Wednesday, October 24, 2007

படித்ததில் பிடித்தது (8)

புத்தகம் - மூன்று விரல்
ஆசிரியர் - இரா. முருகன்
பதிப்பகம் - கிழக்குப் பதிப்பகம்
முதல் பதிப்பு - ஆகஸ்ட், 2005

பொதுவாகவே எனக்கு இரா.முருகனின் எழுத்தில் விரவி நிற்கும் மெல்லிய அங்கதம் பிடிக்கும். அது அரசூர் வம்சம் நாவலானாலும் சரி, வாரபலன், எடின்பரோ குறிப்புகள் போன்ற பத்திகள் ஆனாலும் சரி அடிநாதமாக இந்த மெல்லிய நகைச்சுவை இழையோடும். அதிலும் குறிப்பாக இந்த நாவல் ரொம்ப பிடித்துப் போனதன் காரணம் நாவல் முழுக்க முழுக்க பொட்டி தட்டுதல்/ஆணி பிடுங்குதல் என்றெல்லாம் தமிழ் வலையுலகால் செல்லமாய் நாமகரணம் செய்யப் பட்டிருக்கும் மென்பொருள் துறையில் இருக்கும் ஒரு இளைஞனைப் பற்றியது என்பதுதான். ரமணாவில் விஜயகாந்த் விண்டோஸ் மீடியா ப்ளேயரை திரையில் ஒடவிட்டு ஸ்கீரினைப் பார்த்துக் கொண்டே கீ போர்டில் மாய்ந்து மாய்ந்து டைப் செய்வார் - அதுவும் இதை ட்ராலி வைத்துச் சுற்றிச் சுற்றி வேறு காட்டுவார்கள். இந்தக் காட்சியைப் பார்த்து நாம் சிரிக்கக் கூட முடியாது வீட்டில் உட்கார்ந்து - ஏனென்றால் சுற்றியிருப்பவர்கள் ஒரு சீரியஸ் காட்சியில் திடீரென்று சிரிக்கும் தன் பெண்ணின் சித்த சுவாதீனத்தின் மீதே அவநம்பிக்கை கொண்டு விடக்கூடும்.

வெளியிலிருந்து பார்க்கும் ஆட்களுக்கு மென்பொருள் ஆசாமிகளைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிம்பம் அவ்வளவுக்கு நிஜத்திலிருந்து வேறுபட்டது. அதை இந்த நாவல் கொஞ்சமேனும் மாற்றும் என்று எண்ணுகிறேன். இரா.மு மென்பொருள் துறையிலும் சரி இலக்கியத் துறையிலும் சரி செறிந்த அனுபவமுடையவர். முன்னுரையில் அவர் இந்த நாவல் எழுத நேர்ந்ததன் காரணத்தை விளக்குகிறார்.

மற்ற எந்தத் தொழிலில் இருப்பவர்களையும்விட, முழுக்க முழுக்க கற்பித்துக் கொண்ட பிம்பங்களின் அடிப்படையில் தமிழ்ப் படைப்புகளில் சித்தரிக்கப்படுபவர்கள் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில் இருக்கப்பட்டவர்கள்தாம்.

கணினி மென்பொருள் தொழில்நுட்பப் பணியாளர்கள் பெரும்பாலும் இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும். இந்த வயது வரம்பு, கம்ப்யூட்டர் என்ற பழைய மந்திரச் சொல்லின் பரவலான எச்ச சொச்ச ஈர்ப்பு. அங்கோலாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பறந்து இறங்கிக் கூடு கட்டி இந்த மென்பொருள் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் - இந்தியச்சராசரி வருமானத்தை விடப் பல மடங்கு கூடுதலானது என்று பலராலும் கருதப்படும் - வருமானம் போன்றவற்றின் அடிப்படையில் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களைப் பற்றி பலூனாக ஊதப்பட்ட வண்ண வண்ண இமேஜ்கள் தமிழ்க் கதைகளில் பிறக்க ஆரம்பித்தபோது இதெல்லாம் சீக்கிரம் தரைக்கு வந்து விடும் என்று நினைத்து நான் என்பாட்டுக்கு கம்ப்யூட்டர் தொழிலிலும் அதோடு சம்பந்தப்படாத என் படைப்புலகத்திலும் மூழ்கியிருந்தேன்.

ஆனால், தமிழில் ஒரு படைப்புக்கூட இதுவரை மென்பொருளாளர்களைப் பற்றிய இப்படிப்பட்ட தட்டையான படிமத்தை உடைத்து அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களை நகமும் சதையுமாகச் சித்தரித்து அவர்களின் தொழில் சார்ந்த சிக்கல்களையோ, தினமும் சந்திக்கவேண்டியிருக்கும் சவால்களைப் பற்றியோ பேசவே இல்லை என்று எனக்குப் பட்டபோது, கம்ப்யூட்டர் துறையில் இருக்கும் தமிழ்ப் படைப்பாளன் என்ற முறையில் இவர்களைப் பற்றிய ஒரு முறையான பதிவை, என் படைப்பாக்கங்களின் ஒரு பகுதியாக முன்வைக்க உத்தேசித்தேன்.

நண்பர் பா.ராகவன் திடீரென்று தொலைபேசியில், தான் சார்ந்திருந்த பத்திரிக்கையின் இணையதளத்தில் நான் உடனே ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, அது கம்ப்யூட்டர் துறை பற்றியதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு யோசனையையும் தெரிவித்தார்.

'ஐந்து நிமிடத்தில் திரும்ப ஃபோன் செய்கிறேன்... தலைப்பு சொல்லுங்க'

நான் என் கம்ப்யூட்டரில் வழக்கமான வேலையில் மூழ்கி இருந்தேன். புராஜக்ட் மேனேஜ்மென்ட் தொடர்பான சிக்கலான வேலைப் பங்குபிரிப்புக்கு இடையே என்ன காரணத்தினாலோ அந்த இயந்திரப் பிசாசு ஸ்தம்பித்து நின்று போக நான் அதை திரும்ப இயங்க வைக்க ரீபூட் செய்து கொண்டிருந்தபோது உதயமான தலைப்புதான் 'மூன்று விரல்.'

திடீரென்று இயக்கம் மறைந்து உறைவதும், திரும்பச் செயலபடத் துவங்குவதும் கம்ப்யூட்டரின் குணாதிசயம் மட்டுமல்ல, அதோடு சம்பந்தப் பட்டவர்களின் வாழ்க்கை நியதியும்கூடத்தான் என்று தோன்றிய அந்தக் கணத்தில் உருவான கதையே இது.
இந்த நாவலில் வளைய வருகிறவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள். ஆனால், தலையில் கொம்பு முளைக்காத, சட்டைப் பையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுக்கள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும் கோட்டும் நுனி நாக்கு ஆங்கிலமுமாக சூயிங்கம்மை மென்றபடி தரைக்கு மேலே சரியாக பத்து சென்டிமீட்டர் உயரத்தில் மிதக்காத சாதாரண மனிதர்கள் இவர்கள்.

'அவனா... அமெரிக்காவிலே பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியிலே மாசம் பத்து லட்சம் சம்பாதிச்சு லாஸ் ஏஞ்சல்ஸிலே வீடும் காரும் வெள்ளைக்காரி தொடுப்புமா இருக்கானாம்..' என்று பொருமி வியத்தலும், 'கம்ப்யூட்டர்காரங்களுக்கு எல்லாம் அஷ்டமத்திலே சனி பிடிச்சு தொழிலே நசிஞ்சு போய், அவனவன் ராயர் காப்பி ஹோட்டலிலே வாழைக்காய் நறுக்கிக் கொடுத்திட்டு இருக்கானாம்... நல்லா வேணும்' என்று இருமி எச்சில் உமிழ்ந்து இகழ்தலும் இங்கே இலமே!

இருபது வருடங்களாக இந்தத் துறையில் இருக்கும் அனுபவம், எனக்கு இந்த நாவலை எழுத மிகவும் பயன்பட்டாலும், அது மட்டும் 'மூன்று விரல்' இல்லை.

எல்லாப் படைப்புகளும் எழுதியவனை மீறி ஏதோ சொல்ல முற்படுகின்றன. முற்பட வேண்டும். அவற்றோடு ஊடாடும் வாசகர்கள், சொல்லப்பட்ட கதையையும் கடந்து தங்கள் எண்ண ஓட்டங்களை விரிக்க வழி செய்வதோடு எழுதியவனின் கடமை முடிந்து விடுகிறது.


இந்த முன்னுரையையும் இதோடு முடித்துக் கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.

