Monday, May 28, 2007

கனிமொழியின் அரசியல் பிரவேசம்

இப்போதைய சூடான விவாதம் கனிமொழியின் அரசியல் பிரவேசம்தான். அதை பத்தி நாமும் கருத்து சொல்லலைன்னா எப்படிங்க? நம்ம கருத்தை யாரு கேட்டாலும் கேக்கலைன்னாலும் நம்ம கருத்து சொல்றதுன்றது எப்பவுமே நமக்கு ஒரு வழக்கந்தான். அதுலயும் இந்த ப்லாக் ஆரம்பிச்சப்புறம் ஒரு வியாதியாவே மாறி கருத்து கண்ணம்மாவா ஆயாச்சு(கருத்து கந்தசாமிக்கு பெண்பால் ஒன்னு வேணுமேன்னு யோசிச்சதுல கிடைச்சதுதான் இந்த க.க.).

சரி பேச ஆரம்பிச்ச விஷயத்துக்கு வருவோம். முதலில் ஒரு விஷயம். ஒரு பதவியிலிருப்பவரின் வாரிசு என்பதற்காகவே ஒருத்தருக்கு வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு தவறோ அதே அளவு தவறு அவருக்கு அதே காரணத்துக்காக வாய்ப்பு மறுக்கப்படுதலும். ஆனா இவரோட அவரை சம்பந்த படுத்தி மனசுக்குள்ள வந்து உக்காரற முன்முடிவுகளை தவிர்த்துட்டு பாக்கறதும் ஒரு கஷ்டமான விஷயம்தான். ஆக இந்த மாதிரி விஷயங்களில் இரு தரப்பிலிருந்தும் மன முதிர்ச்சி தேவைப்படுகிறது. உண்மையிலேயே திறமையிருந்தால் மட்டுமே தன் வாரிசை தன் துறையிலிறங்க அனுமதிக்க வேண்டும். அதுவும் அவருக்கு எந்த சலுகையும் வழங்கப்பட்டுவிடவில்லை என்று தெளிவாகவே பொதுமக்களுக்கு தெரியவைக்குமளவு ஒளிவு மறைவற்ற நடவடிக்கைகள் வேண்டும். இது வாரிசை களமிறக்குபவர்களுக்கு. தள்ளி நின்று பார்க்கும் மக்களுக்கு(குறிப்பாக பத்திரிக்கையாளர்கள்) தேவையானவை: முன்முடிவுகளை தவிர்த்து வாரிசுகளின் செயலை விமர்சித்தல். தந்தை/முன்னோடியோடே ஒப்பிட்டு எப்போதும் விமர்சிப்பது என்பதை ஒதுக்கி வைக்க வேண்டும். அப்பாவை அடியொட்டி ஏதேனும் செய்தால் சொந்த சிந்தனை இல்லை - அவர் நிழலில் வாழ்கிறார் என்று குமுற வேண்டியது. மாற்றாக ஏதேனும் செய்தால் தந்தையை மதிக்காது தாந்தோன்றித்தனமாக செயல்படுவதாக குதிக்க வேண்டியது. இரண்டுமின்றி ஒரு மூன்றாவது மனிதர் இதே விஷயத்தை செய்திருந்தால், எப்படி பார்ப்போமோ அப்படி பார்க்க பழக வேண்டும்.

சரி, இவையெல்லாம் வாரிசுகள் களமிறங்குதலை பற்றிய என் பொதுவான சிந்தனை. குறிப்பாக கனிமொழியை பற்றி பேசுவோம். ஒரு குறிப்பிடத்தகுந்த கவிஞர், பத்திரிக்கை துறை அனுபவம் உள்ளவர். எனினும் பெரும்பான்மை மக்களால் தந்தையை ஒட்டியே அறியப்படுபவர். இவர் நேரடியாக ஒரு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்படுவது எவ்வளவு தூரம் சரியானது? அநேகமாய் மத்திய அமைச்சராகவும் ஆகிவிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்த திடீர் பாய்ச்சல் தயாநிதி மாறனுக்கும் இப்போது கனிமொழிக்கும் மட்டுமே சாத்தியமாவது நிச்சயம் வாரிசு அரசியல்தான். ஸ்டாலினை பற்றி வெறும் வாரிசு அரசியல் என்று ஒற்றை வரியில் இப்படி கூற முடியாது. பல வருடங்களாக கட்சியிலும் அரசிலும் பணியாற்றி வருகிறார். எனவே அவரது குறை நிறைகளை நேரடியாக எடை போட முடியும். அவர் செயல்களை விமர்சிக்க முடியும். மேலும் தொடர்ந்து அவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளுக்கே இது வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தயாநிதி மாறனும் தேர்தலில் போட்டியிட்டாரே என்ற கேள்வி இங்கே எழலாம். இப்போது கனிமொழி அமைச்சராவது எப்படி எம்.பியாவதற்கு முன்னரே எளிதில் ஊகிக்கக்கூடியதாக இருக்கிறதோ அப்படியே தயாநிதி தேர்தலில் நிற்பதற்கும் முன்னரே அவர் அமைச்சராவார் என்பதும் உறுதியாகத்தெரியும். ஒரு சாதாரண வேட்பாளர் ஜெயிப்பதற்கும் அமைச்சராக பிரகாசமான வாய்ப்புள்ள ஒருவர் அந்த தொகுதியில் ஜெயிப்பதற்கும் எந்த அளவு வேறுபாடிருக்கும் என்பது சாதாரண வாக்காளருக்கும் தெரியும். எனவேதான் சோ போன்றவர்களுக்கும் கூட ஸ்டாலினின் அரசியலை பற்றி வாரிசு அரசியல் என்று ஒற்றை பார்வைக்குள் தள்ளிவிட முடிவதில்லை . ஆனால் முன்பு தயாநிதி விஷயத்திலும் சரி இப்போது கனிமொழி விஷயத்திலும் சரி, இந்த குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரமுண்டு.

