Wednesday, June 20, 2007

தேடல்

இந்த முறை ஊருக்கு போகும் போது அவசியம் தேட வேண்டும்
விடுமுறைக்கு முந்தைய நாளின் பின்மதியப் பொழுதொன்றில்
முன்னறிவிப்பின்றி இறங்கத்தொடங்கிய மழைக்கு ஒதுங்கிய மரத்தடியில்,
நெடுஞ்சாலையின் ஒரத்திலிருக்கும் பாழடைந்த கிணற்று மேடையில்,
ஊருக்கு வெளியிலிருக்கும் முந்திரித்தோப்பில்,
கல்லூரிக்கு எதிரிலிருக்கும் உடையார் கடையில்,
இன்னும் நினைவடுக்கில் தட்டுப்படும் எல்லா இடங்களிலும்.
எங்கேனும் ஒரு இடத்திலாவது இல்லாமலா போய்விடும்
நம்மிடையே தொலைந்து போன ஏதோ ஒன்று.

14 comments:

said...

தேடல் எப்போது நிற்கும் என்றுதான் தெரியவில்லை.

எப்போது தொலைத்தோம் என்றும் தெரியவில்லை.
இடமும் நினைவில்லை.
தேடுதல் சுகம்,
அதனாலேயே தேடுகிறேனா.

நல்ல நினைவுகளைத் தூண்டிவிட்டதற்கு நன்றி லக்ஷ்மி.

said...

ரொம்ப நன்றி வல்லி அம்மா, ரொம்ப சரியா சொன்னீங்க. எப்போ, எங்கே தொலைச்சோம்னே தெரியலை. ஆனா எதையோ தொலைச்சுட்டோம்னு மட்டும் தெளிவா தெரியுது. அதான் இந்த தேடல்.

said...

ம்...நினைவடுக்கில் இருக்கும் இடங்களை வரிசைப்படுத்தி வரிசைப்படுத்தி...நீண்டு கொண்டே போகிறதுஅதற்கே சரியாகபோகுமே விடுமுறை.

said...

// எப்போ, எங்கே தொலைச்சோம்னே தெரியலை. ஆனா எதையோ தொலைச்சுட்டோம்னு மட்டும் தெளிவா தெரியுது. அதான் இந்த தேடல். ///

ஹ்ம்ம்ம்..ஆமா லக்ஷ்மி...

said...

நல்ல கவிதை லக்ஷ்மி

நகரத்தில் தொலைத்ததை சொந்த ஊர்களில் தேடியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்கிற ஆவல்கள் இன்னும் தொலையாமலிருப்பதே சந்தோஷம் தான். ஆத்மாநாம் சொன்னது போல் இந்த அளவுடனாவது விட்டதற்க்கு இப்பெரு நகரங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும்

said...

ஆமாம் லக்ஷ்மி. சொந்த ஊருக்குப் போகும் போதெல்லாம், மனதில் இந்த வெறுமை படர்வதை தடுக்க முடிவதில்லை.

எதையோ ஒன்றை இழந்து நிற்கும் உணர்வு, எதையோ அடையத்துடிக்கும் ஆவலுடன் கண்கள் தன்னிச்சையாகவே தேடத் தொடங்கி விடுகின்றன. இந்த நொடி வரை தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

said...

முத்துலெட்சுமி, அய்யனார், மங்கை, நந்தா - அனைவருக்கும் நன்றி , வருகைக்கும் புரிதலுக்கும்.

said...

மனதை ஏதேதோ செய்கிற கவிதை!

//எங்கேனும் ஒரு இடத்திலாவது இல்லாமலா போய்விடும்
நம்மிடையே தொலைந்து போன ஏதோ ஒன்று.//

நிஜமாகவே இப்படி நான் அடிக்கடி தேடிப்பார்ப்பது உண்டு! எப்போதோ நான் இருந்த இடங்களுக்கு மீண்டும் செல்கிறபோது தானாகவே மனம் தேட ஆரம்பித்துவிடும், என்னை அறியாமல் நான் தொலைத்துவிட்ட ஏதேனும் கிடைக்குமா என்று. அப்படி சில கிடைத்தும் ஆச்சர்யப் படுத்தியிருக்கின்றன!

said...

