Tuesday, January 08, 2008

குடிப்பதே சிறப்பென்றோமா?

காலம் காலமாக கேட்கப் பட்டு வரும் அதே கேள்வி -பொண்ணுங்களும் சிகரெட் குடிச்சு, தண்ணி அடிச்சு கண்டவனோட சுத்தி சீரழிஞ்சு போறதுதான் விடுதலையா? நாம யாரும் நம்ம கூட்டத்துல இருக்கறவங்கதான் இப்படி தப்பான கருத்தச் சொல்லிட்டாங்களோ - அதாவது பெண்களும் சிகரெட் குடிப்பதும், தண்ணி அடிப்பதும், கண்டவனோட போறதும்தான் பெண் விடுதலைன்னு சொல்லிட்டாங்களோன்னு சுத்தி சுத்தி தேடினாலும் அப்படியெதுவும் கிடைக்காது. எங்கயாவது ஒன்னு ரெண்டு பேர் ஒரு பெண் சிகரெட் குடிக்கும் போது அதை சிகரெட் உடல் நலத்துக்கு தீங்கானதுன்னு மட்டும் சொன்னாப் போதாதா, ஒரு பொண்ணா இருந்துகிட்டு நீ சிகரெட் பிடிச்சா எங்க பண்பாடு என்ன ஆகுறதுன்னு கேட்பது ஆணாதிக்கத் திமிரின் வெளிப்பாடுன்னு சொல்லியிருப்பாங்க. அதுலேர்ந்து இந்த ஒரு வாதத்தை - அதாவது பெண் உரிமை பேசுறவங்க எல்லாம் சிகரெட் குடிக்கவும் தண்ணி அடிக்கவும் கண்டவனோட படுத்து எழுந்திருக்கவும்தான் உரிமை கேக்கறாங்கன்ற வாதத்தை டெரிவ் பண்ணி வச்சுகிட்டு என்ன கேட்டாலும் இதுக்குத்தான் திரும்ப திரும்ப விளக்கம் கொடுப்பாங்க. அட என்னடா இது, கேக்காத கேள்விக்கு ஏன் பதில் சொல்றாங்க, நாம கேக்கற விஷயத்தைப் பத்தி ஏன் எதுவுமே பேச மாட்டேங்கறாங்கன்னெல்லாம் நாம யோசிச்சு குழம்பி கொஞ்சம் சைலன்ட் ஆயிடுவோமா, உடனே பாத்தியா, கேட்ட கேள்விக்கு அவிங்களுக்கு பதில் சொல்லத்தெரியல பத்தியா? இந்தப் பெண்ணுரிமையப் பத்திப் பேசுறவயங்க எல்லாம் இப்படித்தான்ப்பா, அரைகுறைங்க... புடலங்காப் பொரியல் செய்யத்தேன் லாயக்குன்னு ஒரு முத்திரய நம்ம மேல பசக்குனு குத்திபுட்டு அடுத்த ஆள்கிட்டப் போயி அதே தண்ணி, சிகரெட், ப்ளா... ப்ளாவை ஆரம்பிச்சுடுவாய்ங்க...

இந்த மாதிரி நாம சொல்லாத விஷயத்தை நம்ம மேல ஏத்திப் பேசும் டெக்னிக்கை பலகாலமா எல்லோரும் உபயோகிச்சுகிட்டேதான் இருக்காங்க. கவிதாயினி, முத்தமிழ் வித்தகி, திருமதி. கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்கள் எழுதின ஒரு கட்டுரை நினைவுக்கு வந்தது (யப்பா, எதுனா பட்டத்தை விட்டிருந்த பின்னூட்டத்துல சொல்லிடுங்கப்பா, திருத்திடறேன். நம்ம நாட்டு அரசியல்வாதிகள் இன்ஷியல தவறுதலா மாத்தி போட்டா டென்ஷன் ஆகறதை விட அதிகமா பட்டங்கள் விட்டுப் போயிட்டா டென்ஷன் ஆகிடுவாங்க. அக்கா முழுசா அந்த லெவலுக்கு போயிட்டாங்களா இல்லையான்னு தெரியலன்னாலும்கூட எதுக்கு ரிஸ்க்? ஆட்டோல்லாம் அனுப்பினா தாங்க மாட்டேன் நான். அதுனால நமக்குள்ள என்ன பிரச்சனை இருந்தாலும் அதையெல்லாம் மறந்து இந்த விஷயத்துல மட்டும் ஹெல்ப் மீ ப்ளீ.......ஈஈஈஸ்.) இது வந்து அவங்க இந்தியா டுடேல பத்தி எழுதிகிட்டிருந்தப்ப எழுதின கட்டுரை. 'கறுக்கும் மருதாணி' அப்படின்னு ஒரு புத்தகமாவும் வந்திருக்கு.

சமூகப் பிரச்சினைகளைப் பற்றி ஆர்வமும் அக்கறையும் உள்ள பலர் ஆதங்கத்தோடும் தார்மீகக் கோபத்தோடும் சமூக சீரழிவுகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் அவர்களே பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் என்பது பற்றிப் பேசும்போது சுயதணிக்கை ஒன்றை உருவாக்கிக் கட்டுப்பாடு, எல்லைகள் என்பதற்கு முன்னுரிமை தரத் தொடங்கிவிடுவார்கள்.

பெண்களுக்கு இடத்தைக் கொடுத்தால் அவர்கள் மடத்தைப் பிடித்துவிடுவார்கள் என்ற பயம் இவர்களை அரித்துக் கொண்டே இருக்கிறது. பெண்கள் முன்னேற்றம் பற்றிப் பேசிய சீர்திருத்தவாதிகள் கூட பெண்களின் விடுதலை என்பதும் அவர்களின் உரிமைகள் என்பதும் சில வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்கிறார்கள். மனித உரிமை என்பது சில வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேன்டுமென்பதைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், மனித உரிமையில் ஆணின் உரிமை வேறு; அதன் சதவீதம் வேறு. பெண் சற்றுக் குறைந்த சதவீதத்திற்கே பாத்தியதை உள்ளவள் எனும் போதுதான் பிரச்சனைகள் தோன்றுகின்றன.

பொதுவாகப் பெண்விடுதலை என்றால் பலருக்கு குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி, உதட்டுச் சாயம், ஜீன்ஸ் அல்லது குட்டை ஸ்கர்ட், கையில் வர்ஜீனியா ஸ்லிம்ஸ் அல்லது ஏதோ ஒரு மதுவகை - இப்படி ஒரு தோற்றம்தான் கண் முன் விரிகிறது.

