Wednesday, May 02, 2007

ஓடிப்போனவளின் தங்கை

தோள்பட்டையிலிருந்து சுளீரென ஒரு வலி கைமுழுதும் பரவியது. கையிலிருந்த துவைத்த துணிகளடங்கிய இரும்பு வாளி கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்தில் கலா அதை இன்னும் கொஞ்சம் இறுக்கி பிடித்தவாறு மொட்டைமாடிக்கு போகும் படிகளில் கவனமாக ஏறினாள். சிமென்ட் தரை அந்த பன்னிரண்டு மணி வெய்யிலில் காலைப்பொசுக்கியது. ஒரு கால் மாற்றி இன்னொரு கால் என்று ஊன்றியவாறே வேகவேகமாய் துணிகளை உதறி உணர்த்த ஆரம்பித்தாள். இப்படி சுடும் தரைக்கு பயந்து ஆரம்பத்தில் செருப்பு போட்டுக்கொண்டு வந்து அதனால் தான் பட்ட பாடு நினைவுக்கு வந்தது அவளுக்கு.

துணிகளனைத்தையும் உணர்த்தி முடித்துவிட்டு பொங்கிய வியர்வையை சேலைத்தலைப்பில் துடைத்தவாறே கீழே இறங்கியவள் வீட்டைச்சுற்றியிருந்த சிமென்ட் தளப்பாதையில் நடந்து நேரே பின் கட்டிற்கு போய் குழாயடியில் வாளியை வைத்தாள். அடிப்பாத எரிச்சலிலும் வியர்வையில் கசகசக்கும் தலைமுடி தந்த எரிச்சலிலும் சற்று வேகமாகவே வாளியை கீழிறக்கியதில் ணங்கென்ற ஒலி சிதறியது. வீட்டிற்குள் நுழைந்தபோது கூடத்திலிருந்த ஊஞ்சலில் படுத்திருந்த மாமியார் தலைதூக்கி பார்ப்பது தெரிந்தது. உள்ளுக்குள் சற்றே உதறலெடுத்தது கலாவுக்கு. ரொம்பத்தான் வேகமா வச்சுட்டமோ வாளிய, கும்பகர்ணனுக்கு தங்கச்சியா தூங்கற ஆளே எழுந்தாச்சே என்று எசகு பிசகாய் எண்ணங்கள் ஓட, "காபி வேணுமா அத்தை?" என்றாள் பவ்யமாய். பதிலெதுவும் வரவில்லை அங்கிருந்து. என்ன செய்வது என புரியாமல் சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு உள்ளே போய் கிரைன்டரில் போடுவதற்காய் அரிசியையும் உளுந்தையும் களையத்தொடங்கினாள்.

குமாரின் மோட்டார் சைக்கிள் சத்தம் தெரு முனையை தாண்டும்போதே அவளது அத்தனை புலன்களும் கூர்மையாயின. காபிக்கு அடுப்பை பற்ற வைத்தாள். குமாரின் செருப்பு கழட்டியெறியப்படும் விதத்திலிருந்தே அவனது கோபத்தினளவை கண்டுகொள்ளும் கலை இந்த 8 மாதத்தில் அவளுக்கு கை வந்திருந்தது. கை கால் கழுவி அவன் உள்ளே நுழைந்துவிட்டானென்பதை ஒலிக்குறிப்புகள் கொண்டே அறிந்து காபி டம்ப்ளருடன் ஹாலில் நுழைந்தவள் சற்றே அதிர்ந்தாள்.

மாமியார் கனகவல்லியம்மாள் குமாரின் காதருகே ஏதோ கிசுகிசுத்துக்கொண்டிருந்ததை பார்த்தவளுக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்தது. தயக்கத்துடன் மெல்ல நடந்து அவனருகில் சென்று காபி டம்பளரை நீட்டினாள். அம்மாவின் அருளுபதேசம் முடிந்து அவன் ஆக்ரோஷமாய் நிமிரவும் கலா காபி டம்பளரை நீட்டவும் சரியாயிருந்தது.
அடுத்த நொடி டம்ப்ளர் ஒரு மூலைக்கு பறந்தது. கொதிக்கும் காபி முழுதும் அவள் முகத்தில் பட்டு வழிந்து கொண்டிருந்தது. முகம் முழுதும் எரிய தொடங்கியது கலாவுக்கு. அனிச்சையாய் இரண்டடி பின்னால் எடுத்து வைத்தாள். ஊஞ்சல் சங்கிலிகள் கிறீச்சிட எழுந்தவனின் கைகள் அவள் கன்னத்தில் இடியென இறங்கின.

