Wednesday, June 27, 2007

படித்ததில் பிடித்தது (3)

புத்தகம் - அ'னா ஆவன்னா
வகை - கவிதை தொகுப்பு
ஆசிரியர் - நா. முத்துக்குமார்
பதிப்பகம் - உயிர்மை
முதல் பதிப்பு - டிசம்பர், 2005

94 கவிதைகளை கொண்ட இந்த தொகுப்பு நூல் அளவில் சிறியது. அதன் பின்னட்டையிலிருக்கும் பதிப்புரை.

வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும் சம்பவமும் ஒரு படம் போல நம்முடன் தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ என்று திகைக்க வைக்கும் அளவுக்கு நா. முத்துக்குமார் இக்கவிதைகளில் அன்றாட வாழ்வின் உயிர்த்துடிப்புள்ள சித்திரங்களை உருவாக்குகிறார். குமுதத்தில் தொடராக வெளிவந்து இப்போது நூல் வடிவம் பெறுகிறது.

கொடுமையடா சாமி. நான் மட்டும் முதலில் புத்தகத்தின் பின்னட்டையை படித்துப் பாத்திருந்தால் நிச்சயம் உள்ளே கூட படித்திருப்பேனா என்பது சந்தேகம்தான். நல்ல வேளை, நான் புத்தகத்தை புரட்டி நடுவில் கைக்கு அகப்பட்ட கவிதைகளை படித்தேனோ, பிழைத்தேனோ.

அவரது கவிதைகள் புரியாத வார்த்தை அடுக்குகளில் தெரியாத இசங்களை நுழைத்து நம்மை பயமுறுத்தாமல் சகஜமாய் 'அட நாம கூட இப்படி யோசிச்சிருக்கோம் இல்ல' என்று நினைக்க வைக்கிறது. நண்பர்களின் தங்கைகளை பற்றியோ இல்லை நம் தெருக்கோடியிலிருந்த தட்டச்சு பயிலகத்தை பற்றியோ இல்லை பெரிய உணவகங்களில் கை நீட்டினால் தண்ணீர் வரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் குழாய்களை பற்றியோ அவர் சொல்லும் போது நம்மால் அதை அப்படியே உள்வாங்கிக்கொள்ள முடிகிறது - வெகு நாட்களுக்கு பின் சந்திக்கும் நண்பனிடம் பேசுவது போல அந்நியோன்னியமாக இருப்பதுதான் இந்த கவிதைகளின் தனிச்சிறப்பு. இதற்கு பெரிய பதவுரை பொழிப்புரையெல்லாம் தேவையேயில்லை. சில கவிதைகளை இங்கே தருகிறேன். ஏற்கனவே நன்கறியப்பட்ட பத்திரிக்கை ஒன்றில் வெளியானவை என்பதால் உங்களுக்கு பரிச்சயமானதாகவே இருக்கக்கூடும்.

மதுரை ஸ்ரீமுனியான்டி விலாஸ்(ஒரிஜினல்)

எட்டாம் வகுப்பில்
அறிவியல் எடுத்த
கே.எஸ்.கே வாத்தியார்
எங்களை முன்வைத்து
தமிழ்ப் பேரகராதிக்கு
இரண்டு பெயர்ச் சொற்களை
தானமாக கொடுத்திருந்தார்.
சாதுவான பையன்களென்றால்
'ஆரிய பவன்.'
சட்டாம்பிள்ளைகளுக்கு
'முனியான்டி விலாஸ்.'

காலத்தின் சதுரங்க பலகையில்
முனியான்டி விலாஸும் நானும்
ஆடும் ஆட்டத்தில்
இரண்டே இரண்டு
நேர் எதிர்ப் புள்ளிகளில்
எப்போதும் சந்தித்துக் கொள்வோம்.

திசையைத் தொலைத்த
திசையிலிருந்து
சதுரமான தட்டுடன்
எதிர்ப்படும் சர்வர்கள்.
அந்தப் பெருந்தட்டில்
வட்ட வட்டக் குறுந்தட்டுக்கள்
என் இருப்புக்குச் சவால் விடும்.
நண்டு, காடை, கோழி, ஆடு,
மீன், எறா, சுறா,
மூளை, குடல், ஈரல்
எல்லாவற்றையும் விலை கேட்டுவிட்டு
தட்டுக்கு தகுதியற்ற'
சிங்கிள் ஆம்லெட்' என்பேன்.
புறக்கணிப்பின் பெரும் வலியை
எனக்களித்து
உள்ளே செல்வார்கள்.

