Monday, October 22, 2007

நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

அல்லது நீ எல்லாம் ஒரு ஆம்பளையா போன்ற கேள்விகளை நாம் வாழும் சமூகத்தில் பல முறை பல சந்தர்ப்பங்களில் கேட்க நேர்ந்திருக்கலாம். ஆனால் இரண்டு கேள்விகளும் எழும் விதத்தை கூர்ந்து பார்த்தால் ஒரு பெரிய வித்தியாசம் தெரியும் - நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? இதுக்கு பதில் நீ புடவை கட்டிக்கலாம்/வளையல் போட்டுக்கலாம் போன்ற வாசகங்கள் பெரும்பாலும் (பெரும்பாலும் என்ன எப்போதுமே) ஒரு ஆணின் செயல் குறித்த விமர்சனமாய்த்தான் அமையும். இதைக் கூட தூக்க முடியல/இவனைக்கூட அடிக்க முடியல/இவ்வளவு கூட சம்பாதிக்க முடியல போன்ற குறைபாடுகளுக்கு பதிலாகத்தான் மேற்ச்சொன்ன அந்தக் கேள்வி - அவரது பாலியல் தன்மையைக் சந்தேகிக்கும் கேள்வி முளைக்கும். அதே பெண்ணுக்கு இவ்வகைக் கேள்வி வருவது செயலுக்கான எதிர்வினையாகவும் சமயங்களில் இருக்கும்தான். ஆனால் பெரும்பாலும் இக்கேள்வி ஒரு பெண்ணுக்கெதிராய் எழுவது அவளது புறத்தோற்றத்தைக் குறித்துதான். தோற்றத்தை வைத்தே ஒரு பெண் ஒழுக்கமான பெண்ணா இல்லையா என்பதிலிருந்து சகலத்தையும் முடிவு செய்து விடுவார்கள் சில அதிமேதாவிகள். வலையுலகில் கூட சமீபத்தில் இப்படியான கருத்தை ஒருவர் வாந்தி எடுத்திருந்தார்.

சமீபத்தில் 'மிருகம்' என்கிற படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை பத்மப்ரியாவை கை நீட்டி அடித்ததாகவும் செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும் டைரக்டர் சாமி மீது புகார் எழுந்தது. அவருக்கு அபராதமும் இப்படத்தைத் தவிர்த்து வேறு படங்கள் எடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை தடையும் விதிப்பதாகத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. சரியாக நடிக்காததற்காக ஒரு நடிகரை அடிக்கும் உரிமை ஒரு இயக்குனருக்கு இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நடிகர்களுக்கே தெளிவான, ஒற்றுமையான கருத்தில்லை. ஒரு பாரதிராஜாவோ பாலச்சந்தரோ அடிப்பதைப் பெருமையாகக் கருதும் இவர்களே ஒரு புது இயக்குனர் அதைச் செய்யும் போது பொங்கியெழுகிறார்கள். யார் அடித்தாலும் யாரை அடித்தாலும் அது மனிதத் தன்மையற்ற செயல்தான் என்பதை இவர்களால் அழுத்திச் சொல்ல முடியவில்லை - அப்படிப் பார்த்தால் சரியாக வேலை செய்யாத யாரையும் வேலை வாங்கும் நிலையிலிருக்கும் ஒருவர் அடித்து விடலாமா என்று கேட்டால் உடனே ஒரு சப்பைக் கட்டு வரும் - அவங்க எல்லாம் கலைஞர்கள். அவங்க உணர்ச்சி வசப்படத்தான் செய்வார்கள்னு. இது போன்ற சப்பைக்கட்டுகளைக் கேட்கும்போதே பற்றிக்கொண்டு வருகிறதென்றாலும் இதைப் பற்றித் வேறு இடத்தில் பேசலாம். இப்போது சொல்ல வந்தது அவர் அந்த பாலியல் ரீதியிலான தொந்தரவு குறித்த புகாருக்கு அவர் கொடுத்திருக்கும் விளக்கங்களைப் பற்றி.


"நான் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகச் சொல்கிறார்களே... மொத்தம் அறுபது நாள் ஷூட்டிங் நடந்துச்சு. ஐம்பத் தொன்பது நாள் சும்மா இருந்த நான், கடைசி நாள் மட்டுமா டார்ச்சர் கொடுத்திருப்பேன்..? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவரைப் பார்த்தால் எனக்கு செக்ஸுவல் ஃபீலிங் வரவேயில்லை. அவர் தாடையிலும் மேலுதட்டிலும் ரோமங்கள் இருப்பதை ஒருநாள் கேமரா க்ளோசப் ஷாட்டில் பார்த்துவிட்டு, ‘போய் ஷேவ் பண்ணிட்டு வா’ என்று சொன்னேன். அதற்கு, ‘நான் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்திலேயே நடிச்சவ’ என்று எகத்தாளமாகப் பதில் சொன்னார். நான் மட்டும் அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததா ‘மிருகம்’ பட யூனிட்டில் உள்ள ஒருத்தரோ, குறண்டை கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தரோ சொல்லட்டும்... நான் சினிமாவை விட்டே ஓடிப் போயிடறேன். இல்லேன்னு மறுத்தா, பத்மப்ரியா சினிமாவை விட்டுப் போவாரா?

பொதுவாக, நல்ல நடத்தை உள்ள பெண்கள் இப்படியெல்லாம் பேசமாட்டார்கள். உண்மையாகப் பார்த்தால் பத்மப்ரியாவுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். மதுரை லேக் வியூ ஹோட்டலில் ரூம் போட்டிருந்தபோதுகூட, சமீபத்தில் ரிலீஸ் ஆன படத்தில் அவருடன் நடித்த ஒரு நடிகர் வந்து தங்கிவிட்டுப் போனார். அதற்கு நான் ஏதாவது சொன்னேனா?" என்று காட்டம் காட்டுகிறார் சாமி.
இது விகடனில் அவர் தந்திருக்கும் மறுப்புச் செய்தி.

இவரது கூற்றில் இரண்டு விஷயங்கள் கவனிக்கப் படவேண்டியவை. ஒன்று அவர் பாலியல் ரீதியாக என்னைக் கவரவில்லை - எனவே நான் எப்படி அவரிடம் அத்து மீறியிருப்பேன் என்கிற கேள்வி. அடுத்தது நல்ல நடத்தை உள்ள பெண்கள் இப்படியெல்லாம் பேச மாட்டார்கள் என்கிற அனுமானம், அதை வலுப்படுத்த ஒரு சில காரணங்களையும் சொல்லுகிறார். இரண்டுமே வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டிய விஷயங்கள். ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினால் - நான் அப்படிச் செய்யவில்லை என்று சொல்லலாம். அதற்கு சாட்சியங்களை குறிப்பிடலாம். நான் அப்படியானவன் இல்லை என்று சொல்லலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு அவளொன்றும் அழகில்லை, என் பார்வையில் பெண்ணாகவே தோன்றவில்லை அதனால் நான் எப்படி அவளிடம் அப்படி நடந்து கொண்டிருக்க முடியும் என்கிற கேள்வி தன் நடத்தைக்கும் சேர்த்து பெண்ணையே பொறுப்பாளி ஆக்கும் வழக்கமான ஆணாதிக்கத் திமிரின் வெளிப்பாடு. அப்படியானால் அப்பெண் அழகானவளாய் இருந்திருதால், இவரது வரையரைகளுக்குட்பட்ட பெண்ணாயிருந்திருந்தால் அப்போது இவர் அத்துமீறியிருந்திருப்பார் இல்லையா? அப்போதும் அப்பெண் அழகாயிருந்தது அவள் தவறுதான் என்றே பதில் சொல்லியிருந்திருப்பார் அல்லது அவள் தன் அழகை வெளிப்படுத்தும் விதமாக என்னைத் தூண்டும் வண்ணம் உடையணிந்தார் என்று சொல்லிவிட்டுப் போயிருந்திருப்பார் இல்லையா?

அடுத்தது நல்ல நடத்தையுள்ள பெண்கள் இப்படியெல்லாம் பேசமாட்டார்கள் என்று சொல்வது - என்ன பொருள் இதற்கு? நல்ல நடத்தையுள்ளவளிடம் எந்த ஆணும் தவறாக நடக்கத் துணிய மாட்டான் என்பதா? அப்படியானால் பலாத்காரத்திற்கு உள்ளான எல்லாப் பெண்களும் தவறான நடத்தை உள்ளவர்களா? அல்லது நல்ல நடத்தை உள்ள பெண் இப்படியெல்லாம் தனக்கு நடந்ததை ஊரைக் கூட்டிச் சொல்ல மாட்டாள் என்று சொல்ல வருகிறாரா? அடடடடா..... என்ன ஒரு அருமையான இலக்கணம்.. அற்புதம்.... அபாரம்.... இது வந்து அறிவுள்ளவர்களின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் ஆடை ஒன்றை அணிந்து நகர்வலம் போன மன்னனின் கதையை நினைவு படுத்துகிறது. இப்படிச் சொல்லிவிட்டாள் எந்தப் பெண் தனக்கு நடக்கும் கொடுமையைப் பற்றி வாயைத் திறப்பாள்? சொன்னால் தன்னை நடத்தை கெட்டவள் என்று சமூகம் சொல்லிவிடுமே என்கிற பயம் வந்துவிடுமில்லையா? அப்புறம் சர்வசுதந்திரர்களாய் யாரும் யாரையும் பாய்ந்து குதறலாமில்லையா?