"ஒடுகாலி குடும்பத்துல பொண்னெடுத்துக்கு நமக்கு இதும் வேணும், இதுக்கு மேலயும் வெணும்டா. மொட்டை மாடிக்கு போனா லேசுல எறங்கறதில்ல மகாராணி. எந்த மன்மதனுக்கு தூது விடறாளோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்."

"நான் ஒருத்தி இவளோட கூத்துக்கெல்லாம் எடஞ்சலா குத்துக்கல்லாட்டமிருக்கேனேன்னு அவளுக்கு ஒரே எரிச்சல்டா. அதை எப்படி காமிக்கறாங்க? சாமஞ்செட்டையெல்லாம் எந்தலைல போடறாப்ல நங் நங்குன்னு வைக்கறது. ஒன்னை கண்ணால காணற வரை ஒரு சொட்டுத்தண்ணி தரதில்லைடா எனக்கு. அப்படியே நா விக்கி விக்கி போய்ச்சேந்துட்டா இவளை கண்காணிக்க ஆளிருக்கதில்ல, அதுக்குத்தான்."

"பொழுது சாஞ்சு எவ்ளோ நேரமாச்சு, இப்போ வரக்கும் என் கண்ணுல காபித்தண்ணியா காட்டலடா இவ. இப்ப ஒனக்கு மட்டும் ஆட்டிக்கிட்டு கொண்டாறா. அதுல என்ன விஷத்த கலந்து வச்சிருந்தாளோ மகராசி... "

இப்படியாக பின்னணியில் அர்ச்சனை தொடர்ந்த வண்ணமிருக்க, குமாரின் கைகள் தன் பணியை செவ்வனே செய்துகொண்டிருந்தன. அடித்து களைத்தவன் பக்கத்திலிருந்த ஈஸிச்சேரில் சாய்ந்த வண்ணம் "ஒழுங்கா போய் எங்க ரெண்டு பேருக்கும் காபி கொண்டு வா" என்று உறுமினான். முகத்தை துடைத்தவாறே சமையலறைக்குள் நுழைந்தாள் கலா.

அதற்குபின் அவளுக்கு இரவு 10 மணி வரை நிற்க நேரமில்லாது வேலையிருந்தது. எல்லாம் முடித்தபின் ஒரு குளியல் போட்டால் தேவலாமென்றிருந்தது. நாள் முழுதும் வேலை செய்ததில் வியர்வை ஒரு மெல்லிய உப்பு படலமாய் மேலே படர்ந்திருப்பது போலிருந்தது. பத்தாதற்கு மாலை குமார் காபியபிஷேகம் செய்ததில் தன் மேல் பாலின் வீச்சம் வருவதாய் தோன்றியது. ஆனால் திருமணமான புதிதில் சினிமாவிலும் கதையிலும் பார்த்திருந்ததை நினைத்துகொண்டு இரவு வேலையெல்லாம் ஆனதும் முகம் கழுவி பவுடர் பூசி அறைக்குள் நுழைந்தபோது கிடைத்த பாராட்டு - இதென்ன தேவடியாளாட்டமா சிங்காரிச்சுகிட்டு படுக்க வர? ஒன்னோட ஓடுகாலியக்காக்காரி சொல்லிக்கொடுத்தாளா இந்த தந்திரமெல்லாம்? இதெல்லாம் எங்கிட்ட வேணாம் சொல்லிட்டேன் என்பதுதான்.

எனவே புடவையை உதறி கட்டிக்கொண்டு குமாருக்கான பாலை டம்பளரில் நிரப்பி எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள். நிதானமாய் பாலை குடித்துமுடித்து பின் விளக்கை அணைத்தான். அவள் தோளில் கைபோட்டு தன்னருகே இழுத்தவன் அதே வேகத்தில் எரிச்சலுடன் அவளை தூரத்தள்ளினான். ஏங்க என்று பதறியவாறு மீண்டும் கட்டிலருகே வந்தவள் அதற்குள் அவன் விளக்கை போட்டு விட்டு எரிமலையாய் நிற்பதை பார்த்து மிரள விழித்தாள்.

