Friday, July 20, 2007

இன்னமும் இருக்கிறதா பத்திரிக்கை தர்மம்????

இந்த வார ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை - தலைப்பு "பச்சைக் காய்கறி பயங்கரம்".

அந்த கட்டுரை விரிகிறது இப்படி.

சரசரவென்று வளர்ந்து லாபங்களைக் குவிக்கத் தொடங்கிய சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றின் உரிமையாளர் அவர். அன்பான மனைவி, பாசமான இரண்டு குழந்தைகள் என குதூகலமான குடும்பம். வாழ்க்கை அமைதியாகவும் அழகாகவும் சென்றுகொண்டிருந்த வேளையில், ஜூன் மாத சனிக்கிழமை ஒன்றில், அவருக்குத் திடீர் என வலிப்பு நோய் கண்டது. தொட்டுவிடும்தூரத் தில் மரண வாசலுக்கே போய்விட்டவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை அளித்துப் பத்திரமாக மீட்டெடுக்கும்படி ஆயிற்று!

வலிப்பு காரணமாக முது கெலும்பில் ஏழு இடங்களில் விரிசல்கள்! குறைசொல்ல முடியாத ஆரோக்கியத்துடன் இருந்தவரின் திடீர் வலிப்புக்கான காரணம் புரிபடவில்லை! அதிகாலை வாக்கிங் முதல் ஆழமான உறக்கம் வரை கச்சிதமாக இருந்த அவரது லைஃப் ஸ்டைலை ஆராய்ந்த மருத்து வர்கள், கடைசியாகச்சொன்னது... “நீங்கள் என்றைக்கோ சாப்பிட்ட பச்சைக் காய்கறி தான் உங்களுடைய இந்த நிலைமைக்குக் காரணம்!”

இதற்கு பின் பாதிக்கப் பட்டவரது பேட்டி - அதன் சாராம்சமும் கிட்டத்தட்ட இப்படித்தான். அவர் முடிக்கையில் இப்படி சொல்கிறார்.

"இனிமேல் காய்கறிகளைச் சாப்பிடுறப்போ ரொம்ப உஷாரா இருக்கணும். எந்தக் காய்கறியையும் பச்சையா சாப்பிடவே கூடாது. வேகவெச்சுதான் சாப்பிடணும். இல்லேன்னா, தோலை சுத்தமா சீவிட்டுச் சாப்பிடணும்னு சொல்லியிருக்காங்க. மெத்த படிச்சவன் நான். ஆனா, இந்த சாஃப்ட்வேர் ஆசாமியின் கவனக்குறைவால் வைரஸ் புகுந்து ஆட்டிவெச்சிடுச்சு!" என்று சொல்லி முடித்தார்.

கொஞ்சம் மேலோட்டமாக படிக்கும் வழக்கம் உள்ள ஒருவர் இத்தோடு இக்கட்டுரையை இந்த இடத்தோடு நிறுத்தி விட்டாரானால் என்ன ஆகும்? அவர் பச்சை காய்கறிகளை சேர்ப்பதே ஏதோ ரொம்ப அபாயமான விஷயம் என்று கருதிவிடுவார். சரி, உண்மையில் பச்சை காய்கறிகள் பயங்கரமானவையா? இந்த கட்டுரை முடியுமிடத்தில்தான் உண்மை வெளிவருகிறது.

இவருக்குச் சிகிச்சை அளித்த, அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் யோகராஜிடம் விளக்கமாகக் கேட்டோம்.

"நாடாப் புழு முட்டைகள் (Tae nia solium) மூலமாக வரும் இந்த நோய்க்கு நியூரோ சிஸ்டி செர்கோஸிஸ் (neuro cysti cercosis) என்று பெயர். பன்றிகளும், பன்றிகள் சார்ந்த இடமும்தான் அந்தப் புழுக் களின் இருப்பிடம். பெரும் பாலும் சுத்தமில்லாத பன்றிக் கறியை உண்பதன் மூலம், அந்தப் புழுக்கள் மனித உடலில் ஊடுருவும். முதல் வலிப்பு ஏற்படும் வரை, அப்படியரு புழு நம் உடலில் இருப்பதை உணரவே முடியாது! குறிப்பிட்ட இந்த மனிதரின் கன மான உடம்பு காரணமா, வலிப்பின் அதிர்ச்சி தாங்க முடியாமல் முதுகெலும் பில் விரிசல் விட்டிருக்கு. மற்றபடி, வலிப்பினால் எல்லோருக்குமே முது கெலும்பு பாதிக்கும்னு சொல்ல முடி யாது" என்றவர் தொடர்ந்து...

"இந்த ஒரு கேஸைப் பார்த்து மொத்தமா பயப்படவும் வேண்டாம். பிரச்னை பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுவதால் இல்லை. அவற்றை கவனமாகப் பார்த்து சுத்தப்படுத் தாமல், தோல் நீக்காமல் சாப்பிடுவது தான் பிரச்னையே! பன்றியின் கழிவுகளில் புரண்ட நாய், மாடு போன்ற கால்நடைகள் காய்கறித் தோட் டத்தில் மேயும்போது, அவற்றின் உடம்பிலிருந்து காய்கறிகளின் மேல்தோலில் நாடாப் புழுக்களின் முட்டைகள் ஒட்டிக்கொள்ள வாய்ப் பிருக்கிறது. எனவே, காய்கறிகளை நன்றாகக் கழுவிய பிறகும் 30 நொடி களாவது வெந்நீரில் வேகவைத்து சமைத்துச் சாப்பிடுவதுதான் நல்லது. திரும்பவும் சொல்றேன்... இந்த ஒரு உதாரணத்தைப் பார்த்து ஒரேயடியாக பயந்து போய்விட வேண்டாம்" என்கிறார் டாக்டர் யோகராஜ்.

