Tuesday, November 06, 2007

காயங்களின் பட்டியல்

போர் ஓய்ந்த பின்னும் குருதி காயாத களமாய் கிடக்கிறது என் மனம்.
போகிறபோது நீ வீசியெறிந்துவிட்டுப் போன கற்களால்
உடைந்து சிதறிக் கிடப்பது கண்ணாடிக் கதவுகள் மட்டுமல்ல.
மனமூலைகளில் நான் குவித்து வைத்திருந்த சகல குப்பைகளையும்
போகுமுன் உதறிக் காட்டிவிட்டுப் போனாய் நீ.
ஒவ்வொரு மூலையிலும் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
நீ உரக்கச் சொன்ன என் இயலாமைகளின் பட்டியல்.
எல்லாவற்றையும் தாண்டி இன்னமும் ஒரு சிறு ஆறுதல்
இந்த மனப் பேய்க்கு - இன்னமும் காற்றில் மிதக்கும் உன் வாசனை.

Monday, November 05, 2007

இன்னமும் பேசத்தான் வேண்டுமா பெண்ணியம் பற்றி?

‘ஏண்டா நாயே இப்படி பண்ணே?’னு கேட்டதுக்கு, ‘மூணாவதா பையன் பொறப்பான்னு காத்திருந்தேன். ஆனா மூதேவி இல்ல பொறந்திருக்கு. அதான் கொன்னுட்டேன்’னு சொல்றான்’’

‘‘ஏற்கெனவே எனக்கு ஏகப்பட்டகடன். இதுல இந்தப் பொட்டச்சியையும் எப்படி வளர்க்கறதுனு தான் கொன்னுட்டேன்...’’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி அதிர வைத்தான்.

சாதி ஒழிப்புப் பற்றியும் பெண்ணுரிமை பற்றியும் பேசப்படும் போதெல்லாம் அடிக்கடி எதிர்கொள்ள நேரிடும் ஒரு கேள்வி இது - "எவ்வளவோ பேர் முன்னேறிட்டாங்க. இன்னமும் எதுக்குங்க இதையெல்லாம் பத்திப் பேசிகிட்டுத் திரியறீங்க நீங்க? உங்களை மாதிரி ஆளுங்கதான் இல்லாத ஒரு விஷயத்தை இன்னமும் எடுத்து வச்சுப் பேசறீங்க." நல்ல வேளையாக இந்தப் புண்ணியவான்கள் ஏழ்மை ஒழிப்புக்கும் இதே வகையான வசனங்களைச் சொல்ல முடியவில்லை. அதுவே பெரிய விஷயமாக்கும்....

இதில் சாதிப் பிரச்சனை பற்றி பேச வேண்டியதின் அவசியத்தை இன்னமும் இருக்கும் இரட்டைக் குவளை முறையிலிருந்து திண்ணியம் சம்பவம் வரை எத்தனையோ விஷயங்கள் உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் நான் பேச ஆரம்பித்தால் உடனே அகவாழ்வியலிலிருந்து புறவாழ்வியல் வரை புடலங்காய்ப் பொரியல் உட்பட சகல இயக்கவியல்களையும் கரைத்துக் குடித்த அதிமேதாவிகள் ஓடி வந்து அதைப் பற்றிய உனது பேச்செல்லாம் வெறும் பரிதாபம் காட்டும் பேச்சாய்தானிருக்குமென்று ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். சரி, பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்ட காரணத்தால் நான் பெண்ணியம் பேச வேண்டியிருப்பதின் அவசியத்தையாவது சொல்லிவிட்டுப் போகிறேன் சாமி என்றாலும் கூட இதற்கும் ஒரு குதர்க்கம் சொல்லிக்கொண்டுதான் திரியப்போகிறார்கள். எனினும் மனதில் பட்டதைச் சொல்லாது விடும் கோழைத்தனம் எனக்கு வாய்க்காததால் சொல்ல வந்ததைச் சொல்லியே தீருவேனாக்கும். :)