கீழாம்பூர் ரங்கநாதன் சுதர்சன் -ஒரு மென்பொருள் வல்லுனன். சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியின் சார்பாக லண்டனிலிருக்கும் நாய் வளர்ப்போர் சங்கத்துக்கான் மென்பொருளை உருவாக்கும் பணியிலிருந்தவன். மென்பொருள் உருவாகி முடிந்ததும் அதை வாடிக்கையாளருக்கு இயக்கிக் காண்பித்து அவர்கள் சுட்டிக் காட்டும் குறைகளை உடனடியாகக் களைந்து பின் அவர்களின் ஒப்புதல் பெற்று வரும் - யூ.ஏ.டி (யூசர் அக்சப்டன்ஸ் டெஸ்ட்) என்ற அக்னிப் பரிட்சைக்காக லண்டன் செல்கிறான். வெற்றிகரமாக அதை முடித்துக் கொண்டு அங்கேயிருந்து கிளம்புவதற்கு முன்னரே அவன் வேலை பார்க்கும் கம்பெனி கைமாறி விடுகிறது. இதற்கு இடையில் சந்தியா எனும் லண்டன் வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணைச் சந்தித்து காதல் கொள்கிறான். இந்தியா திரும்பி வருகையில் ரயில் சிநேகம் போல விமானத்தில் அறிமுகமாகும் ஒரு பக்கத்து சீட் சர்தார் தானும் ஒரு மென்பொருள் கம்பெனி ஆரம்பிக்கவே சென்னை போவதாகவும் அதில் சேர விருப்பமா என்று கேட்கிறார். சென்னை வந்தவுடன் புது நிர்வாகமும் சுதர்சனைத் தன் கம்பெனியிலேயே இருக்கச் சொல்லுகிறது. அதை மறுத்து புது கம்பெனியில் சேரும் சுதர்சன் அக்கம்பெனியின் சார்பில் பாங்காங் போய் வேலையில் சேருகிறான். தன்னுடன் ஒரு சிறு குழுவைத் தன் பொறுப்பில் அழைத்துச் செல்கிறான். அங்கு அவன் சந்திக்கும் பிரச்சனைகள், ஊரில் அவன் அப்பா ஒரு நெருக்கடிக்குள்ளாவது, அப்போது தான் அருகிலிருக்க முடியவில்லையே என்று அவன் தவிப்பது, அவனுக்கு ஒரு பெண் பார்த்து நிச்சயம் செய்யத்துடிக்கும் தாயிடம் தன் காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பது, அவனது காதலி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று நாவல் சுவாரசியமாகப் பயணிக்கிறது.

பொதுவாகவே மென்பொருளில் ஆன்சைட் எனப்படும் வாடிக்கையாளரின் இடத்திலேயே போய் வேலை செய்யும் வாய்ப்பு இரு முனைக் கத்தியைப் போன்றது. வெளிநாடென்பதால் கம்பெனி தரும் அலவன்ஸ் அதிகமாக இருக்கும் - அதை சேமித்து ஊருக்கு அனுப்பினால்(இந்த ஆல் பெரிய இக்கன்னா.. இங்க கோட்ட விடறவங்க ரொம்பப் பேரு) அது பெரிய சேமிப்பாகத் தான் இருக்கும். ஆனால் இதற்காக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளும் நிறைய. வெளிப்படையான பிரச்சனைகளான இந்திய சமையல் சாமான்கள்/காய்கறிகள்/கோவில்கள் போன்றவற்றின் தேவையெல்லாம் அநேகமாய் எல்லா நாடுகளிலும் தீர்க்கப் பட்டாகிவிட்டது. ஒரு சின்ன ஊரில் கூட இரண்டு இந்திய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்கள்(இது பெரும்பாலும் குஜராத்திகளால் நடத்தப்படுகிறது), கோவில்கள்(இதில் பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தவர் பங்கு அதிகம்) போன்றவை இருக்கின்றன. சமீபத்தில் பொன்ஸ் சான் பிரான்ஸிஸ்கோவில் அரசு நூலகங்களிலேயே தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதாகச் சொல்லியிருந்தார். அந்த அளவு புற வசதிகள் நாம் வீட்டை விட்டுத் தொலைவிலிருக்கிறோம் என்பதை மறக்கச் செய்கின்றன என்பது உண்மைதான். ஆனால் மனவியல் ரீதியில் சந்திக்க நேரும் பிரச்சனைகள் ஏராளம். நமக்கு ஒரு பிரச்சனை என்றால் வீட்டிலிருப்போரின் அருகாமை கிடைக்காது போவது, நாம் இங்கேயிருக்க வீட்டில் ஏதேனும் பிரச்சனை என்றால் அடிக்கடி தொலைபேசி அவர்களை நச்சரிப்பதல்லாது உருப்படியாய் எதுவும் செய்து உதவ முடியாத கையறு நிலை என்று பல காரணிகள் மனோரீதியாக நம்மைச் சோர்வுறச் செய்யும். இது மணமாகாத இளையோருக்கு. மணமாகி, பின் துணையை இங்கே விட்டுவிட்டுத் தவிப்பது ஒரு ரகம். கூட அழைத்துப் போனாலும் கூட பிள்ளைப்பேறு, குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களில் பெரியவர்கள் வழிகாட்டுதலுக்கும் ஒத்தாசைக்கும் ஏங்குவது, அப்படியே பெற்றோரை டூரிஸ்ட் விசாவில் அழைத்துப் போவதென முடிவு செய்தாலும் உங்க அப்பா அம்மாவா இல்லை என் அப்பா அம்மாவா என்று முடிவு செய்வதிலிருந்து ஆரம்பித்து ஏகப்பட்ட சிக்கல்கள் - இப்படி வெளிநாடு வாழ் மென்பொருள் ஆசாமிகளின் மனோரீதியிலான பிரச்சனைகளின் பட்டியல் ஆகப் பெரிது.

வேலையிலும் அழுத்தம் அதிகம். குறிப்பாக - யூ.ஏ.டி எனப்படும் வாடிக்கையாளர்கள் மென்பொருளை நேரடியாகச் சோதித்து ஏற்றுக் கொள்ளும் கட்டத்தில் மொத்த குழுவின் தவறுகளுக்கும் நாம் அங்கே நின்று சப்பைக்கட்டு கட்டியாக வேண்டும். உடனுக்குடன் சரி செய்து(தானே செய்துவிடும் ஆட்களும் உண்டு - இல்லை உடனடியாக ஆஃப்ஷோர் மக்களை அழைத்து முடிந்த மட்டும் கத்தித் தீர்த்துவிட்டு அவர்களைச் சரிசெய்யச் சொல்வதும் உண்டு) மீண்டும் அவர்களை விட்டே சரிபார்க்கச் சொல்லியாக வேண்டும். இந்தக் கட்டம் கிட்டத்தட்ட நெருப்பில் நிற்பது போன்ற விஷயம். இதையெல்லாம் நாவல் தெளிவாகவே சொல்கிறது. அதற்காக ஏதோ மென்பொருள் துறை பற்றிய பாடம் போலத்தான் இருக்குமாக்கும் என்று நினைத்துவிட வேண்டாம் - எங்கேயும் வலிந்து எந்த விஷயமும் திணிக்கப் படவில்லை. கதையோட்டத்திலேயே நாயகனது பணிச்சுமை, வீட்டை விட்டுத் தள்ளியிருக்கும் நிலையில் வீட்டுப் பிரச்சனைகளில் தன்னால் எதுவும் செய்ய முடியாத தவிப்பு என்று ஏகப்பட்ட விஷயங்கள் நாவல் முழுவதும் விரவியிருக்கிறது.

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் வாழ்வென்பது முடங்கி நின்று விடக்கூடாதென்பதையும் எந்தப் புள்ளியிலிருந்தும் அது மீண்டும் ஆரம்பிக்கப் பட வேண்டியதுதான் என்பதையுமே நாவல் சொல்கிறது. அங்கங்கே முருகனின் வழக்கமான மாஜிக்கல் ரியலிசமும் உண்டு.

Monday, October 22, 2007

நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

அல்லது நீ எல்லாம் ஒரு ஆம்பளையா போன்ற கேள்விகளை நாம் வாழும் சமூகத்தில் பல முறை பல சந்தர்ப்பங்களில் கேட்க நேர்ந்திருக்கலாம். ஆனால் இரண்டு கேள்விகளும் எழும் விதத்தை கூர்ந்து பார்த்தால் ஒரு பெரிய வித்தியாசம் தெரியும் - நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? இதுக்கு பதில் நீ புடவை கட்டிக்கலாம்/வளையல் போட்டுக்கலாம் போன்ற வாசகங்கள் பெரும்பாலும் (பெரும்பாலும் என்ன எப்போதுமே) ஒரு ஆணின் செயல் குறித்த விமர்சனமாய்த்தான் அமையும். இதைக் கூட தூக்க முடியல/இவனைக்கூட அடிக்க முடியல/இவ்வளவு கூட சம்பாதிக்க முடியல போன்ற குறைபாடுகளுக்கு பதிலாகத்தான் மேற்ச்சொன்ன அந்தக் கேள்வி - அவரது பாலியல் தன்மையைக் சந்தேகிக்கும் கேள்வி முளைக்கும். அதே பெண்ணுக்கு இவ்வகைக் கேள்வி வருவது செயலுக்கான எதிர்வினையாகவும் சமயங்களில் இருக்கும்தான். ஆனால் பெரும்பாலும் இக்கேள்வி ஒரு பெண்ணுக்கெதிராய் எழுவது அவளது புறத்தோற்றத்தைக் குறித்துதான். தோற்றத்தை வைத்தே ஒரு பெண் ஒழுக்கமான பெண்ணா இல்லையா என்பதிலிருந்து சகலத்தையும் முடிவு செய்து விடுவார்கள் சில அதிமேதாவிகள். வலையுலகில் கூட சமீபத்தில் இப்படியான கருத்தை ஒருவர் வாந்தி எடுத்திருந்தார்.

