Thursday, December 10, 2009

பாரதி - அவர் மகளின் பார்வையில்

சமீபத்தில் பாரதி - என் தந்தை என்ற நூல் கண்ணில் பட்டது. இந்நூல் பாரதியின் இரண்டாவது மகளான் சகுந்தலா எழுதியது. வெகுகாலம் முன்னரே படித்த புத்தகம் என்றாலும் அப்போது ஏதும் பதிவிட முடியவில்லை. எனவே இப்போது அந்நூலையொட்டி எழுந்த என் சிந்தனைகளை அவரது பிறந்த நாளான இன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பாரதியின் இரு புதல்விகளில் மூத்தவரான தங்கம்மா பாரதி, தன் தந்தையோடு அதிக நாட்கள் வசிக்கும் பேறு பெறவில்லை. காசியில் வசித்த அவரது பெரிய தாயார்(செல்லம்மா பாரதியின் சகோதரி) பார்வதியிடமே அவர் அதிக நாட்கள் வளர்ந்தார். அவரை வளர்த்த பெரிய தாயாரின் நிர்பந்தத்தின் பேரில்தான் தங்கம்மாவுக்கு பால்ய விவாகம் நடத்தும் நிலைக்கும் பாரதி ஆளானார் என்பது இந்நூலில் இருந்து தெரிகிறது.

எனவே சிறுவயதிலிருந்து பாரதியிடம் பழகி, அவரது பாட்டுக்களையும் கதைகளையும் கேட்டு வளரும், அவரிடமே நேரிடையாக கல்வி பயிலும் வாய்ப்பும் பெற்றவர் சகுந்தலா மட்டுமே. அவரது எழுத்தின் வழி பாரதியை காண்பதன் மூலம் எவ்வளவோ புது விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

முதலும், முக்கியமானதும் ஆன ஒரு பெரிய உண்மை - நாம் இதுவரை பெரும்பான்மையான புத்தகங்களில் படித்தது போல அவர் திருவல்லிக்கேணி கோவில் யானை தாக்கி உயிரிழக்கவில்லை. யானை தன் கால்களுக்கு இடையில் கருங்கல் தரையில் வீசிய போதும், மண்டையில் நல்ல அடிபட்ட போதும் தனது கனமான தலைப்பாகையினால் அவர் மரணத்திலிருந்து தப்பியிருக்கிறார். (வாகனம் ஓட்டாமலேயே ஹெல்மெட்டால் உயிர் தப்பியவர்னு இவரைச் சொல்லலாமோ? ;) ). யானையிடமிருந்து தன் அன்புக்குரிய சீடன் குவளைக்கண்ணனால் காப்பாற்றப்பட்டு, அதன் பின் சில காலம் சென்று வயிற்றுக் கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் மருந்துகளை உட்கொள்ள மறுத்து பின் இறந்திருக்கிறார்.

குழந்தையை சமாளிக்கத் தெரியாமல் திண்டாடுவது, ஒரு ஆட்டுக்குட்டியை கசாப்பு கடைக்காரனிடமிருந்து பணம் கொடுத்து மீட்டு பின் அதை பராமரிக்கத் தெரியாமல் திண்டாடுவது(ராதா என்று பெயரிடப் பட்ட அந்த குட்டிக்காக தலைவர் தனியா பாட்டெல்லாம் எழுதினாராம், என்னே அதிர்ஷ்டம் பெற்ற ஆட்டுக்குட்டி இல்ல?) என நாம் அறிந்திருக்க முடியாத பாரதியின் எளிய உருவத்தை வெளிக் கொணர்கிறது இந்நூல்.