இந்த வார ஜூ.வியில் ஒரு செய்தி - பெண் குழந்தை பிறந்து விட்டதே என்ற ஆத்திரத்தில் குழந்தையின் தந்தையே ஈவு, இரக்கம் இல்லாமல் அந்தப் பிஞ்சின் முகத்தில் தலைய ணையை அழுத்திக் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறான். தமிழ்நாட்டிலேயே பெண் சிசுக் கொலைகள் அதிகம் நடக்கும் தர்மபுரி மாவட்டத்தில்தான் இந்த சம்பவமும் நடந்திருக்கிறது. இச்செய்தியின் தொடர்ச்சியாகத்தான் பதிவின் முதல் பத்தியில் சொல்லியிருக்கும் வாசங்களைச் சொல்லியிருக்கிறார் அந்த பாசமிகு தந்தை.

சரி, இது எங்கோ ஒரு மூலையில் நடக்கும் செய்திதானே என்று அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம். அதே கட்டுரையில் கீழே தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் இயக்குனரிடமும் மாவட்ட சமூக நல அலுவலரிடமும் எடுக்கப் பட்ட பேட்டி தரப்பட்டுள்ளது. அதையும் இங்கே தருகிறேன்.

தர்மபுரி மாவட்டத்தில் பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக செயல்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனமான‘பொதிகை’ அமைப்பின் இயக்குநர் லதாவிடம் பேசினோம். ‘‘தர்மபுரியில் பெண் சிசுக்கொலை ஒழிஞ்சிட்டுதுனு சொல்றது எல்லாம் சும்மா. நாங்க தினமும் ஃபீல்டுக்குப் போறப்ப ஜனங்க கதைகதையாச் சொல்றாங்க. பெண் குழந்தைனா வீட்டுக்குத் தூக்கிட்டு வந்தவுடனே அதுக்கு பூ, பொட்டு எல்லாம் வெச்சு, பிறகு படுக்கையில் அதை கவுத்துப் போட்டுப் படுக்க வெச்சுட்டுப் போயிடறாங்க. அரை மணி நேரம் கழிச்சு வந்து பார்த்தா குழந்தை புரள முடியாம மூச்சு முட்டி செத்துப் போயிருக்கும். இந்த விஷயமெல்லாம் வெளியே வர்றதில்லை...’’ என்றார்.

தர்மபுரி மாவட்ட சமூக நல அலுவலர் சாய்லட்சுமியிடம் பேசியபோது, ‘‘நாங்க ஊர்ஊரா விழிப்பு உணர்வுக் கூட்டம் போட்டதுல பொம்பளைங்க எல்லாம் மாறிட்டாங்க. ஆனா, இந்த ஆம்பளைங்கதான் பிடிவாதமா இருக்காங்க. எவ்வளவு சொன்னாலும் குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் பண்ணிக்க மாட்டேங்கறாங்க. கேட்டா, கொள்ளி போட ஆண் வாரிசு வேணுமாம். குழந்தைகளுக்கு படிப்புக்கு ஏற்பாடு பண்றதோ சொத்து சேர்த்து வைக்கிறதோ இல்லை. கொள்ளி போட மட்டும் ஆம்புளைப் புள்ளை வேணும்னு அடம் பிடிக்கிறாங்க. முன்னைக்கு நிலைமை இப்ப பரவாயில்லை. நான் இங்க பொறுப்புக்கு வந்ததுக்கப்புறம் நடந்த முதல் சம்பவம் இதுதான். மத்தபடி பெரும்பாலும் பெண் குழந்தை பொறந்தா தொட்டில் குழந்தைகள் திட்டத்துல வந்து சேர்த்துடுவாங்க. இதுவரைக்கும் 996 குழந்தைங்களைத் தொட்டில் குழந்தை கள் திட்டத்துல சேர்த்திருக்காங்க. ரவி விவகாரத்தைப் பொறுத்தமட்டில் ஆண் வாரிசுன்னு சொல்லிக்கறதுக்கு ஏற்கெனவே ஒரு பிள்ளை இருக்கு. இருந்தும், கூடுதலா ஒரு பொட்டைப் பிள்ளையை பெத்துட்டோம்ங்கற கோபத்துல இப்படி நடந்துகிட்டது கொடூரமாத்தான் இருக்கு’’ என்றார்.

