Friday, March 14, 2008

தமிழகத்தின் புல்லரிக்க வைக்கும் முன்னேற்றம்

"தமிழகத்தில் ஐந்து நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு இலக்காகிறார். பாலியல் கொடுமையில் இந்தியாவில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது"- இப்படி வரிக்கு வரி அதிர்ச்சித் தகவல்களை அள்ளி வீசுகிறது 'தேசிய குற்றப்பிரிவு' அமைப்பின் ஆய்வறிக்கை!

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பு, 'குற்றங்கள்' குறித்த நாடு தழுவிய ஆய்வொன்றை நடத்தியது. அதன் ஒரு அங்கமாக தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை அலசிய போது, சமீப காலத்தில் பாலியல் அடிப்படையிலான குற்றங்கள் பெருகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.


இது இன்று வெளியாகியிருக்கும் ஜூனியர் விகடனில் வெளியாகியிருக்கும் கட்டுரையின் ஆரம்பம். ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதல்லவா? இன்னமும் கூட அதிர்ச்சி மிச்சமிருக்கிறது. இந்த அறிக்கை பேசுவதெல்லாம் பதிவான புகார்களைப் பற்றி மட்டுமே. மீதி?? இதோ அதே கட்டுரையின் இன்னொரு பகுதியில் ஒரு ஆய்வாளர் சொல்கிறார்.

தமிழகத்தில் சமூகப் பிரச்னைகளை உன்னிப்பாக கவனிக்கும் வேறு சில அமைப்புகளிடம் பேசினோம். 'பாலியல் பிரச்னையில் பலியாகும் தமிழகப் பெண்கள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்துவரும் மதுரையைச் சேர்ந்த திலகம், "தேசிய குற்றப்பிரிவு அமைப்பின் ஆய்வு தந்திருக்கிற அதிர்ச்சியின் சதவிகிதம் குறைவு தான். பாதிக்கப்பட்ட நூறு பெண்கள்ல இருபது பெண்கள்தான் சீரழிக்கப்பட்ட உண்மையை வெளியில சொல்றாங்க. 'உலகப் பொது உரிமை சபை'ங்கிற அமைப்பு தன் அறிக்கையில இதைத் தெளிவா சுட்டிக் காட்டியிருக்கு. மத்தவங்க நம்மளைக் கேவலமாப் பேசு வாங்களேங்கிற பயம் உள்ளிட்ட சில காரணங்களால பாதிக்கப்பட்ட பல பொண்ணுங்க எதையும் வெளியே சொல்றதில்லை.

அப்படியே தைரியமா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், 'என்னை பலாத் காரம் செய்தான்'னு ஒரு பொண்ணு சொல்றப்ப, போலீஸ்காரங்க கேட்கிற கேவலமான கேள்வியும், நடந்துக்கிற முறையும் அவளை வெறுத்துப்போக வெச் சுடுது. 'பெண்களோட பிரச்னைகளுக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் இருக்கே..?'னு நீங்க கேட்கலாம். ஆனா, அங்கதான் பாதிக்கப்பட்ட பொண்ணுங்க ரொம்ப கேவலமா நடத்தப்படுறாங்க.

ஸ்டேஷனுக்கு வர்ற பலாத்கார கேஸ்கள்ல 99 சதவிகித கேஸ்களைப் பஞ்சாயத்து பேசியே அனுப்பிடுறாங்க. மீறி ஒண்ணு ரெண்டு வழக்கு பதிவானாலும்கூட ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் அந்தப் பொண்ணை நாயா அலைய வைக்கிறாங்க. மீடியாக்களும் அவளை போட்டோ பிடிச்சு உலகத்துக்கே காட்சிப் பொருளாக்கி கூசிக் குறுக வைக்கிறாங்க" என்றவர், தொடர்ந்து...

"கோவை, சேலம், நாமக்கல் மாவட்டங்கள்ல தலித் சிறுமிகள் அதிகப்படியா உயர்சாதியாளுங்ககிட்ட பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகுறாங்க. விவசாயக் கூலியா இருக்கிற அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க இதையெல்லாம் வெளியில சொல்ல முடியாம தவிச்சுக்கிட்டு இருக்காங்க. அப்படி சீரழிக்கப்பட்ட பொண்ணுங்களோட பட்டியலே என்கிட்ட இருக்கு. நம்ம நாட்டுல சட்டங்களும் அதிகாரம் வழங் கும் முறைகளும் பெண்களுக்கு எதிரா இருக்கு. பெண்களுக்காகப் போராடுற மாநில பெண்கள் ஆணையத்துக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்காம டம்மியா வெச்சிருக்கிறதே அதுக்கு உதாராணம்" என்றார் அழுத்தமாக.


பெண்களுக்கெதிரான பிரச்சனைகளில், பணமும், சாதியும் வேறு பக்கபலமாகச் சேர்ந்து கொண்டுவிட்டால் நம்மவர்களின் நீதிபரிபாலனத்தினுடைய லட்சணம் எப்படியிருக்கும் என்று நமக்கெல்லாம் தெரியாதா என்ன? அப்படியே ஜாதி/வர்க்க வேறுபாடுகளே இல்லாத இடத்திலும் கூட இருக்கவே இருக்கிறது நமது பாழாய்ப் போன குடும்ப கவுரவம் இத்யாதிகள். வெளியே சொன்னால் குடும்ப மானமே போய்விடும் என்று உள்ளுக்குள்ளேயே அழுது புழுங்கிக் கொண்டு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து தள்ளிவிடுவது - இல்லை பாதிக்கப்பட்ட விவரம் தெரிந்த/சொந்தத்தில் உள்ள மாப்பிள்ளைக்கே அதிக அபராதத் தொகை செலுத்தித் பெண்ணையும் தலையில் கட்டிவிடுவது என்று பல விதமான சமாளிப்பு முறைகள் சமூகத்தில் பரவலாக வழக்கத்திலிருக்கின்றன. ஆனால் சட்டப் படி தண்டிக்கப் பட்டேயாக வேண்டிய குற்றம் இது என்கிற ஒரு விஷயத்தை மட்டும் யாருமே ஒப்புக் கொள்வதில்லை. இதற்குத் தீர்வு என்று என் மனதிற்குப் படுவது மூன்று வழிமுறைகள்.