பெண் விடுதலையைப் பற்றி என்னிடம் பேசும் பலர் அடிக்கடி கேட்கும் கேள்வி, "பெண் விடுதலை எல்லாம் சரி, ஆனால் விடுதலை என்கிற பெயரில் குடிப்பது, சிகரெட் பிடிப்பது இதெல்லாம் சரியா?" இந்தக் கேள்வியை எத்தனை முறை சந்தித்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது.

பெண் விடுதலை என்பது உடை, உணவு அல்லது சில பழக்கவழக்கங்களுக்குள் சுருங்கி விடும் சிறிய விஷயம் இல்லை. பெண் தன் வாழ்க்கையை தன் விருப்பபடி தீர்மானிக்கும் உரிமை. தனது லட்சியங்களை அடைய அவள் செய்ய வேண்டிய தியாகங்களைத் தீர்மானிக்கும் உரிமை. தனது வாழ்க்கையைத் தானே வாழும் உரிமை.

குடிப்பதும் புகைப்பது தனிமனித விருப்பம். அந்தப் பழக்கங்களுக்கு அடிமையாவது என்பது உடல் நலத்தைப் பாதிக்கக்கூடியது. இதற்கும் பெண் விடுதலைக்கும் என்ன சம்பந்தம்? குடிப்பதும் புகைப்பதும்தான் எங்கள் தலையாய உரிமை; இதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம் என்று எந்தப் பெண்ணியவதி சொல்லிக் கேட்டிருக்கிறார்கள் இவர்கள்? இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெண் சிசுக் கொலை நடக்கிறது. கல்வி என்பது பல பெண்களின் எட்டாத கனவாகவே இருக்கிறது. வரதட்சிணை ஒழியவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாது பெண் விடுதலையைப் புகை வட்டத்துக்குள் சிலர் அடக்க நினைப்பது வேடிக்கை.

இந்தியாவில் ஆண்டுதோறும் கள்ளச் சாராயத்தால் இறந்து போவோரின் எண்ணிக்கை 3000க்கும் மேல். இதில் கணிசமான அளவு பெண்களும் அடங்குவர். இவர்களில் எத்தனை பேரின் காதுகளில் பெண் விடுதலை என்ற வார்த்தை ஒரு முறையேனும் விழுந்திருக்கும் சாத்தியம் உள்ளது?

மேல்தட்டு வர்க்கத்து விருந்துகளில் கலந்துகொள்ளும் பல பெண்கள் 'சோஷியல் டிரிங்கர்ஸ்.' இவர்களில் எத்தனை பேருக்குத் தங்களின் உரிமை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது?

ஆந்திராவில் - குறிப்பாக ராஜமுந்திரி போன்ற பகுதிகளில் - பெண்கள் எரியும் சுருட்டின் எரியும் பக்கத்தை வாயின் உட்புறமாக வைத்துப் புகைப்பார்கள். இவர்கள் வேலையை முடித்துவிட்டு இப்படிப் புகைத்துக்கொண்டே பெண் விடுதலை பற்றியும் பேசுகிறார்களா? பேசினால் நன்றாகத்தான் இருக்கும்.

சில அன்பான ஆண்கள் இதற்குக் கூறும் காரணம்: நாங்கள்தான் தவறான வழியில் போய் கெட்டுச் சீரழிந்து போகிறோம்; நீங்களும் அதையேன் செய்ய வேண்டும்? இந்த அக்கறை என்னைக் கண் கலங்கச்செய்துவிட்டது. கர்ப்பகிரகத்திலுள்ள விக்கிரகங்கள் கீழே இறங்கி வர எப்படி அனுமதிக்க முடியும்? அவை பாதுகாக்கப்பட வேண்டியவையாயிற்றே?

"...என் அரை
முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து,
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ,
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்தன் மரபின் ஊனதுவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி..."
(பாடியவர்: ஒளவையார்;
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி;
திணை: பாடாண்)


முதுபாசி போன்ற என் உடை களைந்து, புதுமடி உடுத்தச் செய்து, மகிழ்வு தரும் கள்ளும் மாமிசச் சாதமும் வெள்ளிக் கலத்தில் அதியமான் ஊட்டினான் என்கிறார் ஒளவையார்.

“சிறியகட் பெறினே, எமக்கீயும்;மன்னே
பெரியகட் பெறினே,
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே...”

(பாடியவர்:ஒளவையார்
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.)

சிறிய அளவு மதுவைப் பெற்றால் எனக்கு அளித்திடுவான். பெரிய அளவு மதுவைப் பெற்றால் யாம்பாட, அதை எமக்கு அளித்துத் தானும் உண்பான்.


இந்த அடிப்படையில் ஒளவையாரும் பெண்ணியவாதியாகிறார் என்றா, அவரைப் பெரிய மனதோடும் பேருவகையோடும் பெண்ணியவாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எழுதியவர்: கனிமொழி

26 comments:

said...

அப்படியே இன்னொரு விஷயம் சொல்ல விட்டுப் போச்சுங்க. அது வந்து பாருங்க, என்னமோ ஜீன்ஸும் ஸ்கர்ட்டும் போடறதாலதான் பாலியல் வன்முறைகள் நடக்குதுன்னு சொல்ற மாகானுபாவர்களே, கிராமங்களில் எல்லாம் போன தலைமுறை வரையிலும் மேல ஜாக்கெட் போடாமதான் பொம்பளைங்க சேலை கட்டிகிட்டு தெரிஞ்சாங்க. கிராமம் முழுக்க எல்லாப் பெண்களும் பலாத்காரத்துக்குட்படுத்தப் பட்டவங்களா என்ன? நம்ம தாத்தாங்களுக்கெல்லாம் ஜாக்கெட்டே இல்லாதப்ப கூட தூண்டப்படாத உணர்ச்சி, உங்களுக்கெல்லாம் ஜன்னல் வச்ச ஜாக்கெட்டை பாத்ததுமே பொத்துகிட்டு புறப்படுதுன்னா தப்பு யார் மேலன்னு கொஞ்சம் சிந்திச்சுப் பாத்தா நல்லது. இன்னிக்கும் கூட கேரள மாநிலத்துல பாத்தீங்கன்னா எல்லாப் பெண்களும் சகஜமா முண்டும் ப்ளவுசும் மட்டும் போட்டுகிட்டு போறாங்க. அப்ப அங்க இருக்கற ஆண்கள் எல்லாம் எப்படி புலனடக்கத்துடன் இருக்காங்க? பார்டர் க்ராஸ் பண்ணி இங்கிட்டு வந்துட்டா மாத்திரம் எப்படிங்க உணர்ச்சித் தூண்டலின் அளவு வேறுபடுது?

