Sunday, February 04, 2007

கல்பனா சாவ்லாவும் தாய்மையும்

மங்கையர் மலர் புத்தகத்தில் வெகு நாட்களுக்கு பிறகு கல்பனா சாவ்லாவைப்பற்றி ஒரு கட்டுரை. அவரது சொந்த ஊரில் அவர் பெயரில் ஒரு டிரஸ்ட் அமைத்து அதன் மூலம் பெண் கல்விக்கு தன்னாலானதை செய்து வருகிறாராம் அவரது தந்தை. நல்ல விஷயம். ரொம்ப ரொம்ப நல்ல விஷயம். அடுத்ததா அவர் பெண்ணைப்பற்றி உயர்வா பல விஷயங்கள் சொன்னார். டிஷ் வாஷர் உபயோகிச்சா தண்ணீர் ரொம்ப செலவாகும்னு சொல்வாங்களாம். ஷு பழுதான அதை சரி செய்து உபயோகிப்பாரம், அது கூடுதல் நேரம் மற்றும் பண செலவு தரும்னாலும் கூட. புதுசா ஒண்ணு வாங்கணும்னா அதுக்காக இன்னொரு மிருகம் கொல்லப்படுமேன்றத்துக்காக. தண்ணீர், பணம், பெட்ரோல் இப்படி எதுவானாலும் சிக்கனமா செலவழிப்பாரம். கஞ்சத்தனத்தினால் இல்லீங்க, சுற்றுபுறச்சூழல் அக்கறையினால. இதெல்லாம் கூட நல்ல விஷயங்கள்தான். யாரு இல்லைன்னா?

ஆனா அதுக்கப்புறமா வந்தது பாருங்க ஒரு முக்கியமான விஷயம். பண்பாட்டை கட்டிக்காக்கும் பாரத பெண்ணின் அருங்குணத்தை டெஸ்ட் செய்யும் கேள்வி - தான் தாய்மையடையலயென்னு அவங்க வருந்தினாங்களா? இது இது இதுதான்ங்க முக்கியம். இதுல அந்த கேள்விக்கு முன்னாடி ஒரு டிஸ்கெள்ய்மர் வேற - கேட்க தயக்கமா இருந்தாலும் கடைசியில் அந்த கேள்வியை கேட்டே விட்டோம். இந்த தயக்கம்ன்றாங்களே, அது அடுத்தவங்களோட அந்தரங்கத்தை பற்றி கேட்கப்போறோமென்னு இருக்குமுன்னு நினைக்கிறீங்களா? நிச்சயமா இருக்காது. அப்போ தயக்கம் எதுக்காகன்னு கேட்கறீங்களா? தாம்பத்ய வாழ்க்கையின் அந்த ஈடு செய்ய முடியா இழப்புக்கான முழுமுதல் காரணகர்த்தா இந்த அம்மாதானே? இதுக்காக அந்த நிருபர் போய் சாவ்லா தம்பதியினர் இருவரது மருத்துவ அறிக்கைகளையும் படிச்சுட்டு வந்தாரான்னு அரைவேக்காட்டுத்தனமால்லாம் கேட்கக்கூடாதக்கும். ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்கலையா, அந்த அம்மா மலடி. அம்புட்டுதேன். (என்னது? மலடிக்கு ஆண்பால் பெயர் என்னவா? இப்படியெல்லாம் அடங்காபிடாரித்தனமா கேள்வி கேட்கற பெண்ணியவாதியா நீ? இரு இரு உன்னையெல்லாம் யாரு கல்யாணம் பண்றங்கன்னு பார்க்கறேன். அப்படி எதுனா இளிச்சவாயன் வந்து கட்டினாலும் அவன் உன்கிட்ட ரொம்ப அவஸ்தைப்படறான்னு எதுனா ஒரு தண்ணி பார்ட்டியில உளறுவான். இல்லைல்லய்யா, நான் அவளோட சந்தோஷமாத்தான் இருக்கேன்னு சொன்னாக்கூட எனக்கு அந்த ஆள் புலம்பரா மாதிரித்தான் கேட்குமாக்கும். அப்போ அதை எல்லார்கிட்டயும் ஜல்லி சாரி சொல்லி உன் மானத்தை வாங்கறேன் பாரு அப்படின்னு நம்ம ஆண்குல சிங்கங்கள் எல்லாம் கர்ஜிக்கர சத்தம் கேட்குது. அதுனால கம்மிங் பேக் டு த பாய்ன்ட்... நம்ம நிருபர் குழந்தையின்மை காரணமா கல்பனாவுக்கு இருந்திருக்க வேண்டிய குற்றவுணர்ச்சிய(இதை அவங்க தாய்மைக்கான ஏக்கம்னு டீசென்டா சொல்வங்களாக்கும்) பத்தி தமிழ் கூறும் நல்லுலகுக்கு தெரிய வைக்கவேண்டிய மகத்தான தனது பொறுப்பை வெற்றிகரமா நிறைவேற்றிட்டார். அவங்கப்பாவும் அவரோட எதிர்பார்ப்பை வீணாக்காம அவளுக்கு வருத்தம் இருந்துதான் இருந்தாலும் அதை நினைச்சு உடைஞ்சுடாமல் அவள் வேலைல தன்னை ஈடுபடுத்திக்கிட்டான்னார் பாருங்க, அப்போத்தான் எனக்கு மூச்சே வந்ததாக்கும்.

