Thursday, December 10, 2009

பாரதி - அவர் மகளின் பார்வையில்

சமீபத்தில் பாரதி - என் தந்தை என்ற நூல் கண்ணில் பட்டது. இந்நூல் பாரதியின் இரண்டாவது மகளான் சகுந்தலா எழுதியது. வெகுகாலம் முன்னரே படித்த புத்தகம் என்றாலும் அப்போது ஏதும் பதிவிட முடியவில்லை. எனவே இப்போது அந்நூலையொட்டி எழுந்த என் சிந்தனைகளை அவரது பிறந்த நாளான இன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பாரதியின் இரு புதல்விகளில் மூத்தவரான தங்கம்மா பாரதி, தன் தந்தையோடு அதிக நாட்கள் வசிக்கும் பேறு பெறவில்லை. காசியில் வசித்த அவரது பெரிய தாயார்(செல்லம்மா பாரதியின் சகோதரி) பார்வதியிடமே அவர் அதிக நாட்கள் வளர்ந்தார். அவரை வளர்த்த பெரிய தாயாரின் நிர்பந்தத்தின் பேரில்தான் தங்கம்மாவுக்கு பால்ய விவாகம் நடத்தும் நிலைக்கும் பாரதி ஆளானார் என்பது இந்நூலில் இருந்து தெரிகிறது.

எனவே சிறுவயதிலிருந்து பாரதியிடம் பழகி, அவரது பாட்டுக்களையும் கதைகளையும் கேட்டு வளரும், அவரிடமே நேரிடையாக கல்வி பயிலும் வாய்ப்பும் பெற்றவர் சகுந்தலா மட்டுமே. அவரது எழுத்தின் வழி பாரதியை காண்பதன் மூலம் எவ்வளவோ புது விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

முதலும், முக்கியமானதும் ஆன ஒரு பெரிய உண்மை - நாம் இதுவரை பெரும்பான்மையான புத்தகங்களில் படித்தது போல அவர் திருவல்லிக்கேணி கோவில் யானை தாக்கி உயிரிழக்கவில்லை. யானை தன் கால்களுக்கு இடையில் கருங்கல் தரையில் வீசிய போதும், மண்டையில் நல்ல அடிபட்ட போதும் தனது கனமான தலைப்பாகையினால் அவர் மரணத்திலிருந்து தப்பியிருக்கிறார். (வாகனம் ஓட்டாமலேயே ஹெல்மெட்டால் உயிர் தப்பியவர்னு இவரைச் சொல்லலாமோ? ;) ). யானையிடமிருந்து தன் அன்புக்குரிய சீடன் குவளைக்கண்ணனால் காப்பாற்றப்பட்டு, அதன் பின் சில காலம் சென்று வயிற்றுக் கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் மருந்துகளை உட்கொள்ள மறுத்து பின் இறந்திருக்கிறார்.

குழந்தையை சமாளிக்கத் தெரியாமல் திண்டாடுவது, ஒரு ஆட்டுக்குட்டியை கசாப்பு கடைக்காரனிடமிருந்து பணம் கொடுத்து மீட்டு பின் அதை பராமரிக்கத் தெரியாமல் திண்டாடுவது(ராதா என்று பெயரிடப் பட்ட அந்த குட்டிக்காக தலைவர் தனியா பாட்டெல்லாம் எழுதினாராம், என்னே அதிர்ஷ்டம் பெற்ற ஆட்டுக்குட்டி இல்ல?) என நாம் அறிந்திருக்க முடியாத பாரதியின் எளிய உருவத்தை வெளிக் கொணர்கிறது இந்நூல்.