சமீபத்தில் 'மிருகம்' என்கிற படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை பத்மப்ரியாவை கை நீட்டி அடித்ததாகவும் செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும் டைரக்டர் சாமி மீது புகார் எழுந்தது. அவருக்கு அபராதமும் இப்படத்தைத் தவிர்த்து வேறு படங்கள் எடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை தடையும் விதிப்பதாகத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. சரியாக நடிக்காததற்காக ஒரு நடிகரை அடிக்கும் உரிமை ஒரு இயக்குனருக்கு இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நடிகர்களுக்கே தெளிவான, ஒற்றுமையான கருத்தில்லை. ஒரு பாரதிராஜாவோ பாலச்சந்தரோ அடிப்பதைப் பெருமையாகக் கருதும் இவர்களே ஒரு புது இயக்குனர் அதைச் செய்யும் போது பொங்கியெழுகிறார்கள். யார் அடித்தாலும் யாரை அடித்தாலும் அது மனிதத் தன்மையற்ற செயல்தான் என்பதை இவர்களால் அழுத்திச் சொல்ல முடியவில்லை - அப்படிப் பார்த்தால் சரியாக வேலை செய்யாத யாரையும் வேலை வாங்கும் நிலையிலிருக்கும் ஒருவர் அடித்து விடலாமா என்று கேட்டால் உடனே ஒரு சப்பைக் கட்டு வரும் - அவங்க எல்லாம் கலைஞர்கள். அவங்க உணர்ச்சி வசப்படத்தான் செய்வார்கள்னு. இது போன்ற சப்பைக்கட்டுகளைக் கேட்கும்போதே பற்றிக்கொண்டு வருகிறதென்றாலும் இதைப் பற்றித் வேறு இடத்தில் பேசலாம். இப்போது சொல்ல வந்தது அவர் அந்த பாலியல் ரீதியிலான தொந்தரவு குறித்த புகாருக்கு அவர் கொடுத்திருக்கும் விளக்கங்களைப் பற்றி.


"நான் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகச் சொல்கிறார்களே... மொத்தம் அறுபது நாள் ஷூட்டிங் நடந்துச்சு. ஐம்பத் தொன்பது நாள் சும்மா இருந்த நான், கடைசி நாள் மட்டுமா டார்ச்சர் கொடுத்திருப்பேன்..? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவரைப் பார்த்தால் எனக்கு செக்ஸுவல் ஃபீலிங் வரவேயில்லை. அவர் தாடையிலும் மேலுதட்டிலும் ரோமங்கள் இருப்பதை ஒருநாள் கேமரா க்ளோசப் ஷாட்டில் பார்த்துவிட்டு, ‘போய் ஷேவ் பண்ணிட்டு வா’ என்று சொன்னேன். அதற்கு, ‘நான் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்திலேயே நடிச்சவ’ என்று எகத்தாளமாகப் பதில் சொன்னார். நான் மட்டும் அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததா ‘மிருகம்’ பட யூனிட்டில் உள்ள ஒருத்தரோ, குறண்டை கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தரோ சொல்லட்டும்... நான் சினிமாவை விட்டே ஓடிப் போயிடறேன். இல்லேன்னு மறுத்தா, பத்மப்ரியா சினிமாவை விட்டுப் போவாரா?

பொதுவாக, நல்ல நடத்தை உள்ள பெண்கள் இப்படியெல்லாம் பேசமாட்டார்கள். உண்மையாகப் பார்த்தால் பத்மப்ரியாவுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். மதுரை லேக் வியூ ஹோட்டலில் ரூம் போட்டிருந்தபோதுகூட, சமீபத்தில் ரிலீஸ் ஆன படத்தில் அவருடன் நடித்த ஒரு நடிகர் வந்து தங்கிவிட்டுப் போனார். அதற்கு நான் ஏதாவது சொன்னேனா?" என்று காட்டம் காட்டுகிறார் சாமி.
இது விகடனில் அவர் தந்திருக்கும் மறுப்புச் செய்தி.

இவரது கூற்றில் இரண்டு விஷயங்கள் கவனிக்கப் படவேண்டியவை. ஒன்று அவர் பாலியல் ரீதியாக என்னைக் கவரவில்லை - எனவே நான் எப்படி அவரிடம் அத்து மீறியிருப்பேன் என்கிற கேள்வி. அடுத்தது நல்ல நடத்தை உள்ள பெண்கள் இப்படியெல்லாம் பேச மாட்டார்கள் என்கிற அனுமானம், அதை வலுப்படுத்த ஒரு சில காரணங்களையும் சொல்லுகிறார். இரண்டுமே வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டிய விஷயங்கள். ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினால் - நான் அப்படிச் செய்யவில்லை என்று சொல்லலாம். அதற்கு சாட்சியங்களை குறிப்பிடலாம். நான் அப்படியானவன் இல்லை என்று சொல்லலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு அவளொன்றும் அழகில்லை, என் பார்வையில் பெண்ணாகவே தோன்றவில்லை அதனால் நான் எப்படி அவளிடம் அப்படி நடந்து கொண்டிருக்க முடியும் என்கிற கேள்வி தன் நடத்தைக்கும் சேர்த்து பெண்ணையே பொறுப்பாளி ஆக்கும் வழக்கமான ஆணாதிக்கத் திமிரின் வெளிப்பாடு. அப்படியானால் அப்பெண் அழகானவளாய் இருந்திருதால், இவரது வரையரைகளுக்குட்பட்ட பெண்ணாயிருந்திருந்தால் அப்போது இவர் அத்துமீறியிருந்திருப்பார் இல்லையா? அப்போதும் அப்பெண் அழகாயிருந்தது அவள் தவறுதான் என்றே பதில் சொல்லியிருந்திருப்பார் அல்லது அவள் தன் அழகை வெளிப்படுத்தும் விதமாக என்னைத் தூண்டும் வண்ணம் உடையணிந்தார் என்று சொல்லிவிட்டுப் போயிருந்திருப்பார் இல்லையா?

அடுத்தது நல்ல நடத்தையுள்ள பெண்கள் இப்படியெல்லாம் பேசமாட்டார்கள் என்று சொல்வது - என்ன பொருள் இதற்கு? நல்ல நடத்தையுள்ளவளிடம் எந்த ஆணும் தவறாக நடக்கத் துணிய மாட்டான் என்பதா? அப்படியானால் பலாத்காரத்திற்கு உள்ளான எல்லாப் பெண்களும் தவறான நடத்தை உள்ளவர்களா? அல்லது நல்ல நடத்தை உள்ள பெண் இப்படியெல்லாம் தனக்கு நடந்ததை ஊரைக் கூட்டிச் சொல்ல மாட்டாள் என்று சொல்ல வருகிறாரா? அடடடடா..... என்ன ஒரு அருமையான இலக்கணம்.. அற்புதம்.... அபாரம்.... இது வந்து அறிவுள்ளவர்களின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் ஆடை ஒன்றை அணிந்து நகர்வலம் போன மன்னனின் கதையை நினைவு படுத்துகிறது. இப்படிச் சொல்லிவிட்டாள் எந்தப் பெண் தனக்கு நடக்கும் கொடுமையைப் பற்றி வாயைத் திறப்பாள்? சொன்னால் தன்னை நடத்தை கெட்டவள் என்று சமூகம் சொல்லிவிடுமே என்கிற பயம் வந்துவிடுமில்லையா? அப்புறம் சர்வசுதந்திரர்களாய் யாரும் யாரையும் பாய்ந்து குதறலாமில்லையா?

இந்த இரு கருத்துக்களையும் சொல்லும் முதல் ஆள் இல்லை இந்த சாமி. ஏற்கனவே இச்சமூகத்தில் புரையோடிப் போன கருத்துக்கள்தான் இவையிரண்டும். ஆனாலும் ஒரு பொது ஊடகத்தில் ஒரு மனிதர் இப்படி ஒரு நச்சுக் கருத்தை கொட்டும் போது அதை எதிர்த்துப் பேச யாருமே இல்லையா? இல்லை யார் கண்ணிலும் இச்செய்தி படவேயில்லையா? எங்கே போனார்கள் நம் திரையுலகப் பெண்ணுரிமைப் புலிகள் எல்லோரும்? எல்லோரும் பாவம் அவரவர் பங்குபெறும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்கள் போலிருக்கிறது...

Thursday, October 18, 2007

அடங்க மறு


"அடங்க மறு - இந்த வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்." இப்படிச் சொல்லும் ஒருவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அநேகமாகத் தீவிரவாதியென்று - இல்லையா? அதிலும் இப்படிச் சொல்பவர் ஒரு இளம் பெண்ணாயிருந்தால்???!?!?! அடங்காப்பிடாரி, காளி என்றெல்லாம் இல்லையா? ஆனால் இப்படிச் சொல்பவர் ஒரு கவிஞர், பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர், மென்மையாகப் பேசுபவர் என்றெல்லாம் யாரேனும் சொன்னால் என்ன நினைக்கத் தோன்றும்?