1. காவல்துறையும் நீதி விசாரணை முறையும் பாதிக்கப் பட்டவர்களையே மேலும் காயப்படுத்துவதாக உள்ளது - சட்டங்கள் இருந்த போதும் அதை நடைமுறைப்படுத்துவோர் கனிவோடும் கண்ணியத்தோடும் அதைச் செய்வதில்லை. இதில் மகளிர் காவலர் நிலையத்திலிருப்பவர்களும் விதிவிலக்கில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம். சினிமா வசனங்களில் அதிகமாய் உச்சரிக்கப்பட்டு தேய்ந்து போன வசனங்களில் இதுவும் ஒன்று - ஒரு பெண் மனதை இன்னொரு பெண்ணால்தான் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும். எவ்வளவு அபத்தமான உளறல் என்று இது போன்ற தருணங்களே சொல்கிறது. யார் ஒருவரும் அடுத்தவர் உணர்வைத் துல்லியமாகப் புரிந்து கொள்வது சாத்தியம்ற்றது என்றாலும் கூட பொறுப்பிலுள்ளவர்கள் குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளலாம். அரசு வருடாவருடம் அவர்களுக்கு கவுன்சிலிங்க் அளிக்கலாம். தொடர்ந்து இதையும் மீறி கருணையின்றி நடப்போரை கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்கலாம்.

2. பாதிக்கப் பட்டோரிடமிருந்தும் மிகப்பெரிய ஒத்துழைப்புத் தேவை. நாமாகவே கட்டமைத்துக் கொண்ட மனப்பிரமைகளான மானம், கவுரவம் போன்ற போலிவலைகளைத் தாண்டியும் துணிவோடு பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். மற்றவர் நம்மைப் பற்றி பேசுவது குறித்து கவலை கொள்வதற்கும் ஒரு எல்லை உண்டு - அர்த்தமற்ற இவ்வகைத் தாக்குதல்களை துணிந்து எதிர்கொள்வோமேயானால் நிச்சயம் வெகுநாட்களுக்கு இதெல்லாம் தொடராது என்பதை உணர வேண்டும். அவரவர்க்கும் அவரவரது ஜீவாதாரப் பிரச்சனைகள் தலைக்கு மேல் உள்ளன - ஒழிந்த நேரத்தில் சற்று நேரம், அதுவும் சிறிது நாட்களுக்கு, அதுவும் வேறு புதுப் பிரச்சனைகள் கிடைக்கும் வரை இதை மெல்லுவார்கள். அவ்வளவே. அதற்குப் பயந்து இது போன்ற குற்றங்களை மறைப்பது நம் தலையில் நாமே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பானது.

சமீபத்தில் பார்த்த அஞ்சாதே திரைப்படத்தில் ஒரு காட்சி - ஒரு கும்பல் இளம் பெண்களை, இன்னும் சரியாகச் சொல்வதானால் சிறுமிகளை கடத்திச் சென்று அவர்களின் பெற்றோரிடம் மிரட்டிப் பணம் பெற்றுக் கொள்வதோடு அப்பெண்களை பலாத்காரம் செய்துவிட்டுத் திருப்பிக் கொண்டுவந்து விட்டுவிட்டுச் செல்கின்றனர். பாதிக்கப் பட்ட ஒரு சிறுமி தந்தையோடு காவல் நிலையத்திற்கு வந்து புகார் தருகிறாள். உயர் போலீஸ் அதிகாரியான பொன்வண்ணன் வந்து அப்பெண்ணின் அருகில் அமர்ந்து தோளைத் தட்டி “I am proud of you my child." என்பார். அப்பெண் கடினமான முகத்தோடு "எனக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நேராது இருக்கவேண்டும். அவர்களை சீக்கிரம் பிடியுங்கள்" என்று சொல்லிவிட்டு தந்தையோடு கிளம்புவாள். அதே போல் அடுத்து இன்னொரு பெண் கடத்தப் பட்டு பேச்சுவார்த்தை நடக்கையிலேயே அப்பெண்ணின் தந்தை போலீஸிடம் உதவி கோருவார். இதைப் புரிந்து கொண்ட கடத்தல் கோஷ்டியினர் அப்பெண்ணை நிர்வாணமாக்கி அவளது உடைகளைக் கொண்டுவந்து அவ்வீட்டின் முன்னால் போட்டுவிட்டு அத்தந்தையிடம் மரியாதையாக போலீசாரை ஒதுக்கிவிட்டுப் பணம் கொண்டு வந்து தந்து மகளை மீட்டுச் செல் என்று மிரட்டுவார்கள். அப்போது மனதளவில் தளர்ந்துவிடும் அத்தந்தை போலீசாரை "விட்டுங்க சார், அங்க என் பெண் அம்மணமா இருக்கா. எனக்கு பணம் முக்கியம் இல்லை. நான் பணத்தைக் கொடுத்து என் பெண்ணை மீட்டுக்கறேன்." என்று கதறுவார். அப்போது கதாநாயகனான நரேன் குறுக்கிட்டு "நாங்கள் பசி தூக்கம் மறந்து அலைவது உங்க பொண்ணை காப்பாத்த மட்டுமில்லை. இன்னிக்கு உங்க பொண்ணுக்கு நடந்தது நாளைக்கு இன்னொரு பெண்ணுக்கு நடந்துடக் கூடாதுன்றதுக்காக" என்று ஆவேசமாய் சொல்வார். மிக மிக சத்தியமான வார்த்தைகள். பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரும் தங்களுக்கு நடந்த அநீதிக்காகப் போராடுவதன் மூலமே அது மீண்டும் மீண்டும் நிகழாது தடுக்க முடியும். அந்தப் பொறுப்புணர்ச்சி ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.


3. மேற்குறிப்பிட்ட மனமாற்றம் சமூகத்தில் வருவதற்கான முக்கியப் பங்கை ஊடகங்களே ஆற்ற முடியும். தங்களின் வியாபாரத்துக்காக பாதிக்கப் பட்ட பெண்களின் கண்ணீரை ஏலம் விடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். அதற்காக நடந்த குற்றத்தை மறைக்க வேண்டும் என்பதல்ல. பாதிக்கப்பட்ட பெண்களிடம் அனுதாபத்தோடு ஒருவேளை அந்நிகழ்ச்சி நம்வீட்டில் நடந்திருந்தால் எப்படிக் கையாள்வோமோ அது போல கையாள வேண்டும் என்கிற பொறுப்பு ஊடகத்திலிருப்போர் எல்லோருக்குமே வர வேண்டும்.

