Thursday, August 16, 2007

யாரைத்தான் நம்புவதோ??

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்.


இப்படி ஒரு பாட்டு இருக்குங்க, சரோஜாதேவியம்மா அப்படியே ஒரு வெள்ளைப் புடவைல தலைவிரிகோலமா Night effectல நடந்துகிட்டே பாடுவாங்க இந்த பாட்டை - இவ்வளவுக்கும் வேற என்ன பெரிய காரணம் இருந்துடப் போகுது, மிஞ்சி மிஞ்சிப் போனா தலைவருக்கு வேற யாரோடயாச்சும் சிநேகிதம் இருந்திருக்கும்னு முந்தின சீன்ல எதுனாச்சும் கேள்விப் பட்டிருப்பாங்க இல்லாட்டி தலைவர் யாராச்சும் மயக்கம் போட்டிருக்கற பொண்ணை காப்பாத்துறது மாதிரி நல்ல காரியம் பண்ணிகிட்டிருக்கும் போது இவுங்களே எட்டி நின்னு எக்குதப்பான போஸ்ல பாத்து அதை தப்பா புரிஞ்சிட்டிருந்திருப்பாங்க. இதுக்கே அவங்க இப்படி ஒரு பாட்டை பாடலாம்னா, இந்த வார ஜூவி ல வந்திருக்கற பிரேமானந்தா பத்தின கவர் ஸ்டோரிய படிச்சவங்க மனசுல நிச்சயம் இப்படி ஒரு கேள்வி வரத்தான் செய்யும். வழக்கில் போலீஸ் தரப்பில் முக்கிய சாட்சியாக ஆஜரான அருள்ஜோதியும் மற்ற பெண்களும் தாங்கள் கற்பழிக்கப்பட்டதாகவும் கர்ப்பமுற்றிருப்பதாகவும் தெளிவாக கோர்ட்டில் சொன்னார்கள். இப்போது அதே ஆட்கள் அதே விராலிமலை ஆசிரமத்தின் நிர்வாகிகளாம். அதை விடக் கொடுமை அவரின் இப்போதைய ஸ்டேட்மென்ட் - போலீஸ் தங்களை வற்புறுத்தி இப்படி சாட்சி சொல்ல வைத்ததாக சொல்லியிருக்கிறார்.

இதோ அந்த விகடன் கட்டுரையிலிருந்து அருள்ஜோதியின் அதிர்ச்சி பேட்டி

ஆசிரமத்தில் தங்கியிருந்த ஒன்பது பெண்களைக் கற்பழித்தார் என்பதுதான் பிரேமானந்தா மீதான பிரதான குற்றச்சாட்டு. அதிலும் அருள்ஜோதி என்கிற பெண்ணின் வயிற்றில் சாமியாரின் கரு வளர்வதாகவே சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். கோர்ட்டிலும் அருள்ஜோதி சாமியாருக்கு எதிராகத்தான் சாட்சி சொல்லியிருந்தார். அந்தளவுக்கு வழக்கின் முடிவை நிர்மாணிக்கும் சக்திகளில் ஒருவராக இருந்த அருள்ஜோதி, இப்போது ஆசிரமத்தின் தலைமை நிர்வாகி என்ற அந்தஸ்தில், அதே பிரேமானந்தாவோடு கூட்டணி போட்டிருப்பதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. அருள்ஜோதியிடமும் பேசினோம்.

‘‘காலம் கடந்து போச்சுங்க. இனிமேல் நான் என்ன சொன்னாலும் எதுவும் நடக்கப் போறதில்லை. அநியாயமா சாமிகள் தண்டிக்கப்பட்டு விட்டார். இருந்தாலும் உண்மைகள் வெளியே தெரியணுங்கிறதால பேசறேன். சாமிகள் என்னைக் கற்பழிச்சதாகவும், அவரோட கரு என்னுடைய வயிற்றில் வளர்வதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் அப்ப கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செஞ்சாங்க. மருத்துவப் பரிசோதனையில் தண்ணி அதிகமா குடிச்சதால கரு இருக்கறது தெரியலைனு அபாண்டமா பொய் சொல்லிச்சு போலீஸ். அப்புறம் அபார்ஷன் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க. அந்த விஷயங்களை எல்லாம் என் வாயாலேயே கோர்ட்டில் சொல்லச் சொன்னாங்க.