ஆரம்பத்தில் எனக்கு அவர் மேல் அவ்வளவு நல்ல அபிப்ராயமெல்லாம் இல்லை. சுஜாதா, சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்களின் செல்லப்பிள்ளை என்கிற அளவில்தான் முதலில் அவர் எனக்கு அறிமுகமானார். அதிலும் சாரு நிவேதிதாவின் அதிகப்படியான புகழல்(அழகாய் இருக்கிறாய் பயமாயிருக்கிறது வகையறா) எனக்கு ஒரு விதமான எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தி வந்தது. அவர் கருத்து.காம் துவக்கிய போது கூட இதுவும் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் எனவே தோன்றியது. ஆனால் ஒரே விஷயம் அவரை பற்றின எனது கருத்தை மாற்றிப்போட்டது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரதம்தான் அது. சாதாரணமாய் பழ. நெடுமாறனோ அல்லது வை.கோவோ இத்தகைய உண்ணாவிரதத்தை நடத்தினால் பெரிது யாரும் அதை படுத்தியிருக்கப்போவதில்லை. ஆனால் கலைஞர் சென்னை வந்த ஈழ பிரதிநிதிகளை சந்திப்பதை கூட தவிர்த்து வந்த நிலையில் அவர் மகளான கனிமொழி பகிரங்கமாக பந்தலில் உட்கார்ந்து உண்ணாவிரதமிருந்தபோது தன் கருத்துக்களை உணர்வுகளை யாருக்காகவும் வளைத்துக்கொள்ளாதவராய் இருக்கிறாரே என்று ஆச்சரியமானது. அதற்கு பிறகு அவரது கருக்கும் மருதாணி புத்தகத்தை (எப்போதோ ஏதோ ஒரு மனநிலையில் வாங்கி ஒரு ஒரமாய் போட்டு வைத்திருந்தது) எடுத்து ஒரே மூச்சில் படித்தேன். அவரது எழுத்துக்களின் மீது ஒரு ஆர்வத்தை தூண்டியது அது. தோழி.காமில் அவர் எழுதிய தலையங்கங்கள் எல்லாவற்றையும் தேடி பிடித்து படித்தேன். தந்தையின் சாயல் சிறிதுமின்றி அழகாய் தெளிவாய் எளிமையாய் இருக்கும் அவரது எழுத்துக்கள் இப்போது என் விருப்பமானவை பட்டியலில் இருக்கிறது. அடுத்த சந்தர்ப்பங்களில் அவரது புத்தகங்களை முடிந்த அளவு வாங்க குறித்து வைத்திருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கு கனிமொழி மீது மிகுந்த அபிமானமுண்டு. ஒரு தெளிவான சிந்தனையும் நல்ல ஆளுமையும் உடையவர். ஆனால் அவரை இப்படி அவசர கதியில் அரசியலுக்கு இழுத்து வந்து அவரது திறமைகளை விட முதல்வரின் மகள் என்ற ஒரே தகுதியில்தான் அவர் இந்த உயரத்தை எட்டினார் என்பது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட முதல்வரே காரணமாகிவிட்டாரோ என்பதுதான் என் எண்ணம்.

ஆனால் அதைவிடவும் வருத்தமான விஷயம் ஒரு பெண் அரசியலுக்கு வந்தால்தான் என்றில்லை, வரப்போவதாய் தெரிந்தாலே போதும் நாங்கள் அவர் உடலமைப்பை பற்றியோ இல்லை அவரது நடத்தை பற்றியோ அஷ்டோத்திர சஹஸ்ரநாம அர்ச்சனைகளையெல்லாம் ஆரம்பித்து விடுவோமாக்கும் என்று தொடை தட்டி கிளம்பியாயிற்று ஒரு கும்பல். ஏதோ ஒரு பேட்டையின் டீக்கடையில் இல்லைங்க, மெத்த படித்த நாகரீக கனவான்கள் உலாவும் தமிழ் வலையுலகாகிய புண்ணிய பூமியிலேயே இந்த கதிதான். இங்கனயே இப்படின்னா எஸ்.எஸ். சந்திரன் தொடங்கி இதுக்காகவே மானியம் வாங்கி வாழ்ந்துகிட்டிருக்கற கும்பல் நாளைக்கு என்ன என்னல்லாம் பேசப்போகுதோ தெரியலை. அதை நினைத்தால்தான் குலை நடுங்குகிறது(இங்கே கனிமொழி தி.மு.க சார்பா களமிறக்கப்பட்டிருப்பதால்தான் அ.தி.மு.க ஆட்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். இதே ஜெயலலிதாவை பற்றி பேச ஆரம்பித்தால் வெற்றி கொண்டான் வகையறாக்களும் இதே ரீதியில்தான் பேச்சு சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வார்கள் என்பதை அறிவேன் நான். எனவே எனக்கு உடனடியாக எந்த கட்சி சாயத்தையும் பூசிடாதீங்க மக்கா...).