ஆகவே, பச்சைக் காய்கறி பிரியர்களே... அலற வேண்டாம். ஆனா, கொஞ்சம் அலர்ட்டா இருக்கலாமே!

பேட்டி கொடுத்த மருத்துவர் தெளிவா ஒரு முறைக்கு இரு முறை அழுத்திச் சொல்லியிருக்கிறார் - இந்த ஒரு கேசை பாத்து பயந்துடாதீங்கன்னு. பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவதில்லை ப்ரச்சனை - அதை சரியா சுத்தம் செய்யாம சாப்பிடுவதுதான் பிரச்சனை. சரியா சுத்தம் செய்ய நேரமிருக்காதுன்னு நினைக்கறவங்க நேரடியா வேகவைத்தே சாப்பிடுங்க. இதுதான் அவர் சொல்ல வரும் கருத்து. கட்டுரையும் இதைச் சொல்லவே எழுத்தப் பட்டது. நல்ல விஷயம்தான். அவசியம் மக்களைச் சென்றடைய வேண்டியதுதான். காசு கொடுத்து வாங்கும் மக்களுக்கு ஒரு வெகுஜன பத்திரிக்கை செய்ய வேண்டிய கைம்மாறுதான் இது. மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் சொல்லியிருக்கும் தொனியைப் பாருங்கள்.

சரி, பத்திரிக்கைகளின் செய்தி தலைப்பு என்பது கவர்ச்சிகரமாக அதிர்ச்சியூட்டி வாசகனை செய்தியை நோக்கி இழுப்பதாக இருக்க வேண்டுமென்பதெல்லாம் சரிதான். எந்தெந்த விஷயங்களில் இந்த டெக்னிக்கை பயன்படுத்தி பார்ப்பது என்றில்லையா? அரசியல் அல்லது சினிமா சம்பந்தப் பட்ட விஷயங்களில் இப்படியெல்லாம் போட்டால் ஒன்றும் தப்பில்லை. மேலோட்டமாக பார்த்து யார் எப்படி புரிந்து கொண்டுவிட்டாலும் ஒன்றும் குடி முழுகிவிடப்போவதில்லை. ஆனால் படிப்பவரது உடல் நலம் சம்பந்தப் பட்ட ஒரு கட்டுரை, அவர்களுக்கு விழிப்புணர்வூட்ட எடுத்துக் கொண்ட விஷயமே தவறான புரிதலை விதைத்துவிடும் சாத்தியமுள்ளதை உணராதவர்களா இந்த பத்திரிக்கை கனவான்கள்?? உடனே படிக்கிறவந்தானே முழுசா படிச்சு விஷயத்தை தெரிஞ்சுக்கணும் அப்படின்னு எனக்கு வந்து உபதேசம் பண்ணப்போற அறிவு ஜீவிகளே, நம்ம சமூகமொன்னும் ரொம்பவே அறிவுபூர்வமான சமூகமாயிடலை இன்னமும். அதுலயும் விகடனையோ இல்லை குமுதத்தையோ வாங்குறவங்க பெரும்பாலும் அரசியல்/சினிமா துணுக்குகளையும் ஜோக்குகளையும் குறிவச்சு வாங்குவதுதான் அதிகமா இருக்கும். அது போன்ற முக்கியமான விஷயங்களை படிச்சு முடிச்சப்புறம் அப்படியே கொடுத்த காசுக்கு இந்த அட்டைலேர்ந்து அந்த அட்டை வரை ஒரு புரட்டு புரட்டுவாங்க. அப்போ அவங்க கண்ணுல இந்த தலைப்பு பட்டுத் தொலைச்சா என்ன ஆகும்? உடம்புக்கு நல்லதுன்னு அன்னிக்கு வரை எப்பவாச்சுமாவது செஞ்சுகிட்டிருந்த ஒரு நல்ல விஷயத்தையும் நிறுத்தி தொலைப்பாங்க. இதுதானா பத்திரிக்கை தர்மம்? ஒரளவு நல்ல பெயருடைய(அல்லது நிறைய பேர் இன்னமும் அப்படி நம்பிகிட்டிருக்கற) ஒரு பத்திரிக்கையே இப்படி நடந்துக்கிட்டா, அப்புறம் வேறென்னத்தை சொல்றது போங்க...

பி.கு: நுனிப்புல் மேய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கைன்னுதான் தலைப்பு வைக்க நினைச்சேன். அப்புறம் தலைப்பை மட்டும் பாத்துட்டு நம்ம உஷாக்காவோட வாசகர்கள் டென்ஷனாயிடப் போறாங்களேன்னுதான் மாத்திட்டேன். :)

32 comments:

said...

ஆழ்ந்த சமூக அக்கறை தெறிக்கிறது இந்த பதிவில்...

விகடன் வியாபாரத்துக்காக சமரசம் செய்துகொண்டு நாளாச்சு...

திடீர் என்று விழித்துக்கொண்டமாதிரி இருக்கு நீங்கள் ?

ஏதாவது ஒரு கவர்ச்சிப்படத்தை போட்டு ஆண்களை கவரவேண்டும்...

சீரியலை நோக்கி திரும்பி புத்தகத்தை தூக்கிப்போட்டுவிட்ட பெண்களை மீண்டும் இழுக்கவேண்டும்...

அவங்களுக்கு எவ்ளோ வேலை இருக்கு ?

ரிட்டையர்டு ஆனவங்கள்ளாம் செத்துப்போயிட்டா அப்பொறம் இந்த காசு வியாபாரிகளின் கொட்டம் தானா அடங்கிரும்...

said...

