Wednesday, July 23, 2008

யெஸ். பாலபாரதியின் “ அவன்-அது= அவள் ” விமர்சனம்


சக பதிவரும், தோழருமான பாலபாரதியின் அவன் - அது = அவள் படிக்கக் கிடைத்தது. இந்த நெடுங்கதையை பற்றிய என்னுடைய சில கருத்துக்களை இங்கே பதிவு செய்ய எண்ணம். கதை மூன்றாம் பாலினத்தவர் பற்றியது. உண்மையிலேயே பதிவுலகிற்குள் லிவிங் ஸ்மைல் வித்யா வராதிருந்தால் இத்தகைய மனிதர்களைப் பற்றிய எனது கருத்து என்னவாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் என் மீதே அருவெறுப்பாக இருக்கிறது - இவர்களை மனிதர்கள் என்றே நினைத்திருந்திருக்கப் போவதில்லை என்ற கசப்பான உண்மை என்னைப் பற்றி நானே வலிந்து உருவாக்கி வைத்திருக்கும் முற்போக்கு அடையாளங்களை ஆட்டம் காண வைக்கிறது. முன்பே சு.சமுத்திரத்தின் வாடாமல்லியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த போதும் படிக்கத் தோன்றியதில்லை என்பதே இத்தகைய விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய என்னுடைய அலட்சியத்துக்கு சாட்சி. வித்யாவின் எழுத்துக்களே இத்தகைய சக மனிதர்களின் மீதான் என் பார்வையை மாற்றியமைத்தது எனலாம். இப்போது இந்த புத்தகம் இன்னும் கொஞ்சம் கூடுதல் தெளிவைக் கொடுத்திருக்கிறது.

தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருப்பீர்களா? ‘ஆமாம், ஒரே ஒரு முறை நினைத்திருக்கிறேன்’ என்று சொல்பவர்கள் நம்மில் அநேகர் உண்டு.

உடலளவில் ஆணாகவும், மனத்தளவில் பெண்ணாகவும் இருக்கும் சிலருக்கு வாழ்க்கை எப்படியிருக்கும்? தினம் தினம் செத்துப்போகலாம் என்று நினைத்துக் கொண்டே வாழ்க்கையை எப்படியாவது முழுமையாக வாழ்ந்து தீர்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே இவர்கள்.

தங்கள் வாழ்க்கையின் அவலத்தைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு திருநங்கை - வாழ முடியவில்லையே என்ற ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டவள், அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்தது.

எனது தந்தையின் மரணமும், தங்கையின் மரணமும் என்னை உலுக்கியதைவிட அந்தத் திருநங்கையின் தற்கொலை என்னை அதிகம் நிலைகுலைய வைத்தது. இதைவிட சோகம் அந்தத் தற்கொலைச் சம்பவம், காவல்துறைப் பதிவுகளில் விபத்து என்றே பதிவு செய்யப்பட்டது.

பெண்களாகவும் இல்லாமல் ஆண்களாகவும் இல்லாமல் திருநங்கைகளாக மாறியவர்களுக்கு வாழ்க்கையின் மீது இருக்கும் தீராத காதலே இந்தப் புனைவு. இது முழுவதும் புனைகதை என்று சொல்வதற்கு இல்லை. பல திருநங்கைகளின் வாழ்வில் இருந்து எடுக்கப்பட்ட சம்பவங்களின் தொகுப்பே இந்த நெடுங்கதை. இக்கதையை வாசிப்பவர்கள் திருநங்கைகளின் வாழ்வில் இருக்கும் வலியை உணர்ந்து, சக மனிதர்களாக அவர்களை மதித்தால் இந்தப் படைப்பு பூர்ணத்துவமடைந்துவிடும்.

இது நூலின் என்னுரையில் ஆசிரியர் இந்த நெடுங்கதையைப் பற்றிச் சொல்லியிருப்பது.