பாரதியின் சுற்றத்தார் அனைவருக்கும் சிஐடி காவல் உண்டு. ஆரம்பத்தில் புதுவையிலிருந்து தன் தாய் வீடான கடையத்திற்கு செல்லமாள் பாரதி குழந்தையோடு பயணிக்கையில் தன் சிஷ்யர்கள் யாரையேனும் துணைக்கனுப்புவாராம் பாரதி. பின்னர் எப்படியும் ஒரு போலீஸ்காரர் பின்னோடு போகப் போகிறார் என்கிற தைரியத்தில் தனியாகவே பயணிக்கத் துவங்கினாராம் செல்லம்மாள். அப்படி பின்தொடர்ந்த ஒரு போலீஸ்காரரே சமயத்தில் அவருக்கும் குழந்தைக்கும் உதவிய கதையும், செல்லம்மாளின் தாயாரை பின் தொடர்ந்த போலீஸ்காரர் அப்பாட்டியுடன் அம்மாவாசைக்கு பாபநாசம் பாணதீர்த்தத்திற்கு சென்று புண்ணியம் கட்டிக் கொண்டதையும் படிக்கையில் காவல்துறையினரின் நிலமை இன்றும் அன்றும் ஒன்றாகவே இருப்பதை உணர முடிகிறது.

பொன்னு முருகேசம் பிள்ளை, அவரது மனைவியான பாரதியால் அண்ணியம்மா என்று அழைக்கப்பட்ட அம்மையார், குவளைக் கண்ணன், அம்மாக்கண்ணு என்ற மூதாட்டி என அவரது புதுவை வாழ்வில் அவரோடு நெருங்கி வாழ்ந்து அவரைக் கொண்டாடி, அவரது விரக்தியை கொஞ்சமேனும் தணித்த மனிதர்களை பற்றியும் இந்நூலில் விரிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

சிந்து நதியின் மிசை நிலவினிலே எனும் பாட்டில் ஏன் சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைக்க வேண்டும் என்ற சகுந்தலாவின் கேள்விக்கு பாரதியின் பதில் இது:

”பாப்பா, தமிழ்ப்பாட்டும் பாடலாம்; ஹிந்துஸ்தானியிலும் பாடலாம். பெரிய பெரிய மகத்தான கவிகள் நம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பாடுதற்குரிய முறையில் பாடலை இசையுடன் அமைத்து அதை சுவையுடன் பாடக்கூடிய சங்கீத வித்வான்கள் நம் தமிழுலகில் அதிகம் இல்லை. சங்கீதத்தில் தெலுகு என்றும், உருது என்றும் வேற்றுமை கிடையாது. ஆங்கிலேயர் தேசாபிமானம் முற்றியவர்கள்; பாஷாபிமானத்திலும் கரை கடந்தவர்கள். ஆனால், சங்கீதத்தில் ஜெர்மன் சங்கீதமும், இத்தாலிய சங்கீதமும் உயர்ந்ததென்பதை மறுப்பதில்லை. தவிர வடதேசத்தில் உள்ள அழகிய சிந்து நதியின் மீது, தென் தேசத்திலுள்ள அழகிய சேரநாட்டு பெண்களுடன் தமிழ் நாட்டினர்களாகிய நாம் சங்கீதத்துக்குகந்த அழகிய மொழியான தெலுங்கில் பாடி மகிழ்வோம் என்ற கருத்து நம் இந்திய தேசம் முழுவதையும் ஒன்றாக்கும் நோக்கத்தில்தான்;” என்றார். மேலும், சங்கீதத்துக்கு பாஷை இன்பம் உண்டேயல்லாது, பாஷைக் கட்டுப்பாடு கிடையாது. எந்த பாஷையில் பாடினாலும் அதன் அர்த்த பாவம் மாறாது பாட வேண்டும் என்பதே அவர் அபிப்ராயம்.

மேலும் அவருக்கு சங்கீதத்தில் இருந்த ஆர்வத்தையும், அவர் அதை கற்க எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் கூட இந்நூலில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

கடையம் வந்தபின் சகுந்தலாவுக்கு கல்வி கற்பிக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பெண் கல்வி பற்றியும், பெண் விடுதலை பற்றியும் வெறும் ஒப்புக்காக பாடியவர் அல்ல என்று நிறுவுகின்றன. மேலும் பெண்ணியம் பேசும் ஆண்களில் பலர் இன்றும் கூட அதை தன் வீட்டுப் பெண்களுக்கானது அல்ல என்றே நினைக்கின்றனர். அப்படியில்லாமல் கணவனுக்கு பின்னால் பத்தடி தள்ளி நடக்க வேண்டிய மனைவியை கைபிடித்து நடத்தி செல்வதில் இருந்து ஆரம்பித்து, ஒரு குக்கிராமமான கடையத்தில் பெண் குழந்தையை ஆண்கள் படிக்கும் பள்ளிக்கு அனுப்பி கல்வி பெற செய்தது வரை பல விஷயங்களில் சொந்த வாழ்வில் தான் கொண்ட கொள்கையை நடைமுறைப் படுத்திப் பார்த்தவர் பாரதி என்பதை இந்நூல் பறை சாற்றுகிறது.