இந்த இரு கருத்துக்களையும் சொல்லும் முதல் ஆள் இல்லை இந்த சாமி. ஏற்கனவே இச்சமூகத்தில் புரையோடிப் போன கருத்துக்கள்தான் இவையிரண்டும். ஆனாலும் ஒரு பொது ஊடகத்தில் ஒரு மனிதர் இப்படி ஒரு நச்சுக் கருத்தை கொட்டும் போது அதை எதிர்த்துப் பேச யாருமே இல்லையா? இல்லை யார் கண்ணிலும் இச்செய்தி படவேயில்லையா? எங்கே போனார்கள் நம் திரையுலகப் பெண்ணுரிமைப் புலிகள் எல்லோரும்? எல்லோரும் பாவம் அவரவர் பங்குபெறும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்கள் போலிருக்கிறது...

40 comments:

said...

அந்த இயக்குநர் சரியான மாங்காய், பேசவே தெரியவில்லை, இயக்குநர் ஆயிட்டார். போகட்டும். தண்டனை கிடைத்துவிட்டது அவனது முட்டாள் செய் செக்ஸ் டார்ச்சர் என்பது பத்மபிரியா அவர் அடித்த பிறகு சொல்கிறார். ஆகவே அது பொய்! ஏன் எல்லா பெண்களும் அவர்கள் சந்திக்கும் எல்லா பிரச்சினைகளையும் பாலியல் குற்றங்களாக மாற்ற முயல்கிறார்கள்? வரதட்சினை சட்டங்களும் அதிகமான சதவிகிதம் தவறாக பிரயோகிக்க படுவதாக உச்ச நீதி மன்றம் ஒத்து கொண்டுள்ளது! பதில் சொல்லுங்கள்!!

said...

நீங்கள் கூறியிருப்பது சரியானதே ஆனால் பெண்களின் பாதுகாப்புக்காக ஏற்ப்படுத்தப்பட்ட சட்டத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தமுயல்கிறார்கள் இது வன்மையாக கண்டிக்கதக்கதே ஒரு வேலை அந்த டைரக்ட்டர் தப்பேசெய்யாமல் பாலியல் பலாத்காரத்திற்க்காக தண்டனைபெற்றால் அவரின் நிலைமையையும் கொஞ்ஜம் நினைத்துப்பார்க்கவேண்டும் பெரியார் கண்ணியமாக ஏற்ப்படுத்திய போரடிப்பெற்ற சட்டங்களை முறைகேடக பயன் படுத்தவும் கூடாது.

இவன்

http://sinthikkatherinthamanithan.blogspot.com

said...

லக்ஷ்மி,
ஊடகங்களில்
இந்த வார்த்தைகளைப் பற்றிப் படித்ததும் வந்த உணர்ச்சி அருவருப்பு தான்.

யாரோ சொல்லி அதையும் இவர்கள் அச்சிட்டு மொத்த்ப் பெண்களையே கேவலப் படுத்துவதாகத் தோன்றூகிறது.

:(((

said...

\\இந்த இரு கருத்துக்களையும் சொல்லும் முதல் ஆள் இல்லை இந்த சாமி//
லக்ஷ்மி ரொம்ப சரி முதல் ஆள் அவரும் இல்லை..கடைசி ஆளும் வரப்போவதுமில்லை..
பாருங்களேன் பின்னூட்டத்தில் பிரச்சனையை விட்டுவிட்டு வேறேதேதே பிடித்துக்கொண்டு வந்துவிடுகிறார்கள். காலகாலமாய் பெண் என்பதற்காக எத்தனையோ செய்தார்களாம் அதிகபட்ச ஆண்கள்.
இன்று கொஞ்சம் சட்டம் இடம் கொடுத்ததும் பட்டபாட்டின் வேதனைக்கு வடிகாலாய் குறைஞ்ச பட்ச பெண்கள் செய்கிற தவற்றை தலைப்பு செய்தியாக்கி பேசவருகிறார்கள்.

said...

சிவாஜி தி பாஸ் ,ஜெயம், வல்லி அம்மா & முத்து லெட்சுமி - அனைவருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அடித்ததன் பின்னரே பாலியல் பலாத்காரம் குறித்த புகாரை வெளியிட்டிருக்கிறார் என்பதனால் மட்டுமே அது பொய்யென்று எப்படிச் சொல்லுகிறீர்கள் சி.தி.பா? அது வரை பொறுமையாய் இருந்து இப்படி பகிரங்கமாய் அடிக்கும் அளவு துணிந்து விட்டாரே என்பதனால் அவர் எல்லாவற்றையுமே வெளிப்படையாகப் பேசலாம் என்று முடிவு செய்திருக்கலாமில்லையா? உண்மையில் வேலை செய்யுமிடத்தில் வரும் எவ்வகையான டார்ச்சரையும் ஆரம்பித்தவுடனேயே பகிரங்கப் படுத்தி பிரச்சனையை பெரிது படுத்திவிடமாட்டார்கள். முடிந்தவரை பொறுத்துப் போகவோ அல்லது தங்களுக்குள்ளேயே பேசித் தீர்க்கவோதான் முயல்வார்கள். பொறுக்க முடியாத நிலையில்தான் வெளிப்படையாய் போர்க்கொடி உயர்த்துவார்கள் - பத்மப்ரியாவும் அதையே செய்திருக்கிறார் என்றே நான் எண்ணுகிறேன். ஏனெனில் பிரச்சனை என்று ஒன்று வரும்போது அடுத்த படத்துக்கு புக் செய்ய வருபவர்கள் இவர் பக்கமும் ஏதேனும் தப்பிருக்கலாமே என்று எண்ணித் தயங்கினால் என்ன செய்வது என்கிற பயம் யாருக்கும் இருக்கத்தானே செய்யும்?

//ஏன் எல்லா பெண்களும் அவர்கள் சந்திக்கும் எல்லா பிரச்சினைகளையும் பாலியல் குற்றங்களாக மாற்ற முயல்கிறார்கள்// இப்படி ஒட்டுமொத்தமாகாக் குற்றம் சாட்டுவது அபத்தமான வாதம். ஏற்கனவே இந்தப் பதிவில் சொன்னது போல பாலியல் குற்றச்சாட்டுகளை பொறுத்தவரை குற்றம் சாட்டப் பட்டவர்களை விட்டுவிட்டு குற்றச்சாட்டைப் பொதுவில் வைப்பவர்கள் மீதே சேறு வாரி வீசத் தயாராக இருக்கும் சமூகம் இது. இதில் அவ்வளவு சுலபமாய் தன் பெயர் கெட்டாலும் பரவாயில்லை என்றெல்லாம் எல்லோரும் பாலியல் புகாரை தூக்கிக் கொண்டு அலைய மாட்டார்கள். அதற்காக யாருமே அப்படி தவறாக உபயோகித்திருக்கவே மாட்டர்கள் என்று நிச்சயம் நான் சொல்ல மாட்டேன் - யாருமே விமர்சனத்துக்கும் சந்தேகத்துக்கும் அப்பாற்பட்டவர்களில்லை என்று திடமாக நம்புபவள் நான். அப்படியும் ஒன்றிரண்டு சம்பவங்கள் நடந்திருக்கலாம்தான் - அதற்காக வரதட்சணை ஒழிப்பு சட்டத்தையோ இல்லை பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்களையோ தூக்கிவிட முடியாது. எந்த சட்டமும் துஷ்பிரயோகம் செய்யப்படலாம்தான் - அதற்குத் தீர்வு சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்கையிலோ இல்லை வழக்கை விசாரிக்கையிலோ இன்னமும் அதிகக் கவனம் கொண்டு விசாரித்து உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நிவாரணம் தரப்பட வேண்டும்.

//பெரியார் கண்ணியமாக ஏற்ப்படுத்திய போரடிப்பெற்ற சட்டங்களை முறைகேடக பயன் படுத்தவும் கூடாது.//நிச்சயமாய் கண்ணியமாய் சட்டங்கள் உபயோகிக்கப்பட வேண்டும்தான் - அதற்கு அவற்றை நடைமுறைப் படுத்தும் வழிகளை தேவையான வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஒரு வேளை தவறாகக் குற்றம் சாட்ட முயன்றால் அதற்குரிய தண்டனைகளையும் வடிவமைக்க வேண்டும். அதை விடுத்து அச்சட்டத்தை உபயோகிப்பவர்களின் மீதே ஒட்டுமொத்தமாய் பொத்தாம்பொதுவாய் குற்றம் சாட்டக்கூடாதல்லவா?

//இந்த வார்த்தைகளைப் பற்றிப் படித்ததும் வந்த உணர்ச்சி அருவருப்பு தான்.// ஆமாம் அம்மா. அதற்கு எவ்வித எதிர்ப்பும் எழாததை நினைத்தால் எனக்கு இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது. நான் வெள்ளியன்றே இதை எழுத நினைத்தேன். வேலை மிகுதியால் விட்டுவிட்டேன். விடுமுறை கழித்து வந்து பார்த்தால் இன்னமும் இவ்விஷயத்தில் யாரும் எதுவும் கருத்துச் சொல்லவில்லை என்பது எனக்கு ஆச்சரியமே.

//லக்ஷ்மி ரொம்ப சரி முதல் ஆள் அவரும் இல்லை..கடைசி ஆளும் வரப்போவதுமில்லை..// முத்து அந்த கடைசி ஆளுமில்லைன்ற பதம் விட்டுப் போயிடுச்சு. கரெக்டா அதை எடுத்துக் கொடுத்துட்டீங்க. தனித்தனியாப் பேச சொன்னாக்கூட நாம ரெண்டு பேரும் பெரும்பாலான விஷயத்துல ஒரே மாதிரிதான் பேசுவோம் போலிருக்கு :)

அடடா... பின்னூட்டமே ஒரு தனிப்பதிவளவு வளர்ந்துடுச்சே...

