே அப்படியான ஒரு பயன்பாடு மறைய வேண்டும் என்பதுதான் என் ஆவல். விஜயசாந்தியின் படங்கள் தொடர்ந்து நாலைந்து பார்த்தால் என்ன சொல்லத்தோன்றும்? அதில் வரும் ராம்கி அல்லது வெங்கடேஷ் கதாபாத்திரங்கள் எல்லாம் இல்லாது அத்தகைய படங்கள் வரவே முடியாதா என்ன? உண்மையில் சொல்லப்போனால் அத்தகைய படங்களில் மகளிர் மட்டும் படத்தில் செய்தது போல க்ளைமாக்சில் மட்டும் யாரையேனும் ஜோடியாக காண்பித்தோ இல்லை கணவர்/காதலர் வெளிநாட்டிலிருப்பதாக காண்பித்தோ அழகாய் கதையை நகர்த்திக் கொண்டு போய் விடலாமில்லையா, அது போலவே லீ போன்ற படங்களில் கதாநாயகிகளின்றி அழகாய் கதை சொல்லலாம். அதற்காக அலைபாயுதேவிலும் ஷாலினி இல்லாமலே இல்லற வாழ்வின் வெற்றி ரகசியத்தை சொல்ல வேண்டுமென்றால் பாவம் மணிரத்னம் என்னய்யா செய்வார்? கொஞ்சம் கதாசிரியப் பெருந்தகைகளின் மேலும் கருணை காட்டுங்கள் மோகனா. சரி, இது இந்த கட்டுரையின் பேசு பொருளில்லையென்பதால் இதை இத்தோடு விட்டு விட்டு நமது முக்கிய விவாதத்துக்குப் போவோம்.

சரி, நீங்கள் பட்டப்படிப்பு மட்டுமே முடித்து வீட்டிலிருந்து சமையலும் தையலும் கற்றுத் தேர்ந்த ஒரு தமிழ்க் கலாச்சாரப்படியான பெண்ணைத்தான் மணப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்(என் நண்பனொருவன் பட்டப்படிப்பிலும் அவள் கண்டிப்பாக ஹோம் சையன்ஸ்தான் படித்திருக்க வேண்டுமென்று சொல்லுவான். அப்போதுதான் அவளால் பெரிதாக வேலைக்கு எதுவும் போகிறேன் என்று சொல்லிவிட முடியாதாம். வீட்டிலிருந்து குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக் கொள்ளுவாளாம். அதே சமயம் 5ஆம் வகுப்பு வரையிலாவது குழந்தையின் படிப்புத் தேவைகளையும் பார்த்துக் கொள்ளுவாளாம். நீங்களும் கூட இந்த உப பிரிவை உங்களது நிபந்தனையில் சேர்த்துக்கொள்வதை பற்றி யோசிக்கலாம்.) ஒருவரது படிப்பு தகுதிகளும்(பட்டப்படிப்பு) அவரது ஆர்வமும் (சமையல் அல்லது தையல்) ஒருவரது அறிவுத்திறனை முடிவு செய்வதில்லை. என் கருத்துக்கள் பெண்ணை பெரிய படிப்பாளியாக காட்டவேண்டுமென்பதில்லை. அவளை புரிந்துகொள்ளும் திறனற்றவளாகவே தொடர்ந்து காண்பிக்காதீர்கள் என்பதுதான் என் கருத்து.

