Friday, May 02, 2008

பெயரால் வந்த பிரச்சனை

சமீபகாலமாக வலைப் பக்கம் வருவதே அபூர்வமாகி விட்ட நிலையிலும் இந்த விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளவில்லையெனில் சிந்து பைரவியில் வரும் ஜனகராஜ் போல தலை நசுங்கினாற் போல தெரிவதாகவும் விரைவில் வெடித்துவிடும் என்பது போலவும் ஒரு பிரமை. அதனால் இந்தப் பதிவு. :)

நான் வேலை செய்யும் நிறுவனமே ஒரு சேமிப்புக் கணக்கை சம்பள பட்டுவாடாவிற்காக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் ஆரம்பித்துக் கொடுத்தது. அத்தோடு சேர்த்து அவர்களிடமே ஒரு கிரெடிட் கார்டெனும் மினியேச்சர் சனிஸ்வர பகவானையும் வாங்கி என் பர்ஸில் குடியேற்றினேன் ஒரு வருடம் முன்பு. பொதுவாகவே யாரேனும் கிரெடிட் கார்டு மூலம் வரும் தொல்லைகள் என்று பட்டியலிட ஆரம்பிக்கையில் அனுதாபத்தோடு அக்கதைகளை கேட்டாலுமே கூட, மனதுக்குள் ஒரு மூலையில் திட்டமிட்டு பயன்படுத்திய தொகையை தவறாது கட்டிவிடுவோமே ஆயின் இதில் என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது? ஆசையை அடக்கத் தெரியாது கட்டுபாடின்றி செலவழித்து விட்டுப் பின் ஏன் முழிக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன்(பெரிய பொம்பிளை புத்தர்னு நினைப்பா என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது. கொஞ்சம் ஓவர் டோஸ்தான், கண்டுக்காதீங்க) இப்படியெல்லாம் பலவாறாக நினைத்தவாறே அங்கங்கே படித்த சமாளிப்பு முறைகளை அறிவுரையாகக் கூறிவிட்டுப் பின் நகர்ந்து விடுவேன். மனசுக்குள்ளே "பார், இத்தனை வருடங்களாக இதை உபயோகிக்கிறேன், இது வரை ஏதேனும் சிக்கலில் சிக்கியதுண்டா என்ன? எல்லாம் நாம் பயன்படுத்தும் முறையில் இருக்கிறது." என்றெல்லாம் என் கர்வ பலூன் ஒரே சீராக ஒவ்வொரு மாத கட்டணத்தையும் செலுத்தும் போது கொஞ்ச கொஞ்சமாக ஊதப்பட்டுக் கொண்டே வந்தது. அதிலும் உங்களது கணக்கு வழக்குகளின் சிக்கலற்ற தன்மையை கருத்தில் கொண்டு இன்னின்ன சலுகைகள்(மேலும் புது அட்டைகள், கடன்கள் முதலியன) தருகிறோம் என்பதான தொலைபேசி உரையாடல்களை பொதுவாகவே 'எனக்கு விருப்பமில்லை' என்று ஒற்றை வரியில் முடிப்பது என் வழக்கம். அப்படியே உடனே என் மன உறுதியை நானே மெச்சிக் கொள்வதும் உண்டுதான்.

