Wednesday, July 23, 2008

யெஸ். பாலபாரதியின் “ அவன்-அது= அவள் ” விமர்சனம்


சக பதிவரும், தோழருமான பாலபாரதியின் அவன் - அது = அவள் படிக்கக் கிடைத்தது. இந்த நெடுங்கதையை பற்றிய என்னுடைய சில கருத்துக்களை இங்கே பதிவு செய்ய எண்ணம். கதை மூன்றாம் பாலினத்தவர் பற்றியது. உண்மையிலேயே பதிவுலகிற்குள் லிவிங் ஸ்மைல் வித்யா வராதிருந்தால் இத்தகைய மனிதர்களைப் பற்றிய எனது கருத்து என்னவாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் என் மீதே அருவெறுப்பாக இருக்கிறது - இவர்களை மனிதர்கள் என்றே நினைத்திருந்திருக்கப் போவதில்லை என்ற கசப்பான உண்மை என்னைப் பற்றி நானே வலிந்து உருவாக்கி வைத்திருக்கும் முற்போக்கு அடையாளங்களை ஆட்டம் காண வைக்கிறது. முன்பே சு.சமுத்திரத்தின் வாடாமல்லியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த போதும் படிக்கத் தோன்றியதில்லை என்பதே இத்தகைய விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய என்னுடைய அலட்சியத்துக்கு சாட்சி. வித்யாவின் எழுத்துக்களே இத்தகைய சக மனிதர்களின் மீதான் என் பார்வையை மாற்றியமைத்தது எனலாம். இப்போது இந்த புத்தகம் இன்னும் கொஞ்சம் கூடுதல் தெளிவைக் கொடுத்திருக்கிறது.

தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருப்பீர்களா? ‘ஆமாம், ஒரே ஒரு முறை நினைத்திருக்கிறேன்’ என்று சொல்பவர்கள் நம்மில் அநேகர் உண்டு.

உடலளவில் ஆணாகவும், மனத்தளவில் பெண்ணாகவும் இருக்கும் சிலருக்கு வாழ்க்கை எப்படியிருக்கும்? தினம் தினம் செத்துப்போகலாம் என்று நினைத்துக் கொண்டே வாழ்க்கையை எப்படியாவது முழுமையாக வாழ்ந்து தீர்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே இவர்கள்.

தங்கள் வாழ்க்கையின் அவலத்தைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு திருநங்கை - வாழ முடியவில்லையே என்ற ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டவள், அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்தது.

எனது தந்தையின் மரணமும், தங்கையின் மரணமும் என்னை உலுக்கியதைவிட அந்தத் திருநங்கையின் தற்கொலை என்னை அதிகம் நிலைகுலைய வைத்தது. இதைவிட சோகம் அந்தத் தற்கொலைச் சம்பவம், காவல்துறைப் பதிவுகளில் விபத்து என்றே பதிவு செய்யப்பட்டது.

பெண்களாகவும் இல்லாமல் ஆண்களாகவும் இல்லாமல் திருநங்கைகளாக மாறியவர்களுக்கு வாழ்க்கையின் மீது இருக்கும் தீராத காதலே இந்தப் புனைவு. இது முழுவதும் புனைகதை என்று சொல்வதற்கு இல்லை. பல திருநங்கைகளின் வாழ்வில் இருந்து எடுக்கப்பட்ட சம்பவங்களின் தொகுப்பே இந்த நெடுங்கதை. இக்கதையை வாசிப்பவர்கள் திருநங்கைகளின் வாழ்வில் இருக்கும் வலியை உணர்ந்து, சக மனிதர்களாக அவர்களை மதித்தால் இந்தப் படைப்பு பூர்ணத்துவமடைந்துவிடும்.

இது நூலின் என்னுரையில் ஆசிரியர் இந்த நெடுங்கதையைப் பற்றிச் சொல்லியிருப்பது.

கதை என்று எடுத்துக் கொண்டால் என் பார்வையில் இது பிரச்சாரக் கதைதான். அதாவது பாலபாரதியின் பாஷையில் சொல்வதானால் கதை சொல்ல வேண்டிய அரசியலை முடிவு செய்து விட்டு எழுதிய கதை. சொல்ல வேண்டிய விஷயத்தை முடிவு செய்த பின் பலரிடம் பேசி சேகரித்த தகவல்களை சம்பவமாக மாற்றி அவற்றைக் கோர்த்து பின்னப்பட்ட கதை. ஆனால் அதிகம் அறியப்பட்டிராத ஒரு தரப்பாரின் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் ஆரம்பகாலப் படைப்புகள் இப்படித்தான் இருந்தாக முடியும் என்பதால் அது ஒரு பெரிய குறையாகத் தோன்றுவதில்லை. அடுத்தது கதை சொல்லப் பட்டிருக்கும் மொழி - இது மிக எளிமையானதாக இருப்பதால் அதற்கென அதிகம் மெனக்கிடாது விரைவாக கதைச் சரடைப் பிடித்துப் போக முடிகிறது. இத்தனைக்கும் வட்டார வழக்கு, திருநங்கையருக்கென இருக்கும் பிரத்யேக மொழி, அங்கங்கு குறுக்கிடும் மும்பையின் பேச்சு மொழியான ஹிந்தி என பல வேறுபாடுகளிருப்பினும் கூட அதிக பின் குறிப்புகள் தேவைப் படாத அளவு மொழி நடையை எளிமையாகத் தந்திருப்பதாலேயே கதையின் மிகக் கனமான ஆதாரப் பிரச்சனையை மட்டும் கவனிக்க முடிகிறது.