Anonymous said...

//இன்னிக்கும் கூட கேரள மாநிலத்துல பாத்தீங்கன்னா எல்லாப் பெண்களும் சகஜமா முண்டும் ப்ளவுசும் மட்டும் போட்டுகிட்டு போறாங்க.//

சும்மா வயித்தெரிச்சலைக் கிளப்புற மாதிரி இல்லாதது பொல்லாததெல்லாம் சொல்லக்கூடாது. அவுக எல்லாம் 'நைட்டி'க்கு மாறிட்டாங்கப்பு :-((( அப்படின்னு கேரளாக்காரனுவளே பொலம்பித் தீர்க்குறானுங்க. நீங்க வேற.

பதிவா? வழக்கம் போல தமாசா இருந்திச்சு :-))))

சாத்தான்குளத்தான்

said...

ஹி ..ஹி சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது ...நீங்க எந்த பக்கம் இருந்து பேசுறிங்கனே புரியலை!

இப்போ பெண்கள் குடிக்கலாம் சொல்றிங்கலா இல்லையா? அப்படி குடிப்பதை பெண்ணுரிமைனு சொல்லக்கூடாது ஆனால் குடிக்கலாம்னு சொல்றிங்களா? புரியலை விளக்கவும்!

இந்த அவ்வையார் மது குடிப்பதாக பேசியது எல்லாம் ரொம்ப பழைய மேட்டர், இதை நீண்ட காலம் முன்னர் ஒரு சிறு பத்திரிக்கையில் படித்த நினைவு!

மேலும் பெண்கள் உடை வைத்து ஆண்கள் அத்து மீறுவதாக சொல்வது கேணத்தனமானது, அது வேறு வகையான ரசயான மாற்றம் என்றே நினைக்கிறேன். மும்பை சம்பவத்தில் கூட 80 பேரும் ஒரே குழுவை சேராதவர்கள் அப்படி இருக்கும் போது எப்படி ஒருங்கிணைந்த ஒரு சிந்தனை வந்து அப்படியே செயல்பட்டார்கள்?

உதாரணமாக ஒரு குழுவில் இருப்பவர்கள் மட்டுமே உடனடியாக ஒத்த கருத்தை எட்டி அதன் படி செயல் பட முடியும், அதுவும் பொதுவில் 4-5 பேர் தவறு இழைக்க முயன்றால் அதைப்பார்ப்பவர்களும் தவறு இழைக்க போக மாட்டார்கள், ஆனால் ஏன் இப்படி நடக்கிறீர்கள் , என்ன என்று கேட்க தான் போவார்கள். ஆனால் 80 பேர் எப்படி ஒருங்கிணைந்து ஒரே செயலை செய்யப்போனார்கள்?

இது ஏதோ ஒரு வகையில் "out of proportion" ஊதப்பட்ட சம்பவமாக தான் இப்போது நினைக்க தோன்றுகிறது.ஆனால் அங்கே நடந்தது ஒரு கேவலமான சம்பவம், அதன் காரணம் உடை மட்டும் தான் என்று எதன் அடிப்படையில் பேச ஆரம்பித்தார்கள் என்றே தெரியவில்லை!

உடை தவிர மேலும் பல காரணிகள் அங்கே இருக்கு, வெறும் மதுவல்ல,போதை மருந்தும் அங்கே பங்கு பெற்று இருக்கிறது(ஆண்,பெண் இரு பாலரும் அதைப்பயன் படுத்தி இருக்க வேண்டும்)

said...

சூப்பர்.

இங்கே நம்முர்லே சிகரெட் பிடிக்கும் ஆண்கள் எண்ணிக்கை ரொம்பக் குறைஞ்சுபோச்சாம். சிகரெட் விற்பனை குறையலை.

ஜீன்ஸ் போட்டா பாதுகாப்புதானேங்க. இதுக்கு ஏன் இப்படி......

said...

ஆசிப், வவ்வால், துளசி - அனைவருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//ஜீன்ஸ் போட்டா பாதுகாப்புதானேங்க. இதுக்கு ஏன் இப்படி......// மேல ஆசிப்போட கமென்ட்ட படிச்சீங்களா, நாம பாதுகாப்பா உடுத்தினாலும் அவங்களுக்கு எரிச்சலாத்தான் இருக்கும். என்ன செய்ய?? :))))

//அவுக எல்லாம் 'நைட்டி'க்கு மாறிட்டாங்கப்பு :-((( அப்படின்னு கேரளாக்காரனுவளே பொலம்பித் தீர்க்குறானுங்க.// இப்ப புரியுதா அண்ணாச்சி, இந்த ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்களைத் திட்டறதுதான் வேலை. மூடிகிட்டிருந்தாலும் அதுக்கும் ஒரு திட்டு. இல்லைன்னாலும் திட்டினா நாங்க என்னதான் செய்ய? :)))

//இந்த அவ்வையார் மது குடிப்பதாக பேசியது எல்லாம் ரொம்ப பழைய மேட்டர்,// ஆமா வவ்வால், யாரு இப்ப நாந்தான் புதுசா இதைக் கண்டுபிடிச்சேன்னு இங்க சொன்னா? சங்ககாலம் ரொம்ப பழைய காலம்தான். அப்பமே புடிச்சு நடக்கற சங்கதிதான் இது. யாரு இல்லைன்னா? ஐயா வவ்வாலு, தெரியாமத்தான் கேக்கறேன், எதைப் பத்தி பேசினாலும் இது இப்பத்தான் தெரியுமா, இன்னிக்குதான் தூங்கி முழிச்சீங்களா, இது ஏற்கனவே தெரிஞ்ச விஷயம்தானேன்னு ஒரு டெம்ப்ளேட் பதில் ரெடியா வச்சிருக்கீங்களே, ஏன் ஏற்கனவே பேசின விஷயம்னாலோ இல்லை பழைய விஷயம்னாலோ அதைப் பத்தி பேசவே கூடாத என்ன? இந்த மும்பை சம்பவத்தைப் பத்தி பேசுறப்ப எல்லாரும் ஏதோ நவயுக பெண்கள்தான் குடிக்கறாங்க, அது நம்ம கலாச்சாரத்துல இல்ல, கர்மாந்தரத்துல இல்லைன்னு சொன்னவங்களுக்கு பதில் சங்ககாலத்திலிருந்தே மது நமது கொண்டாடலின் அங்கமா இருந்திருக்கு, ஆண்/பெண் பேதமின்றி எல்லோரும் அருந்தி மகிழ்ந்து, குறிப்பா அதனால எந்தப் பிரச்சனையுமில்லாம களிப்போடு வாழ்ந்திருக்காங்கன்னு நிறுவவே அவ்வையார் உதாரணத்தை திரும்பத் திரும்ப பேச வேண்டியிருக்கு. இனி எத்தனை முறை இவ்விஷயங்கள் பேசப் பட்டாலும் நாங்களும் இதையேதான் மறுபடி மறுபடி பேச வேண்டியிருக்கும். 'அவங்களை நிறுத்தச் சொல்லுங்க, நாங்களும் நிறுத்தறோம்' இதான் எங்க பதில். :) :) :)