கதைகளிலெல்லாம் 'விதி சிரித்தது' என்று எழுதுகிறார்களே, அந்த விதி என்னைப் பார்த்து சிரியோ சிரி என்று சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் - ஒவ்வொரு முறையும் நான் பெருமைப்பட்டுக் கொண்ட போதெல்லாம். 'நீ யோக்கியமாக இருந்துவிட்டால் மட்டும் உன்னை விட்டுவிடுவேனா என்ன?' என்று என் பர்ஸிலிருந்த சின்ன சனியனும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது போலும். மார்ச் மாதம் 20ம் தேதி காலை ஒன்பது மணி போல ஒரு தொலைபேசி அழைப்பு - வழக்கம் போல புது அட்டையோ புது கடனோ தருவதற்காக இல்லை. நான் கட்டாமல் வைத்திருக்கும் அறுபதினாயிரம் ரூபாயை உடனடியாகக் கட்டச் சொன்னார் அந்தப் பெண். "என்ன உளறல் இது?" என்றுதான் உடனடியாக நான் திருப்பிக் கேட்டேன் - ஏனென்றால் அன்றைய நிலைப்படி என் நிலுவைத் தொகை கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய்கள் மட்டுமே. அதற்கும் முந்தைய மாதம் எனக்கு வந்த பில்லே 0 ரூபாய்களுக்குத்தான். இப்படித்தான் பெரும்பாலும் என் அட்டை உபயோகம் இருக்கும். பெரும்பாலும் இணையத்தில் புகைவண்டி பயணச் சீட்டுகள், புத்தகங்கள், சில சமயங்களில் சினிமா டிக்கெட்டுகள் போன்றவை வாங்க மட்டுமே இந்த அட்டையை பயன்படுத்துவது என வழக்கம். ரொம்பவே அபூர்வமாக மட்டுமே ஐம்பதினாயிரத்தை தாண்டிய பில்கள் எனக்கு வந்திருக்கின்றன - அதுவும் அவையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு கண்டிப்பாக அந்த மாதத்திலேயே கட்டிவிட முடியுமெனும் போது மட்டுமே செய்வது என் வழக்கம். அப்படியிருக்க, திடீரென வந்து அறுபதினாயிரம் ரூபாய் நீங்கள் கட்ட வேண்டுமென்றதும் நான் ஆடிப் போனேன்.

நிதானித்துக் கொண்டு அந்தப் பெண்ணிடம் பேசியதில் அது என்னுடைய அட்டை எண்ணே இல்லை என்பது புரிந்தது. உடனே என்னுடைய அடையாள அட்டை, ஒட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களையும் கடைசியாக வந்த கடனட்டைக்கான பில்லையும் எடுத்துக் கொண்டு அவர்கள் அலுவலகத்திற்குச் சென்றேன். அது அண்ணாசாலையில் கருமுத்து சென்ட்டர் என்ற கட்டிடத்தினருகே ஒரு அடுக்கு மாடியில் அமைந்திருந்தது. என்னிடம் பேசிய பெண்ணின் உயரதிகாரி வந்து என்னைச் சந்தித்தார். பேசிய சிறிது நேரத்திலேயே பிரச்சனை புரிபட்டு விட்டது. என் அலுவலகத்திலேயே ஆனால் இன்னொரு கிளையில் லக்ஷ்மி ராஜகோபால் என்கிற பெயரிலேயே ஒரு பெண் வேலை செய்து வந்திருக்கிறார். அலுவலக முகவரியைத் தந்து இவர்களிடம் கடனட்டை வாங்கி நன்றாக உபயோகித்துக் கொண்டிருந்திருக்கிறார். பின்னர் எங்கள் அலுவலகத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டுப் போகையில் மட்டும் தனது முகவரியை மாற்ற மறந்துவிட்டார் போல, பாவம். இந்த இடத்தில் எனக்கு என் அப்பா அடிக்கடி சொல்லும் ஒரு எடுத்துக் காட்டு நினைவுக்கு வருகிறது. யாரேனும் வயதானவர்கள் கடைசிப் படுக்கையில் இருக்கையில் தன் மக்களை அழைத்து தனக்கு வர வேண்டிய கடன்களைச் சொன்னால் எல்லோரும் வெகு சிரத்தையாக அதை குறித்துக் கொள்ளத் தொடங்குவார்கள். அதே அவர் தான் தர வேண்டிய கடன்களைச் பட்டியலிட ஆரம்பித்தால் வயதானதால் வரும் உளறல் என்று சுற்றியிருப்போர் கண்டு கொள்ளாது சென்று விடுவர் என்று வேடிக்கையாகச் சொல்வார் என் அப்பா. இதே பெண்மணி வேலையை விட்டும், ஊரை விட்டும் போகையில் தன் சேமிப்புக் கணக்கிலிருக்கும் பணத்தை விட்டுச் சென்றிருப்பாரா என்ன? சரி, விஷயத்துக்கு வருவோம். அந்தப் பெண்ணின் முகவரியில் ஆள் இல்லை, அந்த தொலைபேசி எண் வேலை செய்யவில்லை, சரி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த கடனட்டைப் பிரிவினருக்கு வந்த அற்புத யோசனை - அதே பெயரில் வேறு ஏதேனும் கடனட்டை இருக்கிறதா என்று பார்ப்பது. அதே பெயரில், அதே அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பலியாடு பட்டியலில் தட்டுப் படவே ஒரே அமுக்கு . இதுதான் நடந்திருக்கிறது.

