திண்ணையைப் பற்றிய பாலபாரதி மற்றும் முத்துலெட்சுமியின் பதிவுகள் எனக்கும் எங்கள் வீட்டின் திண்ணையையும் அதனுடனான எனது சிறுவயது நினைவுகளையும் கொண்டுவந்தது. அதுனால என்னை யாரும் அழைக்கலைன்னாலும் நானும் அழையா விருந்தாளியா கோதாவுல குதிச்சுட்டேன்.
எங்கள் வீட்டின் இருபுறமும் திண்ணையிருந்தாலும் ஒரு புறம் பெரியதாகவும் இன்னொரு புறம் சிறிதாகவும் இருக்கும். மரச்சட்டங்கள் போட்டு அடைத்து வழிநடையில் மட்டும் அதே அளவு சட்டங்களிலான கதவு வைத்திருப்போம். இப்போது வழிநடையில் கூடுதலாக அப்பாவின் மோட்டர் சைக்கிள் ஏற்றுவதற்கான சரிவுப் பாதையும் சேர்ந்திருக்கிறது. இரு திண்ணையிலும் இரண்டு விளக்குப் பிறைகள் உண்டு. மார்கழியில் காலையிலும், கார்த்திகையில் மாலையிலும் இரு அகல் விளக்குகள் அங்கே ஏற்றி வைக்கப்படுவது முன்னெல்லாம் அதாவது என் அம்மா இருந்தவரை வழக்கம். அப்படியே எதாவது துக்க செய்தியோடு கடிதங்கள் வந்தால் அவையும் அங்யே திண்ணையின் ஏதாவது ஒரு மூலையிலேயே சொருகப்பட்டிருக்கும், போய் வந்த பின் உடனடியாக குளிக்கும் முன்னரே கிழித்து வெளியே எறிந்து விடுவார்கள்.
என்னுடைய சிறுவயதில் அவ்வளவாக விளையாட்டுக்கள் இடம்பெற்றிருக்கவில்லை. அம்மாவுக்கு பயம், வீதியில் இறங்கி பெண் அடி ஏதும் பட்டுக் கொண்டுவிட்டால் என்னாவது, எங்கேனும் காணாமல் போய்விட்டால் என்னாவதென்றலாம் அடுக்கடுக்கான பயங்கள். எனவே எனக்கு அனுமதிக்கப் பட்டதெல்லாம் திண்ணையில் அமர்ந்து விளையாடக் கூடிய விளையாட்டுகள் மட்டுமே. தவிரவும் அப்பாவை பார்க்க வருவோரை அமர வைப்பதும் அங்கேதான். அடுத்த நிலையில்தான் வீட்டினுள் முற்றத்தைச் சுற்றியுள்ள தாழ்வாரத்துக்கு அழைத்துச் செல்வது நடக்கும். அறுவடை நாட்களில் நெல்மூட்டையை அன்றன்றே விலைக்குப் போட முடியாது போனால் கொண்டு வந்து இறக்கி வைப்பதும் அங்கேதான்.
எங்கள் தெருவில் இப்போது சமீபத்தில்தான் தார் ரோடு போட்டிருக்கிறார்கள். முன்னெல்லாம் மண் தரையில் மழை நாட்களில் நீர் ஒரே தடத்தில் ஓடி அரித்துவிடுவதால் ஏற்படும் குழிகள் அங்குமிங்குமாக இருக்கும். தெருவின் இருதரப்பிலும் பெண்கள் கூட்டிப் பெருக்கி சாணம் தெளிக்கும் பரப்பு ஒரளவு சமமாக இருந்தாலும் கூட நடுப் பகுதியில் இத்தகைய குழிகள் அதிகமுண்டு. இரவு நேரத்தில் மின்சாரம் நின்று போய்விட்டால் அப்பா உடனடியாக ஒரு அரிக்கேன் விளக்கை ஏற்றிக் கொண்டு போய் திண்ணையில் வைத்து விடுவார். அவர் வீட்டில் இல்லையென்றாலும் நாங்கள் யாராவது அதை ஒரு அனிச்சை செயல் போல உடனடியாகச் செய்து விடுவோம். ஏனென்றால அதை மட்டும் மறந்தால் அப்பாவுக்கு ரொம்பவே கோபம் வரும்.