பெண்களுக்கு மட்டுமே நேருவதாக நாம் நினைத்திருக்கும் பல கொடுமைகள் இந்த மனிதர்களுக்கும் பொதுவானவை என்பதைச் சொல்வதோடு இவர்களுக்கேயான பிரத்யேகமான அவலங்களையும் பட்டியலிடுகிறது கதை. ஆனால் ஒன்றை குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும் - முதல் அத்தியாயத்தின் இறுதியில் கோமதி/கோபிக்கு நேரும் பலாத்காரம் முதலாக கடைசி அத்தியாயத்தின் கடைசி வரி வரை அடுக்கடுக்காக திருநங்கைகளின் பல பிரச்சனைகளை வரிசைப் படுத்தியிருந்தாலும் ஒரேடியாக அழுகாச்சி காவியமாகவும் போய்விடவில்லை கதை. அதே போல திருநங்கைகளின் ஒவ்வொரு பிரச்சனையையும் பற்றி பேசுவதற்காக ஒவ்வொரு கதாபாத்திரம் பிரத்யேகமாக படைக்கப் பட்டிருப்பது புரிந்தாலுமே கூட அப்பாத்திரங்கள் கதையோடு ஒட்டாது எந்த இடத்திலும் துருத்திக் கொண்டு தெரிவதில்லை. பாத்திரப் படைப்பு என்பது மிகவும் இயல்பாக இருக்கிறது.

திருநங்கையர் சமூகத்தின் செயல்பாடுகள் - அவர்களின் ஜமாத் எனப்படும் குழு வாழ்க்கை முறை, ஒவ்வொருவரும் ஒரு சில பெண்களை தத்து எடுத்துக் கொண்டு தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்வது, அவர்களுக்கான பிரத்யேக சடங்குகள்(மரண காரியங்களிலிருந்து அவர்களுக்கே உரித்தான குறி நீக்கம் செய்து கொள்ளும் நிர்வாண சடங்கு வரை) பல விஷயங்கள் விலாவாரியாக நுணுக்கமான தகவல்களைக் கூட விட்டுவிடாது சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

நூலில் பாலபாரதியின் என்னுரை மட்டுமே காணக்கிடைக்கிறது. ஆசிரியரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணோம். ஆசிரியருக்கு தன்னடக்கம் தடுத்திருக்குமேயானால் கூட பதிப்பகத்துக்காரர்களாவது இரண்டு வரியை எழுதிச் சேர்த்திருக்கலாம். வலையுலகிலிருக்கும் நமக்கு அவரைப் பற்றித் தெரியுமென்றாலும் ஒரு பொது வாசகருக்கு ஆசிரியரைப் பற்றிய குறிப்புகள் சற்றே படைப்பின் மீதான நம்பகத்தைக் கூட்டலாம். அடுத்த பதிப்பிலேனும் கவனத்தில் கொண்டால் நல்லது(அதற்கு அவரது ப்ரொஃபைல் மேலும் செறிவுள்ளதாக வாழ்த்துக்கள் :) ).

நூலைப் பொறுத்த வரை எனக்கு மிக முக்கியமான குறைபாடுகளாகத் தோன்றுவது இரண்டு விஷயங்கள் - ஒன்று கதை ரொம்பவே சுருக்க முடிந்து விடுவதாகத் தோன்றுவது. இதை ஆசிரியரும் உணர்ந்தே இருப்பதாகத் தோன்றுகிறது - இதை நாவல் என்று அழைக்காது நெடுங்கதை என்றே குறிப்பிடுவதன் மூலம். இன்னமும் இதில் பல பகுதிகள் விவரித்துச் சொல்லப்படலாம் என்றே தோன்றுகிறது.
இன்னொன்று திருநங்கைகளுக்கு கிடைக்கும் எந்தவிதமான ஆதரவையும் பற்றி இதில் குறிப்பிடப் படாதது. அதிகம் அவர்கள் மதிக்கப் படுவதில்லை என்றாலுமே கூட எங்கேனும் ஒன்றிரண்டு ஆதரவுக் கரங்கள் நீண்டுதானிருக்கும் நர்த்தகி நட்ராஜிற்கு கிடைத்த குருநாதரைப் போல. அது போன்ற விஷயங்களும் குறிப்பிடப்பட்டிருந்தால் சற்றே பாசிடிவ்-ஆகவும் இருந்திருக்கும்.

இது முதல் முயற்சி என்பது தெரியாத அளவுக்கு நூல் நேர்த்தியாகவே வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் பாலா