பெயரையும் அலுவலகத்தையும் தவிர இரு அட்டைதாரருக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை - பிறந்த தேதியிலிருந்து, அடையாளத்துக்காக தந்த ஒட்டுனர் உரிமத்தின் எண் வரை வேறு எதுவுமே ஒத்துப் போகவில்லை. இது எதையுமே பார்க்காது தொலைபேசியில் அழைத்து எந்தவிதமான சந்தேகமும் இன்றி அதட்டலான தோரணையில் "ஏன் இன்னும் நீங்கள் பணத்தை கட்டவில்லை?" என்று கேள்வி வேறு. நான் அந்த அலுவலரிடம் சொன்னேன், "சற்றே இதய பலவீனமுள்ள யாரிடமேனும் நீங்கள் இது போல பேசியிருந்தால் இந்நேரம் அவர் போய்ச் சேர்ந்திருப்பார். இது எதையுமே யோசியாது ஏன் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் வேலை செய்கிறீர்கள்?" என்று. ஏதேதோ சால்ஜாப்புகள், சப்பைக் கட்டுகள் சொன்னார். பின் எழுத்து மூலம் உங்கள் புகாரை கொடுத்துவிடுங்கள், மேற்கொண்டு இது தொடர்பாக உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று சொன்னார். சரியென்று எழுதிக் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்றேன். அதன் பிறகு எதுவும் தொலைபேசி அழைப்புகள் இல்லாததால் பிரச்சனை முடிந்துவிட்டது போல என்று எண்ணியிருந்தேன்.