பாரதியின் சுற்றத்தார் அனைவருக்கும் சிஐடி காவல் உண்டு. ஆரம்பத்தில் புதுவையிலிருந்து தன் தாய் வீடான கடையத்திற்கு செல்லமாள் பாரதி குழந்தையோடு பயணிக்கையில் தன் சிஷ்யர்கள் யாரையேனும் துணைக்கனுப்புவாராம் பாரதி. பின்னர் எப்படியும் ஒரு போலீஸ்காரர் பின்னோடு போகப் போகிறார் என்கிற தைரியத்தில் தனியாகவே பயணிக்கத் துவங்கினாராம் செல்லம்மாள். அப்படி பின்தொடர்ந்த ஒரு போலீஸ்காரரே சமயத்தில் அவருக்கும் குழந்தைக்கும் உதவிய கதையும், செல்லம்மாளின் தாயாரை பின் தொடர்ந்த போலீஸ்காரர் அப்பாட்டியுடன் அம்மாவாசைக்கு பாபநாசம் பாணதீர்த்தத்திற்கு சென்று புண்ணியம் கட்டிக் கொண்டதையும் படிக்கையில் காவல்துறையினரின் நிலமை இன்றும் அன்றும் ஒன்றாகவே இருப்பதை உணர முடிகிறது.

பொன்னு முருகேசம் பிள்ளை, அவரது மனைவியான பாரதியால் அண்ணியம்மா என்று அழைக்கப்பட்ட அம்மையார், குவளைக் கண்ணன், அம்மாக்கண்ணு என்ற மூதாட்டி என அவரது புதுவை வாழ்வில் அவரோடு நெருங்கி வாழ்ந்து அவரைக் கொண்டாடி, அவரது விரக்தியை கொஞ்சமேனும் தணித்த மனிதர்களை பற்றியும் இந்நூலில் விரிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

சிந்து நதியின் மிசை நிலவினிலே எனும் பாட்டில் ஏன் சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைக்க வேண்டும் என்ற சகுந்தலாவின் கேள்விக்கு பாரதியின் பதில் இது:

”பாப்பா, தமிழ்ப்பாட்டும் பாடலாம்; ஹிந்துஸ்தானியிலும் பாடலாம். பெரிய பெரிய மகத்தான கவிகள் நம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பாடுதற்குரிய முறையில் பாடலை இசையுடன் அமைத்து அதை சுவையுடன் பாடக்கூடிய சங்கீத வித்வான்கள் நம் தமிழுலகில் அதிகம் இல்லை. சங்கீதத்தில் தெலுகு என்றும், உருது என்றும் வேற்றுமை கிடையாது. ஆங்கிலேயர் தேசாபிமானம் முற்றியவர்கள்; பாஷாபிமானத்திலும் கரை கடந்தவர்கள். ஆனால், சங்கீதத்தில் ஜெர்மன் சங்கீதமும், இத்தாலிய சங்கீதமும் உயர்ந்ததென்பதை மறுப்பதில்லை. தவிர வடதேசத்தில் உள்ள அழகிய சிந்து நதியின் மீது, தென் தேசத்திலுள்ள அழகிய சேரநாட்டு பெண்களுடன் தமிழ் நாட்டினர்களாகிய நாம் சங்கீதத்துக்குகந்த அழகிய மொழியான தெலுங்கில் பாடி மகிழ்வோம் என்ற கருத்து நம் இந்திய தேசம் முழுவதையும் ஒன்றாக்கும் நோக்கத்தில்தான்;” என்றார். மேலும், சங்கீதத்துக்கு பாஷை இன்பம் உண்டேயல்லாது, பாஷைக் கட்டுப்பாடு கிடையாது. எந்த பாஷையில் பாடினாலும் அதன் அர்த்த பாவம் மாறாது பாட வேண்டும் என்பதே அவர் அபிப்ராயம்.

மேலும் அவருக்கு சங்கீதத்தில் இருந்த ஆர்வத்தையும், அவர் அதை கற்க எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் கூட இந்நூலில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