இதோட அந்த கட்டுரை முடிஞ்ட்சுட்டதுன்னு நினைக்கிறீங்களா? எந்தூருங்க உங்களுக்கு? பெண்களுக்காக எழுதற ஒரு கட்டுரை 'இதனால் அறியப்படும் நீதி யாதெனின்' அப்படின்னு முடியலைன்னா உம்மாச்சி கண்ணை குத்திடாதா? அந்த வழக்கையொட்டி அந்த கட்டுரையாளர் வாழ்க்கைல ஒரு பெரிய ஏமாற்றம் நேர்ந்தாலும் அதை சமாளித்து வேறு ஒரு துறையில் தன் திறமையை நிரூபித்த கல்பனா எல்லா பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணம்ன்ற ரீதியில் ஏதோ சொல்லி முடிச்சுட்டார். இங்க அர்ன்னு விகுதி போடறதால அந்த நிருபர் ஆணாயிருப்பார்னு நான் நினைக்கறதா நீங்க நினைச்சுகிட்டு எனக்கு தயவு செஞ்சு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடாதீங்க ப்ளீஸ். அது பெண்ணாயிருப்பதற்குத்தான் 98% வாய்ப்பு இருக்கு. அதை நான் பணிவன்போட தாழ்மையோட ஒத்துக்கறேன். ஆனா இந்த கருத்துருவாக்கம்ன்றது எங்கேருந்து வந்ததுன்னு ஒரு நிமிஷம் யோசிச்சுப்பாருங்களேன். சாதீயம் பத்தி பேசும்போது மற்ற சாதிகளின் ஆதிக்க மனோபாவத்துக்கும் பார்ப்பனர்கள்தான் காரணம்னு சொல்றவங்ககூட வரதட்சிணையா? அதை பையனோட அம்மாக்கள்தானே அடம் பிடிச்சு வாங்கறாங்க, இதுல அந்த மாப்பிள்ளை புள்ளாண்டான் என்ன பண்ணுவான் பாவம்னுவாங்க. இந்த விஷயத்துல கூட சிம்பிளா, அந்த கட்டுரை வெளிவந்தது ஒரு பெண்கள் பத்திரிக்கைல, எழுதினது ஒரு பெண் படிக்கப்போறதும் பெரும்பாலும் பெண்கள். இதுக்கு கூட ஆண்களை இழுக்கலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதன்னு ஒரு கேள்விய கேட்கப்போற மகாஜனங்களே, தன் எஜமானிடம் தனக்கு கிடைக்கபோகும் சில சலுகைகளுக்காக சக தொழிலாளிகளை வதைக்கும் பண்ணை நிர்வாகிகளை(கார்வாரி என்று அழைப்போம்) போன்றதில்லையா இது? இல்லை என்பவர்களுக்கு என்னால் தர இயலும் ஒரே பதில் - தூங்கறா மாதிரி நடிக்கறவங்களை எழுப்ப முடியாது. நம்ம தமிழ் சினிமாவில் அடிக்கடி உபயோகிச்சு தேஞ்சு போன டயலாக்தான். என்ன செய்ய? வேற எதும் கைவசம் இல்லை. அவ்ளோதான்.

6 comments:

said...

