Friday, March 07, 2008

சிதம்பரம் - சில எண்ணங்கள்

தில்லையில் நடந்து கொண்டிருக்கும் கூத்தையெல்லாம்(சிவனுடையதை அல்ல, அவனைச் சுற்றியிருப்போரது கூத்தைச் சொல்கிறேன்) பார்க்கும் போது கொள்கைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாது நடந்து கொள்வதில் அரசியல்வாதிகளுக்குத்தான் முதலிடம் என்று நினைத்திருந்ததை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் நம்பும் அல்லது நம்புவதாகச் சொல்லும் ஒரு கொள்கைக்கு எதிராக இத்தனை பகிரங்கமாகக்கூட இவர்களால் நடந்து கொள்ள முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

பாரதி தனது வசன கவிதையொன்றில் காற்றே சிவனின் காது என்கிறார். எனில் காற்றோடு கலக்கும் ஒவ்வொரு வார்த்தையும்(கெட்ட வார்த்தையென்று மனித மனது வரையறுத்து வைத்திருக்கும் வார்த்தைகள் உட்பட) சிவனது காதில் நேரடி ஒலிபரப்பாகச் சென்று சேர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இன்ன மொழிதான் அவன் காதில் கேட்கலாம் இன்னது கேட்கக்கூடாதது என்றெல்லாம் அறிவிப்போரை என்னவென்பது? அதையும்விட அதிக நகைப்புக்குரிய விஷயம் ஓதுவார் ஆறுமுகச்சாமி அவர்கள் அங்கே வந்து நின்று பதிகம் பாடுகையில் நடராஜரை கூட்டமாக மறைத்துக் கொண்டு நின்றார்களாம் தில்லை வாழ் அந்தணர்கள் :)))))))))) எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், அவனது சந்நிதியில் அவனது பக்தனொருவன் பாடும் பாடலை அவன் காதில் விழாதவாறும் அவன் கவனத்தில் பதியாதவாறும் கூட்டமாய்க் கூடி நின்றாலே தடுத்துவிட முடிகிறதல்லவா உங்களால்? நாத்திகம் பேசுபவர்கள் இறைவனின் சிலையை அவமதித்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும் - அதுதான் அவர்கள் தங்கள் கொள்கைக்குத் தரும் மரியாதை. ஆனால் ஆத்திகத்தையே கட்டிக்காப்பதாகக் கூறிக்கொள்பவர்களே இறைவனை அவமதிப்பதை, அவனைக் குறைத்து மதிப்பிடுவதை எங்கே போய்ச்சொல்வது?

அன்பே சிவமென்பர். அப்படி அன்புருவானவனை அர்ச்சித்துவிட்டு , சித்சபை மேடையேறிப் பாட முயன்ற 79 வயது முதியவரை அடித்துத் துரத்த எப்படித் துணிகிறார்கள்? சிற்றம்பலம் கருவறைக்கு நிகரானது - அங்கே யாரும் நுழையக்கூடாது என்பது பொதுவிதியானால் சரி. ஆனால் காசு கொடுத்தவர்கள் மட்டும் வரலாம் என்றால் அதென்ன சுற்றுலாத்தலமா? துஷ்டநிக்ரஹ சிஷ்டபரிபாலனம் செய்பவனுக்கு அவன் கண்ணெதிரே தான் செய்யும் அநியாயங்கள் மட்டும் தெரியாதென்று எப்படி நம்புகிறார்கள் இவர்கள்? ஒருவேளைத் தான் செய்யும் சேவைகளுக்காக மகிழ்ந்து தங்கள் செயல்களைக் கண்டு கொள்ளாது விட்டுவிடுவான் என்று எண்ணமா? அது இன்னமும் மோசம் - லஞ்சம் வாங்கிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் காவல் அதிகாரி ரேஞ்சுக்கு சாமியையே கொண்டு வருவது இல்லையோ அது?

இந்த விஷயத்தில் மட்டும்தான் என்றில்லை - இதற்கு முன்னரே கூட பல சந்தர்ப்பங்களில் கோவில்களில் நடக்கும் சகிக்க முடியாத நேர்மையின்மையின் வெளிப்பாடுகளைக் காணும் போதெல்லாம் தோன்றுவதுதான் - கடவுளுக்கு வெகு அருகிலிருக்கும் இவர்களே கடவுளை இவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார்களே, பின் மற்றவர்களுக்கு மட்டும் எப்படி நம்பிக்கை வருமென்று. அதிலும் இப்போது ஓதுவார் ஆறுமுகச்சாமி பாடுகையில் இவர்கள் சிவனை மறைத்து நின்றதைக் கேட்டதும் சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை. ஒரு வேளை கலி முற்றுவது என்பது இதுதான் போல - நிச்சயமாய் நாத்திகப் பிரச்சாரங்கள் அல்ல.