திடீரென்ற விழிப்பில்லை ரவி இது. இதிலுமா உங்க வியாபார உத்தி என்கிற ஆதங்கம்.
//ஏதாவது ஒரு கவர்ச்சிப்படத்தை போட்டு ஆண்களை கவரவேண்டும்...
சீரியலை நோக்கி திரும்பி புத்தகத்தை தூக்கிப்போட்டுவிட்ட பெண்களை மீண்டும் இழுக்கவேண்டும்//
இதையெல்லாம் செய்யட்டும் வேணாங்கலை. ஆனா உடல்நலம், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்ற முக்கிய விஷயங்களிலாவது கொஞ்சம் அக்கறை காண்பிக்கலாம். உதவி செய்யலைன்னாலும் உபத்திரவமாவது செய்யாதிருக்கலாமில்லையா இவங்க? அதைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன் இந்த பதிவில்.

said...

லஷ்மி,

ப வுக்கு ப நு ஒரு ரைமிங்க்கு "பச்சை காய்கறி பயங்கரம்" அப்படி போட்டு இருப்பாங்க , பூச்சி புழு வருதோ இல்லையோ ஆனால் இந்த காலத்தில் பூச்சுமருந்து அடிச்ச காய்கறிய பச்சையா சாப்பிடாம இருப்பது தான் நல்லது, ரெசிடுவல் பெஸ்டிசைட் என்று ஓரளவு காய்கறிகளில் மேலே மற்றும் உள்ளே ஒட்டிக்கொண்டு வரும் பூச்சிமருந்து சமைக்கும் போது தான் அழியும் , பச்சையாக சாப்பிட்டால் கேன்சர், நரம்பு கோளாறு என சில உபாதைகள் வரலாம்.பால் ,சிக்கனில் கூட இத்தகைய விளைவுகள் உண்டு.நிறைய ஹார்மோன்கள் பயன்படுத்துகிறார்கள்.

இயற்கை விவசாயம் , அல்லது வீட்டு தோட்டத்தில் போட்ட காய்கறி எனில் சுத்தம் செய்தால் மட்டும் போதும்.

"" என்ற நூல் கூட நம்ம இந்திய இயற்கை உணவு முறையை காப்பி அடிச்சு எழுதிய நூல் தான் ,அதைப்படிச்ச நிறைய மேல் நாட்டினர் இயற்கை உணவுக்கு மாறினாங்க.

said...

வாங்க வவ்வால். நிறைய உருப்படியான தகவல்கள் தந்திருக்கீங்க. நன்றி.

said...

என்னமோ போங்க, "நுனிப்புல் மேயாதீங்க" ன்னு தலைப்புப் போட்டிருந்தா, பதிவுப் போட்ட பத்து
நிமிஷத்துல டாப் டென்னுல சேர்ந்து, சர்ன்னு மேலே போயிருக்கும். எனக்கு ஒரு இலவச விளம்பரம்
கிடைச்சா மாதிரி இருந்திருக்கும் :-)

மேட்டருக்கு வரேன், நானும் பச்சை காய்கறிகள், பழங்கள் விரும்பி சாப்பிடுவேன். ஒரு முறை
டூர் அடிக்கும்பொழுது, வயிற்று வலி வந்தது. அப்பொழுது ஒரு மருத்துவர், சாலட் என்று பச்சை
காய்கறிகள், கேரட், வெங்காயம், வெள்ளரிக்கா துண்டுகளை ஒரு போதும் வெளியிடங்களில் சாப்பிடாதீர்கள் என்றார். காரணம் கட்டுரையில் சொன்னதே தான்.
மத்தப்படி பத்திரிக்கை தர்மம், நீதி நியாயம் என்றெல்லாம் உணர்ச்சி வசப்படாதீங்க.

said...

லக்ஷ்மி, நல்ல வார இதழ்கள் இந்தத் தரத்துக்கு வந்து ஒரு ஐந்தாறு வருடங்களாவது இருக்கும்.

இன்னோரு பத்திரிக்கை பற்றிச் சொல்லவே வேண்டாம். திடீர்த் தலைப்புச் செய்திகளே வெகுஜனக் கவர்ச்சிக்கு விருந்தாக அமைகின்றன.

சினிமா மலிந்தது போல பத்திரிகை தர்மமும் அப்படியாகிவிட்டது என்று நினைக்கிறேன்.
இந்த அழகில் வியாபாரம் மட்டுமெ கண்ணாக இருக்கும் தரைமட்டப் பத்திரிகைகளைப் பற்றிச் சொல்ல நமக்கு முகமேது.

said...

உஷா, வல்லி அம்மா - வருகைக்கும் புரிதலுக்கும் ரொம்ப நன்றி.

said...

உங்க தலைப்பு (மேட்டரும்தான் :) சூப்பர்

said...

நன்றி பாலா, வருகைக்கும் பாராட்டுக்கும்.

said...

உஷாக்கா, ஒன்னு சொல்ல மறந்துட்டேன். ஆமா, என்ன விளையாட்டிது?
//எனக்கு ஒரு இலவச விளம்பரம் கிடைச்சா மாதிரி இருந்திருக்கும் //
உங்களுக்கு எங்க பதிவிலேர்ந்து விளம்பரமா? ஏன் இப்படியெல்லாம் எங்களை ஏத்தி விட்டு காமெடி பண்றீங்க?

said...

லக்ஷ்மி, 'பச்சை காய்கறி பயங்கரம்' என்று போடுவதில் தவறில்லையே - உண்மையில் பச்சையாக கழுவாமல் சாப்பிட்டால் பயங்கரம்தான். தலைப்பில் சொல்லாததை உள்ளடக்கத்தில் சொல்லிட்டாங்க இல்லையா? அதனால் பத்திரிக்கை தர்மத்தை குறைச் சொல்லாதீர்கள் நுனிப்புல் மேய்ந்து தவறாக எடுத்துக் கொள்பவர்களை திட்டினால் பொருந்தும்.