கடையத்திலிருக்கையில் மற்ற ஜாதியினருடன் சமபந்தி போஜனம் செய்யப் போய் ஜாதிப்பிரஷ்டம் செய்யப்பட்ட பின் அவர் சென்னைக்கு நகர்கிறார்.

நூலின் பிற்பகுதி சுரேந்திரநாத் ஆர்யா, நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற பிற சுதந்திர போராளிகளுடன் அவருக்கிருந்த உறவையும், அவரது திருவல்லிக்கேணி வாழ்கையையும் பற்றி விவரிக்கிறது.

ஜமீன்தாரிடம் உதவி கோரியது, பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தது என சில சறுக்கல்கள் அவரது வாழ்வில் உண்டுதான். ஆனால் அதையெல்லாம் வாழ்கை முழுவதும் வறுமையையும், சுயஜாதி மற்றும் சுற்றத்தாரால் தொடர்ந்த விலக்குகளையும், அரசின் அடக்குமுறையையும் மட்டுமே ருசித்து வந்த ஒரு மனிதனின் கதையின் ஒரு கசப்பான பாகமாக பரிவுடன் பார்க்க நம்மால் ஏன் முடிவதில்லை?

மெல்லத் தமிழினி சாகும்
அந்த மேலை மொழிகள் புவிமிசை ஓங்கும்
என்றெந்த பேதையுரைத்தான்?


என்ற வரிகளில் முதல் வரியை மட்டும் படித்துவிட்டு பாரதி தமிழ் அழியும் என்று சொல்லிவிட்டார் என்று குதிப்பார்கள் சிலர்.

நாடுங்கால் ஒரு மனமற்ற செய்கையை
நல்லதோர் மணமாம்


என்று குழம்பிப் போய் செய்து கொள்ளாதே என்று பாடியவனை ஏதோ திருமண வாழ்கையையே எதிர்த்தவன் என்று புரிந்து கொள்ளும், எழுதிச் செல்லும் அரைகுறை புரிதலுடையோரும் நம்மில் உண்டு.

அவனது பகவத் கீதைக்கான முன்னுரையில் சம்சார வாழ்கை ஒருவனுக்கு எவ்வளவு முக்கியமென்பதையும், துறவு என்பதன் உண்மையான பொருளையும் மிகத் தெளிவான உரைநடையிலேயே விளக்கியிருப்பதை காணலாம். மேலும் அவரது கண்ணன் பாட்டில் வரும் கண்ணம்மா பாடல்கள் தவிர அவரது பல காதல் பாடல்கள் மனைவி செல்லம்மாவையே விளித்து பாடப்பட்டவை - பின்னர் செல்லம்மாவின் சகோதரர் அப்பாசாமியின் தலையீட்டால் அவையும் கண்ணம்மா என்று மாற்றப்பட்டது. இந்த விஷயத்தையும் இந்நூல் தெளிவாகவே பதிவு செய்கிறது.

மனைவியையே காதல் தலைவியாகக் கொண்டு, அவள் மேல் கவிதைகள் பல இயற்ற வேண்டுமென்றா எத்தனை தூரம் அவளை நேசித்திருக்க வேண்டும்? ஆனால் வரிகளுக்கிடையே படித்து, தனக்கு பிடித்த அர்த்ததை மட்டுமே எடுத்துக் கொண்டு குதிப்பவர்களுக்கு யார் இதையெல்லாம் புரிய வைக்க முடியும்?