//அதுவும் பொதுவில் 4 - 5 பேர் தவறு இழைக்க முயன்றால் அதைப்பார்ப்பவர்களும் தவறு இழைக்க போக மாட்டார்கள், ஆனால் ஏன் இப்படி நடக்கிறீர்கள் , என்ன என்று கேட்க தான் போவார்கள். ஆனால் 80 பேர் எப்படி ஒருங்கிணைந்து ஒரே செயலை செய்யப்போனார்கள்?// ஏற்கனவே சென்னை சத்தியம் தியேட்டரில் இது போன்றதொரு சம்பவம் நடந்தது நினைவு இருக்கலாம். இது போன்ற கும்பல் வன்முறைக்கெல்லாம் (பிக்பாக்கெட் அடிக்கறவன் கிடைச்சா தர்ம அடி போடறதிலிருந்து இது போன்ற சம்பவங்கள் வரை) எல்லாத்துக்குமே காரணம் பொதுவா சமூகத்தில் அதிகரிச்சிருக்கற பொதுவான எரிச்சல் மனப்பான்மை, விரக்தி போன்றவைதான். ஒரு வாய்ப்புக் கிடைக்கும் போது பீறிடுது. அதுல என்ன ஒரு வித்தியாசம்னா, ஆண் மாட்டினா அவனை அடிக்க ஆரம்பிக்க அவன் சைட்லேர்ந்து ஒரு சின்ன காரணமாவது(திட்டினான், முறைச்சான், பிக்பாக்கெட் அடிச்சான்னு) தேவை. ஆனா பெண்ணை இது போலத் துன்புறுத்த அவ சைட்லேர்ந்து எந்தப் பிரத்யேகக் காரணமும் தேவையில்லை, அவள் ஒரு பெண்ணாயிருப்பது தவிர. கும்பல் சைட்லேர்ந்து கூடுதல் காரணங்கள்(குடி, கோப வெறி) எதுனா இருந்தா இன்னும் பிரமாதமாகிடும் நிகழ்ச்சி. அவ்ளோதான் விஷயம்.

//ஜீன்ஸ் போட்டா பாதுகாப்புதானேங்க. இதுக்கு ஏன் இப்படி......// மேல ஆசிப்போட கமென்ட்ட படிச்சீங்களா, நாம பாதுகாப்பா உடுத்தினாலும் அவங்களுக்கு எரிச்சலாத்தான் இருக்கும். என்ன செய்ய?? :))))

said...

//இந்த மும்பை சம்பவத்தைப் பத்தி பேசுறப்ப எல்லாரும் ஏதோ நவயுக பெண்கள்தான் குடிக்கறாங்க, அது நம்ம கலாச்சாரத்துல இல்ல, கர்மாந்தரத்துல இல்லைன்னு சொன்னவங்களுக்கு பதில் சங்ககாலத்திலிருந்தே மது நமது கொண்டாடலின் அங்கமா இருந்திருக்கு, ஆண்/பெண் பேதமின்றி எல்லோரும் அருந்தி மகிழ்ந்து, குறிப்பா அதனால எந்தப் பிரச்சனையுமில்லாம களிப்போடு வாழ்ந்திருக்காங்கன்னு நிறுவவே அவ்வையார் உதாரணத்தை திரும்பத் திரும்ப பேச வேண்டியிருக்கு.//

திரும்ப திரும்ப பேசலாம், ஆனால் ஏற்கனவே ஒருப்பத்திரிக்கையில் வந்த ஒன்றினை , அதே உதாரணத்துடன் சொல்ல வந்ததால் சொன்னேன்.

அது என்ன சங்க காலத்தில் பெண்களைப்பற்றி சொல்லப்பட்டதில் பலவற்றையும் பிற்போக்கானவை என்று சொல்லிக்கொள்பவர்கள், எங்காவது இப்படி பெண்களுக்கெதிரான மது, இன்ன பிற குறித்து அசாம்பாவிதம் நடந்தால் மட்டும் அவ்வையாரே மது அருந்தினாராம் என்று (மகளிர்)சங்கத்தின் துணை தேடுவது :-))

நீங்கள் சொன்னப்பாடலில் உண்மையில் தேரல் என்று தான் சொல்லப்பட்டுள்ளது, அது சாராய வகை என்று சொல்ல முடியாது. மது , தேரல் என்றாலும் அதன் பொருள் தேன் என்று தான் பெரும்பாலும் எடுத்துக்கொள்ளப்படும். அதனால் தான் முன்னர் இதே அவ்வையார் பற்றி மது குறித்து சொல்லப்பட்டப்போது தமிழறிஞர்கள் அதனை தேன் குறித்தான ஒரு பாடல் என்று கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள்.அதைத்தான் பழைய மேட்டர் என்று சொல்ல வந்திருந்தேன்.

அவ்வையாரே தேள்கடித்தன்ன நாள் படு தேரல் என்றும் சொல்லியுள்ளார்.

தேனை நீண்ட நாட்கள் பதப்படுத்தி வைத்தால் தேள்கடித்த விஷம் ஏறுவது போல போதை ஏறும் என்று அர்த்தம்!

அதை குறிக்கத்தான் பழைய மேட்டர் என்பதை சொல்லி வைத்தேன். அதாவது அவ்வையார் சாராயம் அருந்தினார் என்று சொல்வது சரியானது அல்ல என்ற கூற்று உள்ளது.

என்ன செய்வது யார் சொல்வதும் புது சரக்காக தெரிவதில்லை. எல்லாம் படித்தவையாகவே இருக்கு!

said...