கதை என்று எடுத்துக் கொண்டால் என் பார்வையில் இது பிரச்சாரக் கதைதான். அதாவது பாலபாரதியின் பாஷையில் சொல்வதானால் கதை சொல்ல வேண்டிய அரசியலை முடிவு செய்து விட்டு எழுதிய கதை. சொல்ல வேண்டிய விஷயத்தை முடிவு செய்த பின் பலரிடம் பேசி சேகரித்த தகவல்களை சம்பவமாக மாற்றி அவற்றைக் கோர்த்து பின்னப்பட்ட கதை. ஆனால் அதிகம் அறியப்பட்டிராத ஒரு தரப்பாரின் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் ஆரம்பகாலப் படைப்புகள் இப்படித்தான் இருந்தாக முடியும் என்பதால் அது ஒரு பெரிய குறையாகத் தோன்றுவதில்லை. அடுத்தது கதை சொல்லப் பட்டிருக்கும் மொழி - இது மிக எளிமையானதாக இருப்பதால் அதற்கென அதிகம் மெனக்கிடாது விரைவாக கதைச் சரடைப் பிடித்துப் போக முடிகிறது. இத்தனைக்கும் வட்டார வழக்கு, திருநங்கையருக்கென இருக்கும் பிரத்யேக மொழி, அங்கங்கு குறுக்கிடும் மும்பையின் பேச்சு மொழியான ஹிந்தி என பல வேறுபாடுகளிருப்பினும் கூட அதிக பின் குறிப்புகள் தேவைப் படாத அளவு மொழி நடையை எளிமையாகத் தந்திருப்பதாலேயே கதையின் மிகக் கனமான ஆதாரப் பிரச்சனையை மட்டும் கவனிக்க முடிகிறது.

பெண்களுக்கு மட்டுமே நேருவதாக நாம் நினைத்திருக்கும் பல கொடுமைகள் இந்த மனிதர்களுக்கும் பொதுவானவை என்பதைச் சொல்வதோடு இவர்களுக்கேயான பிரத்யேகமான அவலங்களையும் பட்டியலிடுகிறது கதை. ஆனால் ஒன்றை குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும் - முதல் அத்தியாயத்தின் இறுதியில் கோமதி/கோபிக்கு நேரும் பலாத்காரம் முதலாக கடைசி அத்தியாயத்தின் கடைசி வரி வரை அடுக்கடுக்காக திருநங்கைகளின் பல பிரச்சனைகளை வரிசைப் படுத்தியிருந்தாலும் ஒரேடியாக அழுகாச்சி காவியமாகவும் போய்விடவில்லை கதை. அதே போல திருநங்கைகளின் ஒவ்வொரு பிரச்சனையையும் பற்றி பேசுவதற்காக ஒவ்வொரு கதாபாத்திரம் பிரத்யேகமாக படைக்கப் பட்டிருப்பது புரிந்தாலுமே கூட அப்பாத்திரங்கள் கதையோடு ஒட்டாது எந்த இடத்திலும் துருத்திக் கொண்டு தெரிவதில்லை. பாத்திரப் படைப்பு என்பது மிகவும் இயல்பாக இருக்கிறது.

திருநங்கையர் சமூகத்தின் செயல்பாடுகள் - அவர்களின் ஜமாத் எனப்படும் குழு வாழ்க்கை முறை, ஒவ்வொருவரும் ஒரு சில பெண்களை தத்து எடுத்துக் கொண்டு தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்வது, அவர்களுக்கான பிரத்யேக சடங்குகள்(மரண காரியங்களிலிருந்து அவர்களுக்கே உரித்தான குறி நீக்கம் செய்து கொள்ளும் நிர்வாண சடங்கு வரை) பல விஷயங்கள் விலாவாரியாக நுணுக்கமான தகவல்களைக் கூட விட்டுவிடாது சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