பி.கு: கொஞ்ச நாளைக்கு முன்னால லீனா மணிமேகலை ஒரு கல்லூரியின் உடைக் கட்டுப்பாடு விஷயத்தை எதிர்த்துப் பேசினப்ப நிறைய நடுநிலைவியாதிங்க ஓடி வந்து "அது அவங்க இடம். அவங்க சொல்றா மாதிரி நடக்கறதான அங்க போகணும். இல்லைன்னா வெளிய வந்ததோட நிப்பாட்டிக்கணும். எதுக்கு இந்த அம்மா சலம்புது?"ன்னு சொல்லிகிட்டுத் திரிஞ்சாங்க. இப்பவும் அவங்க எல்லாம் அதையேதான் சொல்றாங்களான்னு தெரிஞ்சுக்க ஆசை.(என்ன செய்யறது இது மாதிரி எதுனா புடலங்காய் சமாச்சார பிட் இல்லாம் பதிவே எழுத வர மாட்டேங்குது. வியாதி முத்திடுச்சு போல. :))))) )

11 comments:

said...

ஒரு வேளை பல நூற்றாண்டுகளாக கடவுளுக்கு அருகிலேயே நின்று பல சேவை(வேலைகளையும்)களை செய்து, கடவுளை நன்கு அறிந்து தெளிந்து கொண்டதினால் வந்த விழிப்புற்ற நிலையாக இருக்குமோ... :)).

said...

லஷ்மி!பணம், காசு புரளும் அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் பூஜை செய்பவர்களுக்கு அது தொழில். தொழிலுக்கு மூலதனம்
அங்குள்ள கடவுள். அவ்வளவே! பூஜை செய்பவர்கள் என்றாவது ஒரு நாளாவது தனக்கோ அல்லது தன் குடும்பத்தினர் நலனுக்கோ
அந்த கடவுளை வேண்டியிருப்பார்களோ என்பது சந்தேகமே :-) ஜெயமோகனின் "ஏழாவது உலகம்" படித்திருக்கிறாயா?

said...

வழக்கம் போல் 'நச்'சென எழுதியிருக்கிறீர்கள்.

//எதிர்த்துப் பேசினப்ப நிறைய நடுநிலைவியாதிங்க ஓடி வந்து //

அவங்க எல்லாம் புரட்சியாளர்ன்னுல சொல்லிகிட்டிருந்தாங்க? :-))

said...

//ஒரு வேளை கலி முற்றுவது என்பது இதுதான் //

மிக உண்மை.
இதைச் சம்பந்தப்பட்டவர்கள் வாசிப்பர்களோ தெரியாது.
வாசித்தால் உணர வாய்ப்புண்டு.

said...

//கொஞ்ச நாளைக்கு முன்னால லீனா மணிமேகலை ஒரு கல்லூரியின் உடைக் கட்டுப்பாடு விஷயத்தை எதிர்த்துப் பேசினப்ப நிறைய நடுநிலைவியாதிங்க ஓடி வந்து "அது அவங்க இடம். அவங்க சொல்றா மாதிரி நடக்கறதான அங்க போகணும். இல்லைன்னா வெளிய வந்ததோட நிப்பாட்டிக்கணும். எதுக்கு இந்த அம்மா சலம்புது?"ன்னு சொல்லிகிட்டுத் திரிஞ்சாங்க. இப்பவும் அவங்க எல்லாம் அதையேதான் சொல்றாங்களான்னு தெரிஞ்சுக்க ஆசை.(//

அப்போ இந்த சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் இடம் .ஆறுமுகசாமி மற்றும் மற்ற இந்த்துக்களுக்கு அங்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?

said...

லக்ஷ்மி கடவுளுக்கு நாம் ப்ரோகர் வைக்கும் வரயில் இதெல்லாம் இருக்கும்..தில்லையிலே விஷயமே.. "ஒண்ணும் இல்லை "என்பதுதானாம்..அப்புறமும் ..இப்பிடின்னா..

உடுப்பியில இன்னும் ஜோக்தான்..அங்க கனகதாசர் இந்த மூஞ்ஜிங்க எல்லாம் பாக்கக் கூடாதுன்னு சொன்னதுக்காக ஜன்னலில நின்னு அழுதாரு..அப்புறம் க்ரிஷ்ணன் வண்து காட்ச்சி குடுத்தாருன்னு கதையெல்லாம் வுட்டுட்டு இன்னமும் சில சம்பிரதாயங்கள் எல்லாம் செய் வாங்க..கவலைப்படாதேங்க ..கடவுளூக்கு தெரியும் யாரை கிட்ட சேர்க்கணும்ன்னு...

said...

தெகா, உஷா, ஸ்ரீதர் நாராயணன், யோகன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தெகா, உஷா - எல்லா அர்ச்சகர்களுமே நம்பிக்கையின்றித்தான் செயல்படுகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. வருமானம் அதிகம் இல்லாத கோவில்களில் இருக்கும் பூசாரிகளோ அர்ச்சகர்களோ ஒரளவு அத்தெய்வங்களிடம் பற்றோடு இருப்பதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அதிகப் பணப்புழக்கமுடைய கோவில்களில்தான் இவர்களின் அட்டகாசமும் அதிகமாகவே உள்ளது.

