Wednesday, January 14, 2009

காதல்னா சும்மா இல்லை- படம் என் பார்வையில்!







ரிலீசான முதல் நாளே படம் பார்ப்பது எனக்கு இதுதான் முதல் முறை. திடீரென இன்று காலை முடிவு செய்து கிளம்பினோம். உண்மையில் பல வாரங்களாக திண்டுக்கல் சாரதி படம் பார்க்கவேண்டுமென்று திட்டமிட்டு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. பொங்கலுக்கு எனக்கு சீர் தருவதற்காக ஊரிலிருந்து சித்தி, சித்தப்பா வந்திருப்பதால் வீட்டில் வேலை எனக்கு குறைவாக இருந்தது (காலையிலிருந்து செய்த இரண்டே இரண்டு வேலை பொங்கல் பானையின் அருகிலிருந்து பால் பொங்கியதும் பொங்கலோ பொங்கல் என்று கூவியதும், பொங்கல் தயாரானது விளக்கேற்றியதும்தான். அதிலும் பாலா முதல் வேலையை மட்டுமே செய்தார் :)) ) எனவே சாப்பாடானதும் படத்துக்குப் போகலாம் என்று முடிவு செய்து சத்யத்தின் வலைப்பக்கத்துக்கு போனால் திண்டுக்கல் சாரதி இன்று அட்டவணையிலேயே இல்லை. அபியும் நானும் படத்திற்கு முதல் வரிசை இருக்கைகளாகத்தான் இருந்தது. எனவே மீதமிருக்கும் படங்களில் இந்த படத்தில் எனக்குப் பிடித்த ஹீரோயின் என்பதாலும், விளம்பரங்களில் பார்த்திருந்த ஒரு பாடல் பிடித்திருந்த காரணத்தாலும் இந்த படத்துக்கு இரு டிக்கெட்டுகளை பதிவு செய்தோம்.

அதிலும் நாங்க 10 மற்றும் 11 எண்ணுள்ள இருக்கைகளைத் தேர்ந்தெடுக்க, டிக்கெட்டில் வந்திருந்ததோ 9 மற்றும் 10 எண்கள். இரண்டு இருக்கைக்கும் நடுவில் நடைபாதை. நொந்து போய் அவர்களது தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் உங்களுக்கு 8 மற்றும் 9ஆம் எண்ணுள்ள இருக்கைகள்தான் ஒதுக்கப் பட்டுள்ளன என்று தைரியம் தந்தார்கள். சரி, என்ன ஆனாலும் அங்கு போய் ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பிப் போனோம். பார்க்கிங்க்ற்கு வேறு ராயபுரம் மணிக்கூண்டு வரை போய் சுற்றிக் கொண்டு வரவேண்டுமென்பதில் பாலாவுக்கு ஏகக் கடுப்பு. இந்த குளறுபடிகளில் படம் ஆரம்பித்து 5-10 நிமிடம் கழித்தே உள்ளே நுழைந்தோம். தட்டுத் தடுமாறி இருக்கைகளைக் கண்டுபிடித்து அமர்வதற்குள் போதும் போதுமென்று ஆனது.





தெலுங்கில் வெளியான கம்யம் என்ற படத்தின் ரீமேக் இது. இளங்கண்ணன் இயக்கியுள்ளார்.
படம் ஏமாற்றவில்லை. சற்றே மாறுபட்ட நல்ல கதை. பாடல்களில் ஒன்றே ஒன்றுதான் தேறும். கிளைமேக்ஸை நெருங்குகையில் தேவையில்லாத சில விஷயங்களைச் சேர்த்து சற்றே இழுத்திருக்கிறார்கள் என்பது தவிர வேறு ஏதும் பெரிதான குறைகள் இல்லாத காட்சியமைப்புகள். வழக்கமாய் ஹீரோவாக நடித்து நமது பொறுமையை சோதிக்கும் ரவிகிருஷ்ணா இதில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து நம்மை காப்பாற்றியிருக்கிறார். கதாநாயகனாய் வருகையில் நம்மை மிகவும் வெறுப்பேற்றுவது அவரது குரல்தான். ஆனால் அந்தக் குரலே அவரது இந்த நகைச்சுவை அவதாரத்தில் அவரை காப்பாற்றுகிறது.

