Saturday, November 29, 2008

சுடச் சுட விற்பனைக்கு - வாய்க்கரிசி

Future Generali India Life Insurance Co. Ltd. என்ற காப்பீட்டுத் திட்ட நிறுவனத்திடமிருந்து நேற்று மாலை வந்த ஒரு விளம்பர குறுஞ்செய்தி -

மும்பையில் நடந்த துயர சம்பவங்கள் உங்களுக்கு வாழ்வு எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை உங்களுக்கு உணர்த்தியிருக்கும். நாங்கள் உங்களுக்கு உதவவே காத்திருக்கிறோம். முழுமையான காப்பீட்டுத் திட்டங்களுக்கு 567678 என்ற எண்ணுக்கு FG என்று டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்புங்கள்.

பி.கு: திறந்தவெளி பல்கலைக் கழக சேர்க்கை பற்றிய குறுஞ்செய்திகளிலிருந்து இது போன்ற தலைவலி தரும் விளம்பரங்கள் உட்பட தேவையில்லாத இம்சைகளைத் தவிர்க்க ஏதேனும் வழியிருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்...

Tuesday, October 28, 2008

சினிமா.. சினிமா.. - என் முறை!

தொடர் பதிவுகளைத் தொடர்வதும் தான் பெற்ற இன்பத்தை மற்றவருக்கும் அளிக்கும் விதமாய் அவர்களையும் இழுத்து விடுவதும் வலையுலகில் தவிர்க்க முடியாததாகி விட்டது. மாட்டி விட்ட நந்தாவுக்கு ”கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்”, என்னைப் பார்த்தும் மற்றவர்கள் இப்படி சொல்லாமல் இருப்பதற்காக நான் யாரையும் அழைக்க வில்லை. யாரெல்லாம் இதற்கு பின் இது போன்ற பதிவுகளை போடுகிறார்களோ அவர்களை எல்லாம் நானும் அழைத்ததாக எண்ணிக்கொள்ளவும். :)))


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயதெல்லாம் சரியாக நினைவில்லை. முதல் முதல் பார்த்த படங்கள் திருவிளையாடலும் புன்னகை மன்னனும். வீட்டிற்கு அருகிலிருக்கும் லாரி ஒட்டுனர்கள் ஆயுத பூஜைக்கு வருடா வருடம் தெருவில் படம் போடுவார்கள். அப்படி போடும் படங்களில் ஒன்று பக்திப் படமாகவும் இன்னொன்று புதுப் படமாகவும் இருக்கும். அப்படி பார்த்ததுதான் மேற்சொன்ன இரு படங்களும். ஆனால் அப்போதெல்லாம் படங்களில் இருக்கும் பாடல்களின் இனிமை, மாயாஜால காட்சிகளின் ஈர்ப்பு, சண்டைக் காட்சிகள் இதெல்லாம்தான் நினைவில் நிற்கும். விவரம் தெரிந்தபின் இப்படங்களை மறுமுறை பார்த்த போதுதான் கதையெல்லாம் புரிந்து பார்த்தேன். பள்ளிக் காலம் முடியும் வரை அம்மாவோடு திரையரங்கிற்குச் சென்று பல படங்கள் பார்த்திருக்கிறேன். ஒரளவு புரிந்து பார்க்க ஆரம்பித்தது வீரா என்று நினைக்கிறேன். மேல் நிலைப்பள்ளி போய்க்கொண்டிருந்த கால கட்டம் அது. எனவே லாஜிக்கலாக வீராதான் நான் பார்த்த முதல் படம். :)

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சுப்பிரமணியபுரம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தேன் நிலவு - வீட்டில்(டிவிடி உபயம்) - அருமையான படம், இனிய பாடல்கள், என்னுடைய ஃபேவரிட் ஜோடி வைஜெயந்தி மாலா & ஜெமினி. எல்லாத்தையும் விட டணால் தங்கவேலுவின் காமெடி.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

விஜய், விஜயகாந்த் படங்கள் பார்த்து, பல சமயம் மருத்துவமணைக்கு போகும் படி ஆகி இருக்கிறது. :)

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ரொம்பெல்லாம் இல்லை, ஒரளவுக்கு - குஷ்பு விவகாரம்

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

டிடிஎஸ்(பல முறை காதை ரொம்ப பலமாகவே தாக்கியிருக்கிறது) :)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கண்ணில் சிக்கினால் சில சமயங்களில் வாசிப்பதுண்டு.

7. தமிழ்ச்சினிமா இசை?

பெரும்பான்மை சராசரி தமிழர்களையும் போல் எனக்கும் இசையென்பது தமிழ்ச் சினிமா இசை மட்டுமாகவே வெகுகாலம் வரை இருந்தது. இப்போதும் பெரும்பாலும் நான் கேட்பது அதையே. எனவே என் வாழ்வில் தமிழ்ச் சினிமா இசைக்கு ஒரு முக்கியப் பங்குண்டு. புத்தகம் போலவே பாடல் சேகரிப்பிலும் ஆர்வம் அதிகம்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

மிக மிகக் குறைவு. இந்தியப் படமென்றால் சில சமயம் மலையாளப் படங்கள், மிகச் சில இந்திப் படங்கள். மிகப் பிடித்த பிற இந்திய மொழிப் படம் பரதம், சர்க்கம். உலக மொழி படங்களென்றால் எனக்கெல்லாம் ஆங்கிலம் மட்டுமே. மிகப் பிடித்த படங்கள் - Forrest Gump, The Terminal (Tom Hanks-ன் அப்பாவித்தனமான நடிப்பு ரொம்பவே உருக வைக்கும்), Meet the Fockers

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

எதுவுமில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மன்னிக்கவும். எனக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத விஷயத்தின் எதிர்காலத்தைப் பற்றி அளந்து விட நான் ஜோசியரோ இல்லை கேள்வி பதில் பத்தி எழுதும் எழுத்தாளரோ இல்லை. :)

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கோ இல்லை ஒட்டு மொத்த தமிழர்களுக்கோ எதுவும் ஆகிவிடாது என நம்புகிறேன். கொஞ்ச நாட்களுக்கு புலம்ப ஒரு விஷயமிருக்கும். பிறகு பழகிவிடும். மறந்து மற்ற வேலைகளைப் பார்க்கப் போய்விடுவோம் என்று நினைக்கிறேன்.

Monday, October 06, 2008

சமையலறை சங்கடங்கள்திருமணத்திற்கு முன்பு வரை நான் ரொம்பவும் விஸ்தாரமா சமைக்கிற ஆள் கிடையாது - ஆனா கண்டிப்பா ரெகுலரா சமைச்சுடுவேன். அடிக்கடி வெளியில் சாப்பிடுவது என்பதை பேச்சுலர் வாழ்வில் கூட என்னால் நினைத்தே பார்க்க முடிந்ததில்லை. இதற்கு முக்கிய காரணம், ஹோட்டல் சாப்பாடுன்றது என் சின்ன வயசுல தீபாவளி பர்சேசுக்காக அப்பாவோடு கும்பகோணம் போறப்ப மட்டும் கிடைக்கும் ஒரு பெரிய ஆடம்பரம் அப்படின்னு மனசுல பதிஞ்சதா இருக்கலாம்.

எங்க ஊரில் அப்பல்லாம் மொத்தமே 2 டீக்கடை, ஒரு இட்லி கடை, ஒரு முனியாண்டி விலாஸ் மிலிட்டிரி ஹோட்டல் - அவ்ளோதான். இதுல எங்கேர்ந்து வெளில போய் சாப்பிடறது? அத்தோட இல்லாம இன்னமும் எங்க ஊர் ஒருத்தர் வீட்டில் குடும்பத் தலைவிக்கு உடம்பு முடியலைன்னால் பக்கத்து வீட்டிலிருந்து சின்ன சின்ன கிண்ணங்களில் நாலுவகை கறிகாய்களோடு சாதமும் சாம்பாரும் வாழை இலை போட்டு மூடி பின்கட்டு வழியாவே கொண்டு வந்து வச்சுட்டுப் போற அளவிலான கிராமமாவேதான் இருக்கு.

ஒரு அவசரத்துக்கு கூட வெளியே பர்கர், பிட்சா என்றெல்லாம் ஒப்பேத்த நான் தயாராக இருந்ததில்லை. வீட்டிலும் நூடுல்ஸ் போன்றவைகள் பிடிக்காது. அதிக வேலையினாலோ இல்லை சோம்பலாலோ எதுவும் செய்யப் பிடிக்கவில்லை என்றாலுமே கூட குக்கர் மட்டும் வைத்து மூன்று வேளையும் தயிர்சாதம் சாப்பிட்டேனும் ஒப்பேற்றியிருக்கிறேன். ஆனால் நாம் சமைத்துப் போடுவதையும் ஒரு ஜீவன் நம்பி சாப்பிடத் தயார்னு ஆனபின்னாடியும் நாம கொஞ்சம் ஒழுங்கு முறையா சமைக்கலைன்னா நல்லா இருக்காதேன்னு கொஞ்சம் என் சமையல் முறைகளை ஒழுங்கு செய்துக்கணும்னு இப்பத்தான் ஒரு ஒரு மாசத்துக்கு முன்னாடி முடிவு செஞ்சேன்.

சமையலுக்கு முதல் தேவை அடுப்பு இல்லையா? எனக்கோ வீட்டில் கேஸ் கனெக்ஷன் கிடையாது. ஏன்னு கேட்டா, ரேஷன் கார்டு கிடையாது. ஏன்னு கேட்டா ஊர்ல ரேஷன் கார்டில் என் பெயர் இருக்கு. அதை காமிச்சு இங்க கனெக்ஷன் வாங்க முடியாது. சரி, அங்கேர்ந்து பேரை நீக்கிட்டு இங்க புது கார்டு வாங்கலாம்னு ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போய் கேட்டதுக்கு ஒத்தை ஆளுக்கெல்லாம் இங்க ரேஷன் கார்டு கொடுக்கப் பட மாட்டாதுன்னு சொல்லீட்டாங்க. இதுக்காக ஊர்லேர்ந்து குடும்பத்தையே இங்க கட்டி இழுக்க முடியுமா? இல்லை இந்த கேஸ் கனெக்ஷனுக்காக கல்யாணம்தான் கட்டிக்க முடியுமா? இது வேலைக்காகாதுன்னு எல்லாத்தையும் தூக்கி மூட்டை கட்டிட்டு ரொட்டேஷன்ல கிடைக்கற சிலிண்டரை வைத்து வாழ்க்கைய ஓட்ட முடிவு செஞ்சேன்.

அக்கா, சித்தி, மாமான்னு லோக்கலில் இருக்கும் எல்லோரும் இரண்டு சிலிண்டர் இணைப்பு உள்ளவங்களா இருந்ததாலும், எனக்கு மூன்று மாதத்துக்கு ஒரு சிலிண்டர் போதுமானதா இருந்ததாலும் (காபி, டீ, பெரும்பாலும் தயிர் சாதம், என்னிக்காவது ஒரு நாள் சம்பிரதாயமான சாப்பாடு - இது பெரும்பாலும் என் தங்கை குடும்பத்தோடு 3 மாசத்துக்கு ஒரு தரம் ஊரிலிருந்து வரும் போது நிகழ்வது. இந்த மெனுவுக்கு ஒரு சிலிண்டர் 3 மாசம் தாங்காதா என்ன?) என் பிழைப்பு நல்லாவே ஓடிகிட்டிருந்தது.

இப்ப குடும்பம் பெருசாயிடுச்சு ;) அத்தோட ரொட்டேஷனுக்கு சிலிண்டர் புக் பண்ணி கொடுங்கன்னு கேக்கற நிலமைல நம்ம சொந்த பந்தங்களும் இப்ப ஒட்டுறவோட இல்லை. அதுனால மறுபடி கேஸ் கனெக்ஷன், ரேஷன் கார்டு வேலைகளை தூசு தட்ட ஆரம்பிச்சோம். இப்ப ஒத்தையா போய் க்யூவில் நிக்கற நிலமை இல்லை. அட்லீஸ்ட் சும்மா நிக்கற நேரத்துல சண்டையாவது போடலாம், டைம் பாஸ் ஆகும்ன்ற குறைந்த பட்ச உத்ரவாதம் இருக்கு.

எதுக்கு சண்டையா - இதெல்லாம் ஒரு கேள்வியா? ஜெயமோகன்/ஞானி/சாரு இது மாதிரி யாருனா ஒருத்தரை பிடிச்சு அமுக்கி அவங்க எழுத்துல இருக்கற நுண்ணரசியல பத்தி தலைவர் க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சா, ரெண்டாவது நிமிஷமே ஒரு பிரமாதமான சண்டை நிச்சயம். நீங்கல்லாம் போலி அறிவுஜீவிகள்ன்னு அர்ச்சனைய ஆரம்பிச்சார்னு வைங்க, அரை மணி என்ன, நாள் முழுக்க வேணும்னாலும் சண்டை நீண்டுகிட்டே போகும். இப்படியா இன்ட்ரஸ்டிங்கான டைம்பாஸ் கைவசம் இருக்கறப்ப க்யூவுல நிக்கறதைப் பத்தி என்ன பிரச்சனைன்னு நானும் எங்க ரெண்டு பேர் பேரையுமே ரேஷன் கார்டுலேர்ந்து நீக்கி சான்றிதழை அனுப்பி வைக்கச் சொல்லி அவங்கவங்க வீட்டுக்கு தகவல் சொல்லிட்டோம். அப்புறம் பாத்தா கேஸ் கனெக்ஷனுக்கு ரேஷன் கார்டு அவசியமில்லைன்னு பேப்பர்ல செய்தி.

அந்நேரம் பாத்து நாங்க ஊர்ல இல்லை. சோ, வந்தவுடனே இன்டேன், பாரத் கேஸ் ஏஜென்ஸின்னு எல்லா இடத்துக்கும் படையெடுத்தோம். எங்களுக்கு இன்னும் சர்குலர் வரலை சார்னு ஒரே பதில் எல்லா இடத்திலயும். விடாம வராவாரம் போய் அவங்களை நச்சரிச்சதுல ஒரு வழியாய் போன வாரம் பதிவு செஞ்சாச்சு. அனுமதி வரதுக்கு 30 முதல் 45 நாள் வரை ஆகலாம்னு எங்க ஏரியா இண்டேன் ஏஜென்சிக்கார அம்மா சொன்னாங்க. இதுக்கு நடுவுல போன மாசமே என்னிடமிருந்து ஒரே ஒரு சிலிண்டர் காலி. சரின்னு ஆபத்பாந்தவனா நான் நினைச்சுகிட்டிருக்கும் கிளிக்ஸ் அடுப்பை எடுத்து என் கைவரிசைய காட்டத் துவங்கினேன்.

எனக்கு வழக்கமா 10 - 15 நாள் வரை வரும் அந்த இரண்டரைக் கிலோ சிலிண்டர். அது பழைய கணக்குன்றதால, எதுக்கும் ரிஸ்க் வேண்டாம்னு சாப்பாட்டு மூட்டை கட்டறதெல்லாம் நிப்பாட்டி தலைவருக்கு ஒரு நாளைக்கு ரெண்டு வேளையாவது நல்ல சாப்பாடு சாப்பிடும் சுதந்திரத்தைக் கொடுத்தேன்.

டீ/காபி, இரவு உணவு மட்டும்னு எங்கள் மெனு சுருங்கியது. அப்படியும் நான்காவது நாளே கிளிக்ஸ் காலை வாரியது - காஸ் காலி. போன் பண்ணி கேட்டால் சித்தி நடுவுல ஒரு 10 நாள் போல அதுலதான் வெந்நீர் போட்டுக் குளிச்சேன்னு கூலா சொல்றாங்க. ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், நான் உடனடியாவே ரீஃபில் செய்திருப்பேன். அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சேன்.

