Wednesday, July 18, 2007

அழ மாட்டேன் அம்மா

உச்சிவெயிலில் கூட அரையிருட்டாகவே இருக்கும் அந்த ரேழியில் எப்போதும் நிறுத்தி வைக்கும் அப்பாவின் டி.வி.எஸ் 50யையும், ஹைதர் காலத்து சைக்கிளையும் எடுத்துவிட்டு அங்கே உன்னை கிடத்தியிருந்தார்கள் அன்று. ரோஜா மாலை குவியலுக்கு இடையில் உன் வழக்கமான ஒற்றை நாணய அளவு குங்குமப்பொட்டு தெரிந்து கொண்டிருந்தது. ஏனோ அன்று எனக்கு அழுகையே வரவில்லை அம்மா.

ஒரு நாள் என்னை சினிமாவிற்கு அழைத்துப் போவதற்கு நீ அனுமதி கேட்டபோது விசிறியடிக்கப் பட்ட சில்லறைக் காசுகளை பொறுக்கியெடுத்து மேசை மீது வைத்துவிட்டு தலை குனிந்து நீ சமையலறை நோக்கி நடந்தாயே, அப்போது அழுதிருக்கலாம் நான் உனக்காக. ஆனால் அன்று தோன்றவில்லை அம்மா, பதிலாய் என்னை நீ சினிமாவிற்கு அழைத்துப் போகவில்லையென்று உன்னிடம் கோவிக்கத்தான் தெரிந்தது எனக்கு. ஒரு கையாலாகாத புன்னகையோடு என்னை சாப்பிட வைக்கவென்று நீ நாளை அழைத்துப் போகிறேன் என்ற நைந்த பல்லவியையே பாடினாய். அதற்கு மசியாமல் கொஞ்ச நேரம் உர்ரென்று உட்கார்ந்திருந்து விட்டு பின் வயிற்றின் கூப்பாட்டுக்கு மசிந்து சாப்பிட்டுத் தொலைத்தேன். உருப்படியாய் அன்று அழுதிருக்கலாம் உனக்காக.

காமிரா அறையை கூட்டிபெருக்கிவிட்டு நீ நகர்ந்த அடுத்த நொடி எண்ணெய்க் குளியலுக்காய் கழற்றி அரிசிப் பானைக்குள் வைத்திருந்த சங்கிலியில் நான்கு அங்குலம் குறைவதாய் அத்தை பிரலாபித்த போது முற்றத்தின் ஓரத்தில் நடுங்கும் கரங்களுடன் கண்ணில் நீர் வழிய அப்பாவின் வருகைக்காய் காத்திருந்தாய் நீ. வந்தவர் உன் தன்னிலை விளக்கங்களை காது கொடுத்தும் கேளாது கம்பீரமாய் தமக்கையின் கண்ணீரைத் துடைத்துவிட்டு "கவலைப் படாதே, மீனா. உன் பெண்களிருவர் திருமணத்திற்கும் தாய் மாமன் சீர் தவிரவும் இரண்டு பவுன் தனியாய் தந்து விடுகிறேன், அழாதே" என்றபோது இறுகிய முகத்துடன் தலைய கவிழ்ந்து உட்கார்ந்திருந்தாயே நெடுநேரம், அப்போது அழுதிருக்கலாம் உனக்காய் நான். தோன்றவில்லயே எனக்கு, என்ன செய்ய?

அதன் பிறகு எதன் பொருட்டும் அந்த காமிரா அறைக்குள் செல்வதில்லை என்று முடிவெடுத்து, தினமும் அந்த அறையை மட்டும் பெருக்குவதையும் துடைப்பதையும் என்னை செய்யச் சொன்னாயே, அப்போது உன் மேல் கோபம்தான் வந்தது எனக்கு - என் தலையில் உன் வேலையை கட்டுவதாய். அது உன் வரையிலான சத்தியாகிரகம் என்று புரியவெயில்லை அம்மா எனக்கு.