சரி, விஷயத்துக்கு வருகிறேன். சென்னை ஐ.ஐ.டியைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். கல்லூரி மாணவர்களைக் கேட்டால் அங்கே நடக்கும் சாரங் எனப்படும் வருடாந்திரக் கொண்டாட்டத்தைப் பற்றி கண்கள் விரியப் பேசுவார்கள். மத்திய/உயர் மத்தியதர வர்க்கத்துப் பெற்றோரைக் கேளுங்கள் - அவர்கள் குழந்தைகளுக்கு ஐ.ஐ.டியில் இடம் கிடைப்பது ஏதோ சொர்க்கத்தில் இடம் கிடைப்பதற்குச் சமானமானதென்று பேசுவார்கள். குழந்தைகளை 9ஆம் வகுப்பு படிக்கையிலேயே ஐ.ஐ.டி கோச்சிங் வகுப்புகளுக்கு அனுப்பி சுளுக்கெடுப்பார்கள். இப்படியெல்லாம் பூலோக வைகுண்டமாகக் காட்சியளிக்கும், அடர்ந்த பசுஞ்சோலைக்கு நடுவே பலரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கும் இந்த ஐ.ஐ.டி நிறுவனத்துக்கும் ஒரு இருண்ட முகமுண்டு. அதை வெளியிலிருந்து நாமெல்லோரும் விமர்சிப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று சந்திப்பது என்பார்களே, அது போல அங்கேயே வேலை பார்த்துக் கொண்டு, அவ்வளாகத்திலேயே வசதிக்குறைவான ஒரு வீட்டில் குடியிருந்து கொண்டே தொடர்ந்து பல அநீதிகளுக்கு எதிராகப் போராடி வருபவர் வசந்தா கந்தசாமி. இவரைப் பற்றிய குறிப்புகளுக்கு இந்தச் சுட்டிகளைப் பாருங்கள்.


http://archives.aaraamthinai.com/women/apr2000/apr18c.asp

http://bsubra.wordpress.com/2006/08/20/international-woman-of-the-year-vasantha-kandasamy/

இத்தகைய தாயின் வழிகாட்டுதலில் வளர்ந்த பெண் எப்படியிருப்பார்? சமூக அநீதிகளைக் கண்டு குமுறும் ஒரு பொறுப்பான குடிமகளாக, பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதிக்கத் துடிக்கும் ஒரு போராளியாக அதே சமயம் அதற்காக கத்தியைத் தீட்டாது புத்தியைத் தீட்டும் ஒரு பக்குவப் பட்டவராகத்தானே இருப்பார்? அப்படிப் பட்டவர்தான் மீனா கந்தசாமி. அவள் விகடனில் வெளியாகியிருக்கும் அவரது பேட்டி கீழே.

அடங்க மறு’! - எனக்கு ரொம்பப் பிடிச்ச வாசகம் இது!’’ என்று எடுத்த எடுப்பில் அதிர்ச்சி தருகிறார் மீனா கந்தசாமி.

நாம் அதிர்வதைத் துல்லியமாக உணர்ந்தவாறே, ‘‘அதுக்காக நான் திமிர் பிடிச்ச பொண்ணுனு அர்த்தமில்லை. அடக்குமுறையைக் காட்டுறவங்ககிட்ட அடங்க மறுக்குற பொண்ணு.. மனுஷங்கனா அப்படித்தானே இருக்கணும்! இல்லைன்னா நமக்கும் சர்க்கஸ்ல வித்தைகள் செய்றதுக்காகவே பயிற்று விக்கப்படுற விலங்குகளுக்கும் பெருசா என்ன வித்தியாசம் இருந்துடப் போகுது.. சொல்லுங்க!’’

ஆணித்தரமான கருத்துக்களைக் கொண்ட.. அவற்றை அதே உறுதியுடன் பேசுகிற 23 வயது இளம்பெண்தான் மீனா! வளர்ந்து வரும் கவிஞர்.. எழுத்தாளர்.. சமூகவியலில் ஆராய்ச்சி மாணவர்.. பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்.. என பல கோணங்களிலும் மிளிர்பவர்!

ஆழமான கடல், தன் அலைகளை நொடிக்கொரு தரம் கரைக்கு அனுப்பி தன் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதுபோல, வார்த்தைகளின் கோர்வையில் அப்பிக் கொண்டு வெளிப்படுகிறது சமூக சிந்தனை! ஒரு மஞ்சள் வெயில் மாலையில் அவரைச் சந்தித்தோம்..

‘‘நான் ரொம்ப வித்தியாசமான பொண்ணுதான். எல்லாரையும் போல விளையாட்டுத்தனமான பொண்ணா என்னால இருக்க முடியலை. அதுக்கு நான் வளர்ந்த சூழல்தான் காரணம். என் அம்மாவும் அப்பாவும் சின்ன வயசுல-யிருந்து என்னை அளவுக்கு அதிகமான சுதந்திரத் தோட வளர்த்தாங்க. எல்லா விஷயங்களையும் சுயமா யோசிக்கிற மாதிரி என்னைப் பழக்கியிருந்-தாங்க.


வீட்டுல எந்த ஒரு விஷயம் பத்தியும் ஆரோக்கியமா என்னால விவாதிக்க முடியும். அதனாலயே விவாதத்துக்கு இடமே இல்லாத பள்ளிக்கூடமும் உருப் போட்டு மார்க் குவிக்க வைக்கிற நம்மளோட கல்வி முறையும் எனக்குப் பிடிக்காம போய்டுச்சு. இருந்தாலும், ப்ளஸ் டூ வரை ரெகுலர் ஸ்கூல்லதான் படிச்சேன்..’’ என்கிறவர், அதன் பிறகு அஞ்சல் வழியில் படித்து, எம்.ஏ முடித்திருக்-கிறார். இப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி. செய்கிறார்.

‘‘ஏதாவது ஒரு டிகிரி முடிக்கணும்னு எல்லாரும் சொன்னாங்கனுதான் படிச்சேன். பேருக்குத்தான் கோர்ஸ்ல சேர்ந்தேனே தவிர, புத்தகத்தைத் தொடவே இல்லை. கோர்ஸ் முடியுற தேதியில மொத்தமா 15 பேப்பரை யும் ஒண்ணா எழுதி பாஸானேன்.

அதுல இன்னொரு சுவாரஸ்யமும் நடந்தது. அந்த பதினஞ்சு பேப்பர்ல ஒண்ணுல, நான் எழுதின ஆராய்ச்சி கட்டுரையே எனக்கு பாடமா வந்திருந்தது!’’ என்று இயல்பாகச் சொல்லி சிரிக்கிற மீனா, ‘தலித்’ என்ற பத்திரிகையில் சுமார் இரண்டு வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார். தலித்துகளின் பிரச்னை பற்றி நிறைய எழுதியிருப்-பதோடு, ‘தலித் இலக்கிய’ புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் இருக்கிறார்.

‘‘ ‘விடுதலைச் சிறுத்தைகள்’ அமைப்பின் செயலாளர் தொல்.திருமாவளவனின் கட்டுரைகளை யும் பேச்சுக்களையும் நான் மொழி பெயர்த்து புத்தகமா வெளியிட்டிருந் தேன். அது பலத்த விமர்சனங் களையும் பாராட்டுக்-களையும் வாங்கித் தந்துச்சு.

அது தந்த உற்சாகத்தால ‘புலனாய்வுப் பத்திரிகையியல்’ பத்தின ஒரு புத்தகத்தையும் மொழிபெயர்ப்பு செஞ்சேன். ‘தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் போர்டு’க்காகவும் ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பு செஞ்சேன்..’’ என்று பேசிக் கொண்டே போனவரை அவருடைய அம்மா கொண்டு வந்த தேநீர் ஆசுவாசப்-படுத்தியது. அவரை நம்மிடம் அறிமுகப்படுத்தினார்..

‘‘அம்மா வசந்தா கந்தசாமி, ‘கல்பனா சாவ்லா’ விருது வாங்கினவங்க.. மிகப் பெரிய கணித மேதை. அப்பாவும் டாக்டரேட் பண்ணினவங்க.. நான் இப்போ என்னவா இருக்கேனோ அப்படி வளர என்னை அனுமதிச்சவங்க..’’ என்கிறார் பெருமிதத்துடன்.

இவரின் தேடல்களும் கனவுகளும் ரொம்பப் பெரியவை! அவற்றைப் பற்றி விவரிக்கும்போது நெருப்புப் பிழம்பாகிறது முகம்!