எல்லாமே நல்ல விஷயமாக ஒருத்தரைப் பற்றியோ இல்லை ஒரு விஷயத்தைப் பற்றியோ சொல்லிவிட முடியுமா என்ன? இந்தத் திண்ணைக்கு இன்னொரு உபயோகமும் உண்டு. மாதவிலக்கு நாட்களின் பகல் நேரத்தில் திண்ணையில்தான் பெண்களுக்கு வாசம். இரவு மட்டும் உள்ளே வந்து ரேழியில் படுத்துக் கொள்ள அனுமதி உண்டு. பெரிய திண்ணையின் மூலையில் பழைய பெட்ஷீட் கொண்டு ஒரு தற்காலிக மறைப்பு ஏற்படுத்தப்பட்டு அதில் ஒரு பாய், தலையணை, கோடை காலத்தில் விசிறி, தண்ணீர் சொம்பு, இத்தோடு மூன்று நாட்களாய் எண்ணெய் காணாத தலை இத்யாதி அலங்காரத்தோடு என் அம்மா, சித்தி(இத்தனைக்கும் கோடை விடுமுறையில் இரண்டு மாதம் வந்து தங்கிப் போகும் நபர் அவர்) என எல்லோரையும் அங்கே பார்த்திருக்கிறேன் நான். குளியலறையும் கழிவறையும் வீட்டின் கொல்லைப் புறத்தில்தான் இருக்கும்.
எனவே வீட்டைச் சுற்றிக் கொண்டுதான் அவர்கள் செல்ல வேண்டும். அதுவும் வீட்டிலிருப்பவர்களுக்கு முதலிலேயே சொல்லிவிட வேண்டும். கதவைத் திறந்து வைத்துக் கொண்டு தண்ணீரும் எடுத்து வைத்து விட்டு காத்திருப்பார்கள். ஏனென்றால் பெண்கள் கிணற்றைத் தொடக்கூடாதே? அப்புறம் சாப்பாடு கொல்லைத் தாழ்வாரத்தில் தட்டுமுட்டு சாமான்களுக்கு நடுவில் பரிமாறப்பட்டு, மோர், எக்ஸ்ட்ரா சாதம் எல்லாம் சிறு கிண்ணங்களில் எடுத்து வைக்கப் பட்டாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம் - இப்பெண்களுக்கு சாதம் பரிமாறிய பின் அத்தோடு சேர்த்து சமைக்கப்பட்ட எதுவும் "சேஷம்" என்று குறிப்பிடப்படும். மீதம் என்று பொருள். ரொம்பவும் ஆசாரமானவர்கள் அத்தகைய உணவைத் தொட மாட்டார்கள். ஆப்வியஸ்லி எல்லா மாமியார்களும் நாத்தனார்களும் இவ்வகை ஆசாரமானவர்களாகவே இருப்பார்கள். எனவே மீதமாவதைத் தடுப்பதற்காக பெரும்பாலும் பழையதுதான் இப்பெண்களுக்கு உணவாக இருக்கும். மீந்திருக்கும் பழையது? அடுத்த வேளைக்கு. அவ்ளோதான். தொட்டுக் கொள்ளவும் எதுவும் கிடைக்காது. பின்னே இவர்களுக்கு ஒரு துண்டு ஊறுகாய் தந்தால்தான் ஜாடியில் இருக்கும் மொத்த ஊறுகாயும் சேஷமாகிப், பின் வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி வீணாகிவிடுமே? வயர்லெஸ் முறையில் பரவும் தீட்டெல்லாம் தெரிந்திருக்கிறது பாருங்கள் நம்ம மக்களுக்கு. சரி, இதை வேறு இடத்தில் விலாவாரியாகப் பார்ப்போம். இப்போதைய டாபிக் திண்ணையல்லவா?