நம்ம வலைப்பூவில் பல பேர் தலைப்புக்கும் மேட்டருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமலேயே எழுதுறாங்க. தலைப்பை படித்து வேக வேகமாக கருத்தை படிக்கிறோம் சம்பந்தமேயில்லை என்பது மட்டுமல்லாமல் மொக்கையாக ஒன்றுமே இல்லாத காலி பெருங்காய டப்பாவாகிறது, நேர விரயமென்றும் சொல்லலாம் -அந்த தர்மத்தையும் நியாயத்தையும் எங்க போய் கேட்கிறது? :-)

said...

லஷ்மீ, "புல்"லரிக்க வெச்சிட்டீங்க போங்க :-)

ஜெஸிலா, சில நாட்கள் பதிவுகள் படிக்க ஆரம்பித்துவிட்டாலே, யார் எப்படி எழுதுவார்கள் என்று தெரிந்துவிடும், தொடர்ந்து
ஜல்லி அடித்துக் கொண்டு இருந்தால், என்றாவது கொஞ்சம் ஒழுங்காய் எழுதினால் கூட யாரும் கண்டுக்காம போகும் அபாயம் உண்டு.

said...

முதலில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெசிலா. நிச்சயமா நுனிப்புல் மேய்பவர்கள் மேல் தப்பில்லைன்னு நான் சொல்லலை. ஆனா, நுனிப்புல் மேய்பவர்கள் அதிகமிருக்கற சமூகத்துல விஷயத்தை சொல்லும் தொனிகூட சரியா இருக்கும் படியா பாத்துக்கற பொறுப்பு பத்திரிக்கைகளுக்கு இருக்கில்லையா? இப்ப அந்த மருத்துவரை எடுத்துக்குங்களேன், இந்த ஒரு கேசை வச்சு பயப்படத் தேவையில்லைங்கறதை எதுக்காக அவர் அத்தனை அழுத்தம் கொடுத்து சொல்லணும்? அவருக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சி பத்திரிக்கைக்கு வேண்டாமா? தலைப்பை வேணுமானால் விட்டுடலாம். உள்ளடக்கத்துலயே கூட காய்கறிகளில் பயங்கரம்ன்ற கருத்து எத்தனை முறை அழுத்தந்திருத்தமா சொல்லப் பட்டிருக்குன்னு பாருங்க, அதே சமயம் சரியா கழுவி சாப்பிட்டா பிரச்சனையில்லைன்றது எத்தனை இடத்துல சொல்லப் பட்டிருக்குன்னும் பாருங்க. படம் பூரா காம விகாரங்களை காமிச்சுட்டு க்ளைமாக்ஸில் மெசேஜ் சொல்லும் படங்கள் போலில்லையா இது?

அப்புறம் ஜல்லியடிக்கும் வலைப் பதிவுகள் பத்தின உங்க கவலைக்கு உஷாமேடமே சரியான பதில சொல்லீட்டாங்க.

said...

லக்ஷ்மி,

விகடன் சொல்வது ஓரளவு உண்மை

கோவை பழக்கடைகளில் கிடைத்த திராட்சைகள் பூச்சி மருந்தில் முக்கி எடுக்கப்பட்டிருக்கும். காரணம் கேட்டதற்கு திராட்சையில் பூச்சி தாக்குதல் அதிகம் இருப்பதால் அதை தவிர்க்க திராட்சி தோப்புகளில் ஒவ்வொரு திராட்சை கொத்தையும் பூச்சிகொல்லி மருந்தில் முக்கி எடுப்பதாக சொன்னார்கள். அந்த திராட்சையை சாப்பிட்டால் மக்களுக்கு பல வியாதிகள் வரலாம்.

அதேபோல் மாம்பழங்களை பழுக்க வைக்க கார்பைடு போடுவார்கள். அதனால் கோவை பழக்கடை மாமபழங்களை சாப்பிட்டால் கடும் வயிற்று போக்கு பலருக்கும் வரும்.

கோவையில் கீரைக்கு அதிக டிமாண்ட் இருந்ததால் சாக்கடையாகிவிட்ட உக்கடம் குளக்கரைகளில் கீரையை பயிர் செய்து விற்பார்கள். மாநகராட்சி சிலமுறை அந்த கீரைகளை அழித்தது.ஆனாலும் பயனில்லை.

இப்போதும் அந்த மாதிரி நடக்கிறதா, மற்ற ஊர்களிலும் அந்த மாதிரி நடக்கிறதா என்பது தெரியவில்லை.ஆனால் காய்கறி, பிரபல பழக்கடை/காய்க்கடை என்பதற்காக நாம் அஜாக்கிரதையுடன் இருந்துவிட கூடாது. இதை எல்லாம் பார்க்கும்போது சொந்தமாக வீட்டில் காய்கறி பயிர் செய்துகொள்வதே சிறந்தது என தோன்றுகிறது.

said...

அட.. நல்ல விசயம் சொல்லி இருக்கீங்க.. எப்பவுமே வாசகர் கருத்துக்கு மதிப்பு கொடுக்கும் விகடன் இதையும் கவனிக்கிறாங்களான்னு பார்ப்போம்..

இப்ப வேற போன வார நட்சத்திரம் செல்வேந்திரன், வரிவிளம்பரங்களா பதிவிடும் விகடன் பதிப்பகம், பதிப்பகத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்னு பதிவுகளுக்கு அவங்க வரவு அதிகமா இருக்கே.. இதையும் கண்டுக்குவாங்கன்னு நம்புவோம்..

said...

//பூச்சி மருந்து அடிச்ச....நல்லது.//
இதில் வவ்வால் சொன்னது மிகவும்
அர்த்தமுள்ளது.
இந்தக் காலத்தில்"காய்கறி என்ற பெயரில் கிடைக்கும் எது ஒன்றையும்
வேகவைத்துச் சாப்பிடுதலே நலம்.
அப்பலோ ம்ருத்துவமனை மருத்துவர்,
இப்படிச்சொன்னால், வேறு ஒரு மருத்துவர் வேறு மாதிரி சொல்வார்.
அவர்கள் பேச்சையெல்லாம் அப்படியே
எடுத்துக்கொள்வதில் புண்ணியமில்லை.
--ஆகையால் ஆனந்தவிகடன் அப்படித்
தலைப்பிட்டது தான், மிகவும் பொருத்தமான தலைப்பு.
நீங்கள் தான் 'பத்திரிகை தர்மம்" அப்படி-இப்படியென்று ஊதிப்பெரிது
படுத்திவிட்டீர்கள்.

said...