இரண்டு:
கைநிறைய காசுடன்
வேண்டியதை வரவழைத்து
சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்.
என் எதிரில் யாரோ ஒருத்தர்
கசங்கிய சட்டையுடன்
'மீன் குழம்பாவது கிடைக்குமா?'
எனக் கேட்டு
நிறம் மங்கியபீட்ரூட் பொறியலையும்,
நீர்த்துப் போன கீரையையும்,
என் குற்றவுணர்ச்சியையும்
கலந்து பிசைந்து கொண்டிருப்பார்.

பெருந்தட்டுக்கள் மறைந்து
விலைப்பட்டியல் அட்டையை
நீட்டும்துரித உணவகங்கள்
பெருகிவிட்ட இன்றும்
முனியான்டி விலாஸ்களுக்கே
மனம் விரும்பிச் செல்கிறது.
உணவின் ருசிஉணவில் இருப்பதில்லை.
புறக்கணிப்பின் கசப்பிலும்
குற்றவுணர்ச்சியின் காரத்திலும்
அது ஒளிந்திருக்கிறது.

கை நீட்டினால் தண்ணீர் வரும் குழாய் என்கிற கவிதையில் ஒரு பெரிய உணவகத்திலிருக்கும் அந்த குழாய் முன் வந்து போகும் பலரை விவரிக்கிறார் - அம்மாவோடு வந்திருக்கும் ஒரு சிறுவன், கணவனோடு வந்திருக்கும் ஒரு புதுப்பெண், மாநாட்டிற்கு லாரியில் வந்து நகரை சுற்றிப் பார்க்கும் விவசாயி என்று பலர் வந்து அந்த குழாய் முன் நின்று விட்டுப் போகிறார்கள். அந்த சிறுவனும் புதுப்பெண்ணும் அந்த நகரின் ஒரு புதுமையை அறிந்த பெருமிதத்தோடு செல்கையில் அந்த விவசாயியை பற்றி மட்டும் இப்படி சொல்கிறார்.

அந்த விவசாயி
மதிய வெயிலில் மிதந்து செல்லும்
மேகங்களை நோக்கி
கையை நீட்டி நீட்டி
"தண்ணீர் வருமா? " என்று
சோதித்துப் பார்க்கிறார்.

அடர்ந்த புகையைப் போல்
அந்த மேகங்கள்
கலைந்து காணாமல் போகின்றன.

எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் நகர வாழ்வின் போலிப் பெருமிதங்கள் ஒரு கிராமவாசியின் ஆதார ஏக்கங்களை தூண்டி விடுவதை படிக்கும் போது மனதின் ஒரு ஓரத்தில் எழும் வலிதான் கவிஞனின் வெற்றி. அதற்கு அதிரடிக்கும் வார்த்தைகள் தேவையில்லை. மனித மனங்களின் மென் உணர்வுகள் புரிய வேண்டும். முத்துக்குமார் அதை புரிந்து தன் கவிதைகளில் பதித்தும் வைக்கிறார்.

Friday, June 22, 2007

இப்ப ஒரு பெண் ஜனாதிபதி ரொம்ப முக்கியமா?

"முதல் பெண் பிரசிடென்ட் அமையவிருப்பது, ராஷ்டிரபதிபவன் அதிகாரிகளையும் இந்தி மொழி பண்டிட்டுகளையும் இப்போது மூளையை கசக்க வைத்திருக்கிறது. பிரதீபாவை எப்படி ராஷ்டிர'பதி' - தேசத்தின் கணவர் என்று அழைக்க முடியும்? ராஷ்டிரபத்தினி என்று சொல்வதா? ராஷ்டிர நேத்தா என்பதா? 'பதி' என்பதற்கு வெறுமே உரிமையுடையவர், அதிபர் என்று பொருள் இருந்தாலும், இந்தி மொழி இலக்கணப்படி அது ஆண்பால் சொல்!
பெண்கள் மேலும் பொது வாழ்க்கையில் முக்கிய இடங்களுக்கு வரும்போதுதான் நம் மொழிகளும் ஆண் மொழிகளிலிருந்து மனித மொழிகளாக மாறும்.

