Saturday, February 17, 2007

இதுவும் ஒரு வன்முறையே.

நேற்று சிவராத்திரியை முன்னிட்டு வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் இரவு 5 கால பூஜை நடைபெற்றது. பூஜையெல்லாம் சரிதான். அதற்கு வந்திருந்த பக்தகோடிகள் இரவு கண்முழிக்க செய்த உபாயமிருக்கிறதே, அதுதான் இப்போ நம்மோட பேசுபொருள். கண்முழிப்பதற்காய் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வதாய் முடிவு. இதில் கூட ஒன்றும் பிரச்சனை இல்லைதான். அதற்கு ஒருவர் முதலில் பாட பிறகு மற்றவரனைவரும் பின்பாட்டு பாடவேண்டுமல்லவா? இந்த மெயின் பாடகர் அந்த கோவிலின் ஆஸ்தான பாடகர். பொதுவாக எந்த விசேஷத்திற்கும் இவர் வந்து மைக்கை பிடித்து விடுவார். அதே வழக்கத்தில் அவர் இன்றும் மைக் கேட்க அவருக்கு மட்டுமின்றி அவரது வாத்திய கோஷ்டிக்கும் சேர்த்து மைக் கொடுக்கப்பட்டது. இரவு முழுதும் அவரது கான மழை ஒரு இரண்டு தெருக்களுக்கேனும் கேட்கும் வண்ணம் பொழிந்தபடியிருந்தது. அக்கம்பக்கத்திலிருக்கும் அனைவரையும் வலுக்கட்டாயமாக சிவராத்திரி விரதம் இருக்கச்செய்த புண்ணியத்தையும் சேர்த்து கட்டிக்கொண்டனர் அந்த பாடகரும் நிகழ்ச்சி அமைப்பாளர்களும். இதே கதை மார்கழி மாதத்து காலை வேளைகளிலும் நடந்தது. தினமும் நாங்களும் காலையில் வலுக்கட்டாயமாக பள்ளியெழுப்ப பட்டு பாவை நோன்பையும் நோற்கும்படி நிர்பந்திக்கப்பட்டோம். இத்தனைக்கும் அந்த குடியிருப்பு முழுக்க முழுக்க கல்வியறிவுடைய நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதி. இதே இந்நேரம் ஏதேனும் ஒரு அரசியல் கட்சி கூட்டம் 10 மணிக்குமேல் ஒரு 5 நிமிடம் நடந்திருந்தால் போதும் ஏக அமர்க்களமாயிருக்கும். யாரேனும் ஒருவர் ஆசிரியருக்கு பகுதிக்கு கடிதம் எழுதுவார். தெருவுக்குத்தெரு 4 பேர் கூடும் இடங்களில் எல்லாம் இதே பேச்சாயிருந்திருக்கும். புலம்பித்தள்ளியிருப்பார்கள் எல்லோரும். ஆனால் கடவுள் பெயரால் நடக்கும் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகிவிடுகிறது இங்கே. இதை விமர்சித்தால் உடனே நம்மை எதிர்கொள்ளப்போவது ஒரு விரோத பாவம். அதை தவிர்க்க இவ்வகையான வன்முறைகளோடு நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

Tuesday, February 13, 2007

அடுத்தது?????

பனிப்புகை மூடிய பாதை போல,
மறைந்த எழுத்தாளர் பாதியில் நிறுத்திப்போன தொடர்கதை போல,
வாழ்வின் எல்லா திசைகளிலும் மறைக்கும் திரைகள் தொங்குகின்றன.
காற்று அசைவற்று நிற்கையில் சலனமற்றிருக்கும்
பாய்மரக்கப்பலொன்றின் பயணி போல்திசையறியாது திணறுகிறேன்.
அடுத்த நொடி பற்றிய யூகங்களும் பயங்களுமாய் கழிகிறதென் வாழ்வு.