தலைப்பு அதிருகிறது. இப்போது பத்திரிகைக்குள்ளையே பற்றிக்கொண்டு எரியும் கலாச்சாரம் அல்லவா? ஓரு வாசகர் சொன்னது போல் அழகிய நங்கைகளின் நளினமான புகைப்படங்களை ப்ளோ-அப் ஆகப் போட்டு வாசகர் எண்ணிக்கையை கூட்டும் பத்திரிகைகளின் நடுவில் தர்மமாவது? மண்ணாவது? துட்டு ஒன்று தான் குறிக்கோள்!!

Latest News: http://viewsreviews.wordpress.com/2007/07/15/dinamalar-strikes-back-refuting-alleged-charges-as-false-claims-on-political-moves/

பத்திரிகைகளின் நாகரிகம் குறித்து ஒரு திரைப்படத்தில் 'தேங்காய்' ஸ்ரீனிவாசன் அடித்த காமெடி:

ஓருவர் நிருபர் வேலைக்காக நேர்காணலுக்காக வருகிறார். சேகரித்த சமூக செய்திகளை அவர் காண்பித்த போது அவர் நிராகரிக்கப்பட்டார். அதே வேளையில் இன்னோருவர் வருகிறார் சூப்பர் செய்தியுடன். என்ன தெரியுமா? "குலுக்கு நடிகை புஷ்பா புஷ்பாவதி ஆகிவிட்டார்" என்பது தான்.

said...

பொன்ஸ், செல்வன், ஜீவி, தீபக் - வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

வவ்வால், செல்வன், ஜீவி - நீங்களிருவரும் சொல்வதை நான் மறுக்கவில்லை. ஆனால் இது போன்ற மேலதிக விவரங்கள் எதுவுமின்றி அந்த கட்டுரையை மட்டும் படித்தால் அதன் தலைப்பு பொருத்தமாகவா தெரிகிறது? நாடாப்புழு பிரச்சனையை பற்றி மட்டுமே பேசும் ஒரு கட்டுரை இப்படி ஒரு அபாய அறிவிப்பு தர வேண்டியது ஏன் என்பதுதான் என்னுடைய கேள்வி - அதும் சரியாக சுத்தம் செய்து சாப்பிட்டாலே அந்த பிரச்சனையை சமாளிக்கலாம் எனும் விஷயம் ஹைலைட் செய்யப்படவேயில்லை. நீங்களெல்லோரும் சொல்லும் விஷயங்கள அனைத்தும் ஒப்புக் கொள்ளவேண்டிய விஷயங்களே என்பதில் எனக்கு இரண்டாம் கருத்தில்லை. அதே போல் அந்த கட்டுரையின் நோக்கம் இது போல் காய்கறி உணவிலிருக்கும் ப்ரச்சனைகளின் எல்லா கோணத்தையும் ஆய்ந்து எழுதுவதல்ல என்பதும் நிச்சயம். எங்கோ கிடைத்த ஒரு சிறு பொறியை ஊதிப் பெரிது படுத்தி அதில் ஆதாயம் தேடுதலை அதுவும் ஒரு பரந்த வாசகர் வட்டத்தையுடைய ஒரு பத்திரிக்கை செய்வது கூடாது என்பதுதான் என் கருத்து.

said...

பத்திரிக்கை தர்மம்? அப்படின்னா என்னங்க?

இப்போ வர்ற பல பத்திரிக்கைகளின் அட்டட்யைக் கிழிச்சுட்டுப் பார்த்தா எல்லாமே ஒண்ணுதான்.

நான் புலம்பி இப்போ அடங்கிட்டேன்(-:

said...

சரியா சொன்னீங்க டீச்சர் - எல்லாம் ஒரே குப்பைதான்னு ஆயிகிட்டிருக்கு. இருந்தாலும் படிக்கறதை விட முடியலை. புலம்பறதையும் கூட.. உங்க அளவு பக்குவமெல்லாம் வர எனக்கு இன்னும் கொஞ்ச நாளாகும்...

அப்புறம், செல்வன் - ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.
//இதை எல்லாம் பார்க்கும்போது சொந்தமாக வீட்டில் காய்கறி பயிர் செய்துகொள்வதே சிறந்தது என தோன்றுகிறது.//
எதும் காமெடி கீமெடி பண்ணலையே நீங்க??? :) அவங்க அவங்க அடுக்கு மாடி கட்டிடத்துல கிடைக்கற கையகல பால்கனியில் ரெண்டு ரோஜாச் செடி(சென்னை வெயிலுக்கு இது வாடி வதங்கி பேருக்கு குச்சி குச்சியா நிக்கும்), ஒரு துளசிச் செடி, ஒரு கத்தாழை இதையெல்லாம் வச்சு சந்தோஷப் பட்டுகிட்டிருக்கோம்(இந்த தொட்டிகளில் எல்லாம் இடிச்சுக்காம துணி உணர்த்துவது ஒரு பெரிய சர்க்கஸ் வித்தையாக்கும்). இந்த அழகுல காய்கறி வேற... ஏன் சார் வயத்தெரிச்சலை கிளப்புறீங்க?

said...

இதே பிரச்சனை லியாண்டர் பயசுக்கும் ஏற்பட்டதை மறக்க முடியாது. அவருக்கும் பிரச்சனை காய்கறியால்தானாம். அரைகுறை வேகல் மாடு/பன்றிக் கறியில் இருக்கும் நாடாப்புழு அவரைத் தாக்கியிருக்கிறார். ஆனால் பயசுக்கு அதைச் சாப்பிடும் வழக்கமில்லையாம். பிறகு அவரது சாப்பாட்டு முறையிலிருந்து அது காய்கறிகளைச் சாப்பிடுவதால் வந்தது என்று கண்டுபிடித்தார்கள்.