"ஏண்டி, எங்கம்மா சொல்றாப்ல நீ அழுத்தக்காரிதான்டி, சாயந்தரம் மேல காபிய கொட்டினதுக்கு பழிவாங்கறயா அதே நாத்தத்தோட படுக்கைக்கு வந்து? இதே ஒனக்கு புடிச்சவனா எவனாச்சும் கூப்பிட்டா இப்படியா போவ? அந்த வெறும்பய வெங்கடேஷ் சும்மா தெருவுல போனாலே சீவி சிங்காரிச்சு போய் நின்னு தரிசனம் தரவளுக்கு, ராத்திரி கட்டின புருஷங்கிட்ட வரப்போ கொஞ்சம் சுத்தமாவாச்சும் வரணும்னு தோணாதா? திமிர் புடிச்ச கழுதை."

அறைக்கதவை திறந்து அவளை வெளித்தள்ளினான். கூடவே ஒரு பாயும் தலைகாணியையும் வெளியே எறிந்தான். அதற்குள் அரவம் கேட்டு அங்கே வந்தார் அவனதருமைத்தாயார் "என்னாடா ஆச்சு?" என்ற கேள்வியையும் ஒரு கொட்டாவியையும் ஒன்றாய் வெளியிட்டவாறு. நடந்ததை லேசாக சொன்னான் குமார். அவன் முடிக்கும் முன்னரே அவர் தனது கச்சேரியை துவக்கியாயிற்று. இருவரும் சேர்ந்து ஒரு ஆவர்த்தனம் முடித்தபின் அவரவர் படுக்கைக்குச்சென்றனர்.

கலாவும் தனக்கு தரப்பட்ட பாயை விரித்து படுத்தாள். தூக்கம்தான் வருவதாக தெரியவில்லை. +2வில் மாநில அளவிலான இடங்களை குறி வைத்து அவள் படித்துக்கொண்டிருந்த நேரம். அக்கா மாலதி தட்டச்சு பயிலகத்தில் வேலை செய்த வேற்று சாதி இளைஞனோடு ஓடிப்போன செய்தி இடியென அவர்களது குடும்பத்தின் தலையில் விழுந்தது.

அவளது தந்தை இடிந்து போய் திண்னையில் அமர்ந்தார். அப்போது இந்த கனகவல்லியம்மாளின் தம்பி, மாணிக்கம் தானே முன்வந்து காரெடுத்துக்கொண்டு எல்லாப்புறமும் தேட கிளம்பினார். அப்பாவின் கையிருப்பு மளமளவென கரைந்தது. வழக்கு ஏதும் பதியாமல் காவல் துறை உதவியையும் நாட மாணிக்கம் தெரிந்து வைத்திருந்தார். அக்காவின் திருமணம் சுவாமிமலை கோவிலில் முடியும் வரை மாணிக்கம் குழுவினரின் இந்த தேடல் தொடர்ந்தது.

இடைப்பட்ட அந்த இரன்டு நாட்களில் மாணிக்கத்தின் வாயிலிருந்து அதிகம் வந்த ஒரே விஷயம், நம்ம ஜாதிமானத்தை விட்டுடக்கூடாது என்பதுதான். கலாவுக்கு அப்போது அவ்வளவாக உலக ஞானம் கிடையாது. வெளியில் டவுனுக்குரிய சகல வசதிகளோடும் இருந்தாலும் அவள் வாழ்ந்த ஊர் இவ்வகையான பிரச்சனைகள் வரும் போது தன் அசல் முகத்தை வெளிக்காட்டுவதை அப்போதுதான் பார்த்தாள். ஊர் முழுவதும் பரவிய வதந்திகள், முதுக்குப்பின்னால் பரிமாறப்பட்ட குசுகுசு பேச்சுக்கள், மாணிக்கம் குழுவினரின் வீராவேசம், அப்பாவின் சோகம், அம்மாவின் ஹிஸ்டீரிக்கான பாவனைகள் இவை எதுவுமே அவளுக்கு புரியவில்லை. ஏன் இப்படி, ஏன் இப்படி என்ற கேள்வி மட்டுமே சுற்றி சுற்றி வந்தது. பதில் சொல்வார்தான் யாருமில்லை. ஆனாலும், ஒரு சினிமாத்தனமான த்ரில் இருப்பதை உணர்ந்தாள். அக்கா சினிமா கதாநாயகி போல அத்தானின் கைபிடித்து ஒடுவது போலும் மாணிக்கமும் மற்றவர்களும் துரத்திப்போவது போலும் கற்பனை செய்து பார்ப்பதில் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத மகிழ்ச்சி இருந்தது அவளுக்கு. ஆனால் இந்த நிகழ்ச்சிகளெல்லாம் அவளுக்கு எவ்வளவு விபரீதமான சிக்கலை தரப்போகிறதென்று அப்போது தெரியவில்லை.