நான் அதற்கு மறுத்தபோது, மூன்று நாள் என்னை அடித்து உதைத்தார்கள். அடி தாங்க முடியாமல்தான் பொய்சாட்சி சொன்னேன். என்னைத் தவிர சாமி கற்பழிச்சதா சொன்ன புஷ்பராணி, மல்லிகா, உதயகுமாரி, குமாரி, வெள்ளையம்மாள், வசந்தி எல்லாருமே அடிக்குப் பயந்துகிட்டுதான் பொய்சாட்சி சொன்னோம். சாட்சி சொல்லி முடிச்சு சாமிக்குத் தண்டனை அறிவிச்சதும் போலீஸார் எல்லாரையும் விரட்டிவிட்டுட்டாங்க.
எல்லாரும் திருச்சிக்கு வந்து ஜெயில்ல இருக்கற சாமியைப் பார்த்தோம். சாமி எங்களை மன்னிச்சு ஆசிரமத்துக்கே போகச் சொன்னார்.

இப்போ நாங்க எல்லோரும் ஆசிரமத்தை நிர்வகிச்சுக்கிட்டு வர்றோம். (அட்டையில் அருள்ஜோதியுடன் உதயகுமாரி) போலீஸாரும் மத்தவங்களும் சொன்ன கட்டுக்கதைகள் உண்மையா இருந்தா, நாங்க எப்படி ஆசிரமத்துக்குத் திரும்ப வருவோம் (அதானே புரியலை!)? அப்போது சாமிய அதிகார மையத்துல இருந்த சிலருக்குப் பிடிக்காம போய்டுச்சு. அதுனால அவங்க ஒரு போலீஸ் அதிகாரியை விட்டு செஞ்ச காரியங்கள்தான் இத்தனையும்... பாருங்க, சாமியைப் பழிவாங்கறோம்னு எத்தனை பேரோட வாழ்க்கையைப் புரட்டி போட்டுட்டாங்கன்னு?! ஒண்ணுமறியாத(?) அப்பாவிங்களோட வாழ்க்கையெல்லாம் எப்படியெல்லாம் சிக்கிடுச்சு பாருங்க...’’ என்று சொல்லி நம்மை வாய்ப்பிளக்க வைத்துவிட்டு, தன் கன்னத்தில் நீர்முத்துக்களை ஓட விட்டார் அருள்ஜோதி.


இதுல அந்தப் பெண் சொல்லும் ஒரு விஷயம் எனக்கு ஆச்சரியமா இருந்தது - அதாவது வழக்கு முடிந்ததும் போலீஸ் தங்களை விரட்டி விட்டதாக அவர் குற்றம் சாட்டியதுதான். அரசு எங்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என்று சொன்னால் புரிந்துகொள்ள முடியும் - இதே போல பாதிக்கப்பட்ட ஜீவஜோதிக்கும், சிதம்பரம் பத்மினிக்கும் தமிழக அரசு அவர்களின் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பளித்ததைப்போல ஏதேனும் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் என்று நினைக்கலாம். ஆனால் போலீஸ் வழக்கு முடிந்ததும் எங்களை விரட்டிவிட்டது என்றால் என்ன அர்த்தம்? ஒவ்வொரு வழக்கிலும் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் பொறுப்பையும் காவல்துறையே ஏற்க முடியுமா என்ன? இவ்வளவுக்கும் நீதிமன்ற தீர்ப்பிலேயே பிரேமானந்தாவிற்கு விதிக்கப்பட்ட அபராத தொகை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கு முடிந்த சில வருடங்களுக்குப் பிறகு புதுக்கோட்டையிலுள்ள ஒரு சமூக சேவகியின் பாதுகாப்பில் இந்தப் பெண்கள் இருந்தபோதும் பத்திரிக்கைகளில் இப்பெண்களின் ஒரு பேட்டி வெளியாகியிருந்தது. அதிலெதுவும் இப்படிப்பட்ட அதிர்ச்சித் தகவல்களில்லை - வழக்கம்போல சமூகம் இப்படியான பாதிக்கப்பட்டவர்களை பரிவுடன் எதிர்கொள்ளாதது பற்றியே அப்பேட்டியிருந்ததாக நினைவு.

