புத்தகம்: சதுரங்கக் குதிரை
ஆசிரியர்: நாஞ்சில் நாடன்
பதிப்பகம்: விஜயா
நம் சமூக அமைப்பில் திருமணம் என்கிற அமைப்பு ஒரு அசைக்க முடியாத அங்கம். திருமணமில்லா வாழ்கையைத் தேர்ந்தெடுப்பது என்பது ரொம்பவே அபூர்வமாக நடக்கும் விஷயம். காரணம் கண்முண் வாழ்ந்த அனைவரும் சென்று பழகிய பாதை. பாதுகாப்பானது. அதிக ரிஸ்க் இல்லாத சௌகர்யமான வழி. அதே போல் திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து பின் வயது போன காலத்தில் அது சரியான முடிவில்லை என்று கண்டுகொண்டால் திருத்திக் கொள்வதும் கடினம். எனவே யாரும் இப்பாதையிலிருந்து விலகிப் போக நினைப்பதில்லை. ஏதேனும் ஒரு லட்சியத்தை நோக்கிய பயணமாக வாழ்கை அமைகையில் அதற்காகத் திருமணம், குடும்பம் ஆகியவற்றைத் தவிர்ப்பது என்பது ஒரு வகை. காதல் தோல்வியினால் திருமணத்தை தவிர்க்க நினைக்கும் சிலரும் உண்டு. இவை போன்ற எந்த குறிப்பிட்ட காரணமுமின்றியே கூட சரியான வாய்ப்பின்மையால் திருமணம் அமையாது போவது ஒரு வகை. முதலிரு வகையினருக்கும் தானெடுக்கும் முடிவுக்கு ஒரு காரணமிருப்பதால் ஒரு வேளை வாழ்வின் பிற்பகுதியில் வெறுமை தோன்றிடினும் தங்களை சமாதானப்படுத்திக் கொள்ள ஒரு காரணமிருக்கும். ஆனால் மூன்றாவது வகையினருக்கு நடுவயதிற்கு மேல் ஏற்படும் குழப்பங்களைப் பற்றியதுதான் இக்கதை.
நாவலின் நாயகன் நாராயணன். நாகர்கோவில் அருகிலுள்ள மாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவன். தாய்க்கு வயது போன காலத்தில் அதுவும் தந்தை இறந்த பிறகு பிறந்தவன். தாயின் உழைப்பிலும் தாய் மாமனின் ஆதரவிலுமாக வளர்ந்து பட்டப் படிப்பை முடிக்கும் நாராயணன் பம்பாயில்(கதை நடக்கறப்பவும் எழுதப்பட்டவும் அது மும்பை ஆகலைன்றதால இந்த ஒரு இடுகைல மட்டும் இப்படியே குறிப்பிடறதா இருக்கேன்.) வேலை கிடைத்துச் செல்கிறான். தாய் இறந்த சேதி கேட்டும் கூட உடனே வந்து சேர முடியாத தொலைவிலிருக்கும் ஊர்(கதை எழுதப்பட்டது எண்பதுகளின் பின் பகுதியில் என்று நினைக்கிறேன். எனவே அப்போதைய வசதிகளை நினைவுபடுத்தி இதைப் புரிந்து கொள்ளவும்.) தாயின் சடலம் அவனின்றியே எரியூட்டப் படுகிறது. இரு நாட்கள் கழித்து ஊர் போய்ச் சேர்ந்து மற்ற சம்பிரதாயங்களை முடித்துவிட்டு நிலத்தையும் வீட்டையும் மாமாவையே கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பம்பாய் திரும்புகிறான். மாமாவிற்கு இரு மகள்கள். மூத்த மகளை இவனுக்குத்தான் மணமுடிப்பாரென்று பரவலாக அனைவரும் எதிர்பார்த்திருக்க அவளுக்கு வேறு இடத்தில் மணம் பேசி முடிக்கிறார் மாமா. நாராயணனுக்கும் அந்தப் பெண் மேல் பெரிதாக ஏதும் ஈர்ப்பில்லாததால் இதைப் பற்றி ஒன்றும் செய்யாது விட்டுவிடுகிறான். பிறகு சில இடங்களில் மாமாவே பெண் பார்த்து ஏற்பாடு செய்யும் போதும் அவையெல்லாம் தட்டியே போகிறது - தாயின் சாவிற்கு கூட வர முடியாத தொலைவில் வேலை செய்கிறான் என்பதாலும், மாமாவே தன் மகளை வெளியில் கொடுத்திருப்பதாலும். இப்படியே குடும்பமின்றி நடு வயதை எட்டும் நாராயணனுக்கு அதற்குப் பிறகு ஏற்படும் சலனங்களும் குழப்பங்களும்தான் கதையின் முக்கியப் பகுதி.
