Thursday, December 10, 2009

பாரதி - அவர் மகளின் பார்வையில்

சமீபத்தில் பாரதி - என் தந்தை என்ற நூல் கண்ணில் பட்டது. இந்நூல் பாரதியின் இரண்டாவது மகளான் சகுந்தலா எழுதியது. வெகுகாலம் முன்னரே படித்த புத்தகம் என்றாலும் அப்போது ஏதும் பதிவிட முடியவில்லை. எனவே இப்போது அந்நூலையொட்டி எழுந்த என் சிந்தனைகளை அவரது பிறந்த நாளான இன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பாரதியின் இரு புதல்விகளில் மூத்தவரான தங்கம்மா பாரதி, தன் தந்தையோடு அதிக நாட்கள் வசிக்கும் பேறு பெறவில்லை. காசியில் வசித்த அவரது பெரிய தாயார்(செல்லம்மா பாரதியின் சகோதரி) பார்வதியிடமே அவர் அதிக நாட்கள் வளர்ந்தார். அவரை வளர்த்த பெரிய தாயாரின் நிர்பந்தத்தின் பேரில்தான் தங்கம்மாவுக்கு பால்ய விவாகம் நடத்தும் நிலைக்கும் பாரதி ஆளானார் என்பது இந்நூலில் இருந்து தெரிகிறது.

எனவே சிறுவயதிலிருந்து பாரதியிடம் பழகி, அவரது பாட்டுக்களையும் கதைகளையும் கேட்டு வளரும், அவரிடமே நேரிடையாக கல்வி பயிலும் வாய்ப்பும் பெற்றவர் சகுந்தலா மட்டுமே. அவரது எழுத்தின் வழி பாரதியை காண்பதன் மூலம் எவ்வளவோ புது விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

முதலும், முக்கியமானதும் ஆன ஒரு பெரிய உண்மை - நாம் இதுவரை பெரும்பான்மையான புத்தகங்களில் படித்தது போல அவர் திருவல்லிக்கேணி கோவில் யானை தாக்கி உயிரிழக்கவில்லை. யானை தன் கால்களுக்கு இடையில் கருங்கல் தரையில் வீசிய போதும், மண்டையில் நல்ல அடிபட்ட போதும் தனது கனமான தலைப்பாகையினால் அவர் மரணத்திலிருந்து தப்பியிருக்கிறார். (வாகனம் ஓட்டாமலேயே ஹெல்மெட்டால் உயிர் தப்பியவர்னு இவரைச் சொல்லலாமோ? ;) ). யானையிடமிருந்து தன் அன்புக்குரிய சீடன் குவளைக்கண்ணனால் காப்பாற்றப்பட்டு, அதன் பின் சில காலம் சென்று வயிற்றுக் கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் மருந்துகளை உட்கொள்ள மறுத்து பின் இறந்திருக்கிறார்.

குழந்தையை சமாளிக்கத் தெரியாமல் திண்டாடுவது, ஒரு ஆட்டுக்குட்டியை கசாப்பு கடைக்காரனிடமிருந்து பணம் கொடுத்து மீட்டு பின் அதை பராமரிக்கத் தெரியாமல் திண்டாடுவது(ராதா என்று பெயரிடப் பட்ட அந்த குட்டிக்காக தலைவர் தனியா பாட்டெல்லாம் எழுதினாராம், என்னே அதிர்ஷ்டம் பெற்ற ஆட்டுக்குட்டி இல்ல?) என நாம் அறிந்திருக்க முடியாத பாரதியின் எளிய உருவத்தை வெளிக் கொணர்கிறது இந்நூல்.

பாரதியின் சுற்றத்தார் அனைவருக்கும் சிஐடி காவல் உண்டு. ஆரம்பத்தில் புதுவையிலிருந்து தன் தாய் வீடான கடையத்திற்கு செல்லமாள் பாரதி குழந்தையோடு பயணிக்கையில் தன் சிஷ்யர்கள் யாரையேனும் துணைக்கனுப்புவாராம் பாரதி. பின்னர் எப்படியும் ஒரு போலீஸ்காரர் பின்னோடு போகப் போகிறார் என்கிற தைரியத்தில் தனியாகவே பயணிக்கத் துவங்கினாராம் செல்லம்மாள். அப்படி பின்தொடர்ந்த ஒரு போலீஸ்காரரே சமயத்தில் அவருக்கும் குழந்தைக்கும் உதவிய கதையும், செல்லம்மாளின் தாயாரை பின் தொடர்ந்த போலீஸ்காரர் அப்பாட்டியுடன் அம்மாவாசைக்கு பாபநாசம் பாணதீர்த்தத்திற்கு சென்று புண்ணியம் கட்டிக் கொண்டதையும் படிக்கையில் காவல்துறையினரின் நிலமை இன்றும் அன்றும் ஒன்றாகவே இருப்பதை உணர முடிகிறது.

பொன்னு முருகேசம் பிள்ளை, அவரது மனைவியான பாரதியால் அண்ணியம்மா என்று அழைக்கப்பட்ட அம்மையார், குவளைக் கண்ணன், அம்மாக்கண்ணு என்ற மூதாட்டி என அவரது புதுவை வாழ்வில் அவரோடு நெருங்கி வாழ்ந்து அவரைக் கொண்டாடி, அவரது விரக்தியை கொஞ்சமேனும் தணித்த மனிதர்களை பற்றியும் இந்நூலில் விரிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

சிந்து நதியின் மிசை நிலவினிலே எனும் பாட்டில் ஏன் சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைக்க வேண்டும் என்ற சகுந்தலாவின் கேள்விக்கு பாரதியின் பதில் இது:

”பாப்பா, தமிழ்ப்பாட்டும் பாடலாம்; ஹிந்துஸ்தானியிலும் பாடலாம். பெரிய பெரிய மகத்தான கவிகள் நம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பாடுதற்குரிய முறையில் பாடலை இசையுடன் அமைத்து அதை சுவையுடன் பாடக்கூடிய சங்கீத வித்வான்கள் நம் தமிழுலகில் அதிகம் இல்லை. சங்கீதத்தில் தெலுகு என்றும், உருது என்றும் வேற்றுமை கிடையாது. ஆங்கிலேயர் தேசாபிமானம் முற்றியவர்கள்; பாஷாபிமானத்திலும் கரை கடந்தவர்கள். ஆனால், சங்கீதத்தில் ஜெர்மன் சங்கீதமும், இத்தாலிய சங்கீதமும் உயர்ந்ததென்பதை மறுப்பதில்லை. தவிர வடதேசத்தில் உள்ள அழகிய சிந்து நதியின் மீது, தென் தேசத்திலுள்ள அழகிய சேரநாட்டு பெண்களுடன் தமிழ் நாட்டினர்களாகிய நாம் சங்கீதத்துக்குகந்த அழகிய மொழியான தெலுங்கில் பாடி மகிழ்வோம் என்ற கருத்து நம் இந்திய தேசம் முழுவதையும் ஒன்றாக்கும் நோக்கத்தில்தான்;” என்றார். மேலும், சங்கீதத்துக்கு பாஷை இன்பம் உண்டேயல்லாது, பாஷைக் கட்டுப்பாடு கிடையாது. எந்த பாஷையில் பாடினாலும் அதன் அர்த்த பாவம் மாறாது பாட வேண்டும் என்பதே அவர் அபிப்ராயம்.

மேலும் அவருக்கு சங்கீதத்தில் இருந்த ஆர்வத்தையும், அவர் அதை கற்க எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் கூட இந்நூலில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

கடையம் வந்தபின் சகுந்தலாவுக்கு கல்வி கற்பிக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பெண் கல்வி பற்றியும், பெண் விடுதலை பற்றியும் வெறும் ஒப்புக்காக பாடியவர் அல்ல என்று நிறுவுகின்றன. மேலும் பெண்ணியம் பேசும் ஆண்களில் பலர் இன்றும் கூட அதை தன் வீட்டுப் பெண்களுக்கானது அல்ல என்றே நினைக்கின்றனர். அப்படியில்லாமல் கணவனுக்கு பின்னால் பத்தடி தள்ளி நடக்க வேண்டிய மனைவியை கைபிடித்து நடத்தி செல்வதில் இருந்து ஆரம்பித்து, ஒரு குக்கிராமமான கடையத்தில் பெண் குழந்தையை ஆண்கள் படிக்கும் பள்ளிக்கு அனுப்பி கல்வி பெற செய்தது வரை பல விஷயங்களில் சொந்த வாழ்வில் தான் கொண்ட கொள்கையை நடைமுறைப் படுத்திப் பார்த்தவர் பாரதி என்பதை இந்நூல் பறை சாற்றுகிறது.

கடையத்திலிருக்கையில் மற்ற ஜாதியினருடன் சமபந்தி போஜனம் செய்யப் போய் ஜாதிப்பிரஷ்டம் செய்யப்பட்ட பின் அவர் சென்னைக்கு நகர்கிறார்.

நூலின் பிற்பகுதி சுரேந்திரநாத் ஆர்யா, நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற பிற சுதந்திர போராளிகளுடன் அவருக்கிருந்த உறவையும், அவரது திருவல்லிக்கேணி வாழ்கையையும் பற்றி விவரிக்கிறது.

ஜமீன்தாரிடம் உதவி கோரியது, பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தது என சில சறுக்கல்கள் அவரது வாழ்வில் உண்டுதான். ஆனால் அதையெல்லாம் வாழ்கை முழுவதும் வறுமையையும், சுயஜாதி மற்றும் சுற்றத்தாரால் தொடர்ந்த விலக்குகளையும், அரசின் அடக்குமுறையையும் மட்டுமே ருசித்து வந்த ஒரு மனிதனின் கதையின் ஒரு கசப்பான பாகமாக பரிவுடன் பார்க்க நம்மால் ஏன் முடிவதில்லை?

மெல்லத் தமிழினி சாகும்
அந்த மேலை மொழிகள் புவிமிசை ஓங்கும்
என்றெந்த பேதையுரைத்தான்?


என்ற வரிகளில் முதல் வரியை மட்டும் படித்துவிட்டு பாரதி தமிழ் அழியும் என்று சொல்லிவிட்டார் என்று குதிப்பார்கள் சிலர்.