மறுநாள் காலை காபி/டீ போடவே வழியில்லை. எங்க வீட்டுக்குப் பக்கத்துல எதும் நல்ல ஹோட்டலும் இல்லை. ஒரு டீக்கடை வேணும்னால் கூட இந்தப் பக்கம் பொன்னியம்மன் கோவிலுக்கோ இல்லை அந்தப் பக்கம் விஜயநகருக்கோதான் போக வேண்டியிருக்கும். சோ, கூட் ரோடு பக்கமிருக்கும் ஒரு எலக்டிரிக்கல் பொருட்கள் விற்கும் கடையில் அன்று மாலையே ஒரு எலக்டிரிக் காயில் ஸ்டவ் வாங்கினேன்(1400 ரூபாய் காலி). எடுத்து வந்து மாலை டீ தயாரித்து முடித்தேன்.

மறுநாள் காலை டீக்கு தண்ணீர் வைத்தால் அது வெந்நீராகவே இல்லை. அந்த அடுப்பில் ரெகுலேட்டர் இருந்தாலுமே கூட ஆன்/ஆஃப் என்பதைக் காட்ட எந்த இண்டிகேட்டரும் இல்லை. அத்தோடு ரெகுலேட்டரும் இரண்டு பக்கத்திலும் திருப்பக் கூடியதாக இருந்தது. எனக்கு பயங்கர சந்தேகம் - ஒரு வேளை நான் தவறான திசையில் திருப்புகிறேனோ எனறு. எனவே இரண்டு பக்கமும் நன்றாக சாத்துகுடியெல்லாம் ஜூஸ் பிழிய திருகுவோமே, அது போலத் திருகித் திருகி ஒவ்வொரு பொசிஷனிலும் 5 நிமிடம் வைத்துப் பார்த்தாலும் அடுப்பென்னவோ மோனப் புன்னகையோடு நிச்சலனமாய் வீற்றிருந்தது. பிறகு என்னிடமிருந்த எலக்ட்ரிக் குக்கரில் பாலை காய்ச்சி, இருந்த இன்ஸ்டண்ட் காப்பித் தூளைக் கொண்டு அன்றைய காலைப் பொழுதை ஓட்டினேன்.பிறகு மாலையில் காயில் அடுப்பை ரிப்பேர் செய்ய எடுத்துச் சென்றால், இரண்டு நாளாகுமாம் ரெடியாக. சரி என்று இன்னொரு கிளிக்ஸ் வாங்க முடிவு செய்து மடிப்பாக்கம் கூட் ரோடில் இருக்கும் எல்லாக் கடைகளிலும் ஏறி இறங்கினோம். எங்கும் கேஸ் பற்றாக்குறையால் அந்த அடுப்பு கையிருப்பில் இல்லை என்றே பதில் வந்தது. அப்படியே முன்னேறி நங்கநல்லூரின் பாலசுப்ரமணியம் மெட்டல் ஸ்டோருக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த சேல்ஸ் மேன் உப்பில்லை என்றால் புளி இருக்கு என்று சொல்வது போல எலக்ட்ரிக் ஸ்டவ் வாங்கிக்கோங்க என்றார். நானோ காயில் அடுப்பில் நொந்த கதையைச் சொல்லி மறுமுறை ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை என்று சொல்ல, அவரோ சளைக்காமல் எலக்ட்ரோ மேக்னடிக் ஸ்டவ்னு ஒன்னு இருக்கு மேடம் என்று ஆரம்பித்தார். நான் மறுக்க மறுக்க வழக்கம் போல பாலாவுக்கு அந்த அடுப்பு ரொம்பவே பிடித்துப் போயிற்று ;) விளைவு - நாங்கள் அந்த அடுப்புடந்தான் வீடு திரும்பினோம்.

பட்டர்ஃப்ளை நிறுவனத்தின் தயாரிப்பான இந்த மின்காந்த அடுப்பில் மூன்று மோட் உள்ளது. இதில் ஹீட்டிங்க்தான் டிஃபால்ட் மோட். ஒன்றிலிருந்து பத்து நிலைகள் வரை சூடு செய்யலாம். அநேகமாய் நம்ம சமையலுக்கு 2லிருந்து 5 நிலைகளே போதுமானதா இருக்கு. 2ல் நம் சாதாரண அடுப்பை சிம்மில் வைப்பது போலவும் 5 நம்ம சாதா அடுப்பின் ஹையில் வைப்பது போலவும் இருக்கிறது. அதற்கு மேற்பட்ட நிலைகளை தண்ணீர் அதிகம் உள்ள பொருட்களுக்கு மட்டுமே உபயோகிக்கவும் - இல்லையெனில் கண்டிப்பாகத் தீய்ந்து விடுகிறது.

இது தவிர குறிப்பிட்ட டெம்ப்ரேச்சரை செட் செய்து கொள்ளலாம். அது போலவே டைமரையும் வேண்டும் நேரத்துக்கு செட் செய்து கொள்ளலாம். இந்த டைமரையும் டெம்ப்ரேச்சர் ஆப்ஷனையும் சேர்த்தும் ப்ரொகிராம் செய்து கொள்ள முடிகிறது - இட்லி வேக வைப்பது போன்றவற்றிற்கு இந்த காம்போ மோட் ரொம்பவும் உதவி.

இந்த அடுப்பில் ஒரே ஒரு பிரச்சனை - மேக்னடிக் பேஸ் உள்ள பாத்திரங்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். இரும்பு தோசைக்கல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் போன்றவற்றை உபயோகிக்க முடிகிறது. ஆனால் காப்பர் பாட்டம் உள்ள் பாத்திரங்கள், அலுமினியம் பேஸ்டு குக்கர் போன்றவற்றை உபயோகிக்க முடிவதில்லை. என்னிடம் ஸ்டீல் குக்கர் இல்லாததால், இன்னமும் குக்கர் வைக்க மட்டும் கிளிக்ஸ் அடுப்பையே நம்பியிருக்கிறேன். மற்றபடி மொத்த சமையலும் இதிலேயே அழகாக முடிந்து விடுகிறது. தற்காலிக நிம்மதி என்றாலும் கூட முழுக்க சந்தோஷப்பட முடியவில்லை - அடுத்த மாத மின்சார பில் எப்படி இருக்குமோ என்ற பயம் உள்ளுக்குள்ளே வந்து வந்து போகிறது....!

Saturday, September 27, 2008

வாழ்த்தலாம் வாங்க.....

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையில் என்னுடையதேர்வு எப்போதும் பாடல்கள், இல்லையென்றால் காமெடிநிகழ்ச்சிகள் மட்டுமே. எங்கள் வீட்டு ரிமோட்டுக்கு வாய் இருந்தால் கதறி அழுமளவு அதனை வேலை வாங்குவதுண்டு.அதிலும் பாடல்களுக்கு நடுவே தொகுப்பாளரை யாரேனும் தொலைபேசியில் அழைத்து "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றோ, இல்லை "அய்யோ, என்னால லைன் கிடைச்சதை நம்பவே முடியலைங்க, ரொம்ப சந்தோஷமா இருக்குங்க" என்றோ வழியத் தொடங்கினால்.. அலறி அடித்து அடுத்த இசை அலைவரிசையைப் பிடிக்க வேண்டியது. அங்கும் இதே கதை என்றால் வரிசையாக எல்லா அலைவரிசைக்கு ஒரு முறை போய் எங்கேனும் காமெடித் துணுக்குத் தோரணங்கள் ஒடுகிறதா என்று பார்த்துவிட்டு முதல் அலைவரிசைக்கே மறுபடி வந்தால் அங்கே அதற்குள் பாடல் ஆரம்பித்திருக்கும். இந்த அற்புதமான பாதுகாப்பு வளையத்தை சென்ற வாரத்தில் ஒரு நாள் காலையில் மறந்து போனதன் விளைவாக என் இரத்த அழுத்தத்தை ஏற்றிக் கொள்ள வேண்டியதாகிப் போனது.

ஒரு பெண்மணி தொகுப்பாளரை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். அது வாழ்த்துக்களைச் சொல்வதற்கான நிகழ்ச்சி. யாரும் யாருக்கும் வாழ்த்துச் சொல்லலாம். பின்னர் யார் யாரோ உழைத்துச் செய்த ஒரு பாடலையும் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல நமக்குப் பிடித்த யாருக்கு வேண்டுமானாலும் 'டெடிகேட்' செய்து கொள்ளலாம். யார் கேட்பது? சரி, விஷயத்திற்கு வருவோம்.அந்தப் பெண்மணி யாருக்கு எதற்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார் தெரியுமா? தனது உறவுக்காரப் பெண்ணொருவருக்கு அவரது மஞ்சள் நீராட்டு விழாவிற்கான வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிகளின் வழக்கமான சம்பிரதாயப்படி ஊர், பேர், தெரு, வீட்டு எண் உட்பட சகல அடையாளங்களோடும்தான். ஏற்கனவே இங்கே சில இடங்களில் மஞ்சள் நீராட்டு விழாவிற்கான வினைல் போர்டுகளை (பெண்ணின் புகைப்படத்தோடு)பார்த்து அதிர்ந்திருக்கிறேன். அதுவேனும் அந்த வழி போகிறவர்களின் கண்ணில் மட்டும்தான் படுமென்றால், இதுவோ இன்னும் பிரமாதமாக உலகம் முழுக்கவே வீடு வீடாகச் சென்று விஷயத்தை தெரிவித்து விடுகிறதில்லையா? என்ன ஒரு நல்ல உபயோகம் பாருங்கள் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிற்கு?, எம்.ஆர்.ராதா ஒரு படத்தில் குழாய்ப் புட்டு பற்றி அவரது அம்மா சொன்னதும் சொல்லுவார் - "வெளிநாட்டுக்காரன் நீராவியப் பாத்தா ரயில் உடணும்னு யோசிக்கறான். நம்ம ஆளுகளோ புட்டு அவிக்கலாம் இட்டிலி அவிக்கலாம்னு யோசிக்கறான். எங்கேர்ந்துடா நாம முன்னேற முடியும்?"னு அவருக்கே உரித்தான ஏற்ற இறக்கங்களோடு கேட்பார். அந்தக் காட்சிதான் நினைவில் வந்து போனது.

பிறகு இது குறித்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கையில் பெண் ஒருத்தி உடல் ரீதியான வளர்ச்சியை பகிரங்கப் படுத்தலின் பின்னாலிருக்கும் தேவைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஆரம்பத்தில் எங்கள் வீட்டில் ஒரு பெண் திருமணத்திற்குத் தயார் என்று ஊராருக்கு அறிவிக்க, அதன் மூலம் அவளுக்கான வரன்கள் தேடி வர என்று காரணங்கள் இருந்திருக்கக் கூடும். அதே நேரத்தில் பால்ய விவாகத்தின் தொடர்ச்சியாக பெண் பருவமெய்தும் முன், திருமணம் செய்து விட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளும் சில சமூகங்களில் இருந்திருக்கலாம். அதனாலேயே திருமணத்திற்கு முன் பெண் பூப்பெய்துவிட்டால் அதை மறைத்து வைப்பது என்பதும் வழக்கத்திலிருந்திருக்கிறது.

இன்று பிராமண சமூகத்தில் இந்த சடங்கு பெரிதாகக் கொண்டாடப் படாமைக்கு காரணம் வெகு சமீபம் வரை (ஒரு மூன்று தலைமுறைக்கு முன்னால் வரை) பால்ய விவாகப் பழக்கம் வெகு தீவிரமாக அமலில் இருந்ததுதான். பால்ய விவாகம் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட பின் (சாரதா சட்டம் என்று நினைக்கிறேன்) அது வெகுவாக குறைந்திருந்த காலகட்டத்திலும் கூட, சாஸ்திரத்துக்காக பெண்ணின் திருமணத்திற்கு பிறகு முதல் முறை மாதவிலக்கான பின்பே அப்பெண்ணுக்கு சடங்குகள் செய்து பின், சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்வது என்பதும் வெகு காலம் வரை பழக்கத்திலிருந்தது. எனவே அவர்கள் பெண்ணின் பூப்பெய்தல் சடங்கை பெரிய அளவில் கொண்டாடுவதில்லை. அது தவிர்த்துப் பார்த்தால் பெரும்பாலான சமூகங்களில் இந்த சடங்கு கொண்டாடப்பட்டே வந்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக மாமா, அத்தை போன்றவர்களின் பங்களிப்பு இது போன்ற சடங்குகளில் அதிகமாகவே இருக்கும். அதற்கு காரணம் கண்டுபிடிப்பதொன்றும் பெரிய விஷயமல்ல - பெரும்பாலும் இந்த இரு தரப்புகளிலும் திருமணத்திற்குப் பையனிருந்தால் அங்கேயே முடித்துவிடலாம் என்பதுதான் காரணம். கண்டம் தாண்டியும் மாப்பிள்ளைகளைத் தேடி சலித்துத் தர இணையதளங்கள் உள்ளிட்ட எத்தனையோ வசதி வாய்ப்புகள் உள்ள இன்றோ இந்த சடங்குக்கான தேவைகள் 99% இல்லாது போய்விட்டது. ஆனாலும் இந்த வெற்றுச் சடங்குகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதும், அதை தனது செலவு செய்யும் சக்தியை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக மாற்றுவதும், வீண் ஆடம்பரமும் வெட்டி ஜம்பமுமன்றி வேறில்லை.

அத்தோடு அந்த பதின்ம வயதுப் பெண் இந்த சடங்குகளின் பின் வெளியே வரும் போது எதிர்கொள்ள வேண்டியிருக்கக் கூடிய சீண்டல்கள் பற்றியெல்லாம் எவ்வித அக்கறையுமற்று இன்னும் எத்தனை நாள் இப்படியெல்லாம் அச்சிறுமிகளை தர்மசங்கடப் படுத்திக் கொண்டிருக்கப் போகிறோம்?

Thursday, September 18, 2008

படித்ததில் பிடித்தது - தொடுவானம் தொட்டுவிடும் தூரம்

இது திண்ணை இணையதளத்தில் வந்த ஒரு மொழிபெயர்ப்புத் தொடர்கதை. மிகவும் பிடித்தமானதாக இருப்பதால் இங்கே அதன் அனைத்து பாகங்களுக்கான சுட்டியையும் சேமித்து வைக்கிறேன். வெறும் சுட்டிகள் மட்டுமே என்பதால் எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன்.

இக்கதை பற்றிய விமர்சனம்/கருத்து எதுவும் இங்கே நான் சொல்வதாயில்லை. சொன்னாலும் யாரும் மதிக்கறதில்லைங்கறது வேற விஷயம்னு வைங்க. :) படிக்க நினைக்கறவங்களுக்கு தேடும் சிரமம் இல்லாம ஒரே இடத்துல எல்லா அத்தியாயமும் இருந்துட்டுப் போகட்டுமேன்னுதான் இந்த முயற்சி.

கதையின் பெயர்: தொடுவானம் தொட்டு விடும் தூரம்
ஆசிரியர்: Volga {P.Lalithakumari}
தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்
மூலக்கதையின் மொழி: தெலுங்கு

Part-1
Part-2
Part-3
Part-4
Part-5
Part-6
Part-7
Part-8
Part-9
Part-10
Part-11
Part-12
Part-13
Part-14
Part-15
Part-16
Part-17
Part-18
Part-19

Wednesday, August 27, 2008

இதனால் சகலமானவர்களுக்கும்

ஒரு முக்கிய அறிவிப்பு. அறிவிப்பினை முழுமையாகத் தெரிந்து கொள்ள இங்கேயும் வரலாம்.

பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை இதன் தொடர்பதிவிலேயே தெரிவித்து விடவும். :)

Wednesday, July 23, 2008

யெஸ். பாலபாரதியின் “ அவன்-அது= அவள் ” விமர்சனம்


சக பதிவரும், தோழருமான பாலபாரதியின் அவன் - அது = அவள் படிக்கக் கிடைத்தது. இந்த நெடுங்கதையை பற்றிய என்னுடைய சில கருத்துக்களை இங்கே பதிவு செய்ய எண்ணம். கதை மூன்றாம் பாலினத்தவர் பற்றியது. உண்மையிலேயே பதிவுலகிற்குள் லிவிங் ஸ்மைல் வித்யா வராதிருந்தால் இத்தகைய மனிதர்களைப் பற்றிய எனது கருத்து என்னவாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் என் மீதே அருவெறுப்பாக இருக்கிறது - இவர்களை மனிதர்கள் என்றே நினைத்திருந்திருக்கப் போவதில்லை என்ற கசப்பான உண்மை என்னைப் பற்றி நானே வலிந்து உருவாக்கி வைத்திருக்கும் முற்போக்கு அடையாளங்களை ஆட்டம் காண வைக்கிறது. முன்பே சு.சமுத்திரத்தின் வாடாமல்லியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த போதும் படிக்கத் தோன்றியதில்லை என்பதே இத்தகைய விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய என்னுடைய அலட்சியத்துக்கு சாட்சி. வித்யாவின் எழுத்துக்களே இத்தகைய சக மனிதர்களின் மீதான் என் பார்வையை மாற்றியமைத்தது எனலாம். இப்போது இந்த புத்தகம் இன்னும் கொஞ்சம் கூடுதல் தெளிவைக் கொடுத்திருக்கிறது.

தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருப்பீர்களா? ‘ஆமாம், ஒரே ஒரு முறை நினைத்திருக்கிறேன்’ என்று சொல்பவர்கள் நம்மில் அநேகர் உண்டு.

உடலளவில் ஆணாகவும், மனத்தளவில் பெண்ணாகவும் இருக்கும் சிலருக்கு வாழ்க்கை எப்படியிருக்கும்? தினம் தினம் செத்துப்போகலாம் என்று நினைத்துக் கொண்டே வாழ்க்கையை எப்படியாவது முழுமையாக வாழ்ந்து தீர்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே இவர்கள்.

தங்கள் வாழ்க்கையின் அவலத்தைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு திருநங்கை - வாழ முடியவில்லையே என்ற ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டவள், அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்தது.

எனது தந்தையின் மரணமும், தங்கையின் மரணமும் என்னை உலுக்கியதைவிட அந்தத் திருநங்கையின் தற்கொலை என்னை அதிகம் நிலைகுலைய வைத்தது. இதைவிட சோகம் அந்தத் தற்கொலைச் சம்பவம், காவல்துறைப் பதிவுகளில் விபத்து என்றே பதிவு செய்யப்பட்டது.

பெண்களாகவும் இல்லாமல் ஆண்களாகவும் இல்லாமல் திருநங்கைகளாக மாறியவர்களுக்கு வாழ்க்கையின் மீது இருக்கும் தீராத காதலே இந்தப் புனைவு. இது முழுவதும் புனைகதை என்று சொல்வதற்கு இல்லை. பல திருநங்கைகளின் வாழ்வில் இருந்து எடுக்கப்பட்ட சம்பவங்களின் தொகுப்பே இந்த நெடுங்கதை. இக்கதையை வாசிப்பவர்கள் திருநங்கைகளின் வாழ்வில் இருக்கும் வலியை உணர்ந்து, சக மனிதர்களாக அவர்களை மதித்தால் இந்தப் படைப்பு பூர்ணத்துவமடைந்துவிடும்.

இது நூலின் என்னுரையில் ஆசிரியர் இந்த நெடுங்கதையைப் பற்றிச் சொல்லியிருப்பது.

கதை என்று எடுத்துக் கொண்டால் என் பார்வையில் இது பிரச்சாரக் கதைதான். அதாவது பாலபாரதியின் பாஷையில் சொல்வதானால் கதை சொல்ல வேண்டிய அரசியலை முடிவு செய்து விட்டு எழுதிய கதை. சொல்ல வேண்டிய விஷயத்தை முடிவு செய்த பின் பலரிடம் பேசி சேகரித்த தகவல்களை சம்பவமாக மாற்றி அவற்றைக் கோர்த்து பின்னப்பட்ட கதை. ஆனால் அதிகம் அறியப்பட்டிராத ஒரு தரப்பாரின் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் ஆரம்பகாலப் படைப்புகள் இப்படித்தான் இருந்தாக முடியும் என்பதால் அது ஒரு பெரிய குறையாகத் தோன்றுவதில்லை. அடுத்தது கதை சொல்லப் பட்டிருக்கும் மொழி - இது மிக எளிமையானதாக இருப்பதால் அதற்கென அதிகம் மெனக்கிடாது விரைவாக கதைச் சரடைப் பிடித்துப் போக முடிகிறது. இத்தனைக்கும் வட்டார வழக்கு, திருநங்கையருக்கென இருக்கும் பிரத்யேக மொழி, அங்கங்கு குறுக்கிடும் மும்பையின் பேச்சு மொழியான ஹிந்தி என பல வேறுபாடுகளிருப்பினும் கூட அதிக பின் குறிப்புகள் தேவைப் படாத அளவு மொழி நடையை எளிமையாகத் தந்திருப்பதாலேயே கதையின் மிகக் கனமான ஆதாரப் பிரச்சனையை மட்டும் கவனிக்க முடிகிறது.

பெண்களுக்கு மட்டுமே நேருவதாக நாம் நினைத்திருக்கும் பல கொடுமைகள் இந்த மனிதர்களுக்கும் பொதுவானவை என்பதைச் சொல்வதோடு இவர்களுக்கேயான பிரத்யேகமான அவலங்களையும் பட்டியலிடுகிறது கதை. ஆனால் ஒன்றை குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும் - முதல் அத்தியாயத்தின் இறுதியில் கோமதி/கோபிக்கு நேரும் பலாத்காரம் முதலாக கடைசி அத்தியாயத்தின் கடைசி வரி வரை அடுக்கடுக்காக திருநங்கைகளின் பல பிரச்சனைகளை வரிசைப் படுத்தியிருந்தாலும் ஒரேடியாக அழுகாச்சி காவியமாகவும் போய்விடவில்லை கதை. அதே போல திருநங்கைகளின் ஒவ்வொரு பிரச்சனையையும் பற்றி பேசுவதற்காக ஒவ்வொரு கதாபாத்திரம் பிரத்யேகமாக படைக்கப் பட்டிருப்பது புரிந்தாலுமே கூட அப்பாத்திரங்கள் கதையோடு ஒட்டாது எந்த இடத்திலும் துருத்திக் கொண்டு தெரிவதில்லை. பாத்திரப் படைப்பு என்பது மிகவும் இயல்பாக இருக்கிறது.

திருநங்கையர் சமூகத்தின் செயல்பாடுகள் - அவர்களின் ஜமாத் எனப்படும் குழு வாழ்க்கை முறை, ஒவ்வொருவரும் ஒரு சில பெண்களை தத்து எடுத்துக் கொண்டு தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்வது, அவர்களுக்கான பிரத்யேக சடங்குகள்(மரண காரியங்களிலிருந்து அவர்களுக்கே உரித்தான குறி நீக்கம் செய்து கொள்ளும் நிர்வாண சடங்கு வரை) பல விஷயங்கள் விலாவாரியாக நுணுக்கமான தகவல்களைக் கூட விட்டுவிடாது சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

நூலில் பாலபாரதியின் என்னுரை மட்டுமே காணக்கிடைக்கிறது. ஆசிரியரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணோம். ஆசிரியருக்கு தன்னடக்கம் தடுத்திருக்குமேயானால் கூட பதிப்பகத்துக்காரர்களாவது இரண்டு வரியை எழுதிச் சேர்த்திருக்கலாம். வலையுலகிலிருக்கும் நமக்கு அவரைப் பற்றித் தெரியுமென்றாலும் ஒரு பொது வாசகருக்கு ஆசிரியரைப் பற்றிய குறிப்புகள் சற்றே படைப்பின் மீதான நம்பகத்தைக் கூட்டலாம். அடுத்த பதிப்பிலேனும் கவனத்தில் கொண்டால் நல்லது(அதற்கு அவரது ப்ரொஃபைல் மேலும் செறிவுள்ளதாக வாழ்த்துக்கள் :) ).

நூலைப் பொறுத்த வரை எனக்கு மிக முக்கியமான குறைபாடுகளாகத் தோன்றுவது இரண்டு விஷயங்கள் - ஒன்று கதை ரொம்பவே சுருக்க முடிந்து விடுவதாகத் தோன்றுவது. இதை ஆசிரியரும் உணர்ந்தே இருப்பதாகத் தோன்றுகிறது - இதை நாவல் என்று அழைக்காது நெடுங்கதை என்றே குறிப்பிடுவதன் மூலம். இன்னமும் இதில் பல பகுதிகள் விவரித்துச் சொல்லப்படலாம் என்றே தோன்றுகிறது.
இன்னொன்று திருநங்கைகளுக்கு கிடைக்கும் எந்தவிதமான ஆதரவையும் பற்றி இதில் குறிப்பிடப் படாதது. அதிகம் அவர்கள் மதிக்கப் படுவதில்லை என்றாலுமே கூட எங்கேனும் ஒன்றிரண்டு ஆதரவுக் கரங்கள் நீண்டுதானிருக்கும் நர்த்தகி நட்ராஜிற்கு கிடைத்த குருநாதரைப் போல. அது போன்ற விஷயங்களும் குறிப்பிடப்பட்டிருந்தால் சற்றே பாசிடிவ்-ஆகவும் இருந்திருக்கும்.

இது முதல் முயற்சி என்பது தெரியாத அளவுக்கு நூல் நேர்த்தியாகவே வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் பாலா

Wednesday, June 11, 2008

என் திண்ணை நினைவுகள்

திண்ணையைப் பற்றிய பாலபாரதி மற்றும் முத்துலெட்சுமியின் பதிவுகள் எனக்கும் எங்கள் வீட்டின் திண்ணையையும் அதனுடனான எனது சிறுவயது நினைவுகளையும் கொண்டுவந்தது. அதுனால என்னை யாரும் அழைக்கலைன்னாலும் நானும் அழையா விருந்தாளியா கோதாவுல குதிச்சுட்டேன்.

எங்கள் வீட்டின் இருபுறமும் திண்ணையிருந்தாலும் ஒரு புறம் பெரியதாகவும் இன்னொரு புறம் சிறிதாகவும் இருக்கும். மரச்சட்டங்கள் போட்டு அடைத்து வழிநடையில் மட்டும் அதே அளவு சட்டங்களிலான கதவு வைத்திருப்போம். இப்போது வழிநடையில் கூடுதலாக அப்பாவின் மோட்டர் சைக்கிள் ஏற்றுவதற்கான சரிவுப் பாதையும் சேர்ந்திருக்கிறது. இரு திண்ணையிலும் இரண்டு விளக்குப் பிறைகள் உண்டு. மார்கழியில் காலையிலும், கார்த்திகையில் மாலையிலும் இரு அகல் விளக்குகள் அங்கே ஏற்றி வைக்கப்படுவது முன்னெல்லாம் அதாவது என் அம்மா இருந்தவரை வழக்கம். அப்படியே எதாவது துக்க செய்தியோடு கடிதங்கள் வந்தால் அவையும் அங்யே திண்ணையின் ஏதாவது ஒரு மூலையிலேயே சொருகப்பட்டிருக்கும், போய் வந்த பின் உடனடியாக குளிக்கும் முன்னரே கிழித்து வெளியே எறிந்து விடுவார்கள்.

என்னுடைய சிறுவயதில் அவ்வளவாக விளையாட்டுக்கள் இடம்பெற்றிருக்கவில்லை. அம்மாவுக்கு பயம், வீதியில் இறங்கி பெண் அடி ஏதும் பட்டுக் கொண்டுவிட்டால் என்னாவது, எங்கேனும் காணாமல் போய்விட்டால் என்னாவதென்றலாம் அடுக்கடுக்கான பயங்கள். எனவே எனக்கு அனுமதிக்கப் பட்டதெல்லாம் திண்ணையில் அமர்ந்து விளையாடக் கூடிய விளையாட்டுகள் மட்டுமே. தவிரவும் அப்பாவை பார்க்க வருவோரை அமர வைப்பதும் அங்கேதான். அடுத்த நிலையில்தான் வீட்டினுள் முற்றத்தைச் சுற்றியுள்ள தாழ்வாரத்துக்கு அழைத்துச் செல்வது நடக்கும். அறுவடை நாட்களில் நெல்மூட்டையை அன்றன்றே விலைக்குப் போட முடியாது போனால் கொண்டு வந்து இறக்கி வைப்பதும் அங்கேதான்.

எங்கள் தெருவில் இப்போது சமீபத்தில்தான் தார் ரோடு போட்டிருக்கிறார்கள். முன்னெல்லாம் மண் தரையில் மழை நாட்களில் நீர் ஒரே தடத்தில் ஓடி அரித்துவிடுவதால் ஏற்படும் குழிகள் அங்குமிங்குமாக இருக்கும். தெருவின் இருதரப்பிலும் பெண்கள் கூட்டிப் பெருக்கி சாணம் தெளிக்கும் பரப்பு ஒரளவு சமமாக இருந்தாலும் கூட நடுப் பகுதியில் இத்தகைய குழிகள் அதிகமுண்டு. இரவு நேரத்தில் மின்சாரம் நின்று போய்விட்டால் அப்பா உடனடியாக ஒரு அரிக்கேன் விளக்கை ஏற்றிக் கொண்டு போய் திண்ணையில் வைத்து விடுவார். அவர் வீட்டில் இல்லையென்றாலும் நாங்கள் யாராவது அதை ஒரு அனிச்சை செயல் போல உடனடியாகச் செய்து விடுவோம். ஏனென்றால அதை மட்டும் மறந்தால் அப்பாவுக்கு ரொம்பவே கோபம் வரும்.

எல்லாமே நல்ல விஷயமாக ஒருத்தரைப் பற்றியோ இல்லை ஒரு விஷயத்தைப் பற்றியோ சொல்லிவிட முடியுமா என்ன? இந்தத் திண்ணைக்கு இன்னொரு உபயோகமும் உண்டு. மாதவிலக்கு நாட்களின் பகல் நேரத்தில் திண்ணையில்தான் பெண்களுக்கு வாசம். இரவு மட்டும் உள்ளே வந்து ரேழியில் படுத்துக் கொள்ள அனுமதி உண்டு. பெரிய திண்ணையின் மூலையில் பழைய பெட்ஷீட் கொண்டு ஒரு தற்காலிக மறைப்பு ஏற்படுத்தப்பட்டு அதில் ஒரு பாய், தலையணை, கோடை காலத்தில் விசிறி, தண்ணீர் சொம்பு, இத்தோடு மூன்று நாட்களாய் எண்ணெய் காணாத தலை இத்யாதி அலங்காரத்தோடு என் அம்மா, சித்தி(இத்தனைக்கும் கோடை விடுமுறையில் இரண்டு மாதம் வந்து தங்கிப் போகும் நபர் அவர்) என எல்லோரையும் அங்கே பார்த்திருக்கிறேன் நான். குளியலறையும் கழிவறையும் வீட்டின் கொல்லைப் புறத்தில்தான் இருக்கும்.

எனவே வீட்டைச் சுற்றிக் கொண்டுதான் அவர்கள் செல்ல வேண்டும். அதுவும் வீட்டிலிருப்பவர்களுக்கு முதலிலேயே சொல்லிவிட வேண்டும். கதவைத் திறந்து வைத்துக் கொண்டு தண்ணீரும் எடுத்து வைத்து விட்டு காத்திருப்பார்கள். ஏனென்றால் பெண்கள் கிணற்றைத் தொடக்கூடாதே? அப்புறம் சாப்பாடு கொல்லைத் தாழ்வாரத்தில் தட்டுமுட்டு சாமான்களுக்கு நடுவில் பரிமாறப்பட்டு, மோர், எக்ஸ்ட்ரா சாதம் எல்லாம் சிறு கிண்ணங்களில் எடுத்து வைக்கப் பட்டாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம் - இப்பெண்களுக்கு சாதம் பரிமாறிய பின் அத்தோடு சேர்த்து சமைக்கப்பட்ட எதுவும் "சேஷம்" என்று குறிப்பிடப்படும். மீதம் என்று பொருள். ரொம்பவும் ஆசாரமானவர்கள் அத்தகைய உணவைத் தொட மாட்டார்கள். ஆப்வியஸ்லி எல்லா மாமியார்களும் நாத்தனார்களும் இவ்வகை ஆசாரமானவர்களாகவே இருப்பார்கள். எனவே மீதமாவதைத் தடுப்பதற்காக பெரும்பாலும் பழையதுதான் இப்பெண்களுக்கு உணவாக இருக்கும். மீந்திருக்கும் பழையது? அடுத்த வேளைக்கு. அவ்ளோதான். தொட்டுக் கொள்ளவும் எதுவும் கிடைக்காது. பின்னே இவர்களுக்கு ஒரு துண்டு ஊறுகாய் தந்தால்தான் ஜாடியில் இருக்கும் மொத்த ஊறுகாயும் சேஷமாகிப், பின் வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி வீணாகிவிடுமே? வயர்லெஸ் முறையில் பரவும் தீட்டெல்லாம் தெரிந்திருக்கிறது பாருங்கள் நம்ம மக்களுக்கு. சரி, இதை வேறு இடத்தில் விலாவாரியாகப் பார்ப்போம். இப்போதைய டாபிக் திண்ணையல்லவா?