Sunday, February 04, 2007

கல்பனா சாவ்லாவும் தாய்மையும்

மங்கையர் மலர் புத்தகத்தில் வெகு நாட்களுக்கு பிறகு கல்பனா சாவ்லாவைப்பற்றி ஒரு கட்டுரை. அவரது சொந்த ஊரில் அவர் பெயரில் ஒரு டிரஸ்ட் அமைத்து அதன் மூலம் பெண் கல்விக்கு தன்னாலானதை செய்து வருகிறாராம் அவரது தந்தை. நல்ல விஷயம். ரொம்ப ரொம்ப நல்ல விஷயம். அடுத்ததா அவர் பெண்ணைப்பற்றி உயர்வா பல விஷயங்கள் சொன்னார். டிஷ் வாஷர் உபயோகிச்சா தண்ணீர் ரொம்ப செலவாகும்னு சொல்வாங்களாம். ஷு பழுதான அதை சரி செய்து உபயோகிப்பாரம், அது கூடுதல் நேரம் மற்றும் பண செலவு தரும்னாலும் கூட. புதுசா ஒண்ணு வாங்கணும்னா அதுக்காக இன்னொரு மிருகம் கொல்லப்படுமேன்றத்துக்காக. தண்ணீர், பணம், பெட்ரோல் இப்படி எதுவானாலும் சிக்கனமா செலவழிப்பாரம். கஞ்சத்தனத்தினால் இல்லீங்க, சுற்றுபுறச்சூழல் அக்கறையினால. இதெல்லாம் கூட நல்ல விஷயங்கள்தான். யாரு இல்லைன்னா?

ஆனா அதுக்கப்புறமா வந்தது பாருங்க ஒரு முக்கியமான விஷயம். பண்பாட்டை கட்டிக்காக்கும் பாரத பெண்ணின் அருங்குணத்தை டெஸ்ட் செய்யும் கேள்வி - தான் தாய்மையடையலயென்னு அவங்க வருந்தினாங்களா? இது இது இதுதான்ங்க முக்கியம். இதுல அந்த கேள்விக்கு முன்னாடி ஒரு டிஸ்கெள்ய்மர் வேற - கேட்க தயக்கமா இருந்தாலும் கடைசியில் அந்த கேள்வியை கேட்டே விட்டோம். இந்த தயக்கம்ன்றாங்களே, அது அடுத்தவங்களோட அந்தரங்கத்தை பற்றி கேட்கப்போறோமென்னு இருக்குமுன்னு நினைக்கிறீங்களா? நிச்சயமா இருக்காது. அப்போ தயக்கம் எதுக்காகன்னு கேட்கறீங்களா? தாம்பத்ய வாழ்க்கையின் அந்த ஈடு செய்ய முடியா இழப்புக்கான முழுமுதல் காரணகர்த்தா இந்த அம்மாதானே? இதுக்காக அந்த நிருபர் போய் சாவ்லா தம்பதியினர் இருவரது மருத்துவ அறிக்கைகளையும் படிச்சுட்டு வந்தாரான்னு அரைவேக்காட்டுத்தனமால்லாம் கேட்கக்கூடாதக்கும். ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்கலையா, அந்த அம்மா மலடி. அம்புட்டுதேன். (என்னது? மலடிக்கு ஆண்பால் பெயர் என்னவா? இப்படியெல்லாம் அடங்காபிடாரித்தனமா கேள்வி கேட்கற பெண்ணியவாதியா நீ? இரு இரு உன்னையெல்லாம் யாரு கல்யாணம் பண்றங்கன்னு பார்க்கறேன். அப்படி எதுனா இளிச்சவாயன் வந்து கட்டினாலும் அவன் உன்கிட்ட ரொம்ப அவஸ்தைப்படறான்னு எதுனா ஒரு தண்ணி பார்ட்டியில உளறுவான். இல்லைல்லய்யா, நான் அவளோட சந்தோஷமாத்தான் இருக்கேன்னு சொன்னாக்கூட எனக்கு அந்த ஆள் புலம்பரா மாதிரித்தான் கேட்குமாக்கும். அப்போ அதை எல்லார்கிட்டயும் ஜல்லி சாரி சொல்லி உன் மானத்தை வாங்கறேன் பாரு அப்படின்னு நம்ம ஆண்குல சிங்கங்கள் எல்லாம் கர்ஜிக்கர சத்தம் கேட்குது. அதுனால கம்மிங் பேக் டு த பாய்ன்ட்... நம்ம நிருபர் குழந்தையின்மை காரணமா கல்பனாவுக்கு இருந்திருக்க வேண்டிய குற்றவுணர்ச்சிய(இதை அவங்க தாய்மைக்கான ஏக்கம்னு டீசென்டா சொல்வங்களாக்கும்) பத்தி தமிழ் கூறும் நல்லுலகுக்கு தெரிய வைக்கவேண்டிய மகத்தான தனது பொறுப்பை வெற்றிகரமா நிறைவேற்றிட்டார். அவங்கப்பாவும் அவரோட எதிர்பார்ப்பை வீணாக்காம அவளுக்கு வருத்தம் இருந்துதான் இருந்தாலும் அதை நினைச்சு உடைஞ்சுடாமல் அவள் வேலைல தன்னை ஈடுபடுத்திக்கிட்டான்னார் பாருங்க, அப்போத்தான் எனக்கு மூச்சே வந்ததாக்கும்.