சரி, கடைசியா நீ என்னதான் சொல்ல வரேன்னு பொறுமையிழக்கும் கண்மணிகளே, பொறுமை. என் எழுத்தை படிக்கறதுன்னு முடிவு பண்ணி இந்த லிங்கை க்ளிக்கிட்டீங்க இல்ல, அப்புறம் இப்போ வந்து ஃபீல் பண்ணி என்ன பிரயோசனம்? சரி, சரி, ரொம்ப அழுவாதீங்க. இதோ மாரல் ஆப் தி ஸ்டோரி - கனிமொழியின் திட்டமிடல், சிந்தனை போன்றவற்றில் எனக்கு நிச்சயம் நம்பிக்கை உண்டு. ஆனால் அவரது வருகை தவறான பாதையில்தான் அமைந்திருக்கிறது. அதனால் இந்த குற்றச்சாட்டையும் மீறி முதல்வரின் தேர்வு சரியே என பெரும்பான்மை மக்களை நம்பவைக்கும் வண்ணம் நடந்து கொண்டாக வேண்டிய கட்டாயம் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அதை அவர் செய்வார் என்றே நான் நம்புகிறேன். அவரேனும் ஒரு கண்ணியமான அரசியல்வாதிக்கு முன்னுதாரணமாக திகழ்வார் என்று நம்புவோமாக. நம்பிக்கைலதானேங்க நம்ம வாழ்க்கையே ஒடுது?

Friday, May 18, 2007

முற்றுப்புள்ளி

வாரந்தோறும் வந்து போகும்
வெள்ளி மாலை குதூகலமும்
திங்கள் காலை சிடுசிடுப்பும் போல
நம் உறவும் பிரிவும் நம்மை சுற்றியிருப்பவர்களின்
பிரக்ஞையில் பதிந்து போயாகிவிட்டது.
பிரியப்போகிறோமென்றோ இணைந்துவிட்டோமென்றோ நண்பர்களிடை சொல்கையில் அவர்களின் இதழோரத்தில் நெளியும் குறுநகையில் தெரிக்கும் ஏளனம்
என்னுள் இறக்கும் ஊசிகளின் வலியறிவாயா நீ?
இந்த சுழற்சி உனக்கு பிடித்திருக்கலாம்.
ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே காயத்தை
மீண்டும் மீண்டும் கீறுவதை போலிருக்கிறதெனக்கு.
எப்படி நிறுத்த என்றுதான் புரியவில்லை.
நசுங்கிய நம்பிக்கைகளும்
சிதைந்த எதிர்பார்ப்புகளும்
அவமான அமிலங்களால் பொசுங்கிய தழும்புகளும்
எனக்கு மட்டுமென்றால் கூட பரவாயில்லை
என்னிலிருந்து எழும் அதிர்வுகள்
என் வீடு முழுவதும் பரவி அடங்குவது அறிவாயா நீ?
எத்தனை முறைதான் சுற்றியிருப்பவர் பதறி விடாமலிருக்க
ஒன்றுமே நடக்காதது போல நான் நடிப்பது?
ஒவ்வொரு முறையும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு
ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்பதும்
அதே இடத்தில் வந்து முடிப்பதும்
இனியும் என்னாலாகாது.
போதுமென்னை விட்டுவிடு.

Wednesday, May 02, 2007

ஓடிப்போனவளின் தங்கை

தோள்பட்டையிலிருந்து சுளீரென ஒரு வலி கைமுழுதும் பரவியது. கையிலிருந்த துவைத்த துணிகளடங்கிய இரும்பு வாளி கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்தில் கலா அதை இன்னும் கொஞ்சம் இறுக்கி பிடித்தவாறு மொட்டைமாடிக்கு போகும் படிகளில் கவனமாக ஏறினாள். சிமென்ட் தரை அந்த பன்னிரண்டு மணி வெய்யிலில் காலைப்பொசுக்கியது. ஒரு கால் மாற்றி இன்னொரு கால் என்று ஊன்றியவாறே வேகவேகமாய் துணிகளை உதறி உணர்த்த ஆரம்பித்தாள். இப்படி சுடும் தரைக்கு பயந்து ஆரம்பத்தில் செருப்பு போட்டுக்கொண்டு வந்து அதனால் தான் பட்ட பாடு நினைவுக்கு வந்தது அவளுக்கு.

துணிகளனைத்தையும் உணர்த்தி முடித்துவிட்டு பொங்கிய வியர்வையை சேலைத்தலைப்பில் துடைத்தவாறே கீழே இறங்கியவள் வீட்டைச்சுற்றியிருந்த சிமென்ட் தளப்பாதையில் நடந்து நேரே பின் கட்டிற்கு போய் குழாயடியில் வாளியை வைத்தாள். அடிப்பாத எரிச்சலிலும் வியர்வையில் கசகசக்கும் தலைமுடி தந்த எரிச்சலிலும் சற்று வேகமாகவே வாளியை கீழிறக்கியதில் ணங்கென்ற ஒலி சிதறியது. வீட்டிற்குள் நுழைந்தபோது கூடத்திலிருந்த ஊஞ்சலில் படுத்திருந்த மாமியார் தலைதூக்கி பார்ப்பது தெரிந்தது. உள்ளுக்குள் சற்றே உதறலெடுத்தது கலாவுக்கு. ரொம்பத்தான் வேகமா வச்சுட்டமோ வாளிய, கும்பகர்ணனுக்கு தங்கச்சியா தூங்கற ஆளே எழுந்தாச்சே என்று எசகு பிசகாய் எண்ணங்கள் ஓட, "காபி வேணுமா அத்தை?" என்றாள் பவ்யமாய். பதிலெதுவும் வரவில்லை அங்கிருந்து. என்ன செய்வது என புரியாமல் சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு உள்ளே போய் கிரைன்டரில் போடுவதற்காய் அரிசியையும் உளுந்தையும் களையத்தொடங்கினாள்.