இவ்விடத்தில் சிதம்பரம் காவல் நிலையத்தில் கூட்டு பலாத்காரத்துக்கு உள்ளான பத்மினி வழக்கை நினைவு கூர வேண்டியிருக்கிறது. இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. பத்மினி படிப்பறிவு அதிகமற்ற மிகவும் எளிய சூழலில் இருந்து வந்தவர். எத்தனையோ சோதனைகள் - அப்போது ஒரு பேட்டியில் அவர் தனக்கு நடந்த உண்மை அறியும் சோதனை பற்றிச் சொல்லியிருந்தார். பொய் சொல்லும்போது மனித உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு சொல்வது பொய்யா இல்லையா என்று கண்டுபிடிக்கும் லை டிடெக்டர் எனும் இயந்திரத்தின் பரிசோதனைக்கு பத்மினி உட்படுத்தப் பட்டார். ஆம் அல்லது இல்லை என்பது போன்ற விடைகளே அளிக்கும்படியான கேள்விகள் கேட்கப் படும். பதில் சொல்லும்போது சம்பந்தப்பட்டவரது உடல்நிலை இயந்திரத்தால் ஆராயப் பட்டு பதிவு செய்யப் படும். ஆனால் அங்கே கேள்வி கேட்டு மாற்றங்களைப் பதிவு செய்பவர்கள் போலீசாரே. பத்மினியின் புகாரே போலீசாரின் மீதுதானே? தங்கள் சக அலுவலர்களின் மீதான பாசத்தோடு அவர்கள் செட் செய்திருந்த கேள்விகள் வெகு சாமர்த்தியமாக அமைக்கப் பட்டிருந்தன. X தேதியில் Y எண்ணிக்கையுள்ள போலீசார் சேர்ந்து அவரை வன்புணர்ச்சிக்குட்படுத்தியதுதான் வழக்கு என்றால் அவர்களது கேள்விகள் இப்படியிருக்கும்.

1. சம்பவம் X - 1 அன்றுதானே நடந்தது? இதற்கு பத்மினி இல்லையென்று பதில் சொல்கிறார். ஏனென்றால் சம்பவம் உண்மையாக நடந்தது X தேதியன்று அல்லவா?
2. உங்களை Y+2 போலீசார் சேர்ந்து பலாத்காரம் செய்தனர்தானே? இதற்கும் பத்மினி இல்லையென்று சொல்ல நேரிடுகிறது.

உடனே பத்திரிக்கை செய்திகள் - உண்மை கண்டறியும் ஆய்வில் பத்மினி தோல்வியுற்றார். போலீசார் மீது தவறெதுவும் இல்லை என்று நிரூபணமாகிவிட்டது. வழக்கு முடிவடையும் வரை இப்படித்தான் பரபரப்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டேயிருந்தன. இவ்வகைச் செய்திகளை படிக்கும் பெரும்பாலான பெண்கள் துவண்டு பின்வாங்கியிருப்பர். ஆனால் பத்மினியோ உறுதியோடு போராடி வழக்கறிஞர் உதவியோடு வழக்கு விவாதப் பகுதியில்(Argument) அக்கேள்விகள் எவ்வளவு தவறானவை என்பதை நிரூபித்து வென்றார். இதற்கு நடுவில் காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட நந்தகோபாலுக்கு பத்மினி எத்தனாவது மனைவி, அவர் இவருக்கு எத்தனையாவது கணவர் என்பது போன்ற அதிமுக்கியத் தகவல்கள் அவரது பெயரை சிதைக்குமளவுக்கு தொடர்ந்து பத்திரிக்கைகளில் வெளியானபடியே இருந்தது. அவற்றினாலெல்லாம் சோர்ந்துவிடாது போராடி வழக்கில் இறுதி வெற்றியைப் பெற்ற அப்பெண்மணியின் தீரம் பாராட்டுதலுக்குரியது.

அதனால் எல்லாம் அந்தப் பெண்ணின் வாழ்க்கை சாரமற்றுப் போய்விடவில்லை என்பதையும் இங்கே பார்க்கவேண்டும். வழக்கு நடந்த்போது அவருக்கு பெரும்பாலும் பக்கபலமாக இருந்தது கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் பிரிவான ஜனநாயக மாதர் சங்கம் எனும் அமைப்பு. அச்சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சித்தொண்டர்களும் அவர்கள் சார்பாக பத்மினிக்கு பாதுகாப்பாக நின்றனர். அதில் ஒரு தோழர் - தனபாலன் என்பது அவர் பெயரென்று நினைக்கிறேன் (நினைவிலிருந்தே எழுதுகிறேன் - எனவே தவறாயிருப்பின் சுட்டவும் சரி செய்து கொள்கிறேன்) வழக்குகள் முடிந்த நிலையில் பத்மினியை மணக்க விரும்பி பத்மினியும் சம்மதிக்க அவரை மணந்தார். உண்மையில் இந்நிகழ்விற்கே அதீத முக்கியத்துவம் தரப்பட்டிருக்க வேண்டும் - ஏனெனில் இதுவே பாதிக்கப் பட்ட பெண்களுக்கும் அதற்குப்பின்னும் வாழ்கை நல்ல முறையில் செல்லும் வாய்ப்புள்ளது எனச்சொல்லும் பகுதி.

இப்பிரச்சனையின் ஆணிவேர் பெண் உடல் மீதான ஆதிக்கத்தில்தான் இருக்கிறது - எனினும் அதை மாற்றுவது அத்தனை சுலபமில்லை(ஏற்கனவே ஒரு முறை அதைப்பற்றி எழுத ஆரம்பித்து பாதியில் நிறுத்தி வைத்திருக்கிறேன் - நேரம் அமைகையில் அதை எழுதவேண்டும். ஹ்ம்ம்.... இப்பட்டியலின் நீளம் அதிகரித்துக் கொண்டே போகிறது). எனவே இப்பிரச்சனைக்கு ஒரளவுக்கு எனக்கு சாத்தியமானவை என்று தோன்றும் ஒரு சில தீர்வுகளை இங்கே சொல்லியிருக்கிறேன்.