நூலில் பாலபாரதியின் என்னுரை மட்டுமே காணக்கிடைக்கிறது. ஆசிரியரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணோம். ஆசிரியருக்கு தன்னடக்கம் தடுத்திருக்குமேயானால் கூட பதிப்பகத்துக்காரர்களாவது இரண்டு வரியை எழுதிச் சேர்த்திருக்கலாம். வலையுலகிலிருக்கும் நமக்கு அவரைப் பற்றித் தெரியுமென்றாலும் ஒரு பொது வாசகருக்கு ஆசிரியரைப் பற்றிய குறிப்புகள் சற்றே படைப்பின் மீதான நம்பகத்தைக் கூட்டலாம். அடுத்த பதிப்பிலேனும் கவனத்தில் கொண்டால் நல்லது(அதற்கு அவரது ப்ரொஃபைல் மேலும் செறிவுள்ளதாக வாழ்த்துக்கள் :) ).

நூலைப் பொறுத்த வரை எனக்கு மிக முக்கியமான குறைபாடுகளாகத் தோன்றுவது இரண்டு விஷயங்கள் - ஒன்று கதை ரொம்பவே சுருக்க முடிந்து விடுவதாகத் தோன்றுவது. இதை ஆசிரியரும் உணர்ந்தே இருப்பதாகத் தோன்றுகிறது - இதை நாவல் என்று அழைக்காது நெடுங்கதை என்றே குறிப்பிடுவதன் மூலம். இன்னமும் இதில் பல பகுதிகள் விவரித்துச் சொல்லப்படலாம் என்றே தோன்றுகிறது.
இன்னொன்று திருநங்கைகளுக்கு கிடைக்கும் எந்தவிதமான ஆதரவையும் பற்றி இதில் குறிப்பிடப் படாதது. அதிகம் அவர்கள் மதிக்கப் படுவதில்லை என்றாலுமே கூட எங்கேனும் ஒன்றிரண்டு ஆதரவுக் கரங்கள் நீண்டுதானிருக்கும் நர்த்தகி நட்ராஜிற்கு கிடைத்த குருநாதரைப் போல. அது போன்ற விஷயங்களும் குறிப்பிடப்பட்டிருந்தால் சற்றே பாசிடிவ்-ஆகவும் இருந்திருக்கும்.

இது முதல் முயற்சி என்பது தெரியாத அளவுக்கு நூல் நேர்த்தியாகவே வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் பாலா

21 comments:

Anonymous said...

//ஆரம்பகாலப் படைப்புகள் இப்படித்தான் இருந்தாக முடியும் என்பதால் அது ஒரு பெரிய குறையாகத் தோன்றுவதில்லை//

எப்படித் தோன்றும்? :-) தோன்றியிருந்தால் 'தலை'யின் வாரிசுகள் சும்மா விட்டு வைப்போமா?

//ஆசிரியருக்கு தன்னடக்கம் தடுத்திருக்குமேயானால் கூட...//

இப்படியே எவ்வளவு நாளைக்குத்தான் இருப்பாராம்?? ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டா அவரு சொல்லாட்டியும் அவங்க வீட்டுக்காரம்மா அதையெல்லாம் கவனிச்சு செயய் மாட்டாங்களா? (அப்பாடா!! தலைக்கு ஆப்பு வச்சாச்சு)

said...

இந்தப் பதிவு படிக்கக் கிடத்ததற்கு நன்றி லக்ஷ்மி. நீங்கள் சொல்லியது அத்தனையும் உண்மை. வினோதமான உடை அல்ங்காரங்கள், கரடு முரடான் குரல் இவை எல்லாம் எப்பவுமே திருநங்கையரிடம் ஒரு சங்கடத்தைத் தோற்றுவிக்கும். இப்போது வித்யா மற்றும் அவர் தோழி திரைப்படம் கூட எடுப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர்களுக்கு நன்மை பல பெருக வாழ்த்துகள்.
நம் எண்ணத்தில் மாறம் கொண்டுவர முயற்சிக்கு பாராட்டுகள்.

said...

நானும் படிச்சிட்டேன் ரொம்ப நல்லாயிருக்கு உங்க விமர்சன பார்வை :)

ப்ரொபைல் நல்லாவே போடலாம் அடுத்த பதிப்புல

Anonymous said...