குமாரின் மோட்டார் சைக்கிள் சத்தம் தெரு முனையை தாண்டும்போதே அவளது அத்தனை புலன்களும் கூர்மையாயின. காபிக்கு அடுப்பை பற்ற வைத்தாள். குமாரின் செருப்பு கழட்டியெறியப்படும் விதத்திலிருந்தே அவனது கோபத்தினளவை கண்டுகொள்ளும் கலை இந்த 8 மாதத்தில் அவளுக்கு கை வந்திருந்தது. கை கால் கழுவி அவன் உள்ளே நுழைந்துவிட்டானென்பதை ஒலிக்குறிப்புகள் கொண்டே அறிந்து காபி டம்ப்ளருடன் ஹாலில் நுழைந்தவள் சற்றே அதிர்ந்தாள்.

மாமியார் கனகவல்லியம்மாள் குமாரின் காதருகே ஏதோ கிசுகிசுத்துக்கொண்டிருந்ததை பார்த்தவளுக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்தது. தயக்கத்துடன் மெல்ல நடந்து அவனருகில் சென்று காபி டம்பளரை நீட்டினாள். அம்மாவின் அருளுபதேசம் முடிந்து அவன் ஆக்ரோஷமாய் நிமிரவும் கலா காபி டம்பளரை நீட்டவும் சரியாயிருந்தது.
அடுத்த நொடி டம்ப்ளர் ஒரு மூலைக்கு பறந்தது. கொதிக்கும் காபி முழுதும் அவள் முகத்தில் பட்டு வழிந்து கொண்டிருந்தது. முகம் முழுதும் எரிய தொடங்கியது கலாவுக்கு. அனிச்சையாய் இரண்டடி பின்னால் எடுத்து வைத்தாள். ஊஞ்சல் சங்கிலிகள் கிறீச்சிட எழுந்தவனின் கைகள் அவள் கன்னத்தில் இடியென இறங்கின.

"ஒடுகாலி குடும்பத்துல பொண்னெடுத்துக்கு நமக்கு இதும் வேணும், இதுக்கு மேலயும் வெணும்டா. மொட்டை மாடிக்கு போனா லேசுல எறங்கறதில்ல மகாராணி. எந்த மன்மதனுக்கு தூது விடறாளோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்."

"நான் ஒருத்தி இவளோட கூத்துக்கெல்லாம் எடஞ்சலா குத்துக்கல்லாட்டமிருக்கேனேன்னு அவளுக்கு ஒரே எரிச்சல்டா. அதை எப்படி காமிக்கறாங்க? சாமஞ்செட்டையெல்லாம் எந்தலைல போடறாப்ல நங் நங்குன்னு வைக்கறது. ஒன்னை கண்ணால காணற வரை ஒரு சொட்டுத்தண்ணி தரதில்லைடா எனக்கு. அப்படியே நா விக்கி விக்கி போய்ச்சேந்துட்டா இவளை கண்காணிக்க ஆளிருக்கதில்ல, அதுக்குத்தான்."

"பொழுது சாஞ்சு எவ்ளோ நேரமாச்சு, இப்போ வரக்கும் என் கண்ணுல காபித்தண்ணியா காட்டலடா இவ. இப்ப ஒனக்கு மட்டும் ஆட்டிக்கிட்டு கொண்டாறா. அதுல என்ன விஷத்த கலந்து வச்சிருந்தாளோ மகராசி... "

இப்படியாக பின்னணியில் அர்ச்சனை தொடர்ந்த வண்ணமிருக்க, குமாரின் கைகள் தன் பணியை செவ்வனே செய்துகொண்டிருந்தன. அடித்து களைத்தவன் பக்கத்திலிருந்த ஈஸிச்சேரில் சாய்ந்த வண்ணம் "ஒழுங்கா போய் எங்க ரெண்டு பேருக்கும் காபி கொண்டு வா" என்று உறுமினான். முகத்தை துடைத்தவாறே சமையலறைக்குள் நுழைந்தாள் கலா.

அதற்குபின் அவளுக்கு இரவு 10 மணி வரை நிற்க நேரமில்லாது வேலையிருந்தது. எல்லாம் முடித்தபின் ஒரு குளியல் போட்டால் தேவலாமென்றிருந்தது. நாள் முழுதும் வேலை செய்ததில் வியர்வை ஒரு மெல்லிய உப்பு படலமாய் மேலே படர்ந்திருப்பது போலிருந்தது. பத்தாதற்கு மாலை குமார் காபியபிஷேகம் செய்ததில் தன் மேல் பாலின் வீச்சம் வருவதாய் தோன்றியது. ஆனால் திருமணமான புதிதில் சினிமாவிலும் கதையிலும் பார்த்திருந்ததை நினைத்துகொண்டு இரவு வேலையெல்லாம் ஆனதும் முகம் கழுவி பவுடர் பூசி அறைக்குள் நுழைந்தபோது கிடைத்த பாராட்டு - இதென்ன தேவடியாளாட்டமா சிங்காரிச்சுகிட்டு படுக்க வர? ஒன்னோட ஓடுகாலியக்காக்காரி சொல்லிக்கொடுத்தாளா இந்த தந்திரமெல்லாம்? இதெல்லாம் எங்கிட்ட வேணாம் சொல்லிட்டேன் என்பதுதான்.

