Tuesday, July 24, 2007

படித்ததில் பிடித்தது (5)

புத்தகம் - சிறகுகள் முறியும்
ஆசிரியர் - அம்பை (சி.எஸ். லக்ஷ்மி)
முதல் பதிப்பு - 1976
சமீபத்திய பதிப்பு - டிசம்பர், 2003
பதிப்பகம் - காலச்சுவடு

ஆசிரியரைப் பற்றி:

வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடீஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியும் கன்னடமும் அறிந்தவர். The Economic and Political Weekly, The Times of India, Free Press Bulletin, The Hindu போன்ற இதழ்களில் கட்டுரைகளும் நூல் விமர்சனங்களும் எழுதி வருகிறார். பெண் இசைக் கலைஞர்கள் மற்றும் நடனமணிகள் பற்றி இவர் எழுதிய நூலை Singer and the Song, Mirrors and Gestures என்ற இரு தொகுதிகளாக டில்லியிலுள்ள பதிப்பகம் வெளியிட்டுள்ளது. SPARROW(Sound & Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவியவர். அதன் இயக்குனர். பல டாக்குமென்டரி படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதி, உதவி இயக்குனராகவும் இருந்திருக்கிறார். வீட்டின் மூலையில் ஒரு சமையலறை(1988), காட்டில் ஒரு மான் (2000) இவரது பிற சிறுகதைத் தொகுதிகள்.2005 ஆம் ஆண்டுக்கான விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் நினைவு விருதைப் பெற்றவர்.

விளக்கு அமைப்பு அம்பைக்கு இவ்விருது வழங்கியபோது வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவரைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

அமெரிக்காவில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பான விளக்கு நிறுவனத்தின் புதுமைப் பித்தன் இலக்கிய விருது இவ்வாண்டு எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. லதா ராமகிருஷ்ணன், க்ருஷாங்கினி, திலீப் குமார் ஆகியோரடங்கிய விளக்கு நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் அம்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடகம், கட்டுரை சிறுகதை என்று பல தளங்களில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர் இம்முப்பதாண்டுக் கால இலக்கியப் பங்களிப்பைக் கணக்கில்கொண்டு விளக்கு விருது வழங்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள வெளிச்சத்திற்கு வராத பல பெண்களின் வாழ்க்கைச் சிக்கல்களை வாய்வழிப் பதிவு செய்ய 'ஸ்பேரோ' என்ற அமைப்பையும் நடத்திவருகிறார். மும்பையில் வசிக்கும் இவர், அல்லலுறும் இந்தியப் பெண்களுக்கென ஒரு எழுத்து இயக்கம் நடத்தி வருகிறார் என்றால் மிகையாகாது.

"தனது படைப்புக்களில் பெண்சார் மரபார்த்த பார்வைகளையும் பிம்பங்களையும் தொடர்ந்து கேள்விக் குட்படுத்தியும்,தோலுரித்துக் காட்டியும் வந்திருப்பவர் அம்பை" என்கிறர் லதா ராமகிருஷ்ணன்.

"குடும்பத்தில் வாழும் பெண்ணின் இடத்தைஇலக்கியத்தில் துணிவுடனும் உண்மையாகவும் சிறுகதைகளின் மூலம் பதிவு செய்தவர்" என்று க்ருஷாங்கினி குறிப்பிட்டுள்ளார்.

"தன்னை ஒரு பெண் எழுத்தாளர் என்று பறைசாற்றிக் கொள்ளவோ அத்தகுதியை எதற்கும் பயன்படுத்திக் கொண்டதோ இல்லை" என்று அம்பையின் தெள்ளிய நிலைப்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறார் திலீப் குமார்.

தற்காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தரம் வாய்ந்த ஆனால் வெளிச்சத்துக்கு வராத படைப்பாளிகளைப் பரவலாக அறிமுகப் படுத்தும் விளக்கின் நோக்கத்துக்கு மிக உகந்ததாகிறது இத் தெரிவு. நடுவர் குழுவுக்கும் இந்தியத் தொடர்பாளரான வெளி ரங்கராஜனுக்கும் விளக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

மொத்தம் 13 சிறுகதைகள் உள்ள இந்நூலைப் பற்றி அம்பையின் முன்னுரை இது.

1976ல் வெளிவந்த புத்தகத்தின் மறுபதிப்பை வெளியிட, கதைகளை மீண்டும் அச்சில் காணும் ஆசை அல்லது தைரியம் இவற்றைத் தவிர வேறு வலுவான காரணங்கள் தேவை. ஒன்று கதைகள் இறவா இலக்கியமாக இருக்க வேண்டும் அல்லது உடனடியாகக் கதைகளின் மேல் கவனம் செலுத்துவதற்கு நிமித்தமாக படைப்பாளியாவது இறந்திருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களும் இந்தத் தொகுப்பை பொறுத்தவரை செல்லாது. இதிலுள்ள கதைகள் 'இறவா இலக்கியம்' எனும் தகுதியைப் பெற்றவை அல்ல. 1967ல் சென்னையில் தொடங்கி 1976ல் டில்லியில் முடியும் வாழ்க்கைப் பயணத் தடத்தினூடே விளைந்த பதிவுகள் இவை எனலாம். இப்பயணம் உள்ளடக்கிய இலக்கிய ஊடாடல், மொழி, ஒரு நபரின் வளர்ச்சி, கற்பனை, அப்போதைய சூழல் இவற்றின் வரைபடமாக இத்தொகுதியைக் கொள்ளலாம். இலக்கியச் சரித்திரத்தின் சில கண்ணிகளை இணைக்க இத்தகைய வரைபடங்கள் பயன்படலாம்.

சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிற்குப் பின் வளர்ந்து, ஐம்பதுகளில் பள்ளிக்குச் சென்று, மேற்படிப்புக்காகச் சென்னைக்கு வந்து, பின் சிறு ஊரில் பள்ளி ஆசிரியையாக வேலை செய்து, பின் தலைநகரம் போய் முனைவர் பட்டத்துக்குப் படித்து, ஆராய்ச்சி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் வேலை பார்த்த பெண் வாழ்க்கையை சந்தித்த தருணங்களின் சிதறல்கள் இக்கதைகள்.

மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் 1967ல் சிறகுகள் முறியும் கதையை எழுதியபோது பெண் என்ற ரீதியில் வாழ்க்கையை எதிர்கொண்ட முயற்சியில் சில அடிகள் விழுந்தாகி விட்டது. உடல் என்ற ஒன்று இடையில் வராமல் எந்த ஆண் - பெண் நட்பும் பார்க்கப்படுவதில்லை போன்ற பெரிய படிப்பினைகளை ஒரு சிறு ஊரிடமிருந்து பெற்றாகிவிட்டது. பலமுறைகள் ஒதுக்கித் தள்ளினாலும் சில சமயம் சோர்ந்ததுண்டு. ஒரு பின்னிரவு நேரம் நானும் இன்னொரு டீச்சரும் எழுத்தாள நண்பர் மெய்யடியானுடன் ஒரு சினிமா பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். படம் பற்றியும் கதை பற்றியும் ஏதேதோ பேசியபடி நடை. திடீரென்று, "ஏண்டா, ஈர்க்குச்சி மாதிரி இருக்கான். எப்படிடா ரெண்டுரெண்டு பொம்பளைகளைச் சமாளிக்கிறான் இந்தச் செட்டியார்?" என்று உரக்க ஒரு குரல் எழுந்தது பின்னால். தூக்கிவாரிப் போட்டது. எங்கள் உரையாடலை விடாமல் தொடர்ந்தபடி, அவர்கள் பேசிய ஆபாசங்களையும் செவிமடுத்தபடி, வீட்டை எட்டிய பிறகு, மெய்யடியானுக்கு நன்றி கூறி அவர் விடைபெற்றபின், ஒலியே இல்லாக் கேவல்கள். விம்மலை அடக்கிய தொண்டையில் வலி. கண்கள் எரியஎரிய கண்ணீர். பெண்ணின் உடலை மையமாக்கிய அந்த ஆபாச மொழி ஏற்படுத்திய உடல் கூச்சம் - இப்படிக் கழிந்தது அந்த இரவு. உடலைப் பற்றிய அறிவோ பிரக்ஞையோ இல்லாமல் எழுதிய ஒரு வெள்ளைமனது நாவல் அப்போதுதான் 'கலைமக'ளில் தொடர்கதையாக வெளிவந்துகொண்டிருந்தது. இரண்டே ஆண்டுகளில் உடலையே பிரதானமாக்கிய நிகழ்வுகள். எல்லாவற்றையும் தாண்டி 1967ல் எழுத உட்கார்ந்ததும் பிறந்தது 'சிறகுகள் முறியும்'.

சிறுகதையின் இலக்கணம், வரைமுறைகள், தமிழிலக்கியத்துடன் ஆழ்ந்த பரிச்சயம், மற்ற மொழி இலக்கியங்களுடன் தொடர்பு இவை எதும் இல்லாமலே அந்தரத்தில் கரணம் போடுவது போல் செய்த முயற்சிகள் மற்ற சில கதைகள். சில நல்ல இலக்கிய மனங்களின் தூண்டுதலையும் ஊக்குவிப்பையும் பலமாகப் பற்றிக்கொண்டு, குழந்தைகளுக்கான ஆங்கிலக் கதைகளில் வரும் ரெபுன்ஸலின் முடியைப் பற்றிக் கொண்டு கோட்டை மேல் ஏறும் அரசிளங்குமரன் போல ஒரு சாகசம்; எல்லைகளை அறியாததால் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக ஒரு உலாத்தல். ஒரு களம், ஒரு மண், ஒரு மொழி, ஒரு ஆற்று நீர் என்றில்லாமல் பல இடங்களை தொட்டு மீளும் ஆனந்தம் - இவை அனைத்தும் உண்டு இக்கதைகளில்.