பாலாண்ணாவிற்கு வாழ்த்துக்கள் :)

said...

லட்சுமி,

நல்லதொரு விமர்சனம்.. சமிபத்தில் ஒரு ஆண்டுக்கு முன்னர் பாலாவை மதுரையில் சந்தித்த பொழுது வரப்போகும் படைப்பு என எதோயோ பேசிக்கொண்டு இருந்தார்...:)

அது புத்தகவடிவில் வந்தது மகிழ்ச்சி.... :)

மதுரை செல்லும் பொழுது வாங்கி படிக்க வேண்டும்.

said...

வித்தியாசமான விமர்சனப் பார்வை... :)

said...

என் பின்னூட்டம் வெளியிடப்படவில்லையே? ஒருவேளை பாகச பின்னூட்டங்கள் இங்கே நாட் அலவ்டா? :-(

said...

தங்கள் விமர்சனம் புத்தகத்தை படிக்கலாம் என முடிவுக்கு வந்திருக்கிறேன்.

திருநங்கைகளை பொறுத்த வரைக்கும் என் 20 வயதில் மாற்று பாலினம் என்ற அடிப்படையில் பெண்களை அறிதல் என்ற உணர்வு, திருநங்கைகளை பற்றிய தெரிவதற்கான தேடலும் இருந்தது.

ஒருமுறை கி.ரா. இரண்டு சிறுகதைகள் எழுதியிருந்தார். அதில் ஒன்று புராண கதையாகவும், மற்றொன்று கி.ரா. திருநங்கையை புரிய வேண்டுமென்பதற்கான ஆர்வம் அதனால் ஒரு திருநங்கை வரவழைத்து பேசிய நடைமுறை அனுபவமாய் பதிவு செய்திருப்பார்.

சில ஆண்டுகளூக்கு முன்பு, உட்லண்ட்ஸ்ல் ஒரு படம் பார்த்தேன். ஒரு பெண் ஆணாய் மாறி தன் ஆண் நண்பர்களுடன் பழகிகொண்டிருப்பார். இதற்கிடையில் சக தோழி ஒருவரோடு காதல் வேறு.

இறுதியில் திருநங்கை என அறியும்பொழுது நண்பர்களே பலாத்காரம் செய்து கொன்று விடுவார்கள். படம் பல அதிர்வுகளை தந்தது. பல ஆண்டுகள் கழித்து இன்றைக்கு மனதில் நிற்கிறது.

சமூக விழிப்புணர்வில் தான், திருநங்கைக்களுக்கான நல்வாழ்வு இருக்கிறது.

said...

மிக நல்ல விமர்சணம்.

புத்தகம் அனைத்து கடைகளிலும் கிடைக்கிறதா.

--
ஆண் - பெண் என்ற இரு நிலைகளுக்கு நடுவில் பல நிலைகள் உள்ளன.

அதில் திருநங்கைகள் ஒரு நிலை தான். மற்ற நிலையில் (உதாரனம் Hypospadiasis, CAH) உள்ளவர்களின் நிலைமை மேலும் பரிதாபம்.

பாலினம் (Sex) என்பது
Chromosome Sex (Genotype)
Hormonal Sex
External Genitalia
Psychological Sex என்று நான்கு முக்கிய வகைப்படும்

இதில் திருநங்கைகள் பொதுவாக
Chromosome Sex - ஆண்
Hormonal Sex - ஆண்
External Genitalia - ஆண்
Psychological Sex -பெண் என்ற நிலையிலிருந்து

அறுவை சிகிச்சை மூலம் External Genitalia மாற்றிவிட்டு
Chromosome Sex - ஆண்
Hormonal Sex - பெண்
External Genitalia - பெண்
Psychological Sex -பெண் என்ற
நிலைக்கு மாறுகிறார்கள்

said...