‘‘உலகத்துல எந்த மூலையில அநீதி நடந்தாலும் பாரதி சொன்ன ‘மோதி மிதித்து விடு பாப்பா’தான் என் ஞாபகத்துக்கு வரும். நம்ம ஊர்கள்ல இன்னும் சாதியின் பேரால நடத்தப்படுற கோர தாண்டவங்கள் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு.. அதையெல்லாம் பார்த்து மனசு துடிக்கும். கீழ்வெண்மணி, வாச்சாத்தி, மேலவளவு, கொடியன்குளம், திண்ணியம்னு சாதிகளோட பேரால அடக்குமுறைகள் நடக்குறப்பல்லாம் ‘இதுக்கு ஏதாவது செய்ய மாட்டோமா’னு எனக்குள்ள துடிக்கிற துடிப்புதான் மனித நேயத்துக்-கான குரலா என்னோட எழுத்துக்கள்ல வெளிப்படுது. எழுத்துங்கறது என் கோபங்களை பதிவு செய்ற ஒரு முயற்சி.. என் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலா என்னோட எழுத்து இருக்கு. அந்த வகையில எழுத்து எல்லோருக்குமான ஆக்க சக்தினு சொல்வேன்.’’

தீர்க்கமாகப் பேசுகிற மீனா கந்தசாமியின் முதல் கவிதைத் தொகுப்பான ‘டச்’ சமீபத்தில் வெளி வந்திருக்கிறது. அதில் இடம்-பெற்றுள்ள ‘மஸ்காரா’ என்கிற கவிதை, மத்திய அரசு நடத்திய தேசிய அளவிலான கவிதைப் போட்டியில் முதல் பரிசையும் வென்றிருக்கிறது.

மீனாவின் கவிதைகளைப் படித்து ஆத்மார்த்தமாக பாராட்டி இருக்கிறார் பிரபல கவிஞர் கமலா தாஸ்! அவரே இவரின் ‘டச்’ புத்தகத்துக்கு அணிந்துரையும் எழுதி, அதில் ‘அடுத்த 50 ஆண்டுகளுக்கான எழுத்துப் பார்வை கொண்டவர் மீனா’ என்று பாராட்டுப் பத்திரமும் வாசித்திருக்கிறார்.

மீனாவின் சமீபத்திய மொழிபெயர்ப்பு, அவருக்கு இன்னும் உத்வேகம் கூட்டியிருக்கிறது. பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தைத்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார் மீனா!

‘‘இலக்கியத்துல கொடி நாட்டவோ பெரிய எழுத்தாளர்னு பேர் வாங்கவோ நான் எழுத வரலை. ஒடுக்கப்படுறவங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவங்க நம்மளை மாதிரியான பெண்கள் தான். ஏன்னா, வன்முறை வீடுகள்ல இருந்துதான் ஆரம்பமாகுது. தன் மனைவியை சக மனுஷியா பாவிக்காத ஒரு ஆணை எதிர்க்கிறதும் சாதி பேதம் பார்க்கிறவனை எதிர்க்கிறதும் ஒண்ணு தான். நான் அதைத்தான் செய்துட்டு இருக்கேன்’’ என்கிறார் அழுத்தம் திருத்தமாக!


சரி, ஏற்கனவே பத்திரிக்கையில் வெளியாகியிருக்கும் இந்தப் பேட்டியை இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? பொதுவாகவே வெகுஜனப் பத்திரிக்கைகளில் ஐ.ஐ.டியைப் போன்ற புனித பிம்பங்களுக்கு எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை/ அவர்களோடு தொடர்புடையவர்களைப் பற்றியெல்லாம் செய்திகள் வெளிவருவது என்பது அபூர்வம். அதுவும் பொம்பளைங்க பத்திரிக்கையில் எல்லாம் இப்படி ஒரு செய்தி வருவது என்பது யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு விஷயமல்லவா? எனவே நமக்குத் தெரிந்தவர்கள் நாலு பேர் கண்ணிலாவது அச்செய்தி விட்டுப் போய்விடாதிருக்கட்டுமே என்றுதான் இந்தப் பதிவு. அவ்வளவுதான்.

நன்றி - அவள் விகடன்.

Tuesday, October 16, 2007

நீதி

காளிமுத்துவுக்கு விடியலிலேயே முழிப்புக் கொடுத்துவிட்டது. எழுந்தென்ன செய்துவிடப் போகிறோம் என்று எண்ணியதால் அசையாது படுத்திருந்தார். சூரியன் எழும்பியான பின்தான் வீட்டில் அரவம் கேட்டது. மெல்ல எழுந்து வீட்டைச் சுற்றிக் கொண்டு கிணற்றடிக்குப் போய் பல்துலக்கி முகம் கழுவி விட்டு வருகையில் வீட்டு உள்ளாலேயே வந்தார். அது அவர் தனது மருமகளுக்கு தான் எழுந்தாயிற்றென்பதை உணர்த்தச் செய்வது. எதிர்பார்த்தது போலவே சற்றே நீர்க்கத் தயாரான காபி கட்டிலுக்கருகிலிருக்கும் ஸ்டூல் மேல் வைக்கப் பட்டது. சாரதம், அவரது தர்மபத்தினி, அவளிருக்கையில் இவ்வகையான காபி வேலைக்கு வரும் பெண்மணிக்குத்தான் வழங்கப்பட்டு வந்தது இவ்வீட்டில். இவர் கூட குஷியாய் இருக்கையில் அவளை இதைச் சொல்லி கிண்டுவார். அவள் மூக்கு விடைக்க "ஆமா, நீங்க கப்பலோட விடறதை நான் கொட்டை நூத்துதானே சேக்க வேண்டியிருக்கு" என்று பதில் கொடுக்கத் துவங்கினால் சிரித்துக் கொண்டே நழுவி விடுவார். அவருக்குத் தெரியும் தன் பெருந்தன்மையென்று எண்ணிச் செய்யும் பல செயல்கள் அவள் வரையில் ஏமாளித்தனமென்று. வாதிட்டு அவளுக்கு விளக்கிவிட முடியாது - எது பற்றிப் பேசினாலும் அவரது அம்மாவின் கொடுமையிலிருந்துதான் பதில் பேசவே ஆரம்பிப்பாள். அதும் வளர்ந்த பிள்ளைகள் முன்னால் பழசைக் கிளறி சண்டையெல்லாம் போட்டால் நல்லாவா இருக்கும் என்று பேசாது சிரித்தே மழுப்பி விடுவார் அவளை எப்போதும். அந்த மகராசி போன பின்னால் மருமகள் கையில் வீட்டு அதிகாரம் போய்ச் சேர்ந்தது. அதன் பின் இந்த இரண்டாந்தர காபியும், வேலை ஒழிந்த நேரத்தில் சோறும்தான் அவருக்குக் கிடைத்தது. அதுவும் பென்ஷனென்று ஒன்று வருகிறதோ, இந்த மட்டிலாவது பிழைப்பு ஓடுகிறதோ என்று எண்ணிக் கொண்டார்.

பேரப் பிள்ளைகள் பள்ளிக்குக் கிளம்பியான பின் பின்கட்டு ஒழிந்திருக்கும் நேரமாய்ப் போய் குளித்து முடித்து வந்தார். பையனும் சைக்கிளை மிதித்துக் கொண்டு அலுவலகம் கிளம்பிப் போனான். போகும் முன் செய்தித் தாளை கொண்டு வந்து அவரது கட்டிலருகே வைத்துவிட்டுப் போனான். அதை எடுத்து வரிவிளம்பரம் வரை ஒரு எழுத்து விடாது படித்து முடித்தார். மருமகள் கமலம் வாசல்படியருகே வந்து நின்று திண்ணையை எட்டிப் பார்த்து "சாப்பிட வாங்க" என்றாள். "ம்.ம்.." என்று முனகிக் கொண்டு படித்துக் கொண்டிருந்த தாள்களை மெல்ல நீவி பக்கங்களை வரிசையாய் அடுக்கி மடித்து எடுத்துக் கொண்டார். எழுந்து கூடத்தை நோக்கி நடக்கத் துவங்கினார். சாப்பாடு முடிந்து வந்து கட்டிலில் உட்கார்ந்தவருக்கு மீண்டும் ஒரு சந்தேகம் வரவே மீண்டும் வீட்டினுள் சென்று பத்திரிக்கையை எடுத்து வந்து ஒரு குறிப்பிட்ட செய்தியை மீண்டும் படிக்கலானார். உயர்நீதிமன்றத்தில் நடந்து முடிந்த ஒரு வழக்கைப் பற்றிய செய்தி அது. ஒரு மூலையில் 10 வரிகளுக்கு மிகாமல் அதிக விவரமில்லாது போடப்பட்டிருந்தது.