கைம்பெண்ணுக்கு ஆண் பால் இல்லை என்பது போன்ற சிக்கல்கள் தமிழுக்கும் உண்டு. எனினும் தற்போதைய பிரச்சனையில் தமிழில் சிக்கல் இல்லை. ஆணாக இருந்தால் குடியரசுத் தலைவன். பெண்ணானால், குடியரசுத் தலைவி. மரியாதையாக இருவருக்கும் பொதுவான குடியரசுத் தலைவர். வாழ்க தமிழ்!"

மேலே இருப்பது ஞானி இந்த வார விகடனில் அவரது பத்தியான ஒ பக்கங்களில் எழுதியிருக்கும் கட்டுரையின் கடைசிப் பகுதி. ஏதோ தலைப்பிலிருக்கும் கேள்விக்கு இது ஒன்றுதான் பதில் என்று அவர் சொல்லியிருப்பதாய் நினைத்துவிட வேண்டாம். நிறைய காரணங்களை தன்னுடைய கட்டுரையிலே கொடுத்திருக்கிறார் ஞானி. முக்கியமாய் அவர் குறித்திருப்பது - இது வரை அவர் மேல் எந்த பெரிய ஊழல் குற்றச்சாட்டுமில்லை என்பதுதான். உண்மைத்தமிழன் அவரது பயோடேட்டாவை சிறப்பாக தொகுத்து தந்துள்ளார். அவரது தகுதிப் பட்டியலை விரும்புவோர் அங்கே சென்று சரி பார்த்துக்கொள்ளலாம்.

எல்லாம் சரி, ஏன் ஒரு பெண் வேட்பாளர் என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஏன் ஒரு பெண் வேட்பாளர் கூடாது என்ற எளிமையான எதிர் கேள்வி ஒன்றே போதுமான பதில் என்ற போதும்(என்ன கவுண்டமணி ஸ்டைலில் இருக்கும். அவ்ளோதான்) மேலும் சில விளக்கங்கள்.

1. பெரிய அளவிலான அதிகாரங்கள் ஏதுமற்ற பதவிதானெனினும், உலக நாடுகளிடையே இந்தியாவின் முகமாக தென்படப் போகிறவர். இன்னும் அமெரிக்காவே கூட தன் அதிபராய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்திராத போது நாங்க எல்லாம் ரொம்ப முற்போக்குவாதிகளாகும், பெண்ணுரிமை பேணுபவர்களாகும் என்றெல்லாம் காண்பித்துக் கொள்ளலாம். (உடனே அதென்ன அமெரிக்காவே கூட என்று யாரும் என்னிடம் சண்டைக்கு வர வேண்டாம். இன்னமும் நம் நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்காதான் பூலோக சொர்க்கம். எதெற்கெடுத்தாலும் அமெரிக்காவிலெல்லாம் என்று ஆரம்பிப்பவர்கள் கணிசமான அளவில் உள்ளதால்தான் அப்பேர்ப்பட்ட பெரியண்ணனே கூட இன்னும் செய்யாத விஷயமாக்கும் இது என்று சுட்ட விழைகிறேன்.)

2. யானை கேட்டு அழும் குழந்தைக்கு குச்சி மிட்டாய் வாங்கி தந்து சமாளிப்பது போல, ஆட்சி அதிகாரத்தின் அடிப்படையான பாராளுமன்ற மற்றும் சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீட்டை கேட்டு வரும் மகளிர் முன்னேற்ற அமைப்புகளின் வாயை இந்த டம்மி பதவியைக் கொண்டு இன்னும் சிறிது காலத்திற்கு அடைத்துவிடலாம் -அதென்ன சிறிது காலம் என்கிறீர்களா? குச்சி மிட்டாய் தீர்ந்தவுடன் குழந்தைக்கு மீண்டும் யானை நினைவு வந்துவிடுமே? அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். எத்தனை ஆயிரம் வருடங்களாக சமாளித்து வருகிறோம் நாங்கள் என்கிறீர்களா, அதுவும் சரிதான்.