இது மட்டுமல்லாமல்
Chromosome Sex - ஆண்
Hormonal Sex - பெண்
External Genitalia - பெண்
Psychological Sex -பெண்
என்ற நிலையில் சிலர் உள்ளனர். அவர்கள் பெண்ணாகவே கருதப்படுகிறார்கள். வளர்க்கப்படுகிறார்கள். 20 வயதாகியும் பூப்பெய்ய வில்லை என்று மருத்துவ ஆலோசனை பெறும் பொழுது தான் விஷயம் பெற்றோருக்கு தெரிகிறது.

உங்கள் மகளுக்கு புற்றுநோய் என்ற செய்தியை கூறுவதை விட, உங்கள் மகள் ஆண் என்ற செய்தியை கூறுவது கடினம் :( :(

said...

அதேப்போல்
Chromosome Sex - ஆண்
Hormonal Sex - ஆண்
External Genitalia - பெண்
Psychological Sex - பெண்
என்ற நிலையில் (உதாரணம் ஒரு தமிழக விளையாட்டு வீராங்கனை) இருக்கும் நபர்களின் வாழ்க்கையின் சோகம் எந்த அளவு என்று கற்பனை செய்வதே கஷ்டம்

ஒரு பிரபல் டென்னிஸ் வீராங்கனை கூட இப்படி என்று வதந்தி

said...

அதை விட
Chromosome Sex - பெண்
Hormonal Sex - ஆண்
External Genitalia - ஆண்
Psychological Sex - ஆண்
என்ற நிலையில் உள்ள பெண்னை, ஆண் என்று நினைத்து (காதலித்து) திருமணம் செய்த பெண்ணின் நிலையை ஒரு கணம் நினைத்து பாருங்கள். எனக்கு தெரிந்து இப்படி ஒரு சோகக்கதை உள்ளது. மருத்துவ சோதனை முடிவுகளை பார்த்து விட்டு “விவாகரத்து செய்யுங்கள்” என்று (காதலித்து திருமணமான 3 மாதமே) கூறும் துர்பாக்கிய நிலையில் உள்ள மருத்துவரின் கஷ்டம் எப்படி என்று சிந்திக்க முடிகிறதா :( :(:(

said...

இந்த விஷயத்தில் அறியப்படாத விஷயங்கள் பல உள்ளன. உடைக்கப்பட வேண்டிய தடைகள் பல உள்ளன.

எந்த ஒரு கல்லை உடைக்க வேண்டுமென்றாலும் பல அடிகள் தேவை. அந்த கல் நூறாவது (அல்லது ஆயிரமாவது) அடியில் தான் உடையும். ஆனால் முதல் அடி இல்லையென்றால் ஆயிரமாவது அடி வீண் தான்

பதிவர் பாலா சுத்தியலை எடுத்து முதல் அடியை அடித்து உள்ளார்.

வாழ்த்துக்கள் !!!

Anonymous said...

பா.க.ச பின்னூட்டங்க்ள் அனுமதிக்கப்படாத பாசிச போக்கைக் கண்டித்து தலை உண்ண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்குவார்.
விரைவில இது குறித்த அறிவிப்பை பாகச வெளியிடும். சங்கத்து சிங்க்ங்க்ளை தூண்டிவிட வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம்

said...

வல்லி அம்மா, கென், தமிழ்ப் பிரியன், தூயா, இராம் - அனைவருக்கும் நன்றி.

லக்கி, பாகச பின்னூட்டங்களை வெளியிடாமைக்கு ஒரு பொது மாப்பு கேட்டுக்கறேன்பா. இதை பாலபாரதிய பத்தின பதிவா பாக்காம அந்தப் புத்தகத்துக்கான பதிவா நினைச்சு மன்னிச்சு விட்டுடுங்களேன், ப்ளீஸ்...
ஆசிப், நீங்க கூட இந்த புத்தகதை ஓசில தரலைன்ற கோபத்துல தலைய பத்தி ஒரு பாகச பதிவு போடப் போறதாச் சொன்னீங்களே, அதை கொஞ்சம் சீக்கிரம் போட்டால் இந்த கும்மி/பி-ய எல்லாம் அங்க மாத்திவிட்டுடலாம். ப்ளீஸ்...

