Wednesday, April 18, 2007

அழகுகள் ஆயிரம் - அதில் சில...

ஆட்டத்துக்கு சேர்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க மங்கை. என் வரையில் அழகு என்பது எப்பவுமே ஒரு வரையறுக்கப்பட்ட விஷயம் இல்லை. அது ஒரு மனோபாவம். ஒருத்தருக்கு வானம் அழகுன்னால், பக்கத்திலிருப்பவருக்கு பூமிதான் அழகாத்தெரியும். சோ... நான் அழகுன்னு சொல்றதெல்லாம் உங்களுக்கும் அழகாத்தெரியணும்னு அவசியமில்லைதான். இருந்தாலும் ஆட்டம்னு வந்துட்டதால எனக்கு அழகுன்னு தோணற சில விஷயங்களை இங்கே பட்டியலிடறேன்.

ஊர்ல எங்க வீடு ரொம்ப பழைய காலத்து மாடல்ல இருக்கும். நாட்டு ஓடுதான் கூரை. தரைக்கு மட்டும் எங்க அப்பா பெரிய மனசு பண்ணி சிமென்ட் போட்டு அதுல சிவப்பு கலர் சிங்குச்சா நீலக்கலர் சிங்குச்சான்னு கலர் வேற போட்டு விட்டிருக்கார். வீட்டுக்கு நடுவுல திறந்தவெளியா கொஞ்ச இடம் இருக்கும் - முற்றம்ன்னு சொல்வோம் (பேச்சுவாக்கில் மித்தம்னுதான் பெரும்பாலானவங்க சொல்வாங்க.) இந்த இடம்தான் வீட்டுலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். இது ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு அழகை தொடர்ந்து வெளிப்படுத்திக்கிட்டே இருக்கற இடம். எங்க வீட்டு முற்றத்தில் இரும்புக்கம்பிகளை பாதுகாப்புக்காக போட்டு வைத்திருப்போம். மழை நின்ற பின் அந்த கம்பிகள்ள தொங்கும் நீர்த்திவலைகள் அப்படியே முத்துக்களை கோர்த்தாற்போல இருக்கும். அப்போ சூரிய வெளிச்சம் மேல பட்டால் அப்படியே ஜொலிக்கும். அப்போ பார்த்து லேசான காற்று அடிச்சு அதுல அந்த நீர்த்துளிகள் மெதுவாய் ஆடினால்... எப்படி சொல்றதுன்னு தெரியலை. வைத்த கண் வாங்காம பார்த்துக்கொண்டே இருக்க வைக்கும். இரவு நேரத்தில் மின்சாரம் நின்று போய்விட்டால் இந்த முற்றத்தை சுற்றியுள்ள பகுதியில்(தாழ்வாரம் என்போம் இதை) வந்து எல்லோரும் அமர்வோம். சுத்தமாய் மின்சாரமே இல்லாததால் இருள் இன்னும் அடர்த்தியாய் தெரிய, நிலாக்காலமெனில் நிலவொளியும் அது இல்லாத நாளில் நட்சத்திரங்களின் ஜொலிப்புமாய் வானம் பாரதியின் 'பட்டுக்கருநீலப்புடவை, பதித்த நல்வயிரங்கள்' அப்படின்ற வரிகளை நினைவுபடுத்தும். சிறு வயதில் தினமுமே இரவு சாப்பாடானதும் அப்பா என்னை தாழ்வாரத்தில் உட்கார வைத்து தான் முற்றத்தில் ஒரு ஈஸிச்சேரில் அமர்ந்த வண்ணம் தினம் ஒரு கதை சொல்வார் (அப்பா ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் - அதுவும் ஆரம்பப்பள்ளி ஒன்றில் வேலையில் சேர்ந்த நாள் முதல் தலைமை ஆசிரியராவதற்கு முன்வரை தொடர்ந்து ஒன்றாம் வகுப்புக்கே ஆசிரியராய் இருந்தவர். ஆகையினால் எனக்கும் தினம் ஒரு கதை கிடைக்கும் சின்ன வயசில்). கதை மட்டுமில்லைங்க, பாரதியார் பாடல்கள், குறள் , கம்பரின் பாடல்கள் அப்படின்னு எனக்கு தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ததும் என் அப்பாதான். செய்த இடம் இதே முற்றம்தான். பாரதியாரோட எங்கிருந்தோ வந்தான் பாடலை கேட்டிருப்போம். அப்பா அந்த பாடலின் துவக்கத்திலிருந்து சொல்வார். அது 'கூலிமிகக்கேட்பார்' அப்படின்னு வேலையாட்கள் சிலர் செய்யும் அடாவடித்தனங்களை பற்றி புலம்பியபடி ஆரம்பித்து பின் கண்ணன் கிடைத்ததும் எவ்வளவு சவுகரியங்கள் கிடைத்ததுன்னு சொல்லும் பாடல் - ஒரு கதை போல இருக்கும். இப்படி பல அற்புதமான பாடல்கள், ராமாயண மகாபாரத கதைகள் (அதுலயும் இந்த மகாபாரதம் இருக்கே அது ஒரு கதைச்சுரங்கம். கதைக்குள்ள கதைக்குள்ள கதைன்னு போயிகிட்டேயிருக்கும். பெரியவங்க எல்லாம் எப்படித்தான் கதாபாத்திர பெயரிலிருந்து சகலத்தையும் நினைவு வச்சுக்கறாங்களோ தெரியலை. அது தெரிஞ்சிருந்தா ஒழுங்கா படிச்சு கிழிச்சிருக்க மாட்டோமா நாம...) எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது இந்த முற்றத்தில்தான். நிமிர்ந்து பார்த்தால் எங்கள் தோட்டத்து தென்னையும் பக்கத்து வீட்டு தோட்டத்து வேப்பமரமும் தெரியும். இன்னும் சற்று நிமிர்ந்தால் வயிரம் பதித்த கருநீலப்பட்டுப்புடவை - அதான் நம்ம வானம் தெரியும். எல்லரையும் போல எனக்கும் குழந்தைப்பருவம்தான் வாழ்வின் பொற்காலம் இப்போ வரை.