அம்மா மெனோபாஸ் நிலையை அடைந்தபின் இக்காட்சிகள் மெதுவாகக் குறைந்து மொத்தமாய மறைந்தது. அடுத்து என் முறை வந்தபோது அம்மா இந்நிலையைத் தொடரவிடவில்லை. என் அத்தைகளின் முணுமுணுப்பு இருந்த போதும் அப்பா அதைக் காதில் போட்டுக் கொள்ளாது முதல் முறையாக அம்மா சொன்னதை ஒத்துக் கொண்டது அநேகமாக இந்த ஒரு விஷயத்தில் மட்டுமே. ஏன்னா சம்பந்தப் பட்டது அவரோட செல்லப் பெண்ணாச்சே. :) கேட்டவங்களுக்கு எல்லாம் அம்மாவின் ஒரே பதில் "பசங்களோட சேர்ந்து படிக்கற ஸ்கூலில் படிக்கறா. கூடப் படிக்கற பசங்க யாராவது பாத்துட்டு கிண்டல் பண்ண ஆரம்பிச்சா தாங்குவாளா?". கோ.எட் பள்ளியில் படித்தது இந்த ஒரு விஷயத்தில் ரொம்பவே உதவியது. எனவே திண்ணையிலிருந்து ரேழி அறை எனக்கான இடமாய் மாற்றப்பட்டது. வீட்டிற்குள்ளாகவே நடந்து செல்லவும் அனுமதிக்கப் பட்டேன். இப்பவும் திண்ணை அதன் வழக்கமான அமைதியோட வருபவர்களுக்கு வரவேற்பரையாகவும், சிறு குழந்தைகளுக்கு விளையாடுமிடமாகவும் தன்னோட சேவையைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

Friday, May 02, 2008

பெயரால் வந்த பிரச்சனை

சமீபகாலமாக வலைப் பக்கம் வருவதே அபூர்வமாகி விட்ட நிலையிலும் இந்த விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளவில்லையெனில் சிந்து பைரவியில் வரும் ஜனகராஜ் போல தலை நசுங்கினாற் போல தெரிவதாகவும் விரைவில் வெடித்துவிடும் என்பது போலவும் ஒரு பிரமை. அதனால் இந்தப் பதிவு. :)

நான் வேலை செய்யும் நிறுவனமே ஒரு சேமிப்புக் கணக்கை சம்பள பட்டுவாடாவிற்காக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் ஆரம்பித்துக் கொடுத்தது. அத்தோடு சேர்த்து அவர்களிடமே ஒரு கிரெடிட் கார்டெனும் மினியேச்சர் சனிஸ்வர பகவானையும் வாங்கி என் பர்ஸில் குடியேற்றினேன் ஒரு வருடம் முன்பு. பொதுவாகவே யாரேனும் கிரெடிட் கார்டு மூலம் வரும் தொல்லைகள் என்று பட்டியலிட ஆரம்பிக்கையில் அனுதாபத்தோடு அக்கதைகளை கேட்டாலுமே கூட, மனதுக்குள் ஒரு மூலையில் திட்டமிட்டு பயன்படுத்திய தொகையை தவறாது கட்டிவிடுவோமே ஆயின் இதில் என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது? ஆசையை அடக்கத் தெரியாது கட்டுபாடின்றி செலவழித்து விட்டுப் பின் ஏன் முழிக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன்(பெரிய பொம்பிளை புத்தர்னு நினைப்பா என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது. கொஞ்சம் ஓவர் டோஸ்தான், கண்டுக்காதீங்க) இப்படியெல்லாம் பலவாறாக நினைத்தவாறே அங்கங்கே படித்த சமாளிப்பு முறைகளை அறிவுரையாகக் கூறிவிட்டுப் பின் நகர்ந்து விடுவேன். மனசுக்குள்ளே "பார், இத்தனை வருடங்களாக இதை உபயோகிக்கிறேன், இது வரை ஏதேனும் சிக்கலில் சிக்கியதுண்டா என்ன? எல்லாம் நாம் பயன்படுத்தும் முறையில் இருக்கிறது." என்றெல்லாம் என் கர்வ பலூன் ஒரே சீராக ஒவ்வொரு மாத கட்டணத்தையும் செலுத்தும் போது கொஞ்ச கொஞ்சமாக ஊதப்பட்டுக் கொண்டே வந்தது. அதிலும் உங்களது கணக்கு வழக்குகளின் சிக்கலற்ற தன்மையை கருத்தில் கொண்டு இன்னின்ன சலுகைகள்(மேலும் புது அட்டைகள், கடன்கள் முதலியன) தருகிறோம் என்பதான தொலைபேசி உரையாடல்களை பொதுவாகவே 'எனக்கு விருப்பமில்லை' என்று ஒற்றை வரியில் முடிப்பது என் வழக்கம். அப்படியே உடனே என் மன உறுதியை நானே மெச்சிக் கொள்வதும் உண்டுதான்.

கதைகளிலெல்லாம் 'விதி சிரித்தது' என்று எழுதுகிறார்களே, அந்த விதி என்னைப் பார்த்து சிரியோ சிரி என்று சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் - ஒவ்வொரு முறையும் நான் பெருமைப்பட்டுக் கொண்ட போதெல்லாம். 'நீ யோக்கியமாக இருந்துவிட்டால் மட்டும் உன்னை விட்டுவிடுவேனா என்ன?' என்று என் பர்ஸிலிருந்த சின்ன சனியனும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது போலும். மார்ச் மாதம் 20ம் தேதி காலை ஒன்பது மணி போல ஒரு தொலைபேசி அழைப்பு - வழக்கம் போல புது அட்டையோ புது கடனோ தருவதற்காக இல்லை. நான் கட்டாமல் வைத்திருக்கும் அறுபதினாயிரம் ரூபாயை உடனடியாகக் கட்டச் சொன்னார் அந்தப் பெண். "என்ன உளறல் இது?" என்றுதான் உடனடியாக நான் திருப்பிக் கேட்டேன் - ஏனென்றால் அன்றைய நிலைப்படி என் நிலுவைத் தொகை கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய்கள் மட்டுமே. அதற்கும் முந்தைய மாதம் எனக்கு வந்த பில்லே 0 ரூபாய்களுக்குத்தான். இப்படித்தான் பெரும்பாலும் என் அட்டை உபயோகம் இருக்கும். பெரும்பாலும் இணையத்தில் புகைவண்டி பயணச் சீட்டுகள், புத்தகங்கள், சில சமயங்களில் சினிமா டிக்கெட்டுகள் போன்றவை வாங்க மட்டுமே இந்த அட்டையை பயன்படுத்துவது என வழக்கம். ரொம்பவே அபூர்வமாக மட்டுமே ஐம்பதினாயிரத்தை தாண்டிய பில்கள் எனக்கு வந்திருக்கின்றன - அதுவும் அவையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு கண்டிப்பாக அந்த மாதத்திலேயே கட்டிவிட முடியுமெனும் போது மட்டுமே செய்வது என் வழக்கம். அப்படியிருக்க, திடீரென வந்து அறுபதினாயிரம் ரூபாய் நீங்கள் கட்ட வேண்டுமென்றதும் நான் ஆடிப் போனேன்.

நிதானித்துக் கொண்டு அந்தப் பெண்ணிடம் பேசியதில் அது என்னுடைய அட்டை எண்ணே இல்லை என்பது புரிந்தது. உடனே என்னுடைய அடையாள அட்டை, ஒட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களையும் கடைசியாக வந்த கடனட்டைக்கான பில்லையும் எடுத்துக் கொண்டு அவர்கள் அலுவலகத்திற்குச் சென்றேன். அது அண்ணாசாலையில் கருமுத்து சென்ட்டர் என்ற கட்டிடத்தினருகே ஒரு அடுக்கு மாடியில் அமைந்திருந்தது. என்னிடம் பேசிய பெண்ணின் உயரதிகாரி வந்து என்னைச் சந்தித்தார். பேசிய சிறிது நேரத்திலேயே பிரச்சனை புரிபட்டு விட்டது. என் அலுவலகத்திலேயே ஆனால் இன்னொரு கிளையில் லக்ஷ்மி ராஜகோபால் என்கிற பெயரிலேயே ஒரு பெண் வேலை செய்து வந்திருக்கிறார். அலுவலக முகவரியைத் தந்து இவர்களிடம் கடனட்டை வாங்கி நன்றாக உபயோகித்துக் கொண்டிருந்திருக்கிறார். பின்னர் எங்கள் அலுவலகத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டுப் போகையில் மட்டும் தனது முகவரியை மாற்ற மறந்துவிட்டார் போல, பாவம். இந்த இடத்தில் எனக்கு என் அப்பா அடிக்கடி சொல்லும் ஒரு எடுத்துக் காட்டு நினைவுக்கு வருகிறது. யாரேனும் வயதானவர்கள் கடைசிப் படுக்கையில் இருக்கையில் தன் மக்களை அழைத்து தனக்கு வர வேண்டிய கடன்களைச் சொன்னால் எல்லோரும் வெகு சிரத்தையாக அதை குறித்துக் கொள்ளத் தொடங்குவார்கள். அதே அவர் தான் தர வேண்டிய கடன்களைச் பட்டியலிட ஆரம்பித்தால் வயதானதால் வரும் உளறல் என்று சுற்றியிருப்போர் கண்டு கொள்ளாது சென்று விடுவர் என்று வேடிக்கையாகச் சொல்வார் என் அப்பா. இதே பெண்மணி வேலையை விட்டும், ஊரை விட்டும் போகையில் தன் சேமிப்புக் கணக்கிலிருக்கும் பணத்தை விட்டுச் சென்றிருப்பாரா என்ன? சரி, விஷயத்துக்கு வருவோம். அந்தப் பெண்ணின் முகவரியில் ஆள் இல்லை, அந்த தொலைபேசி எண் வேலை செய்யவில்லை, சரி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த கடனட்டைப் பிரிவினருக்கு வந்த அற்புத யோசனை - அதே பெயரில் வேறு ஏதேனும் கடனட்டை இருக்கிறதா என்று பார்ப்பது. அதே பெயரில், அதே அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பலியாடு பட்டியலில் தட்டுப் படவே ஒரே அமுக்கு . இதுதான் நடந்திருக்கிறது.

பெயரையும் அலுவலகத்தையும் தவிர இரு அட்டைதாரருக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை - பிறந்த தேதியிலிருந்து, அடையாளத்துக்காக தந்த ஒட்டுனர் உரிமத்தின் எண் வரை வேறு எதுவுமே ஒத்துப் போகவில்லை. இது எதையுமே பார்க்காது தொலைபேசியில் அழைத்து எந்தவிதமான சந்தேகமும் இன்றி அதட்டலான தோரணையில் "ஏன் இன்னும் நீங்கள் பணத்தை கட்டவில்லை?" என்று கேள்வி வேறு. நான் அந்த அலுவலரிடம் சொன்னேன், "சற்றே இதய பலவீனமுள்ள யாரிடமேனும் நீங்கள் இது போல பேசியிருந்தால் இந்நேரம் அவர் போய்ச் சேர்ந்திருப்பார். இது எதையுமே யோசியாது ஏன் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் வேலை செய்கிறீர்கள்?" என்று. ஏதேதோ சால்ஜாப்புகள், சப்பைக் கட்டுகள் சொன்னார். பின் எழுத்து மூலம் உங்கள் புகாரை கொடுத்துவிடுங்கள், மேற்கொண்டு இது தொடர்பாக உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று சொன்னார். சரியென்று எழுதிக் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்றேன். அதன் பிறகு எதுவும் தொலைபேசி அழைப்புகள் இல்லாததால் பிரச்சனை முடிந்துவிட்டது போல என்று எண்ணியிருந்தேன்.

இந்த மாதம் எனது கடனட்டைக்கான கட்டணக் கடிதத்தை எதிர்நோக்கியிருந்தவளுக்கு அடுத்த அதிர்ச்சியை அள்ளி வழங்கியது ஐசிஐசிஐ - சன்டேன்னா ரெண்டு மாதிரி வந்தது ரெண்டு கட்டணக் கடிதம். அந்தப் பெண்ணின் கடனட்டையில் என் முகவரியையே நிரந்தரமாக மாற்றி ஒட்டியாயிற்று போலும். இதில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் இடையில் பகுதி தொகையைக் வங்கிக்குச் செலுத்தியிருக்கிறார். எனவே ஏமாற்றும் எண்ணம் இல்லை என்பதுதான். வாடிக்கையாளர் சேவைக்கான எண்ணை அழைத்து ஒன்று இரண்டு என வரிசைப் படுத்தி பாடச்சொல்லி படாய்ப் படுத்தும் தடைகளையெல்லாம் தாண்டி யாரேனும் ஒரு நபரைப் பிடித்து பிரச்சனையை ஆதௌ கீர்த்தனாம்பரத்திலிருந்து எடுத்துச் சொல்லி விளங்க வைத்து முடித்த பின் அந்த நபர் அப்பாவியாய் கேட்பார், "நான் என்னங்க செய்யணும் இதுக்கு?" என்று. அப்படியே கத்திரி வெய்யிலில் தீ மிதிக்கப் போனது போன்ற பரவசம் உடலெங்கும் வழிய பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு "அய்யா/அம்மா, நான் அவள் இல்லை. இல்லவே இல்லை. எனவே அந்த அட்டையில் இருக்கும் என் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் மாற்றுங்கள்" என்று கெஞ்சியதும் அந்த நபர் பெருந்தன்மையோடு "சரிங்க, இதற்கான ஒரு சர்வீஸ் ரிக்வெஸ்ட் போட்டுடறோம்" என்று பெரிய மனது பண்ணிச் சொல்வார்கள். ஆனால் அந்த சர்வீஸ் ரிக்வெஸ்ட்டின் எண் மட்டும் மறந்தும்ம் தந்துவிட மாட்டார்கள். உங்களுக்கு அது குறுஞ்செய்தியில் வரும் என்று ஒரே பதிலுடன் அழைப்பு துண்டிக்கப் படும். காத்திருந்து காத்திருந்து கண் பூக்க , திரும்பவும் ஒன்று இரண்டு மூன்று என வரிசைப் படுத்திப் பாடாய்ப் பட ஆரம்பிப்பேன். அதே முடிவு. இரண்டு நாளில் என் செல்பேசியில் எண்கள் எல்லாமே கொஞ்சம் மங்கலாக ஆனது போலத் தோன்றுகிறது.