அக்காவின் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் மாணிக்கம் கொஞ்ச நாள் வீட்டுக்கு வந்து அப்பாவுக்கும் அம்மவுக்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். அவரே கலா தன் கடைசி பரிட்சையை எழுதி முடிப்பதற்காக காத்திருந்தவர் போல அவளது திருமணப்பேச்சை எடுத்தார். "ஆமா, கலாவை என்ன செய்யப்போறீங்க?" என்கிற அவரது கேள்வி அப்பாவுக்கு முதலில் சரியாக புரியவில்லை.

"ஏன், என்ன செய்யணுங்கற? +2 எழுதியிருக்கா. நல்ல மார்க் வாங்குவான்னு நம்பறேன். மேற்கொண்டு எதுனா மார்க்குக்கு ஏத்தாப்புல சேக்க வேண்டியதுதான்" என்றார்.

அதற்குள் அம்மா வேகவேகமாய் அப்பா முன்னால் வந்து நின்றாள். "இப்படியே எடம் கொடுத்து கொடுத்துத்தான் மூத்தவ நம்மளை சந்தி சிரிக்க வச்சுட்டு போய்ட்டா. இப்போ இவளையும் ஒட விடணுமா ஒங்களுக்கு?" என்றவள் மாணிக்கத்திடம் திரும்பி "இவர் இப்படித்தாண்ணே அசமந்தமா இருப்பாரு. நீங்களே பாத்து எதுனா நல்லதாச்செய்யுங்க" என்றாள்.

அப்போதுதான் மாணிக்கம் சொன்னார் "எந்தங்கச்சி பையன் ஒருத்தன் இருக்கன். வழுத்தூர்ல கடை வச்சிருக்கான். நல்ல குடும்பம். ஒத்த பையன். எந்தங்கச்சி மட்டும்தான். அவ வூட்டுக்காரர் இறந்து 8 வருஷமாகுது. கூட பிறந்ததுங்க எதும் கிடையாது. நான் சொன்னா கேக்கக்கூடிய குடும்பம். இப்போ இருக்கற நிலமைல நீங்க வெளியாளுங்க யாருக்கும் பேசி முடிக்க முடியும்ன்னு எனக்கு தோணலை. அப்புறம் ஒங்க இஷ்டம்."
அதுக்கப்புறம் யாரும் கலாவின் இஷ்டத்தை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஒரு ஓடுகாலிப்பெண்ணை பெற்ற பாவத்துக்காய் இரண்டாவது பெண்ணின் திருமணத்துக்கு தன் முக்கால்வாசி சொத்தை விற்று கப்பம் கட்டினார் அப்பா. திருமணம் ஒருவழியாய் முடிந்தது.

"எங்க வீட்டுல முதராத்திரிக்கு தனி முகூர்த்தம் பாத்துத்தான் வப்போம். கல்யாணத்தன்னிக்கே வைக்கற வழக்கமில்லை.ஆனா பொண்ணை இப்போவே எங்க கூட அனுப்பிருங்க" என்றார் கனவல்லியம்மாள். இந்த சில நாட்களில் அப்பாவின் தலை யார் என்ன சொன்னாலும் சரிங்க என்று ஒரே திசையில் ஆடப்பழகியிருந்ததால், அனிச்சையாக தலையாட்டினார்.