அடுத்த அழகு எங்க அம்மாவோட சுங்கடி புடவைகள். அம்மா நல்ல நிறம். அதுலயும் கொஞ்சம் அடர் வண்ணங்களில்தான் சுங்கடி வகை காட்டன் புடவைகள் வாங்குவார். அதுல சிலதுல நல்ல ஜரிகை வேலைப்பாடு இருக்கும். தினப்படிக்கு சாதாரண டிசைன் கொண்ட புடவைகள், விசேஷங்களுக்கு ஜரிகை வேலைப்படுகள் கொண்ட புடவைகள்ன்னு வைத்திருப்பார். மற்ற பெண்கள் பட்டிலும் வைரத்திலும் மின்ன நடுவில் அம்மா இந்த வகையிலான சுங்கடி புடவைகளில் அசத்துவார். புடவையின் அழகும் அம்மா அதை உடுத்தும் பாங்கும் இந்த புடவைக்கு பல புது வாடிக்கையாளர்களை உருவாக்கியதென்றால் அது மிகையல்ல. அதிலும் அம்மாவிடம் அரக்கு வண்ணத்தில் கருப்பு கரை வைத்த புடவை ஒன்று உண்டு - கரையில் மட்டும் ஜரிகை வேலை செய்தது. எனக்கு மிகப்பிடித்த புடவை அது. கல்லூரிக்கு நானும் அந்த புடவையை சில சமயம் கட்டிக்கொண்டு சென்றிருக்கிறேன். ஆனால் கண்ணாடியில் பார்க்கும் போது அம்மாவுக்கு அந்த புடவை எப்படியிருந்தது என்று ஒப்பிட்டுக்கொள்ளத்தோன்றும் - அது கான மயிலாட பாடலை வேறு நினைவு படுத்துமா, எனவே அந்த புடவையை மட்டும் சுடும் எண்ணத்தை கைவிட்டு விட்டேன். மற்றபடி சிந்தடிக் புடவை என்றால் அம்மாவே எனக்கென எடுத்து வைத்து விடுவார்(ச்சோ ஸ்வீட் :) ).