சரி, இது சரிவராது என்று அடுத்தகட்ட முயற்சியாக அந்த வங்கியின் இணைய தளத்தின் மடலனுப்பும் வசதியை உபயோகித்து மேலாளருக்கு இந்தப் பிரச்சனையை ஆதியோடந்தமாக விளக்கி ஒரு மடலனுப்பினேன். என்ன பதில் வந்திருக்குமென்று நினைக்கிறீர்கள்? "நீங்கள் குறிப்பிட்டுள்ள எண்ணுடைய அட்டையின் கட்டண விவரங்கள் லக்ஷ்மி என்பவரால் பெற்றுக் கொள்ளப் பட்டாயிற்று." இதுதான் அந்த பதில். மறுபடி ஒரு மடல் அனுப்பினேன் - "மடல்களை இப்படிக் கூட ஒருவரால் படிக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் சொல்லும் அந்த கட்டணக் கடிதத்தை பெற்றுக் கொண்ட லக்ஷ்மி என்கிற துரதிர்ஷ்டசாலி அடியேந்தான். எனக்கும் அந்த அட்டைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதைத்தான் விளக்கிக் கொண்டிருக்கிறேன் எனது தொடர்ச்சியான முறையீடுகளில். இது உங்களுக்கான எனது மூன்றாவது எழுத்து மூலமான முறையீடு. இதற்கும் பலனில்லையெனில் நான் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதிருக்கும்." இந்த கடைசி மடலை மட்டும் யாரோ ஒரு சாதாரன பொது அறிவுடைய மகானுபாவன் பார்த்திருக்கிறார் போல - பெரிய மனது வைத்து ஒரு சர்வீஸ் ரிக்வெஸ்ட் ஏற்படுத்தி அதை எனக்கு அனுப்பியுள்ள பதில் மடலில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஐந்து நாட்களுக்குள் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதியளித்திருக்கிறார். பார்ப்போம், என்ன நடக்கிறதென்று.

Wednesday, March 26, 2008

சென்னை பதிவர்களே, உதவி தேவை

சென்னை வாழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி - பார்வை இழந்தவர். ஒரு கல்லூரியில் ஆங்கிலப் ஆசிரியையாகப் பணிபுரிவதோடு முனைவர் பட்டத்துக்கும் ஆய்வு செய்து வருகிறார். அவருக்கு உதவியாளராகப் பணிபுரிய ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு பெண் தேவை. இதுவரை அவரிடம் பணிபுரிந்து வந்த பெண் அஞ்சல் வழிக்கல்வியில் பயின்றுகொண்டு இவரோடே தங்கி இவருக்கு உதவிக் கொண்டிருந்தார். அவரது படிப்பும் முடிந்து அவருக்கு திருமணமும் நிச்சயமாகி விட்டது. எனவே இவருக்கு உதவிக்கு வேறு ஒருவரைத் தேடித் தருமாறு அவரது சகோதரி சமீபத்தில் என்னிடம் சொல்லியிருந்தார். நான் தெரிந்தவர்கள் மூலம் மட்டுமே தேடிக்கொண்டிருந்தேன், இப்போதுதான் திடீரென ஒரு யோசனை உதித்தது - பதிவர்களின் உதவியை நாடலாமே என்று.

பொருத்தமான ஆட்கள் யாரையும் தெரியுமேயானால், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். தோழியின் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளச் சொல்கிறேன். வேலை இரு பகுதிகளாக இருக்கும். காலையில் இவருடன் கல்லூரிக்குச் சென்று ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்கு அழைத்துச் செல்வது போன்ற செயல்களுக்கும், கையெழுத்திடுவது போன்ற சிறு செயல்களுக்கு உதவ வேண்டும்(தோழி கார் வைத்திருக்கிறார் என்பதால் கல்லூரிக்குச் சென்று வருவதில் சிரமம் ஒன்றும் இருக்காது). மதியம் வீட்டிற்கு வந்த பின் அவரது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிக் கட்டுரை சம்பந்தமான உதவிகள்(படித்துக் காட்டல் அல்லது அவர் சொல்பவற்றை எழுதி ஒழுங்கு செய்து தருதல்) இவையே மொத்தமாகச் செய்ய வேண்டிய வேலைகள். வேலை செய்ய ஆர்வமுள்ள நபரது தொடர்பு எண், எதிர்பார்க்கும் சம்பளம் போன்ற விவரங்களையோ இல்லை தொடர்புக்கான முகவரி மட்டுமோ கூட அளித்தால் போதும். அவர்களையே நேரடியாகப் கலந்து பேசிக் கொள்ளச் செய்யலாம். வரப்போகும் உதவிகளுக்கு அட்வான்ஸ் நன்றிகள். :)

Friday, March 14, 2008

தமிழகத்தின் புல்லரிக்க வைக்கும் முன்னேற்றம்

"தமிழகத்தில் ஐந்து நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு இலக்காகிறார். பாலியல் கொடுமையில் இந்தியாவில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது"- இப்படி வரிக்கு வரி அதிர்ச்சித் தகவல்களை அள்ளி வீசுகிறது 'தேசிய குற்றப்பிரிவு' அமைப்பின் ஆய்வறிக்கை!

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பு, 'குற்றங்கள்' குறித்த நாடு தழுவிய ஆய்வொன்றை நடத்தியது. அதன் ஒரு அங்கமாக தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை அலசிய போது, சமீப காலத்தில் பாலியல் அடிப்படையிலான குற்றங்கள் பெருகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.


இது இன்று வெளியாகியிருக்கும் ஜூனியர் விகடனில் வெளியாகியிருக்கும் கட்டுரையின் ஆரம்பம். ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதல்லவா? இன்னமும் கூட அதிர்ச்சி மிச்சமிருக்கிறது. இந்த அறிக்கை பேசுவதெல்லாம் பதிவான புகார்களைப் பற்றி மட்டுமே. மீதி?? இதோ அதே கட்டுரையின் இன்னொரு பகுதியில் ஒரு ஆய்வாளர் சொல்கிறார்.

தமிழகத்தில் சமூகப் பிரச்னைகளை உன்னிப்பாக கவனிக்கும் வேறு சில அமைப்புகளிடம் பேசினோம். 'பாலியல் பிரச்னையில் பலியாகும் தமிழகப் பெண்கள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்துவரும் மதுரையைச் சேர்ந்த திலகம், "தேசிய குற்றப்பிரிவு அமைப்பின் ஆய்வு தந்திருக்கிற அதிர்ச்சியின் சதவிகிதம் குறைவு தான். பாதிக்கப்பட்ட நூறு பெண்கள்ல இருபது பெண்கள்தான் சீரழிக்கப்பட்ட உண்மையை வெளியில சொல்றாங்க. 'உலகப் பொது உரிமை சபை'ங்கிற அமைப்பு தன் அறிக்கையில இதைத் தெளிவா சுட்டிக் காட்டியிருக்கு. மத்தவங்க நம்மளைக் கேவலமாப் பேசு வாங்களேங்கிற பயம் உள்ளிட்ட சில காரணங்களால பாதிக்கப்பட்ட பல பொண்ணுங்க எதையும் வெளியே சொல்றதில்லை.

அப்படியே தைரியமா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், 'என்னை பலாத் காரம் செய்தான்'னு ஒரு பொண்ணு சொல்றப்ப, போலீஸ்காரங்க கேட்கிற கேவலமான கேள்வியும், நடந்துக்கிற முறையும் அவளை வெறுத்துப்போக வெச் சுடுது. 'பெண்களோட பிரச்னைகளுக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் இருக்கே..?'னு நீங்க கேட்கலாம். ஆனா, அங்கதான் பாதிக்கப்பட்ட பொண்ணுங்க ரொம்ப கேவலமா நடத்தப்படுறாங்க.

ஸ்டேஷனுக்கு வர்ற பலாத்கார கேஸ்கள்ல 99 சதவிகித கேஸ்களைப் பஞ்சாயத்து பேசியே அனுப்பிடுறாங்க. மீறி ஒண்ணு ரெண்டு வழக்கு பதிவானாலும்கூட ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் அந்தப் பொண்ணை நாயா அலைய வைக்கிறாங்க. மீடியாக்களும் அவளை போட்டோ பிடிச்சு உலகத்துக்கே காட்சிப் பொருளாக்கி கூசிக் குறுக வைக்கிறாங்க" என்றவர், தொடர்ந்து...

"கோவை, சேலம், நாமக்கல் மாவட்டங்கள்ல தலித் சிறுமிகள் அதிகப்படியா உயர்சாதியாளுங்ககிட்ட பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகுறாங்க. விவசாயக் கூலியா இருக்கிற அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க இதையெல்லாம் வெளியில சொல்ல முடியாம தவிச்சுக்கிட்டு இருக்காங்க. அப்படி சீரழிக்கப்பட்ட பொண்ணுங்களோட பட்டியலே என்கிட்ட இருக்கு. நம்ம நாட்டுல சட்டங்களும் அதிகாரம் வழங் கும் முறைகளும் பெண்களுக்கு எதிரா இருக்கு. பெண்களுக்காகப் போராடுற மாநில பெண்கள் ஆணையத்துக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்காம டம்மியா வெச்சிருக்கிறதே அதுக்கு உதாராணம்" என்றார் அழுத்தமாக.


பெண்களுக்கெதிரான பிரச்சனைகளில், பணமும், சாதியும் வேறு பக்கபலமாகச் சேர்ந்து கொண்டுவிட்டால் நம்மவர்களின் நீதிபரிபாலனத்தினுடைய லட்சணம் எப்படியிருக்கும் என்று நமக்கெல்லாம் தெரியாதா என்ன? அப்படியே ஜாதி/வர்க்க வேறுபாடுகளே இல்லாத இடத்திலும் கூட இருக்கவே இருக்கிறது நமது பாழாய்ப் போன குடும்ப கவுரவம் இத்யாதிகள். வெளியே சொன்னால் குடும்ப மானமே போய்விடும் என்று உள்ளுக்குள்ளேயே அழுது புழுங்கிக் கொண்டு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து தள்ளிவிடுவது - இல்லை பாதிக்கப்பட்ட விவரம் தெரிந்த/சொந்தத்தில் உள்ள மாப்பிள்ளைக்கே அதிக அபராதத் தொகை செலுத்தித் பெண்ணையும் தலையில் கட்டிவிடுவது என்று பல விதமான சமாளிப்பு முறைகள் சமூகத்தில் பரவலாக வழக்கத்திலிருக்கின்றன. ஆனால் சட்டப் படி தண்டிக்கப் பட்டேயாக வேண்டிய குற்றம் இது என்கிற ஒரு விஷயத்தை மட்டும் யாருமே ஒப்புக் கொள்வதில்லை. இதற்குத் தீர்வு என்று என் மனதிற்குப் படுவது மூன்று வழிமுறைகள்.

1. காவல்துறையும் நீதி விசாரணை முறையும் பாதிக்கப் பட்டவர்களையே மேலும் காயப்படுத்துவதாக உள்ளது - சட்டங்கள் இருந்த போதும் அதை நடைமுறைப்படுத்துவோர் கனிவோடும் கண்ணியத்தோடும் அதைச் செய்வதில்லை. இதில் மகளிர் காவலர் நிலையத்திலிருப்பவர்களும் விதிவிலக்கில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம். சினிமா வசனங்களில் அதிகமாய் உச்சரிக்கப்பட்டு தேய்ந்து போன வசனங்களில் இதுவும் ஒன்று - ஒரு பெண் மனதை இன்னொரு பெண்ணால்தான் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும். எவ்வளவு அபத்தமான உளறல் என்று இது போன்ற தருணங்களே சொல்கிறது. யார் ஒருவரும் அடுத்தவர் உணர்வைத் துல்லியமாகப் புரிந்து கொள்வது சாத்தியம்ற்றது என்றாலும் கூட பொறுப்பிலுள்ளவர்கள் குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளலாம். அரசு வருடாவருடம் அவர்களுக்கு கவுன்சிலிங்க் அளிக்கலாம். தொடர்ந்து இதையும் மீறி கருணையின்றி நடப்போரை கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்கலாம்.

2. பாதிக்கப் பட்டோரிடமிருந்தும் மிகப்பெரிய ஒத்துழைப்புத் தேவை. நாமாகவே கட்டமைத்துக் கொண்ட மனப்பிரமைகளான மானம், கவுரவம் போன்ற போலிவலைகளைத் தாண்டியும் துணிவோடு பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். மற்றவர் நம்மைப் பற்றி பேசுவது குறித்து கவலை கொள்வதற்கும் ஒரு எல்லை உண்டு - அர்த்தமற்ற இவ்வகைத் தாக்குதல்களை துணிந்து எதிர்கொள்வோமேயானால் நிச்சயம் வெகுநாட்களுக்கு இதெல்லாம் தொடராது என்பதை உணர வேண்டும். அவரவர்க்கும் அவரவரது ஜீவாதாரப் பிரச்சனைகள் தலைக்கு மேல் உள்ளன - ஒழிந்த நேரத்தில் சற்று நேரம், அதுவும் சிறிது நாட்களுக்கு, அதுவும் வேறு புதுப் பிரச்சனைகள் கிடைக்கும் வரை இதை மெல்லுவார்கள். அவ்வளவே. அதற்குப் பயந்து இது போன்ற குற்றங்களை மறைப்பது நம் தலையில் நாமே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பானது.

சமீபத்தில் பார்த்த அஞ்சாதே திரைப்படத்தில் ஒரு காட்சி - ஒரு கும்பல் இளம் பெண்களை, இன்னும் சரியாகச் சொல்வதானால் சிறுமிகளை கடத்திச் சென்று அவர்களின் பெற்றோரிடம் மிரட்டிப் பணம் பெற்றுக் கொள்வதோடு அப்பெண்களை பலாத்காரம் செய்துவிட்டுத் திருப்பிக் கொண்டுவந்து விட்டுவிட்டுச் செல்கின்றனர். பாதிக்கப் பட்ட ஒரு சிறுமி தந்தையோடு காவல் நிலையத்திற்கு வந்து புகார் தருகிறாள். உயர் போலீஸ் அதிகாரியான பொன்வண்ணன் வந்து அப்பெண்ணின் அருகில் அமர்ந்து தோளைத் தட்டி “I am proud of you my child." என்பார். அப்பெண் கடினமான முகத்தோடு "எனக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நேராது இருக்கவேண்டும். அவர்களை சீக்கிரம் பிடியுங்கள்" என்று சொல்லிவிட்டு தந்தையோடு கிளம்புவாள். அதே போல் அடுத்து இன்னொரு பெண் கடத்தப் பட்டு பேச்சுவார்த்தை நடக்கையிலேயே அப்பெண்ணின் தந்தை போலீஸிடம் உதவி கோருவார். இதைப் புரிந்து கொண்ட கடத்தல் கோஷ்டியினர் அப்பெண்ணை நிர்வாணமாக்கி அவளது உடைகளைக் கொண்டுவந்து அவ்வீட்டின் முன்னால் போட்டுவிட்டு அத்தந்தையிடம் மரியாதையாக போலீசாரை ஒதுக்கிவிட்டுப் பணம் கொண்டு வந்து தந்து மகளை மீட்டுச் செல் என்று மிரட்டுவார்கள். அப்போது மனதளவில் தளர்ந்துவிடும் அத்தந்தை போலீசாரை "விட்டுங்க சார், அங்க என் பெண் அம்மணமா இருக்கா. எனக்கு பணம் முக்கியம் இல்லை. நான் பணத்தைக் கொடுத்து என் பெண்ணை மீட்டுக்கறேன்." என்று கதறுவார். அப்போது கதாநாயகனான நரேன் குறுக்கிட்டு "நாங்கள் பசி தூக்கம் மறந்து அலைவது உங்க பொண்ணை காப்பாத்த மட்டுமில்லை. இன்னிக்கு உங்க பொண்ணுக்கு நடந்தது நாளைக்கு இன்னொரு பெண்ணுக்கு நடந்துடக் கூடாதுன்றதுக்காக" என்று ஆவேசமாய் சொல்வார். மிக மிக சத்தியமான வார்த்தைகள். பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரும் தங்களுக்கு நடந்த அநீதிக்காகப் போராடுவதன் மூலமே அது மீண்டும் மீண்டும் நிகழாது தடுக்க முடியும். அந்தப் பொறுப்புணர்ச்சி ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.


3. மேற்குறிப்பிட்ட மனமாற்றம் சமூகத்தில் வருவதற்கான முக்கியப் பங்கை ஊடகங்களே ஆற்ற முடியும். தங்களின் வியாபாரத்துக்காக பாதிக்கப் பட்ட பெண்களின் கண்ணீரை ஏலம் விடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். அதற்காக நடந்த குற்றத்தை மறைக்க வேண்டும் என்பதல்ல. பாதிக்கப்பட்ட பெண்களிடம் அனுதாபத்தோடு ஒருவேளை அந்நிகழ்ச்சி நம்வீட்டில் நடந்திருந்தால் எப்படிக் கையாள்வோமோ அது போல கையாள வேண்டும் என்கிற பொறுப்பு ஊடகத்திலிருப்போர் எல்லோருக்குமே வர வேண்டும்.