ரொம்ப சுலபமாக நாமெல்லோரும் ஒரு நாளைக்கு ஒன்றாக பேசும் அரசியல்வாதிகளை விமர்சிக்கிறோம். சாமானியர்களும் இப்படி இருப்பதை பல வழக்குகளில் பார்க்கிறோம். எனக்குத் தெரிந்து இது போன்ற வழக்குகளில் சிதம்பரம் பத்மினி மட்டுமே தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் இருந்து நீதி கேட்டு போராடியிருக்கிறார். அவரது போராட்டத்தை பாப்பா உமாநாத் போன்ற ஜனநாயக மாதர் சங்கத்தவர்களும் தொடர்ந்து ஆதரித்தனர் - பிறகு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தனபால் என்பவரை மறுமணம் புரிந்தார். அந்த படிப்பறிவில்லாத எளிய பெண்ணுக்கு இருந்த போராட்ட உணர்ச்சியும் அறவுணர்ச்சியும் பெரும்பாலான பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏன் இருப்பதில்லை. சமீபத்தில் ஜீவஜோதியும் அண்ணாச்சியின் மீதான ஒரு வழக்கில் பல்டியடித்ததாக செய்தி வெளியானது. என்னாதான் நடக்கிறது இங்கே? சட்டமும் காவல்துறையும் செய்யும் பல அநியாயங்களைப் பற்றிக் கவலைப்படும் யாருமே இப்படி பாதிக்கப்பட்டவர்களே தனக்கு நியாயம் கிடைப்பதற்காக அல்லாது சம்பந்தப்பட்டவர்களை மிரட்டவே சட்டத்தை உபயோகிப்பதாக அமையும் இம்மாதிரியான நிகழ்வுகளை கண்டிப்பதில்லை. இப்படி நீதிமன்றம், காவல்துறை ஆகியவற்றின் நேரத்தை வீணடித்துப் பின் அவர்களை கேலிக்குட்படுத்துபவர்களின் மீது எந்த நடவடிக்கையுமே எடுக்க முடியாதா? வழக்கம்போல இதெல்லாம் சகஜமப்பான்னு போக வேண்டியதுதானா?

இத்தோடு அந்த கட்டுரையிலிருந்த அதிர்ச்சிகள் முடிவடைந்து விடவில்லை. இன்னும் பெரிய காமெடியெல்லாம் இருக்கு கீழே...

‘பிரேமானந்தாவுக்கு ஆதரவாக மூவர் கூட்டணி ஒன்று களமிறங்கியிருப்பது, இன்னொரு ‘அடேங்கப்பா’ திருப்பம்! ‘தனித் தமிழர் சேனை’ நகைமுகன், ‘இந்து மக்கள் கட்சி’ அர்ஜுன் சம்பத், ‘பாரதிய ஃபார்வர்ட் பிளாக்’ முருகன்ஜி ஆகிய மூவரும் ‘பிரேமானந்தா நற்பணி பாதுகாப்பு இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த மூவர் கூட்டணி உதிர்த்த முத்துக்களில் சில இதோ...

‘‘பிரேமானந்தா சாமிகளைவிட கொடூரமான குற்றங்களை செய்தவர்கள்கூட சட்டத்தின் பார்வையில் நிரபராதிகளாகக் கருதப்பட்டு, வெளியில் சுற்றி வருகிறார்கள். சாமிகளுக்கு நடந்ததோ உச்சக்கட்டக் கொடுமை. அதனால்தான் சற்று தாமதமாகவாவது சாமிகளுக்கு நியாயம் தேடித் தருவதற்காக ஒன்று சேர்ந்திருக்கிறோம்’’ என்று நகைமுகன் சொல்லி நிறுத்த, அர்ஜுன் சம்பத் தொடர்ந்தார்.

‘‘அரசாங்கம் செய்ய வேண்டிய காரியத்தை சாமிகள் தனியாக செய்து கொண்டிருக்கிறார். ஆயிரம் குழந்தை களைப் படிக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இதில் 250&க்கும் அதிகமான குழந்தைகள் அநாதைக் குழந்தைகள். சாமி ஆசிரமத்துக்கு வந்ததுமே இந்தக் குழந்தைகள் எல்லாம் ‘அப்பா, அப்பா’ என அன்போடு ஓடிவருகின்றன. நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய கிலானியை விடுதலை பண்ணியிருக்கிறோம். அப்சலுக்கு தூக்குத் தண்டனையையே நிறுத்தியிருக்கிறோம். நாகர்கோவிலில் ஆசிரமம் நடத்தி கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் சிக்கிய கிறிஸ்தவ சாமியார் ஜான் ஜோஸப்பை நிரபராதி என விடுவித்திருக்கிறோம். ஆக, இந்துக்கள் அதிகமாக வாழ்கிற ஒரு நாட்டில் ‘முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு நீதி... இந்துக்களுக்கு ஒரு நீதி’ என்கிற அளவில்தானே எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது. ‘இந்து என்கிற காரணத்துக்காக பிரேமானந்தா மட்டும் சிறையிலிருக்க வேண்டுமா?’ என்கிறார் அர்ஜுன்சம்பத்.