தமிழ்நாட்டில் இல்லாமல் வெளியில் இருப்பவர்களுக்கு, தமிழ்மொழி ஒரு பற்றுக்கோல். விரல்சூப்பும் குழந்தைக்கு கட்டைவிரல் போல மொழி ஒரு ஆற்று. தனிமைப்படும்போது தோழியாகவும், உறவு பூணும்போது சங்கேதமாகவும், கருத்துப் பரிமாற்றத்துக்குப் பாலமாகவும், கட்டுப்படாத கற்பனையை தொட்டு மாற்றும் மந்திரமாகவும் ஆகிவிடுகிறது மொழி. இந்த மொழி தரும் போதையில், அதனுடன் விளையாடியபடி, குதூகலித்தபடி, திளைத்தபடி எழுதியவை இதிலுள்ள சில கதைகள்.

இக்கதைகளின் அடித்தளத்தில் இவை எல்லாம். ஒரு தசாப்தத்தின் புழுதியைப் பூசிக்கொண்டு. முதற் பதிப்பில் இருந்த பயங்கள் நாடகம் இதில் இல்லை. அப்பதிப்பிலிருந்த அச்சுப் பிழைகளும் இல்லை. இவற்றை எழுதிய படைப்பாளியும் இப்போது இல்லை. இக்கதைகளை இறக்கி வைத்துவிட்டு, வேறுவேறு கதைகளை, வெவ்வேறு சமயத்தில் தூக்கியபடி வேறு பயணங்களை மேற்கொள்ளும் முயற்சியில் அவள். ஒர் இடத்தில் வைத்துச் சென்ற ஒன்றை மீண்டும் எடுத்து, தூசி தட்டி பத்திரப்படுத்தும் சுகம்தான் மறுபதிப்பில். இந்தக் காலகட்டத்தில் இதைப் படிப்பவர்களை இந்த வரைபடம் சில இலக்குகளுக்கு இட்டுச் செல்லலாம். வெறும் வரைபடமாகவே நின்றும் போகலாம். அவரவர் மேற்கொள்ளும் பயணத்தைப் பொறுத்தது அது.

பி.கு: ஆசிரியரைப் பற்றிய குறிப்பும் முன்னுரையுமே மிகவும் நீண்டு விட்டதால் இப்புத்தகத்திலிருந்து ஒரு சிறுகதையை ப.பி தொடரின் அடுத்த பாகத்தில் தட்டச்சு செய்து போடுகிறேன். தொடர்ச்சி விட்டுப் போகாதிருக்க இடையில் வேறு எந்த பதிவும் போட்டு உங்களைப் படுத்தாமலிருக்கவும் உத்தேசித்திருக்கிறேன். :)

6 comments:

said...

சிறுகதைகளை பதிவிப்பது நல்லதுதான் ஆனால் சிறுகதைகளை குறித்த உங்களின் பார்வையும் முன் வையுங்கள் அது சிறப்பாக இருக்கும்.

அம்பையின் சிறுகதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்ததோடு சரி தொகுப்பாய் எதுவும் படித்ததில்லை சிறப்பான அறிமுகத்திற்க்கு நன்றி

said...

நன்றி அய்யனார். நீங்கள் சொல்வது போல் என் கருத்துக்களையும் கலந்து எழுத முயற்சிக்கிறேன்.

said...

தமிழ் மொழி, கலை, இலக்கியம் அனைத்திற்கும் நமது ஊரில் மதிப்பு குறைந்து விட்டது. பாரதியை கண்டுகொள்ளாமல் தெருவில் விட்டுவிட்டோம். இப்படி எத்தனையோ...

அம்பைக்கு எனது வணக்கம்.

said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராசு.

said...

லஷ்மீ! நானும் அங்கங்குப் படித்ததுதான். படித்தவரையில் அதீத பெண்ணீயம் சொல்வதாய் தோன்றியது.
உங்கள் பார்வையில் எப்படி?

பி.கு சின்ன கோரிக்கை. நீங்க ப.பி என்று தலைப்பு வைத்தால் என்னவோ என்று புரியாமல் போகும் வாய்ப்பு உண்டு. அதனால் புத்தக அறிமுகம் என்பதை அழகாய், தெளிவாய் போடுங்க அம்மணி. என்னைப் போல பல புத்தக புழுக்கள் இங்கே உண்டு :-)

said...

இன்றைய நிலையில் பார்க்கும் போது அவரோட எழுத்துக்கள் அதீத பெண்ணியம் பேசுவதாய் தோன்றும்தான், மறுக்கவில்லை உஷா. ஆனால் அது எழுதப்பட்ட காலத்தையும் கணக்கில் கொண்டு பார்த்தால் அந்த தீவிரம் தேவையாயிருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. தலைப்பு, நான் முதல் சில இடுகைகளுக்கு படித்ததில் பிடித்தது என்று வைத்து பின் தொடர்ந்த இடுகைகளில் சுருக்கிவிட்டேன். நீங்கள் சொல்வது போல் அதிகம் எடுபடாது போனதற்கு அது கூட காரணமாயிருந்திருக்கலாம். திருத்திவிடுகிறேன். சுட்டியதற்கு நன்றி.