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேதா. வெறுமனே உடலியல் ரீதியிலான வன்முறையை விடவும் ஆபத்தானது இப்படிப் பட்ட கருத்தியல் வன்முறை. அதிலும் எவ்வளவு நஞ்சேறிய வார்த்தைகள்? வல்லி அம்மா சொல்வது போல் படித்ததுமே ரொம்ப அருவருப்பதான் இருக்கு.

said...

வணக்கம் மேடம், ஞாபகம் இருக்கிறதா? தலைப்பைப் பார்த்து விட்டு சமூக அக்கறை உள்ள கட்டுரை என்று படிக்க வந்து, ஊசிப்போன உருளைக்கிழங்கு போண்டாவைக் கடித்து விட்ட உணர்வுடன் இந்தப் பின்னூட்டத்தை எழுதுகிறேன்.

நீங்கள் என்னை எப்படி முத்திரை குத்திப் பார்த்தாலும் நான் சொல்ல விரும்புவது ஒன்று தான். சினிமா நடிக நடிகையரின் வார்த்தைகள் முழுக்க முழுக்க வியாபார ரீதியிலானவை. விளம்பரத்திற்காக எதையும் செய்பவர்கள் அவர்கள். பத்திரிக்கையாளரும் பாதி அதே ரகம் தான். எனவே உங்களுக்கு நிஜமாகவே பெண்களின் பரிதாப நிலை குறித்து சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான சிந்தனை இருந்தால் அதிகம் வெளிச்சத்திற்கு வராத நிஜ சங்கடங்களை அனுபவிப்பவர்கள் குறித்து எழுதுங்கள்.

எத்தனை குடும்பங்களில் உங்கள் பதிவின் தலைப்பு வாக்கியம் கணவர்களால் மனைவி மீது பிரயோகிக்கப் படுகிறது தெரியுமா? அது குறித்து சிந்தியுங்கள். அதில் இருக்கும் இருபக்க நியாய அநியாயங்கள் குறித்து அலசுங்கள். போயும் போயும் சினிமாக்காரர்களின் பேச்சினை எடுத்துக் கொண்டு . . .

குற்றாலத்தில் குளிப்பதற்கு மினரல் வாட்டர் கேட்டார் என்று ஒரு நடிகை மீது பரபரப்பான பிரச்னை வந்த பழைய கதை ஒன்றினை மறந்து விட்டீர்களா? அந்த நடிகையும் அந்த யூனிட்டும் பிறகு எப்படி சமரசமானார்களாம்?

said...

//உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவரைப் பார்த்தால் எனக்கு செக்ஸுவல் ஃபீலிங் வரவேயில்லை. //

இது என்ன கிறுக்கு தனமாக இருக்கு, அப்போ அழகான பெண்களாக இருந்தால் அப்படி நடந்து கொள்வேன் என்று ஒப்புதல் அளிக்கிறாரா ?

கொடுமைங்க. 60 நாள் சூட்டில் நடந்த பிறகு தான் தான் ஒரு பெண்ணை வைத்து சூட்டிங் நடத்தவில்லை என்று ஞானோதயம் வந்ததாமா ?

தன் அடாவடியை ஞாயப்படுத்த ஒரு பெண்ணை கேவலப்படுத்தும் இந்த 'மிருகத்தின்' படங்களை புறக்கணித்து பாடங்கள் சொல்லித் தரவேண்டும்.

நல்லா எழுதி இருக்கிங்க லக்ஷமி பாராட்டுக்கள் !

said...

கோவி. கண்ணன், ரத்னேஷ் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//இது என்ன கிறுக்கு தனமாக இருக்கு, அப்போ அழகான பெண்களாக இருந்தால் அப்படி நடந்து கொள்வேன் என்று ஒப்புதல் அளிக்கிறாரா ?// இதேதான் எனக்கும் வந்த கோபம். அத்தோட இல்லாம ஒரு பெண்ணைத்தான் கதாநாயகியா போடணும்னு கூட தெரியாமதான் இந்த ஆள் படம் எடுக்கறாரா? இல்லை பத்மப்ரியாவ முன்னபின்ன பாக்காமலேயே படத்துக்கு புக் பண்ணிட்டாராமா? இல்லை இவரை கேக்காமயே போய் தயாரிப்பாளர் கதாநாயகிய ஒப்பந்தம் பண்ணிட்டு வந்துட்டாராமா?

ரத்னேஷ், ஞாபகம் இல்லாம என்ன? நல்லா ஞாபகம் இருக்கு.... உங்க பதிவுகளையும் படிச்சுகிட்டுதானிருக்கேன். ஆனா ஆழியூரான் உங்களோட பதிவுல ஒரு தரம் சொன்னாரே // மாற்ற முடியாத முன் முடிவுகளுடன் இருக்கிறீர்கள். நாமிருவரும் வாதம் செய்வது, அவரவர் கொண்டுள்ள கருத்தை மேற்கொண்டும் உறுதி செய்யவே பயன்படும்.// அப்படின்னு, அதேதான் என்னோட நிலையும்ன்றதால நான் எங்கயும் வாதத்தை துவக்கல. இப்ப நீங்க கேள்வி கேட்டாச்சு. கண்டிப்பா இதுக்கு பதில் சொல்லியே ஆகணும். அதுதான் சபை நாகரீகம்ன்றதால மட்டும் சொல்றேன். ஏன்னா இந்த விஷயத்துல நீங்க சொல்றதை நான் எப்படி ஒரு நாளும் ஏத்துக்கப் போறதில்லையோ அதே போல நீங்களும் நான் சொல்றதை ஒரு நாளும் ஏத்துக்க மாட்டீங்கன்னு நல்லாவே தெரியும் எனக்கு - ஏற்கனவே சில மூனுகால் முயல் பிரியர்களோட பேசின அனுபவம் எனக்கு இருக்கறதால இப்பல்லாம் நான் அவ்வளவா இது போன்ற கேள்விகளுக்கு எரிச்சலாகறதில்லை. அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பான்னு கவுண்டமணி ஒரு படத்துல சொல்வாரே, அது போல சகஜமா எடுத்துக்கப் பழகிட்டேன் - இந்த ஊசிப்போன போண்டோ என்பது போன்ற குதர்க்கங்களை. அதனால் அது போன்ற பர்சனல் பஞ்ச் எல்லாத்தையும் விட்டுட்டு நீங்க சொல்லியிருக்கும் கருத்துக்களுக்கு மட்டும் சுருக்கமா பதில் சொல்லிடறேன் இங்க.

ஒரு பெண் பாலியல் தொழிலாளராவே இருந்தாலும் அவங்களை வற்புறுத்தவோ இல்லை மறுத்ததற்காக வேறு விதத்தில் அவமானப் படுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை. ஒரு நடிகைன்றதால அவங்களை என்ன வேணும்னாலும் பேசிடலாமா?
//குற்றாலத்தில் குளிப்பதற்கு மினரல் வாட்டர் கேட்டார் என்று ஒரு நடிகை மீது பரபரப்பான பிரச்னை வந்த பழைய கதை ஒன்றினை மறந்து விட்டீர்களா? அந்த நடிகையும் அந்த யூனிட்டும் பிறகு எப்படி சமரசமானார்களாம்?// மன்னிக்கணும், இது போன்ற வாரமலர் கிசுகிசு சமாச்சாரங்களையெல்லாம் ட்ராக் செய்வதையும் விட உருப்படியான வேலைகள் நிறைய உண்டு எனக்கு செய்வதற்கு. நடிகர்களையும் நடிகைகளையும் பற்றியே பேசிப் பொழுதைக் கழிக்கும் ரசிகர்மன்றக் கண்மணி நான் என்று எங்கேயாவது சொல்லியிருக்கிறேனா என்ன? திரைத்துறையில் இருப்பவர்கள் சற்று விளம்பரப் பிரியர்கள்தான் என்பது எனக்கும் தெரிந்த விஷயம்தான். அதனால்தான் அந்த இயக்குனர் பத்மப்ரியாவை அடித்தது பற்றிய எனது கருத்தில் ஒன்றும் பெரிய ஆதங்கமில்லை. ஏன்னா நாளைக்கே அந்த இயக்குனர் பெரிய ஆளாயிட்டா, இந்த நடிகையே நான் அந்த இயக்குனர் கையால அடி வாங்கினதை மோதிரக் கையால குட்டுப் பட்டதா நினைக்கிறேன் அப்படின்னு பூரிச்சுப் போய் சொல்லுவாங்கன்னு எனக்கும் தெரியும். ஆனால் ஒரு பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்துவதும் அதற்கு சப்பைகட்டு கட்ட அவ ஒரு பொம்பளையே இல்லை என்று சொல்வதும் அது எதற்காகவாயிருந்தாலும் சரி - விளம்பரத்துக்காயிருந்தாலும் சரி இல்லை தனி மனித வக்ரத்தினாலிருந்தாலும் சரி நிச்சயம் கண்டிக்கப் பட வேண்டிய விஷயமே என்பதுதான் என் கருத்து.