டாக்டர் சார், உங்க பார்வையிலிருந்து நிறைய முக்கியத் தகவல்கள் சொல்லியிருக்கீங்க. இதையெல்லாம் சேர்த்து ஒரு தனி பதிவு போடலாமே நீங்களும்.
//எந்த ஒரு கல்லை உடைக்க வேண்டுமென்றாலும் பல அடிகள் தேவை. அந்த கல் நூறாவது (அல்லது ஆயிரமாவது) அடியில் தான் உடையும். ஆனால் முதல் அடி இல்லையென்றால் ஆயிரமாவது அடி வீண் தான்

பதிவர் பாலா சுத்தியலை எடுத்து முதல் அடியை அடித்து உள்ளார்.// அடுத்தடுத்த அடிகளை நாமும் அடிக்க ஆரம்பிக்கலாமில்லையா?

//தங்கள் விமர்சனம் புத்தகத்தை படிக்கலாம் என முடிவுக்கு வந்திருக்கிறேன்.// பாலா சார், எதுனா கமிஷன் கிடைக்குமா? ;)

சாக்ரடீஸ் - //சமூக விழிப்புணர்வில் தான், திருநங்கைக்களுக்கான நல்வாழ்வு இருக்கிறது// மிகவும் சரியே.

said...

டாக்டர் ப்ரூனோ அவர்களின் எந்தப் பதிவையும், எந்தப் பின்னூட்டத்தையும் வாசித்தால் ஏதோ ஒரு விஷயத்தையாவது புதியதாக தெரிந்துகொள்ளமுடியும். அவர் ஒரு நல்ல வாத்தியார்...

செய்திகளுக்கு நன்றி டாக்டர் ப்ரூனோ!


//லக்கி, பாகச பின்னூட்டங்களை வெளியிடாமைக்கு ஒரு பொது மாப்பு கேட்டுக்கறேன்பா. இதை பாலபாரதிய பத்தின பதிவா பாக்காம அந்தப் புத்தகத்துக்கான பதிவா நினைச்சு மன்னிச்சு விட்டுடுங்களேன், ப்ளீஸ்...
//

ஓக்கே.. ஆனாலும் பாபாவை விடுறதா இல்லே. பாகச என்ற பெயரில் உலகின் அனைத்து மொழிகளிலும் ஒரு வெப் போர்டலை விரைவில் ஆரம்பிக்கும் எங்களது உறுதி குலையவே குலையாது.

said...

//அடுத்தடுத்த அடிகளை நாமும் அடிக்க ஆரம்பிக்கலாமில்லையா? //

இங்கு ஒரு அடி உள்ளது ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 1

சந்தேகங்களை கேட்கலாம்.

said...

//சந்தேகங்களை கேட்கலாம்.//

சந்தேகமே இல்லையா :) , முற்றிலும் புரியவில்லையா :(

said...

வாழ்த்துகள் பாலா!

ரிப்பீட்டேய்

said...

டாக்டர் சார், மன்னிக்கணும். கடைசி கமென்ட்டை போட்டபிறகு ப்லாக் பக்கமே எட்டிப் பாக்கலை. கமென்ட் மாடரேஷன் கூட ப்ராக்ஸி மூலம்தான் :-) அதான் உங்க போஸ்ட் படிச்சுக் கருத்துச் சொல்ல முடியலை. இன்னிக்கு நிச்சயம் பாத்துட்டு சொல்றேன்.

said...

வெகு நேர்த்தியான விமர்சனம்.

நானும் வாசக அனுபவம் எழுத முயல்கிறேன். ஆசிரியரின் முதல் புனைவு இதுதான் என்பது நம்பவே முடியவில்லை என்பதுதான் உண்மை.

ரொம்ப இயல்பா, வலிந்து திணிக்காத மெஸேஜுடன், சுவாரசியமா எழுதியிருக்கார்.