குடிப்பது / புகைப்பது / குறைவாகவோ அல்லது முழுக்க மூடியோ ஆடை அணிவது அவரவர் தனிப் பட்ட விருப்பம்.

குடிப்பது / ஆடை தான் ஆன்கள் அப்படி நடந்து கொள்ளக் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது - ‘குறி துருத்திய மிருகங்கள்' நிச்சயம் மிருகங்களாகத்தான் இருக்கும்.

இத்தவறுகளுக்கு sex starvation ஒரு காரணமாக இருக்குமென நினைக்கிறேன்.

said...

புரிதலுக்கு நன்றி சுந்தர்.

வவ்வால்,

//அது என்ன சங்க காலத்தில் பெண்களைப்பற்றி சொல்லப்பட்டதில் பலவற்றையும் பிற்போக்கானவை என்று சொல்லிக்கொள்பவர்கள், எங்காவது இப்படி பெண்களுக்கெதிரான மது, இன்ன பிற குறித்து அசாம்பாவிதம் நடந்தால் மட்டும் அவ்வையாரே மது அருந்தினாராம் என்று (மகளிர்)சங்கத்தின் துணை தேடுவது :-))// ஏற்கனவே நான் சொன்ன பதிலிலேயே விளக்கம் இருக்கு - நானொன்றும் சங்ககாலம் முழுக்க முழுக்க பெண்களையும் சமமாக நடத்தியது என்று சொல்ல இந்த எடுத்துக் காட்டைச் சொல்லவில்லை. எங்க கலாச்சாரம் ரொம்ப பழமை வாய்ந்தது - அதுல என்னிக்குமே ஆடைக் குறைப்பும் மதுவும் பெண்களுக்கு அனுமதிக்கப் பட்டதே இல்லைன்னு சொல்றவங்ககிட்ட அப்படியெல்லாம் இல்லையே, சங்க காலத்துப் பாடல்களிலேயே இருக்கே பெண்களும் கள்ளுண்டார்கள்னு அப்படின்னு சொல்றோம். போன தலைமுறை வரை ஜாக்கெட்டே போடாத பெண்கள் நாட்டுல சகஜமா நடமாடிட்டுதானே இருந்தாங்க, இப்ப ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சாலே ஆபாசம்னா என்ன அர்த்தம்? என்னமோ இதெல்லாம் புதுசா இன்னிக்குதான் ஆரம்பிச்சா மாதிரி இதென்ன கூச்சல்னுதான் கேக்கறோம். அப்புறம் நீங்க மது பத்தி நீங்க சொல்ற விளக்கம் ரொம்ப அபத்தமா இருக்கு.
//அவ்வையாரே தேள்கடித்தன்ன நாள் படு தேரல் என்றும் சொல்லியுள்ளார்.

தேனை நீண்ட நாட்கள் பதப்படுத்தி வைத்தால் தேள்கடித்த விஷம் ஏறுவது போல போதை ஏறும் என்று அர்த்தம்!// மதுன்னா இப்ப நடைமுறைல இருக்கற மதுவாவே இருக்கணும்னு என்ன கட்டாயம்? தேனை புதைச்சு வச்சாலும் போதை தரும்னா அதுவும் மதுதானே? அவங்க என்ன ப்ராண்ட் உபயோகிச்சாங்கன்றது பிரச்சனை இல்லை, போதை தரும் பானத்தையும் இருபாலினத்தவரும் சேர்ந்து ரசிச்சு ருசிச்சிருக்காங்கன்றதுதான் விஷயம். அத்தோட இரண்டாவது பாடலில் எந்த மறைபொருளுமில்லாம, நேரடியா 'கள்'னே சொல்லியிருக்காங்க. அதுக்கென்ன சொல்வீங்க? ஒரு வேளை கள்ளையும் புளிக்க வைக்காம பதநீரா குடிச்சிருப்பாங்கன்றீங்களா? என்னமோ போங்க, இப்படி சொன்னா அப்படி , அப்படி சொன்னா இப்படின்னு பல்டியடிச்சுகிட்டே இருக்கீங்க. உங்களுக்கேவாவது உங்க நிலைப்பாடு புரிஞ்சாச் சரி.

said...

//தேனை புதைச்சு வச்சாலும் போதை தரும்னா அதுவும் மதுதானே?//

லஷ்மி,
நான் கூடத்தான் தேனை புதைத்து வைத்தார்கள் என்றா சொன்னேன், நீங்களாகவே அப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளவில்லையா என்ன?

மேலாடை இல்லாமல் இருந்தார்கள் என்பது ஒரு சமூக வழக்கமாக அப்போது இருந்து இருக்கிறது(நாகர்கோவில் வட்டாரத்தில் வரும் அய்யாவழி கதைகள் பற்றியும் படிக்கவும், அவரும் இன்ன பிறரும் பெண்கள் மேலாடை அணிவதற்காக போராடியது தெரியவரும், தப்பாக நினைக்கவில்லை எனில், அப்போது ஒரு பெண்ணிற்கு முலைகள் பெரிதாக இருந்தால் அதற்கும் வரி விதிக்கப்பட்டதாக நான் படித்துள்ளேன், உண்மை என்ன என்பதை பெரியவர்கள் சொன்னால் உண்டு)

எனவே நான் ஒரு போதும் பெண்கள் உடையினால் அப்படி ஆச்சுனு என்று சொல்லவருபவர்களுக்கு ஆதரவாக சொல்ல வரவில்லை.

சங்க கால மண் நோக்கி நடக்கும் மகளீர், கற்புடைமை என்றெல்லாம் சொன்னால் ஆணுக்கு அது இல்லையா என்று சொல்பவர்கள், இப்படி எதாவது ஒன்று என்றால் மட்டும் அவ்வையார் மதுக்குடித்தாராம் என்று வருவதைத்தான் சொல்ல வந்தேன்! அப்பாடல்கள் "ambiguous" ஆகிய ஒன்று, அவ்வையார் மது அருந்தியதை மட்டும் தேடிப்பிடித்து சான்றாக்கும் மகளீர் மற்ற பெண்களுக்கான சங்க கால வரைமுறைகளைமட்டும்(கற்புடைமைமை, ஆண் பல பெண்ணிடம் போனாலும் கணவனே கண் கண்ட தெய்வம் என தொழுதல், கண்ணகி உதாரணமே போதுமே அதை எல்லாம் பிற்போக்கு என்று தானே சொல்கிறார்கள்) பிற்போக்கு என்பது ஏன்?