காளிமுத்து ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர். வேலையிலிருந்த போது வாங்கிய சம்பளத்தில் பாதி பென்ஷனாய் கிடைக்கும் என்கிற அளவில்தான் அவரது புரிதல் இருந்தது. வேலை பார்க்கும்போதே கூட அவர் இந்த சம்பளக் கமிஷனால் இவ்வளவு உயரும் என்பது போன்ற கணக்குகளில் எல்லாம் ரொம்பவே ஞானசூனியம்தான். ஏதோ வந்தது வரட்டுமென்பதுதான் அவரது சித்தாந்தம். சம்பள உயர்வு பற்றி செய்தித்தாளில் வரும் போதெல்லாம் "நமக்கு எவ்வளவுங்க வரும்?" என்ற மனைவியின் கேள்வியை மதித்து பதில் சொன்னதில்லை அவர். "இந்தா, போன மாசம் வந்ததை விட இந்த மாசம் கூட வர்ரது வேணும்னா நடக்குமே ஒழிய வாங்கிக்கிட்டிருக்கும் காசு குறையவா போகுது?" என்பதுதான் அலட்சியமாய் அவர் சொல்லும் பதில். பின்னே அரைக்காசு உத்தியோகம்னாலும் அரசாங்க உத்தியோகமென்றெல்லாம் இதைக் கொண்டாடுவது எதற்காம்? மாசமானா காசு, எந்த ராசா எந்தப் பட்டினம் போனாலும் வந்து விழுந்துடாதா நம்ம கையில என்பது போன்ற அவரது பாமரத் தனமான நம்பிக்கைகளெல்லாம் ஒரு நாள் உடைந்து போனது. திடீரென ஒரு நாள் அரசுக் கருவூலத்திலிருந்து ஒரு பழுப்பு உறை அவர் பெயருக்கு வந்தது பதிவுத் தபாலில். கையெழுத்திட்டு வாங்கினார். படித்தவர்தான் என்றாலும் கூட அரசாங்கக் கடிதங்களுக்குகேயுரிய அந்த நடையும் அலங்காரங்களும் அவரைக் குழப்பின. அவருக்குப் புரிந்ததென்னவோ வரும் பென்ஷன் அடுத்த மாதம் முதல் குறையும் என்பதுதான்.

கை கால் பதற அதை எடுத்துக் கொண்டு டவுனில் இருக்கும் தனக்குத் தெரிந்த வக்கீல் அலுவலக எழுத்தரான தன் நண்பரைத் தேடிக் கொண்டு ஓடினார். ஏற்கனவே தனக்கும் தன் மனைவிக்கும் அந்த வீட்டில் கிடைக்கும் மரியாதையின் லட்சணம் அவருக்குத் தெரிந்துதான் இருந்தது. சாரதம் ஒரு இடிதாங்கி போல பல பிரச்சனைகளைத் தன்வரையிலேயே சமையற்கட்டுக்குள்ளேயே அல்லது அதிக பட்சம் வீட்டுக் கூடத்தோடு தீர்த்துவிடுவாள். திண்ணையில் கட்டிலில் அமர்ந்திருக்கும் காளிமுத்துவிடம் எதையும் கொண்டு வருவதில்லை அவள் - அவர் மனம் நோகுமேயென்று. அவளுக்கு மகன் சிவநேசனிடமும் செல்வாக்கு அதிகம்.

எது எப்படியோ, சாரதம்தான் ஓய்வுக்குப் பின்னும் கூட அவருக்கு கிடைத்து வந்த எந்தச் சலுகையும் அந்த வீட்டில் குறையாது பார்த்துக் கொண்டாள் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது. இவரது பென்ஷன் முழுதும் பெண் கல்யாணி கல்யாணத்திற்காய் வாங்கிய கடனுக்கு மாதத் தவணை கட்டவே சரியாக இருந்தது. சிவநேசன் சம்பளத்தில்தான் வீடு ஒடுகிறது. அதில் கமலத்தின் தலையில் இரு கண்ணுக்குப் புலனாகாத கொம்புகள் முளைத்திருப்பதும் அவ்வப்போது சாரதத்தை அது குத்துவதும் திண்ணையிலிருந்தாலும் அவருக்குப் புரியத்தான் செய்தது. தனக்குண்டான மரியாதை மட்டும்தான் மிச்சமிருந்தது - அதுவும் இப்போது கல்யாணக் கடனுக்கே சிவநேசனிடம் கேட்டால் போய்விடுமே என்பது அந்த முதியவரின் அடிவயிற்றைக் கலக்கியது.

வேலுவுக்கு வெகுநாட்களுக்குப் பிறகு தன் நண்பனைக் காண்பதில் ஆனந்தம். டீயெல்லாம் வரவழைத்துத் தந்தார். காளிமுத்து அந்தக் கடிதத்தை எடுத்து அவரிடம் காட்ட, கண்ணாடியைத் தேடியெடுத்து அணிந்துகொண்டு படித்துப் பார்த்தார். "காளிமுத்து, உனக்கு சம்பள உயர்வெல்லாம் கொடுத்தாங்க இல்ல, அதுல ஒரு முறை சம்பள விகிதம் நிர்ணயம் செய்யறதுல எதோ தப்பு நடந்து போச்சாம். அதுனால ரொம்ப ஜாஸ்தியா சம்பளம் சில வருஷங்களா உனக்கு கொடுத்திருக்காங்களாம். அத்தோட இல்லாம அந்த தப்பான சம்பளத்தை அடிப்படையா வச்சே இவ்ளோ நாளா உனக்குப் பென்ஷன் வேற கொடுத்திருக்காங்க இல்லையா? அதுனா இப்ப கணக்குப்படி அதிகப்படியான தொகை மட்டுமே சுமாரா 2 லட்சம் வருதாம். இப்ப உன்னோட சரியான சம்பளத்துக்கு கிடைக்க வேண்டிய பென்ஷன் மட்டுந்தான் இனி உனக்கு கிடைக்கும். அதோட இல்லாம இந்த அதிகப்படி தொகையவும் மாசம் கொஞ்சமா உன் பென்ஷன்லேர்ந்து கழிச்சுக்கப் போவுதான் அரசாங்கம்." காளிமுத்துவுக்கும் ஒரளவுக்கு இது புரிந்துதான் இருந்தது. ஆனால் இப்படிக்கூட நடக்குமா என்ற அங்கலாய்ப்பும் விவரம் தெரிந்த நண்பனாவது "இதெல்லாம் சாத்தியமில்லைடா, எதோ தவறுதலா உனக்கு இந்தக் கடிதம் வந்திருக்கு" என்று சொல்லிவிட மாட்டானா என்ற நப்பாசையும்தான் அவரை இவ்வளவு தூரம் ஓடிவர வைத்தது. இப்போது ரொம்பவே நிராசையுடன் "சரியா கணக்குப் போட்டுச் சொல்லியிருக்காங்களான்னு கொஞ்சம் பாத்துச் சொல்லிடுப்பா. அதுல போட்டிருக்கற தொகை ரொம்பவே கம்மியா இருக்கே. முன்ன வாங்கினதுல நாலுத்துல ஒரு பங்கு கூட இல்லையே?" என்று குரல் நடுங்கச் சொன்னார்.

வேலு பென்சிலையும் கொஞ்சம் வெள்ளைத் தாள்களையும் எடுத்து கொண்டு போதாதற்கு தன் பையனின் கேல்குலேட்டரையும் தூக்கிக்கொண்டு வந்து உட்கார்ந்தார். மெல்ல கணக்குப் போட்டு நிமிர்ந்தவர் உற்சாகமிழந்தவராய்ச் சொன்னார் "சரியாத்தாண்டா இருக்கு." கூடவே ஆறுதலாய் "3 வருஷந்தானேடா... அதுக்கப்புறம் உனக்கு நியாயமா கிடைக்க வேண்டியது கிடைக்க ஆரம்பிச்சுடும்." என்று முடித்தார். காளிமுத்து அலுப்புடன் "ஆமா , அதுவரைக்கும் நா இருந்தாப்பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு காகிதங்களைப் பொறுக்கி மீண்டும் தன் பையில் வைத்துக் கொண்டு கிளம்பினார். வாசல் வரை வந்த வேலு "மனச வுட்டுடாதப்பா..." என்றார். ஒரு நைந்து போன சிரிப்புதான் பதிலாய் கிடைத்தது காளிமுத்துவிடமிருந்து.

அந்த ஊரில் அவர் வேலை பார்த்த அந்த ஒரு பள்ளி மட்டுமே இருந்தது. எல்லா பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு டியூஷன் வைப்பதும் ஒரு கட்டாய சடங்கு என்றே நினைத்தனர். பள்ளியிலிருந்த எல்லா ஆசிரியர்களும் தனியே வீட்டில் வகுப்பெடுத்தும் வந்தனர் - சொல்லப் போனால் பள்ளியில் பாடம் நடத்துவதை விட ட்யூஷன் வகுப்புகளில் மட்டுமே நடத்தும் ஆசிரியர்களும் உண்டு. ஆனால் வெளியூரிலிருந்து வந்து விட்டுப் பறக்கும் ஆசிரியர்களின் வகுப்பு மாணவர்கள் மட்டும் இந்தக் கொடுமையிலிருந்து தப்பி மாலை முழுவதும் விளையாட்டு என்று களித்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்டு பொறுக்குமா தாயுள்ளங்கள்? அப்படிப்பட்ட ஒரு குழு அவ்வப்போது காளிமுத்துவை வந்து கேட்பதுண்டு "சும்மாத்தானே மாமா இருக்கீங்க? பசங்களுக்கு சாயந்தரம் கொஞ்ச நேரம் பாடமெடுத்தா குறஞ்சா போய்டுவீங்க? " என்று. அவர் வேலை பார்க்க ஆரம்பித்த புதிதிலெல்லாம் படிப்பில் கொஞ்சம் சோடையாக இருக்கும் பசங்களை மட்டும் தேர்வுகளுக்கு கொஞ்சம் முன்னால் வீட்டிற்கு வரச்சொல்லி தயார் செய்வார். பழைய தேர்வுகளின் தாள்களை எல்லாம் கொடுத்து பயிற்சி செய்யச் சொல்வதும் முக்கியமான பாடங்களை இன்னும் ஒரு முறை நடத்திப் புரிய வைப்பதுமாய் தயார் செய்வார். அதை என்றுமே தொழில் முறையில் செய்வதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. எல்லோரும் அதை தொழில் முறையில் செய்ய ஆரம்பித்தபின்னும் கூட அவர் சில சமயம் கொஞ்சம் படிப்பில் பின் தங்கிய அதே சமயம் ட்யூஷன் என்னும் ஆடம்பரத்துக்கெல்லாம் வழியில்லாத பசங்களை அவ்வாறே கவனித்துத் தேற்றி விடுவதுண்டு. இதனால் எல்லாம்தான் ஊரிலுள்ளோர் மட்டுமல்லாது சாரதம் கூட அவரை பிழைக்கத் தெரியாதவர் என்றே அழைப்பது. அவர் பெண் கல்யாணி கூடச் சில முறை கேட்டுப் பார்த்தாள் "ஏம்ப்பா, காசில்லாதவங்க கிட்ட வாங்க வேணாம் - சரி. காசுள்ளவங்க கிட்டயாச்சும் காசு வாங்கிகிட்டு சொல்லித்தரலாமில்ல?" என்று. மையமாய் சிரித்து மழுப்பி விட்டுப் போய்விடுவார்.