கடையம் வந்தபின் சகுந்தலாவுக்கு கல்வி கற்பிக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பெண் கல்வி பற்றியும், பெண் விடுதலை பற்றியும் வெறும் ஒப்புக்காக பாடியவர் அல்ல என்று நிறுவுகின்றன. மேலும் பெண்ணியம் பேசும் ஆண்களில் பலர் இன்றும் கூட அதை தன் வீட்டுப் பெண்களுக்கானது அல்ல என்றே நினைக்கின்றனர். அப்படியில்லாமல் கணவனுக்கு பின்னால் பத்தடி தள்ளி நடக்க வேண்டிய மனைவியை கைபிடித்து நடத்தி செல்வதில் இருந்து ஆரம்பித்து, ஒரு குக்கிராமமான கடையத்தில் பெண் குழந்தையை ஆண்கள் படிக்கும் பள்ளிக்கு அனுப்பி கல்வி பெற செய்தது வரை பல விஷயங்களில் சொந்த வாழ்வில் தான் கொண்ட கொள்கையை நடைமுறைப் படுத்திப் பார்த்தவர் பாரதி என்பதை இந்நூல் பறை சாற்றுகிறது.

கடையத்திலிருக்கையில் மற்ற ஜாதியினருடன் சமபந்தி போஜனம் செய்யப் போய் ஜாதிப்பிரஷ்டம் செய்யப்பட்ட பின் அவர் சென்னைக்கு நகர்கிறார்.

நூலின் பிற்பகுதி சுரேந்திரநாத் ஆர்யா, நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற பிற சுதந்திர போராளிகளுடன் அவருக்கிருந்த உறவையும், அவரது திருவல்லிக்கேணி வாழ்கையையும் பற்றி விவரிக்கிறது.

ஜமீன்தாரிடம் உதவி கோரியது, பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தது என சில சறுக்கல்கள் அவரது வாழ்வில் உண்டுதான். ஆனால் அதையெல்லாம் வாழ்கை முழுவதும் வறுமையையும், சுயஜாதி மற்றும் சுற்றத்தாரால் தொடர்ந்த விலக்குகளையும், அரசின் அடக்குமுறையையும் மட்டுமே ருசித்து வந்த ஒரு மனிதனின் கதையின் ஒரு கசப்பான பாகமாக பரிவுடன் பார்க்க நம்மால் ஏன் முடிவதில்லை?

மெல்லத் தமிழினி சாகும்
அந்த மேலை மொழிகள் புவிமிசை ஓங்கும்
என்றெந்த பேதையுரைத்தான்?


என்ற வரிகளில் முதல் வரியை மட்டும் படித்துவிட்டு பாரதி தமிழ் அழியும் என்று சொல்லிவிட்டார் என்று குதிப்பார்கள் சிலர்.

நாடுங்கால் ஒரு மனமற்ற செய்கையை
நல்லதோர் மணமாம்


என்று குழம்பிப் போய் செய்து கொள்ளாதே என்று பாடியவனை ஏதோ திருமண வாழ்கையையே எதிர்த்தவன் என்று புரிந்து கொள்ளும், எழுதிச் செல்லும் அரைகுறை புரிதலுடையோரும் நம்மில் உண்டு.

அவனது பகவத் கீதைக்கான முன்னுரையில் சம்சார வாழ்கை ஒருவனுக்கு எவ்வளவு முக்கியமென்பதையும், துறவு என்பதன் உண்மையான பொருளையும் மிகத் தெளிவான உரைநடையிலேயே விளக்கியிருப்பதை காணலாம். மேலும் அவரது கண்ணன் பாட்டில் வரும் கண்ணம்மா பாடல்கள் தவிர அவரது பல காதல் பாடல்கள் மனைவி செல்லம்மாவையே விளித்து பாடப்பட்டவை - பின்னர் செல்லம்மாவின் சகோதரர் அப்பாசாமியின் தலையீட்டால் அவையும் கண்ணம்மா என்று மாற்றப்பட்டது. இந்த விஷயத்தையும் இந்நூல் தெளிவாகவே பதிவு செய்கிறது.

மனைவியையே காதல் தலைவியாகக் கொண்டு, அவள் மேல் கவிதைகள் பல இயற்ற வேண்டுமென்றா எத்தனை தூரம் அவளை நேசித்திருக்க வேண்டும்? ஆனால் வரிகளுக்கிடையே படித்து, தனக்கு பிடித்த அர்த்ததை மட்டுமே எடுத்துக் கொண்டு குதிப்பவர்களுக்கு யார் இதையெல்லாம் புரிய வைக்க முடியும்?