இந்த மாதம் எனது கடனட்டைக்கான கட்டணக் கடிதத்தை எதிர்நோக்கியிருந்தவளுக்கு அடுத்த அதிர்ச்சியை அள்ளி வழங்கியது ஐசிஐசிஐ - சன்டேன்னா ரெண்டு மாதிரி வந்தது ரெண்டு கட்டணக் கடிதம். அந்தப் பெண்ணின் கடனட்டையில் என் முகவரியையே நிரந்தரமாக மாற்றி ஒட்டியாயிற்று போலும். இதில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் இடையில் பகுதி தொகையைக் வங்கிக்குச் செலுத்தியிருக்கிறார். எனவே ஏமாற்றும் எண்ணம் இல்லை என்பதுதான். வாடிக்கையாளர் சேவைக்கான எண்ணை அழைத்து ஒன்று இரண்டு என வரிசைப் படுத்தி பாடச்சொல்லி படாய்ப் படுத்தும் தடைகளையெல்லாம் தாண்டி யாரேனும் ஒரு நபரைப் பிடித்து பிரச்சனையை ஆதௌ கீர்த்தனாம்பரத்திலிருந்து எடுத்துச் சொல்லி விளங்க வைத்து முடித்த பின் அந்த நபர் அப்பாவியாய் கேட்பார், "நான் என்னங்க செய்யணும் இதுக்கு?" என்று. அப்படியே கத்திரி வெய்யிலில் தீ மிதிக்கப் போனது போன்ற பரவசம் உடலெங்கும் வழிய பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு "அய்யா/அம்மா, நான் அவள் இல்லை. இல்லவே இல்லை. எனவே அந்த அட்டையில் இருக்கும் என் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் மாற்றுங்கள்" என்று கெஞ்சியதும் அந்த நபர் பெருந்தன்மையோடு "சரிங்க, இதற்கான ஒரு சர்வீஸ் ரிக்வெஸ்ட் போட்டுடறோம்" என்று பெரிய மனது பண்ணிச் சொல்வார்கள். ஆனால் அந்த சர்வீஸ் ரிக்வெஸ்ட்டின் எண் மட்டும் மறந்தும்ம் தந்துவிட மாட்டார்கள். உங்களுக்கு அது குறுஞ்செய்தியில் வரும் என்று ஒரே பதிலுடன் அழைப்பு துண்டிக்கப் படும். காத்திருந்து காத்திருந்து கண் பூக்க , திரும்பவும் ஒன்று இரண்டு மூன்று என வரிசைப் படுத்திப் பாடாய்ப் பட ஆரம்பிப்பேன். அதே முடிவு. இரண்டு நாளில் என் செல்பேசியில் எண்கள் எல்லாமே கொஞ்சம் மங்கலாக ஆனது போலத் தோன்றுகிறது.

சரி, இது சரிவராது என்று அடுத்தகட்ட முயற்சியாக அந்த வங்கியின் இணைய தளத்தின் மடலனுப்பும் வசதியை உபயோகித்து மேலாளருக்கு இந்தப் பிரச்சனையை ஆதியோடந்தமாக விளக்கி ஒரு மடலனுப்பினேன். என்ன பதில் வந்திருக்குமென்று நினைக்கிறீர்கள்? "நீங்கள் குறிப்பிட்டுள்ள எண்ணுடைய அட்டையின் கட்டண விவரங்கள் லக்ஷ்மி என்பவரால் பெற்றுக் கொள்ளப் பட்டாயிற்று." இதுதான் அந்த பதில். மறுபடி ஒரு மடல் அனுப்பினேன் - "மடல்களை இப்படிக் கூட ஒருவரால் படிக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் சொல்லும் அந்த கட்டணக் கடிதத்தை பெற்றுக் கொண்ட லக்ஷ்மி என்கிற துரதிர்ஷ்டசாலி அடியேந்தான். எனக்கும் அந்த அட்டைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதைத்தான் விளக்கிக் கொண்டிருக்கிறேன் எனது தொடர்ச்சியான முறையீடுகளில். இது உங்களுக்கான எனது மூன்றாவது எழுத்து மூலமான முறையீடு. இதற்கும் பலனில்லையெனில் நான் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதிருக்கும்." இந்த கடைசி மடலை மட்டும் யாரோ ஒரு சாதாரன பொது அறிவுடைய மகானுபாவன் பார்த்திருக்கிறார் போல - பெரிய மனது வைத்து ஒரு சர்வீஸ் ரிக்வெஸ்ட் ஏற்படுத்தி அதை எனக்கு அனுப்பியுள்ள பதில் மடலில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஐந்து நாட்களுக்குள் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதியளித்திருக்கிறார். பார்ப்போம், என்ன நடக்கிறதென்று.

20 comments:

said...

//பார், இத்தனை வருடங்களாக இதை உபயோகிக்கிறேன், இது வரை ஏதேனும் சிக்கலில் சிக்கியதுண்டா என்ன? எல்லாம் நாம் பயன்படுத்தும் முறையில் இருக்கிறது//

அய்யோ.. நானும் இதே கேஸ்தான்.. என் ஆபீஸில் என் பெயரில் இன்னொருவர் இருக்காமல் இருக்க வேண்டுகிறேன்..