22 comments:

said...

//
"தமிழகத்தின் புல்லரிக்க வைக்கும் முன்னேற்றம்"
//
தலைப்பு சூடான இடுகைகளில் வரும்.

5 நிமிடத்திற்கு ஒரு பாலியல் பலாத்காரம் தமிழ்நாட்டில் அதுவும் வழக்கு பதிவு செய்யப்பட்டவை மட்டும் என்பது ரொம்ப ரொம்பா டூ மச்.

ஈரான்ல நடக்கற சம்பவங்களை படிக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங் ஆகிப்போச்சு

:(

said...

கொடுமையா இருக்குதுங்க..

//மீடியாக்களும் அவளை போட்டோ பிடிச்சு உலகத்துக்கே காட்சிப் பொருளாக்கி கூசிக் குறுக வைக்கிறாங்க//

இன்னொரு பரிந்துரையாக இதைக் கொள்ளலாமா? -- பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் அவர்களுடைய பெயர் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் மீடியாவுக்குக் கூட வெளியிடப்படக்கூடாது.

அமெரிக்காவில் இதைப் பின்பற்றுகிறார்கள். பாதிக்கப்பட்டவரே ஒப்புக்கொண்டாலொழிய அவர்களுடைய பெயர் விவரங்கள் மீடியாவுக்கே தெரியவராது. (அதனால் அவர்களைத் துரத்தித்துரத்தி செய்தி வெளியிடமுடியாது!)

said...

//தலைப்பு சூடான இடுகைகளில் வரும்.//
சிவா, சான்சே இல்லை. அதுக்கு தலைப்பு பின் வருவனவற்றுள் ஒன்றாக இருக்க வேண்டும் - பாலியல் வெறியாட்டத்தில் தமிழகத்தின் வரலாறு காணாத முன்னேற்றம்/ வன்புணரப்படும் பெண்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிப்பு. இதுதானே டெம்ப்ளேட்? என்ன சிவா, ட்ரெண்டையே புரிஞ்சுக்காம பேசுறீங்களே? தமிழகத்தின் முன்னேற்றம்ங்கற தலைப்பை பாத்து நான் எதோ பொருளாதார சிறப்புக் கட்டுரை எழுதியிருக்கேன்னு நினைச்சுகிட்டு எல்லாரும் ஸ்கிப் பண்ணிடுவாங்கன்னுதானே நான் நினைச்சேன். :))))

இந்த தலைப்பை நான் வைத்ததுக்கு காரணம் முன்னேற்றம் என்பது எல்லா இடத்திலும் மகிழ்ச்சியான கொண்டாடக் கூடிய ஒன்றாக இருப்பதில்லை என்பதற்காகவே.

//ஈரான்ல நடக்கற சம்பவங்களை படிக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங் ஆகிப்போச்சு // என்ன செய்யறது சிவா, நமக்கு அடுத்தவங்க முதுகுதானே தெரியுது? அதுனால நம்ம முதுகையும் கண்ணாடிலயாச்சும் அடிக்கடி பாத்து சுத்தம் செஞ்சுக்கறது நல்லது இல்லயா?

//இன்னொரு பரிந்துரையாக இதைக் கொள்ளலாமா? -- பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் அவர்களுடைய பெயர் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் மீடியாவுக்குக் கூட வெளியிடப்படக்கூடாது.//
சேதுக்கரசி, நிச்சயமாக இதுவும் ஒரு நல்ல நடவடிக்கையாகவே இருக்கும். காவல்துறை கொஞ்சம் முயற்சித்தால் இதை நடைமுறைக்கு கொண்டுவரலாம். கோர்ட்டுக்கு வெளியே வரும்போது குற்றவாளிகளுக்கு கூட முக்காடு போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கும் இவர்கள் பாதிக்கப் பட்டவர்களுக்கும் இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மிக்க நல்லது.

said...

இ ந்த புள்ளி விவரம் சொல்வது பெரிய லெவல் பலத்காரங்களை....பக்கத்து வீட்டு பையன் மற்றும் அன்க்கிள், டியூஷன் வாத்தியார்கள் வயது வித்தியாசம் இன்றி செய்யும் விலங்கியல் செயல்களும் இன்ன பிற சொல்ல முடியாத அசிங்கங்களும் கணக்கில் வராது...இல்லையா லக்ஷ்மி????...My FOOT....

said...

இதப் படிச்சுட்டு என்ன சொல்றது?

ஒரு வேளை இந்த முன்னேற்றமெல்லாம் சேர்ந்துதான் நம்மள வல்லரசா மாத்துமோ..!!!???

said...

லஷ்மி
விகடன் இணையதளத்தில் இந்த கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களை குறிப்பாக மன்னர் மன்னன் என்பவரின் பின்னூட்டத்தை பார்த்தீர்களா?
இந்த கட்டுரையை படிக்கும் போதே உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன்.

said...