அதே போல் தன் மூத்த மகள் தங்கம்மாவின் பால்ய விவாகத்தை அவர் கூடிய வரை தவிர்த்ததையும், அதற்காகவே காசியிலிருந்து அப்பெண்ணை வரவழைத்து புதுவையில் தன்னுடன் வைத்துக் கொண்டதையும், செல்லம்மாள் கடையம் செல்லும் ஒவ்வொரு முறையும் தங்கம்மாவை தன்னுடன் தங்க வைத்துக் கொண்டு ஆன வரையிலும் திருமண முயற்சிகளுக்கு தடை போட்டதும், தன் மென்மையான சுபாவம் காரணமாக தங்கம்மாளின் வளர்ப்புத் தாயாரும், தன் மைத்துனியுமான பார்வதிக்கு கொடுத்த ஒரு வாக்குறுதியால் மகளின் திருமணம் தன்னை மீறி நடப்பதை அனுமதிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளானதையும் கூட இந்நூலில் சகுந்தலா பாரதியின் வாக்குமூலத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். அதை விடுத்து, பெண் விடுதலை பற்றி பேசிய பாரதி தன் பெண்ணுக்கு பால்ய விவாகம் செய்து வைத்தது ”ஊருக்குத் தானடி உபதேசம், உனக்கும் எனக்குமில்லை” என்ற சிந்தனையால் ஆனது என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போவது எவ்வளவு சுலபமானது?

இப்படியான தவறான புரிதல்களிலிருந்து வெளிவர வேண்டுமென்ற ஆர்வம் உண்மையிலேயே இருந்தால், பாரதியை அருகிலிருந்து பார்த்தவர்களான வ.ரா, சகுந்தலா பாரதி போன்றோரின் நூல்களை படிப்பது நல்லது. அல்லது பரபரப்புக்காகவோ அல்லது தன் அரைகுறை புரிதலாலோ பாரதியின் வரிகளை திரித்து, அதற்கு தனக்கு பிடித்த சாயத்தை பூசி பார்ப்பேன் என்று அடம் பிடித்தால்... அய்யோ பாவம், உங்களை அந்த தீரமிகு புலவனின் ஆத்மா மன்னிப்பதாக...

16 comments:

said...

இன்றையப் பொழுது இப்படி......

அருமை.

said...

பாரதியின் நினைவுகள் ...படிக்க நல்லா இருக்குங்க.மகா கவிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

said...

மிக நல்ல பகிர்வு. நன்றி. வாய்க்குமாயின் இப்புத்தகத்தை வாங்கிப் படிக்கின்றேன்.

said...

யார் குதிக்கிறார்கள்? யார் தவறுதலாகப் புரிகிறார்கள்? அவற்றுக்கு நீங்கள் இணைப்புக்கொடுப்பின் நலம்

said...

//அப்படியில்லாமல் கணவனுக்கு பின்னால் பத்தடி தள்ளி நடக்க வேண்டிய மனைவியை கைபிடித்து நடத்தி செல்வதில் இருந்து ஆரம்பித்து//

இதை சரியா அக்கால முறைப்படி?

//ஜமீன்தாரிடம் உதவி கோரியது, பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தது என சில சறுக்கல்கள் அவரது வாழ்வில் உண்டுதான். ஆனால் அதையெல்லாம் வாழ்கை முழுவதும் வறுமையையும், சுயஜாதி மற்றும் சுற்றத்தாரால் தொடர்ந்த விலக்குகளையும், அரசின் அடக்குமுறையையும் மட்டுமே ருசித்து வந்த ஒரு மனிதனின் கதையின் ஒரு கசப்பான பாகமாக பரிவுடன் பார்க்க நம்மால் ஏன் முடிவதில்லை? //

பாரதியை ஒரு முழு மனிதராகப் பார்க்கவேண்டும் எனச் சொல்லும் நீங்கள் அவரைப்பற்றிப் பிறர் சொல்லும் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

பாரதியிடமும் குறைகள் உண்டு என்பது அவர்கள் வாதம். அவரை மனிதனாகப்பாருங்கள் என்கிறார்கள் அவர்கள்.