படத்திலுமே கூட அந்தப் பெண்ணை பி.ஏ தமிழ் இலக்கியம் படித்து விட்டு இசைக் கருவிகள் விற்பனை செய்யும் ஒரு பெண்ணாகத்தான் காட்டுகிறார்கள். நான் அதைப் பற்றி எங்கும் குறைகூறவில்லை. அவளையும் ஒரு மென்பொருள் நிபுணராக இவர் அமெரிக்காவிலிருந்து வந்தால் அந்தப் பெண்ணையும் குறைந்தது அருகிலிருக்கும் சிங்கப்பூரிலிருந்து வந்தவராகத் தான் காட்ட வேண்டுமென்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஒருவரது ஆர்வம் இசையிலிருக்கலாம். தையலிலிருக்கலாம். சமையலும் நல்ல குழந்தை வளர்ப்பும்தான் என் லட்சியம் என்று சொல்லும் பெண்களையும் நானறிவேன். ஆனால் நிச்சயம் அவர்களெல்லாம் முட்டாள்களல்ல. அறிவுத் திறன் குறையுடையோருமல்ல. அறிவுடனிருப்பது அல்லது இல்லாமலிருப்பது இரு பாலினத்தவருக்கும் பொதுவானது. ஆனால் ஏதோ கதாநாயகிகள் எல்லோரும் வெறும் அழகுப் பதுமைகளாகவும் அறிவற்ற மடையர்களாகவும் இருப்பதாகவும் ஆண்கள் எல்லோரும் அவர்களை உய்விக்கவே பிறந்து வந்தவர்களென்றும் தொடர்ந்து கதை சொல்லப்பட்டு வருவதே என் எரிச்சலுக்கு காரணம்.(சில விதிவிலக்குகளும் உண்டு - பாலச்சந்தர் படத்து கதாநாயகிகளா என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள் அய்யனார், ப்ளீஸ். விதிவிலக்குகள் பற்றி நான் தனி பதிவு போடுகிறேன். அப்போது சொல்கிறேன் என் பார்வையில் யாரெல்லாம் கொஞ்சமேனும் வித்தியாசமாய் தெரிகிறார்கள் என்று) அதிலும் கதாநாயகன் சூப்பர் மேனாக வரும் போது அவனுக்கு மனைவியாகவோ இல்லை துணைவியாகவோ வருபவள் அவனுக்கு இணையாக அவனைப்போலவே சூப்பர் வுமெனாக இல்லையென்றாலும் கூட பரவாயில்லை. சாதாரண அளவிலாவது அறிவுத்திறனுடையவளாக இருத்தல் வேண்டுமல்லவா? அதை நான் சொன்னால் உங்களுக்கெல்லாம் ஏன் எரிகிறது?
//சர்ரியலிஸம் பேசிக்கொண்டு சார்த்தரையும், பெட்ரிக் நீட்ஷேவையும் துணைக்கிழுக்கும் ஒரு அறிவுஜீவி பெண்ணை //
இதெல்லாம் என் பதிவில் எங்கே இருக்கிறது? கொஞ்சமே கொஞ்சம் அறிவும் உள்ளவர்களாக கதாநாயகிகளை காட்டச் சொன்னதற்கு இத்தனை எரிச்சலா? அடேங்கப்பா...

"கற்றாரை கற்றாரே காமுறுவர்" என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். நட்புற்றிருக்கவே ஒத்த அறிவுத்தகுதி வேண்டுமெனில் திருமணத்திற்கு வேண்டாமா?உங்களுக்கு முட்டாள் பெண் மனைவியாக வர வேண்டுமென்று ஆசையிருப்பின் நீங்களும் அப்படியே இருப்பதாகத்தான் அர்த்தம். என் வார்த்தைகளின் கடுமைக்கு மன்னிக்கவும். நட்பின் பொருட்டு கூட உண்மையை சொல்லாது விடுதல் எனக்கு வழக்கமில்லை. எனவே ஒரு சமூகம் பெண்களனைவரையும் முட்டாளாக்கினால் அந்த ஒட்டு மொத்த சமுதாய நலனும் அழியும். மேலும் முட்டாள் பெண்ணுடன் வாழ்வது அறிவு ஜீவி ஆண்களுக்கே ஒரு பெருத்த சாபமாகிப் போகும்.

இதை நானும் பர்சன்டேஜ் அடிப்படையில் சொல்கிறேனாக்கும் என்று உங்கள் பாணியில் ஜல்லியடித்து விடலாம்தான். ஆனால் என் விவாத முறை அப்படியல்ல. உங்களுக்கு சில வரலாற்று உண்மைகளை சுட்டுகிறேன். உங்களுக்கு ஆணோடு ஆண் கொள்ளும் ஓரினச் சேர்க்கை ஏன் கிரீக் லவ் என்று அழைக்கப் படுகிறது என்று தெரியுமா? கிரேக்கத்தில் ஒரு கால கட்டத்தில் ஒரு புறத்தில் பெண்களை அடிமையாகவே என்றென்றும் வைத்திருத்தலின் பொருட்டு அவர்களை கல்வி பெறாமலும் எந்த வகையான அறிவுத்திறனும் பெற்றுவிடாமலும் கவனமாக பார்த்துக் கொண்டார்கள். பெண்களுக்கே தொடர்ச்சியான மூளைச்சலவை மூலமாக எந்த விதத்திலும் அறிவுத் திறனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற எண்ணத்தை தெளிவாக உருவாக்கினார்கள். உலகின் எல்லா பாகங்களிலும் இது நடந்ததுதான் என்றாலும் கூட கீரீசில் அளவுக்கதிகமாக நடந்தது. மற்றொரு புறத்திலோ கிரேக்க ஆண்கள் நாளொரு கண்டுபிடிப்பும் பொழுதொரு ஆராய்ச்சியுமாக விஞ்ஞானம் முதல் தத்துவம் வரை எல்லாத் துறைகளிலும் தங்கள் அறிவை பெருக்கிக் கொண்டே போயினர்.