அந்த பின்னூட்டம் இதோ" பாலியல் பலாத்காரமென்பதை ஒரு தலைப்பட்ச்சமாகவே சிந்திக்கின்றோம். ஒரு ஆண் ஒரு பெண்னைக் கெடுப்பது மட்டுமே பலாத்காரம் ஆகாது. பெண்கள் பக்கத்தில் நடப்பவைகளை சிந்திக்க வேண்டும்.கால்வயிற்றுக்கு உணவு இல்லாவிட்டாலும் கூட, காமம் கட்டுக்கடங்காமல் கூத்து போடும். இது மனித உடற்கூறு சார்ந்த உண்மை. இப்படி இருக்கும்போது, பெண்கள் குறிப்பாக இளம் வயதினர் எப்படி எப்படி தங்களுடைய நடையுடை பாவனைகளை அமைத்துக் கொன்டிருக்கிறார்கள் என்பத கவனிக்க வேண்டும். பெண்கள் பிறந்து வளர்ந்து குறுகிய காளத்திலேயே உடல் அமைப்பில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படத் துவங்கி விடுகின்றன. அப்போதிருந்தே அவர்கள் மீது தனி கவனம் வைக்கத் தவறிவிடுகிறர்கள்.பிறகு வயதுக்கு வரக்கூடிய பருவம் நெருங்க நெருங்க பட்டனங்கள் பெரிய நகரங்களில் வசிக்கக்கூடியவர்கள், நாகரிகம் என்று எண்ணி, உடைகளில் கவர்சியயைக் கூட்டிவிடுகின்றனர். அங்க வளர்ச்சியினை அப்பட்டமாக வெளிப்படுத்திக்காட்டக் கூடிய ஜீன்ஸ். டி ஷர்ட்டுகள் அணிகிறார்கள். பிறகு வயதுக்கு வந்தபின், அதே வகையான உடைகளைத் தொடரும்போது; குலுங்கி வழியும் பருவ எழில், வயது வித்தியாசமின்றி எல்லோரது விழிகளையும் உறுத்தத்தானே செய்கிறது. பள்ளி,உயர்நிலைப்பள்ளி,கல்லூரி என்று உயர உயர பெண்கள் படுத்தும் பாட்டிற்க்கு அளவுதான் ஏது? இவர்கள் மட்டுமில்லாமல் திருமனம் ஆனவர்கள், ஆகாதவர்கள், அலுவலகப் பெண்கள், குடும்பப்பெண்கள், இப்படி பல தரப்பினரும் போட்டிப் போட்டுக்கொண்டு, தங்கள் உடல் கவர்ச்சியினை காட்டக் கூச்ச நாச்ச மில்லமல் போய்விட்டப் பிறகு யாரைச்சொல்லி என்ன செய்ய. பிறகு ஏன் பாலியல் பலாத்காரங்கள் நிகழாது??? கண்வழியேதான் காமம் பிறக்கிறது என்கிறபோது, அந்தக் கண்களுக்கு காட்ச்சித்தராமல் கண்ணியமான முறையில் மறைக்க வேண்டிய்தை மறைத்திருப்போமேயானால்; தவறுகள் அரவே நடக்காமல் போய்விடும் என்றில்லா விட்டாலும், குறைய நிறையவே வாய்ப்புள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவேதான் சில சமுதாயத்தில், பெண்களை மறைத்துவைக்க வேண்டிய அவசியத்தை உண்ர்ந்து திரையிட்டு மறைத்து வைக்கிறார்ககள். அதை உணராமல்,அதைப் பெண் அடிமைத்தனம் என்றும், பெண்னினத்திற்கே மிகப்பெரியக் கொடுமையை செய்வதாக வெட்கமில்லாமல் வாய்க்கிழிய கூச்சல் போடுகிறோம். பெண்னினத்தைப் பாதுகாக்க வரிந்துக்கட்டிக்கொண்டுவரும் அமைப்புகள், முதலில் அந்தப் பெண்னினத்தை; நடை உடைகளில் கண்ணியத்தையும், உண்மயில் எது அவர்களைப் பாது காக்குகுமோ அதன்படி நடக்க வாழிவகைகளையும் செய்துவிட்டு, மற்றவர்கள் மீது குற்றம் சொல்லட்டும். இதை செய்யத் தவறினால் 5 நிமிடத்திற்கு என்ன 5வினாடிக்கு ஒரு பாலியல் பலாத்காரம் நடைப்பெறுவதை நிரந்தரமாக தவிற்க முடியாததாகிவிடும் என்பது கசப்பான உண்மை

said...

ஆம் நந்தா. இவ்வெண்ணிக்கை நீங்கள் சொல்வது போல் நெருங்கியவர்களால் நடக்கும் அத்துமீறல்களை உள்ளடக்கியதல்ல. அவையெல்லாம் காவல்துறைக்கு எடுத்துச் செல்லப்படுவது இருக்கட்டும், பெரும்பாலும் பெற்றோர் வரையிலேயே கூட செல்வதில்லை - வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் காட்டும் இறுக்கம், குழந்தைகளுடனான தோழமையின்மை போன்றவை அவற்றைத் தடுத்துவிடுகின்றன. விளைவாக குழந்தைகள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். சில இடங்களில் சம்பந்தப்பட்டவர்களின் மிரட்டலாலும் குழந்தைகள் மவுனமாகி விடுகின்றன. டியூஷன் ஆசிரியர்கள் என்ன நந்தா, சில வருடங்கள் முன்பு ஒரு பள்ளி ஆசிரியர் மீதே இவ்வகைக் குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் - பணியிட மாற்றம், இந்த சேவையை இன்னொரு இடத்தில் தொடரும் வாய்ப்பு.


கையேடு - உங்க ஆதங்கம் புரியுது. எதெதையோ சகிச்சுகிட்டாச்சு, இதையா சகிச்சுக்க முடியாம போயிட போகுது? இருந்தாலும் மனசு தாங்கல. அதான் இங்க கொட்டிட்டேன்.

பத்மா - நான் கட்டுரையைப் படிக்கும்போது கமென்ட் எதுவும் வந்திருந்திருக்கவில்லை. இப்போது நீங்கள் சொன்ன பிறகே கவனித்தேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மன்னர் மன்னனின் கருத்து மிகவும் எரிச்சலூட்டுவதாகத்தான் இருக்கிறது. எனினும் இத்தொனியிலான விவாதங்கள் நமக்கு புதிதா என்ன? இந்தப் பதிவிற்கே கூட இப்படியான பின்னூட்டமெதுவும் வரக்கூடுமென்று எதிர்பார்த்தேயிருந்தேன். ஆனாலும் படித்தவுடன் சினத்தை அடக்க முடியவில்லை. விரைவில் பதில் ஒன்றினை அங்கேயும் இடலாமென இருக்கிறேன்.

இன்று கொஞ்சம் வேலை அதிகம். அதான் கொஞ்சம் இந்தப் பக்கம் அதிகம் வர முடியல. நாளைக்கு விரிவா எழுதறேன். தாமதமான பதில்களுக்கு அனைவரும் மன்னிக்கவும்.

said...

முதலில் பத்மா அரவிந்த் அவர்களுக்கு ஒரு நன்றி!

ஆணி புடுங்கி புடுங்கி ஒரே கடுப்புல இருந்த சமயமா பாத்து மன்னர் மன்னனோட பின்னூட்டம் போட்டு கொஞ்சம் சிரிக்க வெச்சிருக்கீங்க அதுக்காகத்தான் இந்த நன்றி! (அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகமோ?).