//எத்தனை குடும்பங்களில் உங்கள் பதிவின் தலைப்பு வாக்கியம் கணவர்களால் மனைவி மீது பிரயோகிக்கப் படுகிறது தெரியுமா? அது குறித்து சிந்தியுங்கள். அதில் இருக்கும் இருபக்க நியாய அநியாயங்கள் குறித்து அலசுங்கள். போயும் போயும் சினிமாக்காரர்களின் பேச்சினை எடுத்துக் கொண்டு . . . // முதலில் ஒரு விஷயம் - நான் ஏதோ சினிமா தவிர்த்து மற்றவர்களின் பிரச்சனைகளைக் குறித்து கிஞ்சித்தும் கவலையற்று இருப்பது போல் நீங்களாக நினைத்துக் கொண்டால் அதற்கு நானொன்றும் செய்ய முடியாது. அப்புறம் நான் எதைப் பற்றி எழுதவேண்டும் என்பதை பற்றி வேறு நிறைய ஆலோசனையெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். ரொம்ப தொலைவிலிருந்து அக்கறையும் ஆர்வமுமாக வலைப்பதிகிறீர்கள் -வாழ்த்துக்கள். நீங்கள் என்ன எழுதுவது என்பதை மட்டும் நீங்கள் முடிவு செய்தால் போதுமே ரத்னேஷ் - நான் எதைப் பற்றி எழுத வேண்டுமென்பதை நானே பார்த்துக் கொள்கிறேனே - உங்களுக்கு எதற்கு வீண் சிரமம் சொல்லுங்கள்? நான் ஊசிப் போன உருளைக் கிழங்கு போண்டோவைப் பற்றியோ இல்லை மொறு மொறுப்பான வாழைக்காய் வறுவலைப் பற்றியோ இல்லை ஒருசிலரின் காமப்பசிக்குத் தன் உடலை உணவாக்கி அதன் மூலம் ஒரு குடும்பத்துக்கோ இல்லை குறைந்த பட்சம் தனக்கோ வயிற்றுக்கு உணவு தேடிக்கொள்ளும் பாலியல் தொழிலாளர்களைப் பற்றியோ(அதாங்க, உங்க பாஷைல விபச்சாரிகள்) எழுதிட்டுப் போறேன். எதைப் பத்தி பேச வர்ரேன்றது அநேகமா 2வது பத்திலயே தெரிஞ்சுடுது இல்லையா? அங்கயே நிறுத்திட்டு ஜூட் விட்ருங்க சார். அவ்ளோதான் நான் சொல்ல முடியும்.

said...

1. அந்த உதாரணம் பதிவைப் பற்றியதல்ல, உள்ளிருப்பு மேட்டர் பற்றியது என்று மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். தவறான புரிதலுக்கு வழி வகுத்து விட்டது குறித்த நிஜமான வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

2. இவ்வளவு கவலையும் ஆதங்கமும் கொண்ட சிந்தனை, இந்தத் திசையில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்கிற ஒரு நிஜ வாசக எதிர்பார்ப்பு கூடத் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது குறித்தும் எனக்கு வருத்தமே. என்ன செய்வது, இன்னும் ராமன் கட்டின பாலம் என்று நாடகங்களுக்கு முக்கியத்துவம் தந்து நிஜ மனிதர்களைப் பகைத்துக் கொள்ளும் கலாச்சாரத்தில் தானே இருக்கிறோம். (நான் சொன்ன குற்றால மினரல் வாட்டர் குளியல் சமாச்சாரம் தினமலர் வாரமலர் கிசுகிசு அல்ல; இதே போல் தினசரிகளில் வந்து விசாரணைகள் மன்னிப்பு எல்லாம் நடந்த இன்னொரு 'மிருக' நாடகம் தான்).

3. //.அங்கயே நிறுத்திட்டு ஜூட் விட்ருங்க சார்.//
அதையே செஞ்சிடறேன் மேடம். நன்றி.

said...

லக்ஷ்மி
அனல் பறக்குது :)

said...

எனக்கு சில வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது ரத்தினேஷ்.

"உனது கவிதையை நீ எழுது
எனது கவிதையை ஏன் எழுதவில்லையென்று
என்னிடம் கேட்காதே"

சரி நீங்க சொல்லி இருக்கிற மேட்டருக்கு வருகிறேன். ஏங்க அப்போ ஒரு பொண்ணு சினிமாக்குன்னு நடிக்க வந்துட்டா கொஞ்சம் முன்ன பின்ன அப்படிதான் இருக்கும். சும்மா ஊரைக் கூட்டக் கூடாது. அப்படியே ஊரைக் காட்டினாலும் யாரும் சப்போர்ட்டுக்கு போகக் கூடாது அப்படின்னு சொல்ல வருகிறீர்களா???? (நானும் சண்டைக்கு வர வில்லை. உங்கள் பாயிண்டை க்ளாரிஃபை பண்ணிக்க கேட்கறேன்)

//அதையே செஞ்சிடறேன் மேடம். நன்றி.//

ரத்தினேஷ் இதுக்காக எல்லாம் ஜூட் விடாதீங்க. லக்ஷ்மி அப்படிதான் சொல்லுவாங்க. ஆனால் அவங்க ரொம்ப நல்லவங்க. எவ்வளவு சண்டை போட்டாலும் தாங்கிக்குவாங்க. நீங்க தொடருங்க.

said...

பதிவு மற்றும் பின்னூட்ட விவாதம் அனைத்தும் வலுவான கண்ணோட்டத்துடன் உள்ளது - தொடருங்கள்...

said...

//கையேடு said...
பதிவு மற்றும் பின்னூட்ட விவாதம் அனைத்தும் வலுவான கண்ணோட்டத்துடன் உள்ளது - தொடருங்கள்...//

வழிமொழிகிறேன்.

முதலில் லஷ்மி அவர்களின் ஆவெசத்தின் நியாயாத்தை அங்கீகரிக்கீறுன். இது நடிகன் நடிகை அல்லது ஆண் பெண் என்கிற ரீதயில் பார்க்கப்பட வேண்டிய பிரச்சனை இல்லை. சமூக அதிகாரம் யாருக்கு சாதகமாக இதில் பேசுகிறது என்பதுதான் முக்கியம். அதிகாரம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நம்மைப் போன்ற ஒரேவிதமான அளவைகளையும், அனுகுமறைகளையும் கொண்டிருக்காது. நாம் தனிமனிதர்கள் என்றவகையில் ஒரு அறத்தை அவரவர் நிலையில் பேனுகிறோம். அதிகாரம் என்பது அறமற்றது. தனது இருப்பிற்காக யாரையும் பார்க்காமல் ஒடுக்கி தன்னை நிலைநிறுத்தும். இப்பிரச்சனையில் பெண் பிறதொன்றில் ஆண் இதுதான் அதன் வழக்கம். ஆணை பெண் ஒடுக்குவதோ அல்லது பெண்ணை ஆண் ஒடுக்குவதோ அல்லது யார் யார்மீது அதிகாரம் செலுத்துவது என்பதை சமூகம்தான் தீர்மானிக்கிறது. அல்லது ஆதிக்கசக்திகள். இப்பிரச்சனையும் அப்படித்தான். இதில் பெண் என்கிற வழக்கமான வரையறையே மீளாக்கம் செய்யப்படுகிறது என்பதும் ஆண் என்கிற திமிரை ஊடகங்கள் பெருக்கிக் காட்டுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மீண்டும் மீண்டும் பெண் உடலை ஒரு ஆணிய துய்ப்புக்களமாகவே இவை நிலைநிறுத்துகின்றன. அவ்வபபேது இதற்கான எதிர்பகரலை முன்வைப்பது குறைந்தபட்சம் நமது ஜனநாயகக்கடமை.

said...

நந்தா சார்,

//எனது கவிதையை ஏன் எழுதவில்லையென்று
என்னிடம் கேட்காதே//

உங்கள் கவிதையை ஏன் எழுதவில்லை என்று கேட்பதற்கும், 'இவ்வளவு சிறந்த கவிஞர், இதையும் எழுதுங்களேன்' என்று கேட்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக நான் உணருகிறேன். கருணாநிதியைத் தொல்காப்பியம் எழுதச் சொல்லி குறைந்தது பத்து ஆண்டுகளாகப் பலரும் வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். அவர் இப்படி பதிலளித்ததாக எனக்கு நினைவில்லை. மாறாக ஒரு சந்தர்ப்பத்தில் அழகான தொல்காப்பியப் பூங்கா அமைத்துக் கொடுத்தார். வைரமுத்துவையும் 'முடிந்த கூந்தல்' என்கிற தலைப்பில் பாஞ்சாலி சபதத்தினைத் தொடரச் சொல்லி அவருடைய அன்பர்கள் வலியுறுத்திய வண்ணம் இருக்கிறார்கள். . .

//ஏங்க அப்போ ஒரு பொண்ணு சினிமாக்குன்னு நடிக்க வந்துட்டா கொஞ்சம் முன்ன பின்ன அப்படிதான் இருக்கும். சும்மா ஊரைக் கூட்டக் கூடாது. அப்படியே ஊரைக் காட்டினாலும் யாரும் சப்போர்ட்டுக்கு போகக் கூடாது அப்படின்னு சொல்ல வருகிறீர்களா????//

நான் அப்படிச் சொல்லவில்லை; பெண்ணின் கேரக்டர் பற்றிய பாயிண்ட்டை நான் தொடவே இல்லை. என் சிந்தனையின் மூலையில் கூட அது இல்லை. பத்மப்ரியா என்கிற ஒரு பெண், சாமி என்கிற ஓர் ஆணிடம் அறை வாங்கி இருந்தாலோ, சாமி என்கிற ஓர் ஆண் பத்மப்ரியா என்கிற ஒரு பெண்ணைக் கேவலமாகப் பேசி இருந்தாலோ அது வன்மையாகக் கண்டிக்கத் தக்க விஷயம் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. என்னுடைய பதிவுகளில், பால் வித்தியாசமின்றி நிஜ அநியாயங்களாக உணர்பவற்றைப் பகிர்ந்து கொண்டு தான் வந்திருக்கிறேன்.

இது நிழல் சண்டை. சினிமாக்காரர்களின் பேச்சில் உண்மை இருப்பதில்லை என்று தான் சொல்லி இருக்கிறேன். இதெல்லாமே விளம்பர ஸ்டண்ட். இதன் அடிப்படையில், பொறுப்பான ஒரு சிந்தனையாளர், பெண் துன்பம் பற்றிப் பேசுவதில் மைய அழுத்தம் விலகி நீர்த்து விடும் என்கிற அக்கறையில் சொன்ன வார்த்தைகள், என் எண்ணத்தைச் சரிவர சுமக்கும் அளவுக்கு பலமாக இல்லாது போனதற்குத் தான் வருத்தம் தெரிவித்தேன்.