வழக்கம் போல பால்காரப் பையாவின் மணியடிப்பில் முழிப்பு வந்துவிட்டது. மணி ஐந்தேகால் ஆகிவிட்டதற்கான அரவங்கள். மாமி எழுந்து விட்டாள். சற்று நேரம் படுக்கையில் கிடந்தான். பின்பு எழுந்து போய் வாசலில் கிடந்த பேப்பரை எடுத்து வந்தான். தலைப்புச் செய்திகள், பங்குச் சந்தை நிலவரம் எல்லாம் பார்த்துவிட்டு பல் தேய்க்கப் போனான். காலையில் மட்டும் மாமி ஒரு சாய் தருவாள். இது ஒரு சலுகை. மாமியும் மாமாவும் ஸ்ட்ராங்காக பீபெரி காபி குடிப்பார்கள். காபிக்கு பால் அதிகம் வேண்டும்.
இன்றும் அலுவலகம் போக வேண்டும். ஞாயிறு, பாங்க் விடுமுறை நாட்கள் தவிர, வெளியூர் டூர் போகும் நாட்கள் தவிர, என்றும் போக வேண்டும். எட்டு நாற்பது குர்லா லோகலில் அதிகம் கூட்டம் இருக்காது. ஷேவ் செய்து குளித்து, நான்கு ஸ்லைஸ் பிரட் பட்டர் ஜாம் சாப்பிட்டு விட்டு , இறங்கி விடலாம்.
தனியார் கம்பெனி ஒன்றில் விற்பனைப் பிரிவில் இருந்தான் நாராயணன். பெரும்பாலும் ஒரே விதமான வேலை. வெளியூர் போனால் மட்டும் மாறிக் கிடைக்கும் சூழ்நிலைகள். இங்கு வேலைக்குச் சேர்ந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படி, வீட்டு வாடகை அலவன்ஸ் எல்லாம் சேர்த்து நாலாயிரத்துப் பக்கம் சம்பளம் வரும். பிராவிடண்ட் ஃபண்ட், எல்.ஐ.சி., கோ-ஆபரேட்டிவ் சொசைட்டித் தவணை, வருமான வரி எல்லாம் போக மூவாயிரத்து நூறு கைக்கு வரும். ஒருத்தனுக்கு இது வெள்ளம். வெளியூர்ப் பயணம் மேற்கொண்டு திரும்பும்போது புறவெட்டுப் பலகை போல் சில நூறுகள் மிஞ்சும்.
அலுவலகம் போகும் நாட்களில் பத்து முதல் ஒன்றே கால் வரை, இரண்டு முதல் ஐந்தே கால் வரை வேலை நேரம். போர்டு ஏரியாவில் இருக்கும் எல்லா ஒட்டலிலும் சாப்பிட்டுப் பார்த்தாயிற்று. சில நாட்களில் எந்தச் சாப்பாட்டுக் கடைக்கும் போகப் பிடிக்காமல், இரண்டு பச்சை வாழைப் பழங்களும் ஒரு கேரட் ஜூஸும் குடிப்பதோடு சரி. முற்பகலிலும் பிற்பகலிலும் இரண்டு சாய் அலுவலகத்தில் தருவார்கள். மூன்றாவது சாய் பருக்கப் பிடிக்காது. குடித்தால் உடனே கக்கூஸ் போகத் தோன்றும்.
கம்பெனி சட்டப்படி ஆண்டுக்குப் பத்து நாள் தற்செயல் விடுப்பு, பத்து நோய் விடுப்பு, முப்பது உரிமை விடுப்பு உண்டு. இவை தவிர சனிக்கிழமைகள் அரை நாட்கள். மத்தியானம் ஒன்று நாற்பத்தைந்துக்கு அலுவலகம் மூடிவிடும்.