அதிர்ச்சியான தகவல்கள்தான் லக்ஷ்மி. ஆனால் ஜூனியர் விகடன், தான் சொல்ல வந்த விஷயங்களை தவறாக சொல்லியிருக்கிறதா என்று புரியவில்லை. ஏனெனில் ஐந்து நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு இலக்காகிறார் அதுவும் தமிழ்நாட்டில் என்பதும் அதுவும் இவை பதிவான புகார்கள் மட்டும் என்பது மிக அதிகப்படியாக உள்ளது.

ஏனெனில் 2006ல் தமிழ்நாட்டில் நடந்த பெண்களுக்கெதிரான குற்றங்கள் (பதிவானவை) கிட்டத்தட்ட 6,500. இதில் ஓரளவு சால்ஜாப்பு சொல்லிக்ககூடிய விஷயம் என்ன தெரியுமா? தமிழ்நாடு 12வதோ, 13வதோ இடத்தில் இருக்கிறது என்பதுதான்(நாங்க கேவலமானவங்கதான், ஆனா மகா கேவலம் கிடையாதுன்னு சொல்லிக்கலாம்).

ஜூனியர் விகடன் கணக்குப் படி பார்த்தால் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 103,680 பாலியல் கொடுமை நடந்திருக்க வேண்டும். ஆனால் இந்திய அளவில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் எண்ணிக்கையே 164,765(இவை யாவுமே 2007ல் வெளி வந்த அறிக்கையின் புள்ளி விவரம்). 2008ல் அறிக்கை வந்ததா என்று தெரிய வில்லை.

ஆனால் வருந்தத்தக்க விஷயம் ஒன்று என்ன தெரியுமா? வருடா வருடம் இந்த குற்றங்களின் எண்ணிக்கை
பெருகிக் கொண்டே போவதுதான்.

குற்றங்களின் எண்ணிக்கையை விட இவை ஏற்படுத்தும் விளைவுகள் மிகக் கொடுமை. நீங்கள் சொன்ன அஞ்சாதே படக் காட்சி நான் மிக உணர்ச்சி வயப்பட்டு பார்த்த காட்சிகளில் ஒன்று. ஆனால் உண்மையில் காவல்துறை எந்தளவு இந்த விஷயத்தில் உண்மையாக நடந்து கொள்கிறது என்பது கேள்விக்குறியே?

ஊடகங்களின் பங்கையும் சும்மா சொல்லக் கூடாது. இளம்பெண் என்பதாலேயே கஞ்சா அழகி என்று செரீனாவை அழைத்தவர்கள், சிறையில் இருக்கும் சமயத்தில் பிரேமானந்தாவிற்கு வக்காலத்து வாங்கியவர்கள், இப்படி பல புரட்சிகளுக்கு சொந்தக்காரர்கள். இவர்களுக்கு முக்கியமெல்லாம் ரஜினி படம் பற்றிய செய்திகளும், ஸ்ரேயா, நமீதாவின் உடைகளும்தான்.

சமூகத்திலும் இதனால் பாதிக்கப்பட்ட பெண்களை உதாசீனப்படுத்துவதும், பல வகைகளில் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் எப்பொது மாறும் என்று புரியவில்லை? (இந்த பதிவை கிண்டல் பண்ணி கூட இன்னொரு பதிவு வரலாம், ஜாக்கிரதை லக்ஷ்மி!)

இது போன்ற விஷயங்களை கேள்விப் படும் போதெல்லாம் யார் மேல்னு சொல்ல முடியாத கோபம் வருகிறது, என்னத்த சொல்ல?

Anonymous said...

என்னடா, நாட்டுல ஜூவி இப்பல்லாம் வர்றதே இல்லையா? பெண்கள் மீது இடிச்சுட்டான், பஸ்சுல முட்டிட்டான்னு ஜீவி ஏதும் எழுதலியான்னு கவலைப்பட்டேன். காப்பாத்திட்டாங்கப்பா 'கட் & பேஸ்ட்' பெண்ணியவாதியை :-)))))))))


//பெண்களை மறைத்துவைக்க வேண்டிய அவசியத்தை உண்ர்ந்து திரையிட்டு மறைத்து வைக்கிறார்ககள். அதை உணராமல்,அதைப் பெண் அடிமைத்தனம் என்றும், பெண்னினத்திற்கே மிகப்பெரியக் கொடுமையை செய்வதாக வெட்கமில்லாமல் வாய்க்கிழிய கூச்சல் ////போடுகிறோம். பெண்னினத்தைப் பாதுகாக்கவரிந்துக்கட்டிக்கொண்டுவரும் அமைப்புகள், முதலில் அந்தப் பெண்னினத்தை; நடை உடைகளில் கண்ணியத்தையும், உண்மயில் எது அவர்களைப் பாது காக்குகுமோ அதன்படி நடக்க வாழிவகைகளையும் செய்துவிட்டு, மற்றவர்கள் மீது குற்றம் சொல்லட்டும்.///

இது பேச வேண்டிய பேச்சு பத்மா. இதை மட்டும் பேசுனா உடனே ஆண் ஆதிக்கவாதின்னு இல்லாத ஒண்ணைப் பத்தி புரளி பேசப் பொறப்பட்டுடுவாங்க ஜான்ஸி ராணி, விஜயசாந்தி வகையறாக்கள் :-)))

ஏதோ நல்லா இருந்தா சரிடே!

சாத்தான்குளத்தான்

Anonymous said...

//நாளைக்கு விரிவா எழுதறேன். தாமதமான பதில்களுக்கு அனைவரும் மன்னிக்கவும்.//

மன்னிச்சிட்டோம். மெதுவா வாங்க. என்ன கெட்டுடப் போவுது? :-))

உங்களுக்குக் கடவுள் நிறைய வேலை தர மனமுருகிப் பிரார்த்திக்கிறேன்

சாத்தான்குளத்தான்

said...