இந்தியச் சூழலில்...பச்சைக்காய்கறிகளைத் தவிர்ப்பது நல்லது என்றே தோன்றுகிறது. நன்றாகக் கழுவித் தோல் நீக்கிச் சாப்பிடுதல் நலம். கீரை வகைகளை நன்றாகக் கழுவிட வேண்டும். அசைவத்தையும் நன்றாக வேக வைப்பதே நல்லது.

அதெல்லாம் சரி....தருமம் எங்க இருக்கு? பத்திரிக்கைல மட்டும் இருக்க?

said...

வாங்க ஜி.ரா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எல்லாத்துலயும் தர்மம்னு ஒன்னு இல்லாம போயிட்டிருக்குதான். ஆனாலும் ஆசிரியர்களோ, பத்திரிக்கையாளர்களோ ஒரு தப்பு பண்ணும்போது அதோட பாதிப்பின் வீச்சும் அதிகமில்லையா? அதான்..

said...

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்,
சகோதரி!
நமக்குக் கிடைக்கும் காய்கறிகளெல்லாம், 100$ பூச்சிமருந்து அடிக்கப்பட்டவை. இதில்
காலிப்ளவர், பற்றிச் சொல்லவே வேண்டாம். புழுக்களை வெறும்
கண்ணாலாயேப் பார்க்கலாம். கேரடை
எடுத்துக்கொண்டால்,'அப்படியேச் சாப்பிடலாம்' என்று சிலர் துடிப்பர்.
அவைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டுத் தண்ணீர் ஊற்றி காலால்
மிதித்துக் கழுவுவதுதான் வழக்கம்.
கோசுமல்லிக்கு, பச்சையாகவேத்
துருவி எலுமிச்சை பிழிய வேண்டியிருக்கிறது. கீரைகள்? ஆய்ந்து
அனுபவபட்ட உங்களுக்கெல்லாம்,
நான் சொல்லவே வேண்டாம். வெண்டை?..மேலே புள்ளிப்புள்ளியாய்
அரிக்காத, பூச்சிமருந்தால் அபிஷேகம்
பண்ணாதது எங்கே கிடைக்கிறது,
சொல்லுங்கள். கோஸை நீங்கள்
பச்சையாகத் தின்ன முயற்சித்தால்
குடலுக்குக்கேடு. தக்காளி--பச்சையாகத் தின்றால் விதவிதமான
நோய்க்குக் கேந்திரம்.ம்?..வேறு என்ன
காய்கறியைப் பச்சையாகத்திங்கலாம்?.. ஆக, முடிவை உங்களுக்கே விட்டுவிட்டேன். ஒரு ஆலோசனை:
காய்கறிகளை வேகவைக்கும் பொழுது
வாணலியின் மேல்பாகத்தில் ஒரு
தட்டு போட்டு மூடி, ஆவித்தண்ணீர்
வாணலி உள்ளேயே விழுந்துவிடுகிற
மாதிரிச் செய்து, 'ஏதாவது காய்கறிகளில் சத்து என்கிற ஒரு அம்சம் இருந்தால்' அதைத்தக்க
வைத்துக்கொள்ளலாம். அம்புடுத்தான்.
இந்த பத்திரிகைகளை நொந்து என்ன
பயன்?..சினிமாச்செய்திகளுக்கே
அர்ப்பணம் பண்ணிக்கொணட அவை,
இது மாதிரி அத்தி பூத்தமாதரி அவ்வப்போது ஏதாவது எழுதுவதையும்
நிறுத்திக்கொள்ளச்சொல்கிறீர்களா?
சொல்லுங்கள்.
இதில், செந்தழல் ரவிக்கு ரிட்டையர்டு
ஆனவர்களின் மீது என்ன ஆத்திரமோ
தெரியவில்லை. 'செத்துப்போகச்
சொல்லி' பரித்துரைத்திருக்கிறார்.
பாவம், அவர்கள் மேல் இவருக்கென்ன
எரிச்சல் தெரியவில்லை. இவருடைய
அப்பா-அம்மா யாரும் அலுவலக
வேலைக்குப் போகவில்லையோ என்னவோ?.. இல்லை, ஆனந்தவிகடன், குறைந்தபட்சம்
குங்குமத்தைக்கூட புரட்டிப்பார்க்கத்
திராணியில்லாதவர்களா, என்ன?

said...

லஷ்மி(இலட்சுமி),

பத்திரிக்கை தர்மம் என்றால் என்ன (உங்கள் அளவில் ) என்று ஒரு இரண்டு வரி சொல்லிவிட்டு ..அது இருக்கிறதா என்று கேட்டிருக்கலாம்.

பத்திரிக்கை என்று எல்லாவற்றையும் ஒரு குடையின் கீழ் ஜெனராலைஷ் செய்யாமல் வணிகப்பத்திரிக்கை, பொழுது போக்கு பத்திரிக்கை, செய்திப் பத்திரிக்கை, குப்பை பத்திரிக்கை...etc.. என்று பிரித்தால் இந்த "தருமம்" இன்னும் வித்தியாசப்படும்.

முரசொலியின் பத்திரிக்கை தர்மமும் , நமது எம்.ஜி.ஆரின் பத்திரிக்கை தர்மமும் வேவ்வேறானவை. ஆனால் ஒப்பிடக்கூடியது.

ஆனந்தவிகடனையும் குமுதத்தையும் ஒப்பிடலாம். இந்த இரண்டு பத்திரிக்கைகளின் தர்மமும் "யார் விற்பனையில் நெ 1" என்ற ஒரே போட்டிதான். அதில் வெற்றி பெறுவதுதான் இந்த இரண்டு பத்திரிக்கைகளின் தர்மம்.இவர்களின் தர்மத்தில் 2 to 5 % சமூக அக்கறைச் செய்திகள் வரலாம். அவ்வளவே.