இதோட அந்த கட்டுரை முடிஞ்ட்சுட்டதுன்னு நினைக்கிறீங்களா? எந்தூருங்க உங்களுக்கு? பெண்களுக்காக எழுதற ஒரு கட்டுரை 'இதனால் அறியப்படும் நீதி யாதெனின்' அப்படின்னு முடியலைன்னா உம்மாச்சி கண்ணை குத்திடாதா? அந்த வழக்கையொட்டி அந்த கட்டுரையாளர் வாழ்க்கைல ஒரு பெரிய ஏமாற்றம் நேர்ந்தாலும் அதை சமாளித்து வேறு ஒரு துறையில் தன் திறமையை நிரூபித்த கல்பனா எல்லா பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணம்ன்ற ரீதியில் ஏதோ சொல்லி முடிச்சுட்டார். இங்க அர்ன்னு விகுதி போடறதால அந்த நிருபர் ஆணாயிருப்பார்னு நான் நினைக்கறதா நீங்க நினைச்சுகிட்டு எனக்கு தயவு செஞ்சு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடாதீங்க ப்ளீஸ். அது பெண்ணாயிருப்பதற்குத்தான் 98% வாய்ப்பு இருக்கு. அதை நான் பணிவன்போட தாழ்மையோட ஒத்துக்கறேன். ஆனா இந்த கருத்துருவாக்கம்ன்றது எங்கேருந்து வந்ததுன்னு ஒரு நிமிஷம் யோசிச்சுப்பாருங்களேன். சாதீயம் பத்தி பேசும்போது மற்ற சாதிகளின் ஆதிக்க மனோபாவத்துக்கும் பார்ப்பனர்கள்தான் காரணம்னு சொல்றவங்ககூட வரதட்சிணையா? அதை பையனோட அம்மாக்கள்தானே அடம் பிடிச்சு வாங்கறாங்க, இதுல அந்த மாப்பிள்ளை புள்ளாண்டான் என்ன பண்ணுவான் பாவம்னுவாங்க. இந்த விஷயத்துல கூட சிம்பிளா, அந்த கட்டுரை வெளிவந்தது ஒரு பெண்கள் பத்திரிக்கைல, எழுதினது ஒரு பெண் படிக்கப்போறதும் பெரும்பாலும் பெண்கள். இதுக்கு கூட ஆண்களை இழுக்கலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதன்னு ஒரு கேள்விய கேட்கப்போற மகாஜனங்களே, தன் எஜமானிடம் தனக்கு கிடைக்கபோகும் சில சலுகைகளுக்காக சக தொழிலாளிகளை வதைக்கும் பண்ணை நிர்வாகிகளை(கார்வாரி என்று அழைப்போம்) போன்றதில்லையா இது? இல்லை என்பவர்களுக்கு என்னால் தர இயலும் ஒரே பதில் - தூங்கறா மாதிரி நடிக்கறவங்களை எழுப்ப முடியாது. நம்ம தமிழ் சினிமாவில் அடிக்கடி உபயோகிச்சு தேஞ்சு போன டயலாக்தான். என்ன செய்ய? வேற எதும் கைவசம் இல்லை. அவ்ளோதான்.