எனவே புடவையை உதறி கட்டிக்கொண்டு குமாருக்கான பாலை டம்பளரில் நிரப்பி எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள். நிதானமாய் பாலை குடித்துமுடித்து பின் விளக்கை அணைத்தான். அவள் தோளில் கைபோட்டு தன்னருகே இழுத்தவன் அதே வேகத்தில் எரிச்சலுடன் அவளை தூரத்தள்ளினான். ஏங்க என்று பதறியவாறு மீண்டும் கட்டிலருகே வந்தவள் அதற்குள் அவன் விளக்கை போட்டு விட்டு எரிமலையாய் நிற்பதை பார்த்து மிரள விழித்தாள்.

"ஏண்டி, எங்கம்மா சொல்றாப்ல நீ அழுத்தக்காரிதான்டி, சாயந்தரம் மேல காபிய கொட்டினதுக்கு பழிவாங்கறயா அதே நாத்தத்தோட படுக்கைக்கு வந்து? இதே ஒனக்கு புடிச்சவனா எவனாச்சும் கூப்பிட்டா இப்படியா போவ? அந்த வெறும்பய வெங்கடேஷ் சும்மா தெருவுல போனாலே சீவி சிங்காரிச்சு போய் நின்னு தரிசனம் தரவளுக்கு, ராத்திரி கட்டின புருஷங்கிட்ட வரப்போ கொஞ்சம் சுத்தமாவாச்சும் வரணும்னு தோணாதா? திமிர் புடிச்ச கழுதை."

அறைக்கதவை திறந்து அவளை வெளித்தள்ளினான். கூடவே ஒரு பாயும் தலைகாணியையும் வெளியே எறிந்தான். அதற்குள் அரவம் கேட்டு அங்கே வந்தார் அவனதருமைத்தாயார் "என்னாடா ஆச்சு?" என்ற கேள்வியையும் ஒரு கொட்டாவியையும் ஒன்றாய் வெளியிட்டவாறு. நடந்ததை லேசாக சொன்னான் குமார். அவன் முடிக்கும் முன்னரே அவர் தனது கச்சேரியை துவக்கியாயிற்று. இருவரும் சேர்ந்து ஒரு ஆவர்த்தனம் முடித்தபின் அவரவர் படுக்கைக்குச்சென்றனர்.

கலாவும் தனக்கு தரப்பட்ட பாயை விரித்து படுத்தாள். தூக்கம்தான் வருவதாக தெரியவில்லை. +2வில் மாநில அளவிலான இடங்களை குறி வைத்து அவள் படித்துக்கொண்டிருந்த நேரம். அக்கா மாலதி தட்டச்சு பயிலகத்தில் வேலை செய்த வேற்று சாதி இளைஞனோடு ஓடிப்போன செய்தி இடியென அவர்களது குடும்பத்தின் தலையில் விழுந்தது.

அவளது தந்தை இடிந்து போய் திண்னையில் அமர்ந்தார். அப்போது இந்த கனகவல்லியம்மாளின் தம்பி, மாணிக்கம் தானே முன்வந்து காரெடுத்துக்கொண்டு எல்லாப்புறமும் தேட கிளம்பினார். அப்பாவின் கையிருப்பு மளமளவென கரைந்தது. வழக்கு ஏதும் பதியாமல் காவல் துறை உதவியையும் நாட மாணிக்கம் தெரிந்து வைத்திருந்தார். அக்காவின் திருமணம் சுவாமிமலை கோவிலில் முடியும் வரை மாணிக்கம் குழுவினரின் இந்த தேடல் தொடர்ந்தது.

இடைப்பட்ட அந்த இரன்டு நாட்களில் மாணிக்கத்தின் வாயிலிருந்து அதிகம் வந்த ஒரே விஷயம், நம்ம ஜாதிமானத்தை விட்டுடக்கூடாது என்பதுதான். கலாவுக்கு அப்போது அவ்வளவாக உலக ஞானம் கிடையாது. வெளியில் டவுனுக்குரிய சகல வசதிகளோடும் இருந்தாலும் அவள் வாழ்ந்த ஊர் இவ்வகையான பிரச்சனைகள் வரும் போது தன் அசல் முகத்தை வெளிக்காட்டுவதை அப்போதுதான் பார்த்தாள். ஊர் முழுவதும் பரவிய வதந்திகள், முதுக்குப்பின்னால் பரிமாறப்பட்ட குசுகுசு பேச்சுக்கள், மாணிக்கம் குழுவினரின் வீராவேசம், அப்பாவின் சோகம், அம்மாவின் ஹிஸ்டீரிக்கான பாவனைகள் இவை எதுவுமே அவளுக்கு புரியவில்லை. ஏன் இப்படி, ஏன் இப்படி என்ற கேள்வி மட்டுமே சுற்றி சுற்றி வந்தது. பதில் சொல்வார்தான் யாருமில்லை. ஆனாலும், ஒரு சினிமாத்தனமான த்ரில் இருப்பதை உணர்ந்தாள். அக்கா சினிமா கதாநாயகி போல அத்தானின் கைபிடித்து ஒடுவது போலும் மாணிக்கமும் மற்றவர்களும் துரத்திப்போவது போலும் கற்பனை செய்து பார்ப்பதில் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத மகிழ்ச்சி இருந்தது அவளுக்கு. ஆனால் இந்த நிகழ்ச்சிகளெல்லாம் அவளுக்கு எவ்வளவு விபரீதமான சிக்கலை தரப்போகிறதென்று அப்போது தெரியவில்லை.