பத்து மணிக்கு அலுவலகம் என்றாலும், ஒன்பது முப்பத்தைந்துக்கு இருக்கையில் இருப்பது வழக்கமாகி விட்டது.
இது நாராயணனி தினசரி வாழ்கை. இதில் ஒரு திருப்பமாக அமைகிறது மாமாவின் பெண் வயிற்றுப் பேத்தியின் திருமண அழைப்பு - அதாவது அவனுக்கு மணமுடித்து வைத்திருக்க வேண்டிய பெண்ணின் பெண் திருமண அழைப்பு. நெடு நாட்களுக்குப் பிறகு விடுப்பெடுத்துக் கொண்டு ஊருக்குப் போகிறான் நாராயணன். ஊரில் அவனது பால்ய நண்பனொருவன் ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்கிறான். அப்பெண் திருமணமாகிப் போன சில நாட்களிலேயே கணவனுக்கு ஆண்மையில்லை என்பதை அறிவதால் அம்மா வீட்டிற்கு வந்து விடுகிறாள். எனவே அவளை நாராயணனுக்கு மணமுடிக்க அவர்கள் தயாராய் உள்ளதாய் சொல்கிறான் அந்த நண்பன். வாழ்வின் வெறுமை உறுத்தினாலும் கூட இத்தனை வயதுக்கு மேல் திருமணக் கோலத்தில் தன்னை இருத்திப் பார்த்தலில் உள்ள கூச்சம் பின்னிழுக்கிறது. தட்டிக் கழித்துவிடுகிறான்.
“குத்தாலம், நமக்கு நாப்பத்தஞ்சு வயசாகு. பழைய காலம் போல எம்பதும் தொன்னூறும் யாரும் இருக்கப் போறதில்ல. கூடிப்போனா இன்னும் பத்துப் பன்னிரெண்டு வருஷம். என்னத்துக்கு இந்தச் சள்ளை.... உம் மகளுக்கு பதினேழு வயசிருக்குமா? பயலுக்குப் பதினஞ்சு இருக்கும். நாலஞ்சு வருசத்துல நீயும் தாத்தா ஆயிருவே. பொறுப்புத் தீந்துரும்.... நான் இனிமே கலியாணம் களிச்சுப் பிள்ளை பெறணும். என்னத்துக்குப்பா இந்த உபத்திரவம்? யாரு அளுகா இப்ப கலியாணமும் காடாத்தும் இல்லைன்னு...”
மாமாவின் இளைய மகள் கல்யாணி தன் வீட்டிற்கு வருமாறு அழைக்கிறாள். அந்தக் குடும்பத்தில் நாராயணன் மீது உள்ளார்ந்த நேசம் கொண்ட ஒரே ஆள் அவள்தான். அவளும் அவள் கணவனும் ஆத்மார்த்தமாக அவனை வரவேற்று உபசரிக்கிறார்கள். தனிமையில் அமர்ந்து சிந்திக்கையில் தனக்குக் கல்யாணி மீது ஆரம்பத்திலிருந்தே ஒரு ஈர்ப்பு இருந்திருப்பதை உணர்கிறான் நாராயணன். ஆயினும் கடந்து போன காலத்தை ரீவைன்ட் செய்து வாழவா முடியும் என்கிற சலிப்பு சுய பச்சாதபத்தை விதைக்கிறது.
மாமாவிடம் துணிந்து, நேருக்கு நேராக, கல்யாணியைக் கேட்டிருக்க வேண்டுமென்று தோன்றியது. தான் சற்று மூர்க்கமாக நின்று உறவினர்களிடம் ஒரு கலகம் ஏற்படுத்தி இருந்தால் நடந்திருக்கக் கூடும் என்று தோன்றியது. தனது இந்தப் பின்வாங்கல், கூச்சம் எல்லாமாகச் சேர்ந்து வாழ்க்கையைத் தன்னிடம் இருந்து பறித்துவிட்டது என்று தோன்றியது.
அல்லது அப்போதே யாரையாவது காதலித்திருக்க வேண்டும்.