அம்மா மெனோபாஸ் நிலையை அடைந்தபின் இக்காட்சிகள் மெதுவாகக் குறைந்து மொத்தமாய மறைந்தது. அடுத்து என் முறை வந்தபோது அம்மா இந்நிலையைத் தொடரவிடவில்லை. என் அத்தைகளின் முணுமுணுப்பு இருந்த போதும் அப்பா அதைக் காதில் போட்டுக் கொள்ளாது முதல் முறையாக அம்மா சொன்னதை ஒத்துக் கொண்டது அநேகமாக இந்த ஒரு விஷயத்தில் மட்டுமே. ஏன்னா சம்பந்தப் பட்டது அவரோட செல்லப் பெண்ணாச்சே. :) கேட்டவங்களுக்கு எல்லாம் அம்மாவின் ஒரே பதில் "பசங்களோட சேர்ந்து படிக்கற ஸ்கூலில் படிக்கறா. கூடப் படிக்கற பசங்க யாராவது பாத்துட்டு கிண்டல் பண்ண ஆரம்பிச்சா தாங்குவாளா?". கோ.எட் பள்ளியில் படித்தது இந்த ஒரு விஷயத்தில் ரொம்பவே உதவியது. எனவே திண்ணையிலிருந்து ரேழி அறை எனக்கான இடமாய் மாற்றப்பட்டது. வீட்டிற்குள்ளாகவே நடந்து செல்லவும் அனுமதிக்கப் பட்டேன். இப்பவும் திண்ணை அதன் வழக்கமான அமைதியோட வருபவர்களுக்கு வரவேற்பரையாகவும், சிறு குழந்தைகளுக்கு விளையாடுமிடமாகவும் தன்னோட சேவையைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
Wednesday, June 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//வயர்லெஸ் முறையில் பரவும் தீட்டெல்லாம் தெரிந்திருக்கிறது பாருங்கள் நம்ம மக்களுக்கு//
என்ன கொடும மேடம் இது..
சூப்பர் பதிவுங்க. லக்ஷ்மி ஒவ்வன்னையும் அனுபவச்சி ரசிச்சு எழுதிஇருக்கீங்க. வாழ்த்துக்கள்.
ஆகா.. லக்ஷ்மி நீங்க பிசியா இருக்க்கீங்களே தொந்திரவு செய்யவேண்டாம்ன்னு கூப்பிட்டுருக்கமாட்டமோ என்னவோ.. அதுக்கென்னா.. அனுபவிச்சவங்க நல்லா எழுதி இருக்கீங்க..
என் தோழி வீட்டுக்கு போனா அவ பின்னால் ஒரு ரூம்ல இருப்பா அந்த நாட்களில்ல்.. ஒண்டுகுடித்தனத்தில் தின்ணையில் உக்காந்துக்கிட்டே.. அவ தானே பின்னால் ரூமில் இருக்கான்னு சில பசங்க சொல்லும்போது.. அடியே அந்த நாள்ன்னா சொல்லிடு உன் வீட்டுப்பக்கமே எட்டிப்பாக்கமாட்டேன்னு சொல்வேன்.. கொடுமை தான்..
எப்படியோ நீங்க தப்பிச்சிட்டீங்கள்ள..
முதல்ல ஜீவி,ரிப்போர்டர் எஃபக்ட் இல்லாம ஒரு பதிவு போட்டதுக்கு சந்தோசம்..மகிழ்ச்சி..திண்ணையோட நினைவுகள் பால்ய காலத்த கிளறும்,நினைவில பூபூக்கும்னு ஆசையா படிக்க்க வந்தா அங்கயும் உங்க அதிரடிய விடுறா மாதிரி தெரியல :)
கிண்டல தவிர்த்து இது ஒரு முக்கியமான இன்னும் விரிவா பேசப்பட வேண்டிய ஒரு விசயம்தான்..அனல் பறக்க அடுத்த பதிவையும் உடனே எதிர்பார்க்கிறோம்..