விளைவு - முட்டாளாய் மண்ணாங்கட்டிகளாயிருந்த பெண்களுடன் காதல் செய்ய கிரேக்க ஆண்களால் முடியவில்லை. எனவே ஆண்களுக்குள் ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சாக்ரடீஸ், ப்ளேட்டோ , அரிஸ்டாட்டில், ஸெனோஃபோன், க்ரைசிப்பஸ், க்ளியாந்தஸ், ஜீயன், அலெக்ஸாண்டர் மாதிரியான தத்துவ ஞானிகளும் மன்னர்களும் இவ்வகையில் ஆண்களோடே காதல் கொள்ள ஆரம்பித்தனர் - அதாவது வம்ச விருத்திக்காக மட்டுமே பெண்களோடு கூடுதல். மற்றபடி காதலெல்லாம் ஆண்களுக்குள்ளேயே. காதலற்ற கூடல் என்பது ஒரு காமுகனுக்கு வேண்டுமானால் இன்பமளிப்பதாய் இருக்கலாம். ஆனால் ஒரு சாதாரண மனித பிறவிக்கு ஆண் ஆயினும் சரி பெண் ஆயினும் சரி அது ஒரு தண்டனையே. எனவே குழந்தைக்காக கூட அவர்களால் பெண்களோடு கூட முடியாது போயிற்று. விளைவு - ஆண்கள் பெண்களை தவிர்க்க ஆரம்பித்தார்கள். மனித இனத்தின் எண்ணிக்கை சரிய தொடங்கியது. பிறகு மீண்டும் பெண்களுக்கும் அறிவு தேவையென சமூகம் உணர ஆரம்பித்தது. எனவே பெண்கள் காதல் ஒருவனை கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தால் மட்டுமே இல்லறம் நல்லறமாயிருக்கும். அதற்கு அவளுக்கும் சுய சிந்தனையும் அறிவுத் தெளிவுமிருத்தல் வேண்டும். ஒன்றுமே தெரியாத ஒருவர் மேல் பரிதாபம்தான் வரும். காதலா வரும்?

//ஏசி தியேட்டர்களில் சாப்பிட்டு விட்டு, பாதியில் சினிமா தியேட்டரின் ஏசியை நிறுத்திவிட்டான் என்ற "கோட்"களுடன் இருக்கும் விமர்சனங்களை விடவும், "காசு கொடுத்தேன் ஏன்யா ஏசியை பாதி நிறுத்தின" என்று கேட்கப்படும் கேள்விகளால் சமுதாயம் திருந்தலாம்.// சமூக சீர்திருத்தத்துக்கு உங்களுக்கான வழி அது. என் வரையில் இரவு 10 மணிக்கு தியேட்டர் நிர்வாகியிடம் போய் கத்தினால் என்ன பலனிருக்கும் என்று தெரியும். கஸ்டமர் சர்வீஸ் என்கிற பதத்திற்கான சரியான பொருளே தெரியாத நம் சமூகத்தில் இதை கையாளும் முறை வேறு - காசு அதிகம் கொடுத்தாலும் இப்படி ஒரு போதும் நடக்காது என்கிற உத்ரவாதமுள்ள தியேட்டர்களுக்கு மட்டுமே(உதா: சத்யம்) போவது என்று முடிவெடுப்பது அதில் ஒன்று. அதைத் தான் நான் வழக்கமாய் செய்வது. ஒரு வேளை ஒரு சிலருக்கு நிர்வாகியிடம் வாக்குவாதம் செய்வது போன்ற அதீத ஆ.கோ வகை வெளிப்பாடுகள் தேவையாக இருக்கலாம். அது அருகில் அமரும் பிகர்களின் கவனத்தை கவர்வது போன்ற சில்லறை சில்மிஷங்களுக்கு ஆதாயகரமானது என்பதால் கூட இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்திற்கும் அதுதான் வழி என்று ஆகி விடுமா என்ன?