அப்புறம் "விதி வலியது" கரெக்ட்தான்..:)

said...

நாங்கெல்லாம் வரும்முன் காப்போம் கோஷ்டிங்க!

கிரெடிட் கார்டுன்னு முன்பு சொல்லும்பொழுதெல்லாம்,

'தேவையில்லை' என சுருக்கமாய் சொன்னால்..

இவர் ஏதோ வசதியான ஆள் போல, இவரை அமுக்கியே ஆகனும்னு கங்கணம் கட்டி பேசுவார்கள்.

அதற்கு பிறகு, சுதாரித்து..

இப்பொழுதெல்லாம் யாராவது பேசினால்

"நான் மளிகை கடை கணக்கப்புள்ளைங்க" என நான் முடிப்பதற்குள், லைனை வெட்டிவிடுகிறார்கள்.

said...

போன வாரமும் அதற்கு முந்தைய வாரமும் இதே பிரச்சினை எனக்கு தொடர்ச்சியான அழைப்புகள் வீட்டிற்கும், எனது கைத்தொலைபேசிக்கும். வேறு யாரோ ஒருவர் என் பெயருடனும் அவரின் வீட்டின் எண்ணும் என் வீட்டின் எண்னும் ஒரே எண்ணாக அமைய, அத்தோடு மட்டுமல்லாமல் தெருப்பெயர் தவிர எல்லாம் ஒரே மாதிரி அமைந்து விட என்னை அழைத்து பணம் பாக்கி என்னவென கேட்டார்கள் என் கிரெடிட் கார்ட் கடைசி நான்கு எண்ணை சொல்லிய பின்பு அது என்னுடையது அல்ல என்று தெரிந்து வைத்தார்கள். அந்த கடன் அட்டையின் முகவரியை என்னுடையதாக மாற்றி அனுப்பாமல் இருக்கும் வரை சரி.:((

said...

http://www.rbi.org.in/Scripts/FAQView.aspx?Id=24#2 இந்த தளத்திலும் தாங்கள் முறையிடலாம்

said...

ஏன் வினையூக்கி, தெருப்பெயர மாத்திக்கொடுத்தவர் உங்களுக்கு ரொம்ப தெரிஞ்சவரோ... அத மட்டும் தப்பா கொடுத்துருக்காரு :))

said...

ஐசிஐசிஐ வங்கியின் நுகர்வோர் சேவை மிகவும் மட்டமாக இருக்கிறது என்பதை எனது அனுபவத்திலும் உணர்திருக்கிறேன். முகவரி மாற்றத்திற்காக சுமார் ஒரு வருடம் அள்ளாட வேண்டியிருந்தது. உங்கள் அனுபவம் அதனை விட மோசமாயிருக்கிறது. இவர்களுக்கு மாற்றாக இன்னொரு நல்ல வங்கி வரவேண்டும்...

said...

அய்யோ பாவம்.. இப்ப கர்வ பலூன் என்ன ஆச்சுப்பா ... ஆனா அவங்க செய்த தப்புக்கு நீங்க என்னபண்னறது .. பார்த்து செலவு செய்யும் நல்லபொண்ணுன்னு..நீங்க இன்னமும் அதே கர்வமா இருந்துக்கலாமே.. :))

said...

http://makkal-sattam.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81


லக்ஷ்மி...தயவு செய்து இந்த லின்க் சென்று பார்க்கவும்.மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்...

என்டமூரி புத்தகங்கள் படித்தது குறித்து என் மகிழ்ச்சிகள்.

said...

என்னப்பா லக்ஷ்மி பிரச்சினை தீர்ந்ததா.

பயமா இருக்கு இந்த க்ரெடிட் கார்டை நினைத்தால். ஆனால் நேரத்துக்கு உதவியும் கூட இருப்பதால் தான் இந்த.....பயன்படுத்த வேண்டி இருக்கு.

said...