இருவேறு துருவங்களாக இருக்கும் கதாநாயகன் நாயகி. நாயகன் இரவு முழுவதும் நான்கு பார்ட்டிகளுக்குப் போய், பகல் முழுவதும் தூங்குமளவு பிஸியானவன். நாயகி அநாதையாய் வளர்ந்து, டாக்டராகி, தன்னைச் சுற்றியிருக்கும் எளிய மக்களுக்குத் முடிந்த வரை சேவை செய்யும் எண்ணத்தோடும் எல்லோரிடமும் அன்போடும் வாழ்பவள். மெல்ல மெல்ல இருவரும் நெருங்குகையில் ஏற்படும் ஒரு சச்சரவு பெரிதாகிறது. நாயகி இருக்கும் சூழலும், அவளது நோக்கங்களும் நாயகனுக்கு கேவலமாகவும், சகிக்க முடியாததாகவும் தோன்றுகிறது. இதனால் நமக்குள் ஒத்து வராது என்று சொல்லி நாயகி பிரிந்து செல்கிறாள். அவளைத் தேடி நாயகன் போகும் பயணம்தான் படமே.

அவர்களது காதலும், பிரிவும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளாகவே முழுவதும் வருகிறது. இடையில் பைக் திருடனான ரவி அவரோடு இணைந்து கொள்கிறார் - அவரது விலை உயர்ந்த பைக்கின் மீது ரவிக்கு கண். ஆனால் மெல்ல மெல்ல இருவரும் நண்பர்களாகிறார்கள். வழியில் எதிர்படும் பல்வேறு சம்பவங்கள் அவருக்கு மனித வாழ்வின் மற்றொரு பரிமாணத்தை புரிய வைக்கிறது. எதிர்பாராமல் நாயகன் கையிலேயே இறக்கிறார் ரவிகிருஷ்ணா. கடைசியில் நாயகியை சந்திக்கையில் முற்றிலும் மாறியவராக ஆகிறார் நாயகன். முடிவு சுபம்.

படத்தை தூக்கி நிறுத்துவது ரவி கிருஷ்ணாவின் நகைச்சுவைதான். குறிப்பாக ஆரம்பத்தில் நாயகனோடு இணைந்து கொள்வதற்காக போடும் பில்டப்புகளில் வழியில் ஆங்காங்கே சும்மாவேனும் நிறுத்தி பலருடனும் கலாய்த்துக் கொண்டு வருமிடத்திலும், பிறகு ஒரு நம்பிக்கையில் நிலவிடம் தனது பிரியத்துக்குரியவர்களிடம் சேதி சொல்லச் சொல்லிக் கொண்டிருக்கும் சர்தார்ஜியை கொஞ்சம் வெயிட் செய்யச் சொல்லிவிட்டு தான் தனது சித்தப்பாவை திட்ட வேண்டியதை சொல்லிவிட்டு பிறகு அவரை கண்டின்யூ செய்து கொள்ளச் சொல்வதுமாக கலக்கியிருக்கிறார்.

எல்லாவற்றையும் விட தேஜாஸ்ரீயின் பாடல் முடிந்த பின்னான காட்சிகளே படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானதாய் இருந்தது. தேஜாஸ்ரீ கிராமத்து மேடைகளில் ஆடும் ஒரு நாட்டிய பெண் மேடை கிடைக்காத சமயங்களில் வயிற்றுப்பாட்டுக்காக அவர் செய்யும் வேலை பாலியல் தொழில். அவர் திருவிழாவில் ஆடிக் கொண்டிருக்கையில் ரவியும் அவரோடு இணைந்து ஆடிக் கொண்டிருக்கிறார். உள்ளூர் பெரிய(?!?!) மனிதர்கள் சிலர் அப்பெண்ணை இன்னமும் ஆடை குறைத்து ஆடச் சொல்ல, அவள் மறுக்கிறாள். உடனே நீ என்ன பெரிய பத்தினியா, பலரோடு படுக்கறவதானே, ஆடச் சொன்னால் அவுத்துப் போட்டுட்டு ஆட வேண்டியதுதானே என்று வழக்கமான கேள்விகள் வருகின்றன. அவள் நான் பலரோடு படுப்பவள்தான் என்றாலும் ஆடையின்றி மேடையில் ஆட நான் மிருகமல்ல என்கிறாள். வலுக்கட்டாயமாகத் துயிலுரிக்கத் தயாராகும் ஆட்களை ரவியும், பின்னால் ஹீரோவும் அடித்து விரட்டுகிறார்கள். ஒரு பாலியல் தொழிலாளியே ஆனாலும் அவளை வலுக்கட்டாயமாக ஆடையுரிக்கவோ அனுபவிக்கவோ யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்பதை உரத்துச் சொல்ல முன்வந்த இயக்குனரை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