சமூக நல அலுவலரான சாய்லட்சுமியின் பேட்டியில் முன்னைக்கு இப்ப பரவாயில்லை என்கிற வரியைப் பார்த்து கூட மகிழ்ந்துவிட முடியவில்லை. ஏனெனில் அதன் உண்மையான பொருள் - முன் அளவு இப்போது பெண் சிசுக் கொலை நடக்கவில்லைதான். ஆனால் அதற்காக எல்லாப் பெற்றோரும் ஆணும் பென்ணும் சமமெனக் கருதி பெண் குழந்தைகளை கொஞ்சி சீராட்டிட ஆரம்பித்துவிடவில்லை. கொலை செய்யும் பாவத்தைச் செய்யாது தொட்டில் குழந்தை திட்டத்தில் விட்டுச் செல்கின்றனர் - அனாதைகளாக. அதாவது பெண் குழந்தை ஒரு பாரமென்று கருதும் மனப்போக்கு மாறிடவில்லை. கொலைகள் அரசின் தலையீட்டால் தடுக்கப் பட்டு வருகின்றன. இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் கூட அந்தத் தந்தை குடிபோதையில் இல்லாதிருந்திருந்தால் கொலைக்கு பதிலாக தாய்க்குத் தெரியாது அக்குழந்தையைக் கொண்டு போய அரசுத் தொட்டிலில் சேர்த்திருக்கும் ஆபத்தில்லாத வழியைத் தேர்ந்தெடுத்திருந்திருப்பார். அரசே குழந்தைகளை வளர்ப்பது என்பது தற்காலிகத் தீர்வாக வேண்டுமானால் இருக்கலாம். சரியான, நிரந்தர தீர்வு என்பது ஒவ்வொருவரும் ஆண் பெண் குழந்தைகளிடையே எந்த பேதமும் இல்லை என்பதை உணர்ந்து எந்தக் குழந்தை பிறந்தாலும் ஒன்றே எனக்கருதும் நாளல்லவா?

நான் பெரிய மாநகரில் மூன்று தொழிலதிபர்களையும், அவர்களின் மேனேஜர்களையும், அவர்களுக்குக் கீழ் வேலை செய்யும் க்ளார்க்குள் நால்வரையும் அறிவேன். நான் பிறந்த சிற்றூரில் 15 குடும்பங்களை அறிவேன். அதற்கும் அடுத்த ஊரில் ஒரு 5 நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பெண் குழந்தைகளை பாராட்டி சீராட்டி வளர்க்கிறார்களாக்கும். எத்தனை வகை மனிதர்கள், எல்லாத் தரப்புக்கும் பிரதிநிதித்துவமிருக்கும்படித்தானே சாம்பிள் எடுத்துப் பார்த்துச் சொல்கிறேன், பெண் குழந்தைகளை வெறுக்கும் போக்கு மறைந்து விட்டது என்று? இன்னமும் ஏன் பெண்ணுரிமை பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்கிறீர்கள் மேடம் என்று நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்கிறார்கள். என்ன செய்யட்டும் இது போலெல்லாம் பெருத்த நண்பர் வட்டமோ பரந்த உலக அறிவோ இல்லாத எனக்கு எங்கேனும் ஒரு மூலையிலிருந்தாவது இன்னமும் இது போன்ற கருத்தம்மாக்களின் கதை கதை காதில் விழுந்து தொலைக்கிறதே?