எனக்கான நிலைப்பாடு என்பது உடையினால் எதுவும் அல்ல என்பது தான், நான் சொல்லவந்தது வேறு தெளிவில்லாமல் சொல்லிவிட்டேன் போல இருக்கு.

said...

//அதுல என்ன ஒரு வித்தியாசம்னா, ஆண் மாட்டினா அவனை அடிக்க ஆரம்பிக்க அவன் சைட்லேர்ந்து ஒரு சின்ன காரணமாவது(திட்டினான், முறைச்சான், பிக்பாக்கெட் அடிச்சான்னு) தேவை. ஆனா பெண்ணை இது போலத் துன்புறுத்த அவ சைட்லேர்ந்து எந்தப் பிரத்யேகக் காரணமும் தேவையில்லை, அவள் ஒரு பெண்ணாயிருப்பது தவிர. கும்பல் சைட்லேர்ந்து கூடுதல் காரணங்கள்(குடி, கோப வெறி) எதுனா இருந்தா இன்னும் பிரமாதமாகிடும் நிகழ்ச்சி. அவ்ளோதான் விஷயம்//

super neththiyadi :):) !!

said...

லக்ஷ்மி ,

பத்து நாட்களாக எழுதி ,எழுதி மனது துக்கமே பட்டது .இப்படி ஒரு நாடா?

இதில் வேடிக்கை என்னவென்றால் ஆண்கள் பெண்விடுதலை பேசினால் ,மென்மையானவர்கள்...நல்லவர்கள்

நாம் பேசினால்...ஆகா இதிலும் அவர்கள் அப்ருவல் வேண்டும்.

என்னை ஒருவர் மேல்நாட்டு நாகரிகத்தை வளர்கிறவள் என்று குற்றசாட்டு சொன்னார்.உங்கள் பதிவில் உள்ளது போல எனக்கு குட்டை முடி ,ஜீன்ஸ் வேறு போடுவேன்...அவ்ளோதான்...

எனக்கு சிரிப்பு தான் வருகிறது ..

ஏன்னா இடுக்கண் வருங்கால் ..valluvar சொல்லிஇருகாரே?

said...

வாங்க சீதா, உங்க கருத்துக்களை நானும் வழிமொழியறேன். நீங்க பல இடங்களில் எழுதிக் கொண்டிருப்பதை நானும் படித்தே வருகிறேன். மிகவும் தீர்க்கமாக கருத்துக்களை எடுத்து வைக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
//இதிலும் அவர்கள் அப்ருவல் வேண்டும்.// அதுதான் பயங்கர எரிச்சலே.

இன்னோன்னும் செய்வாங்க. பெண்களிலேயே சிலருக்கு (அல்லது பலருக்கு) ஒரு கருத்து இருக்கு. ஒரு பொண்ணு படிக்கணும் - எது வரைன்னா அவளுக்கு கல்யாணம் முடிவாகற வரை. வேலைக்குப் போகணும் - எதுவரைன்னா, அவளுக்கு குழந்தை பிறக்கும் வரை. திரும்ப குழந்தைங்க வளந்தப்புறம் நேரமிருந்தா மறுபடி வேலை. அதுலயும் கணவருக்கு வேணும்னா, வேணும். வேண்டாம்னா விட்டுடணும். அவருக்கு மாற்றல் ஆனா நாமளும் மாற்றல் கேக்கணும். கிடைக்கலைன்னா வேலையத் தூக்கிப் போட்டுடணும். இப்படியெல்லாம் Flexible இருக்கறவங்கதான் லட்சியப் பெண்கள். அவங்க அப்படி இருந்துட்டுப் போறதில ஒன்னும் தப்பில்லை, ஆனா அவங்களை உதாரணம் காட்டி நீ ஏன் அப்படி இருக்கக் கூடாதுன்னு நம்மை கேப்பாங்க பாருங்க, அதுவும் நம்ம நன்மைக்காகத்தான் சொல்றதா வேற சொல்லும்போது நானும் நீங்க சொல்றதைத்தான் (இடுக்கண் வருங்கால் நகுக) செய்யறது. வேற என்ன சொல்ல முடியும்?

பாராட்டுக்கு நன்றி ராதா.

வவ்வால், //எனவே நான் ஒரு போதும் பெண்கள் உடையினால் அப்படி ஆச்சுனு என்று சொல்லவருபவர்களுக்கு ஆதரவாக சொல்ல வரவில்லை.// அப்பாடா, நல்ல வேளை இனி அதை விளக்க வேண்டாம்னு நினைக்கறேன். நான் சொன்ன சங்க கால உதாரணம் மட்டும்தான் உங்களுக்கு உறுத்துது இல்லயா? இன்னொரு முறை விளக்கறேன், புரியறா மாதிரி சொல்றேனான்னு பாருங்க. இப்பவும் சொல்றேன், சங்க காலத்துல சொல்லப்பட்டிருக்கிற மண் நோக்கி நடக்கும் மகளீர், கற்புடைமை இதெல்லாம் நிச்சயமா பிற்போக்கானவைதான். ஆனா ஏதோ மேற்கத்திய நாகரீகத்தோட பாதிப்பாலயும், பெண்ணுரிமை பத்தி பேச ஆரம்பிச்சதோட விளைவாவும்தான் பெண்கள் குடிக்கவும் ஆடை அளவைக் குறைக்கவும் ஆரம்பிச்சுட்டாங்கன்னு சொல்றவங்க கிட்ட, அப்படியா அப்படின்னா இந்தப் பாடலெல்லாம் சொல்றது என்ன? எப்பவுமே உங்க கலாச்சாரத்துலயே இது இருந்திருக்கேன்னுதான் சொல்றோம். குடிக்கும் பெண்ணுரிமை சம்பந்தமான விழிப்புணர்வுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைங்கறதைச் சொல்லதான் கிராமங்களிலிருக்கும் பெண்களும் குடிப்பதையும், புகைப்பதையும் உதாரணமாச் சொல்றோம். விளக்கம் போதும்னு நினைக்கறேன்.

said...

அக்காவுக்காக வந்து கொஞ்சம் மொக்கை போடு கண்ணு
http://kouthami.blogspot.com/2008/01/blog-post_09.html

said...

வவ்வால் மிக அரிய தகவல்கள் (எதுன்னல்லாம் கேக்கப்பிடாது!!)

said...

//
ஆசிப் மீரான் said...

பதிவா? வழக்கம் போல தமாசா இருந்திச்சு :-))))

//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

said...