நாடுங்கால் ஒரு மனமற்ற செய்கையை
நல்லதோர் மணமாம்


என்று குழம்பிப் போய் செய்து கொள்ளாதே என்று பாடியவனை ஏதோ திருமண வாழ்கையையே எதிர்த்தவன் என்று புரிந்து கொள்ளும், எழுதிச் செல்லும் அரைகுறை புரிதலுடையோரும் நம்மில் உண்டு.

அவனது பகவத் கீதைக்கான முன்னுரையில் சம்சார வாழ்கை ஒருவனுக்கு எவ்வளவு முக்கியமென்பதையும், துறவு என்பதன் உண்மையான பொருளையும் மிகத் தெளிவான உரைநடையிலேயே விளக்கியிருப்பதை காணலாம். மேலும் அவரது கண்ணன் பாட்டில் வரும் கண்ணம்மா பாடல்கள் தவிர அவரது பல காதல் பாடல்கள் மனைவி செல்லம்மாவையே விளித்து பாடப்பட்டவை - பின்னர் செல்லம்மாவின் சகோதரர் அப்பாசாமியின் தலையீட்டால் அவையும் கண்ணம்மா என்று மாற்றப்பட்டது. இந்த விஷயத்தையும் இந்நூல் தெளிவாகவே பதிவு செய்கிறது.

மனைவியையே காதல் தலைவியாகக் கொண்டு, அவள் மேல் கவிதைகள் பல இயற்ற வேண்டுமென்றா எத்தனை தூரம் அவளை நேசித்திருக்க வேண்டும்? ஆனால் வரிகளுக்கிடையே படித்து, தனக்கு பிடித்த அர்த்ததை மட்டுமே எடுத்துக் கொண்டு குதிப்பவர்களுக்கு யார் இதையெல்லாம் புரிய வைக்க முடியும்?

அதே போல் தன் மூத்த மகள் தங்கம்மாவின் பால்ய விவாகத்தை அவர் கூடிய வரை தவிர்த்ததையும், அதற்காகவே காசியிலிருந்து அப்பெண்ணை வரவழைத்து புதுவையில் தன்னுடன் வைத்துக் கொண்டதையும், செல்லம்மாள் கடையம் செல்லும் ஒவ்வொரு முறையும் தங்கம்மாவை தன்னுடன் தங்க வைத்துக் கொண்டு ஆன வரையிலும் திருமண முயற்சிகளுக்கு தடை போட்டதும், தன் மென்மையான சுபாவம் காரணமாக தங்கம்மாளின் வளர்ப்புத் தாயாரும், தன் மைத்துனியுமான பார்வதிக்கு கொடுத்த ஒரு வாக்குறுதியால் மகளின் திருமணம் தன்னை மீறி நடப்பதை அனுமதிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளானதையும் கூட இந்நூலில் சகுந்தலா பாரதியின் வாக்குமூலத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். அதை விடுத்து, பெண் விடுதலை பற்றி பேசிய பாரதி தன் பெண்ணுக்கு பால்ய விவாகம் செய்து வைத்தது ”ஊருக்குத் தானடி உபதேசம், உனக்கும் எனக்குமில்லை” என்ற சிந்தனையால் ஆனது என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போவது எவ்வளவு சுலபமானது?

இப்படியான தவறான புரிதல்களிலிருந்து வெளிவர வேண்டுமென்ற ஆர்வம் உண்மையிலேயே இருந்தால், பாரதியை அருகிலிருந்து பார்த்தவர்களான வ.ரா, சகுந்தலா பாரதி போன்றோரின் நூல்களை படிப்பது நல்லது. அல்லது பரபரப்புக்காகவோ அல்லது தன் அரைகுறை புரிதலாலோ பாரதியின் வரிகளை திரித்து, அதற்கு தனக்கு பிடித்த சாயத்தை பூசி பார்ப்பேன் என்று அடம் பிடித்தால்... அய்யோ பாவம், உங்களை அந்த தீரமிகு புலவனின் ஆத்மா மன்னிப்பதாக...

Monday, December 07, 2009

வித்யாசமான விடுமுறையும் சில புத்தகங்களும்

ஒரு குட்டி உயிரின் வரவால் நிறைய மாற்றங்கள் வாழ்கை முறையில். விடுப்பிலிருப்பதால் தேதி, கிழமை போன்றவை மனதில் பதிவதேயில்லை. நானும் குழந்தையும் இருக்கும் அறை மாடியிலும், டிவி வீட்டின் கீழ்ப் பகுதியிலும் இருப்பதால் சுத்தமாய் டிவி பார்ப்பதே இல்லை எனலாம். எப்போதேனும் கனிவமுதனின் அழுகையை மாற்ற ஒரு முயற்சியாய் மாடியிலிருந்து கீழே எடுத்துப் போகையில் மட்டுமே டிவி பார்க்கும் (துர்)பாக்கியம் கிடைக்கிறது. மற்றபடி நானும் அவனும் மட்டுமேயான உலகில்தான் பகல் முழுவதும் செல்லுகிறது.

ஜூனியர் இரவில்தான் மிகவும் மும்மரமாக அழுவது, விளையாடுவது என பிசியாக இருப்பார் என்பதால் இரவு தூக்கம் மிகவும் சொற்பமே. எனக்கோ பகலில் இப்போதெல்லாம் சுத்தமாக தூக்கம் வருவதேயில்லை. ஆக மொத்தத்தில் என் தூக்கத்தின் அளவு சரிபாதியாகி விட்டது. இதன் விளைவு என்னவென்றால் கண்கள் ரொம்பவும் சோர்வாக இருப்பதும், அடிக்கடி தலை வலி வருவதுமாக இருக்கிறது. பெரியவர்களோ தூக்கம் வரவில்லையென்றாலும் கண்ணை மூடிக் கொண்டேனும் இரு, அப்போதுதான் தப்பிக்கலாம் என்று அறிவுறுத்துவதால் முன்னளவு ஏன் அதில் பாதியளவு கூட வாசிப்பதற்கு நேரமிருப்பதில்லை.

விடுமுறையிலிருந்தும் அதிகமாக புத்தகம் படிக்காமலிருப்பது என்ற ஒன்று என் வாழ்வில் சாத்தியமா என்று கொஞ்ச நாட்களுக்கு முன்னால் யாராவது கேட்டால் சிரித்திருப்பேன். ஆனால் கடந்த சில மாதங்களாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.... ஆனால் அப்படி ஒரு நிலை வந்தும் கூட நான் அதற்காக வருந்தவில்லை என்பதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக் இருக்கிறது. :)

அப்படியும் இப்படியுமாக என் குட்டி எஜமானர் பெரிய மனது வைத்து என்னை படிக்க அனுமதித்த இடைவெளிகளில் ஒரு வழியாக ஆழி சூழ் உலகு, டாலர் தேசம், புலி நகக் கொன்றை, எரியும் பனிக்காடு என சில புத்தகங்களை படிக்க முடிந்தது.

அதில் ஆழி சூழ் உலகு விவரிக்கும் உலகம் எனக்கு முற்றிலும் புதிது. மீனவர்களின் வாழ்கை முறை, மீன் பிடித் தொழிலுக்கே உரிய நுட்பங்களின் விவரணை, முற்றிலும் புதியதான வட்டார வழக்கு என படிக்கவே அதிக காலம் எடுத்தது.

புலிநகக் கொன்றை பற்றி ஏற்கனவே ஏகப்பட்ட விமர்சனங்கள் இணையத்தில் படிக்க கிடைத்தது. நாவல் என்ற வடிவத்துக்கேற்ற கதையும், கதாபாத்திரங்களின் அணிவகுப்பும். யாரொருவரையும் கதாநாயகனாக கொள்ளாத கதை - உண்டியல் கடைக்காரர் ஒருவரின் வம்சாவளியைத் தொடரும் ஒரு நம்பிக்கையைப் பற்றிய கதை. பொன்னா என்ற தொண்ணூறு கடந்த முதிய பெண்மணியே கதையில் விவரிக்கப் படும் அத்தனை தலைமுறையினருக்கும் நடுவில் தொடரும் சரடு. நல்ல வாசிப்பனுபவம் தந்த நாவல்.

டாலர் தேசம் என்கிற அமெரிக்காவின் அரசியல் வரலாற்று நூல் முற்றிலும் புதிய விதம். கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து அமெரிக்க வாடிக்கையாளர்களுடனேயே பணியாற்றியிருந்தும் கூட அந்த தேசத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள மெனக்கிட்டதில்லை. க்ளையண்ட் சைட்டிற்கு சென்ற போதும் டாலரின் எக்ஸ்சேஞ் ரேட் பற்றி கவலைப்பட்ட அளவு அத்தேசத்தின் வரலாறு குறித்தெல்லாம் கவலைப் பட்டதில்லை.

ஆனால் ஒரு வல்லரசாக, உலக தாதாவாக தன்னைத் தானே செல்ஃப் அப்பாயிண்ட் செய்து கொள்ளும் ஒரு தேசத்தின் மனப்போக்கின் பின்னணி இந்நூலைப் படிக்கையில் ஒரளவு நமக்கு புரிகிறது.

ஒரு குறுகிய காலத்தில், குடியேறிகளாலேயே உருவாக்கப்பட்ட நாடு முழுக்கு முழுக்க தன் மேலாண்மையை பொருளாதாரம் சார்ந்தே பெற வேண்டியிருப்பதும், அதற்கு அது முழுக்க முழுக்க யுத்தங்களையே நம்பியிருப்பதும் படிப்படியாக இந்நூலில் விளக்கப் படும்போது அமெரிக்கா ஏன் அதன் சுண்டுவிரல் சைசில் இருக்கும் கொரியாவிலும், வியட்நாமிலும் கூடாரம் போட்டு உட்கார்ந்து ரவுடிப்பட்டத்தை சாஸ்வதமாக்கிக் கொண்டது என்பது புரிகிறது.

பா.ராகவனின் சுவாரஸ்யமான உதாரணங்களும், நகைச்சுவை பூசிய வார்த்தைகளும் அரசியல் வரலாறு எனும் பல்கலைக் கழக வாசனை வீசும் சப்ஜெக்டையும் எளிமையானதாக்குகிறது. சில உதாரணங்கள்:

"..ஹேமநாத பாகவதர் முன்னால் சிவாஜி பாடியபோது உலகம் ஒரு முறை நின்று சுழன்றதே, அப்படி அந்த நீதிமன்றம் ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டு, பின் சுதாரித்துக் கொண்டது..."