அவ்வளவு நாளாய்த் தான் செய்யக் கூசி வந்த அந்தக் காரியத்தை செய்யத் துவங்குவது ஒன்றே வழியென்று பட்டது. அவரிருந்த வீடு பிதுரார்ஜிதமாய் வந்த சொத்து. தன் பங்குக்கு வீட்டின் முன் பகுதிக்கு மட்டும் அதாவது வீட்டுத்திண்ணைக்கும் அதற்குப் பின்னாலிருக்கும் இரு அறைகளுக்கும் மட்டும் மாடி எடுத்து ஒட்டியிருந்தார். அதற்கு பக்கவாட்டிலிருந்து படிகளும் இருந்தது. வெறும் மொட்டை மாடியாய் நின்ற அது துணி உணர்த்தவும் வற்றல் வடகம் போடவுமே பயன் படுத்தப் பட்டு வந்தது. அங்கே கையிலிருந்த சேமிப்பில் ஒரு கீற்றுக் கொட்டகை போட்டு கொஞ்சம் பெஞ்சுகளும் ஒரு நாற்காலியும் வாங்கிப் போட்டார்.

மெல்ல அவரிடமும் கூட்டம் சேரத்துவங்கியது. காலை மாலை என்று இருவேளையும் பிள்ளைகளை வரச்சொல்ல ஆரம்பித்தார். இந்த விஷயத்தை முதலில் பிரஸ்தாபித்தபோது சிவநேசன் "எதுக்குப்பா வயசான காலத்துல சிரமப்படணும்? கல்யாணி கல்யாணக் கடன் தவணைதானே? அதையும் நானே எப்படியாச்சும் சமாளிச்சுக்கறேன்பா." என்றபோது அவன் ஒப்புக்குத்தான் சொல்கிறானென்பது அவருக்குப் புரிந்தே இருந்தது. "இல்லைப்பா. என் கடமைய நான் செஞ்சுடணும் இல்லையா? நான் என்ன எங்க சாப்பாட்டுக்கேவா கணக்குப் பண்ணி உன்னை கேவலப்படுத்தறேன்? இந்தக் கடன் இன்னும் ஒரு வருஷத்துல முடிஞ்சுடும். அதுக்கப்புறம் நீயே சொன்னாலும் நான் இதெல்லாம் செய்யல, போதுமா? " என்று அவனுக்கு ஆதரவாகப் பேசி முடித்தார். ஒரு வருடம் இரு வேளையும் வகுப்பெடுத்தவர் பின் கடன் தவணையெல்லாம் முடிந்ததும் அதைக் குறைத்து காலையில் மட்டும் என்று வைத்துக் கொண்டார். மூன்று வருடத்துக்கெல்லாம் முழுப் பென்ஷெனும் வரத்துவங்கிய பின் அதையும் நிறுத்தி விட்டார் - முழுப் பென்ஷெனென்றாலும் முதலில் வாங்கியதில் பாதிதான். அதற்குள் அவர் மனைவி போய்ச் சேர்ந்திருந்தார். அத்தோடு கமலாவே மனமிரங்கி "இன்னும் எதுக்கு மாமா இப்படி தொண்டைய வரள அடிச்சுகிட்டு? பேசாம ராமா கிருஷ்ணான்னு உக்காருங்க" என்றாள். அவளும் மனமாரத்தான் சொல்கிறாள் என்று அவருக்குப் புரிந்தது. எனவே அந்த வருட கோடை விடுமுறையோடு மாடியிலிருந்த கொட்டகையை பிரித்துவிடச் சொன்னார். பேரப்பிள்ளைகளுக்கு மட்டும் 5 வகுப்பு வரை முடிந்த வரை சொல்லிக் கொடுத்துவந்தார். அவர்களும் அதற்குபின் யாரோ ஒரு சாரிடம் ட்யூஷன் போகத் துவங்கினர்.

கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு இன்று அவர் செய்தித்தாளில் பார்த்த விஷயம் அவருக்கு இதையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்தது. அவரைப் போன்றே ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் இதே போல் பாதிக்கப் பட்டவர் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அதில் அவருக்கு சாதகமாய் தீர்ப்பாகியிருந்ததாக அதில் போட்டிருந்தது அவர் மனதைக் கிளர்ச்சியுற வைத்திருந்தது. கணிசமான ஒரு தொகை தனக்குக் கிடைக்கக் கூடும் என்பதையும் விடத் தன் நம்பிக்கை பொய்யாகிவிடவில்லை என்பதுதான் அவரது சந்தோஷத்திற்குக் காரணம். அரசாங்கமென்ன அடுத்த வீட்டுக்காரன் போலவா - ஒருத்தரை ஏமாத்தி காசு சேக்க? என்றெல்லாம் சின்னச் சின்னதாய் தனக்குத் தானே தன்னைத் தானே தட்டிக் கொடுத்துக் கொள்வது போல நினைத்துக் கொண்டார்.

ஓய்வூதியம் பெறுவோர்க்கான சங்கம் அவ்வூரின் கடைத்தெருவை ஒட்டிய ஒரு தெருவுக்குள் இருந்தது. எந்நேரமும் அங்கே யாராவது நாலு பேர் உட்கார்ந்து எதாவது செய்தித்தாளைப் புரட்டியபடியோ இல்லை ஊர் உலக நடப்புகளைப் பேசியபடியோ இருப்பார்கள். இருந்தாலும் வெயில் தாழ பெருமாள் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு அப்படியே அங்கே போனால் தன்னோடு படித்து, தன்னோடே ஒன்றாய் வேலையில் சேர்ந்து, ஒன்றாய் ஓய்வு பெற்றுப் பின் தான் பட்ட இந்த பணப்பிடிப்பு பிரச்சனையையும் அனுபவித்த கோபாலன் போன்ற ஆட்களைப் பார்த்துக் கலந்து கொண்டு எதுவானாலும் செய்யலாம் என்று முடிவு செய்து கொண்டார்.
எல்லோருமாய்ச் சேர்ந்து அரசுக் கருவூலத்திற்குப் போய் விவரம் சொல்லி அடுத்த மாதத்திலிருந்தாவது தங்களுக்குப் பழையபடி பென்ஷன் கிடைத்து விடுமா எனக் கேட்டபோது அந்த அதிகாரி சற்றே ஏளனமாய் சிரித்துவிட்டுச் சொன்னார் "ஐயா, நாங்க பேப்பர பாத்து வேலை செய்ய முடியாதுங்க. எங்களுக்கு மேலதிகாரிங்க கிட்டேர்ந்து உத்தரவு வர்ரதைப் பொறுத்துதான் வேலை செய்ய முடியும்." என்ன பதில் சொல்வதென்று தெரியாது விக்கித்துப் போய் நின்றார்கள் அந்த நான்கு பெரியவர்களும். அந்த முகங்களைப் பார்த்து பேசினவரே சற்று நெகிழ்ந்து போய்விட்டார். மெல்லச் சொன்னார் "ஒன்னு செய்யுங்க. உங்க கோரிக்கைய ஒரு மனுவா எழுதித் தாங்க. நான் மேலிடத்துக்கு அனுப்பிப் பாத்துட்டுச் சொல்றேன், அவ்ளோதான் என்னாலானது." என்றார். சரியென்று அங்கேயே உட்கார்ந்து நிதானமாய் நான்கு பேரும் சேர்ந்து யோசித்து ஒரு மனுவை எழுதி அவர் கையில் தந்துவிட்டு வெளியே தளர்ந்து போய் வந்தார்கள்.