அக்காவின் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் மாணிக்கம் கொஞ்ச நாள் வீட்டுக்கு வந்து அப்பாவுக்கும் அம்மவுக்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். அவரே கலா தன் கடைசி பரிட்சையை எழுதி முடிப்பதற்காக காத்திருந்தவர் போல அவளது திருமணப்பேச்சை எடுத்தார். "ஆமா, கலாவை என்ன செய்யப்போறீங்க?" என்கிற அவரது கேள்வி அப்பாவுக்கு முதலில் சரியாக புரியவில்லை.

"ஏன், என்ன செய்யணுங்கற? +2 எழுதியிருக்கா. நல்ல மார்க் வாங்குவான்னு நம்பறேன். மேற்கொண்டு எதுனா மார்க்குக்கு ஏத்தாப்புல சேக்க வேண்டியதுதான்" என்றார்.

அதற்குள் அம்மா வேகவேகமாய் அப்பா முன்னால் வந்து நின்றாள். "இப்படியே எடம் கொடுத்து கொடுத்துத்தான் மூத்தவ நம்மளை சந்தி சிரிக்க வச்சுட்டு போய்ட்டா. இப்போ இவளையும் ஒட விடணுமா ஒங்களுக்கு?" என்றவள் மாணிக்கத்திடம் திரும்பி "இவர் இப்படித்தாண்ணே அசமந்தமா இருப்பாரு. நீங்களே பாத்து எதுனா நல்லதாச்செய்யுங்க" என்றாள்.

அப்போதுதான் மாணிக்கம் சொன்னார் "எந்தங்கச்சி பையன் ஒருத்தன் இருக்கன். வழுத்தூர்ல கடை வச்சிருக்கான். நல்ல குடும்பம். ஒத்த பையன். எந்தங்கச்சி மட்டும்தான். அவ வூட்டுக்காரர் இறந்து 8 வருஷமாகுது. கூட பிறந்ததுங்க எதும் கிடையாது. நான் சொன்னா கேக்கக்கூடிய குடும்பம். இப்போ இருக்கற நிலமைல நீங்க வெளியாளுங்க யாருக்கும் பேசி முடிக்க முடியும்ன்னு எனக்கு தோணலை. அப்புறம் ஒங்க இஷ்டம்."
அதுக்கப்புறம் யாரும் கலாவின் இஷ்டத்தை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஒரு ஓடுகாலிப்பெண்ணை பெற்ற பாவத்துக்காய் இரண்டாவது பெண்ணின் திருமணத்துக்கு தன் முக்கால்வாசி சொத்தை விற்று கப்பம் கட்டினார் அப்பா. திருமணம் ஒருவழியாய் முடிந்தது.

"எங்க வீட்டுல முதராத்திரிக்கு தனி முகூர்த்தம் பாத்துத்தான் வப்போம். கல்யாணத்தன்னிக்கே வைக்கற வழக்கமில்லை.ஆனா பொண்ணை இப்போவே எங்க கூட அனுப்பிருங்க" என்றார் கனவல்லியம்மாள். இந்த சில நாட்களில் அப்பாவின் தலை யார் என்ன சொன்னாலும் சரிங்க என்று ஒரே திசையில் ஆடப்பழகியிருந்ததால், அனிச்சையாக தலையாட்டினார்.

வந்து ஒரு மாதம் வரை முதலிரவு பற்றி பேச்சே எடுக்கவில்லை யாரும். அந்த மாதத்திற்கான மாதவிலக்கு அவளுக்கு வந்த பிறகே ஜோசியர் வீடு சென்றூ நாள் பார்த்து வந்தார் அந்த அம்மாள். அப்போது கூட கலாவிற்கு அதன் தாத்பரியம் விளங்கவில்லை. ஆனால் பால் சொம்புடன் நுழைந்தவளிடம் குமார் கேட்ட கேள்விகள்தான் அவளுக்கு இந்த செயல்களின் உள்ளர்த்தத்தை உணர்த்தின. "ஒன்னோட ஒடுகாலி அக்காவோட புத்தி ஒனக்குமிருக்காதுன்னு என்ன நிச்சயம் சொல்லு? அதுனால அம்மாகிட்ட மொத மாச விலக்குக்கு அப்புறம்தான் முதராத்திரி வைக்கணும், அப்போத்தான் வரவ வயிறு சுத்தமா இருக்கான்னு தெரியும்னு மாணிக்கம் மாமா சொன்னாரு. ஆனா வயிறு இப்போதைக்கு சுத்தமாயிருந்து மட்டும் என்ன பிரயோஜனம் சொல்லு? ஒனக்கு இது நிஜமாவே மொதராத்திரிதான்னு சாமி மேல சத்தியம் பண்ணு" என்றான் குமார். கலாவும் கண்களில் வழியும் நீருடன் சத்தியம் செய்தாள். அன்று தொடங்கிய கண்ணீர் இன்றுவரை நிற்கவில்லை. இப்போதெல்லாம் கலா கடவுளிடம் வேண்டிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அடுத்த பிறப்பிலாவது என்னை ஓடிப்போகும் ஒருத்திக்கு தங்கையாக படைத்துவிடாதே என்பதுதான் அது. அன்றும் அதே கண்ணீருடன் தூங்கிப்போனாள் கலா.