"..இனி பொறுப்பதில்லை தம்பி, எரிதழல் கொண்டு வா என்ற பாரதியார் பாட்டை இங்கிலீஷில் பாடிக் கொண்டு களத்தில் குதித்தார் புஷ்.."

ஆனால் இந்த நூலை படிக்க ஆரம்பித்த போது இரண்டாவது அத்தியாயத்திலேயே ஒரு பெரிய ஆயாசம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்கு புத்தகத்தை மூடி வைத்திருந்தேன். நம் பள்ளி முதல் பல்கலைகழகம் வரையிலான வரலாற்று பாட புத்தகங்களில் அசோகர் மரம் நட்டார், அக்பர் இராஜபுத்திர பெண்களை மணந்தார், ஷாஜகான் தாஜ்மகால் கட்டினார் என்பது போலவே வாஸ்காடகோமா இந்தியாவை கண்டுபிடித்தார் என்று சொல்லி வைப்பது மரபு.

ஒரு பொருளை கண்டுபிடிப்பது என்றால் ஒன்று அது புதிதாக தயாரிக்கப் படுவதாக இருக்க வேண்டும், இல்லை காணாமல் போயிருக்க வேண்டும். பல நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு நிலப் பகுதியை, ஏன் வரலாறே இல்லை என்றாலும் கூட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பகுதியை புதிதாக ஒருவர் எப்படி கண்டுபிடிக்க முடியும்?

ஐரோப்பியர்களின் வரலாற்றில் வாஸ்காடகோமா இந்தியாவை கண்டுபிடித்திருக்கலாம், கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்திருக்கலாம். ஏனெனில் ஐரோப்பிய வெள்ளைத் தோல் மனிதர்களுக்கு தங்களையன்றி பிறர் நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளாகவும், அவர்கள் வசிப்பதெல்லாம் உலகிலேயே சேராத புது பகுதிகள் என்ற எண்ணமிருந்திருக்கலாம். அதனால் அவ்விடங்களுக்கு தாங்களிருக்குமிடத்திலிருந்து செல்வதற்கான பாதையை கண்டுபிடித்ததையே அவர்கள் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளையே கண்டுபிடித்ததாக சொல்லி மகிழலாம். ஆனால் நாமும் ஏன் அப்படியான வார்த்தை பிரயோகங்களையே இன்னமும் பயன்படுத்த வேண்டும்? பாட புத்தகங்களில் மாற்றம் கொண்டு வருவது வேண்டுமானால் இப்போதைக்கு சாத்தியமில்லாததாக இருக்கலாம். பாட புத்தகங்களுக்கு வெளியே வரலாற்றை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு வாசிப்பவர்களுக்காகவே எழுதப் படும் இது போன்ற நூல்களிலாவது இத்தகைய அர்த்தமற்ற பதப் பிரயோகங்கள் தவிர்க்கப் பட வேண்டுமில்லையா?

பா.ரா போன்ற பிரபல எழுத்தாளர்களும் இத்தகைய தேய்ந்த, பொருளற்ற வார்த்தைகளையே பயன்படுத்துவது வருத்தமாக உள்ளது.

எரியும் பனிக்காடு பற்றி தனியே ஒரு பதிவு எழுத உத்தேசித்துள்ளேன். அவ்வளவுக்கு மனதை உலுக்கிய புத்தகம் அது.

புயலிலே ஒரு தோணி, வண்ணதாசன் சிறுகதைகள் என ஏற்கனவே ஆரம்பித்து பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் புத்தகங்களும் என்னை சோம்பேறி என்று ஏசுவது கேட்கிறது. விரைவில் அவைகளையும் படித்து முடிக்க முயற்சிக்க வேண்டும். இப்போதெல்லாம் ’எல்லாம் அவன் செயல்’ என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு - இங்கே என்னுடைய அவன் என் குட்டிப் பையன்தான். அவன்தான் மனது வைக்க வேண்டும். :)

Saturday, August 15, 2009

மீண்டும்.. இதனால் சகலமானவர்களுக்கும்

இதனால் சகலமானவர்களுக்கும் பாகம் -1

இதே போன்று இன்னொரு மகிழ்ச்சிகரமான பதிவு இங்கே!

பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை இதன் தொடர்பதிவிலேயே தெரிவித்து விடவும். :)

Wednesday, May 13, 2009

ஜனநாயகக் கடமைய ஆத்திட்டோம்ல....

காலை 6.30 மணிக்கே அலுவலகத்திலிருக்க வேண்டிய அவசியம் பாலாவுக்கு. எனவே அவரை அனுப்பி வைத்துவிட்டு நானும் 7 மணிக்கே தயாராகிவிட முடிந்தது. 575758 என்ற எண்ணுக்கு நம் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை அனுப்பினால் நமக்கான பூத் முகவரியோடு வந்து விடுகிறது. இந்தப் பகுதியில் நான் ஒட்டளிப்பது முதல் முறை என்பதால் அந்த வசதியை பயன்படுத்தியும் என்னால் முகவரியைத்தான் கண்டுபிடிக்க முடிந்ததே தவிர எங்கள் வீட்டிலிருந்து அது கிழக்கா மேற்கா என்று கூட புரியவில்லை.

சரி என்று மண்ணின் மைந்தரான லக்கிலுக்கிற்கு தொலை பேசினால் அவரோ எடுக்கவே இல்லை. சரி, அதிகாலை 7 மணிக்கு (இல்லை ஒரு வேளை நடு ராத்திரியோ :) ) தொல்லை பேசியை வேறு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று முடிவு செய்து ஆட்டோ ஸ்டாண்டிற்குப் போய் விசாரித்து, தொலைவதிகமெனில் ஆட்டோவிலேயே போய் வந்துவிடலாம் என்று முடிவு செய்தேன். எவ்வளவு அருகிலிருந்தாலும் கூட அவர்கள் அது ரொம்ப தூரம்ங்க மேடம் என்றுதான் சொல்வார்கள் என்பதும் தெரிந்தேதான் இருந்தது. என்ன ஒன்று, நன்றாக ஏரியாவை சுற்றிப் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானப் படுத்திக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டுத் தெருவில் இறங்கிய போது பக்கத்து வீட்டுப் பெண்மணி வோட்டுப் போட்டு முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தார். அப்போதுதான் தோன்றியது, ஏன் எளிதாக அக்கம் பக்கத்தில் விசாரித்துக் கொள்ளலாம் என்று தோன்றவேயில்லை என்பது. அவரிடம் வழி விசாரித்துக் கொண்டு பூத்திற்குள் சென்றால் எந்தப் பகுதியில் இந்த வார்டு வருகிறது என்கிற வகைப்பாடு பூத்தின் உள்ளே இல்லை எனவும், வெளியே கட்சி சார்ந்த ஆட்கள் தெரு முனையில் இருப்பார்கள் , அவர்களிடம் ஸ்லிப் பெற்றுக் கொள்வதே சுலபமானது என்றும் அங்கிருந்த போலீஸ்காரர் சொன்னார்.

கொஞ்ச தூரத்தில் இருந்தவர்கள் லெஃப்ட் எடுத்து அப்புறம் ஒரு ரைட் எடுத்து என்று ஒரு இடத்துக்கு வழி சொன்னார்கள். அங்கே போனால் ஒரு 15 நிமிடம் செலவழித்த பின் உங்க ஏரியா இங்க வராது மேடம், நீங்க மறுபடி ஸ்கூல் கிட்ட போய் அங்கேர்ந்து ஒரு ரைட் எடுத்து அப்புறம் லெஃப்ட் எடுத்து.... என்று மறுபடி ஒரு இடத்துக்கு அனுப்பினார்கள். அதற்குள் எனக்கு எனது பூத் இருந்த பள்ளிக்கான லெஃப்ட், ரைட் வரிசையே லேசாக மறந்திருந்தது. நல்ல வேளையாக இன்னொருவரும் எங்கள் ஏரியாக்காரர் வந்தார். அவருக்கும் அதே வழிகாட்டல். அவர் டூ வீலர் வைத்திருந்ததால் அவரிடம் நானும் வரலாமா என்று கேட்டதும் வாங்களேன் என்று வண்டியில் ஏற்றி அழைத்துப் போனார்.

என்னவோ தெரியவில்லை, திரும்பிய பக்கமெல்லாம் அம்மா கட்சிகாரர்கள்தான் பூத் வைத்து ஸ்லிப் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பாக்கெட் பாக்கெட்டாக வடையும், 1 லி/2 லி பாட்டில்களில் டீயுமாக பூத்கள் களை கட்டிக் கொண்டிருந்தன. மற்றவர்கள் எல்லாம் எங்கே என்று தெரியவில்லை. வாக்குச் சாவடியிலேயே ஓவ்வொரு க்யூவுக்கும் முன்னால் எந்தந்த தெரு அல்லது வார்டுகாரர்கள் அங்கே வரவேண்டும் என்று எழுதி வைத்து விட்டால் இவ்வளவு தொல்லையில்லை.

அதே போல் எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது போலவே வாக்காளர் பட்டியலையும் கணிணி மயமாக்கி விட்டால் தேர்தல் செலவும் குறையும். அப்படியே ஆன்லைனில் புது வாக்காளர் அட்டைக்கு, முகவரி மாற்றத்திற்கெல்லாம் விண்ணப்பிக்கும் வசதியும் வந்துவிட்டால் கொஞ்சம் வசதியாக இருக்கும். ஒரு பிரிவினருக்கு மட்டும்தானே பயன் இருக்கும் என்று எண்ண வேண்டாம் - அந்தக் கூட்டம் குறையும் என்பதால் நேரில் செல்லும் மற்ற மக்களுக்கும் வரிசையில் நிற்கும் நேரம் நிச்சயம் குறையும்.

