சமீபத்தில் பாரதி - என் தந்தை என்ற நூல் கண்ணில் பட்டது. இந்நூல் பாரதியின் இரண்டாவது மகளான் சகுந்தலா எழுதியது. வெகுகாலம் முன்னரே படித்த புத்தகம் என்றாலும் அப்போது ஏதும் பதிவிட முடியவில்லை. எனவே இப்போது அந்நூலையொட்டி எழுந்த என் சிந்தனைகளை அவரது பிறந்த நாளான இன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பாரதியின் இரு புதல்விகளில் மூத்தவரான தங்கம்மா பாரதி, தன் தந்தையோடு அதிக நாட்கள் வசிக்கும் பேறு பெறவில்லை. காசியில் வசித்த அவரது பெரிய தாயார்(செல்லம்மா பாரதியின் சகோதரி) பார்வதியிடமே அவர் அதிக நாட்கள் வளர்ந்தார். அவரை வளர்த்த பெரிய தாயாரின் நிர்பந்தத்தின் பேரில்தான் தங்கம்மாவுக்கு பால்ய விவாகம் நடத்தும் நிலைக்கும் பாரதி ஆளானார் என்பது இந்நூலில் இருந்து தெரிகிறது.
எனவே சிறுவயதிலிருந்து பாரதியிடம் பழகி, அவரது பாட்டுக்களையும் கதைகளையும் கேட்டு வளரும், அவரிடமே நேரிடையாக கல்வி பயிலும் வாய்ப்பும் பெற்றவர் சகுந்தலா மட்டுமே. அவரது எழுத்தின் வழி பாரதியை காண்பதன் மூலம் எவ்வளவோ புது விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
முதலும், முக்கியமானதும் ஆன ஒரு பெரிய உண்மை - நாம் இதுவரை பெரும்பான்மையான புத்தகங்களில் படித்தது போல அவர் திருவல்லிக்கேணி கோவில் யானை தாக்கி உயிரிழக்கவில்லை. யானை தன் கால்களுக்கு இடையில் கருங்கல் தரையில் வீசிய போதும், மண்டையில் நல்ல அடிபட்ட போதும் தனது கனமான தலைப்பாகையினால் அவர் மரணத்திலிருந்து தப்பியிருக்கிறார். (வாகனம் ஓட்டாமலேயே ஹெல்மெட்டால் உயிர் தப்பியவர்னு இவரைச் சொல்லலாமோ? ;) ). யானையிடமிருந்து தன் அன்புக்குரிய சீடன் குவளைக்கண்ணனால் காப்பாற்றப்பட்டு, அதன் பின் சில காலம் சென்று வயிற்றுக் கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் மருந்துகளை உட்கொள்ள மறுத்து பின் இறந்திருக்கிறார்.
குழந்தையை சமாளிக்கத் தெரியாமல் திண்டாடுவது, ஒரு ஆட்டுக்குட்டியை கசாப்பு கடைக்காரனிடமிருந்து பணம் கொடுத்து மீட்டு பின் அதை பராமரிக்கத் தெரியாமல் திண்டாடுவது(ராதா என்று பெயரிடப் பட்ட அந்த குட்டிக்காக தலைவர் தனியா பாட்டெல்லாம் எழுதினாராம், என்னே அதிர்ஷ்டம் பெற்ற ஆட்டுக்குட்டி இல்ல?) என நாம் அறிந்திருக்க முடியாத பாரதியின் எளிய உருவத்தை வெளிக் கொணர்கிறது இந்நூல்.
பாரதியின் சுற்றத்தார் அனைவருக்கும் சிஐடி காவல் உண்டு. ஆரம்பத்தில் புதுவையிலிருந்து தன் தாய் வீடான கடையத்திற்கு செல்லமாள் பாரதி குழந்தையோடு பயணிக்கையில் தன் சிஷ்யர்கள் யாரையேனும் துணைக்கனுப்புவாராம் பாரதி. பின்னர் எப்படியும் ஒரு போலீஸ்காரர் பின்னோடு போகப் போகிறார் என்கிற தைரியத்தில் தனியாகவே பயணிக்கத் துவங்கினாராம் செல்லம்மாள். அப்படி பின்தொடர்ந்த ஒரு போலீஸ்காரரே சமயத்தில் அவருக்கும் குழந்தைக்கும் உதவிய கதையும், செல்லம்மாளின் தாயாரை பின் தொடர்ந்த போலீஸ்காரர் அப்பாட்டியுடன் அம்மாவாசைக்கு பாபநாசம் பாணதீர்த்தத்திற்கு சென்று புண்ணியம் கட்டிக் கொண்டதையும் படிக்கையில் காவல்துறையினரின் நிலமை இன்றும் அன்றும் ஒன்றாகவே இருப்பதை உணர முடிகிறது.