3. எனக்கு தெரிந்தவரை குடியரசுத் தலைவருக்கு இருக்கும் ஒரு உருப்படியான அதிகாரம், கருணை மனுக்களை பரிசீலனை செய்து, மரண தண்டனையை ரத்து செய்வது ஒன்றுதான். ஒரு பெண் என்கிற அடிப்படையில் இவர் நிச்சயம் சற்று அதிகமான கருணையோடு நடப்பார் என நம்பலாம். - அதெப்படி? பெண் என்றால் மட்டும் கருணை அதிகமிருக்கும் என்று எப்படி சொல்லப்போச்சு என்றால் - சதவிகித கணக்குப் படி பொதுவாய் பெரும்பாலான பெண்கள் கருணைமிக்கவர்கள், தாய்மையுணர்வோடு இருப்பவர்கள். இவரும் அப்படியேயிருப்பார் என்றே நம்புவோமே..

இப்போதைக்கு இவ்வளவு காரணங்கள் போதுமென்று நினைக்கிறேன்.

பின் குறிப்பு : தலைப்பு உபயம் - மோகன் தாஸ்.

Wednesday, June 20, 2007

தேடல்

இந்த முறை ஊருக்கு போகும் போது அவசியம் தேட வேண்டும்
விடுமுறைக்கு முந்தைய நாளின் பின்மதியப் பொழுதொன்றில்
முன்னறிவிப்பின்றி இறங்கத்தொடங்கிய மழைக்கு ஒதுங்கிய மரத்தடியில்,
நெடுஞ்சாலையின் ஒரத்திலிருக்கும் பாழடைந்த கிணற்று மேடையில்,
ஊருக்கு வெளியிலிருக்கும் முந்திரித்தோப்பில்,
கல்லூரிக்கு எதிரிலிருக்கும் உடையார் கடையில்,
இன்னும் நினைவடுக்கில் தட்டுப்படும் எல்லா இடங்களிலும்.
எங்கேனும் ஒரு இடத்திலாவது இல்லாமலா போய்விடும்
நம்மிடையே தொலைந்து போன ஏதோ ஒன்று.

Friday, June 15, 2007

ஏமாற்றம்

கைநிறைய நீரள்ளி வைத்து
அதில் நிலவை பார்த்து ரசித்திருக்கும்
சிறு குழந்தையென வாழ்ந்து வந்தேன்
விரலிடுக்கில் நீர் நழுவுவதறியாமல்.
நிலவை காணோமென்று காலுதைத்து அழும்
குழந்தை போலானேன் இன்று.

Tuesday, June 05, 2007

படித்ததில் பிடித்தது (2)

புத்தகம் - ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன
ஆசிரியர் - இந்திரா பார்த்தசாரதி
வகை - குறு நாவல்
வெளியான ஆண்டு - 1971


இப்போது மீள் பதிப்பாக கிழக்கு மூலம் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. கல்லூரி நாட்களில் எங்கள் மாவட்ட மைய நூலகத்தில் படித்த நூல். அநேகமாய் நான் படித்த இரண்டாவது இ.பா நாவல். முதன்முறையாக படித்தது - வேர்ப்பற்று. நல்ல காட்டமான அரசியல் வாசனை வீசும் நாவல். இதுவோ காதல், அது சம்பந்தமான மனோரீதியிலான குழப்பங்கள் என்று போகும் கதை. அட, இவர் நல்லாவே எழுதுகிறாரே என்ற ஆச்சரியத்தை அளித்த நாவலிது. பிறகுதான் இவரது புத்தகங்களனைத்தையும் தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன். இப்போதைய கடைசி புத்தகமான கிருஷ்ணா கிருஷ்ணா வரை ஒரளவு இவரது எல்லா புத்தகங்களையும் படித்தாயிற்று. நாவல்கள் மட்டுமல்ல அவுரங்கசீப், ராமானுஜர் போன்ற சிறந்த நாடகங்களையும் எழுதியிருக்கும் இவர் வைணவத்தில் தமிழின் பங்கு குறித்து ஆய்வுகள் என்று பல்வேறு தளங்களில் பங்களித்து வருகிறார்.

இந்த நாவலின் முதல் பதிப்புக்கு முன்னுரை எழுதியவர் தி.ஜா. இதோ அவரது முன்னுரை.

*********************************************
தி.ஜாவின் முன்னுரை.
********************************************


இந்த கதையை படித்து முடித்தவுடன் ஆசிரியர் ஏன் ஜெட் விமானங்கள் தரை இறங்கி விட்டன என்று தலைப்பு வைக்கவில்லை என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.