எங்கள் பகுதிக்கான வரிசையில் அதுவும் பெண்கள் வரிசையில் ஆட்களே இல்லை. நேரே உள்ளே போய் சீட்டைக் கொடுத்து, கையில் மை தடவிக் கொண்டு, பொத்தானை அமுக்கிவிட்டு 2 நிமிடத்தில் வெளியே வந்துவிட்டேன். யாருக்கு ஓட்டு என்பதில் ரொம்பத் தெளிவாக இருந்தமையால் அதிகக் குழப்பம் இல்லை. ஆனாலும் கடைசி நிமிடத்தில் அவரது சின்னம் மறந்து விட்டது. பெயரைக் கொண்டே கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் ரொம்ப ஒன்றும் சிரமமில்லை. ஒரு வழியாக என் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு வெளியே வந்தபோது மணி 8. வெயில் ஏறும் முன்னர் வீடு வந்து சேர்ந்தேன்.

Saturday, April 04, 2009

பெண்களின் அடிமைத்தனம் - தீர்வு

முன் எச்சரிக்கை: தன்னைத் தானே MCP என்று அறிவித்துக்கொள்பவர்கள் மேற்கொண்டு இக்கடிதத்தை படிக்காமலிருப்பது நல்லது.

அன்புள்ள ஏகாம்பரி,

உங்கள் பிரிய தோழியும் ஆல்ட்டர் ஈகோவுமான உஷாக்கா உங்களுக்கு எழுதின கடித்ததை எனக்கு ஃபார்வேர்ட் செய்திருந்தீர்கள். படித்து மகிழ்ந்தேன். என்ன இருந்தாலும் தேர்ந்த இலக்கியவாதியல்லவா? கடித இலக்கியத்தில் அது ஒரு புது அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் அக்கடிதத்தின் மையக் கருத்துடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை என்பதை தாழ்வன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இல்லற பாடத்திலும், இலக்கியத்திலும் பழம் தின்று கொட்டை போட்ட உஷாக்காவின் கருத்தை மறுத்துப் பேசுவதாக எண்ண வேண்டாம். கட்டற்ற சுதந்திரம் தரும் இணையத்தை பாவிப்பதில் உள்ள சுகமே யாரும் எதையும் மறுக்கலாம், உல்ட்டா அடி அடிக்கலாம், அதற்கு எந்தத் தகுதியும், தராதரமும் தேவையில்லை என்பதுதானே? அதை நாம் மட்டும் பயன் படுத்தவில்லையென்றால் எப்படி?

நிற்க(எழுந்தெல்லாம் நின்று விடாதீர்கள், இது கடித மரபில் ஒரு விஷயத்திலிருந்து இன்னொன்றிற்கு தாவும் முன் போடுகிற ஸ்பீட் ப்ரேக்). ஆண்கள் சமைப்பதில் உள்ள சங்கடங்களை எல்லாம் (அவர்களுக்கு அல்ல, நமக்கு) யக்கா அழகாக பட்டியலிட்டிருந்தார். அதில் எதையும் நான் மறுக்கவில்லை, எங்கள் வீட்டிலும் அத்தகைய களேபரங்கள் அவ்வப்போது நடக்கிறது என்ற இமாலய உண்மையை மறைகக்வுமில்லை. ஆனால் இதற்கெல்லாம் பயந்து புதுயுகப் பெண்களான நாம் பின்வாங்கினோமென்றால், அப்புறம் ஆண்களுக்கு மணி கட்டுவது பின் யார்?

இவ்விடத்தில் பினாத்தலார் என்கிற பிரபல பதிவர் ஒரு முறை எழுதிய பதிவொன்றினை நினைவுபடுத்த விரும்புகிறேன். wifology வரிசையில் வேலை செய்யாமல் தப்பிக்க அதை எவ்வளவு மோசமாக செய்ய முடியுமோ, அவ்வளவு மோசமாகச் செய்வதையும் ஒரு டெக்னிக்காக அடுக்கியிருந்தார். அவரின் ஃபேவரைட் ஐட்டமான உப்புமா செய்வதையே உதாரணமாகக் கொண்டு இந்த டெக்னிக்கை அழகாக விளக்கியிருந்தார். http://penathal.blogspot.com/2007/11/4-wifeology.html இதொன்றும் அவரது புது கண்டுபிடிப்பல்ல தோழி... காலகாலமாய் இந்த ஆண்கள் நம்மைப் போன்ற பெண்களை ஏமாற்ற பயன்படுத்தி வரும் மாபெரும் சதி நடவடிக்கைதான் அது. நாமும் கூட இதில் ஏமாந்துபோய், போதும் சாமி சமைச்சது என்று சொல்லிவிட்டால் அவர்கள் எல்லாம் உள்ளுக்குள் “இது, இது, இதைத்தானே நான் எதிர்பார்த்தேன்” என்று களித்துக் கும்மாளமிடுவார்களே தோழி? விடலாமா இந்த அக்கிரமத்தை நடத்த?

முதலில் உஷாக்கா செய்த ஒரு மாபெரும் தவறைச் செய்வதை நீ கனவிலும் நினைக்காதே – அதாவது ஆரம்பக் காலங்களில் அவர்களை நம் கண்மறைவில் சமைக்க அனுமதிப்பது. ஊருக்குப் போகையில் கிச்சனுக்கு ஒரு நல்ல godrej பூட்டாகத் தேடிப் பார்த்து பூட்டி, சாவியை நமது அம்மாக்களைப் போல தாலிச் சங்கிலியில் கோர்த்துக் கொண்டு போவது நலம். இங்கே ஒரு முறை என் வீட்டுக்காரார் நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு தாமதாமய் வந்த ஒரு நன்னாளில் Magie நூடுல்ஸ் செய்வதாகச் சொல்லி பாத்திரம் ஒன்றையும்,அதை விட கொடுமையாக புத்தம் புது எலக்ட்ரிக் ஸ்டவ்வையும் சேர்த்துக் கருக்கியது நினைவுக்கு வந்து என் கண்ணில் நீர் ததும்பச் செய்கிறது. நமது பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இது போன்ற விபத்துக்கள் ஆரம்ப கால கட்டத்தில் நடப்பதுதான் என்றாலும், அதற்காக நாம் சோர்ந்துவிடக் கூடாது. அதை விட முக்கிய விஷயம், அந்தப் பதற்றத்தில் கூட தவறியும் "அய்யோ, இதுக்குதான் உங்களை கிச்சன் பக்கமே விடறதில்லை, இனி இந்தப் பக்கம் வரவே கூடாது" என்கிற நம் தலையில் நாமே மண்வாரி போட்டுக்கொள்கிற டயலாகை மட்டும் சொல்லிவிடக் கூடாது என்பதையும் நினைவில் கொள்க.

இது போன்ற சந்தர்ப்பங்களில் "நீங்க பரவால்லப்பா, நான் சமைக்க ஆரம்பிச்ச புதுசுல வெந்நீர் போடறதுக்கே பாத்திரத்தை கருக்கியிருக்கேனாக்கும்" அப்படின்னு சும்மாவாச்சுக்கும் சொல்லி வைக்க வேண்டும். ஆனால் மறக்காமல் அந்தப் பாத்திரத்தை தேய்க்கும் வேலையை அன்னாரின் தலையிலேயே கட்டி விட வேண்டும்.

"எனக்கெல்லாம் கை அழுந்தாதுப்பா, நீங்களே இந்த ஒரு பாத்திரத்தை மட்டும் தேய்ச்சுருங்க ப்ளீஸ்" என்று சொல்லிவிட வேண்டும். இரண்டு நிமிடம்தான் முயற்சி நடக்கும். உடனே இதை தூக்கி போட்டுட்டு வேற வாங்கித்தரேனேம்மா என்கிற ஆசை வார்த்தைகள் வரும்தான். ஆனால் வைராக்கியமாக அதைத் தாண்ட வேண்டும்.

இப்படி மறுக்க இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் பிரச்சனையின் தீவிரம் அவர்களுக்குப் புரியாமல் போவது. இரண்டாவது, மற்றும் முக்கிய காரணம் அந்த வாக்குறுதியெல்லாம் தேர்தல் வாக்குறுதி போலத்தான். தீய்ந்த பாத்திரத்தை தூக்கிப் போடுவது மட்டும்தான் நடக்குமே ஒழிய, புது பாத்திரம் ஒரு நாளும் வராது. சும்மா அந்த நேரத்துப் பிரச்சனையின் தீவிரத்தை தணிக்கப் பயன்படும் ஒரு சின்ன சமாதானமே அந்த புது பாத்திரம் வாக்குறுதி.

எனவே சற்றும் மனந்தளராது, அம்மா வாங்கித் தந்தது, இல்லை முதன் முதலாக இந்த வீட்டில் வாழ்கைப்பட்டு வந்த (அந்த துரதிர்ஷ்ட தினத்தில்) பால் காய்ச்சியது என்று எதாவது ஒரு சென்ட்டிமென்ட்டை அதன் தலையில் கட்டி, எப்படியேனும் அதை தேய்க்க வைத்துவிட வேண்டும். ஒரு முறை தீய்த்தால் அதை தேய்ப்பது எவ்வளவு சிரமம் என்பது புரிந்து விட்டால் அடுத்த முறையிலிருந்து அந்த ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். இப்படியே சமையலறை மேடையை சுத்தம் செய்வதையும் பழக்கி விட்டோமேயானால் தீர்ந்தது பிரச்சனை.

வேலையை அவர்கள் தவிர்க்க முடியாத நிலையில் கொண்டு வந்து நிறுத்தும் முக்கிய ஆயுதம் நமது பாராட்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை, இது என்னங்க பெரிய விஷயம், நானெல்லாம் சமைக்க ஆரம்பிச்சப்ப என்று ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்க வேண்டும். பொறுமையிலும், விடா முயற்சியிலும் விக்ரமாதித்தனை பின்பற்ற வேண்டும்.

ஒரு மாதம் தொடர்ந்து இது போன்ற அஹிம்சா மார்க்கத்தை கடைபிடித்துப் பார்த்தும் தேறவில்லையென்றால்.... பிறகென்ன நமக்கு வாய்ச்சது அவ்ளோதான் என்று கண்ணையும் மூக்கையும் துடைத்துக் கொண்டு வேலையைப் பார்க்க வேண்டியதுதான். ஆனால் இந்த துக்கத்திலும் ஒரு நன்மை உண்டு - அதற்கப்புறம் நமது சமையலின் எந்தக் குறையையும் பற்றி பேசும் உரிமை நமது இல்லத் தலைவருக்கு கனவிலும் கிடையாது என்பதை இமைப்பொழுதும் மறப்பாதிருப்பீராக...