//அப்படியே கத்திரி வெய்யிலில் தீ மிதிக்கப் போனது போன்ற பரவசம் உடலெங்கும் வழிய பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு ...//



இந்தவரி அட்டகாசமா இருக்கு:-))))

பாவம் நீங்க உங்க கஷ்டத்தைச் சொல்லும்போது என் கண்ணுலே விழுந்ததைப் பாருங்க.

உங்க சர்நேமோட சேர்த்துக் கார்டு பதிவு பண்ணிக்கலையா?

நல்லவேளை..... இங்கே எங்கபெயரில் நாங்க மட்டும்தான்.

said...

லக்ஷ்மி நீங்கள் நுகர்வோர் குழுவுக்கு போகிறேன் என்றூ ஆஆ ஊஊ ஏண்ரு சத்தம் செய்தால் தான் ஏதாவது நல்லது நிகழும்

said...

வந்து ஆறுதலா நல்ல வார்த்தை சொல்லிட்டுப் போன மகாஜனங்களுக்கு பதில் கூட சொல்ல முடியாத நிலையில் மாட்டிக்கொண்டாயிற்று. மன்னிக்கவும். ஒரே ஒரு சந்தோஷ சமாச்சாரம், ஒரு வழியாக இந்தத் தொல்லைகள் ஓய்ந்துவிட்டன. அது கூட எனக்கும் அந்த கார்டுக்கும் சம்பந்தமில்லை என்பதால் இல்லை, அந்த இன்னொரு லக்ஷ்மியின் முகவரி வங்கிக்கு கிடைத்தாயிற்று. அதனால் எனக்கு விடுதலை.

அதே நேரம் எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த நிதித்துறை அலுவலர்களின் ஒத்துழைப்பு என்னால் மறக்க முடியாத ஒன்று. ஒரு கட்டத்தில் தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகளால் நான் எரிச்சலுற்றபோது வங்கி நிர்வாகத்துக்கு இது தொடர்ந்தால் எங்கள் அலுவலகத்துக்குள்ளே எவ்விதமான மார்க்கெட்டிங் செயல்களையும் உங்களை அனுமதிக்க மாட்டோம் எனுமளவு கடுமையான எச்சரிக்கை முன்வைக்கப் பட்டது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் முடிவு கிடைத்திருக்கிறது.

மீண்டுமொருமுறை இங்கு வந்து கருத்துத் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. தனித்தனியே பதில் சொல்ல இயலாமைக்கு மன்னியுங்கள்.

said...

"திண்ணை" யிலே ஆயில்யன் வீட்டு வாசலிலே அளவளாவிக்கொண்டிருந்தபோது
"லக்ஷ்மி" கரமான உங்கள் வலைப்பதிவுக்கு வந்தால், அங்கே
ஐசிஐசிஐ வங்கியின் க்ரெடிட் கார்டு மூலம் நீங்கள் பட்ட டென்சன் தெரியவந்தது.

உங்களைப் போல் இந்த வங்கியில் தொல்லைப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கில்.
சமீபத்தில் இந்த வங்கி சுப்றீம் கோர்ட்டின் கடுமையான எச்சரிக்கைக்கு ( கடனைத்
திருப்பி பெறும் வகையில் குண்டா ராஜ் நடத்தாதீர்கள் என ) உட்பட்டிருக்கிறது.

டெக்னாலஜியில் அதிக முன்னேற்றம் கண்டு கிட்டத்தட்ட எல்லா ஆபரேஷன்சும் கண்ட்ரோலிங் ப்ராசசிங் சென்டர் கணினி வழியே நடைபெறுவதால், நேரடி தொடர்பு கொள்ளும் ஊழியர்/ஆபிஸர்களுக்கு
புதிய வழி முறைகள் என்னென்ன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அல்லது இருக்கின்றன் என்பதே தெரியவில்லை என்பது மற்றொரு குறை.