வந்து ஒரு மாதம் வரை முதலிரவு பற்றி பேச்சே எடுக்கவில்லை யாரும். அந்த மாதத்திற்கான மாதவிலக்கு அவளுக்கு வந்த பிறகே ஜோசியர் வீடு சென்றூ நாள் பார்த்து வந்தார் அந்த அம்மாள். அப்போது கூட கலாவிற்கு அதன் தாத்பரியம் விளங்கவில்லை. ஆனால் பால் சொம்புடன் நுழைந்தவளிடம் குமார் கேட்ட கேள்விகள்தான் அவளுக்கு இந்த செயல்களின் உள்ளர்த்தத்தை உணர்த்தின. "ஒன்னோட ஒடுகாலி அக்காவோட புத்தி ஒனக்குமிருக்காதுன்னு என்ன நிச்சயம் சொல்லு? அதுனால அம்மாகிட்ட மொத மாச விலக்குக்கு அப்புறம்தான் முதராத்திரி வைக்கணும், அப்போத்தான் வரவ வயிறு சுத்தமா இருக்கான்னு தெரியும்னு மாணிக்கம் மாமா சொன்னாரு. ஆனா வயிறு இப்போதைக்கு சுத்தமாயிருந்து மட்டும் என்ன பிரயோஜனம் சொல்லு? ஒனக்கு இது நிஜமாவே மொதராத்திரிதான்னு சாமி மேல சத்தியம் பண்ணு" என்றான் குமார். கலாவும் கண்களில் வழியும் நீருடன் சத்தியம் செய்தாள். அன்று தொடங்கிய கண்ணீர் இன்றுவரை நிற்கவில்லை. இப்போதெல்லாம் கலா கடவுளிடம் வேண்டிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அடுத்த பிறப்பிலாவது என்னை ஓடிப்போகும் ஒருத்திக்கு தங்கையாக படைத்துவிடாதே என்பதுதான் அது. அன்றும் அதே கண்ணீருடன் தூங்கிப்போனாள் கலா.

20 comments:

said...

May be this is a more practical story... cant you tune this up..

said...

கடைசி வரை அந்த குடும்பத்துக்கு சமுகம்
கொடுக்கும் பட்டம் ஓடுகாலி குடும்பம்.

100% நிஜத்தை சொல்லி இருக்கிறீர்கள்

said...

லக்ஷ்மி இதே போன்றதொரு தலைப்பில் கதை எழுதியவன் என்ற முறையில் சில வார்த்தைகள்.

இந்த நிலைமை இன்னும் தமிழ்நாட்டில் நிறைய இருக்கிறது என்ற முறையில் அதனை அழகாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.

ஆனால் நிறைய கேள்விகள் உள்ளுக்குள் எழுகின்றன இது போன்ற பல குடும்பங்களை நேரில் பார்த்தவன் என்ற முறையில். ஆனால் இந்தக் கேள்விகள் யாவும் ப்ராக்டிகலாக இப்படி ஒரு பெண் இருந்தால் எப்படி அந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்கமுடியும் என்பதை நோக்கி விரியும் கேள்விகளாகவே இருக்கும்.

ஆனால் 2 ஐயும் 2 ஐயும் கூட்டினால் நான்குதான் வரும் என்ற கணக்குகள் நிஜ வாழ்க்கைக்கு சரி வராது, அதே போல் கேள்விகளும் அதற்கான பதில்களை விட இன்னும் கேள்விகளையே கொண்டு வரும் என்பதால்; நல்ல முயற்சி.

--------------

மாமியார்க்காரியின் மரணத்திற்குப் பின்னாலோ, அந்த தம்பதியின் வருங்காலத்தில் பிறக்கும் குழந்தை மூலமாகவோ அந்தப் பெண்ணிற்கு நல்லது நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

said...

Raja says:

Extremely vulgar story. Women writers have to write for liberation. Instead this story strengthens male chauvinism.

I wish I had not read this story.

said...

உண்மை கதையான்னு தெரில. ஆனா, நாட்ல நிச்சயம் இது மாதிரி நிறைய கதை இருக்கும். நாடகத் தனம் இல்லாத முடிவைத் திணிக்காத சிறுகதை முடிவு. நல்லா எழுதி இருக்கீங்க

said...