நிறையவே யோசிக்கவைக்கும் வரிகளோடு...
திண்ணை பற்றிய நினைவுகள்
மகிழ்ச்சியளிக்கும் ஒரு இடமே பலருக்கு துன்பமளித்தும் இருக்கிறது என்பதும் கொஞ்சம் மனச்சுமை கூட்டி விஷயம்!
நல்ல வேளை லெஷ்மி! நான் முந்திகிட்டேன் உங்க பதிவுக்கு 20 மணி நேரம் முன்னமே! இல்லாட்டி மேட்டர் பஞ்சத்தோட அலையனும்! நல்லா இருக்கு உங்க வீட்டு திண்ணையும்! உங்க வீட்டு முற்றம் மாதிரியே!!
@அய்ஸ்! இதல்லாம் என்ன விலாவாரியா பேச வேண்டிய விஷயமா நமக்கு, அதல்லாம் 60-70 கால கட்டம்! விடுங்க நல்ல புனைவு போடுங்க, அப்பத்தான் குசும்பன் பதிவு வரும் எங்களுக்கு!!!!
சிறிது காலமாக உங்கள் பதிவு வராமல் இருந்தாலும் இந்த பதிவு ஈடுகட்டி விட்டது. அருமை
//வயர்லெஸ் முறையில் பரவும் தீட்டெல்லாம் தெரிந்திருக்கிறது பாருங்கள் நம்ம மக்களுக்கு//
இதுதான் சூப்பர்:-)))))
கூடை சாணியை வறட்டி, இல்லைன்னா பாய்லருக்கு கரி உருண்டை பிடிச்சுப்போடும் வேலையும் உண்டு எங்க சித்திகளுக்கு.
அம்மாவின் ஆட்சியில் இதுக்கெல்லாம் இடமில்லாம வேற ஊருக்கே போய்விட்டோம்:-)
உங்க திண்ணை அனுபவம் உங்க டச் எல்லாமே நல்லா இருக்கு
திண்ணை நினைவுகள் சூப்பர் லக்ஷ்மி.
ஒரு மாதிரி பாதுகாப்பு திண்ணையில் கிடைக்கும் . நினைவுக்கு வருகிறது. அது ரயில் பயணம் மாதிரி. உள்ளேயும் இல்லாம வெளிலேயும் இல்லாம,சம்பந்தம் உண்டு ஆனால் சம்பந்தம் இல்லை என்கிற மாதிரி, தாய் கர்ப்பத்தில் பத்து மாதம் தங்கின போது இருந்த நிலை தான் எனக்கு திண்ணையை நினைத்தால் வரும். நன்றி நல்லதொரு பதிவுக்கு.
லஷ்மி தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். உங்களைப் போலவே கயல்விழி முத்துலெட்சுமியின் திண்ணைப் பதிவினால் பெரிதும் ஈர்க்கப் பட்டு, நானும் ஒரு பதிவு எழுதுவதாய் அவருக்கு வாக்கும் கொடுத்து ஆயிற்று வாரங்கள் மூன்று. இப்போதுதான் முடிந்தது. நேரம் கிட்டினால் வந்து எட்டிப் பாருங்கள். அந்த மாடப் பிறைகள் எம் வீட்டிலும் உண்டு லஷ்மி. கார்த்திகை மாலைகளில் விளக்கு வைப்போம் அவற்றில்.
http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html
மலரும் நினைவுகள். என்னை 15 வருடங்கள் பின்நோக்கி இழுத்துசென்று விட்டது!!
Post a Comment