சமீபத்தில் நான் கொடுத்த காசோலை மற்றவர் கணக்குக்கு பணம் கொடுத்திருப்பதாக ஆன் லைன்
சொன்னது. ஆனால், நான் கேட்டபோது, சரியான நபருக்குத்தான் பட்டுவாடா செய்யப்பட்டது என்றார்கள்.
அப்படியானால், அந்த தவறான பெயரை நீக்கி சரியான பெயரை போடுங்கள் என்றேன். சுமார் ஒரு மாதம்
ந்டையாய் நடந்து 20 தொலைப்பேசி மூலம் சத்தம் போட்ட பின் தான் நடந்தது. காரணம்: எப்படி திருத்துவது
என்று யாருக்கும் தெரியவில்லை.

இன்னும் பல. சமீபத்தில் குறைந்த பட்ச் தொகை ரூ 10000 இருக்கவேண்டும். ஆகையால், அதற்கு கீழ்
உள்ளவர்கள் கணக்கை முடித்துக்கொள்ளவும் என்றார்கள். இது போன்று லாப நோக்கு ஒன்றையே
கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

ஏதோ உங்கள் நல்ல காலம். தப்பித்து வந்து விட்டீர்கள்.
சனிக்கிழமை நவகிருஹத்திற்கு " வேயுறு தோளி பங்கன் .." என்று துவங்கும் கோளறு பதிகத்தை
சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்.
க்ரெடிட் கார்டு வேண்டாம் என திருப்பி தந்து விடுங்கள்.

m55n1ks89

said...

நீங்கள் செய்த மிகப்பெரிய தவறே மதாமாதம் கடன் தொகையை சரியாக செலுத்தி வருவதுதான்.

நானும் ஐசிஐசிஐ, கிரெடிட் கார்ட் வைத்திருந்த்தேன். கடனளவுக்கு மீறி ஆட்டம் போட்ட பின் வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை. முன்றில் ஒருபங்கை உடனே கட்டினால் மீதம் உள்ள தொகையை தள்ளுபடி செய்வதோடு கடன் கணக்கை முடித்துவிடுகின்றோம் என்றார்கள். உடனடியாக அடுத்த கடனட்டையிலிருந்து இந்த கடனட்டையை தலைமுழுகினேன்...

said...

லக்ஷ்மின்னு பேர வச்சுன்டு க்ரெடிட் கார்டு எதுக்கு ? நாராயணா நாராயண
பத்து பேருக்கு நீங்க க்ரெடிட் கார்டு கொடுக்கவேண்டாமா ?

கனக தாரா ஸ்தோத்ரம் படிக்கவும். அட் லீஸ்ட் வெள்ளிக்கிழமை சாயந்திரம்.

http://www.youtube.com/watch?v=VdSu0wdB81M


மீனாட்சி பாட்டி.
தஞ்சை.
http://pureaanmeekam.blogspot.com
http://movieraghas.blogspot.com

said...

என் சோக கதைகள்

http://poor-customer-care-icici.blogspot.com

said...

ஐசிஐசிஐ வங்கியை நாங்கள் கந்துவட்டி கடை என்றுதான் அழைப்போம்

Anonymous said...

ICICI வங்கியில் ஒரு கணக்கினை முடிப்பதற்கு 15 மாதங்கள் ஆன ஒரு அனுபவம்:

http://viewsreviews.wordpress.com/2008/02/02/to-close-a-bank-account-it-takes-15-months-that-is-icici/

--தீபக் வாசுதேவன்

said...

அப்புறம் என்ன ஆச்சு.. மேடம்..?

said...

அந்த வங்கி மட்டுமல்ல. என்னுடய அனுபவங்களை படியுங்கள்
http://cablesankar.blogspot.com/2008/08/blog-post_24.html

http://cablesankar.blogspot.com/2008/08/2.html

http://cablesankar.blogspot.com/2008/08/3.html