Monday, July 16, 2007

படித்ததில் பிடித்தது (4)

புத்தகம் - ஒற்றன்
ஆசிரியர் - அசோகமித்திரன்
வகை - நாவல்
முதல் பதிப்பு - நவம்பர், 1985
சமீபத்திய பதிப்பு - டிசம்பர், 2005
பதிப்பகம் - காலச்சுவடு

நான் சுலபமாய் வகை நாவல் என்று போட்டு விட்டேன். ஆனால் படிக்கையில் இதை நாவல் என்றோ, இல்லை பயணக் கட்டுரைத் தொடர் என்றோ சுலபத்தில் வகைப் படுத்திவிட முடிவதில்லை. சொல்லப்போனால் இதன் படைப்பாளியே கூட முதல் பதிப்பிற்கான முன்னுரையில் "இப்படைப்பை வகைப்படுத்துவதில் சிறிது தயக்கம் இருக்கத்தான் செய்தது. தமிழுக்குப் புதிதான அந்த அமைப்புக்கு ஒரளவு அருகாமையில் இருக்கும் புனைகதை வடிவம் நாவல்தான் - ஒரு நாயகன், ஒரு களம் (ஐக்கிய அமெரிக்கா), ஒரு கால கட்டம்(1973 - 1974)." என்றே குறிப்பிடுகிறார். அந்த முன்னுரையில் மறக்கவியலா ஒரு வரி "மனமிருந்தால் யாவரும் கேளிர் என்பதுதான் எவ்வளவு சாத்தியமானது!" (இந்த வரிகளை படிக்கையில் நம்ம தமிழ்மண வாசகர்களுக்கு ஒரு பெருமூச்சு நிச்சயம் :) )

சர்வதேச எழுத்தாளர் சந்திப்பிற்காய் அயோவா சிட்டி பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் தான் அமெரிக்கா சென்று வந்த அனுபவத்தையே அசோகமித்திரன் புனைகதை உருவில் இந்நூலில் படைத்திருக்கிறார். ஒற்றன் பிறந்த கதயில் இவர் அமெரிக்கப் பயண ஏற்பாடுகளை விவரிக்கிறார் இப்படி - "அந்த நாளில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி கையெழுத்திட்டால் பாஸ்போர்ட் பத்து நாளில் வாங்கி விடலாம். அம்மை மற்றும் மஞ்சள் சுரத்திற்குத் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு இரு வாரம் காத்திருக்க வேண்டும். பெட்டி 20 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. " இந்த வரிகளை படிக்கும் அமெரிக்க விசாவிற்கு முயற்சி செய்த/செய்ய இருக்கும் யாரும் இன்று ஒரு ஏக்கப் பெருமூச்சை விடாதிருக்க முடியாது.

"சந்தித்தவர்கள் சொன்ன யோசனைகளை எல்லாம் கேட்டுக் கொண்டு இரண்டு ஜதை ஜோடு, இரண்டு கம்பளி, இரண்டு ஸ்வெட்டர், நான்கு ஸாக்ஸ், நன்கு பொட்டலம் கட்டப்பட்ட ரசப்பொடி எல்லாவற்றையும் அந்தக் கால சூட்கேஸ் ஒன்றில் அடைத்துக்கொண்டு அக்டோபர் 6ந்தேதி சென்னையிலிருந்து கிளம்பினேன்."
எத்தனை வருஷமானாலும் இன்னமும் நம்ம டுபுக்கு உட்பட யாருமே இந்த ரசப்பொடி இல்லாமல் மட்டும் வெளிநாட்டு விமானமேறுவதில்லை. அது என்ன மாயமோ தெரியலை. ஆனால் அசோகமித்திரனும் தான் எடுத்துப் போன பொருட்களிலேயே உபயோகமாய் இருந்தது ரசப்பொடி மட்டுந்தான் என்கிறார். :)