யாரைக் காதலித்திருக்க முடியும்?
இப்படிக் கூம்பிப் போனதொரு மனதைப் பிறவியிலிருந்தே வைத்துக் கொண்டு. அம்மா இருந்த போதும் இல்லாத போதும் துரத்திக் கொண்டு வரும் ஒரு அனாதை உணர்வு, பிரவாகங்களுக்கு இடையிலான தனியன்.
இதற்குத் தான் மட்டுமே பொறுப்பு என்று தோன்றியது. செலவாகிப் போன நாற்பத்தைந்து ஆண்டுகளை இனித் திரும்பச் சேமிக்க முடியாது. இப்படிப் பழைய நியூஸ் ரீல்களைத் திரும்பப் போட்டுப் பார்ப்பதன் அர்த்தமென்ன?
ஆனால் நினைவுகள் துக்கமானவை. ஆனாலும் நூதனமான சுகம் தருகின்றன.
கல்யாணியும் தன் பங்கிற்கு அவனுக்கு ஒரு பெண் பார்க்கிறாள். தன் வீட்டினருகிலிருக்கும் ஒரு கணவனை இழந்த ஒரு பெண்ணை நாசூக்காக பெண் பார்க்கவும் ஏற்பாடு செய்கிறாள். எனினும் எதையும் பற்றி முடிவெடுக்க முடியாத ஒரு குழப்பத்திலேயே மௌனமாய் ஊர் திரும்புகிறான். மீண்டும் அதே இயந்திரத் தனமான வாழ்க்கை. தன் அலுவலகத்திலேயே பணிபுரியும் குட்டினோ என்பவருடனும் தமிழரான ராமகிருஷ்ணன் என்பவருடனும் மட்டுமே பம்பாயில் நாராயணனுக்கு நட்பு வாய்க்கிறது. ராமகிருஷ்ணன் தமிழர் என்பதோடு ஒத்த ரசனைகளும் உடையவர் - மாதுங்கா தமிழ்ச் சங்கத்தில் தி.ஜா நாவலைத் தேடுவதில் ஆரம்பிக்கும் நட்பு. பின் அவர் கல்கத்தா செல்லும் போது தன்னுடைய ஓரறை பிளாட்டை நாராயணனுக்கே விற்பனை செய்கிறார். அவரும் போகையில் இப்போதும் கூட நீ நினைத்தால் வாழ்வைச் சீராக்கிக் கொள்ள முடியும். திருமணம் செய்து கொண்டுவிடு என்கிறார்.
குட்டினோவுடனான நாராயணனின் நட்பிற்கு அவரும் தன்னைப் போலவே தனிமையில் வாழ்வதும் ஒரு முக்கியக் காரணமாகிறது. குட்டினோ திருமணத்தைத் துறந்தது தன் காதல் தோல்வியால். ரிட்டையர் ஆவதற்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் சேர்ந்து மதுவருந்தும் பொழுதொன்றில் குட்டினோ நாராயணனை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அறிவுறுத்துகிறான்.
ஒரு வாய் பீரை உறிஞ்சி விட்டு குட்டினோ சொன்னான்
“என் கணக்குத் தீர்ந்து விட்டது. சுவாரசியமற்ற இறுதிக் காட்சி. பின்பு திரை. நீ என்ன செய்யப் போகிறாய்?”
“ஒன்றும் செய்வதாக இல்லை. நீயும் போய்விட்டாயானால் கஷ்டமாக இருக்கும். ஆனால், நாம் எதை நிறுத்த முடியும்? உன்னை விட்டால் சொல்லத் தகுதியான நட்பென்று ஒன்று கூட இல்லை.”
“இன்னும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. யூ ஆர் ஸ்டில் யங். மேரி எ நைஸ் கேர்ள் அன்ட் என் ஜாய் லைஃப்…”
“அதை நீ செய்திருக்கலாமில்லையா?”
“அதனால்தான் சொல்கிறேன். வாழ்க்கை யாருக்காவது உபயோகமாக இருக்க வேண்டும். மண்ணில் கவிழ்த்த கள்ளுப் பானையாக இருக்கக் கூடாது.”