அப்புறம் ஊருக்கெல்லாம் இவ்வளவு உபதேசம் சொல்கிறாயே, உன் வீட்டுக் கதையென்ன கண்மணி என்று கேட்கிறாயா தோழி? @#$%^&^%$#&*@#$%^&^%$#&*&^%$#!@#$%^%$#&^%$#!@#$%^%$# வேறென்னத்த சொல்ல!

அன்புடன்,
லக்ஷ்மி

Wednesday, April 01, 2009

பக்தி வாங்கலியோ பக்தி

கடந்த 10 அல்லது 15 வருடங்களுக்குள்ளாக நடந்த எவ்வளவோ மாற்றங்களில் ஒன்றுதான் கோவில்களில் முண்டியடிக்கும் கூட்டம். சமீபத்துல ரொம்ப பாப்புலரா இருக்கற சில நம்பிக்கைகள் லிஸ்ட் யோசிச்சுப் பாத்தேன். தலை சுத்திப் போகவே பாதில நிறுத்திட்டேன்.

"பிரதோஷத்தன்னிக்கு சாமியோட சேர்ந்து பிரகார வலம் வந்தால் ரொம்ப நல்லதாம்."

"ராகு காலத்துல துர்க்கைக்கு எலுமிச்சை பழ மூடில விளக்கு போட்டால் நல்லது. (டிப்ஸ் :- சமையலில் செய்வதற்கு உல்ட்டாவா ஜூசை புழிஞ்சு கீழ விட்டுடணும், வெறும் மூடிய மட்டும் கவுத்து அகலா கன்வர்ட் பண்ணிக்கணும்)"

"ஞாயித்து கிழமை ராகுகாலத்துல சரபேஸ்வரர் பூஜைய பாத்தா நல்லது"

"ஆஞ்சநேயருக்கு வெத்திலை மாலை கட்டி போட்டால் வெற்றி நிச்சயம்"

"தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாத்தி, மஞ்சள் வஸ்திரமும் சாத்தணும்."

"ஆஞ்சநேயருக்கு வடை/வெத்திலை மாலை போடணும். வென்ணெய் சாத்தணும்"

கார்த்திகை சோமவாரம் (அட.. அதாங்க! திங்கள் கிழமை) - சிவனுக்கு, மாசி செவ்வாய் - வைத்தீஸ்வரன் கோவில் தையல்நாயகி அம்மனுக்கு, ஆடி/தை வெள்ளி எல்லா அம்மன்களுக்கும் பொதுவானது, புரட்டாசி சனி - நம்ம எழுமலையானுக்கு, ஆவணி ஞாயிறு - சூரியனுக்கு இப்படி சில காம்பினேஷன்கள் ரொம்ப விசேஷம்னு சொல்றாங்க.

இந்த லிஸ்ட்டில் புதனும், வியாழனும் பாவம் இப்போதைக்கு 'ஞே'ன்னு முழிச்சுகிட்டு நிக்குதுங்க (இல்ல எனக்குத்தான் அந்த விவரங்கள் தெரியலையோ என்னவோ). இன்னும் ஆறு மாசம் பாக்கி இருக்குல்ல? கூடிய சீக்கிரத்துல அதுல எதையாவது ரெண்டு மாசத்தை இந்த ரெண்டு நாளோடயும் கூட கோத்து விட்டுடுவாங்க சில மகானுபாவர்கள். அப்புறம் அந்த மாச- கிழமை காம்பினேஷனுக்கு எதாவது ரெண்டு சாமிய அசைன் பண்ணிட்டா போச்சு. அதான் முப்பத்து முக்கோடி தெய்வங்கள் இருக்காங்களே நம்மகிட்ட.

அப்புறம் சில சாமிகளுக்கு சில விசேஷ தினங்கள் மாசாமாசம் வரும்.

சங்கடஹர சதுர்த்தி - பிள்ளையாருக்கு.
பிரதோஷம் - சிவனுக்கு
சஷ்டி - முருகனுக்கு
ஏகாதசி - விஷ்ணுவுக்கு (இதும் மாசா மாசம் வரும், மார்கழில வரது மட்டும் வைகுண்ட ஏகாதசின்னு க்ராண்டா கொண்டாடுவாங்க)

அப்புறம் வருஷாந்திர நோன்புகள்/கொண்டாட்டங்கள் இந்த லிஸ்ட்டெல்லாம் போட்டால் தாங்காது. ஏதோ இதெல்லாம் இன்னிக்கு நேத்திக்கு புதுசா முளைச்ச சாமியார்களோட உபதேசப் பொன்மொழிகள் இல்லை. இதெல்லாமே காலங்காலமா புழங்கிக்கொண்டிருக்கற நம்பிக்கைகள்தான். ஆனா இப்ப இந்த நம்பிக்கைகள் பரப்பப்படுவதும், நடைமுறைப் படுத்தப் படுவதும் ரொம்பவே அதிகளவுல இருக்கு. முன்னாடியெல்லாம் இது போன்ற நம்பிக்கைகள் தெரிஞ்சாலும்/இருந்தாலும் எல்லாரும் எப்பவும் இதையே தொழிலா எடுத்துகிட்டு அலைஞ்சதில்லை.

ஒரு மனுஷனுக்கு அளவுக்கு அதிகமான சோதனைகள் வரும்போது பாட்டி/தாத்தா/மாமான்னு யாராவது ஒருத்தர் கூப்பிட்டு உக்காரவச்சு, நீ இந்த சாமிய வேண்டிக்கோ, இன்ன விரதம் இரு, இல்லை இன்ன கிழமைல தொடர்ந்து விளக்கேத்து, உன் ப்ரச்சனையெல்லாம் சரியாயிரும்னு சொல்லுவாங்க. சம்பந்தப்பட்டவரும் பெரியவங்க வாக்கை பெருமாள் வாக்கா நினைச்சு, அந்த விரதத்தை/ நேர்த்திக் கடனை நம்பிக்கையோட செய்வாங்க. கஷ்டம் சரியானதும் அதை நிப்பாட்டிட்டு, நாலு பேர்ட்ட தாத்தா சொன்னபடி விளக்கேத்தினேன், எல்லாக் கஷ்டமும் போயிருச்சுன்னு சந்தோஷமா சொல்லுவாங்க. செஞ்சவரோ/இதைக் கேட்டவங்களோ உடனே அந்தக் கோவிலே கதின்னு படையெடுக்க மாட்டாங்க - இதை மனசுக்குள்ள குறிச்சு வச்சுகிட்டு அதே போன்ற பிரச்சனைகளை சந்திக்கற இன்னொருத்தரை பாக்கையில் இதே மாதிரியான அட்வைச சொல்லுவாங்க. அதாவது அப்ப முதலில் மனித முயற்சி, அதை மீறின சிக்கல்கள் வரும் போது மட்டும் கடவுளிடம் வேண்டுதல் செஞ்சுக்கறதுன்னு ஒரு வழி முறை இருந்ததால இது போன்ற வேண்டுதல்கள் எல்லாம் ஒரு அளவோட இருந்தது.

அதே போல ஒருசில ஊர்க் கோவில்களுக்கு கிடைக்கும் திடீர் பாப்புலாரிட்டியையும் குறிப்பிட்டாக வேண்டும்.

'அம்மா' போய் யாகம் செய்ததில் பிரசித்தி பெற்ற அய்யாவாடி ப்ரத்யங்கரா தேவி கோவிலைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீங்க. தஞ்சையை அடுத்த சிற்றூரான எங்கள் ஊரில் ஒரு சிவன் கோவில். ராமேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலுக்கான கதையேதான் எங்க ஊர் சிவன் கோவிலுக்கும் சொல்லுவாங்க. அதாவது ராவணனைக் கொன்ன பிரம்மஹத்தி தோஷம் போக ஒரு குறிப்பிட்ட சிவலிங்கத்தை கொண்டு வரச்சொல்லி அனுமனை அனுப்ப, அவர் வரத் தாமதமாகவே அதற்கு பதிலாக 108 லிங்கங்களை மணலில் சீதை பிடித்துத் தர அதையே பூஜித்து ராமன் தனது தோஷ நிவர்த்தியை முடித்து விட்டாராம்.

எங்கள் ஊர்க் கோவிலில் கூடுதல் விசேஷமாக அந்த 107 லிங்கங்களும் தனியே பிரகாரத்தின் ஒரு புறத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும். மூலவரான ராமலிங்க சுவாமியையும் சேர்த்து 108 லிங்கங்கள் கோவிலுக்கு உள்ளே. கோவிலுக்கு வெளியே அனுமன் சற்றே லேட்டாக கொண்டு வந்த லிங்கமும் தனியே உண்டு. அம்பாள் பெயர் கூட ராமேஸ்வரம் கோவினுடையதைப் போலவே பர்வதவர்த்தினி தான். கோவிலின் இந்த விசேஷமெல்லாம் ஏதோ ஒரு சில உள்ளூர்க்காரர்களுக்கும், கோவிலின் குருக்களுக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியமாத்தான் இருந்தது கொஞ்ச நாள் முன்பு வரை. ஆனா திடீர்னு ஒரு நாள் நான் கல்லூரிக்குப் போனபோது என் வகுப்பு மாணவர்களில் ஒரு சிலர் என்கிட்ட வந்து இந்த விவரங்களையெல்லாம் சொல்லி, அப்படியான்னு கேட்டப்ப நான் குழம்பி போயிட்டேன். ஏன்னா அப்படி கேட்ட மாணவர்கள் ஒன்னும் பெரிய பக்தி பழங்கள்லாம் இல்லை. என்னடா இது, பசங்க ரூட் மாறுதேன்னு குழம்பி போய் கூப்பிட்டு கேட்டா அப்பத்தான் விஷயம் வெளிய வருது. முந்தின வாரத்துல ஒரு நாள் ஐஸ்வர்யா ராய் அந்தக் கோவிலுக்கு வந்து எதோ பரிகார பூஜை பண்ணிட்டு போனாங்களாம். அதான் பசங்களோட ஜெனரல் நாலெட்ஜ் பயங்கரமா இம்ப்ரூவ் ஆகியிருந்திருக்கு. :)))

இப்படி ஆசாமிகளால் பிரசித்தமாகும் சாமிகள் ஒரு பக்கம்னா, ஸ்பெஷலைசேஷன் மூலம் ஹிட்டாகுற கோவில்கள் சிலது இருக்கு. உதாரணமா திருமணஞ்சேரி, திருவிடந்தை போன்ற இடங்களில் இருக்கும் கோவிலுக்குப் போய் சில பூஜைகளை செய்தால் உடனே கல்யாணம் நடக்குமாம். திருக்கருகாவூர் போன்ற ஸ்தலங்கள் பிள்ளைப் பேறு கிடைக்க. அப்படி பிறந்த பிள்ளைக்கு நல்ல கல்வி கிடைக்க கூத்தனூர் போய் வித்தியாப்பியாசம் ஆரம்பிக்கணும். இன்னும் செல்வ வளம், தொழில் சிறக்க, எதிரிகளை அழிக்கன்னு விதவிதமாய் ஸ்பெஷலிஸ்ட்டுகள் தமிழ்நாடு முழுக்க வியாபிச்சிருக்கறதா தகவல்.

