Wednesday, May 13, 2009

ஜனநாயகக் கடமைய ஆத்திட்டோம்ல....

காலை 6.30 மணிக்கே அலுவலகத்திலிருக்க வேண்டிய அவசியம் பாலாவுக்கு. எனவே அவரை அனுப்பி வைத்துவிட்டு நானும் 7 மணிக்கே தயாராகிவிட முடிந்தது. 575758 என்ற எண்ணுக்கு நம் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை அனுப்பினால் நமக்கான பூத் முகவரியோடு வந்து விடுகிறது. இந்தப் பகுதியில் நான் ஒட்டளிப்பது முதல் முறை என்பதால் அந்த வசதியை பயன்படுத்தியும் என்னால் முகவரியைத்தான் கண்டுபிடிக்க முடிந்ததே தவிர எங்கள் வீட்டிலிருந்து அது கிழக்கா மேற்கா என்று கூட புரியவில்லை.

சரி என்று மண்ணின் மைந்தரான லக்கிலுக்கிற்கு தொலை பேசினால் அவரோ எடுக்கவே இல்லை. சரி, அதிகாலை 7 மணிக்கு (இல்லை ஒரு வேளை நடு ராத்திரியோ :) ) தொல்லை பேசியை வேறு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று முடிவு செய்து ஆட்டோ ஸ்டாண்டிற்குப் போய் விசாரித்து, தொலைவதிகமெனில் ஆட்டோவிலேயே போய் வந்துவிடலாம் என்று முடிவு செய்தேன். எவ்வளவு அருகிலிருந்தாலும் கூட அவர்கள் அது ரொம்ப தூரம்ங்க மேடம் என்றுதான் சொல்வார்கள் என்பதும் தெரிந்தேதான் இருந்தது. என்ன ஒன்று, நன்றாக ஏரியாவை சுற்றிப் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானப் படுத்திக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டுத் தெருவில் இறங்கிய போது பக்கத்து வீட்டுப் பெண்மணி வோட்டுப் போட்டு முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தார். அப்போதுதான் தோன்றியது, ஏன் எளிதாக அக்கம் பக்கத்தில் விசாரித்துக் கொள்ளலாம் என்று தோன்றவேயில்லை என்பது. அவரிடம் வழி விசாரித்துக் கொண்டு பூத்திற்குள் சென்றால் எந்தப் பகுதியில் இந்த வார்டு வருகிறது என்கிற வகைப்பாடு பூத்தின் உள்ளே இல்லை எனவும், வெளியே கட்சி சார்ந்த ஆட்கள் தெரு முனையில் இருப்பார்கள் , அவர்களிடம் ஸ்லிப் பெற்றுக் கொள்வதே சுலபமானது என்றும் அங்கிருந்த போலீஸ்காரர் சொன்னார்.

கொஞ்ச தூரத்தில் இருந்தவர்கள் லெஃப்ட் எடுத்து அப்புறம் ஒரு ரைட் எடுத்து என்று ஒரு இடத்துக்கு வழி சொன்னார்கள். அங்கே போனால் ஒரு 15 நிமிடம் செலவழித்த பின் உங்க ஏரியா இங்க வராது மேடம், நீங்க மறுபடி ஸ்கூல் கிட்ட போய் அங்கேர்ந்து ஒரு ரைட் எடுத்து அப்புறம் லெஃப்ட் எடுத்து.... என்று மறுபடி ஒரு இடத்துக்கு அனுப்பினார்கள். அதற்குள் எனக்கு எனது பூத் இருந்த பள்ளிக்கான லெஃப்ட், ரைட் வரிசையே லேசாக மறந்திருந்தது. நல்ல வேளையாக இன்னொருவரும் எங்கள் ஏரியாக்காரர் வந்தார். அவருக்கும் அதே வழிகாட்டல். அவர் டூ வீலர் வைத்திருந்ததால் அவரிடம் நானும் வரலாமா என்று கேட்டதும் வாங்களேன் என்று வண்டியில் ஏற்றி அழைத்துப் போனார்.

என்னவோ தெரியவில்லை, திரும்பிய பக்கமெல்லாம் அம்மா கட்சிகாரர்கள்தான் பூத் வைத்து ஸ்லிப் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பாக்கெட் பாக்கெட்டாக வடையும், 1 லி/2 லி பாட்டில்களில் டீயுமாக பூத்கள் களை கட்டிக் கொண்டிருந்தன. மற்றவர்கள் எல்லாம் எங்கே என்று தெரியவில்லை. வாக்குச் சாவடியிலேயே ஓவ்வொரு க்யூவுக்கும் முன்னால் எந்தந்த தெரு அல்லது வார்டுகாரர்கள் அங்கே வரவேண்டும் என்று எழுதி வைத்து விட்டால் இவ்வளவு தொல்லையில்லை.

