Tuesday, March 27, 2007

பெண்களின் பொருளாதர முன்னேற்றம்

அவள் விகடனின் இந்த இதழில் இப்படி ஒரு கட்டுரை வந்திருக்கிறது - அளவு கடந்த சுதந்திரம் பெண்களை சீரழிக்கிறதா என்பது அதன் தலைப்பு.

சமீபத்தில் சென்னையில் ஒரு விழா மேடையில், "அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது..". என்றும் "பன்னாட்டு நிறுவனக்களில் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் பெறும் பெண்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமான நிலைக்குப் போகிறது" என்றும் சொல்லியிருக்கிறார் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜகதீசன். மத்திய அமைச்சர்... அதுவும் ஒரு பெண் தலைவர்... வெளியிட்டுள்ள இந்தக் கருத்தின் உள் அர்த்தங்களைச் தேடி, ஒரு அரோக்கியமான விவாதத்தை துவங்கி வைத்தோம்..

இப்படி ஆரம்பிச்ச கட்டுரைல சில பெண்களிடம் கருத்து கேட்டிருந்தாங்க. அவங்களும் கருத்து சொல்லியிருந்தாங்க. எல்லாம் சரி. சுப்புலட்சுமி அம்மாவோட இந்த கருத்து வேலைக்கு போற பொண்ணுங்க எல்லாம் நடத்தை கெட்டு போனவங்கன்னு காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திரர் சொன்னதுக்கு எந்த விதத்துல குறைஞ்சதுன்னு எனக்கு தெரியலை. சொன்னவங்க ஒரு பொண்ணுன்றதாலயே இத பெரிய விஷயமா எடுத்துக்க வேண்டியதில்லயா என்ன? அந்த பத்திரிக்கையே சொல்வது போல ஒரு பெண் தலைவர் அதுலயும் சமூக நீதித்துறைக்கு அமைச்சரா இருக்கிறவர் இப்படி பேசுவது எந்த விதத்துலயும் ஏத்துக்க கூடியதில்லை. இதுக்கு மேல அவங்க இன்னொரு விளக்கமும் கொடுத்திருக்காங்க. சமீபத்துல புனேல நடந்த போதை விருந்துல பெண்களும் மாட்டினதுனால இந்த சமூக சீரழிவை பத்தி கவலைப்பட்டதாகவும் அதுனாலதான் இப்படி பேசினதாகவும் சொல்லியிருந்தாங்க.

இவங்க சொல்ற இரண்டு விஷயமுமே தப்பா இருக்கு. முதல் விஷயம் பணம் நிறைய சம்பாதிக்கறவங்க கெட்டுப்போறாங்கன்றது. இதை இரண்டு பாலினத்தவருக்கும் பொதுவாக வைத்துப்பார்த்தாலே ரொம்ப அபத்தமான கற்பிதமாகத்தான் இருக்கும். போதைப்பொருள் புழக்கம்ன்றது, சமூகத்தில் எல்லா தட்டுக்களிலும் அவங்கவங்களோட பொருளாதார வசதிக்கேத்த உருவத்துல இருக்கு. ஆக, 50 ஆயிரத்துக்கு மேல சம்பாதிச்சா போதைக்கு அடிமையாயிடுவாங்கன்னு குதிக்கறதெல்லாம் ரொம்ப அபத்தமா இருக்கு.

அடுத்தது பெண்களுக்குத்தானே அதிக பிரச்சனை வரும் அதுனால அவங்கதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் அப்படின்ற வாதம். இது வந்து நம்ம டி.ஆர் அவரோட படங்கள்ள, தங்கச்சிங்க கிட்ட சொல்லுவாரே - முள்ளு மேல சேலை விழுந்தாலும் சேலை மேல முள்ளு விழுந்தாலும் கிழியப்போறதென்னவோ சேலைதாம்மான்னு, அந்த ரகம். அதிக பிரச்சனைன்றாங்களே அது என்னனு பார்த்தால் - அந்த நிலைல பெண்களை உடல் ரீதியான பலாத்காரத்துக்கு உட்படுத்திட்டா என்ன செய்ய முடியும்ன்றதுதான் இவங்களோட முக்கிய கவலை. என்னவோ போதைல இருக்கறப்ப மட்டும்தான் இந்த பாலியல் பலாத்காரங்கள் நடந்துடற மாதிரி பேசுவதை பார்த்தால் என்ன சொல்றதுன்னே தெரியலை. இப்போ போதைல இருக்கும் ஒரு பையனிடம் பர்ஸை திருடிட்டு அவனை அடித்து போட்டுவிட்டு போனால் அவனுக்கு என்ன பாதிப்பு இருக்குமோ அதே போல ஒரு பெண்ணின் இந்த பிரச்சனையும் பார்க்கற எண்ணம் சமூகத்துல எல்லாருக்கும் வந்துட்டாலே போதுமே எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுமே, அதையேன் யாருமே யோசிக்கறதில்லை?

அவங்களோட இந்த கருத்தை இன்னொரு விதமா பார்க்கலாம். பொதுவாவே ஏதாவது ஒரு துறைல அதிக அதிக பணப்புழக்கமோ அல்லது அதிக புகழ் கிடைப்பதற்கான வாய்ப்போ இருந்தால் அந்த துறையின் மீதான சமூகத்தின் பார்வை கொஞ்சம் கடுமையடைஞ்சுடறது வாடிக்கை. இதுக்கு மிகச்சிறந்த உதாரணம் சினிமா. அந்த துறையின் பணப்புழக்கமும் அது கொடுக்கற புகழும் மத்தவங்களை எவ்வளவும் எரிச்சலடைய வச்சிருக்குன்றதை பத்திரிக்கைகள் அவங்களை பத்தி வெளியிடற கிசுகிசுக்களை வச்சே தெரிஞ்சுக்கலாம். வாரமலர் கிசுகிசுக்களை எப்பவாவது படிச்சிருக்கீங்களா? அதுல அவங்க நடிகர்களை குறிப்பிடும் விதமே அவங்களோட வயத்தெரிச்சலோட அளவை காமிச்சுடும். அது போல இப்போ சமூகம் மென்பொருள் துறையையும் பார்க்க ஆரம்பிச்சுட்டதுக்கான அறிகுறிகள் பத்திரிக்கை செய்திகளிலிருந்து ஒரு ஆட்டோ ஒட்டுனர்களின் அடாவடியான பேச்சுக்கள் வரை எல்லாத்துலையும் நல்லாவே தெரியுது. சமீபத்துல ஒரு பதிவர் என்னவோ நாரயணமூர்த்தியும் அஸிம் ப்ரேம்ஜியும் ஒவ்வொரு க்யூபிக்கலுக்கும் வந்து ஊத்திக்கொடுத்துட்டு போறா மாதிரி ஒரு பதிவு போட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தார். இப்போ இந்த அம்மா பேசும் தொனி கூட அப்படித்தான் இருக்கு.

முன்னாடியெல்லாம் பெண்கள் நர்சிங், ஆசிரியப்பணி என்று ஒரளவு நல்ல வருவாய் தரும் அதே நேரத்தில் தங்களின் தனித்துவமென்று நம்பவைக்கப்பட்ட தியாக/சேவை உணர்வுகளை விட்டு விடாத வேலைகளை பெரும்பான்மையாக செய்து வந்த போது வராத எதிர்ப்பு இப்போது வருவதன் காரணம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். பொருளாதார ரீதியில் மிக அழுத்தமாக காலூன்ற உதவும் அதே நேரத்தில் தங்கள் ஆளுமையையும் ஆண்களுக்கு இணையானதாக எல்லா விதத்திலும் (வேலை நேரத்திலிருந்து எதிலும் இந்த துறையில் பெண் என்பதற்காக தனி சலுகையெல்லாம் கிடைக்காது) வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கும் இந்தத்துறையில் பெண்களின் எண்ணிக்கை கூடுவது ஒரு நல்ல சமூக மாற்றத்துக்கான அறிகுறி. எப்பவுமே மாற்றங்கள் ஆரம்பிக்கும் போது இந்த மாதிரி புலம்பல்கள் சகஜம்தான். நாம இதையெல்லாம் உதறித்தள்ளிட்டு போக வேண்டிய தொலைவு அதிகம்.

28 comments:

said...

நான் பின்னூட்டம் போடலாமா?

said...

இந்தப் பதிவை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.
http://www.desipundit.com/2007/03/27/pengal/

said...