அதே போல் தன் மூத்த மகள் தங்கம்மாவின் பால்ய விவாகத்தை அவர் கூடிய வரை தவிர்த்ததையும், அதற்காகவே காசியிலிருந்து அப்பெண்ணை வரவழைத்து புதுவையில் தன்னுடன் வைத்துக் கொண்டதையும், செல்லம்மாள் கடையம் செல்லும் ஒவ்வொரு முறையும் தங்கம்மாவை தன்னுடன் தங்க வைத்துக் கொண்டு ஆன வரையிலும் திருமண முயற்சிகளுக்கு தடை போட்டதும், தன் மென்மையான சுபாவம் காரணமாக தங்கம்மாளின் வளர்ப்புத் தாயாரும், தன் மைத்துனியுமான பார்வதிக்கு கொடுத்த ஒரு வாக்குறுதியால் மகளின் திருமணம் தன்னை மீறி நடப்பதை அனுமதிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளானதையும் கூட இந்நூலில் சகுந்தலா பாரதியின் வாக்குமூலத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். அதை விடுத்து, பெண் விடுதலை பற்றி பேசிய பாரதி தன் பெண்ணுக்கு பால்ய விவாகம் செய்து வைத்தது ”ஊருக்குத் தானடி உபதேசம், உனக்கும் எனக்குமில்லை” என்ற சிந்தனையால் ஆனது என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போவது எவ்வளவு சுலபமானது?

இப்படியான தவறான புரிதல்களிலிருந்து வெளிவர வேண்டுமென்ற ஆர்வம் உண்மையிலேயே இருந்தால், பாரதியை அருகிலிருந்து பார்த்தவர்களான வ.ரா, சகுந்தலா பாரதி போன்றோரின் நூல்களை படிப்பது நல்லது. அல்லது பரபரப்புக்காகவோ அல்லது தன் அரைகுறை புரிதலாலோ பாரதியின் வரிகளை திரித்து, அதற்கு தனக்கு பிடித்த சாயத்தை பூசி பார்ப்பேன் என்று அடம் பிடித்தால்... அய்யோ பாவம், உங்களை அந்த தீரமிகு புலவனின் ஆத்மா மன்னிப்பதாக...

Monday, December 07, 2009

வித்யாசமான விடுமுறையும் சில புத்தகங்களும்

ஒரு குட்டி உயிரின் வரவால் நிறைய மாற்றங்கள் வாழ்கை முறையில். விடுப்பிலிருப்பதால் தேதி, கிழமை போன்றவை மனதில் பதிவதேயில்லை. நானும் குழந்தையும் இருக்கும் அறை மாடியிலும், டிவி வீட்டின் கீழ்ப் பகுதியிலும் இருப்பதால் சுத்தமாய் டிவி பார்ப்பதே இல்லை எனலாம். எப்போதேனும் கனிவமுதனின் அழுகையை மாற்ற ஒரு முயற்சியாய் மாடியிலிருந்து கீழே எடுத்துப் போகையில் மட்டுமே டிவி பார்க்கும் (துர்)பாக்கியம் கிடைக்கிறது. மற்றபடி நானும் அவனும் மட்டுமேயான உலகில்தான் பகல் முழுவதும் செல்லுகிறது.

ஜூனியர் இரவில்தான் மிகவும் மும்மரமாக அழுவது, விளையாடுவது என பிசியாக இருப்பார் என்பதால் இரவு தூக்கம் மிகவும் சொற்பமே. எனக்கோ பகலில் இப்போதெல்லாம் சுத்தமாக தூக்கம் வருவதேயில்லை. ஆக மொத்தத்தில் என் தூக்கத்தின் அளவு சரிபாதியாகி விட்டது. இதன் விளைவு என்னவென்றால் கண்கள் ரொம்பவும் சோர்வாக இருப்பதும், அடிக்கடி தலை வலி வருவதுமாக இருக்கிறது. பெரியவர்களோ தூக்கம் வரவில்லையென்றாலும் கண்ணை மூடிக் கொண்டேனும் இரு, அப்போதுதான் தப்பிக்கலாம் என்று அறிவுறுத்துவதால் முன்னளவு ஏன் அதில் பாதியளவு கூட வாசிப்பதற்கு நேரமிருப்பதில்லை.