இவ்விடத்தில் சிதம்பரம் காவல் நிலையத்தில் கூட்டு பலாத்காரத்துக்கு உள்ளான பத்மினி வழக்கை நினைவு கூர வேண்டியிருக்கிறது. இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. பத்மினி படிப்பறிவு அதிகமற்ற மிகவும் எளிய சூழலில் இருந்து வந்தவர். எத்தனையோ சோதனைகள் - அப்போது ஒரு பேட்டியில் அவர் தனக்கு நடந்த உண்மை அறியும் சோதனை பற்றிச் சொல்லியிருந்தார். பொய் சொல்லும்போது மனித உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு சொல்வது பொய்யா இல்லையா என்று கண்டுபிடிக்கும் லை டிடெக்டர் எனும் இயந்திரத்தின் பரிசோதனைக்கு பத்மினி உட்படுத்தப் பட்டார். ஆம் அல்லது இல்லை என்பது போன்ற விடைகளே அளிக்கும்படியான கேள்விகள் கேட்கப் படும். பதில் சொல்லும்போது சம்பந்தப்பட்டவரது உடல்நிலை இயந்திரத்தால் ஆராயப் பட்டு பதிவு செய்யப் படும். ஆனால் அங்கே கேள்வி கேட்டு மாற்றங்களைப் பதிவு செய்பவர்கள் போலீசாரே. பத்மினியின் புகாரே போலீசாரின் மீதுதானே? தங்கள் சக அலுவலர்களின் மீதான பாசத்தோடு அவர்கள் செட் செய்திருந்த கேள்விகள் வெகு சாமர்த்தியமாக அமைக்கப் பட்டிருந்தன. X தேதியில் Y எண்ணிக்கையுள்ள போலீசார் சேர்ந்து அவரை வன்புணர்ச்சிக்குட்படுத்தியதுதான் வழக்கு என்றால் அவர்களது கேள்விகள் இப்படியிருக்கும்.

1. சம்பவம் X - 1 அன்றுதானே நடந்தது? இதற்கு பத்மினி இல்லையென்று பதில் சொல்கிறார். ஏனென்றால் சம்பவம் உண்மையாக நடந்தது X தேதியன்று அல்லவா?
2. உங்களை Y+2 போலீசார் சேர்ந்து பலாத்காரம் செய்தனர்தானே? இதற்கும் பத்மினி இல்லையென்று சொல்ல நேரிடுகிறது.

உடனே பத்திரிக்கை செய்திகள் - உண்மை கண்டறியும் ஆய்வில் பத்மினி தோல்வியுற்றார். போலீசார் மீது தவறெதுவும் இல்லை என்று நிரூபணமாகிவிட்டது. வழக்கு முடிவடையும் வரை இப்படித்தான் பரபரப்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டேயிருந்தன. இவ்வகைச் செய்திகளை படிக்கும் பெரும்பாலான பெண்கள் துவண்டு பின்வாங்கியிருப்பர். ஆனால் பத்மினியோ உறுதியோடு போராடி வழக்கறிஞர் உதவியோடு வழக்கு விவாதப் பகுதியில்(Argument) அக்கேள்விகள் எவ்வளவு தவறானவை என்பதை நிரூபித்து வென்றார். இதற்கு நடுவில் காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட நந்தகோபாலுக்கு பத்மினி எத்தனாவது மனைவி, அவர் இவருக்கு எத்தனையாவது கணவர் என்பது போன்ற அதிமுக்கியத் தகவல்கள் அவரது பெயரை சிதைக்குமளவுக்கு தொடர்ந்து பத்திரிக்கைகளில் வெளியானபடியே இருந்தது. அவற்றினாலெல்லாம் சோர்ந்துவிடாது போராடி வழக்கில் இறுதி வெற்றியைப் பெற்ற அப்பெண்மணியின் தீரம் பாராட்டுதலுக்குரியது.

அதனால் எல்லாம் அந்தப் பெண்ணின் வாழ்க்கை சாரமற்றுப் போய்விடவில்லை என்பதையும் இங்கே பார்க்கவேண்டும். வழக்கு நடந்த்போது அவருக்கு பெரும்பாலும் பக்கபலமாக இருந்தது கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் பிரிவான ஜனநாயக மாதர் சங்கம் எனும் அமைப்பு. அச்சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சித்தொண்டர்களும் அவர்கள் சார்பாக பத்மினிக்கு பாதுகாப்பாக நின்றனர். அதில் ஒரு தோழர் - தனபாலன் என்பது அவர் பெயரென்று நினைக்கிறேன் (நினைவிலிருந்தே எழுதுகிறேன் - எனவே தவறாயிருப்பின் சுட்டவும் சரி செய்து கொள்கிறேன்) வழக்குகள் முடிந்த நிலையில் பத்மினியை மணக்க விரும்பி பத்மினியும் சம்மதிக்க அவரை மணந்தார். உண்மையில் இந்நிகழ்விற்கே அதீத முக்கியத்துவம் தரப்பட்டிருக்க வேண்டும் - ஏனெனில் இதுவே பாதிக்கப் பட்ட பெண்களுக்கும் அதற்குப்பின்னும் வாழ்கை நல்ல முறையில் செல்லும் வாய்ப்புள்ளது எனச்சொல்லும் பகுதி.

இப்பிரச்சனையின் ஆணிவேர் பெண் உடல் மீதான ஆதிக்கத்தில்தான் இருக்கிறது - எனினும் அதை மாற்றுவது அத்தனை சுலபமில்லை(ஏற்கனவே ஒரு முறை அதைப்பற்றி எழுத ஆரம்பித்து பாதியில் நிறுத்தி வைத்திருக்கிறேன் - நேரம் அமைகையில் அதை எழுதவேண்டும். ஹ்ம்ம்.... இப்பட்டியலின் நீளம் அதிகரித்துக் கொண்டே போகிறது). எனவே இப்பிரச்சனைக்கு ஒரளவுக்கு எனக்கு சாத்தியமானவை என்று தோன்றும் ஒரு சில தீர்வுகளை இங்கே சொல்லியிருக்கிறேன்.

Friday, March 07, 2008

சிதம்பரம் - சில எண்ணங்கள்

தில்லையில் நடந்து கொண்டிருக்கும் கூத்தையெல்லாம்(சிவனுடையதை அல்ல, அவனைச் சுற்றியிருப்போரது கூத்தைச் சொல்கிறேன்) பார்க்கும் போது கொள்கைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாது நடந்து கொள்வதில் அரசியல்வாதிகளுக்குத்தான் முதலிடம் என்று நினைத்திருந்ததை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் நம்பும் அல்லது நம்புவதாகச் சொல்லும் ஒரு கொள்கைக்கு எதிராக இத்தனை பகிரங்கமாகக்கூட இவர்களால் நடந்து கொள்ள முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

பாரதி தனது வசன கவிதையொன்றில் காற்றே சிவனின் காது என்கிறார். எனில் காற்றோடு கலக்கும் ஒவ்வொரு வார்த்தையும்(கெட்ட வார்த்தையென்று மனித மனது வரையறுத்து வைத்திருக்கும் வார்த்தைகள் உட்பட) சிவனது காதில் நேரடி ஒலிபரப்பாகச் சென்று சேர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இன்ன மொழிதான் அவன் காதில் கேட்கலாம் இன்னது கேட்கக்கூடாதது என்றெல்லாம் அறிவிப்போரை என்னவென்பது? அதையும்விட அதிக நகைப்புக்குரிய விஷயம் ஓதுவார் ஆறுமுகச்சாமி அவர்கள் அங்கே வந்து நின்று பதிகம் பாடுகையில் நடராஜரை கூட்டமாக மறைத்துக் கொண்டு நின்றார்களாம் தில்லை வாழ் அந்தணர்கள் :)))))))))) எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், அவனது சந்நிதியில் அவனது பக்தனொருவன் பாடும் பாடலை அவன் காதில் விழாதவாறும் அவன் கவனத்தில் பதியாதவாறும் கூட்டமாய்க் கூடி நின்றாலே தடுத்துவிட முடிகிறதல்லவா உங்களால்? நாத்திகம் பேசுபவர்கள் இறைவனின் சிலையை அவமதித்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும் - அதுதான் அவர்கள் தங்கள் கொள்கைக்குத் தரும் மரியாதை. ஆனால் ஆத்திகத்தையே கட்டிக்காப்பதாகக் கூறிக்கொள்பவர்களே இறைவனை அவமதிப்பதை, அவனைக் குறைத்து மதிப்பிடுவதை எங்கே போய்ச்சொல்வது?

அன்பே சிவமென்பர். அப்படி அன்புருவானவனை அர்ச்சித்துவிட்டு , சித்சபை மேடையேறிப் பாட முயன்ற 79 வயது முதியவரை அடித்துத் துரத்த எப்படித் துணிகிறார்கள்? சிற்றம்பலம் கருவறைக்கு நிகரானது - அங்கே யாரும் நுழையக்கூடாது என்பது பொதுவிதியானால் சரி. ஆனால் காசு கொடுத்தவர்கள் மட்டும் வரலாம் என்றால் அதென்ன சுற்றுலாத்தலமா? துஷ்டநிக்ரஹ சிஷ்டபரிபாலனம் செய்பவனுக்கு அவன் கண்ணெதிரே தான் செய்யும் அநியாயங்கள் மட்டும் தெரியாதென்று எப்படி நம்புகிறார்கள் இவர்கள்? ஒருவேளைத் தான் செய்யும் சேவைகளுக்காக மகிழ்ந்து தங்கள் செயல்களைக் கண்டு கொள்ளாது விட்டுவிடுவான் என்று எண்ணமா? அது இன்னமும் மோசம் - லஞ்சம் வாங்கிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் காவல் அதிகாரி ரேஞ்சுக்கு சாமியையே கொண்டு வருவது இல்லையோ அது?

இந்த விஷயத்தில் மட்டும்தான் என்றில்லை - இதற்கு முன்னரே கூட பல சந்தர்ப்பங்களில் கோவில்களில் நடக்கும் சகிக்க முடியாத நேர்மையின்மையின் வெளிப்பாடுகளைக் காணும் போதெல்லாம் தோன்றுவதுதான் - கடவுளுக்கு வெகு அருகிலிருக்கும் இவர்களே கடவுளை இவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார்களே, பின் மற்றவர்களுக்கு மட்டும் எப்படி நம்பிக்கை வருமென்று. அதிலும் இப்போது ஓதுவார் ஆறுமுகச்சாமி பாடுகையில் இவர்கள் சிவனை மறைத்து நின்றதைக் கேட்டதும் சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை. ஒரு வேளை கலி முற்றுவது என்பது இதுதான் போல - நிச்சயமாய் நாத்திகப் பிரச்சாரங்கள் அல்ல.

பி.கு: கொஞ்ச நாளைக்கு முன்னால லீனா மணிமேகலை ஒரு கல்லூரியின் உடைக் கட்டுப்பாடு விஷயத்தை எதிர்த்துப் பேசினப்ப நிறைய நடுநிலைவியாதிங்க ஓடி வந்து "அது அவங்க இடம். அவங்க சொல்றா மாதிரி நடக்கறதான அங்க போகணும். இல்லைன்னா வெளிய வந்ததோட நிப்பாட்டிக்கணும். எதுக்கு இந்த அம்மா சலம்புது?"ன்னு சொல்லிகிட்டுத் திரிஞ்சாங்க. இப்பவும் அவங்க எல்லாம் அதையேதான் சொல்றாங்களான்னு தெரிஞ்சுக்க ஆசை.(என்ன செய்யறது இது மாதிரி எதுனா புடலங்காய் சமாச்சார பிட் இல்லாம் பதிவே எழுத வர மாட்டேங்குது. வியாதி முத்திடுச்சு போல. :))))) )

Friday, February 01, 2008

படித்ததில் பிடித்தது (9)

புத்தகம்: சதுரங்கக் குதிரை
ஆசிரியர்: நாஞ்சில் நாடன்
பதிப்பகம்: விஜயா

நம் சமூக அமைப்பில் திருமணம் என்கிற அமைப்பு ஒரு அசைக்க முடியாத அங்கம். திருமணமில்லா வாழ்கையைத் தேர்ந்தெடுப்பது என்பது ரொம்பவே அபூர்வமாக நடக்கும் விஷயம். காரணம் கண்முண் வாழ்ந்த அனைவரும் சென்று பழகிய பாதை. பாதுகாப்பானது. அதிக ரிஸ்க் இல்லாத சௌகர்யமான வழி. அதே போல் திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து பின் வயது போன காலத்தில் அது சரியான முடிவில்லை என்று கண்டுகொண்டால் திருத்திக் கொள்வதும் கடினம். எனவே யாரும் இப்பாதையிலிருந்து விலகிப் போக நினைப்பதில்லை. ஏதேனும் ஒரு லட்சியத்தை நோக்கிய பயணமாக வாழ்கை அமைகையில் அதற்காகத் திருமணம், குடும்பம் ஆகியவற்றைத் தவிர்ப்பது என்பது ஒரு வகை. காதல் தோல்வியினால் திருமணத்தை தவிர்க்க நினைக்கும் சிலரும் உண்டு. இவை போன்ற எந்த குறிப்பிட்ட காரணமுமின்றியே கூட சரியான வாய்ப்பின்மையால் திருமணம் அமையாது போவது ஒரு வகை. முதலிரு வகையினருக்கும் தானெடுக்கும் முடிவுக்கு ஒரு காரணமிருப்பதால் ஒரு வேளை வாழ்வின் பிற்பகுதியில் வெறுமை தோன்றிடினும் தங்களை சமாதானப்படுத்திக் கொள்ள ஒரு காரணமிருக்கும். ஆனால் மூன்றாவது வகையினருக்கு நடுவயதிற்கு மேல் ஏற்படும் குழப்பங்களைப் பற்றியதுதான் இக்கதை.

நாவலின் நாயகன் நாராயணன். நாகர்கோவில் அருகிலுள்ள மாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவன். தாய்க்கு வயது போன காலத்தில் அதுவும் தந்தை இறந்த பிறகு பிறந்தவன். தாயின் உழைப்பிலும் தாய் மாமனின் ஆதரவிலுமாக வளர்ந்து பட்டப் படிப்பை முடிக்கும் நாராயணன் பம்பாயில்(கதை நடக்கறப்பவும் எழுதப்பட்டவும் அது மும்பை ஆகலைன்றதால இந்த ஒரு இடுகைல மட்டும் இப்படியே குறிப்பிடறதா இருக்கேன்.) வேலை கிடைத்துச் செல்கிறான். தாய் இறந்த சேதி கேட்டும் கூட உடனே வந்து சேர முடியாத தொலைவிலிருக்கும் ஊர்(கதை எழுதப்பட்டது எண்பதுகளின் பின் பகுதியில் என்று நினைக்கிறேன். எனவே அப்போதைய வசதிகளை நினைவுபடுத்தி இதைப் புரிந்து கொள்ளவும்.) தாயின் சடலம் அவனின்றியே எரியூட்டப் படுகிறது. இரு நாட்கள் கழித்து ஊர் போய்ச் சேர்ந்து மற்ற சம்பிரதாயங்களை முடித்துவிட்டு நிலத்தையும் வீட்டையும் மாமாவையே கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பம்பாய் திரும்புகிறான். மாமாவிற்கு இரு மகள்கள். மூத்த மகளை இவனுக்குத்தான் மணமுடிப்பாரென்று பரவலாக அனைவரும் எதிர்பார்த்திருக்க அவளுக்கு வேறு இடத்தில் மணம் பேசி முடிக்கிறார் மாமா. நாராயணனுக்கும் அந்தப் பெண் மேல் பெரிதாக ஏதும் ஈர்ப்பில்லாததால் இதைப் பற்றி ஒன்றும் செய்யாது விட்டுவிடுகிறான். பிறகு சில இடங்களில் மாமாவே பெண் பார்த்து ஏற்பாடு செய்யும் போதும் அவையெல்லாம் தட்டியே போகிறது - தாயின் சாவிற்கு கூட வர முடியாத தொலைவில் வேலை செய்கிறான் என்பதாலும், மாமாவே தன் மகளை வெளியில் கொடுத்திருப்பதாலும். இப்படியே குடும்பமின்றி நடு வயதை எட்டும் நாராயணனுக்கு அதற்குப் பிறகு ஏற்படும் சலனங்களும் குழப்பங்களும்தான் கதையின் முக்கியப் பகுதி.