பொதுவாகவே நம் சமூகத்தில் ஒரு மனோபாவம் - நடத்தை சரியில்லாதவள் என்று ஆகிவிட்டாலே அவளை யாரும் எப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம், அதெல்லாம் அவளுக்கு வேண்டிய தண்டனைதான் என்பதான சிந்தனை நமக்குள் ஊறிப்போயிருக்கிறது. ஆடை குறைப்பதோ, குறைக்க மறுப்பதோ அது ஒரு தனி மனிதனின் உரிமை என்பதையும், அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்பதையும் இன்னமும் நாம் நிறைய பேருக்கு புரிய வைக்க வேண்டியதிருக்கிறது. அந்த வகையில் இது போன்ற ஒரு சில நல்ல காட்சியமைப்புகள் ரொம்பவே நம்பிக்கையைத் தருகின்றன.

படத்தில் இன்னமும் கொஞ்சம் நல்ல பாடல்கள் இருந்திருக்கலாம்... பழைய வாசனை அடிக்கிறது. தலைப்பும் இன்னமும் சற்று பொருத்தமானதாகவும், அழகாகவும் தேர்ந்தெடுத்திருக்கலாம். நீண்ட நாட்கள் கழித்து குடும்பத்துடன் ரசிக்க படியான அருமையான படம் பார்த்த திருப்தி எனக்கு.

6 comments:

said...

LET US WAIT AND SEE FOR SOME MORE COMMENTS ABOUT THIS FILM....AS IT IS...IT IS A GOOD FILM AS PER THE AUTHOR'SVERSION...

said...

தலைப் பொங்கலை தலையோட சினிமாவுக்கு போய் கொண்டாடிட்டீங்க

வாழ்த்துக்கள்

ஒரு சந்தேகம்

எங்க தலை இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதுவாரா?

இல்லை அவரோட கருத்துக்களும் இதில இன்குளூட் ஆயிருக்கா?

said...

ஒரு எஸ். எம். எஸ் அடிச்சேன் உங்களுக்கு வந்ததா தெரியல..

ஆமா 8 9 தானே சீட்.. :)

said...

நீங்கள் தெலுங்கில் பார்த்தால் மிகவும் ரசித்திருப்பீர்கள்.

Anonymous said...

தலைப்பொங்கல் வாழ்த்துக்கள், நல்லவேளை வில்லு பாத்து கண்ல ரத்தம் வராம தப்பிச்சீங்களே

said...

சில நாள்களுக்கு முன்பு, படங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது, ஒரு தமிழ்ப் படத்தை குறிப்பிடும் பொழுது, தெலுங்கு படம் போல குப்பையா இருக்கு என்றேன்.

உதவி இயக்குநராக இருக்கும் நண்பரின் நண்பர் "அப்படி சொல்லாதீங்க! இன்றைக்கு தெலுங்கில் நல்ல படங்கள் வருகின்றன" என உதாரணத்திற்கு இந்த படத்தின் தெலுங்கு மூலத்தை சொன்னார்.

தெலுங்கிலாவது பார்த்துவிட வேண்டும் என நினைத்து தேடிக்கொண்டிருந்தேன்.

இப்பொழுது ரீமேக் செய்து வந்திருக்கிறது. பார்க்க வேண்டும்.

ஷாட் பை ஷாட் அப்படியே தெலுங்கு படத்தைப் போல இருப்பதாக, இன்னொரு தோழி கூறினார்.

நல்லது என்றேன்.