ஆனால், நீங்களோ அவரைத் தெய்வமாக்குகிறீர்கள்!

தவறு யார் மேல்?

said...

//பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தது என சில சறுக்கல்கள் //

இது பரவாயில்லை. இதைவிட பெரிய குற்றமுண்டு. அது பாரதியின் குணத்தையே கேள்விக்குறியாக்குகிறது. அதைப்பற்றி நான் எழுத விரும்பவில்லை.

said...

கண்ணம்மா கவிதைகளைப்பற்றி.

பாரதி காரியத்துக்கு (மரணச்சடங்குகளுக்கு) வந்த அப்பாத்துரை (செல்ல்ம்மாவின் அண்ணன்) சிலநாட்கள் வீட்டில் தங்கி தங்கைக்கு உதவிகள் செய்தார்.

இரவு முழுவதும் பாரதி எழுத்துக்கள் அடங்கிய பெட்டியை செல்லம்மாளிடம் வாங்கி ஒவ்வொன்றாகப் படித்து, திருத்தங்கள் செய்தார். அது தான், செல்லம்மா என்று தன் மனைவிக்கு எழுதிய சிருங்கார ரசம் பொருந்திய கவிதைகள, ‘கண்ணம்மா’ என மாற்றிய்து. அதைத்தான் சகுந்தலா சொன்னதாக இருக்கிறது.

விரசமான கவிதைகள் - அப்பாத்துரையின் பார்வையில்.

இன்று அப்படி இல்லாமல் இருக்கலாம்.

அன்று?

பின்னர், அவரே பதிப்பிக்கும் உரிமையைத் தன்னுடன் தக்கவைத்துகொண்டார்.

குவளக்கண்ணன் வந்து கேட்ட போது,
செல்லம்மா, தன் அண்ணன் கொண்டு சென்றுவிட்டார் என்பதற்குப்பதிலாக, வேறுஒருவருக்கு கொடுத்துவிட்டேன் என்று சொல்ல கண்ணன் வெறுங்கையுடன் திரும்பி விட்டார்.

said...

துளசி, Mrs. தேவ், ராமலக்ஷ்மி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கள்ளர்பிரான் - விரிவான பின்னூட்டங்களுக்கு நன்றி. முதலில்
//யார் குதிக்கிறார்கள்? யார் தவறுதலாகப் புரிகிறார்கள்? //

நிறைய பேர் இருக்காங்க. சமீபத்துல செம்மொழி வளர்க்க வந்த செல்வியாம் கனிமொழி கூட இந்த ”மெல்லத் தமிழினி சாகும்” என்பதை தவறா உபயோகிச்சாங்க. வலையுலகில் நிறைய பேர் இருக்காங்க. சுட்டி கொடுத்து சொந்த செலவுல சூனியம் வச்சுக்க நான் தயாரில்லை. ஆர்வமிருப்பின், தேடுங்கள். கண்டடைவீர்கள். :)))

அப்புறம், நிச்சயமா பாரதிய நான் தெய்வமா பாருங்கன்னு சொல்லவே இல்லை. குறைகள் அவனிடமும் உண்டு. ஆனா அவனை நீ ஏன் தெய்வமா இல்லை, சராசரி மனுஷனா ஏன் சிற்சில குறைகளோட இருந்தேன்னு சண்டை பிடிக்கறவங்களையும், அவன் மேல் சேறு வாரி பூசுறவங்களையும் பார்த்தாதான் எனக்க்கு கொஞ்சம் கடியா இருக்கு.