வழக்கம் போல பால்காரப் பையாவின் மணியடிப்பில் முழிப்பு வந்துவிட்டது. மணி ஐந்தேகால் ஆகிவிட்டதற்கான அரவங்கள். மாமி எழுந்து விட்டாள். சற்று நேரம் படுக்கையில் கிடந்தான். பின்பு எழுந்து போய் வாசலில் கிடந்த பேப்பரை எடுத்து வந்தான். தலைப்புச் செய்திகள், பங்குச் சந்தை நிலவரம் எல்லாம் பார்த்துவிட்டு பல் தேய்க்கப் போனான். காலையில் மட்டும் மாமி ஒரு சாய் தருவாள். இது ஒரு சலுகை. மாமியும் மாமாவும் ஸ்ட்ராங்காக பீபெரி காபி குடிப்பார்கள். காபிக்கு பால் அதிகம் வேண்டும்.

இன்றும் அலுவலகம் போக வேண்டும். ஞாயிறு, பாங்க் விடுமுறை நாட்கள் தவிர, வெளியூர் டூர் போகும் நாட்கள் தவிர, என்றும் போக வேண்டும். எட்டு நாற்பது குர்லா லோகலில் அதிகம் கூட்டம் இருக்காது. ஷேவ் செய்து குளித்து, நான்கு ஸ்லைஸ் பிரட் பட்டர் ஜாம் சாப்பிட்டு விட்டு , இறங்கி விடலாம்.

தனியார் கம்பெனி ஒன்றில் விற்பனைப் பிரிவில் இருந்தான் நாராயணன். பெரும்பாலும் ஒரே விதமான வேலை. வெளியூர் போனால் மட்டும் மாறிக் கிடைக்கும் சூழ்நிலைகள். இங்கு வேலைக்குச் சேர்ந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படி, வீட்டு வாடகை அலவன்ஸ் எல்லாம் சேர்த்து நாலாயிரத்துப் பக்கம் சம்பளம் வரும். பிராவிடண்ட் ஃபண்ட், எல்.ஐ.சி., கோ-ஆபரேட்டிவ் சொசைட்டித் தவணை, வருமான வரி எல்லாம் போக மூவாயிரத்து நூறு கைக்கு வரும். ஒருத்தனுக்கு இது வெள்ளம். வெளியூர்ப் பயணம் மேற்கொண்டு திரும்பும்போது புறவெட்டுப் பலகை போல் சில நூறுகள் மிஞ்சும்.

அலுவலகம் போகும் நாட்களில் பத்து முதல் ஒன்றே கால் வரை, இரண்டு முதல் ஐந்தே கால் வரை வேலை நேரம். போர்டு ஏரியாவில் இருக்கும் எல்லா ஒட்டலிலும் சாப்பிட்டுப் பார்த்தாயிற்று. சில நாட்களில் எந்தச் சாப்பாட்டுக் கடைக்கும் போகப் பிடிக்காமல், இரண்டு பச்சை வாழைப் பழங்களும் ஒரு கேரட் ஜூஸும் குடிப்பதோடு சரி. முற்பகலிலும் பிற்பகலிலும் இரண்டு சாய் அலுவலகத்தில் தருவார்கள். மூன்றாவது சாய் பருக்கப் பிடிக்காது. குடித்தால் உடனே கக்கூஸ் போகத் தோன்றும்.

கம்பெனி சட்டப்படி ஆண்டுக்குப் பத்து நாள் தற்செயல் விடுப்பு, பத்து நோய் விடுப்பு, முப்பது உரிமை விடுப்பு உண்டு. இவை தவிர சனிக்கிழமைகள் அரை நாட்கள். மத்தியானம் ஒன்று நாற்பத்தைந்துக்கு அலுவலகம் மூடிவிடும்.

பத்து மணிக்கு அலுவலகம் என்றாலும், ஒன்பது முப்பத்தைந்துக்கு இருக்கையில் இருப்பது வழக்கமாகி விட்டது.

இது நாராயணனி தினசரி வாழ்கை. இதில் ஒரு திருப்பமாக அமைகிறது மாமாவின் பெண் வயிற்றுப் பேத்தியின் திருமண அழைப்பு - அதாவது அவனுக்கு மணமுடித்து வைத்திருக்க வேண்டிய பெண்ணின் பெண் திருமண அழைப்பு. நெடு நாட்களுக்குப் பிறகு விடுப்பெடுத்துக் கொண்டு ஊருக்குப் போகிறான் நாராயணன். ஊரில் அவனது பால்ய நண்பனொருவன் ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்கிறான். அப்பெண் திருமணமாகிப் போன சில நாட்களிலேயே கணவனுக்கு ஆண்மையில்லை என்பதை அறிவதால் அம்மா வீட்டிற்கு வந்து விடுகிறாள். எனவே அவளை நாராயணனுக்கு மணமுடிக்க அவர்கள் தயாராய் உள்ளதாய் சொல்கிறான் அந்த நண்பன். வாழ்வின் வெறுமை உறுத்தினாலும் கூட இத்தனை வயதுக்கு மேல் திருமணக் கோலத்தில் தன்னை இருத்திப் பார்த்தலில் உள்ள கூச்சம் பின்னிழுக்கிறது. தட்டிக் கழித்துவிடுகிறான்.

“குத்தாலம், நமக்கு நாப்பத்தஞ்சு வயசாகு. பழைய காலம் போல எம்பதும் தொன்னூறும் யாரும் இருக்கப் போறதில்ல. கூடிப்போனா இன்னும் பத்துப் பன்னிரெண்டு வருஷம். என்னத்துக்கு இந்தச் சள்ளை.... உம் மகளுக்கு பதினேழு வயசிருக்குமா? பயலுக்குப் பதினஞ்சு இருக்கும். நாலஞ்சு வருசத்துல நீயும் தாத்தா ஆயிருவே. பொறுப்புத் தீந்துரும்.... நான் இனிமே கலியாணம் களிச்சுப் பிள்ளை பெறணும். என்னத்துக்குப்பா இந்த உபத்திரவம்? யாரு அளுகா இப்ப கலியாணமும் காடாத்தும் இல்லைன்னு...”

மாமாவின் இளைய மகள் கல்யாணி தன் வீட்டிற்கு வருமாறு அழைக்கிறாள். அந்தக் குடும்பத்தில் நாராயணன் மீது உள்ளார்ந்த நேசம் கொண்ட ஒரே ஆள் அவள்தான். அவளும் அவள் கணவனும் ஆத்மார்த்தமாக அவனை வரவேற்று உபசரிக்கிறார்கள். தனிமையில் அமர்ந்து சிந்திக்கையில் தனக்குக் கல்யாணி மீது ஆரம்பத்திலிருந்தே ஒரு ஈர்ப்பு இருந்திருப்பதை உணர்கிறான் நாராயணன். ஆயினும் கடந்து போன காலத்தை ரீவைன்ட் செய்து வாழவா முடியும் என்கிற சலிப்பு சுய பச்சாதபத்தை விதைக்கிறது.

மாமாவிடம் துணிந்து, நேருக்கு நேராக, கல்யாணியைக் கேட்டிருக்க வேண்டுமென்று தோன்றியது. தான் சற்று மூர்க்கமாக நின்று உறவினர்களிடம் ஒரு கலகம் ஏற்படுத்தி இருந்தால் நடந்திருக்கக் கூடும் என்று தோன்றியது. தனது இந்தப் பின்வாங்கல், கூச்சம் எல்லாமாகச் சேர்ந்து வாழ்க்கையைத் தன்னிடம் இருந்து பறித்துவிட்டது என்று தோன்றியது.

அல்லது அப்போதே யாரையாவது காதலித்திருக்க வேண்டும்.

யாரைக் காதலித்திருக்க முடியும்?

இப்படிக் கூம்பிப் போனதொரு மனதைப் பிறவியிலிருந்தே வைத்துக் கொண்டு. அம்மா இருந்த போதும் இல்லாத போதும் துரத்திக் கொண்டு வரும் ஒரு அனாதை உணர்வு, பிரவாகங்களுக்கு இடையிலான தனியன்.

இதற்குத் தான் மட்டுமே பொறுப்பு என்று தோன்றியது. செலவாகிப் போன நாற்பத்தைந்து ஆண்டுகளை இனித் திரும்பச் சேமிக்க முடியாது. இப்படிப் பழைய நியூஸ் ரீல்களைத் திரும்பப் போட்டுப் பார்ப்பதன் அர்த்தமென்ன?

ஆனால் நினைவுகள் துக்கமானவை. ஆனாலும் நூதனமான சுகம் தருகின்றன.


கல்யாணியும் தன் பங்கிற்கு அவனுக்கு ஒரு பெண் பார்க்கிறாள். தன் வீட்டினருகிலிருக்கும் ஒரு கணவனை இழந்த ஒரு பெண்ணை நாசூக்காக பெண் பார்க்கவும் ஏற்பாடு செய்கிறாள். எனினும் எதையும் பற்றி முடிவெடுக்க முடியாத ஒரு குழப்பத்திலேயே மௌனமாய் ஊர் திரும்புகிறான். மீண்டும் அதே இயந்திரத் தனமான வாழ்க்கை. தன் அலுவலகத்திலேயே பணிபுரியும் குட்டினோ என்பவருடனும் தமிழரான ராமகிருஷ்ணன் என்பவருடனும் மட்டுமே பம்பாயில் நாராயணனுக்கு நட்பு வாய்க்கிறது. ராமகிருஷ்ணன் தமிழர் என்பதோடு ஒத்த ரசனைகளும் உடையவர் - மாதுங்கா தமிழ்ச் சங்கத்தில் தி.ஜா நாவலைத் தேடுவதில் ஆரம்பிக்கும் நட்பு. பின் அவர் கல்கத்தா செல்லும் போது தன்னுடைய ஓரறை பிளாட்டை நாராயணனுக்கே விற்பனை செய்கிறார். அவரும் போகையில் இப்போதும் கூட நீ நினைத்தால் வாழ்வைச் சீராக்கிக் கொள்ள முடியும். திருமணம் செய்து கொண்டுவிடு என்கிறார்.

குட்டினோவுடனான நாராயணனின் நட்பிற்கு அவரும் தன்னைப் போலவே தனிமையில் வாழ்வதும் ஒரு முக்கியக் காரணமாகிறது. குட்டினோ திருமணத்தைத் துறந்தது தன் காதல் தோல்வியால். ரிட்டையர் ஆவதற்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் சேர்ந்து மதுவருந்தும் பொழுதொன்றில் குட்டினோ நாராயணனை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அறிவுறுத்துகிறான்.

ஒரு வாய் பீரை உறிஞ்சி விட்டு குட்டினோ சொன்னான்

“என் கணக்குத் தீர்ந்து விட்டது. சுவாரசியமற்ற இறுதிக் காட்சி. பின்பு திரை. நீ என்ன செய்யப் போகிறாய்?”

“ஒன்றும் செய்வதாக இல்லை. நீயும் போய்விட்டாயானால் கஷ்டமாக இருக்கும். ஆனால், நாம் எதை நிறுத்த முடியும்? உன்னை விட்டால் சொல்லத் தகுதியான நட்பென்று ஒன்று கூட இல்லை.”

“இன்னும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. யூ ஆர் ஸ்டில் யங். மேரி எ நைஸ் கேர்ள் அன்ட் என் ஜாய் லைஃப்…”

“அதை நீ செய்திருக்கலாமில்லையா?”

“அதனால்தான் சொல்கிறேன். வாழ்க்கை யாருக்காவது உபயோகமாக இருக்க வேண்டும். மண்ணில் கவிழ்த்த கள்ளுப் பானையாக இருக்கக் கூடாது.”

நல்ல உவமானமாகச் சொல்கிறான் குட்டினோ. எங்கோ படித்ததன் சாரம். கலத்திலும் விழாமல் கன்றுக்கும் ஆகாமல் நிலத்தில் வீழ்ந்த பால் போல. எனக்கும் உதவாமல் என்னுடையவனுக்கும் பயனில்லாமல் அல்குல் பசலை பாய்ந்தவாறுள்ளது.

மணி ஏழேகால் ஆகியிருந்தது. புத்தியில் மிதமான போதை உரைத்தது.

“அவுர் தோ பீர்?”

“நை. ஆஜ் பஸ் ஹோ கயா.”

“சக்காராம். பில் லாவ்.”

நாராயணன் பில் கொடுக்க குட்டினோ விடவில்லை. தட்டில் ரெண்டு ரூபாய் போட்டுவிட்டு எழுந்தான்.

“சலோ, இனி எங்கு போகலாம்?”

“போக எங்கும் இல்லை!”

“யா. ஹௌ லாங் யூ ஆர் ஃபீலிங் திஸ்?”

“குறைந்தது பத்து ஆண்டுகளாக.”

“எனக்கு இது தோன்ற ஆரம்பித்து இருபத்தைந்து ஆண்டுகளாகின்றன. எனக்கென்று போக ஒரு இடமில்லை. நான் எங்கும் சேர்ந்தவனாக இல்லை. என்னை யாருக்கும் வேண்டாம்….”

அடுத்தடுத்து தொடரும் இது போன்ற உபதேசங்களாலும் தனிமையாலும் தொடர்ந்து அலைகழிக்கப் படுகிற நாராயணனின் வாழ்க்கையை விவரித்துச் செல்கிறது நாவல். வழக்கமான நாவல் போல உச்ச காட்சி என எதுவும் இல்லை இங்கு. இதனால் அறியப்படும் நீதியும் ஏதுமில்லை. திருமணமாகதோர் வாழ்வுதான் இப்படிப் பொருளற்றுப் போகுமென்றில்லை - திருமணமாகி குழந்தை குடும்பமென இருப்போருக்கும் ஏதோ ஒரு நொடியில் தோன்றலாம், வாழ்வின் பொருளென்ன என்கிற கேள்வி. நாவலில் அத்தகைய ஒரு பாத்திரமும் உண்டு.

இதை ஒரு மனிதனின் வாழ்க்கையின் நடுவயது காலத்து குறுக்குவெட்டுத் தோற்றமென்று சொல்லலாம். இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சித்திரம் கிடைக்கலாம் - மேகத்தில் தெரிவது போல, உதிர்கின்ற சுவற்றுச் சுண்ணாம்பில் தெரிவது போல.

ஒரே ஒரு நபரின் வாழ்வைப் பற்றிய பதிவுதான் நாவலின் முக்கியச் சரடெனினும் கூட பல்வேறு விஷயங்களும் நுணுக்கமாக சித்தரிக்கப் படுகிறது. குமரி மாவட்டத்து வட்டார வழக்கு அதில் முக்கியமானது. ஜெயமோகனின் எழுத்து பதிவு செய்வது கேரளத்தை ஒட்டிய பகுதிகளான திருவட்டார், குலசேகரம் போன்ற இடங்களின் வட்டார வழக்கை என்றால், நெல்லையை ஒட்டிய பகுதிகளான நாகர்கோவில், சுசீந்திரம் போன்ற பகுதிகளின் மொழியைப் பதிவு செய்கிறார் நாஞ்சில் நாடன்.