அந்த அறைக்குள் போவதை தவிர்க்க, தினசரி தேவைகளுக்கான பணத்தை காலையில் கேட்டு வாங்கி சமையலறையின் ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ள ஆரம்பித்தாயே அப்போது அதன் பின்னாலிருக்கும் வலியெனக்கு புரியவில்லை. அதிலிருந்து கொஞ்சம் காசு கொடு, பள்ளிக்குள் நுழையும் முன் கமர்கட்டு வாங்க வேண்டுமென்று கேட்டு உன்னது இயலாமையின் விளிம்பை உணராது ஒரு கருமியென்றே மனதுள் உன்னை திட்டியவாறு பள்ளி சென்றேனே, அன்று உன் முகத்திலிருந்த வேதனை இரவு அந்த கிண்ணத்திலிருக்கும் மீதி சில்லறைக்கும் நீ சொல்லும் பால் மோர் கணக்குக்கும் சரியாய் பொருந்தி வர வேண்டுமே என்பதற்கானது என்று எனக்கு புரியவில்லையம்மா. ஒரு வேளை அன்று நான் உனக்காய் அழுதிருந்தால் சரியாகவே இருந்திருக்கும்.

அன்றெல்லாம் விட்டு விட்டு இன்று எதற்காய் நான் அழவேண்டுமாம்? மாட்டேனம்மா, மாட்டவே மாட்டேன்.

வாழ்நாள் முழுவதும் நம் குடும்பத்தினரின் நன்மைக்கு அடுத்தபடியாய் உன் வேண்டுதல் பட்டியலில் உனக்கே உனக்கானதாய் இடம் பெற்ற ஒரே வேண்டுதல் - நான் சுமங்கலியாய் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்பதுதான். இத்தனை வருட வாழ்வில் முதல் முறையாக இன்றுதான் நீ கேட்டது எந்த அவமானமுமின்றி உனக்கு முழுசாய் கிடைத்திருக்கிறது. அப்பா இல்லாமல் நீ சுமக்க வேண்டிய அவமானங்கள் அவரிடமிருந்து சுமந்ததை விடவும் அதிகமிருக்கும் என்று நீ நினைத்திருக்கலாம். சுமங்கலித்துவம் குறித்தான என் எதிர்ப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உனது இந்த வாழ்நாள் சாதனையை நானும் கொண்டாடுகிறேன் அம்மா.

உனது பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நான் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்திருக்கிறேன். புரிந்து கொள்ளும் வயது வந்தபோதோ உன்னுடன் இருந்து உனக்காய் போராட நேரமில்லையே அம்மா, என் வாழ்வு என் வேலை என்று பிரிந்து சென்றாயிற்று. இப்போதேனும் உன்னை நான் அவமதிக்காதிருக்க வேண்டுமில்லையா?

23 comments:

said...

Lakshmi - ungalai enna seivadhu??
Naan azha maaten endru solli ennai azha vaithu viteergal...
I am just reminded of the troubles I gave to my mother when I was a kid..

Hats off !

said...

//சுமங்கலித்துவம் குறித்தான என் பெண்ணிய எதிர்ப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உனது இந்த வாழ்நாள் சாதனையை நானும் கொண்டாடுகிறேன் அம்மா.//

உண்மைத்தான் சிலசமயங்களில் நாம் இதைத்தான் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம்.

said...

லஷ்மி என்னம்மா இன்னைக்கு அம்மாவின் நினைவு நாளா தோழி இல்லை சகோதரி
ஏன் இப்படியொரு பதிவில் உன்னையும் எங்களையும் கஷ்டப் படுத்துகிறாய்.
இன்னம் கொஞ்சம் முன்னமே புரிந்து கொண்டிருந்தால் கொஞ்சமேனும் அவளின் நிம்மதியான சுவாசத்திற்கு நீ உதவி இருந்திருப்பாய் அல்லவா?
வலிக்கிறது பெண்ணே.புரிந்து கொள்ளுதலும் கொண்டவனின் அரவணைப்பும் இல்லாத வாழ்க்கையில் பற்றாக்குறையுமாய் எப்படி பரிதவித்துப் போயிருப்பாள்.போகட்டும்.இப்பவாச்சும் நிம்மதியாய் இருப்பாளில்லையா?

said...