உஷா, ஏழாவது உலகம் படிக்கவில்லை. புத்தக விமர்சனங்கள் படித்ததிலிருந்தே அதைப் படிக்கும் அளவுக்கு மனத்திடம் எனக்கில்லை என்று உணர்ந்து தவிர்த்துவிட்டேன். :)

ஸ்ரீதர் - புரட்சி, பிற்போக்கு, முற்போக்கு, பக்கவாட்டுப் போக்கு எல்லா வகைச் சிந்தனையாளர்களுக்கும் பெரும்பாலும் பெண்ணுரிமை என்று வரும்போது மட்டும் ஜன்னி கண்டுவிடுகிறது. என்ன செய்வது?

யோகன் - அடுத்தவர் சொல்வதையெல்லாம் புரிந்து கொள்ளவும், அப்படியே புரிந்து கொண்டாலும் அதை ஏற்றுக் கொள்ளவுமெல்லாம் ரொம்பவே பெரிய உள்ளம் வேண்டும் யோகன். அதெல்லாம் இவங்களுக்கு இருக்கும்னு எனக்குத் தோணலை. இருந்தாலும், அப்படி நடந்தால் நல்லா இருக்கும்தான்.

said...

அடடா.... ஜோ, பத்தவச்சிட்டீங்களா? ;) நான் சொல்ல வந்தது ஒரு இடத்துல அதிகாரத்துல இருக்கறவங்க போடற கண்டிஷன் எப்படிப் பட்டதா இருந்தாலும் அதைக் கேள்வி கேட்க உரிமையில்லைன்னும், ஒன்னு அக்கட்டுப்பாடுகளுக்குட்பட்டு இருக்கணும், பிடிக்கலைன்னா வெளியேறிடணும்னும் கருத்துச் சொன்னாங்களே, அதே லாஜிக் இப்பவும் applicable-ஆன்னுதான் கேக்கறேன். கோவில் எல்லாரும் சம உரிமையோட புழங்க வேண்டிய இடம்ன்றது எவ்ளோ முக்கியமோ அதைவிட நூறு மடங்கு கல்விச்சாலைகள் எல்லாருக்கும் பொதுவானவையா, பாரபட்சமில்லாதவையா இருக்கணுமில்லையா? அது ஏன் அப்ப ஒருசிலருக்குத் தோணலைன்றதுதான் என்னோட கேள்வி. கோவில் யாரோடதுன்னெல்லாம் நான் எதும் கருத்த்துச் சொல்லலை -அத்தோட யாரோட நிர்வாகத்துல இருந்தாலும் அது எல்லாருக்கும் accessable-ஆ இருக்கணும்ன்றதைத்தான் நான் என்னாலியன்றவரை இப்பதிவில் வலியுறுத்தியிருக்கிறேன்.

said...

சீதா, கனகதாசர் மட்டுமா? இங்கயும் ஏற்கனவே நந்தனார், திருப்பாணாழ்வார்னு நிறைய கதைகள் உண்டு. கடவுளே இவங்களுக்குச் சொல்லி சொல்லி அலுத்துப் போய்தான் கல்லாவே நின்னுட்டார் போல... அதிலும் கடவுளே வந்து சொன்னப்புறமும் நந்தனாரை தீயிலிறக்கி சுத்தப்படுத்தியவர்களின் வழிவந்தவர்களிடம் இன்று மட்டும் என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்?

வடக்கிலுள்ள தலங்களிலாவது பரவாயில்லை - எல்லோரும் அருகில் போய் வழிபடலாம். அந்தந்த வேளைக்குரிய பூஜைகளை மட்டுமே அர்ச்சகர்கள் வந்து செய்வார்கள். தெற்கே இக்கட்டுப்பாடுகள் ரொம்பவே இறுக்கமாகத்தான் இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் இது போன்ற இடைத்தரகர்கள் கொண்ட அமைப்பு ஒழியும் போதுதான் உண்மையான ஆன்மீகம் தழைக்கும்.

said...

//கொஞ்ச நாளைக்கு முன்னால லீனா மணிமேகலை ஒரு கல்லூரியின் உடைக் கட்டுப்பாடு விஷயத்தை எதிர்த்துப் பேசினப்ப நிறைய நடுநிலைவியாதிங்க ஓடி வந்து "அது அவங்க இடம். அவங்க சொல்றா மாதிரி நடக்கறதான அங்க போகணும். இல்லைன்னா வெளிய வந்ததோட நிப்பாட்டிக்கணும். எதுக்கு இந்த அம்மா சலம்புது?"ன்னு சொல்லிகிட்டுத் திரிஞ்சாங்க. இப்பவும் அவங்க எல்லாம் அதையேதான் சொல்றாங்களான்னு தெரிஞ்சுக்க ஆசை//

uhhh.. Good one :)( should I say good shot?) ;).

said...

While reading this article one small question is coming up.. Is it really a God's dwelling place?