கடைசியாக ஒரு விஷயம் - எழுத்துக்குப் பின்னால் "பெண்குலங்களை" மதிக்கும் கள்ளமில்லா வெள்ளை மனது தனக்கு இருப்பதாக சொல்லிக்கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்து படம் பார்க்கும் பெண்களை பிகராக மட்டுமே பார்க்க முடிகிறவர்களும், தன்னை நாத்திகவாதி என்று அறிவித்துக்கொண்டே வைகுண்ட ஏகாதேசிக்கு இரவோடிரவாக பஸ் பிடித்து போய் அங்கேயும் அய்யராத்து அகிலாண்டேஸ்வரிகள் கிடைப்பார்களா என்று தேடுபவர்களும் எல்லாம் பெண்ணுரிமைக்கான அரசியல் தீர்வை பற்றி பேசும் வரையில் பாடல்களில் தொப்புளை காட்டிவிட்டு உரையாடல் காட்சிகளில் தழைய தழைய புடவை கட்டிய ஜவுளிக்கடை பொம்மைகளே நம்ம தலைவரின் ஆஸ்தான நாயகிகளாய் இருப்பார்கள். வாழ்க தமிழ் சினிமா! வளர்க சூப்பர் ஸ்டார் புகழ்!

Tuesday, July 03, 2007

முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்

நேத்திலேர்ந்து மனசு ஆறவேயில்லைங்க. அதொன்னுமில்லைங்க. சிவாஜி படத்துக்கு போயிருந்தேன். படமெல்லாம் நல்லாத்தான் இருந்தது - தலைவர் இருக்கறப்போ லாஜிக்கை பத்தியோ இன்டர்வெல்லுக்கப்புறம் தியேட்டர்காரங்க நிறுத்தின ஏ.சி பத்தியோவெல்லாம் யாருங்க கவலைப்படப் போறாங்க? அதுனால படம் ரொம்பவே நல்லா இருந்ததுச்சுங்க. ஆனா அதுல ஒரு அக்கிரமம் பாருங்க, அதை படம் பாத்து கதை சொன்ன யாருமே கவனிக்கலைன்னு தோணிச்சுங்க. அதை தமிழ்கூறு வலையுலகுக்கு தெரிவிக்கவே இந்த பதிவு.

முதல்ல அப்பாவியா நேர்வழில முயற்சி செஞ்சு தோத்து பிறகு திரும்ப யதார்த்தத்தை புரிஞ்சுகிட்டு எல்லாருக்கும் வரிசைக்கிரமமா மால் வெட்டி எல்லாத்தையும் கட்டி முடிக்கற நேரத்துல சுமன் அவர் முதுகுல குத்தி நடு ரோட்டுக்கு கொண்டு வரும்போது கூட எனக்கு அவ்ளோ ஃபீல் ஆகலைங்க. ஏன்னா நாமதான் இன்டர்வெல்லுக்கு முன்னாடி தலைவர் நடுரோட்டுக்கு வந்த படங்கள் நிறைய பாத்திருக்கோமே, அதும்படி பாத்தா ஒரே பாட்டுல தலைவர் மறுபடி வாழ்க்கைன்ற கன்வேயர் பெல்ட்டுல ஏஏஏ...ஏறிகிட்டே போவாரே... அதான் நமக்கு தெரியுமேன்னு மனசை தேத்திகிட்டு உக்காந்து பாக்க ஆரம்பிச்சேன்.

எதிர்பார்த்தாற்ப் போலவே தலைவரும் சிங்க நடை போட்டு ஜெயிச்சுட்டாரு. அப்பாடான்னு மூச்சு விடப்பாத்தா, அது வரைக்கும் கட்டியிருக்கற தாவணி எப்ப கீழ விழுமோன்னே கவலைபட வச்சிகிட்டிருந்த தமிழ்ச்செல்வி அண்ணி திடீர்னு ஒரு குண்டை தூக்கி போட்டாங்க பாருங்க... அவர் ட்ரைவின் தியேட்டரில் உக்கார வச்சு மடிக்கணிணிய காமிச்சு மாங்கு மாங்குனு தான் பண்ணியிருக்கற சாதனைகளை எல்லாம் விளக்கினதுலேயே, சட்டரீதியா தலைவர் மாட்டிக்க வழியே இல்லைன்னு புரிஞ்சிருக்கணும். அதுக்கப்புறம் ஒரு சூப்பர் கார் ஃபைட்டைப் போட்டு கிங்காங்கோட வாய் வழியா அவங்களை காப்பாத்தி கூட்டி வந்தப்பவே அவரை யாரும் எதுவும் பண்ண முடியாதாக்கும்ன்றதையும் அவங்க புரிஞ்சிருக்கணும். அதெல்லாம் புரியற அளவுக்கு அவங்களுக்கு எங்க மூளையிருக்கு?