விடுமுறையிலிருந்தும் அதிகமாக புத்தகம் படிக்காமலிருப்பது என்ற ஒன்று என் வாழ்வில் சாத்தியமா என்று கொஞ்ச நாட்களுக்கு முன்னால் யாராவது கேட்டால் சிரித்திருப்பேன். ஆனால் கடந்த சில மாதங்களாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.... ஆனால் அப்படி ஒரு நிலை வந்தும் கூட நான் அதற்காக வருந்தவில்லை என்பதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக் இருக்கிறது. :)

அப்படியும் இப்படியுமாக என் குட்டி எஜமானர் பெரிய மனது வைத்து என்னை படிக்க அனுமதித்த இடைவெளிகளில் ஒரு வழியாக ஆழி சூழ் உலகு, டாலர் தேசம், புலி நகக் கொன்றை, எரியும் பனிக்காடு என சில புத்தகங்களை படிக்க முடிந்தது.

அதில் ஆழி சூழ் உலகு விவரிக்கும் உலகம் எனக்கு முற்றிலும் புதிது. மீனவர்களின் வாழ்கை முறை, மீன் பிடித் தொழிலுக்கே உரிய நுட்பங்களின் விவரணை, முற்றிலும் புதியதான வட்டார வழக்கு என படிக்கவே அதிக காலம் எடுத்தது.

புலிநகக் கொன்றை பற்றி ஏற்கனவே ஏகப்பட்ட விமர்சனங்கள் இணையத்தில் படிக்க கிடைத்தது. நாவல் என்ற வடிவத்துக்கேற்ற கதையும், கதாபாத்திரங்களின் அணிவகுப்பும். யாரொருவரையும் கதாநாயகனாக கொள்ளாத கதை - உண்டியல் கடைக்காரர் ஒருவரின் வம்சாவளியைத் தொடரும் ஒரு நம்பிக்கையைப் பற்றிய கதை. பொன்னா என்ற தொண்ணூறு கடந்த முதிய பெண்மணியே கதையில் விவரிக்கப் படும் அத்தனை தலைமுறையினருக்கும் நடுவில் தொடரும் சரடு. நல்ல வாசிப்பனுபவம் தந்த நாவல்.

டாலர் தேசம் என்கிற அமெரிக்காவின் அரசியல் வரலாற்று நூல் முற்றிலும் புதிய விதம். கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து அமெரிக்க வாடிக்கையாளர்களுடனேயே பணியாற்றியிருந்தும் கூட அந்த தேசத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள மெனக்கிட்டதில்லை. க்ளையண்ட் சைட்டிற்கு சென்ற போதும் டாலரின் எக்ஸ்சேஞ் ரேட் பற்றி கவலைப்பட்ட அளவு அத்தேசத்தின் வரலாறு குறித்தெல்லாம் கவலைப் பட்டதில்லை.

ஆனால் ஒரு வல்லரசாக, உலக தாதாவாக தன்னைத் தானே செல்ஃப் அப்பாயிண்ட் செய்து கொள்ளும் ஒரு தேசத்தின் மனப்போக்கின் பின்னணி இந்நூலைப் படிக்கையில் ஒரளவு நமக்கு புரிகிறது.

ஒரு குறுகிய காலத்தில், குடியேறிகளாலேயே உருவாக்கப்பட்ட நாடு முழுக்கு முழுக்க தன் மேலாண்மையை பொருளாதாரம் சார்ந்தே பெற வேண்டியிருப்பதும், அதற்கு அது முழுக்க முழுக்க யுத்தங்களையே நம்பியிருப்பதும் படிப்படியாக இந்நூலில் விளக்கப் படும்போது அமெரிக்கா ஏன் அதன் சுண்டுவிரல் சைசில் இருக்கும் கொரியாவிலும், வியட்நாமிலும் கூடாரம் போட்டு உட்கார்ந்து ரவுடிப்பட்டத்தை சாஸ்வதமாக்கிக் கொண்டது என்பது புரிகிறது.

பா.ராகவனின் சுவாரஸ்யமான உதாரணங்களும், நகைச்சுவை பூசிய வார்த்தைகளும் அரசியல் வரலாறு எனும் பல்கலைக் கழக வாசனை வீசும் சப்ஜெக்டையும் எளிமையானதாக்குகிறது. சில உதாரணங்கள்:

"..ஹேமநாத பாகவதர் முன்னால் சிவாஜி பாடியபோது உலகம் ஒரு முறை நின்று சுழன்றதே, அப்படி அந்த நீதிமன்றம் ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டு, பின் சுதாரித்துக் கொண்டது..."