ஆமாம்!!
லட்சுமி=லக்ஷ்மி யா?
:-))

said...

நல்ல பதிவு லக்ஷ்மி

//சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜகதீசன்//

ஹ்ம்ம் என்ன சொல்ல...

நீங்க சொன்ன மாதிரி இது எல்லாம் உதரி தள்ளிவிட்டு போக வேண்டியதுதான்..

டீச்சர், நர்ஸ் வேலையை தாண்டி எதுலேயும் கால் வைக்க கூடாதுன்னு நினைக்குற ஆத்மாக்கள் இன்னும் இருக்காங்க ...

said...

சுப்புலட்சுமி அம்மாவோட இந்த கருத்து வேலைக்கு போற பொண்ணுங்க எல்லாம் நடத்தை கெட்டு போனவங்கன்னு காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திரர் சொன்னதுக்கு எந்த விதத்துல குறைஞ்சதுன்னு எனக்கு தெரியலை. //

எக்சாம்பிள் சூப்பர் :-) இந்த உளறல்களை எல்லாம் யார் கண்டுக்கிறாங்க?

said...

பொதுத்துறைல, அதுவும் பெரிய பதவுல இருக்குறவங்க சொல்லும் போது வேதனையா இருக்குது. பெண்ணே பெண்ணை இழிவு படுத்துதல் போலாகிவிடுகிறது. கெட்டுப்போணும்ன்னா 50 ஆயிரம் தேவையில்லை என்று தெரியாத வயதா அவர்களுக்கு... எப்போ பெண் பெண்ணை தன்னில் ஒருத்தியா மதிக்கிறாங்களோ அப்போ தான் இந்த பேசமை நீங்கும்

said...

நல்ல கட்டுரை லக்ஷ்மி. இன்னும் அவள் படிக்கலை. படித்துப் பார்க்கணும்...

Anonymous said...

நல்ல கருத்தை, துணிவாய், தெளிவாய் சொல்லிருக்கீங்க லக்ஷ்மி!

said...

பொன்ஸ், மதுரா, மங்கை , ராமச்சந்திரன் உஷா, காட்டாறு, டுபுக்கு, வடுவூர் குமார் - அனைவருக்கும் நன்றி.
மோகன் தாஸ் - ஆரோக்கியமான விவாதத்திற்கு எப்போதுமே நான் தயார். விவாதத்தின் போக்கையொட்டி சில சமயங்களில் நான் அயர்ந்து போய் போதும் சாமி போட்டதுண்டு. ஆனால் எப்போதும் எதிர்கருத்துக்களே இருக்ககூடாதென்று எண்ணியதில்லை. எனவே, தாராளமாக நீங்கள் பின்னூட்டமிடலாம்.
வடுவூர் குமார் - லெட்சுமி என்கிற முத்து லெட்சுமி முதலில் லெட்சுமி என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தார். பிறகு நான் லக்ஷ்மி என்ற பெயரில் எழுத ஆரம்பித்த போது பெயர் குழப்பத்தை தவிர்க்க இப்போது தன் முழுப்பெயரையும் உபயோகிக்கிறார். அவ்ளோதான் விஷயம். இப்போ தீர்ந்ததா உங்கள் குழப்பம்?

said...

ஒரு வேளை சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு நம்மால் இந்த அளவு சம்பாதிக்க முடியலையே என்ற பொறாமையா இருக்கும்.

//அடுத்தது பெண்களுக்குத்தானே அதிக பிரச்சனை வரும் அதுனால அவங்கதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் அப்படின்ற வாதம்.//

"ஆமா நாங்க அப்படித்தான் அசிங்கமா நடந்துக்குவோம். வேணும்னா பெண்கள் அடங்கிப் போய்க்கோங்க" இப்படி சொல்ற ஆளுங்க தான் அந்த மாதிரி சொல்ல முடியும்.

சரி விடுங்க. சங்கராச்சாரியார் போன்றவர்களை எல்லாம் திருத்த முடியாது.

நல்ல கட்டுரை லட்சுமி.

said...

லஷ்மி
நான் இந்தக்கட்டுரையைத்தான் மேலோட்டமாக என் பதிவில் குறிப்பிட்டேன். விவரமாக பிறகு எழுதலாம் என்று நினைத்தேன். நீங்கள் எழுதியதற்கு நன்றி. அளவுக்கதிகமான சுதந்திரம் என்பதே நகைப்புக்கு உரியது. சுதந்திரத்திற்கு ஏது அளவு? விட்டுத்தள்ளுங்கள்

said...

வேலை நேரத்திலிருந்து எதிலும் இந்த துறையில் பெண் என்பதற்காக தனி சலுகையெல்லாம் கிடைக்காது-
இல்லை பெண்களுக்கென பல சலுகைகள் அளிக்கப்படுகின்றன. உதாரணமாக பிரசவத்திற்கான விடுப்பு.
உடனே இதென்ன விதண்டாவாதம் எனப்பாயாதீர்கள். இது நிச்சயம் பெண்களுக்கான தனி சலுகைதான்.
:)) சும்மா ஒரு வாதத்திற்குதான்.



பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் என்பதும் தனிமனித சுதந்திரம் என்பதும் ஒன்றுதான் என்று சொல்லலாம்.
பெண்களுக்கெதிரான அடக்குமுறை என்பது மற்ற எந்த விதத்தைக்காட்டிலும் பொருளாதார ரீதியாக விதைக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. ஆண்களின் ஒரு செயற்கை முக்கியத்துவத்திற்காக உருவாக்கப்பட்டதே அது.

ஒரு வரியில் சொல்வதானால்

A woman can either be a feminist or a masochist.

said...

பத்மா, அவள் விகடன்ல இந்த கட்டுரை படிச்சப்போவே எரிச்சலா இருந்தாலும் கூட எழுத தோணலை. உங்களது சுடர் பதிவில் இந்த கட்டுரை பற்றி நீங்க சொல்லியிருந்ததை படிச்சப்புறமாத்தான் இதை எழுதலாம்னே முடிவு செஞ்சேன். சுதந்திரமென்பதை கொடுக்கவோ, வாங்கவோ, அளக்கவோ முடியதென்பதையே உணராதவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?

நந்தா, யாரையும் திருத்த முடியாதுன்றதை நானும் ஒத்துக்கறேன். ஆனால், பொதுத்தளத்துல ஒரு அபாயமான கருத்து முன்வைக்கப்படும்போது அது அழுத்தந்திருத்தமா சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியம்னுதான் நான் சொல்ல வரேன். சங்கராச்சாரியார் இந்த மாதிரி ஒரு கருத்தை முன்வைத்த போதும் சரி பிறகொருமுறை விதவைப்பெண்கள் தரிசு நிலம்ன்னு சொன்னப்பவும் சரி திராவிடர் கழகம் சங்கர மடத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தினார்கள். வாசந்தி அப்போது இந்தியா டுடேவின் தமிழ் பதிப்பாசிரியராக இருந்தார். எனவே இந்தியா டுடேவில் இதைப்பற்றி ஒரு தலையங்கம் எழுதியிருந்தார். ஆனால் இந்த விஷயத்தில் ஒரு அமைச்சராக இருக்கும் பொறுப்பான பெண்மணி இப்படி ஒரு அபத்தமான கருத்தை சொல்லியிருப்பதற்கு யாருமே கண்டனமெதுவும் தெரிவிக்கலை. அதுதான் என் ஆதங்கம்.

ஐயா தேவ உதிப்தா, பிரசவ விடுப்பென்பது ஏதோ பெண்கள் அழகு நிலையத்துக்குப் போவதற்காக தரப்படும் விடுப்பு அல்ல. அது ஒட்டுமொத்த மனித இனத்தின் இனப்பெருக்க நடவடிக்கைக்கான ஒரு சலுகை. உலகிலுள்ள எல்லா உயிரினங்களின் குறிக்கோளுமே இனப்பெருக்கம்தான். ஆக அதற்காக ஒரு சலுகை தரப்படுதுன்னா அது இரு பாலருக்கும் பொதுவான ஒன்றுதான். வேற ஏதாவது உருப்படியா கண்டு பிடிச்சு சொல்லுங்க சார்.

said...

அம்மா, நான் சொன்னது வெறும் வாதத்திற்காக என்றும் சொல்லியிருந்தேன்.

A woman can either be a feminist or a masochist.

என்று சொன்ன மேற்கோளைப்பற்றி எதாவது சொல்வீர்கள் என்று நினைத்தேன்.

said...