அமிர்தத்தை போன்ற மனிதர்களுக்கு கோழி பறக்கும் உயரம்தான் பறக்க முடியும். டில்லியில் பெரிய ஆபிசராக இருக்கிறாரே என்பதற்காக ஹெலிகாப்டர் என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது.


அமிர்தத்தின் தர்மசங்கடம் அல்லது அதர்மசங்கடம், முக்காலே மூணுவாசி ஆண்களுக்கு ஏற்படுவதுதான். இது, பெண்களுக்கும் உண்டு. ஆனால் நான் பெண்ணாக இல்லாததால் சதவீதக் கணக்கு சரியாக தெரியவில்லை. இது புதிய சங்கடமும் இல்லை. திலகம் சொல்கிற நாற்பது வயதில் நாய் குணம் என்பது பழமொழியாக ஒலிப்பதால், இந்த சங்கடமும் பழையது. அதை மனிதர்கள் புரிந்துகொண்டிருப்பதும் பழையதுதான் என்பது புரிகிறது.


ஆனால், இந்த காலத்து ஆணும் பெண்ணும் அசுர வேகத்திலும், மேலைநாடுகள் சுதந்திரத்தை பற்றி தந்துள்ள புதிய சிந்தனை மரபுகளிலும், தொழில் நாகரீகம் வளர்ந்துள்ள வசதிகளிலும், தான் உண்டு தன் காரியம் உண்டு என்ற பெருநகர்களுக்கு உரித்தான சுயேச்சைகளிலும் வாழ்ந்து வருவதால் இந்த பழைய சங்கடம் ஆத்மிக சுதந்திரம், தனிமனித சுதந்திரம் முதலிய பல புதிய பெயர்கொண்ட போர்வைகளை போர்த்து இந்த காலத்து மனிதர்களை அலைக்கழிக்கின்றன. அமிர்தம் டெல்லி சமூகத்தின் விழிகளை கற்பனை செய்து, கோழையாகி விடுகின்றான். அதாவது டில்லியில் கூட சுயேச்சை பலிக்காது. கோழை என்று பானு சொல்கிறாள். ஆனால், கோழைத்தனம், தைரியம் என்ற இரண்டும் என்ன என்று கருக்காகத் தீர்மானிப்பது கஷ்டம்.


இந்த உளைச்சல்களை அப்படியே வரைந்திருக்கிறார் ஆசிரியர். கோழையா, தைரியசாலியா என்ற சந்தேகத்தின் சின்னமாக, கதையின் கடைசி வரியில் டெலிபோன் ஒலிக்கிறது. அதை யார் அடித்திருப்பார்கள்? பானுவா, அவள் அம்மாவா, திலகமா? பிரமையா? - நமக்கு தெரிய வேண்டியதில்லை. இந்த சந்தேகம்தான் சரியான விடை. எது தைரியம், எது கோழைத்தனம் என்ற சந்தேகத்துக்கு ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு விடை கிடைக்கும்.


தலைப்பு ஹெலிகாப்டராக இருந்தாலும், எழுத்து ஜெட் வேகத்தில் பாய்கிறது. 1960க்கும் பிறகு வாசகர்களுக்கு அறிமுகமான சில முண்னணி படைப்பாசிரியர்களில், இந்திரா பார்த்தசாரதிக்கே உரிய தனி வேகமிது. அழுத்தமும் சிந்தனையாழமும் கலந்த வேகம் அபூர்வமான சேர்க்கை. சிந்தனையாழம் என்றால், படிப்பதற்கு இரும்புக் கடலையாக இருக்க வேண்டிய அவசியமில்லை; சரளமாக வாசிப்பது, கட்டாயம் கஷ்டமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. இந்திரா பார்த்தசாரதியை படிக்கும் போது இது புரியும். இதற்காக அவரை இன்னொருமுறை வாழ்த்த வேண்டும்.


புதிய யுகத்தின் சவால்களை தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஏற்கவில்லை என்று எத்தனையோ பேர் குறை சொல்கிறார்கள். புதிய மாறுதல்களின் புற வடிவுகளை காண்பதைவிட அகவடிவங்களை கண்டு படைப்பாக மாற்றுவது சிரமமான காரியம். இந்திரா பார்த்தசாரதி, அகவடிவங்களை காண்கிறார். அதன் ஆழங்களையும் கண்டு கலை உருக்கொடுக்கிறார்; அபார வெற்றியுடன் கொடுக்கிறார். எதையும் தொழ மறுக்கும் அவருடைய கிண்டலும் தனித்து நிற்கிற போக்கும் அந்த வெற்றிக்கு உதவுகின்றன.