இன்னொரு முக்கிய விஷயம் - கணவனை இழந்த அல்லது பிரிந்து வாழும் பெண்களின் மறுமணம் பற்றிய தெளிவான பார்வை நம் மண்ணின் எளிய மக்களுக்கு இயல்பாகவே இருக்கிறது என்கிற உண்மை. இதையெல்லாம் உணர்த்த எந்த சீர்திருத்தவாதியும் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டியிருப்பதில்லை. ஆண் ஏதேனும் ஒரு குறையைக் கொண்டிருக்கும் போது (நாவலில் நாராயணனுக்கு பருவம் தப்பிய திருமணம் என்பதால்) அதே போன்று ஒரு குறையுடைய பெண்ணையே(ஏற்கனவே திருமணமாகி பின் திரும்பியிருக்கும் பெண்கள்) தேடிச் சேர்க்க வேன்டும் என்கிற அடிப்படை தர்க்க/நியாய உணர்வும் இயல்பிலேயே அவர்களுக்கு வாய்த்திருப்பதும் நாவலில் சொல்லப் பட்டிருக்கிறது.

ஜெயமோகன் தன் பதிவில் நாஞ்சில் நாடனைப் பற்றி எழுதியிருப்பனவற்றைப் படித்தே இம்முறை புத்தகக் கண்காட்சியில் அவரது நூல்கள் கொஞ்சம் வாங்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்( தாடகை மலையடிவாரத்தில் ஒருவர் - கமண்டல நதி). சதுரங்கக் குதிரை, மிதவை, சூடிய பூ சூடற்க, எட்டுத் திக்கும் மதயானை ஆகிய நான்கு நூல்களை வாங்கி வந்தேன். எட்டுத் திக்கும் மதயானை தவிர மற்ற மூன்றும் படித்தாயிற்று. மூன்றுமே எடுத்ததிலிருந்து கீழே வைக்காமல் ஒரே அமர்வில் படிக்குமளவு சுவாரசியமான அருமையான புத்தகங்களே. விரைவில் மற்ற நூல்களையும் பற்றி இப்பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

Wednesday, January 16, 2008

மொக்கையாய் ஒரு மொக்கை

மொக்கை போடச்சொல்லி நம்ம கண்மணியக்கா கூப்பிட்டு விட்டிருக்காங்க, அதும் சும்மா இல்லீங்க, ஸ்பெஷல் கோட்டாவுல. தட்ட முடியுமா? ஆனாக்க முதல்ல மொக்கைன்னா என்னான்னு பாத்துக்கணுமேன்னு தேடினேன். மொக்கை போடச்சொன்னா நம்ம எழுத்தாளினி ஏகாம்பரி இப்படி ஒரு பெயர்ச்சொல் ஆராய்ச்சி செஞ்சு வச்சிருக்காங்க. அதாவது அவங்க வரையரைப் படி உருப்படியா விஷயம் எதும் அதுல இருக்கக் கூடாது. அவ்ளோதான். அப்படி பாத்தா, நான் ஏற்கனவே போட்ட பதிவுல பாதிக்கு மேல அப்படிதானேன்னு மனசாட்சி சவுண்ட் விட்டது. அதை கண்டுக்காதது போல விட்டாச்சு(வழக்கம்போல).

அப்புறம் நிறைய பேர் கொசுவத்தி சுத்திதான் மொக்கைக்கு மேட்டர் தேத்தியிருக்காங்களேன்னு நானும் ட்ரை பண்ணி பாத்தேன். ஒன்னும் மாட்டலை. சரி, என்னதான் பண்ணலாம்னு பாத்துகிட்டிருக்கும் போது மா.சிவகுமார் வெறுமனே மொக்கைன்னு டைப் பண்ணி அருமையா சமாளிச்சிருந்தார். இதும் நமக்குத் தோணலை பாருன்னு தலைல அடிச்சுகிட்டேன். எப்படி ஒப்பேத்தறதுன்னு ஒன்னும் புரியலை. சரி, ஒரு சிலர் பண்றா மாதிரி என்னோட எழுத்தை பாத்துதான் என்கிட்ட நானே இம்ப்ரஸ் ஆனேன்னு தற்புகழ்ச்சி பதிவா போட்டுடலாமான்னு பாத்தேன். இருந்தாலும் வாழ்கைல சின்னச் சின்ன பொய்கள் சொல்லியிருக்கேனே தவிர ரொம்ப பெரிய பொய்லாம் சொல்லி அனுபவமில்ல. அதுனால அதும் சொதப்பிடும்னு விட்டுட்டேன். வம்பில்லாத விஷயம்னா நம்ம கவிதைதான். எப்படியும் யாருக்கும் எதும் புரியாது - இல்ல கரெக்டா தப்பா புரியும். சோ, அதுதான் சரியான வழின்னு முடிவு பண்ணினேன். ஆனா ஒன்னும் ஒடலை. கடைசியா யோசிச்சுப் பாத்தப்ப இவ்ளோ நேரமா ஒன்னுமே உருப்படியா பண்ணலைன்னு உரைச்சுது. இது, இது, இதுதானே மொக்கைன்றது? அதான், அப்படியே தட்டச்சிப் போட்டுட்டேன்... படிச்சுட்டு சொல்லுங்கப்பா, மொக்கை எப்படியிருக்குன்னு. :)))))

Tuesday, January 08, 2008

குடிப்பதே சிறப்பென்றோமா?

காலம் காலமாக கேட்கப் பட்டு வரும் அதே கேள்வி -பொண்ணுங்களும் சிகரெட் குடிச்சு, தண்ணி அடிச்சு கண்டவனோட சுத்தி சீரழிஞ்சு போறதுதான் விடுதலையா? நாம யாரும் நம்ம கூட்டத்துல இருக்கறவங்கதான் இப்படி தப்பான கருத்தச் சொல்லிட்டாங்களோ - அதாவது பெண்களும் சிகரெட் குடிப்பதும், தண்ணி அடிப்பதும், கண்டவனோட போறதும்தான் பெண் விடுதலைன்னு சொல்லிட்டாங்களோன்னு சுத்தி சுத்தி தேடினாலும் அப்படியெதுவும் கிடைக்காது. எங்கயாவது ஒன்னு ரெண்டு பேர் ஒரு பெண் சிகரெட் குடிக்கும் போது அதை சிகரெட் உடல் நலத்துக்கு தீங்கானதுன்னு மட்டும் சொன்னாப் போதாதா, ஒரு பொண்ணா இருந்துகிட்டு நீ சிகரெட் பிடிச்சா எங்க பண்பாடு என்ன ஆகுறதுன்னு கேட்பது ஆணாதிக்கத் திமிரின் வெளிப்பாடுன்னு சொல்லியிருப்பாங்க. அதுலேர்ந்து இந்த ஒரு வாதத்தை - அதாவது பெண் உரிமை பேசுறவங்க எல்லாம் சிகரெட் குடிக்கவும் தண்ணி அடிக்கவும் கண்டவனோட படுத்து எழுந்திருக்கவும்தான் உரிமை கேக்கறாங்கன்ற வாதத்தை டெரிவ் பண்ணி வச்சுகிட்டு என்ன கேட்டாலும் இதுக்குத்தான் திரும்ப திரும்ப விளக்கம் கொடுப்பாங்க. அட என்னடா இது, கேக்காத கேள்விக்கு ஏன் பதில் சொல்றாங்க, நாம கேக்கற விஷயத்தைப் பத்தி ஏன் எதுவுமே பேச மாட்டேங்கறாங்கன்னெல்லாம் நாம யோசிச்சு குழம்பி கொஞ்சம் சைலன்ட் ஆயிடுவோமா, உடனே பாத்தியா, கேட்ட கேள்விக்கு அவிங்களுக்கு பதில் சொல்லத்தெரியல பத்தியா? இந்தப் பெண்ணுரிமையப் பத்திப் பேசுறவயங்க எல்லாம் இப்படித்தான்ப்பா, அரைகுறைங்க... புடலங்காப் பொரியல் செய்யத்தேன் லாயக்குன்னு ஒரு முத்திரய நம்ம மேல பசக்குனு குத்திபுட்டு அடுத்த ஆள்கிட்டப் போயி அதே தண்ணி, சிகரெட், ப்ளா... ப்ளாவை ஆரம்பிச்சுடுவாய்ங்க...

இந்த மாதிரி நாம சொல்லாத விஷயத்தை நம்ம மேல ஏத்திப் பேசும் டெக்னிக்கை பலகாலமா எல்லோரும் உபயோகிச்சுகிட்டேதான் இருக்காங்க. கவிதாயினி, முத்தமிழ் வித்தகி, திருமதி. கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்கள் எழுதின ஒரு கட்டுரை நினைவுக்கு வந்தது (யப்பா, எதுனா பட்டத்தை விட்டிருந்த பின்னூட்டத்துல சொல்லிடுங்கப்பா, திருத்திடறேன். நம்ம நாட்டு அரசியல்வாதிகள் இன்ஷியல தவறுதலா மாத்தி போட்டா டென்ஷன் ஆகறதை விட அதிகமா பட்டங்கள் விட்டுப் போயிட்டா டென்ஷன் ஆகிடுவாங்க. அக்கா முழுசா அந்த லெவலுக்கு போயிட்டாங்களா இல்லையான்னு தெரியலன்னாலும்கூட எதுக்கு ரிஸ்க்? ஆட்டோல்லாம் அனுப்பினா தாங்க மாட்டேன் நான். அதுனால நமக்குள்ள என்ன பிரச்சனை இருந்தாலும் அதையெல்லாம் மறந்து இந்த விஷயத்துல மட்டும் ஹெல்ப் மீ ப்ளீ.......ஈஈஈஸ்.) இது வந்து அவங்க இந்தியா டுடேல பத்தி எழுதிகிட்டிருந்தப்ப எழுதின கட்டுரை. 'கறுக்கும் மருதாணி' அப்படின்னு ஒரு புத்தகமாவும் வந்திருக்கு.

சமூகப் பிரச்சினைகளைப் பற்றி ஆர்வமும் அக்கறையும் உள்ள பலர் ஆதங்கத்தோடும் தார்மீகக் கோபத்தோடும் சமூக சீரழிவுகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் அவர்களே பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் என்பது பற்றிப் பேசும்போது சுயதணிக்கை ஒன்றை உருவாக்கிக் கட்டுப்பாடு, எல்லைகள் என்பதற்கு முன்னுரிமை தரத் தொடங்கிவிடுவார்கள்.

பெண்களுக்கு இடத்தைக் கொடுத்தால் அவர்கள் மடத்தைப் பிடித்துவிடுவார்கள் என்ற பயம் இவர்களை அரித்துக் கொண்டே இருக்கிறது. பெண்கள் முன்னேற்றம் பற்றிப் பேசிய சீர்திருத்தவாதிகள் கூட பெண்களின் விடுதலை என்பதும் அவர்களின் உரிமைகள் என்பதும் சில வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்கிறார்கள். மனித உரிமை என்பது சில வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேன்டுமென்பதைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், மனித உரிமையில் ஆணின் உரிமை வேறு; அதன் சதவீதம் வேறு. பெண் சற்றுக் குறைந்த சதவீதத்திற்கே பாத்தியதை உள்ளவள் எனும் போதுதான் பிரச்சனைகள் தோன்றுகின்றன.

பொதுவாகப் பெண்விடுதலை என்றால் பலருக்கு குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி, உதட்டுச் சாயம், ஜீன்ஸ் அல்லது குட்டை ஸ்கர்ட், கையில் வர்ஜீனியா ஸ்லிம்ஸ் அல்லது ஏதோ ஒரு மதுவகை - இப்படி ஒரு தோற்றம்தான் கண் முன் விரிகிறது.

பெண் விடுதலையைப் பற்றி என்னிடம் பேசும் பலர் அடிக்கடி கேட்கும் கேள்வி, "பெண் விடுதலை எல்லாம் சரி, ஆனால் விடுதலை என்கிற பெயரில் குடிப்பது, சிகரெட் பிடிப்பது இதெல்லாம் சரியா?" இந்தக் கேள்வியை எத்தனை முறை சந்தித்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது.

பெண் விடுதலை என்பது உடை, உணவு அல்லது சில பழக்கவழக்கங்களுக்குள் சுருங்கி விடும் சிறிய விஷயம் இல்லை. பெண் தன் வாழ்க்கையை தன் விருப்பபடி தீர்மானிக்கும் உரிமை. தனது லட்சியங்களை அடைய அவள் செய்ய வேண்டிய தியாகங்களைத் தீர்மானிக்கும் உரிமை. தனது வாழ்க்கையைத் தானே வாழும் உரிமை.

குடிப்பதும் புகைப்பது தனிமனித விருப்பம். அந்தப் பழக்கங்களுக்கு அடிமையாவது என்பது உடல் நலத்தைப் பாதிக்கக்கூடியது. இதற்கும் பெண் விடுதலைக்கும் என்ன சம்பந்தம்? குடிப்பதும் புகைப்பதும்தான் எங்கள் தலையாய உரிமை; இதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம் என்று எந்தப் பெண்ணியவதி சொல்லிக் கேட்டிருக்கிறார்கள் இவர்கள்? இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெண் சிசுக் கொலை நடக்கிறது. கல்வி என்பது பல பெண்களின் எட்டாத கனவாகவே இருக்கிறது. வரதட்சிணை ஒழியவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாது பெண் விடுதலையைப் புகை வட்டத்துக்குள் சிலர் அடக்க நினைப்பது வேடிக்கை.

இந்தியாவில் ஆண்டுதோறும் கள்ளச் சாராயத்தால் இறந்து போவோரின் எண்ணிக்கை 3000க்கும் மேல். இதில் கணிசமான அளவு பெண்களும் அடங்குவர். இவர்களில் எத்தனை பேரின் காதுகளில் பெண் விடுதலை என்ற வார்த்தை ஒரு முறையேனும் விழுந்திருக்கும் சாத்தியம் உள்ளது?

மேல்தட்டு வர்க்கத்து விருந்துகளில் கலந்துகொள்ளும் பல பெண்கள் 'சோஷியல் டிரிங்கர்ஸ்.' இவர்களில் எத்தனை பேருக்குத் தங்களின் உரிமை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது?

ஆந்திராவில் - குறிப்பாக ராஜமுந்திரி போன்ற பகுதிகளில் - பெண்கள் எரியும் சுருட்டின் எரியும் பக்கத்தை வாயின் உட்புறமாக வைத்துப் புகைப்பார்கள். இவர்கள் வேலையை முடித்துவிட்டு இப்படிப் புகைத்துக்கொண்டே பெண் விடுதலை பற்றியும் பேசுகிறார்களா? பேசினால் நன்றாகத்தான் இருக்கும்.

சில அன்பான ஆண்கள் இதற்குக் கூறும் காரணம்: நாங்கள்தான் தவறான வழியில் போய் கெட்டுச் சீரழிந்து போகிறோம்; நீங்களும் அதையேன் செய்ய வேண்டும்? இந்த அக்கறை என்னைக் கண் கலங்கச்செய்துவிட்டது. கர்ப்பகிரகத்திலுள்ள விக்கிரகங்கள் கீழே இறங்கி வர எப்படி அனுமதிக்க முடியும்? அவை பாதுகாக்கப்பட வேண்டியவையாயிற்றே?

"...என் அரை
முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து,
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ,
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்தன் மரபின் ஊனதுவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி..."
(பாடியவர்: ஒளவையார்;
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி;
திணை: பாடாண்)


முதுபாசி போன்ற என் உடை களைந்து, புதுமடி உடுத்தச் செய்து, மகிழ்வு தரும் கள்ளும் மாமிசச் சாதமும் வெள்ளிக் கலத்தில் அதியமான் ஊட்டினான் என்கிறார் ஒளவையார்.

“சிறியகட் பெறினே, எமக்கீயும்;மன்னே
பெரியகட் பெறினே,
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே...”

(பாடியவர்:ஒளவையார்
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.)

சிறிய அளவு மதுவைப் பெற்றால் எனக்கு அளித்திடுவான். பெரிய அளவு மதுவைப் பெற்றால் யாம்பாட, அதை எமக்கு அளித்துத் தானும் உண்பான்.


இந்த அடிப்படையில் ஒளவையாரும் பெண்ணியவாதியாகிறார் என்றா, அவரைப் பெரிய மனதோடும் பேருவகையோடும் பெண்ணியவாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எழுதியவர்: கனிமொழி