Wednesday, April 18, 2007

அழகுகள் ஆயிரம் - அதில் சில...

ஆட்டத்துக்கு சேர்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க மங்கை. என் வரையில் அழகு என்பது எப்பவுமே ஒரு வரையறுக்கப்பட்ட விஷயம் இல்லை. அது ஒரு மனோபாவம். ஒருத்தருக்கு வானம் அழகுன்னால், பக்கத்திலிருப்பவருக்கு பூமிதான் அழகாத்தெரியும். சோ... நான் அழகுன்னு சொல்றதெல்லாம் உங்களுக்கும் அழகாத்தெரியணும்னு அவசியமில்லைதான். இருந்தாலும் ஆட்டம்னு வந்துட்டதால எனக்கு அழகுன்னு தோணற சில விஷயங்களை இங்கே பட்டியலிடறேன்.

ஊர்ல எங்க வீடு ரொம்ப பழைய காலத்து மாடல்ல இருக்கும். நாட்டு ஓடுதான் கூரை. தரைக்கு மட்டும் எங்க அப்பா பெரிய மனசு பண்ணி சிமென்ட் போட்டு அதுல சிவப்பு கலர் சிங்குச்சா நீலக்கலர் சிங்குச்சான்னு கலர் வேற போட்டு விட்டிருக்கார். வீட்டுக்கு நடுவுல திறந்தவெளியா கொஞ்ச இடம் இருக்கும் - முற்றம்ன்னு சொல்வோம் (பேச்சுவாக்கில் மித்தம்னுதான் பெரும்பாலானவங்க சொல்வாங்க.) இந்த இடம்தான் வீட்டுலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். இது ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு அழகை தொடர்ந்து வெளிப்படுத்திக்கிட்டே இருக்கற இடம். எங்க வீட்டு முற்றத்தில் இரும்புக்கம்பிகளை பாதுகாப்புக்காக போட்டு வைத்திருப்போம். மழை நின்ற பின் அந்த கம்பிகள்ள தொங்கும் நீர்த்திவலைகள் அப்படியே முத்துக்களை கோர்த்தாற்போல இருக்கும். அப்போ சூரிய வெளிச்சம் மேல பட்டால் அப்படியே ஜொலிக்கும். அப்போ பார்த்து லேசான காற்று அடிச்சு அதுல அந்த நீர்த்துளிகள் மெதுவாய் ஆடினால்... எப்படி சொல்றதுன்னு தெரியலை. வைத்த கண் வாங்காம பார்த்துக்கொண்டே இருக்க வைக்கும். இரவு நேரத்தில் மின்சாரம் நின்று போய்விட்டால் இந்த முற்றத்தை சுற்றியுள்ள பகுதியில்(தாழ்வாரம் என்போம் இதை) வந்து எல்லோரும் அமர்வோம். சுத்தமாய் மின்சாரமே இல்லாததால் இருள் இன்னும் அடர்த்தியாய் தெரிய, நிலாக்காலமெனில் நிலவொளியும் அது இல்லாத நாளில் நட்சத்திரங்களின் ஜொலிப்புமாய் வானம் பாரதியின் 'பட்டுக்கருநீலப்புடவை, பதித்த நல்வயிரங்கள்' அப்படின்ற வரிகளை நினைவுபடுத்தும். சிறு வயதில் தினமுமே இரவு சாப்பாடானதும் அப்பா என்னை தாழ்வாரத்தில் உட்கார வைத்து தான் முற்றத்தில் ஒரு ஈஸிச்சேரில் அமர்ந்த வண்ணம் தினம் ஒரு கதை சொல்வார் (அப்பா ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் - அதுவும் ஆரம்பப்பள்ளி ஒன்றில் வேலையில் சேர்ந்த நாள் முதல் தலைமை ஆசிரியராவதற்கு முன்வரை தொடர்ந்து ஒன்றாம் வகுப்புக்கே ஆசிரியராய் இருந்தவர். ஆகையினால் எனக்கும் தினம் ஒரு கதை கிடைக்கும் சின்ன வயசில்). கதை மட்டுமில்லைங்க, பாரதியார் பாடல்கள், குறள் , கம்பரின் பாடல்கள் அப்படின்னு எனக்கு தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ததும் என் அப்பாதான். செய்த இடம் இதே முற்றம்தான். பாரதியாரோட எங்கிருந்தோ வந்தான் பாடலை கேட்டிருப்போம். அப்பா அந்த பாடலின் துவக்கத்திலிருந்து சொல்வார். அது 'கூலிமிகக்கேட்பார்' அப்படின்னு வேலையாட்கள் சிலர் செய்யும் அடாவடித்தனங்களை பற்றி புலம்பியபடி ஆரம்பித்து பின் கண்ணன் கிடைத்ததும் எவ்வளவு சவுகரியங்கள் கிடைத்ததுன்னு சொல்லும் பாடல் - ஒரு கதை போல இருக்கும். இப்படி பல அற்புதமான பாடல்கள், ராமாயண மகாபாரத கதைகள் (அதுலயும் இந்த மகாபாரதம் இருக்கே அது ஒரு கதைச்சுரங்கம். கதைக்குள்ள கதைக்குள்ள கதைன்னு போயிகிட்டேயிருக்கும். பெரியவங்க எல்லாம் எப்படித்தான் கதாபாத்திர பெயரிலிருந்து சகலத்தையும் நினைவு வச்சுக்கறாங்களோ தெரியலை. அது தெரிஞ்சிருந்தா ஒழுங்கா படிச்சு கிழிச்சிருக்க மாட்டோமா நாம...) எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது இந்த முற்றத்தில்தான். நிமிர்ந்து பார்த்தால் எங்கள் தோட்டத்து தென்னையும் பக்கத்து வீட்டு தோட்டத்து வேப்பமரமும் தெரியும். இன்னும் சற்று நிமிர்ந்தால் வயிரம் பதித்த கருநீலப்பட்டுப்புடவை - அதான் நம்ம வானம் தெரியும். எல்லரையும் போல எனக்கும் குழந்தைப்பருவம்தான் வாழ்வின் பொற்காலம் இப்போ வரை.