சூப்பராக இருக்கிறது. நிஜமாக ஒரு தாயை கண் முன் நிறுத்திவிட்டீர்கள்.

said...

எனக்கு எங்க அம்மா ஞாபகம் வரவச்சிடீங்களே! கண் கலங்கிடுச்சி!!

said...

லட்சுமி அவர்களுக்கு பாராட்டுக்கள்,
ஒரு பெண் அவள் வாழ் நாளில் படும் துயரங்களை . அவமானங்களை படம் பிடித்து காட்டியுள்ளீர், நன்றி,
அதே சமயம் அந்த துயரங்களையும். அவமாணங்களையும் பெண்ணின் சாதனை யாக்கி விட்டீரே.. சரியா? முறையா?
அழாமல் இருக்க முடிவெடுத்தது சரி,பெண்ணென்றாள் அழ மட்டும் பிறந்த வளா?

//சுமங்கலித்துவம் குறித்தான என் பெண்ணிய எதிர்ப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உனது இந்த வாழ்நாள் சாதனையை நானும் கொண்டாடுகிறேன் அம்மா.//
சுமங்கலித்துவம் என்பது பெண்ணியம் கிடையாது, பெண்ணினடிமை தனத்தின் அடயாளம் தோழி...

said...

லட்சுமி அவர்களுக்கு பாராட்டுக்கள்,
ஒரு பெண் அவள் வாழ் நாளில் படும் துயரங்களை . அவமானங்களை படம் பிடித்து காட்டியுள்ளீர், நன்றி,
அதே சமயம் அந்த துயரங்களையும். அவமாணங்களையும் பெண்ணின் சாதனை யாக்கி விட்டீரே.. சரியா? முறையா?
அழாமல் இருக்க முடிவெடுத்தது சரி,பெண்ணென்றாள் அழ மட்டும் பிறந்த வளா?

//சுமங்கலித்துவம் குறித்தான என் பெண்ணிய எதிர்ப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உனது இந்த வாழ்நாள் சாதனையை நானும் கொண்டாடுகிறேன் அம்மா.//
சுமங்கலித்துவம் என்பது பெண்ணியம் கிடையாது, பெண்ணினடிமை தனத்தின் அடயாளம் தோழி...

said...

மனச பிசஞ்சிடுச்சு போங்க.....அருமை லக்ஷ்மி....கோடிட்டு காட்ட தெரியவில்லை ....எல்லாமே தேர்ந்தெடுத்த வார்த்தை உபயோகம்....

said...

ஸ்ரீ, மோகன், கண்மணி, குசும்பன், விவேக், அறிவியல் பார்வை, ராதா - இந்த புனைவில் தன் தாயை கண்டு கசிந்துருகிய அனைவருக்கும் நன்றி.

கண்மணி, இது முழுக்க என் அனுபவம் இல்லை. நான் பார்த்த பல அம்மாக்களோட கதையும் இதுல இருக்கு. ஆனா நானும் இதுல இருக்கற பொண்ணு போல சில விஷயங்களில் அம்மாவுக்கு உதவாத பிள்ளையா இருந்திருக்கேன். அதுனால உங்க குற்றச்சாட்டிலும் உண்மையிருக்கு. ஹ்ம்ம்... என்ன செய்ய, நினைச்சு மருகறதை தவிர..

விவேக், அறிவியல் பார்வை - இருவரும் ஒருவரேவா? எப்படியிருப்பினும் உங்களது கேள்விக்கான விடை ஒன்றுதான். பெண் என்பவள் அழ மட்டுமென்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. அம்மாவின் இறப்பன்று அவள் தன் தாய்க்காக அழுவதாயில்லை என்று முடிவெடுக்கிறாள் - ஏனெனில் மரணம் ஒன்றுதான் அவள் தாய்க்கு தான் விரும்பிய வண்ணம் கிடைத்திருக்கிறது என்பதற்காக. அதுதான் நான் சொல்ல வருகிறேன். அடுத்தது, சுமங்கலித்துவம் பெண்ணடிமைத்தனம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதை பற்றிய தன் எதிர்ப்புகளை கூட தன் தாயிடம் காட்டத் தயாராயில்லை நாயகி. அதிலேயே //சுமங்கலித்துவம் குறித்தான என் பெண்ணிய எதிர்ப்புகளை // எதிர்ப்பை தூக்கி ஒரம் வைப்பதாக தெளிவாய் சொல்லியிருக்கிறேன்.

said...

