Saturday, September 27, 2008

வாழ்த்தலாம் வாங்க.....

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையில் என்னுடையதேர்வு எப்போதும் பாடல்கள், இல்லையென்றால் காமெடிநிகழ்ச்சிகள் மட்டுமே. எங்கள் வீட்டு ரிமோட்டுக்கு வாய் இருந்தால் கதறி அழுமளவு அதனை வேலை வாங்குவதுண்டு.அதிலும் பாடல்களுக்கு நடுவே தொகுப்பாளரை யாரேனும் தொலைபேசியில் அழைத்து "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றோ, இல்லை "அய்யோ, என்னால லைன் கிடைச்சதை நம்பவே முடியலைங்க, ரொம்ப சந்தோஷமா இருக்குங்க" என்றோ வழியத் தொடங்கினால்.. அலறி அடித்து அடுத்த இசை அலைவரிசையைப் பிடிக்க வேண்டியது. அங்கும் இதே கதை என்றால் வரிசையாக எல்லா அலைவரிசைக்கு ஒரு முறை போய் எங்கேனும் காமெடித் துணுக்குத் தோரணங்கள் ஒடுகிறதா என்று பார்த்துவிட்டு முதல் அலைவரிசைக்கே மறுபடி வந்தால் அங்கே அதற்குள் பாடல் ஆரம்பித்திருக்கும். இந்த அற்புதமான பாதுகாப்பு வளையத்தை சென்ற வாரத்தில் ஒரு நாள் காலையில் மறந்து போனதன் விளைவாக என் இரத்த அழுத்தத்தை ஏற்றிக் கொள்ள வேண்டியதாகிப் போனது.

ஒரு பெண்மணி தொகுப்பாளரை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். அது வாழ்த்துக்களைச் சொல்வதற்கான நிகழ்ச்சி. யாரும் யாருக்கும் வாழ்த்துச் சொல்லலாம். பின்னர் யார் யாரோ உழைத்துச் செய்த ஒரு பாடலையும் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல நமக்குப் பிடித்த யாருக்கு வேண்டுமானாலும் 'டெடிகேட்' செய்து கொள்ளலாம். யார் கேட்பது? சரி, விஷயத்திற்கு வருவோம்.அந்தப் பெண்மணி யாருக்கு எதற்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார் தெரியுமா? தனது உறவுக்காரப் பெண்ணொருவருக்கு அவரது மஞ்சள் நீராட்டு விழாவிற்கான வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிகளின் வழக்கமான சம்பிரதாயப்படி ஊர், பேர், தெரு, வீட்டு எண் உட்பட சகல அடையாளங்களோடும்தான். ஏற்கனவே இங்கே சில இடங்களில் மஞ்சள் நீராட்டு விழாவிற்கான வினைல் போர்டுகளை (பெண்ணின் புகைப்படத்தோடு)பார்த்து அதிர்ந்திருக்கிறேன். அதுவேனும் அந்த வழி போகிறவர்களின் கண்ணில் மட்டும்தான் படுமென்றால், இதுவோ இன்னும் பிரமாதமாக உலகம் முழுக்கவே வீடு வீடாகச் சென்று விஷயத்தை தெரிவித்து விடுகிறதில்லையா? என்ன ஒரு நல்ல உபயோகம் பாருங்கள் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிற்கு?, எம்.ஆர்.ராதா ஒரு படத்தில் குழாய்ப் புட்டு பற்றி அவரது அம்மா சொன்னதும் சொல்லுவார் - "வெளிநாட்டுக்காரன் நீராவியப் பாத்தா ரயில் உடணும்னு யோசிக்கறான். நம்ம ஆளுகளோ புட்டு அவிக்கலாம் இட்டிலி அவிக்கலாம்னு யோசிக்கறான். எங்கேர்ந்துடா நாம முன்னேற முடியும்?"னு அவருக்கே உரித்தான ஏற்ற இறக்கங்களோடு கேட்பார். அந்தக் காட்சிதான் நினைவில் வந்து போனது.