பொன்னு முருகேசம் பிள்ளை, அவரது மனைவியான பாரதியால் அண்ணியம்மா என்று அழைக்கப்பட்ட அம்மையார், குவளைக் கண்ணன், அம்மாக்கண்ணு என்ற மூதாட்டி என அவரது புதுவை வாழ்வில் அவரோடு நெருங்கி வாழ்ந்து அவரைக் கொண்டாடி, அவரது விரக்தியை கொஞ்சமேனும் தணித்த மனிதர்களை பற்றியும் இந்நூலில் விரிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
சிந்து நதியின் மிசை நிலவினிலே எனும் பாட்டில் ஏன் சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைக்க வேண்டும் என்ற சகுந்தலாவின் கேள்விக்கு பாரதியின் பதில் இது:
”பாப்பா, தமிழ்ப்பாட்டும் பாடலாம்; ஹிந்துஸ்தானியிலும் பாடலாம். பெரிய பெரிய மகத்தான கவிகள் நம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பாடுதற்குரிய முறையில் பாடலை இசையுடன் அமைத்து அதை சுவையுடன் பாடக்கூடிய சங்கீத வித்வான்கள் நம் தமிழுலகில் அதிகம் இல்லை. சங்கீதத்தில் தெலுகு என்றும், உருது என்றும் வேற்றுமை கிடையாது. ஆங்கிலேயர் தேசாபிமானம் முற்றியவர்கள்; பாஷாபிமானத்திலும் கரை கடந்தவர்கள். ஆனால், சங்கீதத்தில் ஜெர்மன் சங்கீதமும், இத்தாலிய சங்கீதமும் உயர்ந்ததென்பதை மறுப்பதில்லை. தவிர வடதேசத்தில் உள்ள அழகிய சிந்து நதியின் மீது, தென் தேசத்திலுள்ள அழகிய சேரநாட்டு பெண்களுடன் தமிழ் நாட்டினர்களாகிய நாம் சங்கீதத்துக்குகந்த அழகிய மொழியான தெலுங்கில் பாடி மகிழ்வோம் என்ற கருத்து நம் இந்திய தேசம் முழுவதையும் ஒன்றாக்கும் நோக்கத்தில்தான்;” என்றார். மேலும், சங்கீதத்துக்கு பாஷை இன்பம் உண்டேயல்லாது, பாஷைக் கட்டுப்பாடு கிடையாது. எந்த பாஷையில் பாடினாலும் அதன் அர்த்த பாவம் மாறாது பாட வேண்டும் என்பதே அவர் அபிப்ராயம்.
மேலும் அவருக்கு சங்கீதத்தில் இருந்த ஆர்வத்தையும், அவர் அதை கற்க எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் கூட இந்நூலில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
கடையம் வந்தபின் சகுந்தலாவுக்கு கல்வி கற்பிக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பெண் கல்வி பற்றியும், பெண் விடுதலை பற்றியும் வெறும் ஒப்புக்காக பாடியவர் அல்ல என்று நிறுவுகின்றன. மேலும் பெண்ணியம் பேசும் ஆண்களில் பலர் இன்றும் கூட அதை தன் வீட்டுப் பெண்களுக்கானது அல்ல என்றே நினைக்கின்றனர். அப்படியில்லாமல் கணவனுக்கு பின்னால் பத்தடி தள்ளி நடக்க வேண்டிய மனைவியை கைபிடித்து நடத்தி செல்வதில் இருந்து ஆரம்பித்து, ஒரு குக்கிராமமான கடையத்தில் பெண் குழந்தையை ஆண்கள் படிக்கும் பள்ளிக்கு அனுப்பி கல்வி பெற செய்தது வரை பல விஷயங்களில் சொந்த வாழ்வில் தான் கொண்ட கொள்கையை நடைமுறைப் படுத்திப் பார்த்தவர் பாரதி என்பதை இந்நூல் பறை சாற்றுகிறது.
கடையத்திலிருக்கையில் மற்ற ஜாதியினருடன் சமபந்தி போஜனம் செய்யப் போய் ஜாதிப்பிரஷ்டம் செய்யப்பட்ட பின் அவர் சென்னைக்கு நகர்கிறார்.
நூலின் பிற்பகுதி சுரேந்திரநாத் ஆர்யா, நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற பிற சுதந்திர போராளிகளுடன் அவருக்கிருந்த உறவையும், அவரது திருவல்லிக்கேணி வாழ்கையையும் பற்றி விவரிக்கிறது.
ஜமீன்தாரிடம் உதவி கோரியது, பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தது என சில சறுக்கல்கள் அவரது வாழ்வில் உண்டுதான். ஆனால் அதையெல்லாம் வாழ்கை முழுவதும் வறுமையையும், சுயஜாதி மற்றும் சுற்றத்தாரால் தொடர்ந்த விலக்குகளையும், அரசின் அடக்குமுறையையும் மட்டுமே ருசித்து வந்த ஒரு மனிதனின் கதையின் ஒரு கசப்பான பாகமாக பரிவுடன் பார்க்க நம்மால் ஏன் முடிவதில்லை?