ஸ்ரீ சொல்வது போலத்தான்...எனக்கும் அழுகைதான் வருகிறது. படித்ததும்.
நல்ல நடை.

said...

உணர்வுகளை நிதர்சனமான வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்!

அருமை!

said...

இளவஞ்சி, முத்து - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

ஐயா குட்டி பிசாசு, உங்க பேரு போன பின்னூட்டத்துல விட்டு போச்சு. மாப்பு...

விவேக், அறிவியல் பார்வை - நீங்களிருவரும் சொன்னதை மறுமுறை யோசித்துப் பார்க்கையில் என் பெண்ணிய எதிர்ப்புகள் என்கிற வார்த்தை தவறான அர்த்தம் தருவதாய் தோன்றிற்று. எனவே மாற்றி விட்டேன். இப்போது சரியான அர்த்தம் வருகிறதுதானே?

said...

அருமையான இருக்கு....அழுகைதான் வருது ;(

\புரிந்து கொள்ளும் வயது வந்தபோதோ உன்னுடன் இருந்து உனக்காய் போராட நேரமில்லையே அம்மா, \\
;((((

said...

நன்றி கோபிநாத்.

Anonymous said...

அருமையான கதை...அழ வைத்துவிட்டீர்கள்

said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தூயா.

said...

அருமை லக்ஷ்மி அவர்களே....

எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை......ஆனால் மிடில் கிளாஸ் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட முந்தைய தலைமுறை பெண்களை நிதர்சனமாக காட்டிவிட்டீர்கள்...பாராட்டுக்கள்

said...

கண்கலங்க வைத்துவிட்டீர்கள்!...

said...

தரமான எழித்து நடை கை வருகிறது. மனதில் பட்டதை தெளிவாக எழுதியிருகிறிர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

said...

லக்ஷ்மி உங்களை என்னச் சொல்லி திட்டுவது. கட்டுரை ஆரம்பிக்கும் முன்னாடியே ஆஃபிஸில் படிக்க வேண்டாம். வீட்டில் மட்டும் படிக்கவும்னு போடலாம் இல்லை.

இப்போ பாருங்க கண்ணிலிருந்து வருகிற தண்ணீரை மற்றவருக்குத் தெரியாமல் மறைக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

// சுமங்கலித்துவம் குறித்தான என் எதிர்ப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உனது இந்த வாழ்நாள் சாதனையை நானும் கொண்டாடுகிறேன் அம்மா.//

இந்த வரிகளின் மூலம் நீங்கள் சொல்ல வரும் அர்த்தத்தை என்னால் தெள்ளத் தெளிவாய் உணர்ந்துக் கொள்ள முடிகிறது.

போன தலைமுறை நடுத்தர வர்க்கத்து பெண்களின் அவலத்தை அழகாகவும், அழவைத்தும்(எங்களை)சொல்லியிருக்கிறீர்கள்.

http://blog.nandhaonline.com

said...

மதுரையம்பதி, ஊற்று, நந்தா, JK - அனைவருக்கும் நன்றி.

said...

லக்ஷ்மி, அதெப்படி எல்லா அம்மாக்களுக்கும் ஒரு நாத்தனார் இப்படி வந்து சேருகிறாள்.

அதெப்படி எல்லா மகளுக்கும் அம்மா போன பின்னால் உரைக்கிறது. இந்தப் புரிதல் அம்மா இருக்கும்போது வந்திருந்தால் உங்க பதிவைப் பார்த்துவிட்டு நானும் அழ வேண்டாம்.
கதைதான் ஆனாலும் இது உண்மைக் கதை. ஒரு வித்தியாசமும் கிடையாது

said...

உண்மைதான் வல்லி அம்மா. அம்மா இருக்கும் போது உரைச்சிருந்தா எவ்வளவோ நல்லா இருக்குமே. எனக்கு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணின கதைதான் எப்பவுமே. :(