இதுவும் கூட முன்னாடி எப்போதுமில்லாம புதுசா இப்ப பரவியிருக்கற நம்பிக்கைகள் இல்லை. ஆனா இப்ப மட்டும் ஏன் இப்படி ஒவ்வொரு ஊர்லயும் கூட்டம் குமியுதுன்னு புரியலை. இதெல்லாத்தையும் விட ரொம்ப பெரிய ப்ரச்சனை ஒன்னு – புற்றீசல் போல கிளம்பியிருக்கற ஹைடெக் சாமியார்களின் போதனைகளும், அவங்களோட அடிப்பொடிகளும். இந்த கடைசி விஷயம் மட்டுமே பல பதிவுகளில் எழுதலாம் – அவ்ளோ ஏமாத்து வேலைகளும், காமெடிகளும் நடந்துகிட்டிருக்கு இதுல. தனியா ஒரு நாள் இதை பத்தி எழுதணும்.

யோசிச்சுப் பாத்தா இதுக்கெல்லாம் ஒரு காரணம்னு எனக்குத் தோணறது இன்னிக்கு இருக்கற போட்டி நிலமை - சர்வைவல் அஃப் ஃபிட்டஸ்ட் அப்படின்ற தத்துவம் - வலியதே வாழும்னு தமிழ்ல வச்சுக்கலாம் - அதுதான் இன்னிக்கு உலகத்துல எல்லாத் துறையிலும் தாரக மந்திரமா இருக்கு.

வெறும் மனித யத்தனம் மட்டும் இதுக்கு போதுமோ இல்லையோன்ற பயம் எல்லாருக்குள்ளயும் இருக்கு. அதோட விளைவுதான் இது மாதிரியான கோவில்களுக்கும், பரிகார பூஜைகளுக்கும், எந்திரத் தகடுகள் விற்பனைக்கும், சாமியார்களோட ப்ரெயின் வாஷ் கூட்டங்களுக்கும் மக்கள் பலாப்பழத்தை மொய்க்கிற ஈக்கூட்டமா அலைபாய காரணமா அமையுதுன்னு தோணுது.

சாதாரண படிப்பு, சாதாரணமான ஒரு சம்பளம், அதுக்கேத்த மிதமான ஓட்டமுள்ள ஒரு வாழ்கைய இன்னிக்கு யாராவது டார்கெட் பண்றாங்களான்னு பாத்தா நிச்சயமா இல்லை. பிரபல பள்ளியோட அப்ளிகேஷன் ஃபார்முக்கான க்யூவுல விடிய விடிய நின்னு அப்ளிகேஷனை வாங்கி வந்து நிரப்பி அனுப்பினாலும், வெறும் எல்.கே.ஜிக்கே 60 லேர்ந்து 80 ஆயிரம் வரை ஃபீஸ் கட்டத் தயாரா இருந்தாலும் கூட சீட் கிடைக்குமான்றது நிச்சயமில்லைன்னு சொல்லும் போதுதான் அந்த பெற்றோர் அப்ளிகேஷனையும் அனுப்பிட்டு அப்படியே மேல் மருவத்தூர் ஆத்தாவுலேர்ந்து ஆரம்பிச்சு கன்யாகுமரில இருக்கற ஆத்தா வரைக்கும் ஒருத்தர் விடாம எல்லார்ட்டையும் ஒரு வேண்டுதலையும் போட்டு வைக்கறாங்க.

ஏன் இவ்ளோ டென்ஷன், அரசுப் பள்ளியில கொண்டு போய் அழகா சேர்த்துடலாமேன்னு நாம நினைக்கலாம். ஆனா அப்படி சேர்த்து அதுனால நாளைக்கு அந்தப் குழந்தையால முன்னுக்கு வர முடியாம போயிருச்சுன்னா, "துள்ளித் திரியும் வயதிலே என் துடுக்கையடக்கி (ஒரு நல்ல தனியார் !!!)பள்ளிக்கு அனுப்பிடாத பாதகா"ன்னு அந்தக் குழந்தை நாளைக்கு நம்மை பாத்து கேட்டுருமோன்னு பெற்றோர் பயப்பட வேண்டியிருக்கு. ஏன்னா சுத்தி இருக்கற எல்லாரும் அவங்கவங்க குழந்தைகளை அப்படியான உசத்தியான பள்ளிக் கூடத்துல சேத்திருக்காங்க. நாளைக்கு அவங்கல்லாம் நேரா அங்கேர்ந்து அப்படியே ஐ.ஐ.டிக்கு போகையில் இவங்க பிள்ளை மட்டும் ஒரு கவர்ன்மென்ட் காலேஜ்ல பி.காமோ இல்லை பி.ஏவோ முடிச்சுட்டு அடுத்து என்னான்னு புரியாத குழப்பத்தோட நின்னால் இவங்களால அத தாங்கிக்க முடியுமா?

எல்.கே.ஜி சேக்கையிலேயே அந்த குழந்தைக்கு ஐஐடில சேரணும்னு வெறியேத்தினாதான் குறைஞ்சது ஒரு சாதாரண பொறியியல் கல்லூரிலயாவது சேர முடியும். இப்படி ஏகப்பட்ட peer pressure… எல்லா விஷயத்திலும் இதேதான் பிரச்சனை. நாம போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு வாழ நினைச்சாலும் சுத்தி எல்லாரும் ஜொலிக்கையில் ஒரு வேளை நாமதான் முட்டாள்தனமா நடந்துக்கறோமோன்னு சந்தேகம் வந்துருதில்லையா?

நிர்வாண ஊர்ல ஆடை கட்டினவங்க பைத்தியம்னு சொல்றா மாதிரி… அந்த மாதிரி பலவீனமான தருணங்களுக்காகவே காத்திருந்து நம்மை சுண்டியிழுக்கற விளம்பரங்கள் நம்மை ராக்ஷச நுகர்வு வளையத்துல சிக்க வச்சுட முடியும். அப்புறமென்ன, அதுக்கு தகுந்த வருமானம் வேணும். இல்லைன்னா பர்சனல் லோன், கார் லோன், ஹவுசிங் லோன் என சகலமான லோன்களும், கிரெடிட் கார்டுகளும் – அத்தனை சுமையையும் ஒரே மூச்சில் தூக்கி சுமக்க சராசரி மனிதனுக்கு கடுமையான போதை ஒன்று தேவையாக இருக்கிறது.

இன்று ஆன்மிகம் அந்த இடத்தை மிகச்சரியாக குறிவைத்து அடைந்துவிட்டது (இந்த இடத்தில் வாலி படத்தில் ஏகப்பட்ட வியாதிகளுக்கு விவேக்கிடம் ஒரு இளைஞர் மருந்து கேட்கும் காட்சி நினைவுக்கு வருகிறது). அதன் விளைவுதான் கோவில்களில் நீளும் க்யூவும், சாமியார்களிடம் போய் ஏமாந்து நிற்கும் ஏமாளிகளின் எண்ணிக்கையும் கூட முக்கிய காரணம். எல்லோருக்கும் அதிக செலவில்லாத, ஒரே தரத்திலான கல்வி (அதுவும் கட்டாயக் கல்வி), சமமான, உத்ரவாதமான வேலை வாய்ப்பு – இதெல்லாம் கிடச்சுட்டா திரும்பவும் பழயபடி நிதானமான போக்கு எல்லாருக்கும் வந்துரும்னு நம்பறேன். எல்லாம் வல்ல இறைவனிடம் அந்த அற்புதம் விரைவில் நடக்க வேண்டிக் கொள்ளுங்கள். :)

Tuesday, March 10, 2009

கவிதை.. கவிதை.. கவிதை..

எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தப் பதிவ படிச்சதும் எனக்கு படிச்ச்தும் சிரிப்பு தாங்கலை. ஒரு வரி எழுத 10 வரியாவது படிச்சிருக்கணும்னு நானும் நம்பறேன். அந்தளவு வாசிப்பனுபவம் இல்லைன்னா என்னதான் திறமை இருந்தாலும் நல்ல நடை கைகூடறதில்லை. நிஜம்மாவே இந்த மாதிரி மனிதர்கள் நிறைய பேர் இருக்காங்க - எதுமே படிக்காம எழுதணும்னு நினைக்கறவங்க. அதுலயும் அப்படி எழுதினதை நம்மகிட்ட கொடுத்து அபிப்ராயம் வேற கேப்பாங்க பாருங்க, விளக்கெண்ணை குடிக்கறது கூட அதை விட சுலபமான விஷயமாத்தான் இருக்கும்.

என்னுடைய முதல் கவிதை பத்திரிக்கையில் வந்ததும் சந்தோஷம் தாங்காம நான் ஒரு தப்பு பண்ணினேன். அப்ப டிகிரி முதல் வருஷம் படிச்சுகிட்டிருந்தேன். வீட்டுல யார்ட்டையும் கவிதைய பத்தி சொல்ல முடியாது - ஏன்னா அந்த வயசுக்கே உரிய மாதிரி அது ஒரு காதல் கவிதை. அப்ப எனக்கு ரொம்பத் தீவிரமா ஒரு ஒரு தலைக் காதல் வேற ஓடிகிட்டிருந்தது. அந்த ஹீரோவை வச்சுத்தான் அந்தக் கவிதையே எழுதியிருந்தேன்னு வச்சுக்குங்களேன்.