ரொம்ப உண்மையா இருக்கலாம்...எனக்கு என்னமோ..பிற்போக்குத்தனமா தான் தெரியுது... We shall avoid these kind of stories atleast in fantasy world.

said...

உள்ளதைச் சொன்னால் உடம்பு எரிவது ஏன்?

said...

அப்பாஸ், ராஜா, மோகன் தாஸ்,குசும்பன், ரவி சங்கர், காளி, சிவஞானம்ஜி - அனைவருக்கும் நன்றி முதலில்.

அப்பாஸ், ராஜா, காளி - முதலில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திடறேன். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையா கொண்ட கதை. இந்த கதைல சொன்னதை விடவும் அதிகமான கொடுமைகளை அந்த பெண் நிஜ வாழ்க்கைல அனுபவிச்சுகிட்டுத்தான் இருக்காங்க.

நீங்க எல்லாருமே கற்பனையிலாவது அந்த பெண்ணுக்கு மகிழ்ச்சியான ஒரு முடிவை கொடுத்திருக்க கூடாதான்னு கேக்கறீங்க. ஆனா அப்படி ஒரு கற்பனை முடிவு - கொஞ்சம் செயற்கையானதா இருக்காதா?

அப்புறம் ஒரு விஷயம் ராஜா - அதென்ன பெண் எழுத்தாளர்கள் என்ன எழுதணும்னு ஒரு ரூல் கொண்டு வந்திருக்கீங்க போல? முன்னாடியே சொல்றதில்லையா எங்களுக்கு இதையெல்லாம் பத்தி? :)

காமம் பத்தி எழுதக்கூடாதுன்றதையோ இல்லை சுதந்திரம் நோக்கின சுகமான கற்பனைகளை மட்டும்தான் எழுதுவது என்பதையோ எழுதுகிறவரைத் தவிர வேறு யாரும் முடிவு செய்யத்தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

மோகனா, நீங்க சொன்ன ரெண்டுமே நடந்தும் கூட நிஜத்தில் அந்த பெண்ணின் சோகம் தீரவில்லை. இப்படி நிஜமிருக்கும் போது, நான் கற்பனையில் என்ன தீர்வை சொல்ல முடியும் அந்த பெண்ணுக்கு?

said...

கதை ரொம்ப யதார்த்தமா அருமையா இருந்தது.

இருந்தாலும் இதே மாதிரி அவலபடுகிற பெண்களுக்கு என்ன செய்யணும்னு ஒரு மெஸேஜும் வச்சிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்ங்றது என்னுடைய கருத்து..

said...

இது ஒரு மிக மிக பிற்போக்குத்தனமான கதை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இதை பதிவு செய்யாமலே இருந்திருக்கலாம். சில அசிங்கங்கள் நாட்டில் எப்போதுமே நடந்துகொண்டிருக்கும். அவற்றிற்கு நாம் பத்திரிக்கைகளிலோ மற்ற ஊடகங்களிலோ எந்த ஒரு முக்கியத்துவமும் தராமல் இருப்பது மிக நல்லது.

வேண்டுமானால், நக்கீரன், ஜூவி போன்ற பத்திரிக்கைகள் இதை ஒரு உண்மை சம்பவம் என்று போட்டி போட்டு வக்கிரமான தலைப்பு கொடுத்து பதிக்கலாம். அப்புறம் உங்களைப்போன்ற படைப்பாளிகளுக்கும், சாதாரண குப்பை பத்திரிக்கைகளுக்கும் என்ன வித்யாசம்?

said...

ரொம்ப நன்றி ஜி. மெஸேஜ், ம்ம்... அடுத்த கதையிலிருந்து முயற்சிக்கிறேன்.

said...