ஒரு பையனோட பர்ஸை திருடிவிட்டு ஓடிப்போவதையும், ஒரு பெண்ணை(அந்தப் பெண் தண்ணியடித்திருந்ததா / இல்லையா என்று நான் சொல்லவில்லை) ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்வதையும் ஒரே கண்ணோட்டத்தோட பார்க்கிற எண்ணம் சமுதாயத்திற்கு வரவேண்டுமென்று சொல்கிறீர்கள் ஆச்சர்யமாகயிருக்கிறது.

சும்மா நானும் அடிச்சிக்கிறேன் கொஞ்சம் ஜல்லி அப்படிங்கிற மாதிரி இருக்கு இது. பர்ஸ் திருடு போறதால வர்ற மன அழுத்தமும், ஒரு பெண்ணை அவளுடைய உரிமையில்லாமல் பெண்டாழுவதால் ஏற்படும் மனவழுத்தமும் நிச்சயமாக ஒன்றாகயிருக்க முடியாது. இந்த மனவழுத்தம் அந்த நிகழ்ச்சியைக் கேட்பதால் கேட்பவருக்கு கிடைப்பது இல்லை. அந்த நிகழ்ச்சியில் சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு உண்டாவது.

//உடலால் ஒடுக்கப்பட்டவர்கள், உடலுக்கு இடப்பட்ட எல்லைகளை உடைக்க உடலையே பயன்படுத்துவது பீறிடலின் ஆரம்பக்கட்டம்தான். விடுபடும் குதிரை பாய்ந்து ஓடிப் பின்னர் சாவதானமாக நடப்பது போல இதுவும் ஒரு கட்டம்தான். இலக்கு அது அல்ல. இந்தக் கட்டத்திலிருந்து உடல் வெகு எளிதாக வெளிப்பட்டுவிடுகிறது.//

இதை நான் ஒப்புக்கொள்கிறேன் எப்பொழுதுதென்றால் அந்த விஷயம் அந்தப் பெண்ணின் சம்மந்தத்தோடு நடக்கும் பொழுது மட்டுமே.

--------------------

அதுமட்டுமில்லாமல் சைக்கிள் கேப்பில், சினிமா நடிகர்களையும் சாப்ட்வேர் மக்களையும் கம்பேர் செய்றீங்க(ஒரு உதாரணத்திற்குத் தான் சொல்கிறீர்கள் என்றாலும்...) வாரமலரின் வரும் கிசுகிசுக்களைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது, அது உண்மையென்று என்னால் நிரூபிக்கமுடியாது. அதேபோன்று உண்மையில்லையென்று உங்களாலும். உண்மையில்லையா???

--------------------------

சாப்ட்வேரில் பெண்களுக்கு சலுகை கொடுக்கிறதில்லைன்னு உங்களுக்கு யார் சொன்னதுன்னு தெரியாது. நான் வேலைசெய்த பழைய கம்பெனியில், பெயரை சொல்லணும்னா கேன்பேவில் - பொண்ணுங்க ஆறு மணிக்கு மேல வேலை செய்யக்கூடாது, அதற்கு அவர்களுடைய மேனேஜர்கள் கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு பெரிய தலை கிட்டேர்ந்து மெயில் வரும்.

நான் இண்ட்ர்வியூ எடுக்கும் பொழுது வரும் சில(கவனிச்சிக்கோங்க) பெண்கள் தங்களுக்கு கல்யாணம் ஆனதைச் சொல்லி தங்களால் பத்து மணிக்கு முன்னாடி வரமுடியாததையும், ஆறு மணிக்கு மேல் இருக்க முடியாததையும் சொல்லி இதற்கு ஒப்புக்கொண்டால் வேலைக்குச் சேர்வதாக கேட்பதெல்லாம் சர்வ சாதாரணமாக நடப்பதுதான்.

அதே போல் தான் ப்ரோஜக்ட் பெஞ்சில் இருந்து ப்ரொஜக்ட்டுக்கு எடுக்கும் பொழுது நான் நேரடியாக அனுபவப்பட்டிருக்கிறேன்.

சாப்ட்வேர் உலகத்தில் சும்மா ஆறுமணிக்கும் மேல் தங்குவதென்று ஒரு கலாச்சாரம் உண்டு அதை ஆதரித்து நான் சொல்லவில்லை.

சில சமயங்களில், ப்ரொஜக்ட் டெலிவரியின் பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாக பதினோரு மணிவரை வேலைபார்க்க வேண்டிவரும். உங்களுக்கு சாப்ட்வேர் பற்றித் தெரிந்திருந்தல், சில சமயம் பில்டுகள் ஊற்றிக் கொள்ளும், உங்களால் தான் என்றில்லை என்றாலும் சுத்தி வளைச்சு உங்க பேர்ல வந்து ஊத்திக்கும்.

அப்பல்லாம் அந்தப் பொண்ணுங்க காணாமப் போயிருப்பாங்க, திரும்பவும் அந்தம்மாக்கள் அடுத்த நாள் வந்து சரிசெய்து தரும் வரைக்கும் வேலை உட்கார்ந்திருக்க முடியாது.

இதன் காரணமாகவே என்னுடைய டீம் ப்ரோஜக்ட் லீட்கள், நாங்கள் ப்ரோஜக்ட் பெஞ்சில் இருந்து ப்ரொஜக்ட்டிற்கு எடுக்கும் பொழுது லேட் ஆனாலும் வேலைசெய்வார்களா(ஒன்லி பெண்களுக்கு) என்று கேட்டு மட்டுமே எடுக்கச்சொல்லுவது எனக்கு பர்ஸனலாகவே தெரியும்.

ஆண்களுக்கு இது கிடையாது வேலையிருந்தால் முடித்துவிட்டுத்தான் போகமுடியும். நான் வேலை பார்த்த கம்பெனி CMM Level 5 கம்பெனிதான், அவர்கள் தனியாக வேண்டுமானால் கேபில் கூட வீடுவரை கொண்டுவந்துவிடும் அளவிற்கு வசதி உள்ளவர்கள் தான். ஆனாலும் பெண்களுக்காக இந்தச் சலுகை.

ஏனென்றால் நான் இந்தப் பின்னூட்டத்தின் ஆரம்பத்தில் சொன்ன காரணம் தான், எல்லோராலும்(பெண்களும் சேர்த்துதான்) பர்ஸ் அடித்துக்கொண்டு போவதையும், வன்முறையாக பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவதையும் ஒன்றாகப் பார்க்க முடிவதில்லை.

என்னால் நிச்சயம் புரிந்து கொள்ள முடிகிறது, பெண்கள் அவர்களாக விரும்பி ஆறு மணிக்கு போவதில்லை என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சலுகை கிடையாதென்றெல்லாம் சொல்லாதீர்கள்.

-----------------------

சரி முன்னாடியே ஒரு தடவை பதிவின் டாபிக்கை விட்டு வெளியே பேசுவதாக திட்டுவாங்கியதால் ஒரு விஷயம்.

என்னைப் பொறுத்தவரை, ஆணோ பெண்ணோ, தண்ணியடிப்பது, சிகரெட் அடிப்பது, கிடைப்பதாயிருந்தால் போதைப் பொருள் சாப்பிடுவது இவையெல்லாம் தனிமனித செயல்கள்.(அவங்கவங்க செயல்களுக்கு அவங்கவங்கதான் பொறுப்பு. அந்த வஸ்து தடைசெய்யப்பட்டிருந்ததாயிருந்தால். போலீஸுடைய ப்ராம்ளாம்.)

நீங்கள் சொல்வது போல், இதில் சம்பளம், ஆண் பெண் என்பதெல்லாம் வராது. ஆனால் வந்தாலும் தவறில்லை என்பேன் நான். நிறைய காசிறிருக்கு, அப்படித்தான் செய்வோம்னு சொன்னா அதை எப்படி தப்புன்னு சொல்லமுடியும். இல்லையா???

---------------------

இந்தப் பதிவிற்கு பின்னூட்டம் எழுதுறேன் பேர்வழியென்று இன்னொரு பதிவெழுதிவிட்டேன் போலிருக்கு. படிச்சுப் பாருங்க போடுற மாதிரி இருந்தா போடுங்க. இல்லாட்டி விட்டுறுங்க.

said...