************************************

அமிர்தம் கதாநாயகன். மொத்தம் 3 பெண் பாத்திரங்கள். அவர்களுடனான அவனது உறவுதான் கதையே. முதல் பெண் நித்யா. முதல் காதலி. தன்னம்பிக்கை மிக்க துடிப்பான பெண். அழகான பெண்ணும் கூட. சற்றே தாழ்வு மனப்பான்மையும் கூச்ச சுபாவமும் உடைய அமிர்தத்தால் அவள் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அப்பா சொல்லை தட்ட முடியாமல் தன் முறைப்பெண் திலகத்தை மணந்து கொள்கிறான். ரொம்பவே சராசரித்தனமான எதிர்பார்ப்புகளும் ரசனைகளுமுள்ள பெண்மணி திலகம். அவளுடனான வாழ்விலும் அவனுக்கு நிறைவில்லை. பழைய காதலியை எண்ணி ஏங்குகிறான். இதற்கு நடுவில் இன்னொரு பெண் - பானுவை சந்திக்கிறார். பழைய காதலி நித்யாவை நினைவுபடுத்தும் அழகு, வசீகரம், துள்ளல் , தன்னம்பிக்கை மிக்க பெண். இப்போது ஒரு திருப்பம். அமிர்தத்தின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்,


"என்னுடைய இளமையை மீண்டும் வாழ வேண்டுமென்று விரும்புகிறேன்... அதே சிந்தனையை, அதே கற்பனையை, அதே செயல்துடிப்பை மீண்டும் நடைமுறையாக்கி வாழமுடியுமா என்பதுதான் என் பரிசோதனை... கடந்து போன சரித்திரத்தை நிகழ்காலமாக்க இயலுமா என்பதுதான் என் ஆசை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு யயாதி ஒளிந்து கொண்டிருக்கிறான்.."

இந்த முயற்சியில் அவன் பரிதாபமாக தோற்கிறான். இப்போது கடைசியில் அவனுக்கு யார் கைகொடுக்கப் போகிறார்கள் - திலகமா இல்லை பானுவா என்பதை நம் அனுமானத்திற்கே விட்டு விடுகிறார் ஆசிரியர். அதுதான் தி.ஜா தன்னுடைய முன்னுரையில் சொல்லியிருக்கும் டெலிபோன் சஸ்பென்ஸ்.

என்னடா விமர்சன உலகின் விதிகளுக்கு மாறா முழு கதையையும் சொல்லிவிட்டேனே என்று யோசிக்கிறீர்களா? இதொன்றும் திரில்லர் கதை கிடையாது. நான்கு வரிகளுக்குள் முடிந்துவிடும் இந்த கதைய இ.பா சொல்லியிருக்கும் விதம்தான் அழகே. அதுனால கதை தெரிஞ்சு போனால் சுவாரசியம் போயிடும் என்கிற சால்ஜாப்பெல்லாம் சாத்தியமேயில்லை. அமிர்தம் - நித்யா/பானு இடையிலான அறிவார்ந்த வார்த்தை விளையாட்டுக்களாகட்டும் அமிர்தம் - திலகம் இடையிலான அறிவுஜீவி Vs ரசனையற்ற மனைவி ரக உரையாடல்கள் என்று எல்லா இயல்பு மாறாத, அதே சமயம் கவிதைத்தனம் விரவிய நடை.

ஒரு அபத்தமான தமிழ் நாடகமொன்றுக்கு தன்னை அழைத்துச்செல்லக் கோரும் மனைவியின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் பின் செல்லும் போது அமிர்தம் எண்ணுவது இது.


"என்ன அப்படி பாக்கறீங்க? புறப்படுங்க, நாடகத்துக்கு நேரமாச்சு."