***

நாம் சுவாசிக்கும் காற்றில் இல்லாத அசுத்தங்களா...காய்கறிகள்.... அடுத்த கட்டம்.

முழுச் சுற்றுப்புறமுமே பாழ் பட்டுக்கிடக்கிறது இந்த சொரணை கெட்ட சமூகத்தால்.

said...

அப்படியே வலைப்பதிவுக்கு என்று ஏதேனும் "தர்மம்" உள்ளதா என்றும் சொன்னால் நல்லது. :-))

said...

ஜீவி, நான் நிச்சயமா இந்த பூச்சிக் கொல்லி விஷயத்தை ஒத்துக்கறேங்க. அதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இது பத்தின தகவல்கள் எனக்கு அதிகம் தெரியாததால அதை என்னோட பதிவுல குறிப்பிடலை. ஆனா பிரச்சனை என்னான்னா, அந்த குறிபிட்ட கட்டுரைய எழுதினவங்க நீங்களோ, வவ்வாலோ சொன்ன விஷயங்களையெல்லாம் மனசுல வச்சு பெருசா சமூக நன்மைய பத்தியெல்லாம் யோசிச்சொன்னும் இந்த தலைப்பை கொடுக்கலை. அவங்க எழுத எடுத்துகிட்ட நாடாப்புழு விவகாரத்துல பச்சைக் காய்கறி பயங்கரம்னு சொல்லத்தேவையே இல்லை. காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதையா அதுல உங்களின் இந்த பூச்சிக்கொல்லியினால் வரும் பிரச்சனைகளும் சேர்ந்துகொள்ளவே அந்த தலைப்பு சரியானதாவும் அமைஞ்சுட்டது - அவ்ளோதான். அதுனால இப்பவும் நான் அவங்களோட மேலோட்டமான இந்த உத்தியை - எந்த செய்தித் துணுக்கு கிடைச்சாலும் அதை சென்சேஷனல் நியூஸ் ஆக்குவதற்காக போடும் மசாலா மேக்கப்பை நிச்சயமா எதிர்க்கறேன். அதுக்குப் பொருள் நீங்க சொன்ன உண்மைகளை மறுப்பது அல்ல. என் ஆதங்கத்தைப் புரிந்துகொள்வீரகள் என நம்புகிறேன் நண்பரே.

கல்வெட்டு - அந்த 2 - 5% வீதத்தையாவது முழு அக்கறையோட தெளிவா செய்யலாமில்லையா? அதுதான் என் ஆதங்கம்.
அப்புறம் - வலைப்பதிவுகளில் தர்மம்னெல்லாம் ஏன் சார் காமெடி பண்றீங்க? :) ஆனா ஒன்னு, நீங்க பத்திரிக்கைகளுக்கு சொன்ன அதே வகைப்படுத்துதலை இங்கேயும் செய்யலாமில்லையா? உதா: ஜல்லி பதிவுகள், கும்மி பதிவுகள், இசை/பக்தி/சமையல்/அறிவியல் அப்புறம் கொஞ்சம் வேலையத்தவங்க சமூக அக்கறையோடும் எழுதறாங்க. சோ ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கு, இல்லையா?

said...

// அந்த 2 - 5% வீதத்தையாவது முழு அக்கறையோட தெளிவா செய்யலாமில்லையா? //

அது தெளிவாகச் செய்வதற்காக அல்ல.மசாலாவில் அதுவும் ஒரு அங்கம்.கறிவேப்பிலை மாதிரி.அதில் செலவழிக்கும் நேரத்தை அட்டைப்பட அழகியின் மார்புச் சேலை விலகள் போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று சிந்திப்பதில் செலவிட்டால் விற்பனைகூடலாம்.

விகடன் அணுகுமுறைகளில் குறைகள் பல இருந்தாலும்...அவர்களின் "பசுமை விகடன்" ஒரு நல்ல முயற்சி. பார்ப்போம் எப்படி போகிறது என்று.

// ஜல்லி பதிவுகள், கும்மி பதிவுகள், இசை/பக்தி/சமையல்/அறிவியல் அப்புறம் கொஞ்சம் வேலையத்தவங்க சமூக அக்கறையோடும் எழுதறாங்க //
//சோ ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கு, இல்லையா? //

உண்மைதான்.ஒருவருக்கு கும்மியாகத் தெரிவது மற்றவருக்கு அவசியமானதாகப்படலாம்.
தர்மம் (அல்லது கும்மி ) என்பதற்கு பொதுவான ஒரு விதி ஏதும் கிடையாது.எடுத்துக்கொண்ட கருத்தில் இருந்தே பார்க்கவேண்டும்.


***

ஆஜ்தக் - தொலைக்காட்சி கொஞ்சம் வித்தியாசமாக இருகிறார்கள். அவர்களால் பல பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. சும்மா பரபரப்பு மட்டும் இல்லாமல் சமூக அக்கறையுள்ள விசயங்களை அலசுகிறார்கள்.

சமீபத்திய உதாரணம்:

ஒரே பிரேமில் பெண்களின் உரிமை காக்க வந்த ஜனாதிபதி பிரதீபா, உடல் ஊனம் என்பதற்காக மருத்துவ சீட் மறுக்கப்பட்ட பெண், வல்லுறவுக்கு ஆளான அபலை என்று மூன்றையும் காட்டினார்கள்.பிரச்சனைகள் அனைத்தும் மாயவதி என்ற பெண் ஆளும் மாநிலத்தில் இருந்து ....

பல நல்ல விசயங்கள் அந்த தொலைக்காட்சி வழியாக நடக்கிறது.

said...