அவங்கதான் ஏற்கனவே அந்த மச்சநாக்குக்கார ஜோசியரோட கப்ஸாக்களால கல்யாணமே வேண்டாம்னு சொன்னவங்களாச்சே... தலைவர் ரொம்ப கஷ்டப்பட்டு அவங்களோட மூடநம்பிக்கைய ஒரளவுக்கு போக்கி கல்யா... ச்சீ. வாய் தடுமாறுது பாருங்க, அந்த அப்பாவித் தமிழ்ப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கறார். இருந்தாலும் அந்த மூடநம்பிக்கைய விடாம திருநள்ளாறு போய் தோஷபரிகாரங்கள் செய்யறாங்க...நல்லா கவனிச்சு பாத்துகுங்க மகாஜனங்களே, எங்க பகுத்தறிவு சிங்கம் போகலியாக்கும்... அந்த அம்மாவும் அவங்களோட பெத்தவங்களும் மட்டுந்தான் போயி இதெல்லாம் பண்றாங்க. பின்ன, தலைவர் கல்யாணமே தமிழ் முறைப்படி கட்டினவராச்சே(நான் திருப்பதில நடந்த அவரோட நிஜக்கல்யாணத்தை சொல்லலீங்க... படத்துல பாப்பைய்யா தலைமைல நடந்த கல்யாணத்தைச் சொல்றேன்...) அவரு எப்படிங்க இந்த மாதிரி முட்டாள்த்தனமான விஷயத்தையெல்லாம் செய்வாரு?? ஆனா நம்ம அண்ணிக்கு அவ்ளோ பத்தாது பாருங்க, அதுனால அவங்க இதையெல்லாம் செய்யுறாங்க.

இதை மட்டுமா, அதுக்கப்புறம் சி.பி.ஐ ஆபீஸருங்க ஆபீஸ் ரூம்ல (இது தலைவரோட ஆபிஸ் ரூம் மாதிரி இல்லைங்க, கோவில் தேவஸ்தானத்தின் ஆபிஸ் ரூம்தான். அதுனால No third degree treatment. எனவே அண்ணியோட பொன்னான உடம்பு எதும் புண்ணாயிருக்குமோனோ இல்லை அதை விட முக்கியமா அவங்க கற்புக்கு ஏதும் பங்கம் வந்திருக்குமோன்னோ நீங்க யாரும் பயப்படத் தேவையில்லை.) கூப்பிட்டு மிரட்டினதும் அதை நம்பி தலைவரோட மடிக்கணிணிய ஒரு சாக்குப் பைல வச்சு எடுத்துக்கிட்டு போய் சி.பி.ஐ ஆபிசர்கிட்ட கொடுத்துடறாங்க. அதும் அவர்கிட்ட தலைவரோட உயிருக்கு ஆபத்து வராதுன்னு சத்தியம் வாங்கிகிட்டு... எவ்ளோ முட்டாளா இல்லையில்லை அப்பாவியா இருக்கு பாருங்க நம்ம அண்ணி... இதுனால போலீஸ்கிட்ட மாட்டுற தலைவர், போலீஸ் கஸ்டடியில் சாவு வரை போய் மீண்டு வர்ரார்...

எனக்கு என்னான்னா, அண்ணிங்களையும் இனி படங்களில் கொஞ்சமே கொஞ்சம் மூளையுள்ளவர்களாக காண்பித்தால் தலைவருக்கு வரும் இந்த எக்ஸ்ட்ரா பிரச்சனைகள் இருந்திருக்காதில்லையா? படமும் இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே முடிஞ்சுடுமில்லையா? இந்த படம்தான் என்றில்லை, எண்ணிறந்த பல படங்களில் அற்புத ஹீரோக்கள் கூட அழகுச்சிலைகளாகவும் அறிவற்றவர்களாகவுமிருக்கும் ஹீரோயின்களால்தான் கடைசியில் மாட்டிக்கொள்வார்கள். அதை தவிர்க்கவாவது கொஞ்சம் அறிவுள்ள ஹீரோயின்களாய் காண்பிக்கலாமே...