நல்ல உவமானமாகச் சொல்கிறான் குட்டினோ. எங்கோ படித்ததன் சாரம். கலத்திலும் விழாமல் கன்றுக்கும் ஆகாமல் நிலத்தில் வீழ்ந்த பால் போல. எனக்கும் உதவாமல் என்னுடையவனுக்கும் பயனில்லாமல் அல்குல் பசலை பாய்ந்தவாறுள்ளது.
மணி ஏழேகால் ஆகியிருந்தது. புத்தியில் மிதமான போதை உரைத்தது.
“அவுர் தோ பீர்?”
“நை. ஆஜ் பஸ் ஹோ கயா.”
“சக்காராம். பில் லாவ்.”
நாராயணன் பில் கொடுக்க குட்டினோ விடவில்லை. தட்டில் ரெண்டு ரூபாய் போட்டுவிட்டு எழுந்தான்.
“சலோ, இனி எங்கு போகலாம்?”
“போக எங்கும் இல்லை!”
“யா. ஹௌ லாங் யூ ஆர் ஃபீலிங் திஸ்?”
“குறைந்தது பத்து ஆண்டுகளாக.”
“எனக்கு இது தோன்ற ஆரம்பித்து இருபத்தைந்து ஆண்டுகளாகின்றன. எனக்கென்று போக ஒரு இடமில்லை. நான் எங்கும் சேர்ந்தவனாக இல்லை. என்னை யாருக்கும் வேண்டாம்….”
அடுத்தடுத்து தொடரும் இது போன்ற உபதேசங்களாலும் தனிமையாலும் தொடர்ந்து அலைகழிக்கப் படுகிற நாராயணனின் வாழ்க்கையை விவரித்துச் செல்கிறது நாவல். வழக்கமான நாவல் போல உச்ச காட்சி என எதுவும் இல்லை இங்கு. இதனால் அறியப்படும் நீதியும் ஏதுமில்லை. திருமணமாகதோர் வாழ்வுதான் இப்படிப் பொருளற்றுப் போகுமென்றில்லை - திருமணமாகி குழந்தை குடும்பமென இருப்போருக்கும் ஏதோ ஒரு நொடியில் தோன்றலாம், வாழ்வின் பொருளென்ன என்கிற கேள்வி. நாவலில் அத்தகைய ஒரு பாத்திரமும் உண்டு.
இதை ஒரு மனிதனின் வாழ்க்கையின் நடுவயது காலத்து குறுக்குவெட்டுத் தோற்றமென்று சொல்லலாம். இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சித்திரம் கிடைக்கலாம் - மேகத்தில் தெரிவது போல, உதிர்கின்ற சுவற்றுச் சுண்ணாம்பில் தெரிவது போல.
ஒரே ஒரு நபரின் வாழ்வைப் பற்றிய பதிவுதான் நாவலின் முக்கியச் சரடெனினும் கூட பல்வேறு விஷயங்களும் நுணுக்கமாக சித்தரிக்கப் படுகிறது. குமரி மாவட்டத்து வட்டார வழக்கு அதில் முக்கியமானது. ஜெயமோகனின் எழுத்து பதிவு செய்வது கேரளத்தை ஒட்டிய பகுதிகளான திருவட்டார், குலசேகரம் போன்ற இடங்களின் வட்டார வழக்கை என்றால், நெல்லையை ஒட்டிய பகுதிகளான நாகர்கோவில், சுசீந்திரம் போன்ற பகுதிகளின் மொழியைப் பதிவு செய்கிறார் நாஞ்சில் நாடன்.
இன்னொரு முக்கிய விஷயம் - கணவனை இழந்த அல்லது பிரிந்து வாழும் பெண்களின் மறுமணம் பற்றிய தெளிவான பார்வை நம் மண்ணின் எளிய மக்களுக்கு இயல்பாகவே இருக்கிறது என்கிற உண்மை. இதையெல்லாம் உணர்த்த எந்த சீர்திருத்தவாதியும் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டியிருப்பதில்லை. ஆண் ஏதேனும் ஒரு குறையைக் கொண்டிருக்கும் போது (நாவலில் நாராயணனுக்கு பருவம் தப்பிய திருமணம் என்பதால்) அதே போன்று ஒரு குறையுடைய பெண்ணையே(ஏற்கனவே திருமணமாகி பின் திரும்பியிருக்கும் பெண்கள்) தேடிச் சேர்க்க வேன்டும் என்கிற அடிப்படை தர்க்க/நியாய உணர்வும் இயல்பிலேயே அவர்களுக்கு வாய்த்திருப்பதும் நாவலில் சொல்லப் பட்டிருக்கிறது.