நிவேதிதா தேவிய சந்திக்கும் வரை மனைவிய கைநீட்டி அடிக்கற அளவுக்கு ஒரு சராசரி ஆணாதிக்கவாதியாத்தான் பாரதியும் இருந்தான். ஆனா, ஒரு நியாயமான கருத்து முன்வைக்கப் படுகையில் அதை உள்வாங்கிக் கொண்டு, தன்னை சுயவிசாரணை செய்து கொண்டு, தன்னை திருத்திக் கொள்ளும் அந்த பண்புதான் அவன் ஒரு சராசரிக்கும் மீறின மனிதனா மாத்துது. ஆனா நம்ம மக்கள், அவன் ஒரு கட்டத்துக்கு பின்னாலதானே மாறினான், கல்யாணம் ஆனதுலேர்ந்தே ஏன் மனைவிய மதிக்கலை, அதுனால அவன் பேசுற பெண்ணியம் வேஸ்ட்டுனு விதண்டாவாதம் செய்யறாங்க.

அவன் ஒரு மகாகவி. அவனிடமும் சில சராசரித்தனங்களும், இன்னைக்கு அரசியல் சரித்தன்மை உடையதா நினைக்கற பல விஷயங்களில் தவறான அணுகுமுறையும் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அதுக்காக அவனை ரொம்ப கேவலமானவனா சித்தரிக்கறதுதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. மத்தபடி நிச்சயமா அவனை விமர்சிக்கவே கூடாதுன்னு நான் சொல்லலை.

said...

பண்பட்ட எழுத்து லக்ஷ்மிமா. பின்னூட்டங்களிலும் உங்கள் மனவளம் வெளிப்படுகிறது. பாராட்டுகள்.

said...

சமுதாயம்.. அது மனதின் கண்ணாடி .. பாரதியும் அப்படி தான் .. ..

said...

//ஆனால் அதுக்காக அவனை ரொம்ப கேவலமானவனா சித்தரிக்கறதுதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. //

இதற்கு politics தான் காரணம்.

இடையில் மாறினார்; சுயவிசாரணை செய்து தன்னை மாற்றிக்கொள்ளும் பண்பு இருந்தது என்பதெல்லாம் சரியென்றாலும், அவர் சில விச்யங்களில் விடாப்பிடியாக இருந்தார். அஃதில் ஒன்று: ஆத்திகம்.

இவரின் ஆத்திகம். வேதீய இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதை முழுக்கமுழுக்க நம்பி, தன் இறுதி நாட்கள் வரை, எழுத்திலும் வாழ்விலும் தெளிவாக இருந்தார்.

இதன் காரணமாக அவர் பிராமணருக்கு எதிராக எழுந்த கிளர்ச்சியை - இன்று எப்படி அவர்கள் அதை வெறுப்புடன் நோக்குகிறார்களோ - அதைப்போல அவர் நோக்கிக் கண்டித்தார்.

சில பார்ப்பனீயக்கொள்கைகளை மட்டுமே அவர் விமர்சித்து கடுமையாகத் தாக்கினார். ஆனால் அதையும்கூட அவர் முழுமனதாகச் செய்யவில்லை. ஏதோ, தன் தனிப்பட்ட வெருப்பு, விருப்புகளைக்காட்டவே.

எடுத்துக்காட்டாக: ஆச்சாரங்கள். அவற்றை அவற்றை விட்டார். அவைகள் சரியில்லை என்பதற்காக அல்ல. தனக்கு பிறரிடம் பழக இடைஞ்சலாக் இருந்ததனால். சுதந்த்திரம்ப்போராட்டத்தை முழுமூச்சுடன் அவர் அணுகியதால், அவருக்கு பார்ப்பனரல்லாதோர் - வ உ சி, சுப்ரமணிய சிவா போன்றோரின் பழக்கம் தேவைப்பட்டது.

பூணுல் விட்டது மட்டுமலல; அவர் அதை ஒரு தலித்துக்குப் போட்டதும், ஒரு தனிப்பட்ட விசயமாக்வே. ஒரு கொள்கையாக அல்ல.

அவரின் கணிப்பின்படி, பூணுல் போட்டு தங்களை உயர்வாகக் காட்டிக்கொண்டு, பூணூலின் உண்மை மகத்துவத்தை பார்ப்பனர்கள் அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்பதுதான் காரணமே தவிர பூணுல் என்பதே ஒரு ஏமாற்று வேலை. அல்லது, தேவையில்லை என்பதனால் அல்ல.