மோகன்தாஸ், உங்களோட பின்னூட்டத்துல இரண்டு விஷயங்களுக்கு நான் இங்கேயே விளக்கம் கொடுத்துடறேன். மென்பொருள் துறைல பெண்களின் பங்கு பத்தி ஒரு தனி பதிவு போடலாம்னு இருக்கேன். அதுல நீங்க சொல்லியிருக்கற மத்த விஷயங்களுக்கு என்னுடைய விளக்கத்தை சொல்றேன். சரியா?

முதல்ல நீங்க சொல்லியிருக்கற ஜல்லிய எடுத்துப்போம். நான் வெறுமனே பர்ஸ் திருடு போறதைப்பத்தி சொல்லலை. அடிச்சுப்போட்டுட்டு பர்ஸ் திருடுறது - இதுல ரெண்டு விஷயம் வருது. ஒன்னு உடல் ரீதியிலான துன்புறுத்தல், இன்னொன்னு தன்னை மீறி தன் உடமையை ஒருத்தன் பாவிக்கும் போது பார்த்துகிட்டு சும்மா இருக்க வேண்டிய கையாலாகாத்தனம். இந்த ரெண்டும் கொடுக்கற அதே அளவு மன உளைச்சல் மட்டுமே பாலியல் பலாத்காரங்களும் பெண்களுக்கு ஏற்படுத்தணும். இப்போ அப்படி இருக்குன்னு சொல்லலை நான். அப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கிறேன். இந்த இரு விஷயங்கள் தவிர பாலியல் பலாத்காரத்தினால் ஏற்படற மத்த எல்லா பின் விளைவுகளுமே(மண வாழ்க்கை பறி போறதுலேர்ந்து அவளோட ஒழுக்கமே சந்தேகிக்கப்படறது வரை), பெண்ணை இந்த சமூகம் பார்க்கிற விதத்தால வருதுன்றதுதான் என்னோட தாழ்மையான கருத்து. அதுனால இந்த பிரச்சனை தீர வழி என்னன்னா, சமூகம் தன் பார்வையை மாத்திக்கறதாத்தான் இருக்க முடியுமே தவிர பெண்கள் தங்களோட நடமாட்டத்தை குறைச்சுக்கறதா இருக்க முடியாதுன்னுதான் நான் சொல்ல முயற்சிக்கிறேன். பெண்கள் பாதுகாப்போட நடமாடறது ஒரு தற்காலிக தீர்வேயாகும். நிரந்தர தீர்வுன்றது சமூகத்தோட பார்வை மாற்றத்துலதான் இருக்கு.

அடுத்தது அந்த கிசு கிசு மேட்டர் - நான் அதோட நம்பகத்தன்மை பத்தி பேசலை மோகன். அது உண்மையா இல்லையான்றதை பத்தி பேசலை நான். அதுல சம்பந்தப்பட்ட நபர்களை குறிப்பிடும்போது அவர்கள் உபயோகிக்கும் பெயர்களில் தெரியும் எழுதுபவருக்கு அந்த நபர் மேலிருக்கும் வயத்தெரிச்சல். உதாரணத்துக்கு வைரமுத்துவை டைமண்டு என்பார்கள். அதுக்காக அவரை கவிப்பேரரசுன்னு சொல்ல வேண்டாம்தான். எனக்குமே தனிப்பட்ட முறைல அந்த பட்டம் ஒரு உயர்வு நவிற்சின்னு அபிப்ராயம் உண்டுதான். ஆனாலும் டை மண்டு என்பது எவ்வளவு வக்கிரமான அழைப்புங்க? இந்த விளிச்சொற்களில் தெரியும் வயத்தெரிச்சல்தான் இப்போ
இந்த மாதிரியான செய்திகளிலும் தெரியுது. அதைத்தான் சொல்ல வரேன்.

said...

// நான் வெறுமனே பர்ஸ் திருடு போறதைப்பத்தி சொல்லலை. அடிச்சுப்போட்டுட்டு பர்ஸ் திருடுறது - //

நான் திரும்பவும் சொல்றேன் இதை ஒத்துக்க முடியாது. வேணும்னா இப்படிச் சொல்லுங்க, அமேரிக்காவில(ஒரு உதாரணத்திற்கு மட்டும்) எல்லாம், பையனுங்களையும்(ஆண்களையும்) வன்புணர்ச்சி செய்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதோட ஒப்பிடுங்க நான் வேண்டாங்களை அதுவேணும்னால் அதுமட்டும்தான் சரியாயிருக்கும்.

-------------
நீங்க சொல்ல வர்ற மேட்டர் புரியாமப் பேசலை - துடைச்சி விட்டுட்டுப்போகணும்னு சொல்றீங்க, ஆனால் நான் என்ன சொல்றேன்னா செக்ஸுவல் அப்யூஸ் என்பது ஆணுக்காயிருந்தாலும் சரி பெண்ணுக்காயிருந்தாலும் சரி - துடைச்சிவிட்டுட்டுப்போறமாதிரி இருக்காதுங்கிறதுதான்.
-------------

அதனால் பர்ஸ் அடிச்சிட்டு(சரி அடிச்சிட்டு) போறதை நீங்க சொன்ன விஷயத்தோட ஒப்பிட முடியாது. புரியுதா?

//சமூகம் தன் பார்வையை மாத்திக்கறதாத்தான் இருக்க முடியுமே தவிர பெண்கள் தங்களோட நடமாட்டத்தை குறைச்சுக்கறதா இருக்க முடியாதுன்னுதான் நான் சொல்ல முயற்சிக்கிறேன். //

இதுக்கான பதிலா என்னுடைய இந்த விளக்கத்தை நேரடியா எடுத்துக்க முடியாதுன்னாலும் சொல்றேன் கேட்டுக்கோங்க, பாரீஸின்(எப்பப்பாரு அமேரிக்காவையே சொல்லி போரடிக்குது - இது பரியில் வாழ்றவர் சொன்னது) சில பகுதிகளுக்கு சில நேரங்களுக்குப் பிறகு போகக்கூடாதுன்னு சொல்லுவாங்கன்னு.

நடமாட்டத்தக் குறைச்சுக்கணும்னா குறைச்சுக்கத்தான் வேணும்(ஆணாயிருந்தாலும் சரி, அடிச்சுப்போட்டுட்டு பர்ஸ் அடிச்சிட்டுப் போய்டுவான்னாலும் சரி) அதுயில்லாம, என்னை அடிச்சிப்போட்டுட்டு பர்ஸ் எடுத்துட்டுத்தானே போவான் பரவாயில்லைன்னு அங்கப் போய் நிக்கிறது என்னைப் பொறுத்தவரையில் தப்புதான்.

ஆட் ஆயிருக்கோ இந்த பதில்.

-------------

மற்றபடிக்கு, ஒரு செய்தியை எப்படி எந்த லாங்குவேஜில் சொல்றாங்க அப்படிங்கிறதெல்லாம் ஒரு பத்திரிக்கை பாரம்பரியமா செய்துட்டு வர்ற விஷயம்.

உலகமே தலைகீழா புரண்ட்டாலும் நான் மையமாத்தான் நடப்பேன்னு சொல்றவங்களை(தினமலர் மாதிரி பத்திரிக்கைகள்) ஒன்னுமே செய்ய முடியாது.
---------------------

அதே மாதிரி, நீங்க எப்படி சமூகத்தின் மனப்பான்மை மாறணும் அப்படின்னு நினைக்கிறீங்களோ அதே போல் பல குடும்பத்து அம்மா அப்பாக்கள், கவர்மெண்ட்(போலீஸ்) தங்கள் வீட்டுப் பிள்ளைகள் இந்தப் பழக்கங்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

இல்லையா?

நீங்க அவங்க மாறணும்னு நினைக்கிறீங்க, அவங்க நீங்க மாறணும்னு நினைக்கிறாங்க. யார் யார் பக்கத்துக்கு மாறணும் அப்படிங்கிற கடைசியில் எப்படி முடிவு பண்ண முடியும் யோசிங்க.

யார் பக்கம் சரியா இருக்கோ அவங்க பக்கம் மற்ற பக்கம் இருக்கிறவங்க மாறணும்.

ஆனால் இது நிச்சயமா ஒரு பக்கம் வெற்றி இன்னொரு பக்கம் தோல்வி அப்படிங்கிற விஷயம் கிடையாது.

இரண்டு பக்கமுமே வெற்றியையும் தோல்வியையும் கொண்ட ஒரு ஆட்டம். நிச்சயமா இந்த மாதிரியான விஷயங்களுக்கு ஒரேயொரு சொல்யூஷனா சமூகம் மாறணும் அப்படிங்கிறது சரியான முடிவாயிருக்காதுன்னு நினைக்கிறேன் நான்.