"ஏழு மாதம் அங்கிருந்தேன். எனக்குத் தெரிந்த சமையலை சமைத்துக் கொண்டு சமாளித்தேன். எனக்கு மனிதர்கள் பிரச்சனையாக இருக்கவில்லை. நிறையவே மனிதர்கள். கறுப்பு, சிவப்பு, மஞ்சள், மாநிறம், கண்ணைப் பறிக்கும் வெள்ளை. ஆங்கிலம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், கொஞ்சம் தெரிந்தவர்கள், நிரம்பப் படித்தவர்கள், படித்தவர்கள் போல பாவனை செய்பவர்கள். ஆனால் துக்கம், சங்கடம் என்று வந்தபோது எல்லோரும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள். நான் மெத்த தெரிந்தவன் என்று என்னிடம் யோசனை கேட்க வரும்போது எனக்கு கூச்சமாக இருக்கும். நான் ஒவ்வொரு கணமும் அவர்களிடமிருந்துதான் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று அவர்களுக்குத் தெரியாது."

"ஒற்றன் நாவலில் எல்லோரும் அப்பாவிகள். எல்லோருக்கும் அயோவா சிடி வெளியூர், வெளிநாடு. எல்லோருக்குமே பெரிய எதிர்காலம் கிடையாது. அவர்களேதான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்து பாதிப்பேர் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார்கள். எனக்கு அன்றும் இன்றும் நம் நாடுதான் என் இருப்பிடமாகத் தோன்றுகிறது."

இந்த நாவலிலிருந்து சில இடங்களை எடுத்துப் போடாமல் முன்னுரையிலிருந்தே கிள்ளிப் போட்டிருக்கிறேன். வழக்கமாய் புத்தகங்களின் உள்ளடக்கத்திலிருந்து சில வரிகளை எடுத்துப் போட்டுதான் இந்த புத்தகம் இதைப் பற்றியது என்று சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் இங்கேயோ அ.மி யே அதை தெளிவாய் தன் முன்னுரையில் சொல்லிவிட்டார். அதனால் நான் புதிதாய் சொல்ல எதுவுமேயில்லை.

மொத்த நாவலும் ஒரு சிறுகதை தொகுப்பு போலவும் இருப்பது இதன் தனிச் சிறப்பு. ஏனெனில் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை மையமாய் கொண்டிருக்கும். அவர்களுடனான அ.மியின் நட்பு அந்த அத்தியாயத்தில் விவரிக்கப் பட்டிருக்கும். ஆக அதனளவில் அது ஒரு சிறுகதையின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியுமிருக்கும். எனவே ஒரே ஊரில் ஒரு குறிபிட்ட காரணத்துக்காய் சேர்ந்து வசித்த சில எழுத்தாளர்களின் உறவை பற்றியது என்னும் பொதுமைத் தன்மையிருக்கும் அதே சமயம் ஒவ்வொன்றையும் ஒரு தனி கதையாகவும் ரசிக்க முடியும்.

3 comments:

said...

உஷாஜியின் அறிவுரைப்படி தலைப்பை மாத்தியிருக்கேன். ஒரு வேளை நான் வச்ச தலைப்பு புரியாமதான் மக்கள் இதை கண்டுக்கலையோன்னு ஒரு சம்சயம். அதனால் இப்பதிவை தமிழ்மண முகப்புக்கு கொண்டுவரும் பொருட்டு ஒரு சின்ன பின்னூட்டக் கயமைத்தனம். மன்னித்தருளுவீர்களாக.

said...

முதல்ல இந்த 'ஜி" யைக் கட் பண்ணிங்க. ரொம்ப வயசான பீலிங் வருது.

said...

மோகனா வந்து தலைப்பை நீங்க ப்லாகர்ல மாத்தினாலும் அதையெல்லாம் தமிழ்மணம் மதிக்காது, நீங்க திரும்ப போட்டே ஆகணும்ங்கறார். அவ்ளோ பொறுமையா எல்லாத்தையும் நோண்ட நம்மாலாகாது. போனது போகட்டும், இனிமே திருத்திகிட்டா போவுது. அப்புறம் உஷா, இனிமேட்டு இப்படியெல்லாம் அதிகப் பிரசங்கித்தனமெல்லாம் செய்ய மாட்டேன். மாப்பு... :)