////மேற்குறிப்பிட்ட மனமாற்றம் சமூகத்தில் வருவதற்கான முக்கியப் பங்கை ஊடகங்களே ஆற்ற முடியும். தங்களின் வியாபாரத்துக்காக பாதிக்கப் பட்ட பெண்களின் கண்ணீரை ஏலம் விடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். அதற்காக நடந்த குற்றத்தை மறைக்க வேண்டும் என்பதல்ல. பாதிக்கப்பட்ட பெண்களிடம் அனுதாபத்தோடு ஒருவேளை அந்நிகழ்ச்சி நம்வீட்டில் நடந்திருந்தால் எப்படிக் கையாள்வோமோ அது போல கையாள வேண்டும் என்கிற பொறுப்பு ஊடகத்திலிருப்போர் எல்லோருக்குமே வர வேண்டும். ////


பொறுப்பான ஊடகத்துறை என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே எஞ்சி நிற்கின்றது. பரபரப்பான செய்திகளை வெளியிடுவதோடு அவர்களின் பொறுப்புகள் முடிந்து விடுகின்றன.

said...

நரேஷ், நிஜமா நல்லவன், சாத்தான்குளத்தார் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முதலில்.

நிஜமா நல்லவன் - நீங்கள் சொல்வது சரியே. ஆனால் இந்நிலை மாற வேண்டுமல்லவா? எல்லோரும் உரக்கப் பேசினாலாவது மாற்றம் தெரியாதா என்கிற எண்ணத்தில்தான் என் ஆதங்கத்தை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

நரேஷ் - நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல எழுதப்பட்ட எண்ணிக்கை கூடக் குறைய இருக்கலாம்தான். ஆனாலும் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே கவலைக்குரியது அல்லவா? குறைந்திருப்பினும் கூட அது மகிழ்ச்சிக்குரியதல்ல - முற்றிலும் மறைந்து எண்ணிக்கை 0 ஆவதே லட்சிய நிலை அல்லவா?
//நாங்க கேவலமானவங்கதான், ஆனா மகா கேவலம் கிடையாதுன்னு சொல்லிக்கலாம்). // :)
மீண்டும் இங்க தமிழ் சினிமாவில் தேய்ந்து பொருளிழந்த ஒரு டயலாக் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை - ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் பால் உபயோகமற்றுத்தானே போகும்?
//இந்த பதிவை கிண்டல் பண்ணி கூட இன்னொரு பதிவு வரலாம், ஜாக்கிரதை லக்ஷ்மி!// :)) ஒரு பதிவென்ன பல வரலாம். ஆனா அவங்க என்ன எழுதினாலும் நாம ஸ்போர்ட்டிவா எடுத்துக்கணும்(எப்படி ஸ்போர்டிவ்வா எடுத்துக்கறதுன்னு நமக்குத் தெரியலைன்னாலும் ரொம்பக் கவலை வேண்டாம் - அவங்களே இலவச இணைப்பா அதுவும் எப்படின்னு சொல்லிக் கொடுப்பாங்க. நாம சமத்தா கேட்டுகிட்டா மட்டும் போதும்)

//இது பேச வேண்டிய பேச்சு பத்மா. இதை மட்டும் பேசுனா உடனே ஆண் ஆதிக்கவாதின்னு இல்லாத ஒண்ணைப் பத்தி புரளி பேசப் பொறப்பட்டுடுவாங்க //
அண்ணாச்சி, நிகழ்வுகள் அதிகரிச்சிருக்கறதா சொல்லப்பட்டிருக்கற தர்மபுரி மாவட்டம் ரொம்பவே வளர்ச்சியில் பின் தங்கிய பகுதி. அதிகமும் கிராமங்களை உள்ளடக்கிய பகுதி. நம்ம தமிழ்நாட்டுல கிராமங்களிலுமா பெண்கள் ஜீன்ஸிலும் டீசர்ட்டிலும் கேக் வாக் போறாங்களா என்ன? இல்லை வயக்காட்டுல எல்லாம் மினி ஸ்கர்ட்டும் டாப்ஸூம் யூனிஃபார்ம் ஆயிடுச்சோ??? அதிகபட்சம் சுடிதாருக்கு மாறியிருக்கலாம் - சவுகரியம் /நாகரீகம் கருதி. அதுவே சிரமம்தான். நீங்க என்னடான்னா ஆடைக் குறைப்புன்றீங்க - வழக்கம் போல தமாசான பின்னூட்டமாத்தான் இருக்கு இரண்டுமே. வாய்விட்டு சிரிக்க வச்சதுக்கு நன்றி.

//உங்களுக்குக் கடவுள் நிறைய வேலை தர மனமுருகிப் பிரார்த்திக்கிறேன்// என்ன ஒரு வில்லத்தனம்.....

said...

என்னம்மா சொல்ல வாறீங்க? தமிழச்சி எழுதும் வக்கிரத்தை எத்தனை பெண் பதிவாளர்கள் கண்டிக்கின்றார்கள்?
இந்த நெருக்கடிகளூக்கு தீர்வு காண்பதில் முதலில் பெண்களின் ப‌ங்கு என்ன என எழுதுங்க. பயன்படும்.

புள்ளிராஜா

said...

//இந்த நெருக்கடிகளூக்கு தீர்வு காண்பதில் முதலில் பெண்களின் ப‌ங்கு என்ன என எழுதுங்க. //
அய்யா புள்ளிராஜா, இரண்டாவது பாயின்ட்ல சொல்லியிருக்கற எல்லாமே பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி எதிர்வினையாற்றினா இது போன்ற குற்றங்கள் குறையும்னுதானே சொல்லியிருக்கேன். மத்தபடி நடக்காம தடுக்க ஒரளவுக்கு பாதுகாப்பா இருக்கலாம் - இருட்டுல தனியா நடமாடாம இருக்கறது, தற்காப்பு கலைகள் கத்து வச்சுகிறதுன்னு. அதுக்கும் மேல பாதுகாப்பா இருக்கணும்னா ஏதோ லாக்கிங்க் சிஸ்டம் வந்திருக்காம் - அதைத்தான் வாங்கி மாட்டிகிட்டுத் திரியணும் பொண்ணுங்க எல்லாம். அப்படியெல்லாம் பெண்கள் நடந்துக்க வேண்டிய நிலை வந்த அது ஆண்களுக்கு கேவலம்னே கூட உங்களை மாதிரியானவங்களுக்கு எல்லாம் புரியாது.