ஒரு நிமிஷம் இருங்க மேலேயிருந்து எழுதியதை(நான்) இன்னொரு தடவை படிச்சிட்டு வர்றேன்.

said...

The society means all that is around you - not you, but all that is around you. All, minus you, is the society. And everybody reflects.You will go to school and the teacher will reflect who you are. You will be in friendship with other children and they will reflect who you are. By and by, everybody is adding to your ego, and everybody is trying to modify it in such a way that you don't become a problem to the society. They are not concerned with you. They are concerned with the society. Society is concerned with itself, and that's how it should be. They are concerned that you should become an efficient part in the mechanism of the society. You should fit into the pattern. So they are trying to give you an ego that fits with the society. They teach you morality. Morality means giving you an ego which will fit with the society. If you are immoral, you will always be a misfit somewhere or other. That's why we put criminals in the prisons - not that they have done something wrong, not that by putting them in the prisons we are going to improve them, no. They simply don't fit. They are troublemakers. They have certain types of egos of which the society doesn't approve. If the society approves, everything is good. One man kills somebody - he is a murderer. And the same man in wartime kills thousands - he becomes a great hero. The society is not bothered by a murder, but the murder should be commited for the society - then it is okay. The society doesn't bother about morality.

And Now that we know this ... I hate Moral Policing.

Who is Subbulakshmi Jagadheesan to do moral policing?

said...

ஐயா மோகன் தாஸ், கடைசில ஒன்னு சொல்லியிருக்கீங்களே, அதான் மேலேர்ந்து ஒரு தடவை படிச்சுட்டு வரேன்னு அதை செஞ்சீங்களா என்ன? செஞ்சிருந்தால் தலை சுத்தி கீழ விழுந்திருப்பீங்க. விசு பட டயலாக் போல ஏதேதோ சொல்லியிருக்கீங்களே, என்ன பேசுறோம்னு உங்களுக்கேவாவது புரியுதுங்களா?
சரி. இப்போ விவாதத்துக்கு வருவோம்.
//நீங்க சொல்ல வர்ற மேட்டர் புரியாமப் பேசலை - துடைச்சி விட்டுட்டுப்போகணும்னு சொல்றீங்க, ஆனால் நான் என்ன சொல்றேன்னா செக்ஸுவல் அப்யூஸ் என்பது ஆணுக்காயிருந்தாலும் சரி பெண்ணுக்காயிருந்தாலும் சரி - துடைச்சிவிட்டுட்டுப்போறமாதிரி இருக்காதுங்கிறதுதான். //
முதல்ல நான் துடைச்சு விட்டுட்டு போகணும்னு எங்கயும் சொல்லலை. அதுக்கான வலி இருக்கத்தான் செய்யும். ஆனா குரங்கு புண்ணை சொரியறா மாதிரி அதை பெரிசாக்கிகிட்டே போறதுதான் கூடாதுன்னு சொல்றேன். நீங்க சொல்வது போல் ஆணுக்கு நடக்கும் பாலியல் பலாத்காரத்தை(ஒரு வேளை நடந்தால்) எப்படி பார்ப்போமோ அப்படி மட்டும்ந்தான் ஒரு பெண்ணுக்கு நடக்கு அதே நிகழ்வு பார்க்கப்படுதா என்ன? இல்லைன்றதுதான் யதார்த்தம். அதுபத்திதான் நான் பேசறேன்.
//நடமாட்டத்தக் குறைச்சுக்கணும்னா குறைச்சுக்கத்தான் வேணும்(ஆணாயிருந்தாலும் சரி, அடிச்சுப்போட்டுட்டு பர்ஸ் அடிச்சிட்டுப் போய்டுவான்னாலும் சரி) அதுயில்லாம, என்னை அடிச்சிப்போட்டுட்டு பர்ஸ் எடுத்துட்டுத்தானே போவான் பரவாயில்லைன்னு அங்கப் போய் நிக்கிறது என்னைப் பொறுத்தவரையில் தப்புதான்.

ஆட் ஆயிருக்கோ இந்த பதில்.//

ஆட் -ஆ இல்லைங்க மேட்-ஆ இருக்கு. நான் என்னோட போன பதில்லயே சொல்லியிருக்கேன், ஒரு இடத்துல பிரச்சனை இருக்குன்னா அங்கே போறதை தவிர்க்கறது ஒரு தற்காலிக தீர்வா இருக்கணும். ஒரு லட்சிய சமுதாயத்துல நிரந்தர தீர்வுன்றது அந்த பிரச்சனையவே அங்கேர்ந்து ஒழிக்கறதாத்தான் இருக்கணும். உங்க பேர் கொண்ட ஒரு மகானுபாவர் கூட சொன்னாரே, நள்ளிரவில் ஒரு பெண் தனியா நடமாடற அன்னிக்குத்தான் உண்மையான சுதந்திரம்ன்னு அது கூட அந்த லட்சிய சமுதாயத்தை பத்தித்தாங்க. இப்போதைக்கு தவிர்க்கறதுதான் தற்காலிகத்தீர்வுன்றதை வேணும்னா நான் ஒத்துக்கறேன். ஆனா அதுவே நிரந்தரமாயிடக்கூடாது. சமூகப்பிரச்சனைகளைப்பத்தி பேசும்போது கொஞ்சமாவது தொலைநோக்கு வேணும். புரியுதா?(இந்த கடைசி வார்தை மட்டும் உங்க ஸ்டைல், ஏன்னா உங்ககிட்ட உங்க பாஷைலதானே சொல்லனும் அதான் :-) )
//அதே மாதிரி, நீங்க எப்படி சமூகத்தின் மனப்பான்மை மாறணும் அப்படின்னு நினைக்கிறீங்களோ அதே போல் பல குடும்பத்து அம்மா அப்பாக்கள், கவர்மெண்ட்(போலீஸ்) தங்கள் வீட்டுப் பிள்ளைகள் இந்தப் பழக்கங்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்./
ஐயா, நான் எப்போங்க போதைமருந்து உட்கொள்றது தவறுன்னு சொல்றவங்க மாறணும்னு சொன்னேன்? விட்டால் நான் ஏதோ போதை மருந்து கும்பலோட கொ.ப.செ அப்படின்ற ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துடுவீங்க போல.
//என்னைப் பொறுத்தவரை, ஆணோ பெண்ணோ, தண்ணியடிப்பது, சிகரெட் அடிப்பது, கிடைப்பதாயிருந்தால் போதைப் பொருள் சாப்பிடுவது இவையெல்லாம் தனிமனித செயல்கள்.(அவங்கவங்க செயல்களுக்கு அவங்கவங்கதான் பொறுப்பு. அந்த வஸ்து தடைசெய்யப்பட்டிருந்ததாயிருந்தால். போலீஸுடைய ப்ராம்ளாம்.)

நீங்கள் சொல்வது போல், இதில் சம்பளம், ஆண் பெண் என்பதெல்லாம் வராது//
அப்படின்னு போன பின்னூட்டதுல நீங்க சொன்ன உடனே - நீங்க ஏதோ உண்மையிலேயே புரிஞ்சுதான் பேசறீங்கன்னு இல்ல நினைச்சுட்டேன்.

அரசோ, பெற்றோரோ போதைப்பொருள் பழக்கத்துலேர்ந்து தங்களோட பிள்ளைகள் மாறணும்னு நினைக்கறதுல எந்த தப்பும் இல்லை. அதுதான் இயல்பான விஷயமாவும் இருக்க முடியும். ஆனா அதுக்காக சுப்புலெட்சுமி அம்மா மாதிரி பொறுப்பான பதவில இருக்கறவங்க எல்லாம் பொறுப்பில்லாமல் 50ஆயிரம் சம்பாதிக்கறவங்க எல்லாம் சீரழிஞ்சு போறாங்கன்னு சொல்றது அபத்தம். அதுலயும் பொண்ணுங்க அதை செஞ்சால் மட்டும் அது அழிக்க முடியாத கறைன்னு சொல்றது இன்னும் அபத்தம். போதைப்பழக்கத்துலேர்ந்து ஒரு ஆண் எப்படி வெளிவர முடியுமோ அப்படியே ஒரு பெண்ணும் வெளிவர முடியும். அப்படி வந்த பின்னால அந்த பெண்ணை எல்லாரும் பழைய மாதிரி ஏத்துக்க மாட்டங்கன்னா, அது யாரோட தப்புங்க? அந்த இடத்துலதான் மத்தவங்க அந்த பெண்ன்ணை பார்க்கும் விதம் முக்கியத்துவம் பெறுது. அது மாறிட்டா, ஒரு பெண்ணாயிருந்துகிட்டு இப்படியெல்லாம் செய்யலாமன்ற அங்கலாய்ப்பு இருக்காதில்லையா? இதை சொல்லப்போனா நான் ஏதோ அந்த தவறையே சரின்னு சொல்றா மாதிரி பேசினால் அது தேர்ந்தெடுக்கப்பட்ட திரிபு வாதம். அவ்ளோதான் என்னால சொல்ல முடியும்.

said...