பிறகு இது குறித்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கையில் பெண் ஒருத்தி உடல் ரீதியான வளர்ச்சியை பகிரங்கப் படுத்தலின் பின்னாலிருக்கும் தேவைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஆரம்பத்தில் எங்கள் வீட்டில் ஒரு பெண் திருமணத்திற்குத் தயார் என்று ஊராருக்கு அறிவிக்க, அதன் மூலம் அவளுக்கான வரன்கள் தேடி வர என்று காரணங்கள் இருந்திருக்கக் கூடும். அதே நேரத்தில் பால்ய விவாகத்தின் தொடர்ச்சியாக பெண் பருவமெய்தும் முன், திருமணம் செய்து விட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளும் சில சமூகங்களில் இருந்திருக்கலாம். அதனாலேயே திருமணத்திற்கு முன் பெண் பூப்பெய்துவிட்டால் அதை மறைத்து வைப்பது என்பதும் வழக்கத்திலிருந்திருக்கிறது.

இன்று பிராமண சமூகத்தில் இந்த சடங்கு பெரிதாகக் கொண்டாடப் படாமைக்கு காரணம் வெகு சமீபம் வரை (ஒரு மூன்று தலைமுறைக்கு முன்னால் வரை) பால்ய விவாகப் பழக்கம் வெகு தீவிரமாக அமலில் இருந்ததுதான். பால்ய விவாகம் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட பின் (சாரதா சட்டம் என்று நினைக்கிறேன்) அது வெகுவாக குறைந்திருந்த காலகட்டத்திலும் கூட, சாஸ்திரத்துக்காக பெண்ணின் திருமணத்திற்கு பிறகு முதல் முறை மாதவிலக்கான பின்பே அப்பெண்ணுக்கு சடங்குகள் செய்து பின், சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்வது என்பதும் வெகு காலம் வரை பழக்கத்திலிருந்தது. எனவே அவர்கள் பெண்ணின் பூப்பெய்தல் சடங்கை பெரிய அளவில் கொண்டாடுவதில்லை. அது தவிர்த்துப் பார்த்தால் பெரும்பாலான சமூகங்களில் இந்த சடங்கு கொண்டாடப்பட்டே வந்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக மாமா, அத்தை போன்றவர்களின் பங்களிப்பு இது போன்ற சடங்குகளில் அதிகமாகவே இருக்கும். அதற்கு காரணம் கண்டுபிடிப்பதொன்றும் பெரிய விஷயமல்ல - பெரும்பாலும் இந்த இரு தரப்புகளிலும் திருமணத்திற்குப் பையனிருந்தால் அங்கேயே முடித்துவிடலாம் என்பதுதான் காரணம். கண்டம் தாண்டியும் மாப்பிள்ளைகளைத் தேடி சலித்துத் தர இணையதளங்கள் உள்ளிட்ட எத்தனையோ வசதி வாய்ப்புகள் உள்ள இன்றோ இந்த சடங்குக்கான தேவைகள் 99% இல்லாது போய்விட்டது. ஆனாலும் இந்த வெற்றுச் சடங்குகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதும், அதை தனது செலவு செய்யும் சக்தியை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக மாற்றுவதும், வீண் ஆடம்பரமும் வெட்டி ஜம்பமுமன்றி வேறில்லை.

அத்தோடு அந்த பதின்ம வயதுப் பெண் இந்த சடங்குகளின் பின் வெளியே வரும் போது எதிர்கொள்ள வேண்டியிருக்கக் கூடிய சீண்டல்கள் பற்றியெல்லாம் எவ்வித அக்கறையுமற்று இன்னும் எத்தனை நாள் இப்படியெல்லாம் அச்சிறுமிகளை தர்மசங்கடப் படுத்திக் கொண்டிருக்கப் போகிறோம்?

9 comments:

said...

டெய்லி சன் மியூசிக்ல அந்த நிகழ்ச்சிய பாருங்க பி.பி குறைஞ்சிடும்.

said...

// யாரும் யாருக்கும் வாழ்த்துச் சொல்லலாம். பின்னர் யார் யாரோ உழைத்துச் செய்த ஒரு பாடலையும் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல நமக்குப் பிடித்த யாருக்கு வேண்டுமானாலும் 'டெடிகேட்' செய்து கொள்ளலாம்//

ஹி ஹி ஹி :) :)

said...