சாதிகள் விசயத்திலும் அப்படியே. சாதிகள் என்பவை இந்துமதத்தின் பேரைக்கெடுத்து, அன்னிய மத்ததினருக்கு கீழ்த்தட்டு மக்களை செல்ல வைக்கிறது எனவே அவை வேண்டாவென நினைத்துதுதான் எதிர்த்தார்.

அதே வேளையில் ஆதி இந்து மதத்தில் சொல்லப்பட்ட நால்வகை வருணங்க்ள் உண்டு;அதில் பார்ப்பன்ருக்குறித்த வேதமோதுதலை அவர் செய்தால், மாதம் மும்மாறி பொழியும் என சொன்னார். பார்ப்பனர் தம் வேத வாழ்க்கையை ஒரு show வாக மட்டுமே செய்த்ததனால் அவர் கோபம் கொண்டார்.

பாரதி மதம், மதக்கோட்பாடுகள இவற்றில் ஒரு அப்பட்டமான பழைமைவாதி. அதி சுத்தமான் ஆதி இந்துமதமே வேண்டும். அது எப்படி இருந்தது. அதன் கூறுகள் என என்று தன் கட்டுரைகள் பலவற்றில் வரைந்தார்.

என்வேதான், பார்ப்பனரல்லாதோர் அவரை ஒரு பார்ப்பனராகத்தான் பார்க்கமுடிந்தது. அவர்களில் பலர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதனால், அவர்கள் இவரின் பிராமண மோகத்தை சட்டை செய்யவில்லை. பிராமணன் என்பது ஒரு தத்துவம். அஃதை அவர் மோகித்தார்.

இன்று அது வெளியே பேசப்படுகிறது.

இந்துத்வா வலைபதிவுகளிலும், பார்ப்பன்ர்கள் பலரால் நடாத்தப்படும் வலைபதிவுகளிலும் பாரதி படம் தவறாமல் இடம்பெறும். அவர் சுதந்திரக்கவிஞர் என்றல்லாமலல. அப்படியே அதுவும் இருந்தாலும், அது major காரணமல்ல.

”பாரதி ஒரு இந்துப்பித்தர். ஒரு வருணாசிரமத்தைப் போற்றிய்வர். பிராமணன் பிராமணத்துவத்தோடு வாழவேண்டும்” என நினைத்தவர் என்பதனாலே இந்துத்துவாவினரும், பார்ப்ப்னர்களும் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். அவர்கள், பாரதி தங்களுக்குச் செயத சேவையை நன்றியுடன் நினைவுகூறி, அவரை என்னாளும் அனைவருக்கும் நினைவு கூற வைக்கிறார்களாம்! வேறென்ன?

பிறரோ அவர்தம் கவிதைகளையும், நாட்டுப்பற்றையும் மட்டுமே போற்றுகின்றனர்.

பாரதியின் இந்துத்தவா, பிராமணப்பற்று போன்ற கொள்கைகளினால், அவர் திராவிடக்கட்சிகளால் வெறுக்கப்ப்ட்டு விமர்சிக்கப்பட்டு, அல்லது ஓரங்கட்டப்பட்டு வருவதை, சரியே அவர்களின் நிலைப்படி.

மகாகவி, என்றெல்லாம் நீங்கள் பேசாதீர்கள். காலம் கணிக்கட்டும். கணித்தும் வருகிறது. அது இலக்கியம் என்ற வரையறையில் வரும். அஃதை இலக்கியவாதிகள் கவனித்துக்கொள்வர்.

அவர் என்ன எழுதினார்; எப்படி வாழ்ந்தார் என்பதை யாராலும் மறைக்க முடியாது. எழுதியதை மாற்ற முடியாது, அவரிடமும் குறைகள் உண்டு என்றெல்லாம் பார்க்கத் தேவையில்லை. எழுதியது மட்டுமே நமக்கு இருக்கிறது அவரின் காலத்திற்குப் பிறகு. அதை நீங்கள் மாற்ற முடியுமா? எவராலும் முடியுமா?