இவங்க அநியாயத்துக்கு ஒரு அளவே இல்லையா? எதோ அவங்க கோவில் கட்டறாங்க எங்களை கட்ட விடமாட்டேங்கறாங்கன்னு சொல்றா மாதிரி மத்த மதத்துக்காரங்க கற்பழிச்சா விட்டுடறாங்க, எங்களை மட்டும் விடமாட்டேங்கறாங்களேன்னு கேக்கறாங்க, அதுவும் ஒரு பத்திரிக்கை பேட்டில.... எங்க போய் முட்டிகிட்டு அழறது நாமெல்லாம்?
இதை விடவும் பெரிய கொடுமை கட்டுரையின் கடைசி பத்திதான்.

ஈழப் பிரச்னை... ஈஸி தீர்வு!

இதையெல்லாம்விட க்ளைமாக்ஸ்... இலங்கையில் பல ஆண்டுகளாக இருந்துவரும் இனப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவருகிற முயற்சியில் பிரேமானந்தாவை இறக்கிவிடப் போகிறார்களாம். ‘‘இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே சாமிகளின் சீடர்தான், தெரியுமில்லே. பிரபாகரனே இவரோட பக்தர்தான் புரியுதில்லே..?’’ என்று புளகாங்கிதப் படுகிறார்கள்!

ஆறு நாள் பரோல் முடிந்து, கடந்த 12&ம் தேதி இரவு சிறைக்குத் திரும்பியிருக்கிறார் பிரேமானந்தா.

சிறையில், சிலோன் பிரச்னை தீர தீவிர தியானத்தில் ஆழ்ந்தாரா, தெரியவில்லை!

ஈழத்தமிழர்களுக்கு தம்மால் வேறு எந்த வகையிலும் உதவ முடியாததால் அவ்வப்போது இப்படி காமெடி சரவெடிகளை கொளுத்திப்போட்டு அவர்களை சிரிக்கச் செய்தேனும் அவர்களின் மன இறுக்கத்தை குறைக்கலாமோ என்று இவர்கள் நினைத்து விட்டார்களோ? வேறு எப்படி இதையெல்லாம் புரிந்து கொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை.

பேட்டியாளரை கையெடுத்துக் கும்பிடவேண்டும் போலிருக்கிறது - பின்னே இவ்வளவையும் எரிச்சலையடக்கிக் கொண்டு என்னமாய்த்தான் கேட்டுக் கொண்டு வந்தாரோ தெரியவில்லை. அவர் பொறுமையாய் இருப்பது எப்படியென்று ஏதேனும் புத்தகமே எழுதலாம் அல்லது ஏற்கனவே எழுதியிருக்கலாம். அவ்வளவு தகுதிகளும் அவருக்குண்டு.

Friday, August 10, 2007

கேள்விகள்

ஓவ்வொரு முறையும் எதையோ சொல்ல எண்ணி ஆரம்பிக்கிறோம்.
எதையெதையோ பேசித் தீர்க்கிறோம்.
எதையுமே புரிந்து கொள்ளாது பேச்சு முடிகிறது.
என்னிடம் பதிலில்லாத கேள்விகளாய் தொகுத்து வைத்திருக்கிறாய் நீ.
அதிலிருந்து ஒவ்வொன்றாய் என் முன் இடுகிறாய்.
என் கையாலாகாத மௌனம் கண்டு இரங்கி
பதில்களை நோக்கி என்னை செலுத்துவதற்காய்
நீ மேலும் சில துணைக் கேள்விகளை இறைக்கிறாய்.
அவைகளுக்கும் கூட எனக்கு விடைகள் தெரியவில்லை.
இருவருமே தோல்விகளை ஒப்புக்கொண்டு
மௌனத்தில் தலையை புதைத்துக்கொள்கிறோம்.
இருதரப்பும் தோல்வியடைவதான
இந்த வினோத விளையாட்டை
எப்படிக் கண்டடைந்தோம் நாம்?
எப்போது கரையேறப்ப்போகிறோம் ?
எனக்கு பதில் தெரிந்த ஒரு கேள்வியை நீயோ
இல்லை உன்னிடமிருக்கும் ஏதேனும் ஒரு கேள்விக்கான பதிலை நானோ
கண்டுபிடித்துவிட்டால் போதும்.
முடியுமா?