அடப்பாவிங்களா..ஹ்ம்.. ஏற்கனவே 'எனக்கு அந்த பெண்ணை பிடிச்சிருக்குன்னு" தூது அனுப்பற சில வாழ்த்து நிகழ்ச்சியை ஊருக்கு வந்தப்ப பார்த்து அதிர்ந்து போயிருந்தேன்..இப்ப இதுவேறயா..?

said...

பழக்கம்


மயில் போன்ற
அட்டை ஜோடனையின் நடுவே
அமர்ந்திருக்கிறாள் சிறுமி.

முகம் மலர்ந்து
வெட்கி ஏற்றுக்கொள்கிறாள்
மாய்ந்து மாய்ந்து செய்யபடும் அலங்காரங்களையும்
சூட்டப்படும் மலர்களையும்.

குவியும் பரிசுகளை பிரிக்கும் ஆவலில்
பந்தி முடிந்து தாம்பூலம் நிறைந்து
விடைபெறும் கூட்டத்தை
கையசைத்து வழியனுப்புவாள்.

பாவடையில் கரைபடாமல்
பள்ளிக்கு போய்வர
இன்னும் நாளாகலாம்.


இது கவிஞர் அனிதாவின் கவிதை உங்கள் பதிவை படித்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது.

said...

நல்ல பதிவு ...

நல்ல கருத்து

;-)

said...

"பூப்புனித நீராட்டு சடங்கு"

என் சொந்த பந்தங்களில்... வசதியானவர்கள் போட்டோ எடுக்க ஆள் புக் பண்ணிவிடுவார்கள்.

நம்மளை மாதிரி ஏழை, பாழைகள்
சடங்கு நிகழ்ச்சிக்கு என்னை போட்டோ எடுக்க அன்பு கட்டளையிடுவார்கள். நானும் எளிய கேமரா ஒன்றை நண்பர்களிடம் இரவல் வாங்கி எடுப்பேன்.

வரிசையாய் தட்டு தூக்கி வருவது முதல்.... மாமன் சீலை தந்து, வாசலில் எல்லா சடங்கும் சுத்தும் வரை பொறுமையாய் காத்திருந்து எடுக்க வேண்டியிருக்கும். எல்லாம் முடிய 11 மணி ஆகிவிடும்.

எல்லாம் பிரிண்ட் பண்ணி, எடுத்துக் கொடுத்தால், "எல்லாம் இருட்டா இருக்கு" சடஞ்சு சொல்வார்கள். நமக்கு அப்படி ஒரு கோபம் வரும்.

இருட்டுல தாண்டா சடங்கு சுத்துனங்க! அப்புறம் எப்படிப்பா வெளிச்சமா இருக்கும் என்பேன்.

said...

இந்த ரிமோட்டை அழ வைக்கிற பழக்கம் உங்களுக்கு மட்டுமில்லை லக்‌ஷ்மி, நிறைய பேருக்கு இருக்கு.

அதெல்லாம் பாத்தா வர்ற டென்சனை விட, அதை ரசிச்சு உக்காந்து பாத்துக்கிட்டு இருக்கானெங்களே, அவனுங்களை பாத்தா வரும் பாருங்க ஒரு கொலை வெறி அதை எங்கேயும் சொல்லி மாளாது.
பக்கத்துலியே இருக்கற பொண்டாட்டிகிட்ட நேரில வாழ்த்து சொல்லாம, பாட்டை டெடிகேட் பண்ணுறானுங்க. இதெல்லாம் பராவாயில்லை, சில சமயம் அவனுங்க பண்றதை பாத்தா புரோக்கர் வேலை பாக்கற மாதிரியே இருக்கும். என்ன கொடுமையோ!!

said...

இது வரைக்கும் போஸ்டர் அடிச்சித்தான் அசிங்கப்படுத்திட்டு இருந்தானுங்க. இப்ப டீ.வி. வரைக்குமா?? வெளங்கிடும்...

நல்ல கருத்துள்ள பதிவு!!! - பாட்டு டெடிக்கேட் பண்ற மேட்டர தவிட‌

said...

nallaa ezhuthi irukkireerkal.