HOPE I HAVE MADE MYSELF CLEAR.

உங்கள் PROFILE-ல், பிடித்த திரைப்படங்களின் பெயர்ப் பட்டியலில், 'நீண்டு கொண்டே போகும்' என்று எழுதி இருக்கிறீர்கள், அப்படி ஒரு படம் வந்ததா?

said...

கையேடு - நன்றி.

அய்யனார் - போன வாரம் நீங்க ஏதோ கேட்டீங்க இல்ல? இப்ப அதுவே நடந்துடுச்சு, திருப்தியா? ;)

நந்தா - புரிதலுக்கு நன்றி.

ரத்னேஷ் - நீங்க பதிவோட உள்ளடக்கத்தைப் பற்றி சொல்றீங்கன்னு எனக்கும் தெளிவாவே புரிஞ்சதுனாலதான் //எதைப் பத்தி பேச வர்ரேன்றது அநேகமா 2வது பத்திலயே தெரிஞ்சுடுது இல்லையா? அங்கயே நிறுத்திட்டு ஜூட் விட்ருங்க சார். அவ்ளோதான் நான் சொல்ல முடியும்.// அப்படின்னு சொல்லியிருக்கேன். உங்களுக்குப் பிடிச்ச மாதிரியே எப்பவும் என்னால எழுதிகிட்டிருக்க முடியாது. எனவே, பதிவோட பேசுபொருள் உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்க மேற்கொண்டு படிக்காதீங்கன்னுதான் சொல்லியிருக்கேன். நீங்க ஒட்டுமொத்தமா என்னோட எழுத்துக்கள் எல்லாத்தையுமே குத்தம் சொல்றதா புரிஞ்சிருந்தா நான் என் பதிவுகளையே தவிர்த்துடுங்களேன்னு இல்ல சொல்லியிருப்பேன்? நான் சொல்றதை நீங்க ஒத்துக்கறதும் நீங்க சொல்றதை நான் ஒத்துக்கறதும் இந்த ஒரு விஷயத்துல மட்டும் சாத்தியமே இல்லைன்னு தெளிவா தெரிஞ்ச பின்னாடியும் மீண்டும் மீண்டும் இதுல வாதிட்டு நாமிருவருமே நேரத்தை வியர்த்தம் செய்யவேண்டாமேன்னுதான் நான் அதைச் சொன்னேன். நான் சொன்ன விதம் உங்களை புண்படுத்தும் வண்ணமிருந்தால் மன்னிக்கவும். உங்களோட சிந்தனையோட நான் ஒத்துப் போகும் புள்ளிகளும் நிறையவே உண்டுன்றதை உங்களோட பல பதிவுகளில் பார்த்திருக்கிறேன் - குறிப்பா உங்களோட பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள் அதுக்கு நீங்க தர விளக்கங்கள் எல்லாமே அருமை. அதே போல உங்களுக்கும் பெண்ணியம் தவிர்த்த மற்ற விஷயங்களில் என்னோட கருத்துக்கள் எதுனா பிடிச்சிருந்தா/ இல்ல விமர்சனமிருந்தாலும் நாம அங்க விவாதம் பண்றதுல பயனிருக்கும்னு நம்பறேன். தெளிவா முடிவு கட்டிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி பேசறதை தவிர்க்கறது நம் இருவருக்குமே நேரத்தை மிச்சப்படுத்தும்ன்றதுதான் என்னோட கருத்து.

ஜமாலன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. //அவ்வப்போது இதற்கான எதிர்பகரலை முன்வைப்பது குறைந்தபட்சம் நமது ஜனநாயகக்கடமை.// இதேதான் என்னோட நிலைப்பாடும் கூட. ஏன்னா நாம எழுதறதைப் பார்த்தெல்லாம் உலகம் திருந்திடாதுன்னு நல்லாவேத் தெரிஞ்சாலும், குறைந்தபட்சம் இது தவறான கருத்துன்னாவது உரக்கச் சொல்லிடணும்ன்றதுதான் என்னோட நோக்கமும். புரிதலுக்கும் நன்றி.

said...

//நான் அப்படிச் சொல்லவில்லை; பெண்ணின் கேரக்டர் பற்றிய பாயிண்ட்டை நான் தொடவே இல்லை. என் சிந்தனையின் மூலையில் கூட அது இல்லை. பத்மப்ரியா என்கிற ஒரு பெண், சாமி என்கிற ஓர் ஆணிடம் அறை வாங்கி இருந்தாலோ, சாமி என்கிற ஓர் ஆண் பத்மப்ரியா என்கிற ஒரு பெண்ணைக் கேவலமாகப் பேசி இருந்தாலோ அது வன்மையாகக் கண்டிக்கத் தக்க விஷயம் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. // இதுதான் உங்கள் நிலைப்பாடு எனில் நிச்சயம் நான்தான் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டேன். இதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. மன்னியுங்கள் ரத்னேஷ்.

//இது நிழல் சண்டை. சினிமாக்காரர்களின் பேச்சில் உண்மை இருப்பதில்லை என்று தான் சொல்லி இருக்கிறேன். இதெல்லாமே விளம்பர ஸ்டண்ட்.// விளம்பர ஸ்டண்ட் என்றாலுமே கூட நல்ல நடத்தையுள்ள பொண்ணு இது போன்ற குற்றச்சாட்டுக்களை சொல்ல மாட்டா என்பது போன்ற நச்சுக் கருத்துக்கள் எந்தவொரு ஊடகத்திலும் பரப்பப்படக் கூடாது என்றே நான் கருதுகிறேன். அதிலும் சினிமா போன்ற அதீத கவனிப்புக்குரிய ஊடகத்திலுள்ளோர் இது போன்ற கருத்துக்களைப் பரப்புகையில் அது இன்னும் அதிக விளம்பரமடைகிறது என்பதால் எதிர்கருத்தையும் முன்வைத்தல் அவசியமாகிறது என்பது என் நிலைப்பாடு.

// வார்த்தைகள், என் எண்ணத்தைச் சரிவர சுமக்கும் அளவுக்கு பலமாக இல்லாது போனதற்குத் தான் வருத்தம் தெரிவித்தேன்// உண்மையில் தவறாகப் புரிந்து கொண்டமைக்கு நான்தான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் ரத்னேஷ்.

said...

நந்தா சாருக்கு நன்றி.

நல்லா பாலம் போடறீங்க. எந்த இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சீங்க? எந்த 'சூது கவுத்துற' திட்டமும் இந்தப் பாலத்தைத் தகர்த்து விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

வேறு பதிவுகளில் சரியான புரிதல்களுடன் சந்திப்போம் மேடம்.

நன்றி.

said...

நல்ல விவாதங்கள். நல்ல கருத்துகள். உண்மையான புரிதல்.

வாழ்த்துகள்.லக்ஷ்மி.

said...

கொஞ்ச நேரம் பதிவு பக்கம் வராம இருந்தேன் என்னென்னமோ நடந்திருக்கே.

இந்த பதி்வின் மூலம் எப்படியோ சில நல்ல புரிதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதுக்குதான் சொன்னேன் ரத்தினேஷ். அவங்க அப்படிதான் சொல்லுவாங்க. நீங்க தொடருங்கன்னு.

//நந்தா சாருக்கு நன்றி.

நல்லா பாலம் போடறீங்க. எந்த இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சீங்க? எந்த 'சூது கவுத்துற' திட்டமும் இந்தப் பாலத்தைத் தகர்த்து விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.//

இப்போ நீங்க பாராட்டறீங்களா? இல்லை நக்கலடிக்கறீங்களான்னே தெரியலையே?

சார்னு நீங்க கூப்பிடறப்போ எல்லாம் எனக்கு என்னமோ 20 வயசு அதிகமான மாதிரி ஒரு ஃபீல் வருது. அதை மட்டும் கட் பண்ணிடுங்க.

said...

//வேறு பதிவுகளில் சரியான புரிதல்களுடன் சந்திப்போம் மேடம்// நிச்சயமாக.

ரத்னேஷ், நந்தாவோட அதே கோரிக்கைதான் என் சைட்லேர்ந்தும் - மேடம்ன்ற விகுதிய கட் பண்ணிடுங்களேன் ப்ளீஸ். வயது கூடித் தெரியறதைப் பத்தி ஒன்னும் கவலை இல்லை - ரொம்ப ஃபார்மலா இருக்கு. அதான். நந்தாவோட கவலை வேற மாதிரி - மனுஷன் பொண்ணு தேடிகிட்டிருக்கார் - இந்த சமயத்துல போய் வயச கூட்டிக் காமிக்கறாப்போல எல்லாம் பேசி அவரை எரிய விடாதீங்க ப்ளீஸ்.

நந்தா, //உங்கள் Profile-ல், பிடித்த திரைப்படங்களின் பெயர்ப் பட்டியலில், 'நீண்டு கொண்டே போகும்' என்று எழுதி இருக்கிறீர்கள், அப்படி ஒரு படம் வந்ததா?// இதைப் படிச்சதுக்கப்புறமுமா அவர் ஓடறாரா இல்லையான்னு உங்களுக்குப் புரியல? ரொம்ப அப்பாவியா இருக்கீங்களேப்பா... ;)

said...

"உனது கவிதையை நீ எழுது
எனது கவிதையை ஏன் எழுதவில்லையென்று
என்னிடம் கேட்காதே"

பின்னூட்டங்களில் எனக்குப் பிடித்த வரிகள். பதிவைப் பற்றி எழுத பயமாக இருக்கிறது

said...