மெல்லத் தமிழினி சாகும்
அந்த மேலை மொழிகள் புவிமிசை ஓங்கும்
என்றெந்த பேதையுரைத்தான்?
என்ற வரிகளில் முதல் வரியை மட்டும் படித்துவிட்டு பாரதி தமிழ் அழியும் என்று சொல்லிவிட்டார் என்று குதிப்பார்கள் சிலர்.
நாடுங்கால் ஒரு மனமற்ற செய்கையை
நல்லதோர் மணமாம்
என்று குழம்பிப் போய் செய்து கொள்ளாதே என்று பாடியவனை ஏதோ திருமண வாழ்கையையே எதிர்த்தவன் என்று புரிந்து கொள்ளும், எழுதிச் செல்லும் அரைகுறை புரிதலுடையோரும் நம்மில் உண்டு.
அவனது பகவத் கீதைக்கான முன்னுரையில் சம்சார வாழ்கை ஒருவனுக்கு எவ்வளவு முக்கியமென்பதையும், துறவு என்பதன் உண்மையான பொருளையும் மிகத் தெளிவான உரைநடையிலேயே விளக்கியிருப்பதை காணலாம். மேலும் அவரது கண்ணன் பாட்டில் வரும் கண்ணம்மா பாடல்கள் தவிர அவரது பல காதல் பாடல்கள் மனைவி செல்லம்மாவையே விளித்து பாடப்பட்டவை - பின்னர் செல்லம்மாவின் சகோதரர் அப்பாசாமியின் தலையீட்டால் அவையும் கண்ணம்மா என்று மாற்றப்பட்டது. இந்த விஷயத்தையும் இந்நூல் தெளிவாகவே பதிவு செய்கிறது.
மனைவியையே காதல் தலைவியாகக் கொண்டு, அவள் மேல் கவிதைகள் பல இயற்ற வேண்டுமென்றா எத்தனை தூரம் அவளை நேசித்திருக்க வேண்டும்? ஆனால் வரிகளுக்கிடையே படித்து, தனக்கு பிடித்த அர்த்ததை மட்டுமே எடுத்துக் கொண்டு குதிப்பவர்களுக்கு யார் இதையெல்லாம் புரிய வைக்க முடியும்?
அதே போல் தன் மூத்த மகள் தங்கம்மாவின் பால்ய விவாகத்தை அவர் கூடிய வரை தவிர்த்ததையும், அதற்காகவே காசியிலிருந்து அப்பெண்ணை வரவழைத்து புதுவையில் தன்னுடன் வைத்துக் கொண்டதையும், செல்லம்மாள் கடையம் செல்லும் ஒவ்வொரு முறையும் தங்கம்மாவை தன்னுடன் தங்க வைத்துக் கொண்டு ஆன வரையிலும் திருமண முயற்சிகளுக்கு தடை போட்டதும், தன் மென்மையான சுபாவம் காரணமாக தங்கம்மாளின் வளர்ப்புத் தாயாரும், தன் மைத்துனியுமான பார்வதிக்கு கொடுத்த ஒரு வாக்குறுதியால் மகளின் திருமணம் தன்னை மீறி நடப்பதை அனுமதிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளானதையும் கூட இந்நூலில் சகுந்தலா பாரதியின் வாக்குமூலத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். அதை விடுத்து, பெண் விடுதலை பற்றி பேசிய பாரதி தன் பெண்ணுக்கு பால்ய விவாகம் செய்து வைத்தது ”ஊருக்குத் தானடி உபதேசம், உனக்கும் எனக்குமில்லை” என்ற சிந்தனையால் ஆனது என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போவது எவ்வளவு சுலபமானது?
இப்படியான தவறான புரிதல்களிலிருந்து வெளிவர வேண்டுமென்ற ஆர்வம் உண்மையிலேயே இருந்தால், பாரதியை அருகிலிருந்து பார்த்தவர்களான வ.ரா, சகுந்தலா பாரதி போன்றோரின் நூல்களை படிப்பது நல்லது. அல்லது பரபரப்புக்காகவோ அல்லது தன் அரைகுறை புரிதலாலோ பாரதியின் வரிகளை திரித்து, அதற்கு தனக்கு பிடித்த சாயத்தை பூசி பார்ப்பேன் என்று அடம் பிடித்தால்... அய்யோ பாவம், உங்களை அந்த தீரமிகு புலவனின் ஆத்மா மன்னிப்பதாக...
Showing posts with label பாரதி. Show all posts
Showing posts with label பாரதி. Show all posts
Thursday, December 10, 2009
Subscribe to:
Posts (Atom)