Friday, December 28, 2007

வீணா தணிகாச்சலம் ... இல்ல இல்ல.. லீனா மணிமேகலையின் தேவதை

மன்னிக்கணும் மக்களே, ரொம்ப நீளமான தலைப்புக்கு.. இது ஒரு சுட்ட பதிவு - ஊதிட்டு படிக்கணுமானெல்லாம் கேக்காதீங்க மக்கா... தோழி.காம் ல வெளியான ஒரு கட்டுரைய இங்கன நகலெடுத்து ஒட்டியிருக்கேன்(காப்பி + பேஸ்ட் :) ) இதுக்கு அவங்க கொடுத்திருக்கற தலைப்பென்னவோ - விதிவிலக்குகள்: முன்மாதிரிகள்: அப்படின்றதுதான். ஆனா அப்படி தலைப்பு வச்சா நம்ம வலையுலக மகாஜனங்களுக்கு பதிவோட உள்ளடக்கம் என்னான்னு தெரியாததால உள்ள எட்டிப் பாக்க சுவாரசியம் வராதே, அதான் ஊரோடு ஒத்து இப்படி ஒரு நச் தலைப்பு...

லீனா மணிமேலையின் தேவதை ஆவணப் படத்தில் இடம்பெற்ற மூன்று பெண்கள் சற்றே வியப்பையும் ஆச்சரியத்தையும் சில கணங்களில் வருத்தத்தையும் தரும் பெண்களாக எனக்குத் தெரிந்தார்கள்.

பெண் இருத்தல் குறித்த தனது கவனத்தைத் தொடர்ந்து தன் படைப்புகளில் பதிவுசெய்துவரும் லீனாவின் இந்தப் படமும் பெண்களைக் குறிப்பாக நம்மிடையே விதிவிலக்குகளாக வாழ்ந்து வரும் பெண்களைப் பற்றியது தான்.

பெண்களுக்கென சமூகம் சில வரையறைகளை வைத்திருக்கின்றது. குடும்பமும் சமூகமும் பெண்ணின் இயங்கு வெளியை எப்பொழுதும் ஒரு எல்லைக்குள்ளாகவே தீர்மானித்திருக்கின்றன. ஆணும் பெண்ணும் சமமாகப் பணிபுரியும் நிலைக்கு இன்று வந்திருந்தாலுங் கூட பெண் இதையெல்லாம் செய்யவே கூடாது என்றும் சில இருக்கின்றன.

வீட்டிற்கு வெளியே செய்யப்படும் பணிகளில் மட்டுமல்ல இந்தப் பாகுபாடு. வீட்டிற்குள்ளும் ஆணுக்கெனச் சில பணிகளும் பெண்ணுக்கெனச் சில பணிகளும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. சமையல், வீட்டு வேலைகள், குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாத்தல் என்பன போன்ற பணிகள் பெண்ணுக்கே உரியவையாகவும் வெளியே செல்லுதல், நிர்வகித்தல், முக்கிய முடிவுகளை எடுத்தல் போன்றவை ஆணுக்குரியவையாகவும் இன்றும் தொடர்கின்றன.

ஆண்பிள்ளை தான் பெற்றோருக்குக் கொள்ளி வைக்க வேண்டும். ஆண் குழந்தை இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது உறவுக்காரர் வைப்பாரே தவிர இறந்தவரின் மகளைக் கொள்ளி வைக்க அனுமதிப்பதில்லை இந்தச் சமூகம்.

இந்தச் சூழலில் ஒரு பெண் சடலங்களைப் புதைப்பதைத் தனது வேலையாகக் கொண்டிருந்தால் அவர் வியக்க வைக்கும் மனுஷி தானே! இன்னொருவர் கால்களில் சலங்கை கட்டிக் கட்டிக் கொண்டு இறப்பு வீடுகளுக்கு ஒப்பாகி பாடச் செல்பவர். இதற்கென ஒரு குழுவோடு ஊர் ஊராகச் சென்று ஒப்பாரி வைத்து வரும் வருமானத்தை எல்லோருடனும் பகிர்ந்து வாழ்பவர்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மற்றொரு பெண் கடலைத் தங்கள் தாய்வீடாக நினைத்து வருபவர். இந்த மூவரும் தான் லீனாவின் தேவதைகள்.இவர்களெல்லாம் விதிவிலக்குகளாக வாழ வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு இந்தத் தொழில்களுக்கு வந்தவர்களா? இல்லை வாழ்க்கையின் போராட்டமும் இவர்கள் சந்தித்த அனுபவங்களும் இவர்களை இப்படி ஆக்கியிருக்கின்றன. சுடுகாட்டில் பிணங்களைப் புதைப்பதும் பிணங்களுக்கு முன்னே ஒப்பாரி பாடுவதும் எந்தநேரமும் இயற்கையின் சீற்றத்தைக் கொண்டு வரும் கடலில் இறங்குவதும் எளிதான காரியமா? ஆனால் இவர்களது வாழ்க்கை இப்படித்தான். இந்தப் படத்தில் பிறரோடு இவர்களின் அன்பும் அக்கறையும் வெளிப்படும் விதமும் அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் நேர்த்தியாய் வெளிப்பட்டிருக்கின்றன.

இந்த மூன்று பெண்களையும் ஆவணப்படுத்தியது இவர்களின் மீதான அனுதாபத்தை உண்டாக்கும் பொருட்டல்ல. இப்படியும் இவர்களால் வாழ முடிந்திருக்கிறது என்பதைக் காட்டத்தான். துயரங்களோடு நகர்ந்தாலும் இவர்கள் வாழும் விதம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

சுடுகாட்டிலேய கடைசி வரையிருந்து அங்கேயே மூச்சை விட வேண்டுமென்று நினைக்கும் ஒரு பெண். (கிருஷ்ணவேணி)

பெண் கடலில் இறங்குவது தீட்டு என்றும் சாமி குத்தமென்றும் சொல்லப்பட்டதைப் பொருட்படுத்தாது மீன்களையும் சங்குகளையும் சிப்பிகளையும் தேடி எடுத்துத் தொழில்செய்து கடலைத் தன் தாய்மடியாகக் கருதும் பெண். (சேது ராக்கு)

பிணங்களின் முன் ஒப்பாரி பாடிக் கிடைக்கும் பணத்தைச் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அங்கிருக்கும் குரங்குகளுக்கும் தாராளமாகச் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழும் பெண். (லட்சுமி)

செய்யக் கூடாதவை என்றும் ஆண்கள் மட்டுமே செய்யும் தொழில்கள் என்றும் சொல்லப்பட்ட இந்தக் காரியங்களைச் செய்யும் இம்மூன்று பெண்களைத் தேடிச் சென்று ஆவணப்படுத்தியிருக்கியது இந்தப் பதிவு.

மரபுகளையும் மூட நம்பிக்கைகளையும் கடந்து புதிய பாதையில் பயணிக்கும் இவர்களது வாழ்க்கையினை நம்முன் கொண்டு வந்த லீனாவிற்குப் பாராட்டுக்களைச் சொல்லலாம்
தேவதைகள்

திரைக்கதை இயக்கம் : லீனா மணிமேகலை
தயாரிப்பாளர் : ஜெரால்டு
படத்தொகுப்பு : தங்கராஜ்
ஒலி அமைப்பு : சந்தான நம்பி
நேரம் : 42 நிமிடங்கள்

நன்றி: தோழி.காம்