Friday, November 02, 2007

கடைத்தேங்காயும் வழிப்பிள்ளையாரும்

ஆனந்த விகடனில் கலைஞரின் ஒய்வு பற்றி எழுதிய கட்டுரைக்கு எழுந்த எதிர்பைத் தொடர்ந்து ஞானியின் ஒ பக்கங்கள் விகடனில் காணாமல் போனது - எவ்வித அறிவிப்பும் இல்லாமல். ஆனால் ஞானி ஒ பக்கங்கள் விகடனில் நிறுத்தப்படுவதாக எழுதிய(தாகச் சொல்லப்படும்) ஒரு மின்மடல் சில குழுமங்களில் பிரசுரமாகியிருந்தது. இன்று ஆனந்த விகடனைத் திறந்தால் வழக்கம் போல ஒ பக்கங்கள் - இம்முறை ஆஸ்திரேலியப் பிரதமரின் கலாச்சாரம் குறித்த கருத்துக்களை மையப்படுத்தி கட்டுரை எழுதியிருக்கிறார். உள்ளூர் விஷயங்கள் ஆபத்தானவை என்பதால் வெளிநாட்டு விஷயங்களை நோக்கி தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறார் போலும். :) எது எப்படியோ மீண்டும் அவர் எழுதத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியே.

அவர் தனது இந்த வாரக் கேள்வி பகுதியில் குறிப்பிட்டுள்ள விஷயம் மிக நியாயமானது.
//இந்த வாரக் கேள்வி - ஏற்கெனவே தமிழக அரசு பரிசாகக் கொடுத்த சென்னை வீட்டை விற்றுவிட்டு பெல்ஜியத்தில் குடியேறிவிட்ட செஸ் சாதனையாளர் ஆனந்த்-துக்கு, தமிழக அரசு எதற்காக இப்போது 25 லட்ச ரூபாய் பரிசு தர வேண்டும்? அதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் இளைஞர்களுக்கு செஸ் பயிற்சி தர அகாடமி ஆரம்பித்து, அதற்கு ஆனந்த் பெயரைச் சூட்டினால், அதுவே அவருக்கான சிறந்த கௌரவிப்பாக இருக்குமே! //
இதுதான் அவரது கேள்வி. இந்த ஒரு விஷயத்தில் மட்டுமில்லை - பொதுவாகவே வேற்று நாட்டிற்கு குடியேறிவிட்டவர்களின் மீது அவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் பெற்றவுடன் நமது நாட்டு அரசாங்கம் காட்டும் அலாதியான பாசம் தேவையற்றது. தமிழ்த் திரைப்படங்களில் நாயகனோ நாயகியோ சிரமப்படும் நாட்களில் கண்டுகொள்ளாத சுற்றமும் நட்பும் அவர்கள் வெற்றி பெற்றபின் அவர்களது புகழுக்கும் செல்வத்துக்கும் பங்கு கொண்டாட வருவது போன்ற காட்சியமைப்பு அடிக்கடி காணக்கிடைக்கும். அப்படியான காட்சியமைப்பைப் பார்க்கும் பாமர மக்களுக்கும் கூட இவ்வகையான கதாபாத்திரங்கள் மீது வெறுப்பே மிஞ்சும். அப்படியிருக்க இப்படி ஒரு செயலை அரசே ஏன் செய்ய வேண்டும்?

இங்கே இருக்கும் வசதி வாய்ப்புகள் போதாதென்று வேறு நாட்டிற்கு குடியேறுவதற்கு நானொன்றும் எதிரியில்லை. அப்படி முடிவு செய்வதெல்லாம் முழுக்க முழுக்க அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் அப்படி வேற்று நாட்டிற்கு சென்று விட்டவர்களை, அவர்களது புகழை எதற்காக நாம் சொந்தம் கொண்டாட வேண்டும்? அதுதான் போகட்டும், அவர்களுக்கு எதற்காக நமது வரிப்பணம் அள்ளித்தரப் படுகிறது? எந்த விதத்தில் இவையெல்லாம் நியாயமானவை?