அடுத்த அழகு எங்க அம்மாவோட குங்கும பொட்டு - நல்ல பெரிய வட்டமாய் நெற்றியிலும், சிறிது உச்சி வகிட்டிலும் இட்டுக்கொள்வார். சுகந்தா குங்குமமும் Eyetex - இன் ஆஷா எனப்படும் மெழுகும் உபயோகிப்பார். முதலில் ஆஷாவினால் சிறிய வட்டம் வைத்து அதன் பின் அதன் மேல் குங்குமம் வைப்பார். விரலில் மிச்சமிருக்கும் குங்குமம் உச்சி வகிட்டிற்கு. எப்படித்தான் அப்படி சிறு பிசிறு கூட இல்லாமல் வட்டமாய் வைப்பாரோ தெரியாது. பல நாள் பக்கத்திலிருந்து பார்த்திருந்தாலும் என்னால் செய்ய முடிந்ததில்லை.

ரொம்பவே கொசுவத்தி சுத்திட்டேன்னு நினைக்கறேன். அதுனால இப்போதைக்கு பக்கத்திலிருக்கும் அழகு ஒன்னு - என் வீடு. வாங்கி ஒரு 8 மாதம்தான் ஆகிறது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சில்லையா? மத்தவங்களுக்கு ஒரு சாதாரண வீடா மட்டுமே இது தெரியலாம். ஆனால் எனக்கு தாய்மடி போல, கதவைத்திறந்து உள்ளே நுழையும் போதெல்லாம் ஆசுவாசம் தருவது இது.

சரி. விட்டால் இந்த பட்டியல் முடிவே இல்லாமல் நீளும் அபாயமிருப்பதால், இங்கே ஒரு பிரேக் அடிக்கறேன். அப்புறமா சந்தர்ப்பம் கிடைக்கும் போது மீதியை பார்க்கலாம். இப்போ இந்த ஆட்டத்தை தொடர நான் அழைப்பது மதுரா அக்காவையும் ,செல்வ நாயகி அவர்களையும், மகா அவர்களையும்.

Tuesday, March 27, 2007

பெண்களின் பொருளாதர முன்னேற்றம்

அவள் விகடனின் இந்த இதழில் இப்படி ஒரு கட்டுரை வந்திருக்கிறது - அளவு கடந்த சுதந்திரம் பெண்களை சீரழிக்கிறதா என்பது அதன் தலைப்பு.

சமீபத்தில் சென்னையில் ஒரு விழா மேடையில், "அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது..". என்றும் "பன்னாட்டு நிறுவனக்களில் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் பெறும் பெண்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமான நிலைக்குப் போகிறது" என்றும் சொல்லியிருக்கிறார் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜகதீசன். மத்திய அமைச்சர்... அதுவும் ஒரு பெண் தலைவர்... வெளியிட்டுள்ள இந்தக் கருத்தின் உள் அர்த்தங்களைச் தேடி, ஒரு அரோக்கியமான விவாதத்தை துவங்கி வைத்தோம்..