அது ஒரு சுவாரசியமான முக்கோண காதல் கதை. சமயம் கிடைத்தால் ஒரு நாள் தனியா அதை எழுதறேன். ஆனா ஒரு உண்மைய ஒத்துகிட்டே ஆகணும் - அவனுடனான அந்த காதல் சமயத்துல நான் எழுதின அளவுக்கு வேகமாவும், தரமாவும் வேற எப்பவும் கவிதை எழுதினதில்லை (ஏன்னா அதுக்கப்புறம் நான் கவிதையே எழுதறதில்லை… ஹிஹிஹி) அந்த சந்தர்ப்பத்துல மட்டுந்தான் என்னுடைய கவிதைகள் ஒன்னு ரெண்டு பத்திரிக்கைகளில் பிரசுரம் ஆகவும் செஞ்சுது. பட், துரதிர்ஷ்ட வசமா அதெல்லாத்தையும் அப்பப்ப என் காலேஜ் நோட் புக்குகளில் எழுதி வச்சிருந்தேனே தவிர அதையெல்லாம் பாதுக்காத்து வச்சுக்கலை. இப்ப நான் கவிதைன்னு முயற்சிக்கறப்ப வர குப்பையெல்லாம் பாக்கறப்பதான், எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்னு தோணுது... சோகம். 

அப்ப என் கவிதைகளில் தனக்கு பிடிச்சதை எடுத்து வேலை மெனக்கிட்டு பத்திரிக்கைக்கு அனுப்பிட்டு இருந்தவங்க என்னுடைய நெருங்கின தோழி ஒருத்தங்க. அவங்க வீட்டு அட்ரஸ் போட்டே ஆனா என் பேர் போட்டு அனுப்புவாங்க. யோசிச்சு பாருங்க, லக்ஷ்மி, C/O. ஜியாவுத்தீன் அப்படின்னு ஒரு அட்ரஸ் இருந்தால் அது எவ்வளவு ஆச்சரியமானதா இருந்திருக்கும். ஒரு வேளை அந்த ஆச்சரியத்துலதான் உதவி ஆசிரியர்கள் என் கவிதைய தூக்கியெறியாம படிச்சுப் பாத்திருப்பாங்களா இருக்கும். சொல்ல வந்த கதைய விட்டுட்டேன் பாருங்க; வீட்டுல யார்ட்டையும் சொல்ல முடியாதா.., அதுனால நான் என்ன பண்ணினேன் அறியாமையால் ஒரு பெரிய தவறு செஞ்சேன்.

எதிர்வீட்டுல குடியிருந்த ஒரு couple-கிட்ட போய் என் கவிதையையும் காட்டி, விஷயத்தையும் சொன்னேன். அவங்க ரெண்டு பேருமே எங்க ஊர் பக்கத்துல இருக்கற கிராமத்துல நல்ல பெரிய நிலக்கிழார் குடும்பங்களைச் சேர்ந்தவங்க. எங்க ஊரே அவங்களுக்கு டவுன் மாதிரி தோணும். அப்படியான ஒரு சூழல்லேர்ந்து வந்திருந்தாங்க. பத்தாதுக்கு தன்னால முடியாததுன்னு ஒன்னு உலகத்துலயே கிடையாதுன்னும், தன்னை விட அழகு/அறிவு/பணம் இதெல்லாம் யாருகிட்டயுமே இல்லைன்னும் நினைக்கற மனோபாவம் வேற. மிராசுதார் வீட்டுல ஒரே பொண்ணா வளந்தவுங்க, பெரிய குடும்பத்துல வாழ்கைப் பட்டாலும் எடுத்ததுமே வீட்டுக்காரரோட உத்தியோகம் காரணமா தனிக் குடித்தனம் - இதெல்லாம் ஊர்ல அதிகம் பெண்களுக்கு கிடைக்காத அதிர்ஷ்டம்ன்றதால ரொம்ப over confidence. இதெல்லாம் இப்ப எனக்கு அனலைஸ் பண்ணத் தெரியுது - ஆனா அப்ப தெரியாதில்ல?

அவங்க கிட்ட போய் காண்பிச்சதும் முதல்ல அவங்க வீட்டுக்காரர் கவிதை நல்லாருக்கும்மா, வெரி குட்மான்னார். இந்தம்மா உடனே ஒரளவு சுமாரா இருக்கு. நானெல்லாம் பிரமாதமா எழுதுவேன். இதுவே புக்குல வருதுன்னா, என்னுதெல்லாம் எப்பவோ அனுப்பியிருக்கலாமே? ஆமா உனக்கு இந்த அட்ரஸ்லாம் எப்படி கிடைச்சுதுன்னாங்க. நான் பவ்யமா, என் ஃப்ரெண்ட்தான்க்கா அனுப்பறாங்க, அவங்ககிட்ட அட்ரஸ் வாங்கிட்டு வரேன். நீங்களும் கவிதை எழுதுவீங்கன்னு தெரியாம போச்சே, எழுதினது இருந்தா தாங்கக்கா. படிச்சுட்டுத் தரேன்னு (நாக்குல சனி நர்த்தனமாடிருக்கணும் அப்ப) சொன்னேன். உடனே அவங்க நான் எழுதின நோட்டெல்லாம் ஊர்ல இருக்கு. ஞாபகத்துல இருக்கறதை ஒரு நோட்ல எழுதி நாளைக்குத் தரேன். நீ படி. அப்படியே உன் ஃப்ரெண்டுகிட்ட கொடுத்து அவளை விட்டே நல்ல கவிதயா எடுத்து எழுதி, அட்ரஸ்லாம் கவர்ல எழுதி கொண்டுவா. அந்தப் பொண்ணு நல்ல கைராசிக் காரியா இருக்கா. நானே அப்புறமா போஸ்ட் பண்ணிக்கறேன் அப்படின்னாங்க. நானும் மறுநாள் மறக்காம கேட்டு நோட்டை வாங்கிட்டு காலேஜ் போனேன்.

பிரிச்சு படிச்ச நானும் தோழியும் ரொம்ப டென்ஷனாயிட்டோம். எல்லாம் மன்னவனே, மைவிழி ஏங்குகிறாள், நாணுகிறாள் டைப் கவிதைகள். வாக்கிய அமைப்புக் கூட சரியா இல்லை - கிட்டத் தட்ட உளறல்கள்னே சொல்லலாம். பகைச்சுக்கவும் முடியாது - பெரியவங்களோட எல்லாம் அதுவரை சண்டை போட்டதில்லை.

அதுனால ஒரு ஐடியா பண்ணினோம். ஒரளவு உருப்படியா புரிஞ்சுக்க முடிஞ்ச விஷயங்களை (அதையெல்லாம் கவிதைன்னு பேச்சுக்கு கூட சொல்ல முடியாது) எடுத்து ரெண்டு காப்பி எழுதறதுன்னு முடிவு செஞ்சோம். ஒன்னு அவங்க என்ன எழுதியிருக்காங்களோ அதையே அப்படியே காப்பி பண்றது. இன்னொன்னு வாக்கிய அமைப்பை மட்டுமாவது சரி செஞ்சு எழுதினது. அப்புறம் கவர்ல பத்திரிக்கை முகவரி. என்னுடைய கவிதைகள் வந்துகிட்டிருந்தது தினமணிக் கதிர்ல. ஆனா தினமணி அட்ரஸுக்கு அந்த கவிதைகளை அனுப்பறது எங்களுக்கே கொஞ்சமும் அடுக்காதுன்னு தோணித்து. அதுனால தினத்தந்தியோட குடும்ப மலர் அட்ரஸை எழுதி எல்லாத்தையும் எடுத்துட்டு போய் கொடுத்தேன். ஒரு 5 ஐட்டம் தேத்தியிருந்தேன்.

அவங்ககிட்ட கொடுத்ததும் பிரிச்சு படிச்சு பாத்துட்டு, நான் எழுதினதே நல்லாத்தான் இருந்தது. பட் இருந்தாலும் நீங்க ரொம்ப ஆசையா மாத்தி எழுதியிருக்கீங்க. அதுனால அதையே அனுப்புவோம்னு ரொம்ப பெருந்தன்மையா சொன்னாங்க. அப்புறம் எல்லாத்தையும் ஒரே நேரத்துல அனுப்பி ஒரே புக்ல வந்துருச்சுன்னா அந்த ஒரு தரம்தானே பத்திரிக்கைல வந்ததா இருக்கும்? அதுனால வாரம் ஒன்னா அனுப்பலாம்னு வேற சொன்னாங்க (என்னே ஒரு தன்னம்பிக்கை).

ஆனா குடும்ப மலர் கூட அந்தக் கவிதைகளை பிரசுரிக்கலை. ஆடிக்கு பின்னால் ஆவணி, என் தாடிக்குப் பின்னால் ஒரு தாவணின்ற ரேஞ்சுலதான் அதுல கவிதையெல்லாம் இருக்கும். அதுலயே கூட வரலைன்னா பாத்துக்குங்க. ஒரு ரெண்டு மாசத்துக்கு கொஞ்சம் கிலியோடதான் அவங்க வீட்டுப் பக்கம் போவேன்.

அதும் அவங்க கைல எதுனா நோட்டை பாத்தா தூரத்துலேர்ந்தே ஓடி வந்துருவேன். அவங்க மளிகை சாமான் பட்ஜெட் போட்டுட்டு கூட இருந்திருக்கலாம். ஆனா யாரு ரிஸ்க் எடுக்கறது? அதான்.. அப்புறம் ரெண்டு மாசம் வரைக்கும் எதும் வரலைன்னதும் அவங்களும் இந்த கவிதையெல்லாம் வேஸ்ட்டுனு முடிவு செஞ்சு விட்டுட்டாங்க. நானும் நல்லாத் தெரிஞ்சவங்களைத் தவிர வேற யார்ட்டையும் அலட்டிக்க கூடாதுன்ற அற்புதமான பாடத்தை கத்துகிட்டேன். :))

Wednesday, January 14, 2009

காதல்னா சும்மா இல்லை- படம் என் பார்வையில்!