இரண்டு விஷயம்...

முதல்ல,

நான் புரியுதா அப்படின்னு கேட்கிறது உங்களால புரிஞ்சுக்க முடியுதா அப்படிங்கிறது இல்லை, நீங்கள் நக்கல் செய்திருப்பது போல், ஒரு பத்தியாக எழுதும் பொழுது, நான் சுத்தி சுத்தி எழுதுறது புரியுதா என்று தான் கேட்க விரும்புகிறேன், விரும்பினேன். (சில சமயம் அப்படி சுத்திக்கிட்டு வந்திடும்.)

இரண்டாவது,

நீங்க லட்சிய(;-)) சமுதாயம் அப்படி இப்படின்னு எல்லாம் பேசினா ஐ ஆம் தி எஸ்க்கேப்.

ஆனால் எல்லோருக்கும் ஒரு லட்சிய சமுதாயம் உண்டு, என் லட்சிய சமுதாயத்தைப் பத்தி கேட்டீங்கன்னா கொஞ்சம் இல்லை ரொம்பவே மேட் ஆ இருக்கும்.

//அப்படின்னு போன பின்னூட்டதுல நீங்க சொன்ன உடனே - நீங்க ஏதோ உண்மையிலேயே புரிஞ்சுதான் பேசறீங்கன்னு இல்ல நினைச்சுட்டேன்.
//

எனக்கு இப்ப உண்மையிலேயே தலை சுத்துது.

said...

தேவ உதிப்தா, நீங்கள் சொல்வது போல் மாரல் போலீசிங் முழுக்க தவறு என்று சொல்லிவிட முடியாது. சமூகம் என்ற அமைப்பில்லாமல் வாழ நம்மாலாகாது. அப்படி பலர் சேர்ந்து வாழ்கையில் சில சட்ட திட்டங்கள் தேவைதான். எனவே ஒட்டுமொத்தமாய் சமூக கட்டுப்பாடுகளே கூடாது என நீங்கள் சொல்லும் பட்சத்தில் நான் அதை ஆதரிக்கப்போவதில்லை. ஆயினும் சமுதாயம் தனி நபர்களின் உரிமையில் அளவுக்கதிகமாய் தலையிடுதலும் கூடாதுதான். இந்த அளவை யார் நிர்ணயிப்பது? ஒவ்வொருவருக்கும் வேறு வேறு எதிர்பார்ப்புகள் இருக்கலாம். ஆனால் பெரும்பாண்மையை பொறுத்தே சமூக அளவுகோல்கள் நிர்ணயிக்கப்படும். அதனால்தான் நாம் எப்போதும் சமூகத்தின் பார்வையில் சரியென்றோ தவறென்றோ நினைப்பவற்றை மற்றவர்களுக்கும் உணர்த்தவும் அவர்களையும் நம் பக்கம் இழுக்கவும் முயற்சிக்கிறோம். நானும் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.

said...

ஆயினும் சமுதாயம் தனி நபர்களின் உரிமையில் அளவுக்கதிகமாய் தலையிடுதலும் கூடாதுதான். இந்த அளவை யார் நிர்ணயிப்பது?

அளவுக்கதிகமான சுதந்திரம் என்பதே நகைப்புக்கு உரியது. சுதந்திரத்திற்கு ஏது அளவு?

hahahaha...:)

இந்த 2 வரிகளையும் படித்துப்பாருங்கள்.

உங்கள் குழப்பம் புரியும்.

1) உங்களால் சுதந்திரத்தையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

2) உங்களால் அடிமைத்தனத்தையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.


உங்களுக்கு வசதிப்பட்டபடி இருந்தால் சரி இல்லையென்றால் தவறு. இதுதான் உங்கள் வாதமாக இருக்கிறது.

நான் முன்பு சொன்ன கருத்தையும் இதையும் தொடர்புபடுத்தி யோசித்தால், ஒருவிஷயம் தெளிவாகப் புரியும்.

நீங்கள் உங்களுக்கு பிடித்தமான, உங்களுக்கு வசதியான, உங்கள் மனதிற்கேற்றதொரு சமுதாயத்தை, சமூகத்தை உருவாக்கத் துடிக்கிறீர்கள்.

சாதாரணமாக ஒரு சமுதாயத்தை விமர்சிப்பவர்கள், அந்த சமுதாயத்திற்குள்ளிருந்து அதை செய்யமுடியாது. தார்மீகமாக செய்யவும் கூடாதல்லவா?

ஒரு சமுதாயத்தை விமர்சிப்பவர்கள், விமர்சிக்கப்படும் சமுதாயத்திற்கு parallel அல்லது ஒரு மாற்று சமுதாயத்தை முன்வைத்தே இருக்கும். இதற்கு பெரியாரின் வாதங்கள் ஒரு உதாரணம். அவரது மாற்று சமுதாய அமைப்பை இன்றுவரை யாரும் சரியாகப்புரிந்து கொண்டதாகத்தெரியவில்லை. என்னையும் சேர்த்துத்தான்.

ஆனால் தாங்கள் செய்திருப்பது, உள்ளிருந்து புலம்பும் ஒரு சாதாரண "க்ரிப்" அடிக்கும் செயலே.

Normalisation என்று ஒரு பதம் Database துறையில் பயன் படுத்துவார்கள். Controlled Redundancy என்று ஒரு தத்துவம் அங்கு விவாதிக்கப்படும்.

அதுபோலவே நீங்கள் இங்கு பெண் சுதந்திரம் பற்றிப்பேசவில்லை, பெண்ணுரிமை பற்றியும் பேசவில்லை.

"எங்கள் தலையில் அடிக்காதீர்கள், முதுகில் வேண்டுமானால் அடியுங்கள், வலி குறைவாகத்தெரியும் என்பதுபோலத்தான்"

சுதந்திரம் என்பது எடுத்துக்கொள்ளவேண்டியது. கொடுக்கப்படுவதல்ல.
சுதந்திரம் அதிகமாகும்போது பொறுப்பும் அதிகமாகிறது. நமது செயல்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பேற்க நேரிடும்.

இப்போது உங்களை ஆதரிக்கும் மற்றவர்களையும் சேர்த்துச்சொல்கிறேன்.

நீங்கள் எல்லம் ஒரு சாதாரண சமூக, சமுதாய அடிமைகள்தாம். பழியை சமூகத்தின் மீது போட்டு, சமூகத்தைப்பற்றியே கவலைப்பட்டு, சமூகத்தையே குற்றம் சாட்டி, சமூகச் சாக்கடையிலே உழல்பவர்கள்தாம்.

கடுமையான வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்.

said...

//நீங்கள் எல்லம் ஒரு சாதாரண சமூக, சமுதாய அடிமைகள்தாம். பழியை சமூகத்தின் மீது போட்டு, சமூகத்தைப்பற்றியே கவலைப்பட்டு, சமூகத்தையே குற்றம் சாட்டி, சமூகச் சாக்கடையிலே உழல்பவர்கள்தாம்.

கடுமையான வார்த்தைகளுக்கு மன்னிக்கவும். //

இவ்வளவு தூரம் கோபப் படுமளவுக்கு என்ன நடந்துவிட்டது என்று புரிய வில்லை. இதுதான் உங்கள் கருத்தென்றால் இதை இன்னும் கொஞ்சம் நாசுக்காகவே சொல்லி இருக்கலாம். உதாரணத்திற்கு என்னைப் போன்றோர் பார்வையில் மிக மோசமான, ஏன் கேவலமான கருத்தாகக் கருதப்படும் "வேலைக்கு போற பொண்ணுங்க எல்லாம் நடத்தை கெட்டு போனவங்க" என்று சொன்னவரையே தனி மனித தாக்குதல் செய்யாமல், இது மட்டமான கருத்து என்ற அளவில் மட்டும் விமர்சனம் செய்து வருகிறோம்.