//முன்னறிவிப்பின்றி இறங்கத்தொடங்கிய மழைக்கு ஒதுங்கிய மரத்தடியில்,
நெடுஞ்சாலையின் ஒரத்திலிருக்கும் பாழடைந்த கிணற்று மேடையில்,
கல்லூரிக்கு எதிரிலிருக்கும் உடையார் கடையில்,
//

இந்த வரிகளனைத்தும் எங்கள் ஏ.வி.சி கல்லூரியின் வாசலையே நினைவு படுத்துகின்றன!

said...

நான் மட்டும்தான் இப்படி என்று நினைத்தேன். பின்னூட்டங்களை பார்க்கும் போதுதான் நிம்மதியாக இருக்கிறது. (நம்மைப்போலவே இத்தனை பேர் இருக்காங்களேன்னுதான் ;) ).

நன்றி அருள் குமார். நீங்கள் ஏவிசியா? நானும் அந்தப் பக்கம்தான் - தஞ்சை ஷண்முகா கல்லூரி.

Anonymous said...

மீண்டும். ஒரு தேர்ந்த ஓவியனின் தூரிகை ஜாலம் போல வரையப்பட்ட கவிதை.

பழைய நினைவுகளைத் தொடர்ந்து அலைவது எனது மனதிற்கும் வாடிக்கையாகிவிட்டது.

ஒரு தேர்ந்த புள்ளிமானின் ஓட்டத்தோடு ஓடி மறைவது அதற்கும் வாடிக்கையாகிவிட்டது.

நம்மிடையே தொலைந்து போன ஏதோ ஒன்று

என்று சொல்லும்போது தொலைந்துபோனதை என்னவென்று கூடத்தெரியாத ஒரு கையறுநிலையின் உணர்வு ஏற்படுகிறது.

தூங்கும் குழந்தையின் கழுத்திலிருந்து திருடப்பட்ட நகையை என்ன சொல்ல எனப்புரியாமல் அழும் குழந்தையின் மனநிலையை ஏற்படுத்துகிறது உங்கள் கவிதை.

said...

நன்றி பொற்கொடி. பொய்மான் பின் ஓடுவது போன்ற தேடுதல்களே நம் வாழ்வை விரயமாக்குகின்றன என்று தெரிந்தாலும் விட முடிவதில்லையே, என்ன செய்ய?
//தூங்கும் குழந்தையின் கழுத்திலிருந்து திருடப்பட்ட நகையை என்ன சொல்ல எனப்புரியாமல் அழும் குழந்தையின் மனநிலை// நல்ல உவமை.

said...

மாய பூதமொன்று வாழ்வின் கதவுகளைப் பூட்டி தன் கை விரல் நுனியில் சாவியை சுற்றிக்கொண்டு நிற்கிறது -நம் கண் முண்ணே..! துரத்துவதும், திமிறுவதும் விருப்பத்தை/விருப்பமின்மையைத் தாண்டி நடந்தே தீரும். பேசாமல் அந்த பூதத்தை உடையார் கடைக்கு டீ குடிக்க அழைத்துச் சென்றால் என்ன..? ('அது பொட்டிக்கடை. டீ எல்லாம் அங்க கிடையாதுன்னு காமெடி கீமெடி பண்ணமாட்டீங்களே..)

said...

உண்மைதான் ஆழியூரான், நம் விருப்பம்/விருப்பமின்மை பற்றியெல்லாம் வாழ்க்கை கவலைப்படுவதேயில்லை. பூதத்துக்கு டீ மட்டும் இல்லை ரத்தகாட்டேரியை வேண்டுமானாலும் அழைத்துப்போய் சூடாய் ரெண்டு லிட்டர் ரத்தம் வாங்கிகொடுத்து கூட்டிவரலாம், அப்பேர்ப்பட்ட மல்ட்டிபர்பஸ் ஸ்டோராக்கும் எங்க உடையார் கடை. ;)