ரிலீசான முதல் நாளே படம் பார்ப்பது எனக்கு இதுதான் முதல் முறை. திடீரென இன்று காலை முடிவு செய்து கிளம்பினோம். உண்மையில் பல வாரங்களாக திண்டுக்கல் சாரதி படம் பார்க்கவேண்டுமென்று திட்டமிட்டு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. பொங்கலுக்கு எனக்கு சீர் தருவதற்காக ஊரிலிருந்து சித்தி, சித்தப்பா வந்திருப்பதால் வீட்டில் வேலை எனக்கு குறைவாக இருந்தது (காலையிலிருந்து செய்த இரண்டே இரண்டு வேலை பொங்கல் பானையின் அருகிலிருந்து பால் பொங்கியதும் பொங்கலோ பொங்கல் என்று கூவியதும், பொங்கல் தயாரானது விளக்கேற்றியதும்தான். அதிலும் பாலா முதல் வேலையை மட்டுமே செய்தார் :)) ) எனவே சாப்பாடானதும் படத்துக்குப் போகலாம் என்று முடிவு செய்து சத்யத்தின் வலைப்பக்கத்துக்கு போனால் திண்டுக்கல் சாரதி இன்று அட்டவணையிலேயே இல்லை. அபியும் நானும் படத்திற்கு முதல் வரிசை இருக்கைகளாகத்தான் இருந்தது. எனவே மீதமிருக்கும் படங்களில் இந்த படத்தில் எனக்குப் பிடித்த ஹீரோயின் என்பதாலும், விளம்பரங்களில் பார்த்திருந்த ஒரு பாடல் பிடித்திருந்த காரணத்தாலும் இந்த படத்துக்கு இரு டிக்கெட்டுகளை பதிவு செய்தோம்.

அதிலும் நாங்க 10 மற்றும் 11 எண்ணுள்ள இருக்கைகளைத் தேர்ந்தெடுக்க, டிக்கெட்டில் வந்திருந்ததோ 9 மற்றும் 10 எண்கள். இரண்டு இருக்கைக்கும் நடுவில் நடைபாதை. நொந்து போய் அவர்களது தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் உங்களுக்கு 8 மற்றும் 9ஆம் எண்ணுள்ள இருக்கைகள்தான் ஒதுக்கப் பட்டுள்ளன என்று தைரியம் தந்தார்கள். சரி, என்ன ஆனாலும் அங்கு போய் ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பிப் போனோம். பார்க்கிங்க்ற்கு வேறு ராயபுரம் மணிக்கூண்டு வரை போய் சுற்றிக் கொண்டு வரவேண்டுமென்பதில் பாலாவுக்கு ஏகக் கடுப்பு. இந்த குளறுபடிகளில் படம் ஆரம்பித்து 5-10 நிமிடம் கழித்தே உள்ளே நுழைந்தோம். தட்டுத் தடுமாறி இருக்கைகளைக் கண்டுபிடித்து அமர்வதற்குள் போதும் போதுமென்று ஆனது.





தெலுங்கில் வெளியான கம்யம் என்ற படத்தின் ரீமேக் இது. இளங்கண்ணன் இயக்கியுள்ளார்.
படம் ஏமாற்றவில்லை. சற்றே மாறுபட்ட நல்ல கதை. பாடல்களில் ஒன்றே ஒன்றுதான் தேறும். கிளைமேக்ஸை நெருங்குகையில் தேவையில்லாத சில விஷயங்களைச் சேர்த்து சற்றே இழுத்திருக்கிறார்கள் என்பது தவிர வேறு ஏதும் பெரிதான குறைகள் இல்லாத காட்சியமைப்புகள். வழக்கமாய் ஹீரோவாக நடித்து நமது பொறுமையை சோதிக்கும் ரவிகிருஷ்ணா இதில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து நம்மை காப்பாற்றியிருக்கிறார். கதாநாயகனாய் வருகையில் நம்மை மிகவும் வெறுப்பேற்றுவது அவரது குரல்தான். ஆனால் அந்தக் குரலே அவரது இந்த நகைச்சுவை அவதாரத்தில் அவரை காப்பாற்றுகிறது.

இருவேறு துருவங்களாக இருக்கும் கதாநாயகன் நாயகி. நாயகன் இரவு முழுவதும் நான்கு பார்ட்டிகளுக்குப் போய், பகல் முழுவதும் தூங்குமளவு பிஸியானவன். நாயகி அநாதையாய் வளர்ந்து, டாக்டராகி, தன்னைச் சுற்றியிருக்கும் எளிய மக்களுக்குத் முடிந்த வரை சேவை செய்யும் எண்ணத்தோடும் எல்லோரிடமும் அன்போடும் வாழ்பவள். மெல்ல மெல்ல இருவரும் நெருங்குகையில் ஏற்படும் ஒரு சச்சரவு பெரிதாகிறது. நாயகி இருக்கும் சூழலும், அவளது நோக்கங்களும் நாயகனுக்கு கேவலமாகவும், சகிக்க முடியாததாகவும் தோன்றுகிறது. இதனால் நமக்குள் ஒத்து வராது என்று சொல்லி நாயகி பிரிந்து செல்கிறாள். அவளைத் தேடி நாயகன் போகும் பயணம்தான் படமே.

அவர்களது காதலும், பிரிவும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளாகவே முழுவதும் வருகிறது. இடையில் பைக் திருடனான ரவி அவரோடு இணைந்து கொள்கிறார் - அவரது விலை உயர்ந்த பைக்கின் மீது ரவிக்கு கண். ஆனால் மெல்ல மெல்ல இருவரும் நண்பர்களாகிறார்கள். வழியில் எதிர்படும் பல்வேறு சம்பவங்கள் அவருக்கு மனித வாழ்வின் மற்றொரு பரிமாணத்தை புரிய வைக்கிறது. எதிர்பாராமல் நாயகன் கையிலேயே இறக்கிறார் ரவிகிருஷ்ணா. கடைசியில் நாயகியை சந்திக்கையில் முற்றிலும் மாறியவராக ஆகிறார் நாயகன். முடிவு சுபம்.

படத்தை தூக்கி நிறுத்துவது ரவி கிருஷ்ணாவின் நகைச்சுவைதான். குறிப்பாக ஆரம்பத்தில் நாயகனோடு இணைந்து கொள்வதற்காக போடும் பில்டப்புகளில் வழியில் ஆங்காங்கே சும்மாவேனும் நிறுத்தி பலருடனும் கலாய்த்துக் கொண்டு வருமிடத்திலும், பிறகு ஒரு நம்பிக்கையில் நிலவிடம் தனது பிரியத்துக்குரியவர்களிடம் சேதி சொல்லச் சொல்லிக் கொண்டிருக்கும் சர்தார்ஜியை கொஞ்சம் வெயிட் செய்யச் சொல்லிவிட்டு தான் தனது சித்தப்பாவை திட்ட வேண்டியதை சொல்லிவிட்டு பிறகு அவரை கண்டின்யூ செய்து கொள்ளச் சொல்வதுமாக கலக்கியிருக்கிறார்.

எல்லாவற்றையும் விட தேஜாஸ்ரீயின் பாடல் முடிந்த பின்னான காட்சிகளே படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானதாய் இருந்தது. தேஜாஸ்ரீ கிராமத்து மேடைகளில் ஆடும் ஒரு நாட்டிய பெண் மேடை கிடைக்காத சமயங்களில் வயிற்றுப்பாட்டுக்காக அவர் செய்யும் வேலை பாலியல் தொழில். அவர் திருவிழாவில் ஆடிக் கொண்டிருக்கையில் ரவியும் அவரோடு இணைந்து ஆடிக் கொண்டிருக்கிறார். உள்ளூர் பெரிய(?!?!) மனிதர்கள் சிலர் அப்பெண்ணை இன்னமும் ஆடை குறைத்து ஆடச் சொல்ல, அவள் மறுக்கிறாள். உடனே நீ என்ன பெரிய பத்தினியா, பலரோடு படுக்கறவதானே, ஆடச் சொன்னால் அவுத்துப் போட்டுட்டு ஆட வேண்டியதுதானே என்று வழக்கமான கேள்விகள் வருகின்றன. அவள் நான் பலரோடு படுப்பவள்தான் என்றாலும் ஆடையின்றி மேடையில் ஆட நான் மிருகமல்ல என்கிறாள். வலுக்கட்டாயமாகத் துயிலுரிக்கத் தயாராகும் ஆட்களை ரவியும், பின்னால் ஹீரோவும் அடித்து விரட்டுகிறார்கள். ஒரு பாலியல் தொழிலாளியே ஆனாலும் அவளை வலுக்கட்டாயமாக ஆடையுரிக்கவோ அனுபவிக்கவோ யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்பதை உரத்துச் சொல்ல முன்வந்த இயக்குனரை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

பொதுவாகவே நம் சமூகத்தில் ஒரு மனோபாவம் - நடத்தை சரியில்லாதவள் என்று ஆகிவிட்டாலே அவளை யாரும் எப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம், அதெல்லாம் அவளுக்கு வேண்டிய தண்டனைதான் என்பதான சிந்தனை நமக்குள் ஊறிப்போயிருக்கிறது. ஆடை குறைப்பதோ, குறைக்க மறுப்பதோ அது ஒரு தனி மனிதனின் உரிமை என்பதையும், அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்பதையும் இன்னமும் நாம் நிறைய பேருக்கு புரிய வைக்க வேண்டியதிருக்கிறது. அந்த வகையில் இது போன்ற ஒரு சில நல்ல காட்சியமைப்புகள் ரொம்பவே நம்பிக்கையைத் தருகின்றன.

படத்தில் இன்னமும் கொஞ்சம் நல்ல பாடல்கள் இருந்திருக்கலாம்... பழைய வாசனை அடிக்கிறது. தலைப்பும் இன்னமும் சற்று பொருத்தமானதாகவும், அழகாகவும் தேர்ந்தெடுத்திருக்கலாம். நீண்ட நாட்கள் கழித்து குடும்பத்துடன் ரசிக்க படியான அருமையான படம் பார்த்த திருப்தி எனக்கு.