ஆனந்திற்கு அளிக்கப்படும் சலுகை, சுனிதா வில்லியம்ஸுக்கு கிடைத்த வரவேற்பு , சமீபத்தில் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட லோகநாதன் என்ற லெக்சரரின் இறுதிச் சடங்குக்குச் செல்ல குடும்பத்தினருக்கு அவசர அவசரமாக தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்கி வழியனுப்பி வைத்தது(9 பேருக்கு பாஸ்போர்ட், விசா, விமானக் கட்டணம் அனைத்தும் நம் அரசே ஏற்றது) என்று இத்தகைய செயல்களின் பட்டியல் நீள்கிறது. இதுதான் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்பதோ?

ஒரு வருடம் ஒடிப் போச்....

ஆமாங்க, நானும் இந்த ப்லாகை ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆயிடுச்சு. பொதுவாகவே எனக்கு இந்த நவம்பர் மாதம் கொஞ்சம் ஆகாது - சென்டிமென்ட் எல்லாம் இல்லைங்க. ஒவ்வொரு வருடமும் ஏதாவது துரதிர்ஷ்டவசமான அல்லது இத்தோடு என் ஆட்டம் க்ளோஸ் என்று சுற்றியிருப்பவர்களை எண்ணவைக்குமளவிலான சம்பவங்கள் நடப்பது வாடிக்கை. ஒவ்வொரு வருடமும் இப்படியே நடந்து கொண்டிருந்தால் என்னாவது? நாம் பெற்றதை சமூகத்துக்கு திருப்பித் தருவது என்பதல்லவா உயர்ந்த மனிதப் பண்பு?? இப்படி ஒரு எண்ணம் மனசுக்குள்ள வந்தபோதுதான் இந்த முடிவு - வலைப்பதிவு துவங்குதல் என்ற முடிவை எடுத்தாக வேண்டிய காலக்கட்டாயம் உருவானது. :)

ரொம்ப பெருசா எதையும் எழுதிக் கிழிச்சுடலைதான். இருந்தாலும் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்கள் வட்டம் ஒன்னு கிடைச்சிருக்கு. கூடவே வரிகளுக்கு இடைல படிச்சு தனக்குத் தேவையான வார்த்தைகளை எங்கேர்ந்தாவது உருவி எடுத்து அதை நம்ம கருத்தா மாத்தும் மாயவித்தைக்காரர்கள் சிலரது அறிமுகமும் கிடைத்திருக்கிறது. அப்புறம் விவாதம்ன்ற பேர்ல வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் சிலரது நட்பு. இப்படி நிறைய வகைப்பட்ட மனிதர்களை இந்த வலையுலகம் அறிமுகம் செய்திருக்கிறது. பெரும்பாலும் மகிழ்ச்சியூட்டும் வகையிலான அறிமுகங்கள்தான். அதுனால இந்த வலைப்பதிவு வாழ்க்கை மகிழ்வையே தருகிறது. இன்னும் சில வருடங்களுக்காவது தொடர முடியும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. பதிவுலக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் - குறை, நிறைகளைத் தொடர்ந்து அங்கங்கே சொல்லி ஆதரவு அளிக்கணும். பொதுப்படையா என்னோட எழுத்தில் எதுனா குறை இருக்கறதா நினைச்சா, இந்தப் பதிவோட பின்னூட்டத்துல சொல்லுங்க. முடிந்த அளவு திருத்திக்க முயற்சிக்கறேன்.

பி.கு: பார்க்கப் போனா முதல் பதிவு போட்டதென்னவோ நவ.4தான். ஆனா அன்னிக்கு ஞாயிறுன்றதால கொஞ்சம் முன்னாடியே கொண்டாடிலாம்னு இன்னிக்கே பதிவ பப்ளிஷ் பண்ணியாச்.