"The Moving Finger writes; and, having writ,
Moves on; nor all your Piety nor Wit
Shall lure it back to cancel half a Line,
Nor all your Tears wash out a Word of it"

said...

//விதண்டவாதம் பண்ணுகிறார்கள்...அவனை ரொம்ப கேவலமானவனா சித்தரிக்கறதுதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. //

நீங்கள் பண்ண வேண்டியது சுய விசாரணை.

உங்களுக்கு விதண்டவாதம். ஏன், உங்கள் கொள்கைகளும் பாரதியுடைவையும் ஒன்றாகவிருப்பதனால்.

அவர்களுக்கு அஃது ஒரு நேர்வாதம்.

உங்களுக்குப்பிடிக்காதவற்றை - எடுத்துக்காட்டாக, ஜிகாதி கொள்கை - சிலர் அழுத்தம் திருத்தமாக மக்களிடையே பரப்பி வரும்போது, அவர்களை நீங்கள் விரும்புவீர்களா? அதை எப்படியெல்லாம் விமர்சிக்கமுடியுமோ, அப்படியெல்லாம் செய்து, அஃதை எதிர்க்க மாட்டீர்களா?

அதைத்தான் பாரதி விமர்சர்கள் செய்கிறார்கள்.

வருணசிரம்கொள்கை ஒரு எடுத்துக்காட்டு. அஃதை எவர் சொன்னாலும் செய்தாலும், அஃதை எதிர்த்துக் போராடுவது, அவர்களின் க்டப்பணி என்று நினைப்பதை விதண்டாவாதம் என நினைக்கிறீர்கள்.

said...

Thank you for allowing my counter views.

said...

லக்ஷ்மி, கள்ளபிரான், உங்கள் இருவருடய எண்ணங்கலிலும் ஒத்து போகிறேன் அதே நேரம் மாருபடவும் செய்கிரேன்.

mY THOUghts are like a wen diagram of you twos thoughts.

முதலில் பாரதி ஒரு சாரசரி மனிதனாகவே இருக்கட்டும். அதுவே சுகம். அதே சமயம் அவருடய் எழுத்தின் இனிமையயியோ அந்தகால சூழலில் செய்துகொண்ட சுய பரிசோதனையோ மறூக்க முடியாது.

அனால், இன்ரு அவரை கூவி கூவி கேவலபடுத்துபவர்கள் பலர் எந்த சுய பரிசோதனையையும் செய்ய்யாதது சிரிப்பாகாவே உள்ளது. உதாரனமாக, காதலர் தினத்தை எதிர்த்த இந்துத்வா முட்டாளகளுட்ன் பமகவும் எதிர்த்தது. ஆனால் பாரதியை கேவலப்படுத்த்உம் பலர் பாமாகவை பற்றி ஒன்ரும் சொல்லவிலை. இத்ஏ போலதான் நடிகை குஷ்புவிர்ர்க்கு ப்ரச்சினை ஏற்ற்ப்பட்டபோதும்

ஆகையைனால் எப்படி பார்ப்பனர்கள் பாரதியை தங்கள் பதிவுகளில் போற்றுகிறார்களோ ற்றவிட 'பகுத்தறிவாளர்களும் போட்டு தாக்குகிறார்கள்.

both parties or groups work on the same princile of identifying with a particular caste and then defending or offending each other. so both are the same. iNfact now that nearly 40 years over we see ,most of the dravidian leaders are particular about caste when it comes to marriage. Women still are secondary citizens in their households.They are there to uphold the culture, izzat etc. now is it very different from what the brahmins harp about?

so ,now we got to only think jesus christ's saying"Let He Who is Without Sin Cast the First Stone.


But ultimately the human in us wants identifiation, acceptance etc. so all of us try to choose either of the groups???

said...

அருமையான பதிவு,பகிரல்.பின்னூட்டங்களிலும் நிறைய விபரங்கள்!

மிக்க நன்றி,லக்ஷ்மி,கள்ளபிரான்!

said...

நல்ல பகிர்வு.