ஜெயமோகன் தன் பதிவில் நாஞ்சில் நாடனைப் பற்றி எழுதியிருப்பனவற்றைப் படித்தே இம்முறை புத்தகக் கண்காட்சியில் அவரது நூல்கள் கொஞ்சம் வாங்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்( தாடகை மலையடிவாரத்தில் ஒருவர் - கமண்டல நதி). சதுரங்கக் குதிரை, மிதவை, சூடிய பூ சூடற்க, எட்டுத் திக்கும் மதயானை ஆகிய நான்கு நூல்களை வாங்கி வந்தேன். எட்டுத் திக்கும் மதயானை தவிர மற்ற மூன்றும் படித்தாயிற்று. மூன்றுமே எடுத்ததிலிருந்து கீழே வைக்காமல் ஒரே அமர்வில் படிக்குமளவு சுவாரசியமான அருமையான புத்தகங்களே. விரைவில் மற்ற நூல்களையும் பற்றி இப்பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
Friday, February 01, 2008
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
விமர்சனத்துக்கு நன்றி லஷ்மி. நல்லா இருக்கீங்கதானே..?
நல்லா இருக்கேன் ஆழியூரான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நாராயணன் கதை எங்கேயும் நடக்கக் கூடியது தான்.
நடப்பும், பின் வருத்தங்களும் எளிமையாக எடுத்துச் சொல்லப்படு கின்றன.
நன்றி லக்ஷ்மி.ஏனோ சோகமாக இருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி வல்லி அம்மா. தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும். அலுவலகத்துல மெயில்/ப்லாக் எல்லாத்துக்கும் தடா. அதான் கொஞ்சம் தாமதம்.
இந்தியா போன்ற பின் தங்கிய சமூக அமைப்பில், ஒரு மனிதன் தனியாய் வாழ்தல் என்பது, சிரமமான ஒன்றாக இருக்கிறது.
மேலை நாடுகளில், அவர்களின் வாழ்வின் முறையில், இவ்வளவு சிக்கலான நிலையாக இருக்காது என நினைக்கிறேன்.
நம் நாட்டில் குடும்பம் என்ற நிறுவனம், நிறைய பொறுப்புகளையும், பொறுமையும் கோரக்கூடியது. கணவன், மனைவி உறவு நிறைய சிக்கலானதாகவும் இருக்கிறது.
நின்று நிதானித்து யோசித்தால், பெருநகர வாழ்க்கை அவசரத்திலும், குடும்பம் சுமத்துகிற பொறுப்புகளாலும்,
சில சமயங்களில் விட்டு விடுதலையாகி விடலாமா என்று தோன்றுகிறது. அதனால் இப்பொழுதெல்லாம் நின்று யோசிப்பதில்லை.
தன் வேலை, தன் குடும்பம் என்று இருந்தால், நாராயணனுக்கு ஏற்படுகிற அயர்வு நிலை, ஒரு குடும்ப தலைவனுக்கும் கூட வரலாம்.
நீங்கள் சொல்வது சரியே சாக்ரடீஸ். வளர்ந்த நாடுகளில் கிடைப்பது போன்ற பொருளாதார,சமூக பாதுகாப்பு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சர்வ நிச்சயமாகக் கிடைக்கும் பட்சத்தில் இங்கேயும் குடும்பச் சங்கிலிகளின் இறுக்கம் குறையும்.