"..இனி பொறுப்பதில்லை தம்பி, எரிதழல் கொண்டு வா என்ற பாரதியார் பாட்டை இங்கிலீஷில் பாடிக் கொண்டு களத்தில் குதித்தார் புஷ்.."

ஆனால் இந்த நூலை படிக்க ஆரம்பித்த போது இரண்டாவது அத்தியாயத்திலேயே ஒரு பெரிய ஆயாசம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்கு புத்தகத்தை மூடி வைத்திருந்தேன். நம் பள்ளி முதல் பல்கலைகழகம் வரையிலான வரலாற்று பாட புத்தகங்களில் அசோகர் மரம் நட்டார், அக்பர் இராஜபுத்திர பெண்களை மணந்தார், ஷாஜகான் தாஜ்மகால் கட்டினார் என்பது போலவே வாஸ்காடகோமா இந்தியாவை கண்டுபிடித்தார் என்று சொல்லி வைப்பது மரபு.

ஒரு பொருளை கண்டுபிடிப்பது என்றால் ஒன்று அது புதிதாக தயாரிக்கப் படுவதாக இருக்க வேண்டும், இல்லை காணாமல் போயிருக்க வேண்டும். பல நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு நிலப் பகுதியை, ஏன் வரலாறே இல்லை என்றாலும் கூட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பகுதியை புதிதாக ஒருவர் எப்படி கண்டுபிடிக்க முடியும்?

ஐரோப்பியர்களின் வரலாற்றில் வாஸ்காடகோமா இந்தியாவை கண்டுபிடித்திருக்கலாம், கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்திருக்கலாம். ஏனெனில் ஐரோப்பிய வெள்ளைத் தோல் மனிதர்களுக்கு தங்களையன்றி பிறர் நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளாகவும், அவர்கள் வசிப்பதெல்லாம் உலகிலேயே சேராத புது பகுதிகள் என்ற எண்ணமிருந்திருக்கலாம். அதனால் அவ்விடங்களுக்கு தாங்களிருக்குமிடத்திலிருந்து செல்வதற்கான பாதையை கண்டுபிடித்ததையே அவர்கள் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளையே கண்டுபிடித்ததாக சொல்லி மகிழலாம். ஆனால் நாமும் ஏன் அப்படியான வார்த்தை பிரயோகங்களையே இன்னமும் பயன்படுத்த வேண்டும்? பாட புத்தகங்களில் மாற்றம் கொண்டு வருவது வேண்டுமானால் இப்போதைக்கு சாத்தியமில்லாததாக இருக்கலாம். பாட புத்தகங்களுக்கு வெளியே வரலாற்றை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு வாசிப்பவர்களுக்காகவே எழுதப் படும் இது போன்ற நூல்களிலாவது இத்தகைய அர்த்தமற்ற பதப் பிரயோகங்கள் தவிர்க்கப் பட வேண்டுமில்லையா?

பா.ரா போன்ற பிரபல எழுத்தாளர்களும் இத்தகைய தேய்ந்த, பொருளற்ற வார்த்தைகளையே பயன்படுத்துவது வருத்தமாக உள்ளது.

எரியும் பனிக்காடு பற்றி தனியே ஒரு பதிவு எழுத உத்தேசித்துள்ளேன். அவ்வளவுக்கு மனதை உலுக்கிய புத்தகம் அது.

புயலிலே ஒரு தோணி, வண்ணதாசன் சிறுகதைகள் என ஏற்கனவே ஆரம்பித்து பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் புத்தகங்களும் என்னை சோம்பேறி என்று ஏசுவது கேட்கிறது. விரைவில் அவைகளையும் படித்து முடிக்க முயற்சிக்க வேண்டும். இப்போதெல்லாம் ’எல்லாம் அவன் செயல்’ என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு - இங்கே என்னுடைய அவன் என் குட்டிப் பையன்தான். அவன்தான் மனது வைக்க வேண்டும். :)