இப்படி ஆரம்பிச்ச கட்டுரைல சில பெண்களிடம் கருத்து கேட்டிருந்தாங்க. அவங்களும் கருத்து சொல்லியிருந்தாங்க. எல்லாம் சரி. சுப்புலட்சுமி அம்மாவோட இந்த கருத்து வேலைக்கு போற பொண்ணுங்க எல்லாம் நடத்தை கெட்டு போனவங்கன்னு காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திரர் சொன்னதுக்கு எந்த விதத்துல குறைஞ்சதுன்னு எனக்கு தெரியலை. சொன்னவங்க ஒரு பொண்ணுன்றதாலயே இத பெரிய விஷயமா எடுத்துக்க வேண்டியதில்லயா என்ன? அந்த பத்திரிக்கையே சொல்வது போல ஒரு பெண் தலைவர் அதுலயும் சமூக நீதித்துறைக்கு அமைச்சரா இருக்கிறவர் இப்படி பேசுவது எந்த விதத்துலயும் ஏத்துக்க கூடியதில்லை. இதுக்கு மேல அவங்க இன்னொரு விளக்கமும் கொடுத்திருக்காங்க. சமீபத்துல புனேல நடந்த போதை விருந்துல பெண்களும் மாட்டினதுனால இந்த சமூக சீரழிவை பத்தி கவலைப்பட்டதாகவும் அதுனாலதான் இப்படி பேசினதாகவும் சொல்லியிருந்தாங்க.

இவங்க சொல்ற இரண்டு விஷயமுமே தப்பா இருக்கு. முதல் விஷயம் பணம் நிறைய சம்பாதிக்கறவங்க கெட்டுப்போறாங்கன்றது. இதை இரண்டு பாலினத்தவருக்கும் பொதுவாக வைத்துப்பார்த்தாலே ரொம்ப அபத்தமான கற்பிதமாகத்தான் இருக்கும். போதைப்பொருள் புழக்கம்ன்றது, சமூகத்தில் எல்லா தட்டுக்களிலும் அவங்கவங்களோட பொருளாதார வசதிக்கேத்த உருவத்துல இருக்கு. ஆக, 50 ஆயிரத்துக்கு மேல சம்பாதிச்சா போதைக்கு அடிமையாயிடுவாங்கன்னு குதிக்கறதெல்லாம் ரொம்ப அபத்தமா இருக்கு.

அடுத்தது பெண்களுக்குத்தானே அதிக பிரச்சனை வரும் அதுனால அவங்கதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் அப்படின்ற வாதம். இது வந்து நம்ம டி.ஆர் அவரோட படங்கள்ள, தங்கச்சிங்க கிட்ட சொல்லுவாரே - முள்ளு மேல சேலை விழுந்தாலும் சேலை மேல முள்ளு விழுந்தாலும் கிழியப்போறதென்னவோ சேலைதாம்மான்னு, அந்த ரகம். அதிக பிரச்சனைன்றாங்களே அது என்னனு பார்த்தால் - அந்த நிலைல பெண்களை உடல் ரீதியான பலாத்காரத்துக்கு உட்படுத்திட்டா என்ன செய்ய முடியும்ன்றதுதான் இவங்களோட முக்கிய கவலை. என்னவோ போதைல இருக்கறப்ப மட்டும்தான் இந்த பாலியல் பலாத்காரங்கள் நடந்துடற மாதிரி பேசுவதை பார்த்தால் என்ன சொல்றதுன்னே தெரியலை. இப்போ போதைல இருக்கும் ஒரு பையனிடம் பர்ஸை திருடிட்டு அவனை அடித்து போட்டுவிட்டு போனால் அவனுக்கு என்ன பாதிப்பு இருக்குமோ அதே போல ஒரு பெண்ணின் இந்த பிரச்சனையும் பார்க்கற எண்ணம் சமூகத்துல எல்லாருக்கும் வந்துட்டாலே போதுமே எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுமே, அதையேன் யாருமே யோசிக்கறதில்லை?