//அதனால் இப்பொழுதெல்லாம் நின்று யோசிப்பதில்லை.// நல்லதுதான். யோசித்தால் எழும் மண்டைக் குடைச்சல்களைத் தவிர்க்க இதுவே சிறந்த வழி. :)
//தன் வேலை, தன் குடும்பம் என்று இருந்தால், நாராயணனுக்கு ஏற்படுகிற அயர்வு நிலை, ஒரு குடும்ப தலைவனுக்கும் கூட வரலாம்.// நாவலிலும் இது போன்றதொரு பாத்திரம் இருக்கிறது. இதுபோன்ற பன்முக சித்தரிப்புகளால்தான் என் வரையில் இந்த நாவல் முக்கியத்துவம் பெறுகிறதென்று எண்ணுகிறேன் - உபதேசமோ இல்லை பயமுறுத்தலோ இல்லாது இருக்கிறது.
http://umakathir.blogspot.com/2007/10/blog-post_7699.html
ரொம்ப விரிவா எழுதிருக்கிங்க. எனக்கு நாஞ்சில் நாடனை ரொம்பவே பிடிக்கும்.
மிதவை அவரோட நாவல்களில் சுவாரசியமில்லாத ஒன்று. எட்டுத்திக்கும் மதயானை அருமையா இருக்கும். பெரும்பாலும் நாஞ்சில் நாடனின் கதை மையம் கிராமத்தை மையம் கொண்டும், பிற்பகுதி அல்லது முற்பகுதி மும்பையில் நடைபெறுவது போலவும் இருக்கும். பெரும்பாலான கதைகள் இப்படியே ஆனாலும் ஒன்றுக்கொன்று சுலபமாக பிரித்தறிய முடியும். "பிராந்து" என்ற சிறுகதைத் தொகுப்பு மற்றும் "நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை" கட்டுரைத்தொகுப்பு ஆகியவை மிகச்சிறந்தது என்று சொல்வேன்.
கதைமாந்தரின் மனஓட்டங்களா எழுதும் யாவும் சராசரி மனிதனி மனஓட்டங்கள் போலவும் இதுவரை எந்த எழுத்தாளரும் பதிவிக்காத முறையில் எழுதுவது எனக்கு பிடிக்கும். இவரை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.
இவருடைய மாஸ்டர் பீஸ் எது என்றால் சதுரங்க குதிரை. புலம்பெயரும் அனைத்து மனிதர்களையும் அசைத்துப் பார்க்கும் நாவல். மிகச்சிறப்பான பதிவு என நாவலை கூறுவேன். நாராயணன், குட்டினோ மறக்க முடியாத கேரக்டர்.
அடுத்து "பூலிங்கம்" குறித்த பதிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
"பூடிய பூ சூடற்க" பற்றியும் விரிவாக எழுதுங்கள்.
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி கதிர்.
//பெரும்பாலும் நாஞ்சில் நாடனின் கதை மையம் கிராமத்தை மையம் கொண்டும், பிற்பகுதி அல்லது முற்பகுதி மும்பையில் நடைபெறுவது போலவும் இருக்கும். // அவரும் ரொம்ப நாள் மும்பைல வேலை பார்த்ததாகக் கேள்வி. அதுனால அவரால ரொம்ப சுலபமா மும்பைக்கு புலம் பெயர்தல்ன்றத தன்னோட கதைக் களமா எடுத்துக்க முடியுதா இருக்கணும்.
//கதைமாந்தரின் மனஓட்டங்களா எழுதும் யாவும் சராசரி மனிதனி மனஓட்டங்கள் போலவும் இதுவரை எந்த எழுத்தாளரும் பதிவிக்காத முறையில் எழுதுவது எனக்கு பிடிக்கும். // நாயகனா வர பாத்திரத்தை எப்போதும் எந்த விதத்திலும் தூக்கி வைத்துப் பேசாம, சராசரி மனிதனோட பலவீனங்களோடையே அவனையும் சித்திரிக்க அசாத்திய துணிச்சல் வேணும் தமிழ் எழுத்துலகத்துல - ஏன்னா படைப்புக்குள்ள எழுத்தாளனோட சொந்த வாழ்க்கை வம்புகளை எதிர்பார்க்கும் கூட்டம் அதிகம் இங்க. அதையும் தாண்டி இவர் ரொம்பவே இயல்பா எழுதறதுதான் எனக்கு ரொம்ப வியப்பா இருக்கு.
கூடிய விரைவில் மத்த புத்தகங்களையும் எழுதப் பாக்கறேன். உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கு திரும்பவும் நன்றி.
Post a Comment