வணக்கம் லஷ்மி. இந்த விஷயத்தில் என் கருத்துக்கள் சில. இயக்குனருக்கும் நடிகர்/நடிகைக்குமான உறவு (படப்பிடிப்பு இருக்கும்போது) ஆசிரியர் மாணவன் உறவுதான். அதற்காக ஒருவரை அடிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. இந்த மாதிரியான நிலை சில ஹீரோக்களுக்கும் நேர்ந்திருக்கிறது. பெயரை சொல்வது நாகரிகமாக இருக்காது என்பதால் விட்டுவிடுகிறேன்.
பத்மப்ரியா பேட்டியின் போது 'சாமி செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார்' என்று ஒரு போதும் சொல்லவில்லை. அதை பத்திரிகைகளாகவே எழுதிகொண்டன.
இருந்தாலும் பத்மப்ரியா குறித்து இயக்குனர் சாமி சொல்லியிருக்கும் வார்த்தைகள் கேவலத்தின் உச்சம். 'அவர் அழகாக இல்லை' என்கிற சாமி அப்படியான ஒருவரை ஏன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும்? ஏனென்றால் அவர் படத்தில் நடிக்க முதலில் எந்த நடிகையும் முன் வரவில்லை. பிறகு பத்மப்ரியாவிடம் கெஞ்சி கூத்தாடி நடிக்க வைத்தார்களாம்.(கேள்விபட்டது). சாமி மீது சொல்லப்படும் கேவலாமான விஷயம் அவர் 'சீப் பப்ளிசிட்டி ப்ரியர்'. அவர் உயிர் படத்தை ரிலீஸ் பண்ணும்போதே சர்சையை கிளப்பியே படத்தை ஓட்டினார்.
பத்மப்ரியா-சாமி பிரச்னையால் விளம்பரமே இல்லாமல் படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் தெரிந்துதான் சாமி பப்ளிசிட்டிக்காக இந்த அநாகரிகமான செயலை செய்தார் என்றே படுகிறது. இதுவும் ஒருவகையில் ஆணாதிக்க மனோபாவத்தின் அடங்காத கொடுமை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

said...

முதலில் இந்த பதிவைப்படித்ததும் காரமே இல்லாம சப்புனு இந்த மேட்டரை எழுதிட்டிங்களேனு நினைத்தேன் , "சாமி மனிதனே இல்லை ஒரு மிருகம் , நடுத்தெருவில் நிற்க வைத்து கல்லால் அடிக்க வேண்டும் என்ற ரீதியில் எழூதினா சும்மா அனல் அடித்திருக்குமே :-))
(எப்படி எழுதனும்னு சொல்லி தரலை இது ஒரு பேச்சுக்கு சொல்றது, கோவப்படாதிங்க)

ஆனால் இப்போது பார்த்தால் பின்னூட்டங்களில் "காரம்" தூக்கலா இருக்கு.

//வலையுலகில் கூட சமீபத்தில் இப்படியான கருத்தை ஒருவர் வாந்தி எடுத்திருந்தார்.//

இந்த பத்ம பிரியா சமாச்சாரம் எல்லாருக்குமே தெரியும் அது ஒரு விளம்பர யுக்தி என்று,அதனால் அதை விட்டுறேன், ஆனால், யாரோ ஒருப்பதிவரும் வாந்தி எடுத்தார்னு போட்டு இருக்கிங்க, அதப்பத்தி சொல்லுங்க சூடா ஏதோ மாட்டும் என்று உள்ளுணர்வு சொல்லுது :-))

said...

எப்போதும் கருத்துக்களை தெளிவாக சொல்பவர் நீங்கள்! இம்முறையும் அப்படியே கூறியுள்ளீர்கள்!! வாழ்த்துக்கள்!!

வவ்வால் அவர்கள், கூறியதுபோல தலைப்பு கொஞ்சம் சூடாக வைத்து இருக்கலாம். நம்ம லக்கிலுக் வைப்பது போல "அடி செருப்பால"னு வைத்து இருக்கணும்.

said...

சீனா, ஆடுமாடு, வவ்வால் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சீனா, சும்மா தைரியமா நினைக்கறதைச் சொல்லுங்க, காரசாரமான விவாதங்கள் இருந்தாத்தானே தமிழ்மணமும் களை கட்டும்.

ஆடுமாடு - பத்திரிக்கைகள் கொஞ்சம் கண் காது மூக்கு வைத்து எழுதுவார்கள் என்று தெரியும். ஆனா இதையெல்லாம் கூடவா அதிகப்படியா சேத்து எழுதுவாங்க? அந்த நடிகையும் எப்படி இதையெல்லாம் மறுக்காமல் இருக்கிறார்னு தெரியலை. ஆனா எது எப்படி இருந்தாலும் இப்படி ஒரு ஸ்டேட்மென்ட்டை ஒரு இயக்குனர் பத்திரிக்கைகளில் சொல்வது அருவெறுக்கத்தக்கது என்பதில் மாற்றமில்லை.

வவ்வால், // ரீதியில் எழூதினா சும்மா அனல் அடித்திருக்குமே // ஏற்கனவே அங்கங்க என்னமோ பரபரப்புக்காக மட்டுமே பெண்ணுரிமை பேசுவதா காய்ச்சிகிட்டிருக்காங்க. இன்னும் இப்படியெல்லாம் வேற எழுதினா அவ்ளோதான்.. 8->
//அதப்பத்தி சொல்லுங்க சூடா ஏதோ மாட்டும் என்று உள்ளுணர்வு சொல்லுது // தனியா மின்னஞ்சல் முகவரி கொடுங்க, சொல்றேன். நான் விவாதத்துக்கு அஞ்சறதில்லைன்னாலும் கூட தேவையில்லாம வம்பு சேர்க்க வேணாமேன்னு பாக்கறேன்.
பாராட்டுக்கு நன்றி குட்டிப் பிசாசு. செருப்பால அடி - தலைப்பு நல்லாத்தான் இருக்கு. ஆனா ஆண் உரிமைப் போராளிகள் வந்து கும்மிடுவாங்களேன்னுதான் யோசிக்க வேண்டியிருக்கு.. :)

said...

/உனது கவிதையை நீ எழுது
எனது கவிதையை ஏன் எழுதவில்லையென்று
என்னிடம் கேட்காதே"/

பசுவய்யாவின் பிரபலமான கவிதை இது.

ஒரு வரி மாறியிருக்கிறதோ.?

எழுது உன் கவிதையை நீ எழுது...
....
அதற்கு வக்கில்லாவிட்டால் ஒன்று செய்.
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
கேட்காமலேனும் இரு

(ஞாபகத்தில் இருந்து எழுதுவது).

said...

//(ஞாபகத்தில் இருந்து எழுதுவது)//

யானும் அவ்வண்ணமே கோரும்.

said...

// குறைஞ்ச பட்ச பெண்கள் செய்கிற தவற்றை தலைப்பு செய்தியாக்கி பேசவருகிறார்கள்// இப்படி முத்துலட்சுமி அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்! மண்ணிக்கவும்! பதிவாகும் வழக்குகளில் 70% பொய் வழக்குகள் தான்! இது பற்றி நிறைய செய்திகள் விளக்கங்கள் வந்திருக்கின்றன. வன்கொடுமை ச்ட்டம் என்று பெயர் இதற்கு. மாமனார்,மாமியார், நாத்தனார்,கொழுந்தன் என அனைவரையும் உள்ளே வைக்க கூடிய கொடிய சட்டம் இது. நல்ல சட்டம் இப்படி ஆகி விட்டது. ஒரு உண்மை கதை, எங்கள் குடும்பத்தில் நடந்தது. நடந்து கொண்டிருக்கிறது. கேளுங்கள், எனது மனைவியின் சகோதரி திருமணம் ஆகி சென்றார். சிறிது நாட்களில் அந்த பெண் திரும்பி வருகிறாள், கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதை அறிந்து! இந்த பெண் மற்றும் நாங்கள் அவனை தண்டிக்க விரும்புகிறோம், வக்கீலிடம் கலந்து ஆலோசித்தோம், மகளிர் காவல் நிலைய அதிகாரிகளிடமும்தான்! அவர்கள் சொல்கிறார்கள், நாமே அவருக்கு ஏற்கனவே திருமனம் ஆனதை சொல்லி வழக்கு போட்டால், தெரிந்தே தான் இரண்டாம் தாரமாக கொடுத்தோம் என்று வாதாடுவார்கள், கேஸ் நிக்காது, அவர்களுக்கு சாதகமாக போய் விடும். வன்கொடுமை (வரதட்சினை) சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால் (பொய்யாக!)தண்டனை நிச்சயம்! என்று சொல்கிறார்கள். வழக்கு நடக்கிறது, அந்த குடும்பமே கண்டிசன் பெயிலில் இருக்கிறது இப்போது. இந்த கேசில் அவனுக்கு தண்டனை வேண்டியதுதான், ஆணால் எனக்கு அப்பொழுது வக்கீல் மற்றும் காவல் அதிகாரிகள் மூலமாக தெரியவந்தது இதுதான், இந்த சட்டங்கள் 70% தவறாகவே பிரயோகம் செய்ய படுகிறது என்பது. ஹூம்!! இன்னொன்று, இந்த உலகத்தில் ஒரு பெண்ணை சட்டென்று இழிவாக பேசுவது அவளின் நடத்தையை தவறாக பார்ப்பது போன்ற குணங்கள் ஆண்களை விட பெண்களிடமே அதிகமாக இருக்கின்றது. பெண்களை பெண்களிடமிருந்து காப்பாற்ற சட்டங்கள் தேவை. பெண்களுக்கு பாதுகாப்பு பெண்கள் அல்ல, ஆண்களே, முக்கியமாக கணவன், இல்லை சகோதரர்கள்! இது பற்றி எல்லா பெண்களின் கருத்தையும் அறிய விரும்பும்...சிவாஜி தி பாஸ்

said...