அதாவதுங்க... குடிக்கிறது புகைக்கிறதுன்னு வந்தா... அது ஆணுக்கும் பெண்ணுக்கும் கெடுதிதான். ஆணுக்கு மட்டும் நல்லதுன்னா சொல்றோம்.

ஆனா ஆண் குடிக்குறப்போ கெடாத பண்பாடு பெண் குடிச்சப்போ கெடுதுன்னு சொல்றாங்க பாருங்க..அப்பத்தான் எரிச்சல் வருது. அடேய் பண்பாட்டுக் காவலர்களா... குடிக்கிறது எல்லாருக்கும் கெடுதல்தானய்யா...போய் ஆண்கள் குடிக்கிறப்பவும் சொல்லுங்கய்யா...அட நீங்களே குடிக்கிறவங்கதானே...இப்படித்தான் கேக்கத் தோணுது.

அதுக்காக பெண் குடிக்கனும்னு தேவையில்லை. ஆனா அந்த முடிவை அந்தப் பெண்ணே எடுத்தால் அந்த உரிமை அவளுக்கு உள்ளது. அதே போலத்தான் உடை விஷயத்திலும். இதுதான் என்னுடைய கருத்து. மத்தபடி இதைத் தமாஷ்னு சொல்றதெல்லாம் செம தமாஷ்தான்.

said...

எனக்கு ஒரு சந்தேகம்.

இயற்கையாகவே, ஆணுக்கு விஷுவலாக எதிர் பாலை ரசித்து, இன்புறும் தன்மை இருக்கு.
( உதா : நிர்வான படம், புத்தகங்கள், இத்யாதி இத்யாதி ). இது அவர்கள் வேண்டிப் பெற்றதில்லை. இயற்கை விதி.


பெண்களுக்கு அப்படி இல்லை என்றே, ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அப்படி இருக்கையில், ஆண்களை தூண்டும் வண்ணம்..ஆடை அனிவதை தவிர்க்கலாமே.

அது எது, எப்படி என்று பெண்களே பேசி முடிவுக் கட்டிக் கொள்ளுங்கள். ;) அது நீ சொல்லாதே என்றால்..அதுவும் ரைட்டு..

இதை ஆணாதிக்கவாதி என்ற நோக்கில் பார்க்காமல், விஞ்ஞான ரீதியாக பார்த்து ஒரு பதில் சொல்லுங்க..

மற்றபடி, குடிப்பது எங்க உரிமை..நீ தலையிடாதே என்று சொல்லுங்கள் அது ஒரு வாதம். ஒளவையாரே குடித்தார் என்று சப்பையான வாதம் தேவை இல்லை. குடிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வதும் உங்கள் உரிமை தான் மறுப்பதற்கில்லை.

said...

:)
பின்னுட்டத் தொடர்ச்சி..செலக்ட் செய்துக் கொள்கிறேன்..

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மங்களூர் சிவா.

வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி ஜி.ரா.

said...

டிபிசிடி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முதலில்.

பார்த்து ரசிப்பது ஆண்களுக்கு மட்டுமேயானது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. பெண்களுக்கும் அத்தகைய உணர்வுண்டு - ஆனால் வெளிப்படுத்துவதில் உள்ள பல தடைகளே அவர்களுக்கு அவ்வுணர்ச்சியில்லை என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியிருக்க வேண்டும். சரி, அப்படியே அவர்களுக்கு ரசிக்கும் உணர்வு ஏகபோகமாக உரியதெனினும் கூட ரசிப்பதையெல்லாம் துய்க்க வேண்டுமென்று எண்ணுவது வக்கிரமானதல்லவா? ரசிப்பதில் இருவகை இருக்கிறது - ஒன்று ஷோ கேஸில் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து தான் வாங்கி பாவிப்பது. இன்னொன்று ஒரு கண்காட்சிக்கோ இல்லை ம்யூசியத்திற்கோ சென்று அங்குள்ளவற்றைப் பார்த்து மட்டுமே ரசிப்பது. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தராதரமற்றவர்கள் - தண்டிக்கப் படவேண்டியவர்கள். இந்த உதாரணத்தை இதற்கு மேல் விளக்க வேண்டியிருக்காதென்று எண்ணுகிறேன்.

உங்களின் அடுத்த கேள்வி - குடிக்க எதுக்கு அவ்வையாரை உதாரணம் காட்ட வேண்டுமென்பது. நான் ஏற்கனவே வவ்வாலுக்கு அளித்த பதிலி இதைச் சொல்லியிருக்கிறேன். மீண்டுமொருமுறை உங்களுக்காகவும் சொல்கிறேன். நிச்சயமாக அவ்வையாரே குடித்தார் அதனால் நான் குடித்தால் என்ன தப்பென்று கேட்பதற்காக இந்த உதாரணங்களை இங்கே எடுத்துப் போடவில்லை. கலாச்சார பெருமை பேசுபவர்கள் என்றுமே நம் சமூகத்தில் வழக்கமில்லாததை இந்தப் பெண்ணுரிமை பேசுபவர்கள்தான் உள் நுழைக்கிறார்கள் என்று ஒரு தவறான வாதத்தை முன்வைத்தபடியே இருக்கிறார்கள் வெகு காலமாய். அதற்காகவே கள்ளருந்தி மகிழ்ந்த அவ்வையார் முதல் வெகு சாதாரணமாகப் புகைக்கும் ராஜமுந்திரிப் பெண்கள் வரை இங்கே சுட்டிக் காட்டப்படுகிறார்கள். இதெல்லாம் ஒரு விதத்திலும் பெண்ணுரிமைக்குத் தொடர்புடையவையோ இல்லை பெண்ணுரிமை பேசுபவர்களால் அறிமுகப் படுத்தப் பட்டவையோ இல்லைன் என்றூ நிறுவவே இவ்வுதாரணங்கள் இங்கே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

said...

நீங்கள் சொன்னதில் நான் உடன்படவில்லை. இதைப் பற்றி, நான் நம் நாட்டுப் பெண்களை வைத்துச் சொல்லவில்லை. மேலை நாட்டில், இந்த விசயத்தில் கட்டுப்பாடு இல்லை என்பதை ஒத்துக் கொள்வீர்கள்.