கல்வெட்டு, நீங்கள் சொல்வதும் சரிதான். சமூக அக்கறை கூட இவங்களுக்கெல்லாம் ஒரு விளம்பரத்துக்குதான். நீங்க சொன்ன பசுமை விகடன், ஆஜ்தக் - ரெண்டையும் கொஞ்சம் கவனிச்சு பாத்துட்டு என்னோட கருத்தைச் சொல்றேன். சுட்டியதற்கு நன்றி.

said...

பத்திரிக்கைகளுடன் இப்பொழுது கிடைப்பது வெறும் இலவசங்கள் தான்.
தர்மத்தை பற்றியோ, மற்றவர்களைப் பற்றியோ அவர்கள் சிந்திப்பது இல்லை. . . .

ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் பத்திரிக்கைகளிடைய கடும் போட்டி நடக்கிறது, யார் மிகவும் கீழ்தரமான பத்திர்க்கை என்று.

நல்ல உபயோகமான தகவல்.

said...

enna aniyayam idhu??? indha maadhiri seidhigal pathirikaila veli aaharadhe aboorvam.andha book a oruthar vilai kuduthu vaanguna avanga ukaandhu full a dhan padipanga.. idhu pol samooga akarai ulla seidhiyai veliyidum bodhum idhu pol kutram sonnal naam yean sollanum.. idhuku cinema news a potutu poidalaam. nalla payanulla seidhi veliyitu yean thitu vaanganum nu ninaika poranga...

said...

மிகவும் தவறான ஒரு பதிவு.
மிகவும் தவறான ஒரு பதிவுத் தலைப்பு.

என் கருத்தில் இப்போது இருக்கும் வெகுஜனப் பத்திரிக்கைகளில் ஒப்பீட்டளவில் அதிகமான நல்ல தகவல்களையும் குறைவான வியாபார சமரசங்களையும் கொண்டது ஆனந்த விகடன் பத்திரிக்கை.

"பச்சைக் காய்கறி பயங்கரம்" என்ற தலைப்பு மிகப் பொருத்தமான தலைப்பு. பச்சைக் காய்கறிகளை உண்பது நல்லது என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், மருத்துவர்களும் அதையே வலியுயுறுத்தும் வேளையில், சரியாக சுத்தம் செய்யப்படாததால் ஏற்பட்ட பயங்கரத்தை சொல்லுகின்ற கட்டுரைக்கு வேறெந்த தலைப்பு மிகப் பொருத்தமாக இருக்கும்?

'சுத்தமே சுகாதாரம்' என்று தலைப்பிட்டால் பச்சைக் காய்கறியுடன் உள்ள தொடர்பு குறிக்கப்படாமல் மொக்கையாக தோன்றுமல்லவா?

பகாப தலைப்பின் அதர்ச்சி மதிப்பீடு சுத்தமாக உண்ணுவதின் அவசியத்தை முழுதாகப் படிப்பவர்களுக்கு உணர்த்தும் என்பதைவிட அறைகுறை படிப்பாளிகள் அடையவேண்டிய அவஸ்தையை நீங்கள் பெரிதாக மதிக்கிறீர்கள்.

பகாப இக்கட்டுரைக்கு மிகச் சிறந்த தலைப்பு என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

said...

வருகைக்கும் கருத்துக்கும் முதலில் நன்றி ஒகை சார். விகடன் அதனுடன் ஒரே தளத்தில் மற்ற பத்திரிக்கைகளை விட சற்றே தரத்தில் மேம்பட்டுத்தானிருக்கிறது என்கிற உங்களது கருத்தில் நானும் உடன்படுகிறேன். இங்கே வவ்வால், செல்வன் போன்றவர்கள் பூச்சிமருந்து அதிகம் உபயோகித்து பயிர் செய்யப்படும் காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றியும் சொல்லியிருந்தார்கள். அவையெல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டியவையே. நான் எழுதியிருந்தது நாடாப்புழு பிரச்சனையை மட்டும் அடிப்படையாக வைத்து நிச்சயம் பச்சைக் காய்கறிகளை ஒதுக்கிவிட முடியாதில்லையா? உண்மையில் சொல்லப்போனால் அங்கே பிரச்சனை அதை பச்சையாக சாப்பிடுவதால் இல்லவே இல்லையே? சுத்தமாக கழுவிப் பின் சாப்பிடாததுதனே? அந்த விஷயத்தை கட்டுரையாளர் எவ்வளவுக்கு ஹைலைட் செய்திருக்கிறார் என்பதுதான் இங்கே பிரச்சனையே. அஸ்வத்தாமா எனும் யானை இறந்தது என்கிற கதையாக எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அந்த கட்டுரையாளரின் தொனி இருக்கிறது என்பதை கொஞ்சம் பாருங்கள். அதே நேரத்தில் அந்த மருத்துவரின் கூற்றில் அந்த குறிபிட்ட விஷயங்கள் - இதனால் மொத்தமாக பச்சைக் காய்கறிகளே தவிர்க்கப்பட வேண்டியவை என்று எண்ணிவிடக் கூடாது என்பது எவ்வளவு அழுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் பாருங்கள். இருவரின் அக்கறைக்கும் வித்தியாசம் தெரிகிறதா?

நீங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன் - அரைகுறை படிப்பாளிகளின் அவஸ்தையை பற்றித்தான் நான் கவலைகொண்டு இப்பதிவை எழுதியிருக்கிறேன். அது தேவையில்லை என்று நினைக்கிறீர்களா? அல்லது அத்தகையோரின் எண்ணிக்கைதான் நம் சமூகத்தில் குறைவாக இருக்கிறதா? பொதுவாய் சவலைக்குழந்தைக்கே அதிக கவனிப்புத் தேவைப்படும். ஆரோக்கியமான குழந்தைதான் தானே சமாளித்துக் கொண்டுவிடுமே? இதுவே என் ஆதங்கத்திற்கான காரணம்.