தேவ உதிப்தா, இதில் வரும் கதாபாத்திரங்கள் பிற்போக்குத்தனமாக சிந்திக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை நான் நியாயப்படுத்தவில்லை இந்த கதையில். காளி, ராஜா, ஜி போன்றவர்கள் கேட்பதில் ஒரு நியாயமிருக்கிறது. பிரச்சனை இருக்கிறது என்று சொல்கிறாயே, ஏன் அதற்கு ஒரு தீர்வும் யோசித்து சொல்லக்கூடாது என்று அவர்கள் கேட்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எதற்காக இந்த பிரச்சனையை பற்றி பேச வேண்டும் என்று நீங்கள் கேட்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. குப்பைகள் இருக்கிறது என்று நான் சொல்கிறேன். அதை கூட்டித்தள்ளவும் ஒரு வழி சொல்லு என்று நண்பர்கள் சிலர் சொல்கிறார்கள். இது இரண்டையும் விட்டு விட்டு அதெப்படி நம் வீட்டில் குப்பை இருக்கிற விஷயத்தை பற்றி நீ விவாதிக்கப்போச்சு என்று நீங்கள் கேட்கிறீர்கள். நல்ல கேள்விதான், ஆனால் குப்பையை பற்றி பேசாமல் அதை நீக்குவது எப்படி என்று நீங்கள்தான் ஒரு வழி சொல்லுங்களேன்.

said...

குப்பையை விளக்குமாறால் தான் விறட்டவேண்டும். குப்பையைப்பற்றி பேசினாலோ, குப்பையாலோ, குப்பைக்கதையாலோ அதை விரட்டமுடியாது.

விளக்குமாறு இருந்தால் எடுத்துவாருங்கள். இல்லையேல் வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது.

said...

தேவ உதிப்தா, இந்த பிரச்சனையில் தீர்வு என்பது ரென்டு வகை - ஒன்னு அந்த மாதிரி பிரச்சனைக்கு ஆளானவங்க எப்படி அதுலேர்ந்து மீண்டு வரது அப்படின்றது ஒன்னு. இன்னொன்னு இனி யாருக்கும் அந்த நிலை வராமலே இருக்கறது. அதுக்கு ஒரே வழி - சமூகத்தின் மனமாற்றமே. அந்த விழிப்புணர்வு வேணும்னா, எல்லாரும் அதை பத்தி விவாதிச்சுதான் ஆகணும். இங்க நண்பர்கள் என் மேல சொல்லியிருக்கற நானும் ஒத்துகிட்டிருக்கற குற்றச்சாட்டு, நான் முதல் வகை தீர்வை இதுல சொல்லலை. ஆனா நிச்சயமா இரண்டாவது தீர்வுக்கு ஒரு அடியாவது எடுத்து வச்சிருக்கேன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. வாயே திறக்காம இருந்தால் பிரச்சனை இருக்குன்றதே மறந்து போயிட வாய்ப்பிருக்கு. அதுனால சரியாகற வரைக்கும் எல்லா குப்பைகளை பத்தியும் வாய் வலிக்க ஆக்கபூர்வமான வகையில விவாதிச்சுதான் ஆகணும் - அது இரட்டை டம்ப்ளர் முறையானாலும் சரி, காதலித்த குற்றத்திற்காய் பெண்களையும் அவர்களது குடும்பத்தையும் கேவலப்படுத்துவதானாலும் சரி. விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களே.

அது மட்டுமே இல்லைங்க. குப்பைகளை களைஞ்ச பின்னாலும் இந்த விஷயங்கள் ஆவணப்படுத்தப்படணும். நம்மோட அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சொல்லித்தரப்படவேண்டும். ஏன்னா, தப்பித்தவறிக் கூட மீண்டும் இந்த பழக்கங்கள் தலை தூக்கிடாம இருக்கணும் பாருங்க, அதுக்காக.

அதென்னமோ தெரியல கொஞ்ச நாளா பாசக்கார மக்கள் அப்பொப்ப வந்து கவிதையோட நிப்பாட்டிக்க வேண்டியதுதானே, வாய மூடிகிட்டு இருக்க வேண்டியதுதானே அது இதுன்னு ஏகத்துக்கும் அட்வைஸா பொழியறாங்க. என்ன அன்பு, என்ன அன்பு? ரொம்ப புல்லரிக்குது போங்க... ;)

said...

//

ஆக்கபூர்வமான வகையில விவாதிச்சுதான்

//
உங்களுக்கே காமடியா தெரியல?
இதுதான் ஆக்கப்பூர்வமான விவாதம்னா

"ஆணியே புடுங்கவேண்டாம்டா"

மேலும் சிலவரிகள் டபுள் மீனிங்ல வேர எழுதுறீங்க. நல்லதுல்ல.

said...

தேவ உதிப்தா, இந்த கதையை படிக்கும்போது அந்த குமார், அவரது அம்மா ஆகியோரது செயல் கீழ்த்தரமானது என்று உங்களுக்கு தோன்றவேயில்லையா? அந்த பெண்ணின் வலி உங்களுக்கு புரியவே இல்லையா? இது போன்ற சிந்தனைகளை தோற்றுவிக்க முயற்சிப்பது ஆக்கபூர்வமான ஒரு முயற்சியென்றே நான் நினைக்கிறேன். இது எந்த வகையில் உங்களுக்கு காமெடியாகிப்போனதென்று எனக்கு புரியவில்லை. அப்புறம் எங்கங்க இருக்கு அந்த டபுள் மீனிங் தர வரிகள்? கொஞ்சம் சொன்னீங்கன்னா திருத்திக்குவேன். ஏன்னா இன்டென்ஷனலா நான் எங்கயும் அப்படி எதும் எழுதலை. எனவே அப்படி பொருள் தரும்படியா எங்கயாவது இருக்குன்னு நீங்க நினைச்சால் தெளிவாவே சொல்லுங்க, திருத்திடுவோம் இல்லை நான் எந்த அர்த்தத்துல அங்க எழுதினென்னாவது விளக்கம் தர்றேன்.

said...

// அதென்னமோ தெரியல கொஞ்ச நாளா பாசக்கார மக்கள் அப்பொப்ப வந்து கவிதையோட நிப்பாட்டிக்க வேண்டியதுதானே, வாய மூடிகிட்டு இருக்க வேண்டியதுதானே அது இதுன்னு ஏகத்துக்கும் அட்வைஸா பொழியறாங்க. என்ன அன்பு, என்ன அன்பு? ரொம்ப புல்லரிக்குது போங்க... //

:)))

ஒரு ஆண் நேராகவோ பூடமாகவோ என்ன வேண்டுமாலும் எழுதலாம்! அதெல்லாம் இலக்கிய வகையைச் சாரும்! அப்படியே நல்லா இல்லாம கேவலமாகப் போனாலும் "நல்லதொரு புதிய முயற்சி"ன்னு பாராட்டப்படும்.

பெண்ணாக இருந்து எழுதினால் உடனே ஒரு தராசோடு வந்து தராதரத்தை அளந்து பார்க்க ஆரம்பிச்சிருவாங்க!! "அன்பு" காட்டும் மக்களை கண்டுக்காம உங்க பயணத்தை தொடர வாழ்த்துக்கள்...

said...

வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துக்களுக்கும் நன்றி இளவஞ்சி.

said...

ஓடிப்போன ஒரு பெண்ணின் குடும்பத்திலிருக்கும் மற்ற பெண்களின் வாழ்வு எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பதை நெருக்கமான வாசிப்பனுவத்தோடு சொல்லியிருக்கிறீர்கள். ஆனால்,அதை விவரிக்க கதைக்குள்ளாக நீங்கள் எடுத்தாண்டிருக்கிற சம்பவங்கள்(டீயை முகத்தில் ஊற்றுவது, கணவனின் படுக்கையறை திட்டல்..), உண்மையாகவே இருக்கலாம்/இருக்கும். ஆனால், அதன் மாதிரிகள் பல பலவற்றை ஏற்கெனவே பார்த்துவிட்டதால், ஒரு மாதிரி டிரமாட்டிக்காக இருக்கிறது. அதனையும் தாண்டி, அந்தப் பெண்ணின் மன வலியை வாசிப்பவரின் மனதுக்குக் கடத்தியது, உங்கள் எழுத்துக்கு சிறப்பு..!

said...

தெளிவான விமர்சனத்துக்கு நன்றி ஆழியூரான். அடுத்தடுத்த முயற்சிகளில் சுட்டியிருக்கற விஷயங்களை அவசியம் சரி செய்ய முயற்சிக்கிறேன். (இங்க உள்குத்து என்னன்னா, முயற்சிகள் தொடரும். எனவே மனசை திடப்படுத்திக்கோங்க,வேற வழியில்லை. :) )