"என்னய்யா இது? சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையா இல்ல இருக்கு? ஹைகோர்ட்டே சொன்னப்புறமும் இவனுங்க இப்படி ஆடறானுக..." என்று அங்கலாய்த்தார் கோபாலன். காளிமுத்து மெல்ல தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னார் - "அவரு சரியாத்தானே சொன்னாரு? நாமெல்லாம் ஏதொ மழை புயல்னா ரேடியோவிலும் பேப்பரிலும் சொல்றதைப் பாத்துட்டு பள்ளிகூடத்தை மூடிருவோம். அதுனால ஒன்னும் குடி முழுகிப் போயிடப் போறதில்லை. இது காசு விஷயமாச்சே? நாளைக்கு எதுனா பிரச்சனைன்னா இந்த துண்டு பேப்பரையா வச்சு அவரு வாதாட முடியும்? மேலதிகாரிங்க உத்தரவு அதும் எழுத்து மூலமா இருந்தாத்தானே எதும் செய்ய முடியும் அவராலயும்? ஆக்கப் பொறுத்தோம், ஆறப் பொறுக்க மாட்டோமா என்ன?" என்று இதமாய்ச் சொன்னார். அவர் சொல்வதிலும் ஒரு அர்த்தமிருப்பதை உணர்ந்து கொண்டனர் மற்றவர்கள். அமைதியாய் நடந்து அவரவர் வீடு சென்று சேர்ந்தனர். வாரம் ஒரு முறை கருவூலத்துக்குப் போய் யாரேனும் ஒருவர் நிலவரம் கேட்டு வருவது என்று முடிவாயிற்று. நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு ஏ.ஜி.எஸ் அலுவலகம் வரை போன அவர்களின் மனு ஒரு சிறு குறிப்புடன் அவர்கள் ஊர் கருவூலத்துக்கே திரும்பி வந்தது. ஒவ்வொருவரும் அவரவர் கணக்கில் நேர்ந்த பிழைக்குத் தனித்தனியே உயர்நீதிமன்றத்தை அணுகவும் என்று குறிப்பில் இருந்தது.

முதலில் இந்த ஒற்றை வரி பதில் அவர்களுக்குப் புரியவேயில்லை. இவ்வளவு சிறுபிள்ளைத்தனமான பதிலை எப்படி அரசின் முக்கியமான ஒரு துறையால் சொல்ல முடிகிறதென்று குழம்பிப் போயினர். இத்தனைக்கும் இவர்கள் தங்கள் மனுவிலேயே உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிச் சொன்னதோடில்லாமல் அந்தத் தீர்ப்பின் நகலையும் இணைத்திருந்தனர். இத்தனைக்குப் பிறகும் ஒவ்வொருவரும் தனித்தனியே கோர்ட்டுக்கு அலைய வேண்டுமென்று ஒரு வக்ரம் பிடித்த மனது மட்டுமே சொல்ல முடியும் அதுவும் முதுமையின் வடிவமாய் நிற்கும் மனிதர்களை வதைத்துப் பார்க்க எப்படித் தோன்றும் ஒருவருக்கு? மனதில் இரக்கத்தைப் பசை போட்டுத் துடைத்துவிட்டுத்தான் அரசாங்க உத்தியோகத்துக்கு வருவார்கள் போலும். அல்லது ஒவ்வொரு பதவி உயர்வுக்கும் இவ்வளவு தூரம் என்று வரம்பு கட்டிக்கொண்டு மனிதாபிமானத்திலிருந்து விலகி விட்டிருக்க வேண்டுமோ? ஒரேயடியாய் அப்படிச் சொல்லிவிடவும் முடியவில்லைதான். முதலில் கடுகடுப்பாய் பேசிக்கொண்டிருந்த கருவூல அலுவலர்கூட இப்போதெல்லாம் இந்த வயோதிகக் கூட்டத்திடம் ஒரு அனுதாபத்துடன்தான் நடந்து கொண்டிருந்தார். நேரில் பார்க்கையில் கொஞ்சம் கொஞ்சம் மனிதாபிமானம் எட்டிப் பார்த்துவிடத்தான் செய்கிறது. இப்போது இந்த சேதியைக் கூட ரொம்பவே அனுதாபத்துடன்தான் கூப்பிட்டுச் சொன்னார். சொல்லிவிட்டு தான் எதுவும் செய்யமுடியாதிருப்பதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். யாரிடம் காட்டுவது என்றே தெரியாத ஊமைக் கோபத்தோடு வெளியே வந்தார்கள் நால்வரும்.

இரண்டாம் நாளே எல்லோருமாய் கிளம்பிப் போய் வக்கீல் ஒருவரைப் பார்த்தார்கள். அவரிடம் ஆதியோடந்தமாய் எல்லாவற்றையும் சொல்ல, அவர் தனக்குத் செய்தித்தாளில் குறிப்பிட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட வக்கீலையே தெரியுமென்றும் அவரிடமே இவர்களின் வழக்குகளையும் எடுத்துக் கொள்ளச்சொல்வதாயும் சொன்னார். சற்றே பழைய நம்பிக்கை காளிமுத்துவுக்குச் சுடர் விட்டது. வழக்கு விவரமெல்லாம் பேசி முடிந்தபின் அந்த வக்கீலிடம் கோபால் கேட்டார் "வக்கீல் சார், எல்லாஞ்சரி. ஆனா பேப்பர்ல நாலு மாசத்துக்கொருக்கா பெரிய பெரிய ஜட்ஜுங்களே கோர்ட்லல்லாம் நிறைய கேசுங்க தேங்கிக்கிடக்குன்னு லட்சக்கணக்குல புள்ளிவிவரத்தோட ஆதங்கப் பட்டுக்கறாங்க இல்ல? இந்த மாதிரி பொதுப்படையான கேசுலல்லாமாச்சும் தெளிவா இதே போல பாதிக்கப் பட்டவங்க எல்லாருக்குமா சேத்து உத்தரவு போடலாமில்ல? இப்ப இதே மாதிரி கேசுங்க மட்டும் ஒரு ஆயிரமாச்சும் புதுசா சேராதா? இவ்ளோ படிச்ச ஜட்ஜுமாருங்களுக்கு இவ்வள்வு சின்ன விஷயம் கூடவா புரியாது?" நியாயமான அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாத வக்கீல் "அப்படி போட்டுட்டா எங்களை மாதிரி வக்கீலுங்க பொழப்பு போயிடுமேன்னுதான் ஒவ்வொன்னுக்கும் புதுக் கேசு போடச்சொல்றாங்க போல - ஜட்ஜுங்களும் முன்னாள் வக்கீலுங்கதானே? அந்த விசுவாசம் போல" என்று விளையாட்டாய் சமாளித்தார். மெல்ல யோசித்துவிட்டுப் பின் சொன்னார் - "வழக்கு எதுக்காகப் போட்டிருக்காங்களோ அதுக்குத்தானே தீர்ப்பு சொல்ல முடியும்? அந்த மனுஷன் தன்னோட கணக்கைச் சரி பண்ணச் சொல்லித்தானே கேஸ் போட்டிருக்கார். அதுனால அதுக்கு மட்டும் தீர்ப்புச் சொல்லியிருக்காங்க போல. பொதுநல வழக்கா எல்லாருக்கும் சேத்து யாராச்சும் கேஸ் போட்டா அதுக்குத் தகுந்தாப்பல தீர்ப்புச் சொல்லுவாங்களாயிருக்கும்."

கோபாலனும் விடுவதாயில்லை - நக்கலுடன் கேட்டார் "ஏனுங்க வக்கீலய்யா, பந்த் பத்தி கேசு போட்டா ஆட்சிய கலைக்கறதப் பத்தியும் சேத்துத்தானே பேசறாங்க உங்க ஜட்ஜுங்க? அப்போ வர சமூக அக்கறை ஏன் இந்த மாதிரி ஏழபாழங்க விஷயத்துல எல்லாம் வர்ர மாட்டேங்குது?" இதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாதென்று உணர்ந்த வக்கீல் சமாதானக் கொடியோடு "நீங்கல்லாம் பெரியவங்க. உங்ககிட்ட பேசியாகுமா? அத்தோட நானே மொத்த நீதித்துறைக்கும் சப்பை கட்டு கட்ட முடியுங்களா? இதெல்லாம் பெரிய விஷயங்க. நம்மள மாதிரி சாதாரண ஆளுங்க என்ன செய்ய முடியும் சொல்லுங்க?” என்று தன்னையும் அவர்களோடு இணைத்து இணக்கமாய்ப் பேசி முடித்தார். சென்னைக்குப் போய் கேஸ் நடத்த எவ்வளவு செலவாகும், அந்த வழக்கில் தீர்ப்பு வர எவ்வளவு நாளாகும், அவ்வளவு நாள் நாமெல்லாம் இருப்போமா, பணம் வந்து அதைக் கண்ணால் காணப்போகிறோமா என்றெல்லாம் நிறைய விடை தெரியாத கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தது அவர்களனைவரின் மனங்களும். ஆனால் யாரும் எதையும் வாய்விட்டுப் பேசி அடுத்தவரின் மனநிம்மதியைக் குலைத்துவிட வேண்டாமேயெனும் எண்ணம் அவர்களின் வாயைக் கட்டி விட்டது. மௌனமாய் வீடு திரும்பினர் அனைவரும்.