ஒருவேளை இது போன்று கருத்து சொல்பவர்களின் குடும்பத்தையே சந்திக்கு இழுத்து, தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டால்,ஒருவேளை நாங்கள் சமுதாய அடிமைகள் இல்லை என்றோ அல்லது சாக்கடையில் உழல்பவர்கள் இல்லை என்றோ ஒத்துக் கொள்வீர்களா?

இங்கே பிரச்சினை ஒரு முக்கிய பொறுப்பிலிருப்பவர் "அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது..". என்றும் ,பன்னாட்டு நிறுவனக்களில் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் பெறும் பெண்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமான நிலைக்குப் போகிறது" என்று சொல்லி இருக்கிறார்.

இது வெறுமனே பெண்களைப் பற்றிய குறைபாடாக இருப்பதால், பதிவாளர் வருத்தப் பட்டிருக்கிறார். அவ்வளவுதான். (உடனே உங்களுக்கு புரிந்து கொள்ளும் தன்மை ரொம்ப கம்மி. சார்லஸ் டார்வினின் தியரிப்படி என்று அதிகப்படியான புரிதலை வெளிப்படுத்தாதீர்கள்).

//அதுபோலவே நீங்கள் இங்கு பெண் சுதந்திரம் பற்றிப்பேசவில்லை, பெண்ணுரிமை பற்றியும் பேசவில்லை.//

உண்மைதான். அவர் அதைப் பற்றி பேச வில்லை. எங்கேயாவது யாராவது ஒரு சில பெண்கள் தவறு செய்தால், ஒட்டு மொத்தமாக பெண்களை குற்றம் சொல்லாதீர்கள் என்றுதான் சொல்கிறார்.

//1) உங்களால் சுதந்திரத்தையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

2) உங்களால் அடிமைத்தனத்தையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.//

அடிமைத்தனத்தை கண்டிப்பாக ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் சுதந்திரத்தை ஒத்துக் கொள்ளவில்லை என்று யார் சொன்னது?

சொல்ல வருவதை உணர்வுப் பூர்வமாக புரிந்து கொள்ள முயலுங்கள். வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டாம். (இந்த கடைசி வரியே உங்களை காயப் படுத்தி விடுமோ என்று யோசிக்கிறேன். எப்படித்தான் போகிற போக்கில் அடிமைகள், சாக்கடையில் உழல்பவர்கள் என்று கல்லெறிந்து விட்டுப் போகிறீர்களோ?)

said...

ஒருவேளை இது போன்று கருத்து சொல்பவர்களின் குடும்பத்தையே சந்திக்கு இழுத்து, தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டால்,ஒருவேளை நாங்கள் சமுதாய அடிமைகள் இல்லை என்றோ அல்லது சாக்கடையில் உழல்பவர்கள் இல்லை என்றோ ஒத்துக் கொள்வீர்களா?

அப்போது நீங்களும் சமுதாயம் ஒரு சாக்கடை என்று ஒத்துக்கொள்கிறீர்கள். நல்லது. நான் சொல்வது அது அல்ல. நான் சொல்வதெல்லாம், ஒரு சமுதாயத்திற்குள்ளிருந்து அதை விமர்சிப்பதாக இருந்தால் ஒரு சாதாரண புலம்பலாகத்தான் இருக்க முடியும்.

(உடனே உங்களுக்கு புரிந்து கொள்ளும் தன்மை ரொம்ப கம்மி. சார்லஸ் டார்வினின் தியரிப்படி என்று அதிகப்படியான புரிதலை வெளிப்படுத்தாதீர்கள்).

அதிகப்படியான புரிதலை என்பது சரியான பதம் அல்ல. புரிதலும், புரிதலின்மையும் மட்டுமே சாத்தியமாகும். புரிதல் என்பது absolute understanding. புரிதலின்மை என்பது relativeஆன ஒரு பதம் அல்ல. புரிதலின்மை என்பது misunderstanding அல்ல. Not-Understanding.



அடிமைத்தனத்தை கண்டிப்பாக ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் சுதந்திரத்தை ஒத்துக் கொள்ளவில்லை என்று யார் சொன்னது?

"சமுதாயம் தனி நபர்களின் உரிமையில் அளவுக்கதிகமாய் தலையிடுதலும் கூடாதுதான்" என்ற வரி ஒன்று போதுமே, தலையிடுதலை நாங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் அளவுக்கதிகமான தலையிடுதல் வேண்டாம் என்றுதான் சொல்கிறேன். அந்த அளவும் எனக்குத்தெரியாது. நான் சுதந்திரத்தைப்பற்றி கவலைப்பட்டு பேசவில்லை. ஒரு mutual agreement க்கு வருவோம். அளவைப்பற்றி அவ்வப்போது பேரம் பேசி முடிவுசெய்வோம். என்பதுதானே அதன் பொருளாக இருக்கமுடியும்.

Atlast I would like to tell you, any one who doesn't have arguments against a logic, has always come across the defence that we should not cling on to the words.

வார்த்தைகளுக்கு பொருள் என்பது நமக்கு நாமாக வைத்துக்கொண்டது தான். வார்த்தைகள் எப்போதும் உண்மையை சொல்வதில்லை. உண்மையைப்போல ஒன்றையே சொல்லும் என்பது எமக்கும் தெரியும். வார்த்தைகளைப் பிடித்துத் தொங்குவது என்பதற்கும் வார்த்தைகளின் implicationsஐ பற்றி பேசுவதும் வித்யாசமானது என்று தங்களுக்கு தெரிந்திருக்கும்.


நான் கடுமையான வார்த்தைகளுக்கு மன்னிக்கவும் என்று சொன்னதுகூட ஒரு சம்ப்ரதாயத்திற்காக மட்டுமே.

said...

நந்தா,

/* இந்த கடைசி வரியே உங்களை காயப் படுத்தி விடுமோ என்று யோசிக்கிறேன்.

என்னைப் போன்றோர் பார்வையில் மிக மோசமான, ஏன் கேவலமான கருத்தாகக் கருதப்படும் "வேலைக்கு போற பொண்ணுங்க எல்லாம் நடத்தை கெட்டு போனவங்க" என்று சொன்னவரையே தனி மனித தாக்குதல் செய்யாமல், இது மட்டமான கருத்து என்ற அளவில் மட்டும் விமர்சனம் செய்து வருகிறோம்.

*/

தனி மனித தாக்குதல் என்பது வார்த்தைகளில் நடக்கும் வரை ஒரு அச்சமும் இல்லையே. மனிதர்கள் இல்லாமல் அல்லது சொன்னவரைத் தவிர்த்துப்பார்த்தால் வார்த்தைகளின் பொருள் நிச்சயம் இல்லை அல்லது முற்றிலும் வேறானது. எனவே, ஒரு மனிதன் வார்த்தைகளின்மூலமே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான்.

மனிதனை விட்டு வார்த்தைகளைப்பிடித்து சாடுவது என்பது ஏதோசொல்வார்களே எய்தவன்... :)

ஏன் உங்களுக்கு இந்த போலியான விளம்பரம்? உங்களுக்கு ஒரு விஷயம் தெரியும் என்று நினைக்கிறேன். உங்களிடம் யாராவது " நீங்களெல்லாம் பெரிய ஆளுங்க சார். பெரிய இடத்தில வேலை பாக்கறீங்க. உங்களுக்கு எல்லாம் தெரியும்" என்று சொல்லும் போது அவரிடம் "ஆமாம். நான் பெரிய ஆள் தான் நீங்கள் சிறிய ஆள். நான் பெரிய இடத்தில் வேலை பார்க்கிறேன், உன் வேலையெல்லம் ஒரு வேலையா? உனக்கு ஒன்றும் தெரியாது" என்று சொல்லுங்கள். அவர் சொன்ன வார்த்தைகள்தான் ஆனால், அவருக்கு கோபம் வரும் என்பது சர்வ நிச்சயம். இதை பலரிடம் ப்ரயோகித்துப்பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். அவர்கள் செய்வதெல்லாம் போலி ஸ்துதிகள். அவர்களை மாற்ற வேறு வழி இல்லாமல்தான் அதைச்செய்ய நேர்ந்தது. அதுபோலத்தான், மற்றவர் மனம் நோகாமல் சொல்லவேண்டும் என்று நீங்கள் வைத்துக்கொண்டிருக்கும் பாலிஸி. தனிமனிதத்தாக்குதலில் நீங்கள் அகப்படும்போது நீங்களும் அதில் ஈடுபடுவது நிச்சயம். அது உங்கள் கடைசி பத்தியில் தெரிகிறதல்லவா? உங்களை நல்லவராக, எளியவராக, மென்சொல் மனிதராக காட்டிக்கொள்ள முயற்சிக்காதீர்கள். பாரதி சொன்னதை நினைவிலிருத்துங்கள்.