அடுத்த அழகு எங்க அம்மாவோட சுங்கடி புடவைகள். அம்மா நல்ல நிறம். அதுலயும் கொஞ்சம் அடர் வண்ணங்களில்தான் சுங்கடி வகை காட்டன் புடவைகள் வாங்குவார். அதுல சிலதுல நல்ல ஜரிகை வேலைப்பாடு இருக்கும். தினப்படிக்கு சாதாரண டிசைன் கொண்ட புடவைகள், விசேஷங்களுக்கு ஜரிகை வேலைப்படுகள் கொண்ட புடவைகள்ன்னு வைத்திருப்பார். மற்ற பெண்கள் பட்டிலும் வைரத்திலும் மின்ன நடுவில் அம்மா இந்த வகையிலான சுங்கடி புடவைகளில் அசத்துவார். புடவையின் அழகும் அம்மா அதை உடுத்தும் பாங்கும் இந்த புடவைக்கு பல புது வாடிக்கையாளர்களை உருவாக்கியதென்றால் அது மிகையல்ல. அதிலும் அம்மாவிடம் அரக்கு வண்ணத்தில் கருப்பு கரை வைத்த புடவை ஒன்று உண்டு - கரையில் மட்டும் ஜரிகை வேலை செய்தது. எனக்கு மிகப்பிடித்த புடவை அது. கல்லூரிக்கு நானும் அந்த புடவையை சில சமயம் கட்டிக்கொண்டு சென்றிருக்கிறேன். ஆனால் கண்ணாடியில் பார்க்கும் போது அம்மாவுக்கு அந்த புடவை எப்படியிருந்தது என்று ஒப்பிட்டுக்கொள்ளத்தோன்றும் - அது கான மயிலாட பாடலை வேறு நினைவு படுத்துமா, எனவே அந்த புடவையை மட்டும் சுடும் எண்ணத்தை கைவிட்டு விட்டேன். மற்றபடி சிந்தடிக் புடவை என்றால் அம்மாவே எனக்கென எடுத்து வைத்து விடுவார்(ச்சோ ஸ்வீட் :) ).

அடுத்த அழகு எங்க அம்மாவோட குங்கும பொட்டு - நல்ல பெரிய வட்டமாய் நெற்றியிலும், சிறிது உச்சி வகிட்டிலும் இட்டுக்கொள்வார். சுகந்தா குங்குமமும் Eyetex - இன் ஆஷா எனப்படும் மெழுகும் உபயோகிப்பார். முதலில் ஆஷாவினால் சிறிய வட்டம் வைத்து அதன் பின் அதன் மேல் குங்குமம் வைப்பார். விரலில் மிச்சமிருக்கும் குங்குமம் உச்சி வகிட்டிற்கு. எப்படித்தான் அப்படி சிறு பிசிறு கூட இல்லாமல் வட்டமாய் வைப்பாரோ தெரியாது. பல நாள் பக்கத்திலிருந்து பார்த்திருந்தாலும் என்னால் செய்ய முடிந்ததில்லை.

ரொம்பவே கொசுவத்தி சுத்திட்டேன்னு நினைக்கறேன். அதுனால இப்போதைக்கு பக்கத்திலிருக்கும் அழகு ஒன்னு - என் வீடு. வாங்கி ஒரு 8 மாதம்தான் ஆகிறது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சில்லையா? மத்தவங்களுக்கு ஒரு சாதாரண வீடா மட்டுமே இது தெரியலாம். ஆனால் எனக்கு தாய்மடி போல, கதவைத்திறந்து உள்ளே நுழையும் போதெல்லாம் ஆசுவாசம் தருவது இது.

சரி. விட்டால் இந்த பட்டியல் முடிவே இல்லாமல் நீளும் அபாயமிருப்பதால், இங்கே ஒரு பிரேக் அடிக்கறேன். அப்புறமா சந்தர்ப்பம் கிடைக்கும் போது மீதியை பார்க்கலாம். இப்போ இந்த ஆட்டத்தை தொடர நான் அழைப்பது மதுரா அக்காவையும் ,செல்வ நாயகி அவர்களையும், மகா அவர்களையும்.