"நீ ஏன் அந்த விஷயத்தை கண்டிக்கவில்லை, ஏன் இந்த விஷயத்தைப் பாராட்டவில்லை, ஏன் இந்த விஷயத்தைப் பற்றி ஒன்றும் சொல்லாமலில்லை, ஏன், ஏன் , ஏன்....." இதுல எதுனா ஒரு கேள்விய கேட்டு, அதுனால 'நீ ரிஜக்டட்' அப்படின்னு தீர்ப்பு சொல்ற நவீன நாட்டாணமைகள் இணையத்துல பெருகிட்டாங்கப்பா. இதுக்கு மேல இதுமாதிரியான கேள்விகளை எல்லாம் மதிச்சு பதில் சொல்றதாயில்லை நான். மன்னிக்கவும் புள்ளிராஜா.

said...

//சில வருடங்கள் முன்பு ஒரு பள்ளி ஆசிரியர் மீதே இவ்வகைக் குற்றச்சாட்டு எழுந்தது//

இப்பகூட இருக்கு.. சற்றுமுன் செய்திகள் பாருங்க http://satrumun.com

said...

லக்ஷ்மி,அடிப்படையில் attitudinal change இல்லாதவரிஅ ஒன்றும் செய்ய முடியாது..

போன மாதம் சட்டசபையில் நடந்த கூத்தைவிடவா மன்னர் மன்னன் உளறிவிட்டார்?ஸ்ரேயவின் குட்டை உடையைப்பற்றிய விவாதத்திற்காகவா நாம் வரிப் பணம் கட்டுகிறோம்?

அதைக்கண்டித்து கேட்ட சட்டசபை உறுப்பினர் பதர் சைய்யீஇதை எல்லாரும் கேலி செய்தார்களாம்..பெண்ணைப்பற்றிய கட்டுப்பாடுகளைப்பேச மட்டும், சாதி, மதம் அரசியல் வேறுபாடுகள் எதுவும் இருப்பதில்லை..

said...

சில பெண்கள் தங்களிடம் தவறாக நடக்கும் ஆண்களை பார்த்து ' நீ அக்கா தங்கச்சியோட பொறக்கலியா' என்று திட்டுவார்கள்.அது ஏன் என்று எனக்கு சில ஆண்கள் எழுதும் முறையை பார்த்துதான் புரிகிறது.விஷயம் இதுதான் ... அக்கா தங்கச்சியோட பொற ந்து இரு ந்தா அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் ச ந்திக்கும் நடை முறை ப்ரசினைகள் குறித்து ஒரு கருத்து மனதில் உருவாகும்.எனக்கு பாலியல் ப்ரசினை / கொடுமை நடை பெற்று இருக்கிறது என்று ஒரு பெண் சொன்ன பின்னாடியும் ஒரு ஆண் அதை தன் தவறு என்று ஏற்று கொள்ளாமல் அ ந்த பெண்ணை பார்த்து நீ அணி ந்த உடையை பார்த்துதான் நான் உன்னிடம் தவறாக நட ந்து கொண்டேன் என்பது மிகு ந்த கேலி கூத்தாக இருக்கிறது.சில சமயம் நீதிபதிகள் கூட ஜீன்ஸ் பேன்ட் போட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முடியாது என்று உளருவது உண்டு.இவர்கள் எம்மாத்திரம். நான் எவரையும் ' நீ அக்கா தங்கச்சியோட பொறக்கலியா' என்று திட்ட மாட்டேன்.அதற்க்கெல்லாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

said...

நேசகுமார், உங்களது பின்னூட்டத்தை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன். என்மீதான எவ்வித விமர்சனங்களையும் வெளியிடவும், கூடுமானவரை நான் அவற்றுக்கு தகுந்த விடையளிக்கவும் தயாராகவே உள்ளேன். அது விவாதப் பொருளை விடுத்து தனிப்பட்ட முறையில் என்னைப் பற்றியதாக இருப்பினும் கூட பதிலளிக்க விரும்பாத நிலையிலும் விமர்சனத்தை வெளியிடத் தயங்குவதில்லை. ஆனாலும் கூட இங்கே நீங்கள் சொல்லியிருப்பது இன்னொருவரைப் பற்றியென்பதால் அதை வெளியிட நான் தயாராக இல்லை. அதுவும் வெளியிடும் பின்னூட்டங்களுக்கெல்லாம் அவற்றை வெளியிடும் பதிவரே தார்மீகப் பொறுப்பேற்கவேண்டும் என்ற சமீபத்திய வலையுலக ட்ரென்ட் வேறு என்னை வெளியாளைப் பார்க்கும் நாய் போன்ற விரோதத்தோடு பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றுவதால், இப்போதைக்கு உங்களது பின்னூட்டத்தை நிறுத்தியே வைக்கிறேன். மீண்டுமொருமுறை உங்களிடமிருந்து மன்னிப்பைக் கோருகிறேன்.

சேதுக்கரசி, கொடுமை இல்லை? வேலியே பயிரை மேய்வது போல குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியவர்களே இவ்வாறு செய்தால், என்னதான் செய்ய முடியும்?

சீதா, அந்த விஷயம் தொடர்பா கல்கியோட தலையங்கத்துல மட்டுந்தான் கொஞ்சமாவது கடுமையான விமர்சனம் முன்வைக்கப் பட்டிருந்தது, அதும் கனிமொழியோட கருத்தையே மேற்கோளாக்கி. என்ன செய்ய, இது போன்ற விஷயங்கள் மரத்து போச்சு போல நம்ம சமூகத்துக்கு.

நந்தா, பெரும்பாலானவங்க நாட்டுல இது மாதிரி தனக்கு ஒரு நியாயமும், பிறருக்கு ஒரு நியாயமும்னுதான் நினைக்கறாங்க. அதுனால நானும் யாரையும் பாத்து இப்படியெல்லாம் கேக்கறது இல்லை.

said...

லக்ஷ்மி,

மிகவும் முக்கியமான விவாதம். ஒரு சில நாட்கள் முன்பு, எனது பதிவிலும் இது பற்றிய ஒரு தலைப்பை எழுதியிருந்தேன். இங்கு சொடுக்கவும்:

http://deepaktamil.wordpress.com/2007/11/25/%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d/

said...

lakshmi...innum seriousa oru padhivu podunga idhu kurithu...

ungalai maadhiri socialist sound koduthal than innum vizhippunarvu koodum..

i m expecting more speed in u.

-nanda

said...

நச் பதிவு.

எழுத்தால்தான் நம் ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கிறோம்.

ம். நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மனுசனாப் பாத்து திருந்தனும்.