பத்திரிக்கை (அ)தர்மப்படி அவுங்க சொன்னது சொல்லாதது, சொல்ல நினைச்சதுன்னு கலந்துகட்டி எழுதிருவாங்க.

மிருகத்துக்கு இது விளம்பரமாப்போச்சு.

அந்தப்பொண்ணைப்பத்தி அசிங்கமா தூத்திவாருனவர் நடிகர் சங்கத்துலே,
மன்னிப்புக் கேட்டுட்டாராம். சொன்னதெல்லாம் ரப்பர் வச்சு அழிச்சாச்சு.

பெத்தபிள்ளைகளையே அடிக்கக்கடாதுன்னு இங்கே சட்டம் சொல்லுது.

ஆனா 'சாமி' அடிக்கலாம்(-:

வல்லி சொன்னதுபோல அருவருப்பா இருந்துச்சு.

Anonymous said...

// இன்னொன்று, இந்த உலகத்தில் ஒரு பெண்ணை சட்டென்று இழிவாக பேசுவது அவளின் நடத்தையை தவறாக பார்ப்பது போன்ற குணங்கள் ஆண்களை விட பெண்களிடமே அதிகமாக இருக்கின்றது. பெண்களை பெண்களிடமிருந்து காப்பாற்ற சட்டங்கள் தேவை.//

பொதுவாக, பெரும்பாலாக ஆண்களின் பிரதினிதியாக செயல்படுவது பெண்கள் என்பது தான் கசப்பான உண்மை., உதாரணமாக அப்பா தன் பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பதை, அம்மா மூலியமாக நிறைவேற்றுகின்றார். இப்படி நிறைய....

மேலும் பெண்களே, பெண்களைப்பற்றி மோசமாகப்பேசக் காரணம், பெண்கள் தான் இவற்றையெல்லாம் வீட்டில் இருந்து கவனிக்கின்றார்கள், உதாரணமாக ஒரு மகள் கெட்டுப்போனால், அந்த குடும்ப ஆண்கள் "என்னத்த நீ பெண்ணை பார்த்துக்கொண்டாய், வளர்த்தாய்" என்று கேட்பார்கள், தாய் மொழி, தாயைப்போல் பெண், etc, etc.. இப்படி நிறைய பெண்ணை மையப்படுத்தி உள்ளது..., இப்படி நல்லவை என்பது பெண்ணை சார்ந்தது போல், இப்படி பேசுவதும் பெண்ணை சார்ந்தது, அவள் நல்லவள் என்று அவளைப்பற்றி அறியாத ஒரு ஆண் கூறமுடியுமா? அதுபோல் தான், இதுவும்... தெரிந்தவர்கள், கவனிக்கின்றவர்கள் தான் பேசமுடியும்.

பேசாமல் இருக்க வேண்டியது தானே என்றால், குடும்பத்தைக்கூட பார்த்துக்கொள்ள மாட்டேன் என்கிறாள் என்பீர்கள், பிறரைப்பற்றி(தன்னைச் சார்ந்தில்லாதவர்கள்) ஏன் பேசற என்கின்றீர்களா? அப்படி ஆண்கள் கூடத்தான் பேசுகின்றார்கள், இந்த ஊரே கெட்டுப்போச்சி, ஜநநாயகம் சரியில்லை, அட்டி சரியில்லை என்று.. அது மனித குணம், பெண்ணைப்பற்றி குறை பேசுவதால் மட்டும் தவறாகுமா?

// பெண்களுக்கு பாதுகாப்பு பெண்கள் அல்ல, ஆண்களே, முக்கியமாக கணவன், இல்லை சகோதரர்கள்! இது பற்றி எல்லா பெண்களின் கருத்தையும் அறிய விரும்பும்...சிவாஜி தி பாஸ்//

பெண்களுக்கு பாதுகாப்பின்மையை உணர்த்துவது, பாதுகாப்பை தகர்ப்பது பெண்கள் அல்ல, எனவே ராட்சன்களுடன் போர் புரிய ராட்சன்களை துணைக்கு சேர்ப்பது தான் புத்திசாலித்தனம்,அதை விட்டுவிட்டு மனிதனிடம் போய் நின்றால்(பாதுகாப்பை தேடினால்) அது ஆகுமா? என்ன போங்க சின்னபிள்ளைத்தனமா!

சினிமா, மேல் தட்டு, கீழ் தட்டு, பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், நடிகை, நடிகன் எல்லாவற்றையும் மீறி நாமெல்லாம் மனிதர்கள் இல்லையா, மனிதம் வேண்டுமென்பதே குறிக்கொலேயன்றி, அது யாருக்கு வேண்டும் என்பது அல்ல... அப்படி ஒரு சூழலில் இப்படி சட்டங்களை தவறாக பிரயோகம் செய்வது, பெண் அடிமைத்தனம் எல்லாம் ஒழியும்....

said...

//தெரிந்தே தான் இரண்டாம் தாரமாக கொடுத்தோம் என்று வாதாடுவார்கள், கேஸ் நிக்காது, அவர்களுக்கு சாதகமாக போய் விடும். வன்கொடுமை (வரதட்சினை) சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால் (பொய்யாக!)தண்டனை நிச்சயம்! என்று சொல்கிறார்கள். வழக்கு நடக்கிறது,//

சிவாஜி த பாஸ் நீங்க கிணற்றுத் தவளையாகயிருக்கிறீர்கள்.

PS: லக்ஷ்மி உங்களுக்கு ஒரு கமெண்ட் சேவ் பண்ணிக் கொடுத்திருக்கேன்.

said...

துளசி, சுந்தர், இ.கா.வள்ளி, மோகன் - அனைவருக்கும் நன்றி.

துளசி - //சொன்னதெல்லாம் ரப்பர் வச்சு அழிச்சாச்சு.// பேசாம நாமளும் ரமணா ஸ்டைல்ல சொல்லிட வேண்டியதுதான், தமிழ்ல எங்களுக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்புன்னு :)

சிவாஜி த பாஸ் - // இந்த கேசில் அவனுக்கு தண்டனை வேண்டியதுதான்// நீங்கள் உங்கள் சம்பந்தப் பட்ட ஒரு கேசில் தவறாக ஒரு சட்டத்தை உபயோகிப்பதற்கும் ஒரு நியாயமான காரணமிருப்பதை உணர்ந்திருப்பதால் இப்படிச் சொல்கிறீர்கள், இல்லையா? உங்கள் மைத்துனியின் வழக்கும் அந்த 70% தவறான உபயோகக் கணக்கில்தானே வருகிறது? இப்படியே உள்புகுந்து பார்த்தால் அங்கே இருக்கும் ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு நியாயமான காரணம் இருக்கலாம்தானே? வெளியிலிருந்து பார்க்கும்போது உங்கள் குடும்பம் சம்பந்தப்பட்ட வழக்கில் கூட இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதாகத்தானே தெரியும்? உண்மையென்ன என்பது சம்பந்தப் பட்ட உங்கள் குடும்பத்திற்கு மட்டும்தானே தெரியும்? எனவே 70% அநியாய வழக்குதான் என்கிற முடிவுக்கு ஏன் வருகிறீர்கள் சி.த.பா? அதிலும் பெரும்பான்மையான வழக்குகளுக்கு இப்படி ஒரு வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத ஒரு நியாயத்தை நிச்சயமாக அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஏனென்றால் எந்தக் காரணத்திற்காகவாயிருந்தாலும் ஒரு பெண் கணவன் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுத்துவிட்டால் அவளது வாழ்கையே தலை கீழாகிவிடும் அபாயம் உண்டு. அதன் பின்னர் அவள் எதிர்கொள்ள வேண்டிய அபாண்டங்கள் இச்சமூகத்தில் அதிகம். அதையும் மீறி ஒரு பெண் வழக்குத் தொடுக்கிறாள் என்றால் , நிச்சயமாக அதன் பின்னால் ஒரு காரணமிருக்கும்.
//பெண்களை பெண்களிடமிருந்து காப்பாற்ற சட்டங்கள் தேவை// அதே வரதட்சணை ஒழிப்பு சட்டத்திலும் கணவர், மாமனார், மைத்துனர் போன்ற ஆண்களை மட்டுமல்ல மாமியார், நாத்தனார் என்று அதற்கு துணைபோகச் சாத்தியமுள்ள பெண்களையும் கைது செய்ய வழியிருப்பதை நீங்களே சுட்டியுள்ளீர்கள்.
அத்தோடு சகோதரி வள்ளி மிக அருமையாக உங்களின் இக்குற்றச்சாட்டிற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதை நானும் வழிமொழிகிறேன்.

//சினிமா, மேல் தட்டு, கீழ் தட்டு, பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், நடிகை, நடிகன் எல்லாவற்றையும் மீறி நாமெல்லாம் மனிதர்கள் இல்லையா, மனிதம் வேண்டுமென்பதே குறிக்கொளேயன்றி, அது யாருக்கு வேண்டும் என்பது அல்ல... அப்படி ஒரு சூழலில் இப்படி சட்டங்களை தவறாக பிரயோகம் செய்வது, பெண் அடிமைத்தனம் எல்லாம் ஒழியும்....//அற்புதமான கருத்து. இதுவேதான் என் நிலைப்பாடும்.

மோகன், உங்க உள்குத்து என்னான்னு எனக்குப் புரியலை. தயவு செய்து விளக்கவும் - அட்லீஸ்ட் தனி மடலிலாவது. ;)

said...