ஆண்களும் பெண்களும் உடற்கூறில் மட்டுமல்ல, மனதளவிலும் வேறு வேறு தான். ஆணுக்குப் பெண் நிகர் என்ற வாதமே தவறு, இருவரும் வேறு, ஆனால், ஒரே இடத்தில் வாழப்பணிக்கப்பட்டவர்கள். பெண்ணியம் பேசும் அனைத்திலும், ஆணை முன்னிறுத்தி, ஒரு பின்னடைவு ஏற்படுத்திக்க்கொள்கிறார்கள். அந்த வித்தியாசத்தை, அப்ரிசியயேட் செய்ய வேண்டும்.



///லக்ஷ்மி said...

பார்த்து ரசிப்பது ஆண்களுக்கு மட்டுமேயானது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. பெண்களுக்கும் அத்தகைய உணர்வுண்டு - ஆனால் வெளிப்படுத்துவதில் உள்ள பல தடைகளே அவர்களுக்கு அவ்வுணர்ச்சியில்லை என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியிருக்க வேண்டும் ///

எல்லாப் புலியும் மனித மாமிசம் சாப்பிடாது. அந்த சூழ்நிலையிலும், புலியினால், மனிதனைக் கொல்ல முடியும். வயதான புலி, ஓடி வேட்டையாட முடியாத போது, எளிதான, இரையாக ஆவது, மனிதன். ஆக, சூழ்நிலை ஒரு சாதாரணப் புலியயை, மனிதனை வேட்டையாடும் புலியாக மாற்றிவிடுகிறது.

ஆக, புலிக்கும், மேன் ஈட்டர்க்கும், வித்தியாசம் தெரியும்மா. அதனாலே, காட்டு வழிப் போறப் போ, எந்தப் புலி வந்தாலும், எச்சரிக்கையுடன் அனுக வேண்டும்.

அதே போன்ற சூழ்நிலையால், உந்தப்பட்ட ஆண்களை, இடற வைக்க பெண்களின் செய்கைகளோ, ஆடையோ, இல்லாதிருத்தல்..நலம்.


///சரி, அப்படியே அவர்களுக்கு ரசிக்கும் உணர்வு ஏகபோகமாக உரியதெனினும் கூட ரசிப்பதையெல்லாம் துய்க்க வேண்டுமென்று எண்ணுவது வக்கிரமானதல்லவா? ரசிப்பதில் இருவகை இருக்கிறது - ஒன்று ஷோ கேஸில் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து தான் வாங்கி பாவிப்பது. இன்னொன்று ஒரு கண்காட்சிக்கோ இல்லை ம்யூசியத்திற்கோ சென்று அங்குள்ளவற்றைப் பார்த்து மட்டுமே ரசிப்பது. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தராதரமற்றவர்கள் - தண்டிக்கப் படவேண்டியவர்கள். இந்த உதாரணத்தை இதற்கு மேல் விளக்க வேண்டியிருக்காதென்று எண்ணுகிறேன்.///

said...

:?

said...

டிபிசிடி,

//ஆண்களும் பெண்களும் உடற்கூறில் மட்டுமல்ல, மனதளவிலும் வேறு வேறு தான். // இதில் குறைந்த பட்ச காமன் சென்ஸ் இருக்கும் யாருக்கும் இரண்டாவது கருத்திருக்க முடியாது. ஆனால், //ஆணுக்குப் பெண் நிகர் என்ற வாதமே தவறு, இருவரும் வேறு, ஆனால், ஒரே இடத்தில் வாழப்பணிக்கப்பட்டவர்கள். // இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. இருவரும் வேறு வேறு வகையானவர்களாக இருக்கலாம், ஆனால் நிச்சயம் சமமானவர்கள்.

உங்கள் வாதத்தை ஒப்புக்கொள்வதாகக் கொண்டே நான் என் பதிலில் ஒரு கேள்வியெழுப்பியிருந்தேன் - பார்த்து ரசிக்கவும் அதை அடைய நினைக்கவும் உள்ள வேறுபாடு தெரியாதிருப்பது யார் குற்றம் என்று. நிர்வாணப் படங்கள் இருக்கும் தளத்துக்குச் சென்று ரசிப்பதற்கும் தன் கையில் கிடைத்த பெண்ணின் படத்தை தொழில்நுட்பத் துணை கொண்டு நிர்வாணமாக்கிப் பார்ப்பதும் ஒன்றல்ல அல்லவா? எது அத்துமீறல் என்பதை உணர்ந்து கொள்வதும் அதைத் தடுப்பதும் நமது அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டுமா இல்லை அந்தப் பெண் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அவள் தவறு என்பது சரியாக இருக்குமா?
//அதே போன்ற சூழ்நிலையால், உந்தப்பட்ட ஆண்களை, இடற வைக்க பெண்களின் செய்கைகளோ, ஆடையோ, இல்லாதிருத்தல்..நலம்// சரி இந்த அடிப்படையில் பார்த்தால் பெண்களின் உடை விஷயத்தில் ரொம்பவே லிபரலாக இருக்கும் மேலை நாடுகளில் நடக்கும் வன்புணர்ச்சிகளோ பாலியல் சீண்டல்களோ எண்ணிக்கையில் மிக மிக அதிகமாக அல்லவா இருக்க வேண்டும்? ஏன் நம் நாட்டிலேயே கூட பாரம்பரிய உடையான புடவையணிந்து பெண்கள் நடமாடும் இடங்களுக்கும் நாகரீக உடையில் பெண்கள் நடமாடும் பெருநகரங்களின் சில பகுதிகளுக்கும் இந்த எண்ணிக்கையில் மாபெரும் வித்தியாசம் இருக்க வேண்டுமே? ஆனால் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் அப்படியில்லையே? எனவே இத்தகைய அத்துமீறல்களுக்கும் பெண்ணின் மீதே பழியைப் போட்டு நீ போத்திகிட்டு போன்னு சொல்லி தப்பிச்சுக்கறது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

பி.கு: உங்களோட கடைசி கமென்ட்டை பப்ளிஷ் பண்ணிட்டு பதில் எழுத மறந்தே போயிட்டேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும். அப்படியே நினைவு படுத்தினதுக்கு நன்றியும் கூட. :)

said...

வழக்கம் போல் மலர்வனத்தில் புயல்..
தொடருங்கள் வாழ்த்துக்கள்..

said...

வருகைக்கு நன்றி கையேடு. கருத்துப் புயல்தானே, அதுனால கவலையில்லை. விதண்டாவாதப் புயல்னாத்தான் மலர்வனம் தாங்குமான்னு கவலைப் படணும், இல்லையா?

said...

லக்ஷ்மி,

நெடு நாள் விடுப்புக்கு பிறகு, தங்கள் தமிழ் பதிவை காண முடிகிறது.