அதே போல் எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது போலவே வாக்காளர் பட்டியலையும் கணிணி மயமாக்கி விட்டால் தேர்தல் செலவும் குறையும். அப்படியே ஆன்லைனில் புது வாக்காளர் அட்டைக்கு, முகவரி மாற்றத்திற்கெல்லாம் விண்ணப்பிக்கும் வசதியும் வந்துவிட்டால் கொஞ்சம் வசதியாக இருக்கும். ஒரு பிரிவினருக்கு மட்டும்தானே பயன் இருக்கும் என்று எண்ண வேண்டாம் - அந்தக் கூட்டம் குறையும் என்பதால் நேரில் செல்லும் மற்ற மக்களுக்கும் வரிசையில் நிற்கும் நேரம் நிச்சயம் குறையும்.

எங்கள் பகுதிக்கான வரிசையில் அதுவும் பெண்கள் வரிசையில் ஆட்களே இல்லை. நேரே உள்ளே போய் சீட்டைக் கொடுத்து, கையில் மை தடவிக் கொண்டு, பொத்தானை அமுக்கிவிட்டு 2 நிமிடத்தில் வெளியே வந்துவிட்டேன். யாருக்கு ஓட்டு என்பதில் ரொம்பத் தெளிவாக இருந்தமையால் அதிகக் குழப்பம் இல்லை. ஆனாலும் கடைசி நிமிடத்தில் அவரது சின்னம் மறந்து விட்டது. பெயரைக் கொண்டே கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் ரொம்ப ஒன்றும் சிரமமில்லை. ஒரு வழியாக என் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு வெளியே வந்தபோது மணி 8. வெயில் ஏறும் முன்னர் வீடு வந்து சேர்ந்தேன்.

10 comments:

said...

என்ன "தல"வி! உதயசூரியன் சின்னம் மறந்து போச்சா? என்ன கொடுமை சார்!

said...

:-)))

//ஒரு வழியாக என் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு வெளியே வந்தபோது மணி 8. வெயில் ஏறும் முன்னர் வீடு வந்து சேர்ந்தேன்.//

சந்தோசம் மகிழ்ச்சி!!!!

said...

நீங்க கடைமைய ஆத்திட்டீங்க.. வந்து ஆட்சிய பிடிச்சு அவங்களும் நம்ம மனச ஆத்தறமாதிரி அவங்க கடமைய ஆத்துவாங்களா தெரியலயே.. :)

ப்ளாக்கர்ஸ்லாம் பக்கத்துவீட்டுல கேக்கலாமா விசயத்தை ..உடனே ஆஸ்திரேலியாவுக்கோ ஆப்பிரிக்காவுக்கோ கால் செய்து தானே கேக்கனும்.. :)

said...

அபி அப்பா, வம்புல மாட்டிவிடப் பாக்குறீங்களே... நியாயமா?

சென்ஷி - :))))

முத்து -
//ப்ளாக்கர்ஸ்லாம் பக்கத்துவீட்டுல கேக்கலாமா விசயத்தை ..உடனே ஆஸ்திரேலியாவுக்கோ ஆப்பிரிக்காவுக்கோ கால் செய்து தானே கேக்கனும்.// ரொம்ப நியாயமான விஷயந்தான்... :))))

said...

மெஷின்லே 3வதா தானே இருந்தது? ஏன் அவ்ளோ நேரம் தேடுனீங்க?

said...

Sarathh Babu Dhaney

said...

ஐயாக்களே, தென் சென்னை தொகுதியில் மொத்தம் 43 பேர் போட்டியிட்டதாக நினைவு. ஒவ்வொரு பேராக இன்னம் மிச்சமிருக்கும் 40 பேர் பேர்களையும் யாராச்சும் வரிசையா சொல்லிருங்க.. :)

அந்த கருவில 3 வரிசைய பாத்ததுமே கண்ண கட்டிருச்சு.. இதுல நீங்க வேறயா? :(

said...

அண்ணி, சனநாயகக்கடமைய செவ்வனே ஆற்றிய உங்களுக்கு நன்றி. நானும் ஒரு வேளை அது சரத்பாபுவாத்தானிருக்கும்னு நினைச்சேன் :)

said...

லக்ஷ்மி அவர்களே,

யாருக்கு வாக்கு அல்லிததோம் என்பது ரகசியம் காக்கப் படவேண்டிய ஒன்று. அதனால் தான் வாக்கு பதிவு எந்திரம் தனியாக மூடிய அறைக்குள் வைக்கப்பட்டு ஒருவர் மட்டும் அனுமதிக்கப் படுகின்றனர்.

said...

ur blog very nice to read. am new blogger. try to read out my malligaimottu.blogspot.com. its my effort after looking ur blog.