லஷ்மி
என்ன செய்ய? இப்படித்தான் இந்திராநூயிஐப்பத்தி எழுதினப்பவும் அவரே அவர்வீட்டில சமையல் செய்றத பெருமையா எழுதி இருந்தாங்க. திட்டமிட திறன், எப்படி நேர நிர்வாகம் செய்யறாங்க இதெல்லாம் முக்கியம் இல்ல. நான் எப்பவோ எழுதின ஒரு பதிவு (மலடி பத்தியும் தாய்மை பத்தியும்) தேடி சுட்டி தரேன்.உங்களுக்கு பெண்கள் பத்திரிக்கையில் வேற எத எதிர்பார்க்கிறீங்க அப்படின்னு பின்னூட்டம் வரும். படிக்கிற மாகசீன் பொறுத்து செய்தி வரும் என்ற அறிவுரையும் வரும். இந்த வாரம் ஞானி மூன்று பெண்கள் மூன்று நிகழ்ச்சிகள் என்றூ எழுதிய கட்டுரை பார்த்தீர்களா?

said...

>>>தன் எஜமானிடம் தனக்கு கிடைக்கபோகும் சில சலுகைகளுக்காக சக தொழிலாளிகளை வதைக்கும் பண்ணை நிர்வாகிகளை(கார்வாரி என்று அழைப்போம்)

i believe the term is house negro

said...

நன்றி பாலா. எங்கள் ஊர் பக்கத்தில் உபயோகிக்கப்படும் வழக்குச்சொல் அது. ரொம்ப அதட்றவங்களைக்கூட என்ன ரொம்ப கார்வார் ஜாஸ்தியா இருக்குன்னு சொல்வாங்க. அதுனால பயன்படுத்தினேன். புதிய சொல்பிரோயோகத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி.
பத்மா, தங்களது வருகைக்கு நன்றி. பெனாசீர் புட்டோவைப்பற்றியும் இதே போன்றதொரு சம்பவம் நான் படித்திருக்கிறேன். ஏதும் செய்ய இயலாதெனெ தெரிந்தாலும் இத்தகைய விஷயங்களை காணாதது போல் விடுதல் கைவர மாட்ட்டேனென்கிறது. அபியோட துக்கமும் அரசியோட போராட்டமும்தான் இவங்களுக்கு பெரிய விஷயம். அவர்களின் சோகமளவு கயார்லஞ்சியின் சுரேகாவோட சோகம் இவங்களை பாதிக்காது. ஆனாலும் இவங்க பெண்களுக்கான பத்திரிக்கை நடத்தறாங்களாம். என்னவோ போங்க.. புதுப்புது ஊறுகாய்க்கான குறிப்புகளுடனும், சின்னத்திரை கிசுகிசுக்களுடனும் இவர்களது பெண்களுக்கான சேவை தொடரட்டும். நீங்க 'கருவுறுதலில் பெண்களின் முடிவெடுக்கும் உரிமை ' என்கிற பதிவ பத்தி சொல்றீங்கன்னு நினைக்கறேன். அதை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன் பத்மா. இல்லை வேறு ஏதேனும் பதிவைப்பற்றி நீங்கள் பேசினால், சுட்டி தரவும். படிக்கிறேன்.

said...

பெண் எவ்வளவு சாதனைகள் செய்தாலும், தாய்மையும் சமையலும் அத்துடன் சிறப்பாக செய்வதே பெருமையாக அறியப்படுகிறது.

said...

பெண் எவ்வளவு சாதனைகள் செய்தாலும், தாய்மையும் சமையலும் அத்துடன் சிறப்பாக செய்வதே பெருமையாக அறியப்படுகிறது.

said...

'பெண்கள் பத்திரிக்கை'யில் வேற என்ன இருக்கும்? இதுலே தமிழ், ஆங்கிலமுன்னு
ஒரு மொழி வித்தியாசமும் கிடையாது. நாலு சமையல் குறிப்பு, ரெண்டு அழகு(??)க்குறிப்பு,
லோக்கல் டிவி ஆட்களோட அந்தரங்கம்( இது ரொம்பவே முக்கியம். யார் யாரை 'டம்ப்' செஞ்சாங்கன்னு
விலாவரியா இருக்கணும். அப்புறம் அவுங்களுக்குப் பிறந்த 'மிரக்கிள் பேபீஸ்' ( எல்லாருக்கும்
மிரக்கிள் பேபீஸ்தான். சாதாரணமா ஒண்ணும்பிறக்காது) இப்படி 'ஜூஸி ஸ்டஃப்' இருந்தாத்தான்
பொம்பளைப் பத்திரிக்கை. 50 வருஷமா நடத்துற பத்திரிக்கைன்னாலும் இதோட 'கெட் அப் & அவுட் லுக்'
மாறாது(-: