Monday, May 28, 2007

கனிமொழியின் அரசியல் பிரவேசம்

இப்போதைய சூடான விவாதம் கனிமொழியின் அரசியல் பிரவேசம்தான். அதை பத்தி நாமும் கருத்து சொல்லலைன்னா எப்படிங்க? நம்ம கருத்தை யாரு கேட்டாலும் கேக்கலைன்னாலும் நம்ம கருத்து சொல்றதுன்றது எப்பவுமே நமக்கு ஒரு வழக்கந்தான். அதுலயும் இந்த ப்லாக் ஆரம்பிச்சப்புறம் ஒரு வியாதியாவே மாறி கருத்து கண்ணம்மாவா ஆயாச்சு(கருத்து கந்தசாமிக்கு பெண்பால் ஒன்னு வேணுமேன்னு யோசிச்சதுல கிடைச்சதுதான் இந்த க.க.).

சரி பேச ஆரம்பிச்ச விஷயத்துக்கு வருவோம். முதலில் ஒரு விஷயம். ஒரு பதவியிலிருப்பவரின் வாரிசு என்பதற்காகவே ஒருத்தருக்கு வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு தவறோ அதே அளவு தவறு அவருக்கு அதே காரணத்துக்காக வாய்ப்பு மறுக்கப்படுதலும். ஆனா இவரோட அவரை சம்பந்த படுத்தி மனசுக்குள்ள வந்து உக்காரற முன்முடிவுகளை தவிர்த்துட்டு பாக்கறதும் ஒரு கஷ்டமான விஷயம்தான். ஆக இந்த மாதிரி விஷயங்களில் இரு தரப்பிலிருந்தும் மன முதிர்ச்சி தேவைப்படுகிறது. உண்மையிலேயே திறமையிருந்தால் மட்டுமே தன் வாரிசை தன் துறையிலிறங்க அனுமதிக்க வேண்டும். அதுவும் அவருக்கு எந்த சலுகையும் வழங்கப்பட்டுவிடவில்லை என்று தெளிவாகவே பொதுமக்களுக்கு தெரியவைக்குமளவு ஒளிவு மறைவற்ற நடவடிக்கைகள் வேண்டும். இது வாரிசை களமிறக்குபவர்களுக்கு. தள்ளி நின்று பார்க்கும் மக்களுக்கு(குறிப்பாக பத்திரிக்கையாளர்கள்) தேவையானவை: முன்முடிவுகளை தவிர்த்து வாரிசுகளின் செயலை விமர்சித்தல். தந்தை/முன்னோடியோடே ஒப்பிட்டு எப்போதும் விமர்சிப்பது என்பதை ஒதுக்கி வைக்க வேண்டும். அப்பாவை அடியொட்டி ஏதேனும் செய்தால் சொந்த சிந்தனை இல்லை - அவர் நிழலில் வாழ்கிறார் என்று குமுற வேண்டியது. மாற்றாக ஏதேனும் செய்தால் தந்தையை மதிக்காது தாந்தோன்றித்தனமாக செயல்படுவதாக குதிக்க வேண்டியது. இரண்டுமின்றி ஒரு மூன்றாவது மனிதர் இதே விஷயத்தை செய்திருந்தால், எப்படி பார்ப்போமோ அப்படி பார்க்க பழக வேண்டும்.

சரி, இவையெல்லாம் வாரிசுகள் களமிறங்குதலை பற்றிய என் பொதுவான சிந்தனை. குறிப்பாக கனிமொழியை பற்றி பேசுவோம். ஒரு குறிப்பிடத்தகுந்த கவிஞர், பத்திரிக்கை துறை அனுபவம் உள்ளவர். எனினும் பெரும்பான்மை மக்களால் தந்தையை ஒட்டியே அறியப்படுபவர். இவர் நேரடியாக ஒரு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்படுவது எவ்வளவு தூரம் சரியானது? அநேகமாய் மத்திய அமைச்சராகவும் ஆகிவிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்த திடீர் பாய்ச்சல் தயாநிதி மாறனுக்கும் இப்போது கனிமொழிக்கும் மட்டுமே சாத்தியமாவது நிச்சயம் வாரிசு அரசியல்தான். ஸ்டாலினை பற்றி வெறும் வாரிசு அரசியல் என்று ஒற்றை வரியில் இப்படி கூற முடியாது. பல வருடங்களாக கட்சியிலும் அரசிலும் பணியாற்றி வருகிறார். எனவே அவரது குறை நிறைகளை நேரடியாக எடை போட முடியும். அவர் செயல்களை விமர்சிக்க முடியும். மேலும் தொடர்ந்து அவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளுக்கே இது வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தயாநிதி மாறனும் தேர்தலில் போட்டியிட்டாரே என்ற கேள்வி இங்கே எழலாம். இப்போது கனிமொழி அமைச்சராவது எப்படி எம்.பியாவதற்கு முன்னரே எளிதில் ஊகிக்கக்கூடியதாக இருக்கிறதோ அப்படியே தயாநிதி தேர்தலில் நிற்பதற்கும் முன்னரே அவர் அமைச்சராவார் என்பதும் உறுதியாகத்தெரியும். ஒரு சாதாரண வேட்பாளர் ஜெயிப்பதற்கும் அமைச்சராக பிரகாசமான வாய்ப்புள்ள ஒருவர் அந்த தொகுதியில் ஜெயிப்பதற்கும் எந்த அளவு வேறுபாடிருக்கும் என்பது சாதாரண வாக்காளருக்கும் தெரியும். எனவேதான் சோ போன்றவர்களுக்கும் கூட ஸ்டாலினின் அரசியலை பற்றி வாரிசு அரசியல் என்று ஒற்றை பார்வைக்குள் தள்ளிவிட முடிவதில்லை . ஆனால் முன்பு தயாநிதி விஷயத்திலும் சரி இப்போது கனிமொழி விஷயத்திலும் சரி, இந்த குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரமுண்டு.

ஆரம்பத்தில் எனக்கு அவர் மேல் அவ்வளவு நல்ல அபிப்ராயமெல்லாம் இல்லை. சுஜாதா, சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்களின் செல்லப்பிள்ளை என்கிற அளவில்தான் முதலில் அவர் எனக்கு அறிமுகமானார். அதிலும் சாரு நிவேதிதாவின் அதிகப்படியான புகழல்(அழகாய் இருக்கிறாய் பயமாயிருக்கிறது வகையறா) எனக்கு ஒரு விதமான எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தி வந்தது. அவர் கருத்து.காம் துவக்கிய போது கூட இதுவும் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் எனவே தோன்றியது. ஆனால் ஒரே விஷயம் அவரை பற்றின எனது கருத்தை மாற்றிப்போட்டது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரதம்தான் அது. சாதாரணமாய் பழ. நெடுமாறனோ அல்லது வை.கோவோ இத்தகைய உண்ணாவிரதத்தை நடத்தினால் பெரிது யாரும் அதை படுத்தியிருக்கப்போவதில்லை. ஆனால் கலைஞர் சென்னை வந்த ஈழ பிரதிநிதிகளை சந்திப்பதை கூட தவிர்த்து வந்த நிலையில் அவர் மகளான கனிமொழி பகிரங்கமாக பந்தலில் உட்கார்ந்து உண்ணாவிரதமிருந்தபோது தன் கருத்துக்களை உணர்வுகளை யாருக்காகவும் வளைத்துக்கொள்ளாதவராய் இருக்கிறாரே என்று ஆச்சரியமானது. அதற்கு பிறகு அவரது கருக்கும் மருதாணி புத்தகத்தை (எப்போதோ ஏதோ ஒரு மனநிலையில் வாங்கி ஒரு ஒரமாய் போட்டு வைத்திருந்தது) எடுத்து ஒரே மூச்சில் படித்தேன். அவரது எழுத்துக்களின் மீது ஒரு ஆர்வத்தை தூண்டியது அது. தோழி.காமில் அவர் எழுதிய தலையங்கங்கள் எல்லாவற்றையும் தேடி பிடித்து படித்தேன். தந்தையின் சாயல் சிறிதுமின்றி அழகாய் தெளிவாய் எளிமையாய் இருக்கும் அவரது எழுத்துக்கள் இப்போது என் விருப்பமானவை பட்டியலில் இருக்கிறது. அடுத்த சந்தர்ப்பங்களில் அவரது புத்தகங்களை முடிந்த அளவு வாங்க குறித்து வைத்திருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கு கனிமொழி மீது மிகுந்த அபிமானமுண்டு. ஒரு தெளிவான சிந்தனையும் நல்ல ஆளுமையும் உடையவர். ஆனால் அவரை இப்படி அவசர கதியில் அரசியலுக்கு இழுத்து வந்து அவரது திறமைகளை விட முதல்வரின் மகள் என்ற ஒரே தகுதியில்தான் அவர் இந்த உயரத்தை எட்டினார் என்பது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட முதல்வரே காரணமாகிவிட்டாரோ என்பதுதான் என் எண்ணம்.

ஆனால் அதைவிடவும் வருத்தமான விஷயம் ஒரு பெண் அரசியலுக்கு வந்தால்தான் என்றில்லை, வரப்போவதாய் தெரிந்தாலே போதும் நாங்கள் அவர் உடலமைப்பை பற்றியோ இல்லை அவரது நடத்தை பற்றியோ அஷ்டோத்திர சஹஸ்ரநாம அர்ச்சனைகளையெல்லாம் ஆரம்பித்து விடுவோமாக்கும் என்று தொடை தட்டி கிளம்பியாயிற்று ஒரு கும்பல். ஏதோ ஒரு பேட்டையின் டீக்கடையில் இல்லைங்க, மெத்த படித்த நாகரீக கனவான்கள் உலாவும் தமிழ் வலையுலகாகிய புண்ணிய பூமியிலேயே இந்த கதிதான். இங்கனயே இப்படின்னா எஸ்.எஸ். சந்திரன் தொடங்கி இதுக்காகவே மானியம் வாங்கி வாழ்ந்துகிட்டிருக்கற கும்பல் நாளைக்கு என்ன என்னல்லாம் பேசப்போகுதோ தெரியலை. அதை நினைத்தால்தான் குலை நடுங்குகிறது(இங்கே கனிமொழி தி.மு.க சார்பா களமிறக்கப்பட்டிருப்பதால்தான் அ.தி.மு.க ஆட்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். இதே ஜெயலலிதாவை பற்றி பேச ஆரம்பித்தால் வெற்றி கொண்டான் வகையறாக்களும் இதே ரீதியில்தான் பேச்சு சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வார்கள் என்பதை அறிவேன் நான். எனவே எனக்கு உடனடியாக எந்த கட்சி சாயத்தையும் பூசிடாதீங்க மக்கா...).

சரி, கடைசியா நீ என்னதான் சொல்ல வரேன்னு பொறுமையிழக்கும் கண்மணிகளே, பொறுமை. என் எழுத்தை படிக்கறதுன்னு முடிவு பண்ணி இந்த லிங்கை க்ளிக்கிட்டீங்க இல்ல, அப்புறம் இப்போ வந்து ஃபீல் பண்ணி என்ன பிரயோசனம்? சரி, சரி, ரொம்ப அழுவாதீங்க. இதோ மாரல் ஆப் தி ஸ்டோரி - கனிமொழியின் திட்டமிடல், சிந்தனை போன்றவற்றில் எனக்கு நிச்சயம் நம்பிக்கை உண்டு. ஆனால் அவரது வருகை தவறான பாதையில்தான் அமைந்திருக்கிறது. அதனால் இந்த குற்றச்சாட்டையும் மீறி முதல்வரின் தேர்வு சரியே என பெரும்பான்மை மக்களை நம்பவைக்கும் வண்ணம் நடந்து கொண்டாக வேண்டிய கட்டாயம் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அதை அவர் செய்வார் என்றே நான் நம்புகிறேன். அவரேனும் ஒரு கண்ணியமான அரசியல்வாதிக்கு முன்னுதாரணமாக திகழ்வார் என்று நம்புவோமாக. நம்பிக்கைலதானேங்க நம்ம வாழ்க்கையே ஒடுது?

52 comments:

said...

நல்லா எழுதியிருக்கீங்க. முன்முடிவுகள் இல்லாம சிச்சுவேஷனை அலசியிருக்கிற விதம் சிறப்பா இருக்கு.

said...

பினாத்தலாரை வழிமொழிகிறேன்....

said...

சுரேஷ், பிரகாஷ் இருவரின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

said...

பாராளுமன்றத்தில் மகளிர்க்கு 33 விழுக்காடு கொண்டுவருவதற்கே படாத பாடு பட வேண்டியிருக்கிறது.இந்த நேரத்தில் கனிமொழியின் அரசியல் பிரவேசம் காலத்தின் கட்டாயம்.இதை யார் எப்படியல்லாம் விமரிசித்தாலும் மகளிராகிய நாம் மனமுவந்து வரவேற்போம்.

said...

தெளிவான அலசல். முன்முடிவுகள் இல்லாமல் அணுகும் பக்குவம் அரிதாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக படித்த்த வலைப்பதிவர்களிடம். ஏறத்தாழ மக்கள் தொகையில் சரிபாதி இருக்கும் பெண்கள் நம் ஜனநாயக நடைமுறையான அரசு அதிகாரங்களில் இடம் பெற மிகக்கடுமையாகவே போராட வேண்டியிருக்கிறது. மிக அரிதான விதிவிலக்குகள் தவிர்த்து வாரிசுகளாகத்தான் அரசியல் அரங்கில் நுழையும் வாய்ப்புகள் கிடைக்கிறது. பெண்கள் இன்னும் விழிப்புணர்வு அடையவேண்டியதன் அவசியத்தையே இது சுட்டிக் காட்டுகிறது. தனக்கு கிடைக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்வதோடு தனது திறமையும் கனிமொழி நிரூபிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாரிசு அரசியலோ இன்னும் என்ன பிறவோ, பெண்கள் அரசியலில், அரசு அதிகாரங்களில் முன்னிலைக்கு வருவது ஜனநாயக நாடான இந்தியவிற்கு மிகவும் அவசியமானது.இந்திரா காந்தியைத் தவிர்த்து கடந்த 15 - 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டேயேமானால் விரல்விட்டு எண்ணக்கூடிய பெண் தலைவர்களே அதிகார மையங்களில் இடம் பிடித்திருக்கிறார்கள். ஜெயலலிதா, மாயாவதி, சோனியா காந்தி, ராப்ரி தேவி, இப்போது கனிமொழி.

said...

நல்லா பளிச்சுனு எழுதி இருக்கீங்க லக்ஷ்மி.

கிட்டத்தட்ட இதெ மனநிலைதான் எனக்கும். பெண்கள் அதுவும் புத்திசாலிப் பெண்கள் அரசியலில் இருந்தால் நாம் முன்னேற வழி உண்டு.

முறை பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இதுதான் நம்ம ஊரு நிலைமை.

said...

லஷ்மி
நன்றாக எழுதி இருக்கிறீர்கள். கனிமொழியின் சில கவிதைகள் மனதில் நன்றாக பதிந்து போயிருக்கிறது. பிரபல்மானவரின் பெண் என்பதால் அவ்வர் கொடுக்கும் விலைபற்றி முன்பு யாரோ பதிவொன்றில் பேசிய நினைவு.

said...

நல்ல அலசல். கிடைத்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்று பார்க்க வேண்டும். வாரிசாக இருந்தாலும் ஒரளவு கை கொடுக்கத்தான் முடியும். திறமையிருந்தால்தான் முன்னே வரமுடியும்.
அதேபோல வேறொரு தளத்தில் இராதிகா செல்விக்கு கிடைத்த வாய்ப்பை என்ன சொல்வீர்கள் ? அவரும் படிப்படியாக வராமல் ஒரே எட்டில் அமைச்சரானவர்தானே ?
வாய்ப்பு கிடைக்க காலம் கனிய வேண்டும், கிடைத்த வாய்ப்பை கைகொள்ளல் வேண்டும்.

said...

//ஆனால் அதைவிடவும் வருத்தமான விஷயம் ஒரு பெண் அரசியலுக்கு வந்தால்தான் என்றில்லை, வரப்போவதாய் தெரிந்தாலே போதும் நாங்கள் அவர் உடலமைப்பை பற்றியோ இல்லை அவரது நடத்தை பற்றியோ அஷ்டோத்திர சஹஸ்ரநாம அர்ச்சனைகளையெல்லாம் ஆரம்பித்து விடுவோமாக்கும் என்று தொடை தட்டி கிளம்பியாயிற்று ஒரு கும்பல்//


இதை இனிதே தமிழ்மணத்திலேயே ஆரம்பித்து வைத்து விட்டார்கள்

http://puthuyugam.blogspot.com/2007/05/blog-post_26.html

இந்த பெருமை மதுசூதனனையே சேரும்.


லஷ்மி உங்கள் பதிவு நடுநிலையாக இருக்கிறது

நன்றி

said...

//தயாநிதி நட்சத்திர அமைச்சரான பிறகு
நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டார்...//

தவறான தகவல்;திருத்தவும்!

நல்ல பதிவு;பாராட்டுகள்!

said...

கனிமொழி திறமையாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கலைஞரின் மகள் என்ற ஒற்றை காரணமில்லையெனில் அவர் எம்.பி. ஆகியிருக்கமாட்டார். இங்கு திறமையை விட சொல்பேச்சுக் கேட்கும் விசுவாச நாய்குட்டியொன்று தி.மு.க. தலைmaiக்குத் தேவைப்படுகிறது. அது இரவலாயில்லாமல் சொந்தமாய் இருந்தால் சேதாரம் குறையும்.. அவ்வளவே..

பெருஞ்சுமையை தோளில் சுமந்து டெல்லிக்குப் போகும் கனிமொழி விரைவிலேயே தன் தோளை மேலும் அதிக சுமைக்கு தயார் படுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். விடுதலைப் புலிகள் விடயத்தில் இதுவரைக்கும் கனிமொழி காட்டிய சுதந்திரமான கருத்தைக் கூட இனி வெளிப்படுத்த இயலாமல் போகவே வாய்ப்பு அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன்.

அதுசரி.. //அஷ்டோத்திர சஹஸ்ரநாம அர்ச்சனை//
இதுக்கு என்ன அர்த்தம்..?

said...

நல்லா எழுதியிருக்கீங்க லகஷ்மி

கனிமொழி எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்.ஆரசியல்வாதியா எப்படி செயல்படுவாங்கன்னு தெரியல..அப்படி சரியா செயலபடலானா மட்டும் என்னத்த கிழிச்சிட போறோம் நாம விட்டத் தள்ள வேண்டியதுதான் :)

said...

கருத்து தெரிவித்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

sksanu, உங்கள் கருத்தை ஒத்துக்கறேன். ஆனா அவரை கொண்டு வருவதற்கு இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம் என்பதுதான் என் வாதமே. எப்படியும் இன்னும் 4 வருடங்களுக்கு இவர்களிடம் அதிகாரமிருக்கப்போகிறதெனும் போது இப்படி அவசரகதியில் கொண்டுவந்து அவப்பெயர் வாங்கி கட்டிக்கொள்வானேன் என்பதுதான் என் ஆதங்கம். ஒரு பெண் அதுலயும் அவர் தகுதியானவர் என்பதில் எனக்கு எந்த விமர்சனமும் இல்லை, அப்படிப்பட்டவர் ஒரு பதவிக்கு வருவதில் எனக்கும் நிச்சயம் மகிழ்ச்சியே. வாரிசு அரசியலெனும் குற்றச்சாட்டுக்கு இவர் இப்போது இலக்காகியிருப்பதால், அது நியாயமாகவும் இருப்பதால் அவரது தார்மீகப்பொறுப்பு இன்னும் அதிகமாயிருக்கிறது என்றே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஓட்டப்பந்தயத்திற்கான ஒடு தளம் வட்ட வடிவிலிருப்பதால், கடைசி உள் வட்டத்திலிருப்பவரின் இலக்கு வெளிவட்டத்திலிருப்பவரது இலக்குடன் நேர் கோட்டிலிருக்காது. உள் வட்டத்தின் சுற்றளவு சிறியதாயிருப்பதால் எப்படி அவரது இலக்கு சற்றே தள்ளியிருக்குமோ அப்படியே இப்போது கனிமொழி சாதித்தாக வேண்டியது மற்றவரோடு ஒப்பிட்டால் அதிகமிருக்க வேண்டும் என்பதையே இங்கு நான் சொல்கிறேன்.

//மிக அரிதான விதிவிலக்குகள் தவிர்த்து வாரிசுகளாகத்தான் அரசியல் அரங்கில் நுழையும் வாய்ப்புகள் கிடைக்கிறது.// உண்மைதான் முத்துக்குமரன். பெரும்பாலும் அப்படித்தான் அமைகிறது. அதுவும் கூட வேறு வழியில்லாத போதுதான் நிகழ்கிறது. கனிமொழி விஷயத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன், மத்தியில் மாறன் மாநிலத்தில் ஸ்டாலின் என்றுதான் ஆரம்பத்திலிருந்தே முதல்வர் யோசித்து வருகிறார். இத்தனைக்கும் அவரது பொதுவாழ்வில் ஈடுபாடென்பது வெகுநாட்களாகவே இருந்து வரும் ஒன்றுதான். மாறனுக்கு பிறகு தயாநிதியை கொண்டு வர நினைத்தபோது கூட அவருக்கு கனிமொழியை பற்றி தோன்றவில்லையே. வாரிசுரிமையே இருந்தாலும் கூட வேறு வழியே இல்லாத போது மட்டுமே பெண்களுக்கான அரசியல் வாய்ப்புகள் சாத்தியமாகின்றன என்பது மறுக்க முடியாத உண்மைதான். எனவே அதை முடிந்த அளவு நன்றாக பயன்படுத்திக்கொண்டேயாக வேண்டும். செய்வார் கனிமொழி என்றே நம்புகிறேன்.

பாராட்டுக்கு நன்றி வல்லி அம்மா. பத்மா, அதே விஷயத்தை பற்றி வாரமலர் அந்துமணி கூட ஒரு முறை எழுதியதாய் நினைவு.

//வாரிசாக இருந்தாலும் ஒரளவு கை கொடுக்கத்தான் முடியும். திறமையிருந்தால்தான் முன்னே வரமுடியும். // மணியன், இதை நிச்சயம் ஒப்புக்கொள்கிறேன். ராதிகா செல்விக்கு கிடைத்த வாய்ப்பு வாரிசு அரசியலென்ற தளத்தில் வருமென்று எனக்கு தோன்றவில்லை. வெங்கடேச பண்ணையார் நேரடி அரசியலில் இருந்தவரல்ல. எனவே அவரது கணவரின் மரணத்திலெழுந்த அனுதாபத்தை உபயோகித்துக்கொள்ளும் சந்தர்ப்பவாத அரசியலெனும் தலைப்பின் கீழ்தான் அதை விவாதிக்க வேண்டும்.

ஸ்ரீசரண், மதுசூதனனது தளத்தில் மட்டுமல்ல, மகேந்திரனின் தளத்திலும் சில அனானிகள் தங்களது கைவரிசையை காண்பித்திருக்கிறார்கள். சொல்லப்போனால் அதை படித்த பின் தான் இதை பற்றி எழுதுமெண்னமே எனக்கு வந்தது.

சிவஞானம் ஜி, பாராட்டுக்கு நன்றி. என்ன தவறென்று விளக்கமாகவே சொல்லவும். குறிப்பிட்டு சொன்னீர்களானால், கண்டிப்பாய் திருத்தி விடுகிறேன்.

ஆழியூரான், அர்ச்சனை என்பது இறைவனை துதிப்பதற்காய் செய்வது என்பது நாமனைவரும் அறிந்ததே. அதில் அஷ்டோத்திரமென்பது 108 முறையும் சஹஸ்ரநாமமென்பது 1008 முறையும் இறைவனது வெவ்வேறு பெயர்களை சொல்லி போற்றி என்றோ நமக என்றோ முடிப்பதுண்டு. ஒவ்வொரு முறையும் மலர்களையோ குங்குமத்தையோ இறைவனது திருப்பாதங்களில் சமர்பித்தவாறே இது நடக்கும். எனவே மனிதர்களை புகழ்தலை/இகழ்தலையும் கூட அர்ச்சனை என்றே நக்கலாக குறிப்பதுண்டு. அதைத்தான் இங்கே உபயோகித்துள்ளேன்.

//அப்படி சரியா செயலபடலானா மட்டும் என்னத்த கிழிச்சிட போறோம்// அதென்னவோ நிஜம்தான் அய்யனார். என்ன, கொஞ்சம் புலம்பிட்டு விட்டுட்டு வேலைய பாக்க வெண்டியதுதான்.

said...

மிக நல்ல விரிவான நோக்கு.

said...

இந்தக் கட்டுரையின் சாரம், உயர்ந்த பண்பு கொண்டவர்கள், படித்தவர்கள் அதிகாரத்தில் பங்கு கொண்டவர்கள் நிறைய மாற்றங்கள் வந்துவிடும் என்ற கருத்துக்கு இணையானது தான் தெளிவான பெண்கள் அரசியலுக்கு வந்தால், நிலைமையில் பெரிய மாற்றம் வந்துவிடும் என்ற கருத்தும்.

முன்பெல்லாம், மக்கள் நலனுக்கு ஆதரவாக தீட்டம் தீட்டுவதாக நாடகம் போடுவார்கள். இப்பொழுது, பச்சையாகவே பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சட்டம் இயற்றுகிறார்கள்.

நடப்பு இந்தியா எப்படி இருக்கிறது என்பதை, 31.03.2007-ல் தெகல்கா இதழில், அருந்ததிராய் அவர்களின் பேட்டி வெளிவந்திருக்கிறது. இணையத்தில் தேடிப்படியுங்கள்.

இனிமேல், மாற்றம் எல்லாம் சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் வெளியே தான் இருக்கிறது.

said...

கலக்கல்... அஔழகான அலசல்... :)

said...

குரங்கு ராதாவுக்கு என்னாச்சு குந்தானி ராதவுக்கு என்னாச்சுன்னு எழுதிகிட்டு இருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட கருத்துகள் இருக்கு, ஏன்னா நான் பேசிகலா பிறப்பால் ஒரு தி.மு.க காரன். நான் தைரியமாக சில கருத்துகள் சொல்ல முடியாமைக்கு காரணம் சில முகமிலிகள் தொல்லைதான். தைரியமாக நீங்களே சொன்ன பிறகும் நான் மௌனம் சாதித்தால் கோழையாவேன்.

1. அரசியலுக்கு கனிமொழி 1%கூட லாயக்கு இல்லை...காரணம்...கவிதை எழுத தெரிவது மட்டும் அரசியலுக்கு அஸ்திவாரம் இல்லை.
2.நீங்க சொன்னது போல் திட்டமிடுதல் என்பது கனிமொழிக்கும் கிடையாது அவங்க அம்மாவுக்கும் கிடையாது. அவங்க தனிப்பட்ட வாழ்க்கையே உதாரணம்.

கொஞ்சம் கொஞ்சமா வர்ரேன்! நடுவே ஆணியும் பிடுங்கனும்.....10 நிமிஷம் பின்ன வர்ரேன்..

said...

//2.நீங்க சொன்னது போல் திட்டமிடுதல் என்பது கனிமொழிக்கும் கிடையாது அவங்க அம்மாவுக்கும் கிடையாது. அவங்க தனிப்பட்ட வாழ்க்கையே உதாரணம்.//
அபத்தமாக இருக்கிறது அபி அப்பா. உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை. திட்டமிடல் கனிமொழிக்கும் அவர் தாயாருக்கும் இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆண்-பெண் பந்தத்தில் பெண்களை மட்டுமே குற்றாவாளியாக்கும் மனப்பாங்காகத்தான் இருக்கிறது. ஒருவரின் அந்தரங்க வாழ்வைத் தீர்மானிப்பது அவரவர் சுயவிருப்பம். அதைத் தகுதி குறைவாக காரணம் காட்டுவது என்பது மிகவும் தவறாகும்.ஏன் அருவருப்பானதும் கூட.
//1. அரசியலுக்கு கனிமொழி 1%கூட லாயக்கு இல்லை...காரணம்...கவிதை எழுத தெரிவது மட்டும் அரசியலுக்கு அஸ்திவாரம் இல்லை.//
அரசியலில் பங்கெடுப்பது என்பது ஓவ்வொருவருக்கும் இருக்கும் நியாயமான உரிமை. திறனை அறியும் முன்பு தகுதியை தீர்மானிப்பது முறையற்றது. கவிதை எழுத தெரிவதுமட்டும் அரசியலுக்கு அஸ்திவாரம் இல்லை என்பதை வன்மையாக மறுக்கிறேன். கவிஞனும் இச்சமூகத்தின் அங்கமே. அவனுக்கும் அரசியல் நிலைப்பாடுகள் உண்டு.

மொத்தத்தில் மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது உங்கள் பின்னூட்டம்

said...

//என்ன தவறென்று விளக்கமாகச் சொல்லுங்கள்....//

1)தயாநிதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. பொதுத்தேர்தலில் மத்தியசென்னைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டார்.

)அவர் நட்சத்திர அமைச்சர் ஆகிய பிறகு போட்டியிடவில்லை.தேர்தலில் வென்ற பிறகே அமைச்சர் ஆனார்.

(அமைச்சர் ஆன பிறகு செய்தி ஊடக பலத்தினால் "நட்சத்திர அமைச்சர்"
பிம்பம் உருவாகியது)

said...

இந்த மாதிரி விஷயத்தில நடுநிலையாக பேசுபவர்களை காண்பதே ரொம்ப அரிதாகிக் கொண்டிருக்கிறது. நல்லதொரு நடு நிலையான பதிவு.

//ஆனால் ஒரே விஷயம் அவரை பற்றின எனது கருத்தை மாற்றிப்போட்டது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரதம்தான் அது.//

எனக்கும் முதன் முதலில் அவர்கள் மீது ஒரு மரியாதை வந்ததே இந்த பேட்டியைப் பார்த்து விட்டுதான். "விடுதலைப் புலிகள் செய்வது சரியா தவறா என்பது எனக்குத் தெரியாது. அந்த அளவிற்கு அரசியல் புரிதல் எனக்கு குறைவே. ஆனால் அங்கு என்னுடைய சகோதரர்கள் கண்னீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி மட்டுமே என்னுடைய கவலை"

இந்த வரிகள் மனிதாபிமானமுள்ள ஒரு நல்ல பெண்மணியாக அவரை எனக்கு காட்டியது. அதற்குப் பின்பு அவர் அளித்த பல பேட்டிகள், சங்கமம் உட்பட செய்த பல செயல்கள், வெறுமனே கலைஞரின் மகள் என்று மட்டுமே தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாது, சுய சிந்தனை கொண்ட ஒரு படைப்பாளியாக அவர் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் திடீரென்று எம்.பி பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப் படுவதும், இவரும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை ஏதும் இல்லாமல், சர்வ சாதாரணமாக "என்னால் முடிந்ததைச் செய்வேன் என்று பேட்டி அளிப்பதும்", எனக்கென்னவோ இந்த இடத்தில் அவர் ஒரு சாதாரண அரசியல்வாதி போல காட்சி தருகிறார்.

இதற்கு முன்பு கூட கற்பு, இலங்கைத் தமிழர்கள் விஷயமங்கள் உட்பட பல முறை இவர் கலைஞர் கருத்திற்கு மாற்றுக் கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் இனிமேல் இதை எல்லாம் இவரிடமிருந்து எதிர் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.

ஆளுமைத் திறன் கொண்ட பெண்கள் அரசியலிற்கு வருவது என்பது மிகக் குறைவுதான். ஆனால் இவர் அட்லீஸ்ட் ஒரு 2 வருடமாவது கட்சியில் நட்சத்திர உறுப்பினராக இருந்து விட்டு அப்புறம் பதவியைப் பெற்றிருக்கலாம்.

ஆனால் அதற்காக அவரது அம்மாவுக்கு முடிவெடுக்கும் திறன் கம்மி. இவரும் அதைப் போன்றே என்பது எல்லாம் மிகத் தவறான (மோசமான) வாதம்.

இந்த வேளையில் எனக்கு தேவை இல்லாமல் ஒரு சந்தேகம். ஒரு வேளை ராதிகா செல்வி கவிஞராக இருந்திருந்தால், நாம் அவரையும் மதித்திருப்போமோ?

said...

சாக்ரடீஸ், ஒரு சமூகம் ஒடுக்கப்படும் போது அதிலிருந்து ஒருவருக்கு ஆட்சியில் பிரதிநிதித்துவம் அளித்தால் அவர் அந்த சமூகத்தின் பிரச்சனைகளை நன்கு உணர்ந்திருப்பதனால் அவர்களை முன்னேற்ற முடிந்த அளவு முயற்சிப்பார் என்பது காலம் காலமாக நிலவி வரும் ஒரு நம்பிக்கை. வெறுமனே படித்தவர் என்பதால் மட்டுமே எனக்கு அவர் மேல் எதிர்பார்ப்பில்லை. தன் கருத்துக்களை தந்தைக்கு தர்மசங்கடம் விளையுமெனினும் தயங்காது உரைத்தவர் என்பதால் நான் அவரது துணிவை நம்புகிறேன். மேலிடத்து ஆதரவு இருப்பதால் அவ்வளவாக வளைந்து கொடுக்கத்தேவையிருக்காதென்றும் நம்புகிறேன். பார்ப்போம் அவரது செயல்பாடுகள் எப்படியிருக்கிறதென.

அபி அப்பா, உங்க மொத்த கருத்தையும் சொல்லி முடிங்க. பிறகு என் பதிலை சொல்றேன். ஆனா இப்போ ஒரே ஒரு சந்தேகத்தை மட்டும் சொல்லிக்கறேன். நீங்கன்னு இல்லை, அன்னிக்கு ஒரு பேட்டில தயாநிதி மாறன் கூட தான் பிறப்பால் ஒரு தி.மு.க காரன் என்று சொன்னார். தி.மு.கவை சேர்ந்த ஒருத்தருக்கு பிறந்தால் நீங்களும் பிறப்பால் தி.மு.க என்று சொல்லிக்கொள்வது எங்கேயோ இடிப்பது போல இல்லையா? வார்த்தைக்கு வார்த்தை வர்ணாசிரம தர்மத்தை எதிர்ப்பதுதான் தி.மு.கவின் கொள்கை என்று சொல்கிறார் உங்க தலைவர். ஆனா நீங்கள் எல்லாரும் என்னடாவென்றால் இப்படி வார்த்தைகளை விடறீங்க. யோசியுங்களேன்.

said...

இன்னிக்குன்னு பார்த்து ஆணி ஜாஸ்தியா இருக்கு. ஆனாலும் முத்துகுமரனிடம் போனில் விவாதம் தொடர்கிறது.

பிறப்பால் திமுக என்று சொல்பவர்கள் எப்போது தெரியுமா அப்படி சொல்வார்கள்? கிட்டத்தட்ட விளிம்பு நிலையில் இருக்கிறோம் என்று பொருள்.

கொஞ்சம் பிறகு வருகிறேன்!

said...

சிவஞானம்ஜி, சரி செய்துவிட்டேன். நீங்கள் சொல்வது போல் ஊடகங்களின் மூலம் அவர் அமைச்சராவார் என்பது தெளிவாக மக்களிடையே பரப்பப்பட்டுவிட்டது தேர்தலுக்கு முன்பே. அதைத்தான் சரியாக நினைவில்லாத நிலையில் தவறாக குறிப்பிட்டுவிட்டேன். சுட்டி காட்டியமைக்கு நன்றி.

அபி அப்பா, அப்படியே அந்த விவாதத்தை நேரம் கிடைக்கும் போது இங்கேயும் போட்டு விடுங்கள். ஏனெனில் நானும் முத்துக்குமரன் சொல்வதையே ஆதரிக்கிறேன். எனவே அவரது கேள்விகளுக்கான உங்கள் பதில்களை அறிய ஆவல்.

said...

//தனிப்பட்ட முறையில் எனக்கு கனிமொழி மீது மிகுந்த அபிமானமுண்டு.//

100% ஒத்துப்போகிறேன்.

said...

அபிஅப்பா உங்ககிட்ட இருந்து நானும் எதிர்பார்க்கல இதை ..வாங்க!வாங்க!! வகையா மாட்னிங்க இன்னிக்கு..;)

எனக்கு சில விஷயங்களை தெளிவு படுத்துங்களேன்..அரசியல்வாதியாக அடிப்படை தகுதி என்னென்ன?
நம் பார்லிமெண்டில் அங்கம் வகிக்கும் நபர்களின் பின்புலம் ஒரு நாள் ஒரு மடலில் படிக்க நேர்ந்தது.வன்புணர்ந்தவன்,கொலைகாரன்,திருடன்,மோசடி யில் சிக்கியவன் ரெண்டு பொண்டாட்டிக்காரனென அங்கம் வகிக்கும் பெரும்பாலான கனவாண்கள் சமூக விரோதிகள்.அந்த பழைய மடலை தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைத்தால் இங்கிடுகிடுகிறேன்.ஏன் பககம் பக்கமாய் வசனம் பேசி எம்.எல்.ஏ ஆன ஹீரோ குடித்துவிட்டுத்தான் போகிறார்..இந்த கருமத்த எல்லாம் ஒப்பிடும்போது கவிதை எழுத தெரிவதே மிகப்பெரிய தகுதி..அந்த வகையில் கனிமொழிக்கு ஜே!!

said...

பாரதிய மாடர்ன் ப்ரின்ஸ், பொன்ஸ் , நந்தா உங்களனைவருக்கும் என் நன்றி.

நந்தா, ராதிகா செல்வி கவிஞராக இருந்திருந்தால் என்றில்லை ஏதேனும் ஒரு வகையில் அவர் பொது வாழ்வுடன் தொடர்புடையவராயிருந்து - ஒரு சமூக சேவகராகவோ இல்லை குறைந்த பட்சம் அந்த கட்சியின் அடிப்படை தொண்டராகவேனும் ஆரம்பத்திலிருந்து இருந்து வந்திருப்பாரேயானால் யாரும் அவரது வருகையை குறை சொல்லப்போவதில்லை. மேலும் அவரது கணவரும் நேரடியான அரசியலில் ஈடுபட்டவரல்ல. ஒரு தாதாவாகவே அறியப்பட்டவர். அவர் தனது ரவுடித்தனங்களுக்காக கொல்லப்படவில்லையென்பதும் முன்னாள் அமைச்சர் ஒருவருடனான தனிப்பட்ட விரோதத்துக்காகத்தான் கொல்லப்பட்டாரென்பதும் ஊரறிந்த விஷயங்கள்தான். ஆனால் இதற்காக ஏதோ கோவலனுக்காக நியாயம் கேட்ட கண்ணகியைப்போல அவரை சித்தரித்து எம்.பியாக்கி இப்போது ஜாதி அடிப்படையில் சரத்குமார் தலையெடுத்துவிடாதிருக்கவே அவருக்கு மந்திரி பதவியும் தந்து அழகு பார்க்கும் போது அவருக்கென என்ன தனிப்பட்ட சிந்தனையும் செயல்திட்டமும் இருக்க முடியுமென்று நாம் நம்புவது? எந்த அடிப்படையில் அவரிடம் ஒரு கண்ணியமான அரசியலை எதிர்பார்ப்பது?

said...

//ஆனால் இதற்காக ஏதோ கோவலனுக்காக நியாயம் கேட்ட கண்ணகியைப்போல அவரை சித்தரித்து எம்.பியாக்கி இப்போது ஜாதி அடிப்படையில் சரத்குமார் தலையெடுத்துவிடாதிருக்கவே அவருக்கு மந்திரி பதவியும் தந்து அழகு பார்க்கும் போது அவருக்கென என்ன தனிப்பட்ட சிந்தனையும் செயல்திட்டமும் இருக்க முடியுமென்று நாம் நம்புவது?//

உண்மைதான் அதற்கு மேல் அவரிடமிருந்துவேறு எதையும் எதிர் பார்க்க முடியாதுதான்.

எது எப்படியோ, கனிமொழியின் கையைக் கட்டிப் போட்டாயிற்று. கருத்து.காம் நடத்திய அவருக்கே இனி கருத்து சுதந்திரம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.

பின் வரும் காலங்களில் கனி மொழி கூட "கட்சி பொதுக்குழு முடிவு செய்யும்", "கட்சியின் கொள்கைகளை மீறி நான் எதுவும் செய்ய முடியாது" என்பது போன்ற அறிக்கைகள் விடலாம். அல்லது சுயம் மிகுந்த படைப்பாளியாக பெண்ணியம், விடுதலைப் புலிகள் போன்ற ஏதேனும் ஒரு விஷயத்தில், மாற்றுக் கருத்தைக் கூறி தயாநிதியைப் போல தூக்கி எறியப் படலாம் (அல்லது ஓரங் கட்டப் படலாம்).

பல கேள்விகள்...... காலம்தான் பதில் சொல்லும். (வேறு ஒன்றுமில்லை. ஒரு எழுத்தாளி சுயம் தொலைத்து விடக் கூடாதே என்ற ஆதங்கம்தான்)

said...

ஒரு பெண்..கவிஞர்..

//கனிமொழியின் திட்டமிடல், கருத்து, சிந்தனை //

அவர் திட்டமிட்டு என்ன சாதித்து விட்டார்னு எனக்கு இன்னும் புரியவில்லை...ஒரு நாள் கிராமிய கூத்து ஞாபகம் வருது..அது தவிர வேறு எதுவும் ஞாபகத்துக்கு வரலை..அந்த கிராமிய கூத்து...திட்டமிடப்பட்டு பலன் அளிக்க வேண்டியவன்களுக்கு பலன் அளித்ததா தெரியலை..

அவருடைய நண்பருக்கு தேர்தலில்..சீட்டு வாங்கி கொடுத்தது..அதையும் அவருடைய சாதனை பட்டியல்ல சேர்க்கலாமா?

"கருத்து"...ஒரு அரசியல் விளம்பரத்திற்காக என்பது என் எண்ணம்.

இந்த ராஜ தர்பாரில்..இவரும் ஒரு அடிவருடி/சந்தர்ப்பவாதி ஆகவே தெரிகிறார்.

//ஒரு கண்ணியமான அரசியல்வாதி// எனபது உங்கள் அதீத கற்பனை. or Make belief...

said...

//ஆனால் ஒரே விஷயம் அவரை பற்றின எனது கருத்தை மாற்றிப்போட்டது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரதம்தான் அது//

பதிவு நல்ல முறையில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும், ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் மேம்போக்காகத் தெரிகிற விஷயங்களை கனிமொழியின் தகுதிகளாக தாங்கள் முன் வைத்திருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் 'ஜெகத் கஸ்பர்' (சங்கமம் புகழ்) எனப் படும் விடுதலை புலிகளின் கைக்கூலி. இவரது தொழில் பல நாடுகளிலிருந்தும் புலிகளுக்கு சொத்து மற்றும் ஆதரவு சேர்ப்பது. கருணாநிதியின் புலிகள் ஆதரவு போக்கு அனைவருக்கும் தெரிந்ததே. ஆகவே அவரொன்றும் தன் தந்தையின் மனதிற்கு பிடிக்காத விஷயத்தை செய்துவிடவில்லை. செய்தது நல்ல விஷயமும் இல்லை. இவரைப் போன்ற தொடர்புடையவர்கள் அரசின் பிரதிநிதியாவது நம் நாட்டின் பாதுகாப்பிற்கு விடப்பட்டிருக்கும் சவால். வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் உங்கள் மனது வெள்ளையாக இருந்தாலும், நாம் வாழும் உலகம் அவ்வளவு வெள்ளையல்ல லக்ஷ்மி அவர்களே.

said...

@Lakshmi,

I don't have a Unicode Tamil Editor to type the comments in Tamil and hence am giving the same in English.

I too accept your views that Kanimozhi is a very great poet and has been starring high in her exemplary contributions to literature. She was also one of the brain behind the Karuthu.com website.

With the huge significant turn of events that have been rocking through the Tamil Nadu and Union government, I too feel that Kanimozhi might have been squeezed into politics.

In my view, she is an excellent poet and a literary contributor to Tamil literature, just like Dayanidhi Maran was excellent in technology and communications. We need to wait and see how she is able to manage and balance through the political turbulence and whirlpools.

Anyway let us wish her good luck in her new cap in her political career as well.

said...

தூ.க.ஒ, சப்தரிஷி, தீபக் உங்களனைவருக்கும் முதலில் நன்றி - கருத்து சொன்னதற்காக.

தூ.க.ஒ, முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். அவர் எதையும் சாதித்துவிட்டதாக நான் என் பதிவில் எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால் எந்த விதத்திலும் தனித்தியங்க முடியாத ராப்ரியை போலவோ மக்களின் அனுதாப அலையை குறிவைத்து உள்ளே நுழைந்த ராதிகா செல்வியையோ போல இவர் அடுத்தவர் கைப்பாவையாக இருந்துவிட மாட்டார் என்கிற நம்பிக்கையையும் அப்படி ஆகிவிடக்கூடாது என்கிற ஆதங்கமும்தான் என் கட்டுரையின் நோக்கம். மேலும் முன் முடிவுகளுடன் இவரது அரசியல் பிரவேசம் அணுகப்படுகிறது என்பதும் தெளிவாய் தெரிகிறது. திமுக தலைவர் எது செய்தாலும் பாராட்டும் கூட்டம் இப்போதே அவரை தூக்கிப்பிடிக்க துவங்கியிருப்பது எவ்வளவு தவறோ அதே அளவு தவறு அவரை பற்றி இப்போதே என்ன செய்து கிழித்துவிடப்போகிறார் இவர் என்று கேட்பதும். அவர் சந்தர்ப்பத்தை மறுத்து வேறு யாருக்கேனும் அனுபவமுள்ளவருக்கு தரச்சொல்லியிருந்தால் அவரை நேர்மையாளர் என்று ஒப்புக்கொண்டிருப்பீர்களா? கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதால் அவர் அடிவருடி என்பதெல்லாம் டூ மச். நீங்கள் அந்த நிலையிலிருந்தால் என்ன செய்வீர்கள் என்று ஒரு நிமிடம் யோசித்துப்பார்த்து பதில் சொல்லுங்கள். முற்றும் துறந்தவராய் இருந்தாலேயொழிய தேடி வரும் பதவியை மறுக்க மனம் வராது யாருக்கும். வாரிசு அரசியலெனும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பின் பெரும்பகுதி திரு. கருணாநிதியையே சேரும். கருத்து.காம் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பதுதான் என் எண்ணமும். ஆனால் அவருக்கு வாய்ப்பு தரும்முன்னரே அவரது திறமையின்மையை எப்படி கண்டு கொண்டீர்களாம்?
//ஒரு கண்ணியமான அரசியல்வாதி எனபது உங்கள் அதீத கற்பனை. ஒர் or Make belief... //

அதீத கற்பனை எல்லாம் இல்லைங்க - எதிர்பார்ப்புத்தான். நானென்ன அவர் தன்னலமற்ற தலைவரா ஒரே நாளில் ஊரை மாற்றிடணும்னெலாமா கேட்டேன்? ஏதோ கொஞ்சம் கண்ணியமா யாரு காலிலும் விழாம மனசுக்குப்பட்டதை பளிச்சுனு சொல்லி தெளிவான அணுகுமுறையோட ஒரளவு மக்கள் பிரச்சனைகளை கவனித்தாலே போதும். ஜனநாயக நாட்டுல இதுவே அதீதமாயிடுச்சுங்களா?

சப்தரிஷி, அவரது உண்ணாவிரதம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாயில்லை - புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலே சிக்கிக்கொண்டிருக்கும் சக தமிழர்களுக்காத்தான் அந்த போராட்டத்தை நடத்தினார். இதை தொடர்ந்த தனது பேட்டிகளிலும் வலியுறுத்தி வந்தார். எல்லா ஈழத்தமிழர்களும் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை என்றும் புலிகள் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளல்ல என்று சொல்பவர்கள் கூட ஈழத்தமிழர்களுக்கு அளிக்கப்படும் ஆதரவை புலிகளுக்கான ஆதரவாக திரிப்பது நம் நாட்டில் ராஜீவ் மரணத்திற்கு பின் சகஜமான ஒன்றாகி விட்டது. அப்படியான பிரமை உங்களிருக்குமானால் நீங்கள் முதலில் இந்த இருதரப்புகளுக்குமுள்ள வேறுபாட்டை உணர்ந்துகொள்ளுங்கள் நண்பரே.

தீபக், நீங்கள் இங்கே நேரடியாக யுனிகோடில் தமிழில் தட்டச்சலாம். முயற்சித்து பாருங்களேன்.

said...

இந்த ப்ளாக்க படிச்சிட்டு ஒரே காமெடி ஆகிப்போச்சு. என்ன போங்க. சில விசயத்தப் பாப்போமே!

அதுவும் அவருக்கு எந்த சலுகையும் வழங்கப்பட்டுவிடவில்லை என்று தெளிவாகவே பொதுமக்களுக்கு தெரியவைக்குமளவு ஒளிவு மறைவற்ற நடவடிக்கைகள் வேண்டும்.

இதென்ன கூத்து. இவர அரசியல்ல எடுத்துவரனும்னு முன்னாடியே தீர்மானிச்சாச்சு. எப்பன்னா, சன் டிவி பங்கு ப்ரிச்சாச்சுல்ல அப்போவே. அதுனால வந்ததுதான் "சென்னை சங்கமம்" ன்னு ஒரு விழாவே. அந்த விழா எதுக்கு நடந்தது. ஏன் நடந்ததுன்னு யாருக்கும் இன்னும் புரியலைன்னா பேஜார் தாம்பா!! அதுக்கு உச்சவரம்பில்லாம பணம் செலவழிக்கலாம்ன்னு முதல்வர் அனுமதிவேற. எதுக்கு? அட போங்கப்பா இதுகூட புரியலன்னா அரசியலுக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்.

சொல்லவர்ரது என்னன்னா, இந்த "பெண்மணி" க்காக நம்ம வரிப்பணம் உச்சவரம்பில்லாம செலவு செய்யப்பட்டு, அவங்கள முன்னிருத்தி விளம்பரம் ஓட்டினாங்க.அவ்வளவுதான். இது கொஞ்சம் யோசிச்சுப்பார்த்தாலே புரியும். இதுல சலுகை அளவேயில்லாமல் வழங்கப்பட்டுள்ளதுன்றது தெளிவாத்தெரியுதில்ல?

முன்முடிவுகளை தவிர்த்து வாரிசுகளின் செயலை விமர்சித்தல். தந்தை/முன்னோடியோடே ஒப்பிட்டு எப்போதும் விமர்சிப்பது என்பதை ஒதுக்கி வைக்க வேண்டும்.

இதென்ன காமடி? முன்முடிவுகளை தவிர்த்து முன்முடிவுகளை தவிர்த்து ன்னு சொல்லிகிட்டே இந்த மேடம் ஏகப்பட்ட முன்முடிவுகளை வெச்சுகிட்டு எழுதினது இது தனிப்பட்ட முறையில் எனக்கு கனிமொழி மீது மிகுந்த அபிமானமுண்டு. ஒரு தெளிவான சிந்தனையும் நல்ல ஆளுமையும் உடையவர் ன்னு சொல்லும்போதே இந்த "நடுநிலை" பாராட்டா?. ஆணினவாதியாக இருப்பது எவ்வளவு தப்போ அதே மாதிரிதான் ஒரு பெண்ணினவாதியாக இருப்பதும் இல்லயா?

ஒரு குறிப்பிடத்தகுந்த கவிஞர், பத்திரிக்கை துறை அனுபவம் உள்ளவர்.எனினும் பெரும்பான்மை மக்களால் தந்தையை ஒட்டியே அறியப்படுபவர். அவர் கருத்து.காம் துவக்கிய போது கூட இதுவும் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் எனவே தோன்றியது.

ஆமாம் கவிஞர் என்பதற்கு கூட அவங்க அப்பா பேராலயே பாதி ஒடிச்சு. இவரை விட நல்ல எழுதுறவங்க பல பேரு முகவரி இல்லாம அலைஞ்சுகிட்டு இருக்காங்க.

சுஜாதா, சாரு நிவேதிதா - இவங்க 2 பேரப்பத்தியும் யாருக்காவது ஒரு இலக்கியத்தரமான ஈடுபாடு இருக்கா? ஹ்ம்ம் என்னவோ போங்க.

தந்தையின் சாயல் சிறிதுமின்றி அழகாய் தெளிவாய் எளிமையாய் இருக்கும். இங்க பாருங்க, அவங்க அப்பவோட கம்பார் பன்னுரது நீங்கதான். :)

கனிமொழியின் திட்டமிடல், சிந்தனை போன்றவற்றில் எனக்கு நிச்சயம் நம்பிக்கை உண்டு. ஆனால் அவரது வருகை தவறான பாதையில்தான் அமைந்திருக்கிறது. அதனால் இந்த குற்றச்சாட்டையும் மீறி முதல்வரின் தேர்வு சரியே என பெரும்பான்மை மக்களை நம்பவைக்கும் வண்ணம் நடந்து கொண்டாக வேண்டிய கட்டாயம் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

இதுனால தெரிவது என்னவென்றால் இவர் கனிமொழியின் அடிவருடி. இவரோட ஆசைய இங்க சொல்லிருக்காங்க. எல்லாரும் இதமாதிரியே யோசிங்க ன்னு வேற சொல்லராங்க. அவ்வளவுதான். கனிமொழி இவருக்கு பிடிக்கும். அதுக்கு இவ்வளவு சப்பைகட்டு. இதுல "நடுநிலை" ன்னு வேற பாராட்டு.

உண்மையா சொல்லப்போனா. இவருக்கு கோபம்வேற வருது முதல்வர் மாதிரியே.
முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். சரியாக யோசிக்கனும் ன்னு நமக்கு அறிவுரை வேற!!

நீங்க சொன்னது போல் திட்டமிடுதல் என்பது கனிமொழிக்கும் கிடையாது அவங்க அம்மாவுக்கும் கிடையாது. அவங்க தனிப்பட்ட வாழ்க்கையே உதாரணம் ன்னு யாரோ சொல்லிருக்காங்க. இதுல பாத்தீங்கன்னா இது அவங்க வாழ்கைய மிக திட்டமிட்டு தான் நடத்துறாங்கன்றது தெளிவுங்க. 3ஆ இருந்தா என்ன? 4 ஆ இருந்தா என்ன? சொத்து, பதவி ??? அட போங்கப்பா!!

தன் கருத்துக்களை தந்தைக்கு தர்மசங்கடம் விளையுமெனினும் தயங்காது உரைத்தவர் என்பதால் நான் அவரது துணிவை நம்புகிறேன்.
இது முதல்வர புரியாதவங்க பேசர பேச்சு. முதல்வர் அனுமதி இல்லாமல்லாம், அப்படி பேசடியாது தாயி.அவருக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. தான் சொன்னா ப்ரச்சன வரும்ன்னு தெரிஞ்சா வேண்டியவங்கள விட்டு இப்படி பேசச்சொல்லி ஆழம்பாக்குறதுல அவரு சாணக்கியர். இதப்போய் கனிமொழியோட சொந்த கருத்துன்னு நினச்சீங்களா? ஹய்யோ ஹய்யோ!!


தன்னோட 3 வீட்டுக்கும் சரியா பங்கு பிரிச்சு அக்கவுண்டு செட்டில்பண்றதப்போய் ஏதோ பெண்ணினத்துக்கு நடந்த பெரும் நிகழ்வா நினைச்சு எழுதப்பட்ட இந்த ப்ளாக் எழுதுனவங்கள நினைச்சா ஒன்னு மட்டும் நிச்சியம்.. எழுதினவரு புத்திசாலியா இல்லயான்றது நமக்கு தேவயில்ல... ஆனா சரியான ஏமாந்தங்குளி மேலும் அரசியல சுத்தமா புரியாத ஒரு மண்டு.

said...

ஒரு சின்ன லிஸ்ட், யாரோ தயாரிச்சது தான்..

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி,
முன்னாள் துணைப் பிரதமர் ஜகஜீவன் ராமின் மகள் மீரா,
முன்னாள் துணைப்பிரதமர் சரண்சிங்கின் மகன் அஜீத் சிங்,
என்.டி.ராமாராவின் மகள் புரந்தரேஸ்வரி,
முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ்,
ஷரத் பவாரின் மகள் சுப்ரியா,
ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங்,
பாரூக் அப்துல்லாவின் மகன் ஓமர் அப்துல்லா,
ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட்,
மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா,
அவரது சகோதரியும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான விஜயராஜே சிந்தியாவின் மகனுமான துஷ்யந் சிங்,
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங்,
தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மகன் சந்தீப்,
மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன் மிலிந்த்,
முப்தி முகமது சயீத்தின் மகள் மெஹ்பூபா,
மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன்,
மறைந்த முன்னாள் அமைச்சர் சுனில்தத்தின் மகள் பிரியா,
மறைந்த முன்னாள் அமைச்சர் பகுகுணாவின் மகன் விஜய் பகுகுணா,
பா.ம.க.நிறுவனர்டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி,
திமுகவின் நிறுவனர்களில் ஒருவரான ஈவிகே சம்பத்தின் மகன் இளங்கோவன்

இந்த லிஸ்ட்டோட.. கலைஞரின் மகளான கனிமொழி. அவ்வளவுதான்.
இதப்போய் ஏதொ பெருசா பேசவந்துட்டீங்க? இதல்லாம் ப்ராப்பர்டி செட்டில்மந்ட்.
இதுல எது "ப்ராப்பர்டி" ன்னு புரியுதா? உங்க வரிப்பணமும் எதிர்காலமும் தான்.
நீங்க உங்க எதிர்பார்பையெல்லம் மூட்டகட்டி வெச்சுடுங்க. சரியா?
மேல சொன்னது வெறும் டில்லி கதை. மாநிலக்கதைய எடுத்தா நாறிடும்.
இங்க பாருங்க மேடம், அரசியல்லாம் உங்களுக்கு இப்போதைக்கு வேணாம்.
அதை விட்டுட்டு முற்றுப்புள்ளி, நம்பிக்கைன்னு ஏதாவது கவிதைன்னு எழுதவேண்டியதுதான?
ஏதோ பல பேர் கமெண்ட் பன்னிருக்காங்களேன்னு வந்தேன். கவுத்துட்டீங்க.

said...

கீழ முதல்வர் சங்கமம் விழாவில் ஆத்திய உரை. இதுல வழித்தோன்றல் ன்ற வார்த்தைய எத்தன முறை அழுத்தி அழுத்தி சொல்றார்ன்னு பாருங்க. முடிஞ்சா எண்ணிப்பார்த்து சொல்லுங்க.

தமிழ் மொழியைப் பரப்பும் பணியில், கலையைப் பரப்பும் பணியில், தமிழை வளர்க்கும் பணியில் கனிமொழி எனது வழித்தோன்றல் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை சங்கமம் என்ற பெயரில் தமிழ் பண்பாட்டு கலை விழா சென்னையில் நேற்று தொடங்கியது. முதல்வரின் மகள் கனிமொழியை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ் மையம் ஆகியவை இணைந்து இந்த ஒரு வார கால விழாவை நடத்துகின்றன.
------------
ஒருங்கினைப்பாளரா இருக்க இந்த தமிழ்கூறும் நல்லுலகத்துல யாருமே இல்லயா?
------------

ஐஐடி திறந்தவெளி அரங்கில் நேற்று மாலை நடந்த தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இந்த பண்பாட்டுக் கலை விழாவைத் தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்த மாலை நேரத்தில் தமிழ்க் கடலில் நீந்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். சென்னை மாநகர மக்களுக்கு இந்த வாய்ப்பு ஒரு வார காலத்திற்குக் கிடைக்கவுள்ளது சந்தோஷம் தருகிறது.

இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் எனது வழித்தோன்றல் கனிமொழியைக் காண்கிறேன். வழித்தோன்றல் என்றால், கவிதை வழியில் வழித்தோன்றல், தமிழ் மொழியில் வழித்தோன்றல், உழைப்பு, ஆர்வத்தில் எனது வழித்தோன்றல், கலையின் வழித்தோன்றல் என்ற முறையில் கனிமொழியைக் காண்கிறேன்.
-----------------
இதுதாம்பா கலைஞர் டச்சு. பின்னிட்டார்ல.
-----------------

கனிமொழி பிறந்தது, உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது. அண்ணா தலைமை தாங்கிய நடத்திய அந்த உலகத் தமிழ் மாநாட்டின்போது பிறந்ததால்தானோ என்னவோ, இன்று தமிழை உலகத்திலே பரப்புகிற இந்த பணியை ஏற்றிருப்பதாக கருதுகிறேன்.
------------------
அதே நேரத்துல தமிழ்நாட்ல வேற கொழந்தயே பொறக்கல. என்ன பன்றது?
------------------

அந்த வகையில் கனிமொழி என்னுடைய வழித்தோன்றலாக அமையுமானால், எனக்குப் பிறகு அந்தப் பணியை ஆற்ற என் குடும்பத்திலே ஒரு வழித்தோன்றல் உருவாகி இருக்கிறது என்ற நிம்மதி எனக்கு ஏற்படும். நான் வழித்தோன்றல் என்றுதான் குறிப்பிட்டேன்.
-------------------
அதாவது, என்னளவுக்கு சாதுர்யமா பேசி, கவித கிவித எழுதி மக்கள ஏமாத்துற தகுதி கனிக்குத்தான் இருக்கு.
-------------------
இங்கே பல நண்பர்களைப் பார்க்கிறேன். தோட்டா தரணியைப் பார்க்கிறேன். அவரைப் பார்க்கும்போது தோட்டா தரணி உருவாக்கிய இந்த அருமையான அரங்கம் ஞாபகத்தில் சுழலவில்லை. ஆனால் அவரது தந்தை தோட்டாதான் எனது ஞாபகத்தில் சுழன்று வருகிறார்.

தோட்டா, எனது படங்களுக்கு அந்தக் காலத்தில் ஆர்ட் டைரக்டராக இருந்தவர். இன்று தோட்டாவின் வழித்தோன்றல், என் கண் எதிரே இப்படிப்பட்ட அருமையான மாளிகையை உருவாக்கியுள்ளார் என்றால், வழித்தோன்றல்கள் நிச்சயமாக நம்மை ஏமாற்ற மாட்டார்கள், நம்முடைய கனவை நிறைவேற்றுவார்கள் என்பதற்கு அடையாளமாகும்.

---------------------
மேல சொன்னது பேருதான் வருணாசிரம தருமம். செட்டுபோடறவன் மகன் செட்டுபோடனும். எம்மகனும் மகளும் மருமகனும், பேரனும் அரசாளனும்.
---------------------


அட போக்கப்பா. கனிமொழி ஒரு டுபாக்கூரு. அவரோட அப்பா? அது உலகத்துக்கே தெரியும்.

இந்த பதிவ படிச்சு என்னோட ஒரு நாளே காலியாயிடுச்சு. அதும்மில்லாம நானும் லொங்கு லொங்குன்னு இதுக்கு பின்னூட்டம் வேற போட்ருக்கேன்.

மக்கா, போய் வேற சோலி ஏதும் இருந்தா பாருங்க்கப்பா.

said...

ஐயா புலிப்பாண்டி, நான் கனிமொழி வந்து ஒரு நாள் முதல்வர் அர்ஜூன் ரேஞ்சுக்கு ஏதோ புரட்சி பண்ணிட போறார்னு எல்லாம் ஜோசியம் சொல்லலை என்னோட பதிவுல. அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது நிச்சயம் வாரிசுரிமை அடிப்படைலதான் அப்படின்னும் தெளிவா ஒத்துகிட்டிருக்கேன். ஆனா ராப்ரி மாதிரி சமையற்கட்டுல வேல செஞ்சுட்டு முந்தானைல கைய தொடச்சுகிட்டே அப்படியே அரசாங்க கோப்புகளில் கையெழுத்து போடுறவரா இவர் நிச்சயம் இருக்க போறதில்லை. அவர் நேரடி அரசியலில் அதிகம் பங்குபெறாதவர் என்பதால் இதுவரை அவரை பற்றி எதுவும் கணிக்க முடியலை. ஆனால் அவர் சில விஷயங்களில்(இலங்கை தமிழருக்கான ஆதரவு, கற்பு பத்தின அவரோட கருத்து) அப்பாவுக்கு எதிரான நிலைப்பாடு இருந்தாலும் அதுல நிலையா நின்னிருக்கார். எனவே அவரிடமிருந்து நான் மாறுபட்ட செயல்பாடுகளை எதிர்பார்க்கிறேன். அவ்வளவுதான். அதுக்கே எனக்கு ஜால்ரா, அடிவருடி போன்ற பட்டங்கள். ஹ்ம்ம்... ஆசப்பட்டு தரீங்க.. வேண்டாம்னா விசனப்படுவீங்க இல்லையா? காசா, பணமா? கொடுங்க அண்ணாச்சி, வாங்கி ஒரு ஒரமா போட்டு வச்சிக்கறேன். பின்னாடி நம்ம கனிமொழியக்காவும். என் எதிர்பார்ப்புகளை மிதிச்சு தொவச்சுட்டு இன்னொரு புரட்சி தலைவி ஆனாங்கன்னா, அப்போ இதெல்லாம் எனக்கே யூஸ் ஆகுமில்லையா?

//முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். சரியாக யோசிக்கனும் ன்னு நமக்கு அறிவுரை வேற!!// இந்த ரெண்டு விஷயமுமே உங்களுக்கு நான் சொல்ற அறிவுரை.
அப்படின்னா இதுக்கு பேர் என்னாங்க?
//இங்க பாருங்க மேடம், அரசியல்லாம் உங்களுக்கு இப்போதைக்கு வேணாம்.
அதை விட்டுட்டு முற்றுப்புள்ளி, நம்பிக்கைன்னு ஏதாவது கவிதைன்னு எழுதவேண்டியதுதான?//
கலக்கறீங்க போங்க... நான் என்ன எழுதணும்னு நீங்க முடிவு பண்ணக்கூடாதுங்க. ஆனா ஒன்னு செய்யலாம், நான் எழுதின எதையும் படிக்கறதுன்னு முடிவு பண்ணினால் முதற்கட்டமா குறிச்சொல்லை பாத்துட்டு படிக்கலாமா வேணாமான்னு முடிவு பண்ணிக்கலாம். ஏன்னா அது உங்க தனிப்பட்ட விஷயம் பாருங்க, அதுனாலு முழு உரிமையும் உங்களுக்கே உங்களுக்குத்தான். :)

// எழுதினவரு புத்திசாலியா இல்லயான்றது நமக்கு தேவயில்ல... ஆனா சரியான ஏமாந்தங்குளி மேலும் அரசியல சுத்தமா புரியாத ஒரு மண்டு. //
எதிர்கருத்தோட எழுதறவங்களை இப்படி பாராட்ட எவ்வளவு பெரிய மனம் வேணும்?இவ்வளவு நல்லவரா எப்படி இருக்கீங்க?

இவ்வளவு திட்டி தீத்துட்டு கடைசில இப்படி வேற ஒரு வரி
//இந்த பதிவ படிச்சு என்னோட ஒரு நாளே காலியாயிடுச்சு// ஆனாலும் நீங்க ரொம்பத்தான் வேகமா படிக்கிறீங்க.. அத்தோட நான் என்ன இந்த பதிவ முழுசா படிச்சுட்டு மூணேமுக்கால் பக்கத்துக்கு பின்னூட்டம் போடலைன்னா ரௌரவாதி நரகங்களுக்கு போவீங்கன்னு இந்த வெங்கடாசலபதி பத்தின லெட்டர ஏழு பேத்துக்கு போட சொல்லி வர லெட்டர் ரேஞ்சுக்கா மிரட்டியிருக்கேன்? பிடிக்கலைன்னாலோ இது வேஸ்ட்னு உங்களுக்கு தோணினாலோ எந்த நிமிஷமும் நிறுத்திட்டு போயிட்டே....ஏஏஏ இருக்க வேண்டியதுதானே? அண்ணாச்சி, காதை குடுங்க சொல்றேன் - இந்த உப்பு சப்பில்லாத பதிவர்கள், அவரோட தாசர்கள் இவங்க பதிவெல்லாம் நானு இப்படித்தான் சாய்ஸ்ல விட்டுடுவேன். நீங்களும் இதே டெக்னிக்கை கையாளவும். உங்கள் பொன்னான நேரம் மிச்சமாகும். சரிங்களா?

said...

என் பேரு புலிப்பாண்டி இல்ல

நல்லா பாருங்க... புலிக்குட்டி.

நான் சொன்ன தகவல்களுக்கு மாற்று கருத்து போடாம..நான் உங்களுக்கு குடுத்த பட்டத்த பத்தி மட்டும் பேசுரது சரியா?

said...

"இந்த உப்பு சப்பில்லாத பதிவர்கள், அவரோட தாசர்கள் இவங்க பதிவெல்லாம்"

என் தலைவர், டோண்டுவைப்பற்றி பேச யாருக்குமே உலகத்தில் அருகதை இல்லைன்றதை எல்லாரும் ஞாபகம் வெச்சுக்கங்க.

said...

டோண்டுதாசன் சார், உங்க பேரை தப்பா சொன்னதுக்காக மன்னிச்சுகுங்க. என்னால உங்க அளவு நீளமா எழுத முடியலைனாலும் நான் என் கருத்தை மறுபடி ஒரு முறை தெளிவாவே சொல்லியிருக்கேன். நீங்க சொன்னதுல சில விஷயங்களை ஒத்துகிட்டிருக்கேன் - ஏற்கனவே நானும் அதைத்தான் சொன்னேன்னும் ஒத்துகிட்டிருக்கேன். மாறுபடற இடங்களையும் சொல்லியிருக்கேன். இதுக்கு மேல என்னாங்க பதில் சொல்லணும்? அப்புறம் அதென்னது அது? நீங்க யாரை வேணும்னாலும் மக்கு, ஏமாந்தாங்கொள்ளினெல்லாம் சொல்லலாம். உங்களையும் உங்க தலைவரையும் மட்டும் எதும் சொல்றதுக்கு யாருக்குமே தகுதியில்லையாமா? என்ன லாஜிக்கோ?

said...

புலிக்குட்டி
மஞ்கள் காமாலை கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாக தான் தெரியும்.

உங்கள் நோயைத் தீர்க்க வழி பாருங்கள்

முற்றிவிட போகிறது

said...

உங்கள் பார்வைக்கு:
http://jannal.blogspot.com/
அன்புடன்
மாலன்

said...

வலைப்பதிவுகளில், எல்லாம் தெரிந்த 'அறிவாளிகள்' சிலர் உலாவுகிறார்கள்.

முகம் தெரியாது என்பதற்காகவே, விவாதிக்கையில், பதிவின் சாரத்தை தவிர்த்து, வார்த்தைகளில் தனிப்பட்ட முறையில் நக்கல் செய்வதை எல்லா பதிவர்களும் கண்டிக்க வேண்டும்.

said...

மகா, மாலன் , ஸ்ரீசரண் - அனைவருக்கும் என் நன்றி முதலில். மகா, இதையெல்லாம் கண்டிக்க ஆரம்பிச்சா அப்புறம் நாமெல்லாம் வேறெதுவுமே உருப்படியா செய்ய முடியாது. நாள் முழுக்க இதேதான் செஞ்சுகிட்டிருக்க வேண்டியிருக்கும். எல்லாருமே கண்டுக்காம விட்டுத்தள்றதுதான் இவங்கள கையாள்றதுக்கு சிறந்த வழிமுறைன்றது என் அபிப்ராயம்.

said...

புலிகுட்டி! என்ன இது விவாதம் செய்வதை விடுத்து இப்படி. நல்லாயில்லியே இதல்லாம்!

said...

புலிக்குட்டி ,பூன குட்டின்னு இன்னங்கடா உங்களோட இம்ச
/யோவ்மக்கா, போய் வேற சோலி ஏதும் இருந்தா பாருங்க்கப்பா/

அதான் புலிக்குட்டி அதேதான்

said...

லட்சுமி,

நீங்கள் அரசியல் குறித்த உங்கள் பார்வைகளையும் எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. உங்களின், மாலனின் பதிவுகள் எனக்குள்ளும் சில தொடர்ச்சியான எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. ஆனால் எழுத உட்காராத சோம்பல் ஒட்டிக்கொண்டது:)) நீங்களும் தென்றலும் அழைத்த "அழகு" பதிவும் ஆரம்பிக்காமல் அப்படியே இருக்கிறது. கனிமொழியின் அரசியல் நுழைவில் எனக்குத்தோன்றும் எண்ணங்களை சாவகாசமாக உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அதற்கொன்றும் அவசரமில்லை. ஆனால் அவசரமாகச் சொல்ல ஆசைப்பட்டது ஒன்று. அதற்காகத்தான் இப்பின்னூட்டம்:))


///இதையெல்லாம் கண்டிக்க ஆரம்பிச்சா அப்புறம் நாமெல்லாம் வேறெதுவுமே உருப்படியா செய்ய முடியாது. நாள் முழுக்க இதேதான் செஞ்சுகிட்டிருக்க வேண்டியிருக்கும். எல்லாருமே கண்டுக்காம விட்டுத்தள்றதுதான் இவங்கள கையாள்றதுக்கு சிறந்த வழிமுறைன்றது என் அபிப்ராயம்////

நன்று. தொடருங்கள் உங்கள் எழுத்துக்களை!

said...

நன்றி நன்றி

தங்களது தமிழ் தட்டச்சு இணைய தள வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி. இதைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் மற்றும் நன்றி உரையை இங்கு காணலாம்:

http://lavanyadeepak.blogspot.com/2007/06/elegant-tamil-unicode-editor.html

said...

நல்ல அரசியல்வாதியானா லாபம்; இல்லைன்னா .. பத்தோடு பதினொண்ணு .
அம்புடுதேன்...

said...

அதென்ன "நல்ல அரசியல்வாதி"??
முரண்தொடை மாதிரியில்ல இருக்கு?
குமுதத்துல கனிமொழி பேட்டி ஒன்னு படிச்சேன். சிரிப்புத்தான் வருது.

ஆன மேடம், ஒன்னுமில்லாத பதிவ ஒன்ன போட்டு ஒரு 50 கமெண்ட் வாங்கிட்டீங்கன்னா பெரிய விஷயம்தான்.

said...

மகா,செல்வநாயகி, அய்யனார், அபி அப்பா அனைவருக்கும் நன்றி - வெறுமனே பதிவை படிச்சு பாராட்டறதுக்கு மட்டுமில்லாம தனிமனித தாக்குதல்களுக்கு எதிரா குரல் கொடுத்ததுக்காகவும்.

சரியா சொன்னீங்க, ஹெச். எம் சார். பார்ப்போம் எந்தளவு அவரால் அனைவரது எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடிகிறதென.

தேவ உதிப்தா சார், இந்த ஒன்னுமில்லாத பதிவையெல்லாம் நேரம் ஒதுக்கி படிச்சு அதுல ஒரு பின்னூட்டமும் போட்டு என்னைய பெருமை படுத்தினதுக்கு நன்றிங்க.

said...

http://nellikkani.blogspot.com/

நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

இந்தியர்களான நாம், நேர்மை மற்றும் உண்மை போன்ற மிக முக்கிய குண நலன்களை, சுதந்திரத்திற்குப் பிறகு இழந்துள்ளோம். ஊழல் பெருகியுள்ளது. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. வாக்களிக்கும் பொதுமக்கள் பணம் மற்றும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வாக்குகளை விற்கின்றனர். மக்களுக்க ஏற்ற அரசாங்கமே அமையும் என்பது பொது விதி.

சோசியலிசக் கொள்கைகள், உயர்ந்த லட்சியம் உள்ள தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. சித்தாந்தம் என்பது வேறு, நடைமுறை என்பது வேறு. "நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தானாலும் உண்டாகிறது" என்பது ஒரு பழமொழி.

பணக்காரர்கள் மீது மிகக் கடுமையான வரி விதித்து அதை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முயன்ற சோசியலிஸக் காலங்களில் உச்சக்கட்டமாக 98 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டது (1971). மனிதனின் இயல்பான குணம் சுயநலம். தனக்கு ஒரு லாபம் அல்லது ஆதாயம் முழுமையாகக் கிடைத்தால் மட்டுமே ஒரு செயலை முழு மனதுடனும், ஊக்கத்துடனும் செய்வான். அச்செயலினால் கிடைக்கும் லாபத்தைப் பாதுகாக்க சட்டத்தை மீற முற்படுவான். அதனால் நேர்மை குறையும்.

அதுதான் இங்கு நடந்தது. வருமான மற்றும் உற்பத்தி வரிகளை ஏய்க்க முற்பட்டனர் முதலாளிகள். அதிகாரிகள் அதற்குத் துணை போயினர். பெர்மிட், லைசன்சு தருவதற்கு லஞ்சம் கேட்டனர் அரசியல்வாதிகள். கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கருத்தாக கேட்டனர் அமைப்பு சார்ந்த மற்றும் அரசாங்க அமைப்புகளைச் சார்ந்த தொழிலாளர்கள். லைசன்ஸ் மற்றும் கட்டுப்பாடுகளால் கடுமையான பற்றாக்குறை உண்டானது. சிமிண்டு இன்று எளிதாக கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் சிமண்ட் உற்பத்தியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் கடும் பற்றாக்குறை. கருப்பு மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், இன்று கேட்க தமாஸாக இருக்கிறதா? பழையக் கருப்பு வெள்ளைப் படங்களில் வில்லன்கள் சிமிண்ட், சர்க்கரை மற்றும் பருத்தி நூல் பேல்களை பதுக்கி வைப்பர். கடத்துவார்கள்!

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியார் உற்பத்தி வேண்டிய அளவு பெருக தாரளமாக அனுமதிக்கப்பட்டவுடன் இன்று அந்த மாதிரியான தமாஸ் காட்சிகள் இல்லை. உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தி விடலாம். ஆனால் இழந்த குணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல காலமும் பல தலைமுறைகளும் பிடிக்கும் போல் தெரிகிறது.

சர்வ சாதாரணமாக நாம் அனைவரும் அரசாங்க விதிகளையும் சட்டங்களையும் மீறும் தன்மையைப் பெற்று விட்டோம். அளவுக்கு அதிகமான வருமான வரியை ஏமாற்ற ஆரம்பித்து இன்று அனைத்து வரிகளையும் ஏமாற்றுவதை ஒரு கலையாகக் கற்றுள்ளோம். சாலை விதிகள், மென்பொருள் மற்றும் சினிமா துறைகளின் காப்புரிமை விதிகளை மீறுகின்றோம். திருட்டு விசிடி, மென்பொருள்களையும் பயமின்றி கூச்சமின்று பயன்படுத்துகிறோம்.

வேலை செய்யாமலேயே ஊதியம், தகுதி இல்லாமலும் மான்யம், இலவசங்களுக்காக தன்மானத்தையும் நேர்மையையும் இழந்துள்ளோம். பிச்சைக்காரப் புத்தி மிகவும் அதிகரித்துள்ளது. ஓசியில் கிடைச்சா பினாயிலைக் கூட குடிக்கத் தயாராக உள்ளோம். ஒரு LPG சிலிண்டருக்கு அரசாங்கம் நமக்கு ரூபாய் 200 மான்யமாக, இனாமாக தருவதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். குறைக்க முற்பட்டால் எதிர்க்கிறோம்...

said...

உங்களுடைய கருத்து மிகவும் நடுநிலைமையுடன் இருந்தது ஆனால், இப்படி பதவி கொடுக்கப்பட்டதின் நோக்கம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம், மாறனுக்குப்பிறகு,தயாநிதிக்குப்பிறகு குடும்பத்தில் இருந்து ஒருவர் அரசியல் காய்களை நகர்த்த மத்தியில் தேவைப்பட்டதால்தான் இந்த பதவி கொடுக்கப்பட்டது,மத்தியில் அரசியல் காய்களை நகர்த்துவது என்பது நல்ல மனித பண்புக்கு எவ்வளவு எதிர்மறையான விஷயம் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும், அது தெரிந்துதான் இந்தபதவியை அவர் ஏற்றுக்கொண்டார் எனில் அவரைப்பற்றிய உங்களின் எண்ணங்கள் மறுபரிசீலனைக்குள்ளாவதை தடுக்க முடியாது.

said...

உங்களுடைய கருத்து மிகவும் நடுநிலைமையுடன் இருந்தது ஆனால், இப்படி பதவி கொடுக்கப்பட்டதின் நோக்கம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம், மாறனுக்குப்பிறகு,தயாநிதிக்குப்பிறகு குடும்பத்தில் இருந்து ஒருவர் அரசியல் காய்களை நகர்த்த மத்தியில் தேவைப்பட்டதால்தான் இந்த பதவி கொடுக்கப்பட்டது,மத்தியில் அரசியல் காய்களை நகர்த்துவது என்பது நல்ல மனித பண்புக்கு எவ்வளவு எதிர்மறையான விஷயம் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும், அது தெரிந்துதான் இந்தபதவியை அவர் ஏற்றுக்கொண்டார் எனில் அவரைப்பற்றிய உங்களின் எண்ணங்கள் மறுபரிசீலனைக்குள்ளாவதை தடுக்க முடியாது.