ஒரு விஷயம் இருக்கிறது அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்றால். எந்தவித பூச்சோ முலாமோ இன்றி நேரடியாகச்சொல்லப் பழகுங்கள். தேன் தடவிய வார்த்தைகள் தேவ்....வையே..........இல்லை.

said...

நந்தா உங்களுக்கு என் நன்றி முதலில். நான் சொன்னதை அதே தளத்தில் புரிந்து கொண்டமைக்கும் நமது நண்பரின் கேள்விகளுக்கு பதில் சொன்னமைக்கும் நன்றி.

தேவ உதிப்தா, தேன் தடவிய வார்த்தைகள் இங்கே யாருக்கும் வேண்டாம். அதற்காக உங்களைப்போல வார்த்தைகளில் வன்மத்தை கலக்க முடிவதில்லை எங்களுக்கு. இங்கே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பொதுவாக குழு அரசியலை வெறுப்பவள் நான். எனினும் நீங்கள் என்னோடு சேர்த்து என்னை ஆதரிப்பவர்களையுமல்லவா சாடியிருக்கிறீர்கள். எனவே அவர்களுக்குமாய் நான் பதில் சொல்ல வேண்டுமல்லவா? அதற்காகத்தான் எங்களுக்கு என்று குறிப்பிடுகிறேன்.(நான் எழுதுவதையெல்லாம் ஒரு சிலர் படிப்பதே அரிது. அவர்கள் அதை பாராட்டுவது அதனினும் அரிது. அதையும் கெடுத்துவிடுவீர்கள் போலிருக்கே... :) ). கனியிருப்ப காய் கவர்தல் தேவையா என்றும் யோசியுங்கள்.

சரி, விஷயத்துக்கு வருவோம். சமுதாயத்துக்குள்ளிருந்து கொண்டே அதை விமர்சிக்க கூடாது - இது யாருடைய கட்டளை? விமர்சனங்களில் இரண்டு வகை உண்டு - ஆக்கபூர்வமான விமர்சனம்(Constructive criticism) , எதிர்மறை விமர்சனம்(Destructive criticism). இதில் முதல் வகையிலான விமர்சனங்கள் பெரும்பாலும் உள்ளிருப்பவர்களாலும் நடுநிலையாளர்களாலுமே முன்வைக்கப்படுவது. எனவே நான் வாழும் சமுதாயம் உன்னதமானதாக மாற என்ன செய்யவேண்டுமென்பதை நான் யோசித்து சொல்கிறேன். அதுதான் கூடி வாழ்தலில் விருப்பமுள்ள யாரும் செய்வது. என் வீடு குப்பையாக இருக்கிறதென்று புது வீடா கட்ட முடியும். நான் கூட்டி பெருக்க வேண்டுமென்று சொல்கிறேன். நீங்கள் ஒன்று அந்த குப்பையான வீட்டை கொளுத்தினாலல்லவா நீ புரட்சிகரமானவள்? அதை விடுத்து அதை சகித்துக்கொண்டே துடைப்பத்தை தேடுகிறேனென்று பிதற்றுகிறாயே என்றால் நான் என்ன செய்ய முடியும்? உங்களுக்கு நான் புரட்சிகரமானவளென்று நிருபிக்கத்தேவையில்லை. அதற்காக நாங்களெல்லாம் சாக்கடையில் உழல்வதாக உங்களுக்கு தோன்றினால் அதற்கான காரணம் மிக எளிமையானது. மகாபாரதத்தில் துரியோதனனும் தர்மனும் உலகைப்பற்றி சொன்ன கருத்துக்கள் உங்களுக்கு தெரிந்திருக்குமென நம்புகிறேன். வெள்ளத்தனையது மலர் நீட்டம் - எங்களை பற்றிய உங்களது கருத்தே உங்கள் உள்ளத்தின் உயர்வைக்காட்டுகிறது.

இன்னொன்று, சுதந்திரத்துக்கு அளவு இருக்க முடியாது. ஆனால் கட்டுப்பாடுகளுக்கு அளவு உண்டு. கட்டுப்பாடுகளின் அளவு எல்லை மீறினாலோ அல்லது அவை கேள்விக்குட்படுத்த முடியாத உயரத்திலிருந்தாலோ அங்கே அடிமைத்தனமும் எதேச்சதிகாரமும் புகுந்துவிட்டதென்று அர்த்தம். கட்டுப்பாடுகள் என்பது நம் சவுகரியதுக்கானது - சாலை விதிகளைப்போல. கூடி வாழும் சமூகத்தில் சட்டங்களும் அதை நிறைவேற்றும் அமைப்பும் இருக்க வேண்டும். அதே சமயத்தில் அவை ஆரோக்கியமான விமர்சனங்களை எதிர்கொள்பவையாக, தன்னை மேம்படுத்திக்கொள்ள அந்த விமர்சனங்களை பயன்படுத்திக்கொள்வதாக இருக்க வேண்டும். கட்டுப்பாடுகளை தளர்த்தவோ இல்லை அதிகரிக்கவோ கோரும் உரிமை இங்குள்ள அனைவருக்கும் உண்டு(இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடென்று பள்ளிப்புத்தகத்தில் படித்த நினைவு. அந்த நம்பிக்கையில்தான் நான் என் கருத்துக்களை முன்வைக்கிறேன்) ஒன்று எல்லா விதிகளையும் ஒப்புக்கொண்டு மண்டியிடு இல்லை இங்கிருந்து ஒடு என்பது என்ன வகையான வாதமென்று எனக்கு புரியவில்லை.

உங்களது எழுத்தை நான் மேலே சொன்னது போல் தரம் பிரிப்பதானால் அது இரண்டாவது வகையில்தான் வரும். அதிலும் குறிப்பாக உங்களது கடைசிப்பின்னூட்டம் - நிச்சயமாக மூர்க்கமானதுதான். இதுபோன்ற வன்மமான வார்த்தைகளுடன் இனி நீங்கள் இடும் பின்னூட்டங்களை நிச்சயம் நான் பிரசுரிக்க மாட்டேன். நீங்கள் உங்களது வழக்கப்படி இப்போது நான் உங்கள் கருத்துக்களுக்கு பதில் சொல்ல இயலாமையினால் இப்படி செய்வதாக சொல்லிக்கொள்ளலாம். அப்படித்தான் உங்களால் புரிந்து கொள்ள முடியுமென்றே உங்களது முந்தைய வாதங்கள் உணர்துகின்றன. பராவாயில்லை. ஒருவரது கருத்துக்களை மற்றவர் புரிந்து கொள்ளவேண்டுமானால் சொல்பவருக்கு புரியவைக்கும் ஆர்வமும் கேட்பவருக்கு திறந்த மனதும் வேண்டும். உங்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது. ஆனால் இதற்கு பொருள் நீங்கள் இடும் பின்னூட்டங்களையே இனி பிரசுரிக்க மாட்டேன் என்பது அல்ல - அவை தணிக்கை செய்யப்பட்டு அது அடுத்தவரை புண்படுத்தாதெனில் மட்டுமே பிரசுரிக்கப்படும். இதற்கான அளவுகோல்கள் எளிமையானவை. எங்கள் வழக்கப்படி அது நாகரீகமான வார்த்தைகளில் இருக்க வேண்டும். உங்களது வழக்கப்படி அது தேன் தடவியதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். அப்படியில்லாத வாதங்கள் இங்கு தேவ்....வையே..........இல்லை. :)

said...

நான் இனிமேல் இந்தப்பதிவிற்கு மின்னூட்டம் இடுவதாயில்லை. அடுத்த பதிவைப் போடுங்கள். எத்தனைநாள்தான் இதே பதிவை வைத்து ஓட்டுவீர்கள்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

said...

லக்ஷ்மி..

தங்களை அழகு விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன்.....நேரம் கிடைக்கும் போது எழுதவும்

http://manggai.blogspot.com/2007/04/blog-post_17.html