\\சிவாஜி - The Boss! said...
// குறைஞ்ச பட்ச பெண்கள் செய்கிற தவற்றை தலைப்பு செய்தியாக்கி பேசவருகிறார்கள்// இப்படி முத்துலட்சுமி அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்! மண்ணிக்கவும்! பதிவாகும் வழக்குகளில் 70% பொய் வழக்குகள் தான்! //

பதிவாகும் வழக்குகள் என்று எடுத்துக்கொண்டு பர்செண்டேஜ் சொல்லவில்லை நான் ...இன்னமும் கூட குறைஞ்ச பட்ச பெண்களுக்குத்தான் கொடுமைக்கு ஆளாகிற நேரத்தில் கோர்ட் படி ஏற தைரியம் வருகிறது. இன்னமும் குடும்பங்களில் எத்தனை இருந்தாலும் தன் குழந்தையை கொன்று விட்டு தானும் தூக்கில் தொங்கும் பெண்கள் தான் தினமும் பேப்பரில் அதுவும் தில்லி போன்ற பெருநகரங்களிலேயே நடக்கிறது. இன்றைய பேப்பரில் வீட்டு வாசலில் தன் மனைவியை வரதட்சனை கொண்டுவராத காரணத்திற்காக பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருக்கிறார் ஒரு கருணை மிகும் கணவர்.. அவர் தன் மனைவியை கோர்ட் படி ஏறி இப்படி உங்கள் வாயில் விழாமல் தப்பிக்க செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.( பெற்றோர்கள் பெண்களை அதிகம் திருப்பி ஏற்றுக்கொள்வதில்லாத காரணத்தால் தான் தற்கொலை முடிவை சில பெண்கள் எடுக்க வேண்டி நேருகிறது .) உங்களுக்காக உட்கார்ந்து குடும்ப நல கோர்ட்டில் எத்தனை குடும்பங்கள் தினம் வருகின்றன அதில் நியாய அநியாய கேஸ் எத்தனை.. நாட்டில் மொத்தமாய் எத்தனைகுடும்பங்கள் இருக்கின்றன அவற்றில் எத்தனை கோர்ட்டுக்குவ்ருகின்றன எத்தனை நல்ல பெண்கள் இன்னமும் கொடுமைகளை சகித்த படி வாழ்கிறார்கள் என்று சரியான விகிதாச்சாரம் புள்ளிவிவரம் அளிக்க முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்..

said...

//பதிவாகும் வழக்குகள் என்று எடுத்துக்கொண்டு பர்செண்டேஜ் சொல்லவில்லை நான் ...இன்னமும் கூட குறைஞ்ச பட்ச பெண்களுக்குத்தான் கொடுமைக்கு ஆளாகிற நேரத்தில் கோர்ட் படி ஏற தைரியம் வருகிறது.// மிகச்சரியான வாதம் முத்து. உண்மையில் நடக்கும் கொடுமைகளுக்கே கோர்ட்டுக்குப் போகத்துணியாதவர்கள், எத்தனை பேர் பொய் வழக்குப் போடத் துணியப்போகிறார்கள்?

said...

//மோகன், உங்க உள்குத்து என்னான்னு எனக்குப் புரியலை. தயவு செய்து விளக்கவும் - அட்லீஸ்ட் தனி மடலிலாவது. ;)//

இந்த பேசினா பொதுக்கூட்டம் நடந்தா ஊர்வலம்னெல்லாம் சொல்லிக்கறாங்களே, அப்படி நான் பின்னூட்டம் போட்டாலே உள்குத்தா!

----------

//இப்படியே உள்புகுந்து பார்த்தால் அங்கே இருக்கும் ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு நியாயமான காரணம் இருக்கலாம்தானே?//

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது இதை நம்ம IPC தானே சொல்கிறது. யாராவது ஆம்பிள்ளை(!) வழக்குரைஞர் வந்து பதில் சொல்லலாம்.(இல்லாட்டி அதுக்கு வேற வம்புக்கு வருவாங்க்ய) கற்பனைகள்(தானேக்கள்) வழக்குக்கு உதவ முடியாது அப்படி உதவினால் உண்மையிலேயே நம்ம சட்ட அமைப்பில் ஏதோ பிரச்சனை இருப்பதாக அர்த்தம்(அப்பாடி திமுகவில் சேர்ந்துடலாம்)

//மிகச்சரியான வாதம் முத்து. உண்மையில் நடக்கும் கொடுமைகளுக்கே கோர்ட்டுக்குப் போகத்துணியாதவர்கள், எத்தனை பேர் பொய் வழக்குப் போடத் துணியப்போகிறார்கள்?//

கிணற்றுத்தவளைத்தனம்!
(இன்னிக்கு ஒரு புதுவார்த்தை கண்டுபிடிச்சாச்சு)

said...

//"நீ எல்லாம் ஒரு பொம்பளையா?"//

தலைப்பு சூப்பர்

said...

பொய் வழக்கு போடறவங்க இருக்கிறாங்க லக்ஷ்மி.

அத‌னால் அவ‌திப்ப‌டும்
ம‌ரியாதைக்குரிய‌ குடும்ப‌ங்க‌ளைப் பார்த்திருக்கிறேன்.

ரெண்டு குடும்ப‌ங்க‌ள் என்னுடைய‌ க‌வுன்சிலிங்கில் உணர்ந்து ச‌ரியாகி சேர்ந்து இருக்கிறாங்க‌.

இந்த‌ த‌லைப்பு என்ன‌ எல்லா இட‌த்தில‌யும் இருக்கிற‌து.

ம‌ர‌த்துப்போகும் ம‌னித‌ உற‌வுக‌ளாயிடும் போலிருக்கே:-)

இது உங்க‌ளுக்கு எழுதும் ஏழாவ‌து ப‌தில்.

ச‌ரியா எழுதி வெச்சு க்ளிக் செய்ய‌ற‌ப்போ க‌ணினி போயிடும்
இன்றைக்கு எப்ப‌டி பார்க்க‌லாம்.

said...

சிவா, ஒரு போட்டி நடத்தலாம்னு இருக்கேன் - மொத்தம் இந்தத் தலைப்பில் எத்தனை பதிவு வந்திருக்குன்னு சரியாக் கண்டுபிடிச்சுத் தரவங்களுக்கு எதுனா பரிசு அறிவிக்கலாமான்னு பாக்கறேன். :)

மோகன் - //கற்பனைகள்(தானேக்கள்) வழக்குக்கு உதவ முடியாது // அப்ப இனிமே % அப்படின்னு ஜல்லியடிக்கும் போதெல்லாம் எந்த ஆராய்ச்சி அடிப்படைல அதை சொல்றீங்கன்றதையும் இனி அடிக்குறிப்பா சொல்லிடுங்க. சரியா? ;)

மதுமிதா - சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனையொத்த பொறுமை மற்றும் விடாமுயற்சியோடு இங்கு உங்கள் கருத்தை எடுத்து வைத்தமைக்கு நன்றி. நான் நிச்சயம் சில இடங்களில் இவ்வகை சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படலாம் என்பதற்கான சாத்தியக் கூறுகளை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதற்குத் தேவை கடுமையான கண்காணிப்பும், பாதிக்கப் படுபவர்கள் தங்கள் நிலையை விளக்கக் கூடுதல் வாய்ப்பும் தானே தவிர இச்சட்டங்களையே இகழ்வது அல்ல. காரணம் மோகனின் சொல்வது போல பல குற்றவாளிகள் தப்பிச் செல்லலாம். ஆனால் ஒரு குற்றமற்ற அப்பாவிப் பெண் உயிரிழந்துவிடக் கூடாதில்லையா? அத்தோடு பெரும்பான்மையும் இவை துஷ்ப்பிரயோகம் செய்யப்படுகின்றன என்பதும் போகிற போக்கில் போட்டுவிட்டுப் போகும் ஒரு அபாண்டமாகவே இருக்கிறது. வரதட்சினைக்காக எரித்துக் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை கொஞ்சமேனும் குறைந்திருப்பது நிச்சயமாய் இக்கடுமையான சட்டங்களின் பலன் தான். அதை எக்காரணம் கொண்டும் மறுத்துவிட முடியாது.

said...

//மோகன் - //கற்பனைகள்(தானேக்கள்) வழக்குக்கு உதவ முடியாது // அப்ப இனிமே % அப்படின்னு ஜல்லியடிக்கும் போதெல்லாம் எந்த ஆராய்ச்சி அடிப்படைல அதை சொல்றீங்கன்றதையும் இனி அடிக்குறிப்பா சொல்லிடுங்க. சரியா? ;)//

இதுவரைக்கும் இதைப் பார்க்கலை!

ஒருவர் செய்யும் தவறுக்கு காரணம் இன்னொருவர் அதே தவறு செய்கிறார் என்பதாக இருக்க முடியாது ;)

//பல குற்றவாளிகள் தப்பிச் செல்லலாம். ஆனால் ஒரு குற்றமற்ற அப்பாவிப் பெண் உயிரிழந்துவிடக் கூடாதில்லையா? அத்தோடு பெரும்பான்மையும் இவை துஷ்ப்பிரயோகம் செய்யப்படுகின்றன என்பதும் போகிற போக்கில் போட்டுவிட்டுப் போகும் ஒரு அபாண்டமாகவே இருக்கிறது. வரதட்சினைக்காக எரித்துக் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை கொஞ்சமேனும் குறைந்திருப்பது நிச்சயமாய் இக்கடுமையான சட்டங்களின் பலன் தான். அதை எக்காரணம் கொண்டும் மறுத்துவிட முடியாது.//

நல்லாயிருக்குங்க உங்க விளக்கம் சூப்பராயிருக்கு இதெல்லாம் உங்கள் 'லட்சிய' சமுதாயத்திற்கு வேண்டுமானால் சரியாகவரலாம். ஆவி தீபாவளி மலரில் ஒரு ஆர்ட்டிக்கிள் வந்திருக்கு முடிஞ்சா படிச்சுப்பாருங்க!