கிளம்பித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. தனக்கு இஷ்டமில்லை என்று சொன்னாலும் அவள் விடமாட்டாள். நாடகம் எப்படியிருக்குமென்பது அவன் அறிந்ததுதான். ஒரு ரசனையற்ற மனைவிக்கு கணவனாக இருப்பது என்பது பெரிய தியாகம்!திருமணம் என்றாலே பரஸ்பர தியாகங்கள் என்றுதான் அர்த்தம். திலகத்தை கேட்டால், ஒரு மூச்சில் அத்தனையும் கொட்டித் தீர்த்துவிடுவாள். "ஒவ்வொருத்தர் மாதிரி நீங்க இருக்கீங்களா? எனக்கு பிடிச்சது எதுவும் உங்களுக்கு பிடிக்காது. எப்போ பார்த்தாலும் மௌனச்சாமியார் மாதிரி ஒரு புஸ்தகத்தை வச்சுகிட்டு உக்காந்துடறீங்க. எங்கயாவது கூட்டீட்டு போங்கன்னா பலி பீடத்துக்கு போற ஆடு மாதிரி கூட வர்றீங்க.... ஒரு சந்தோஷம், பொண்டாட்டியோட வெளில போறோமேன்னு ஒரு உற்சாகம், உஹூம்...."

தன்னுடைய பிரச்சனைகளை பற்றி அமிர்தம் தன் நண்பன் பானர்ஜியிடம் விவாதிக்கும் போது நடக்கும் உரையாடல் இது.

பானர்ஜி சொன்னான் "இன்னும் எனக்கு உன் பிரச்சனை புரியவில்லை."

"பார்க்கப்போனால் நான் உன்னை கேட்கலாமென்றிருந்தேன், என் பிரச்சனை என்னவென்று..."

"உன் பிரச்சனை நீதான்..." என்றான் பானர்ஜி, நிதானமாக.

"எனக்கு புரிகிறது. ஒவ்வொருவருடைய குணச்சித்திரமும் அவருக்கு விதியாக அமைவதை யாராலும் மாற்ற முடியாது."

"ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் போல தனி மொழியில் பேச ஆரம்பித்துவிடாதே. ஒரு பெண்ணை காதலித்தாய். கை விட்டாய். இன்னொரு பெண்ணை மணந்தாய். பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு, போலி வாழ்க்கை அது இது என்று வேறொருத்தியை கண்ட அனுபவமாகிய போதி மரத்தடியில் உனக்கு ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. உன் பலஹீனத்தை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தீர்மானம் செய்யமுடியாத கையாலாகாத்தனத்துக்கு குணசித்திரம், விதி என்றூ ஏதேதோ சொல்லி மனச் சமாதானம் அடைகிறாய்... உன்னை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது" என்றான் பானர்ஜி.

இ.பாவின் கதைகளின் சிறப்பே அவரது கதாபாத்திரங்களின் தோல்விதான். தோல்வியென்றால் தாடி வளர்த்து, போதையோடு அருவெறுப்பை கூட்ட ஒரு நாயையும் இழுத்துக்கொண்டு திரியும் ரொமான்டிக் காதல் தோல்வியல்ல. தன் இயலாமையின் உச்சங்களை கண்ணாரக்கண்டு பின் சராசரி வாழ்க்கைக்குள் போய் தன்னை திணித்துக்கொள்ளும் தோல்வி - தன்னை பற்றி தானே வளர்த்துக்கொள்ளும் அறிவுஜீவி பிம்பம் கிழிந்து தொங்க தன்னுள் இருந்து வெளிவரும் தன் உண்மை உருவை உணர்ந்து தளர்ந்து போய்த்திரும்பும் கதாநாயகர்கள் இவரது கதைகளில் மட்டுமே சாத்தியம். எப்படியும் க்ளைமாக்சில் தான் ஹீரோவாய் இருக்கும் ஒரே காரணத்தாலேயே ஜெயித்துவிடும் ரக ஆட்களில்லை இவர்கள். அமிர்தத்தை போன்றவர்களின் கதையை எழுத அபார துணிச்சல் வேண்டும் - இவர்களைத்தான் தினசரி வாழ்வில் நாம் அதிகம் சந்திக்கிறோம்(சில சமயங்களில் கண்ணாடியில் கூட சந்திக்க நேரிடலாம்.)

யோசித்து பாருங்கள், இதே கதையை சிந்து பைரவி எப்படி சொன்னது என்று - கதாநாயகனின் சறுக்கல்களை கூட அறிவுஜீவித்தன ஜிகினாத்தூவி அழகாக்கி விற்கும் சராசரி கதைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இ.பாவின் துணிவு நமக்கு வியப்பையளிக்கிறது.