அவங்களோட இந்த கருத்தை இன்னொரு விதமா பார்க்கலாம். பொதுவாவே ஏதாவது ஒரு துறைல அதிக அதிக பணப்புழக்கமோ அல்லது அதிக புகழ் கிடைப்பதற்கான வாய்ப்போ இருந்தால் அந்த துறையின் மீதான சமூகத்தின் பார்வை கொஞ்சம் கடுமையடைஞ்சுடறது வாடிக்கை. இதுக்கு மிகச்சிறந்த உதாரணம் சினிமா. அந்த துறையின் பணப்புழக்கமும் அது கொடுக்கற புகழும் மத்தவங்களை எவ்வளவும் எரிச்சலடைய வச்சிருக்குன்றதை பத்திரிக்கைகள் அவங்களை பத்தி வெளியிடற கிசுகிசுக்களை வச்சே தெரிஞ்சுக்கலாம். வாரமலர் கிசுகிசுக்களை எப்பவாவது படிச்சிருக்கீங்களா? அதுல அவங்க நடிகர்களை குறிப்பிடும் விதமே அவங்களோட வயத்தெரிச்சலோட அளவை காமிச்சுடும். அது போல இப்போ சமூகம் மென்பொருள் துறையையும் பார்க்க ஆரம்பிச்சுட்டதுக்கான அறிகுறிகள் பத்திரிக்கை செய்திகளிலிருந்து ஒரு ஆட்டோ ஒட்டுனர்களின் அடாவடியான பேச்சுக்கள் வரை எல்லாத்துலையும் நல்லாவே தெரியுது. சமீபத்துல ஒரு பதிவர் என்னவோ நாரயணமூர்த்தியும் அஸிம் ப்ரேம்ஜியும் ஒவ்வொரு க்யூபிக்கலுக்கும் வந்து ஊத்திக்கொடுத்துட்டு போறா மாதிரி ஒரு பதிவு போட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தார். இப்போ இந்த அம்மா பேசும் தொனி கூட அப்படித்தான் இருக்கு.

முன்னாடியெல்லாம் பெண்கள் நர்சிங், ஆசிரியப்பணி என்று ஒரளவு நல்ல வருவாய் தரும் அதே நேரத்தில் தங்களின் தனித்துவமென்று நம்பவைக்கப்பட்ட தியாக/சேவை உணர்வுகளை விட்டு விடாத வேலைகளை பெரும்பான்மையாக செய்து வந்த போது வராத எதிர்ப்பு இப்போது வருவதன் காரணம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். பொருளாதார ரீதியில் மிக அழுத்தமாக காலூன்ற உதவும் அதே நேரத்தில் தங்கள் ஆளுமையையும் ஆண்களுக்கு இணையானதாக எல்லா விதத்திலும் (வேலை நேரத்திலிருந்து எதிலும் இந்த துறையில் பெண் என்பதற்காக தனி சலுகையெல்லாம் கிடைக்காது) வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கும் இந்தத்துறையில் பெண்களின் எண்ணிக்கை கூடுவது ஒரு நல்ல சமூக மாற்றத்துக்கான அறிகுறி. எப்பவுமே மாற்றங்கள் ஆரம்பிக்கும் போது இந்த மாதிரி புலம்பல்கள் சகஜம்தான். நாம இதையெல்லாம் உதறித்தள்ளிட்டு போக வேண்டிய தொலைவு அதிகம்.

Monday, March 19, 2007

நம்பிக்கை - 2

தொண்டையை வறளச்செய்யும் இந்த தாகம் பயமுறுத்தினாலும்
தூரத்தில் தெரியும் நீர்பரப்பு
கண்ணில் தூவிய நம்பிக்கை காரணமாய்
உயிர் தரித்திருக்கிறேன் இன்னமும்.
தயவு செய்து அது கானல் நீராயிருப்பினும்
என்னிடம் யாரும் சொல்லிவிடாதீர்கள்.
இன்னும் சற்று நேரமேனும் நான் உயிர் வாழ விரும்புகிறேன்.

Thursday, March 15, 2007

நம்பிக்கை

எழுப்பிய தாயின் மேல் எரிந்து விழுந்துவிட்டு
போர்வைக்குள் புதைந்துகொண்டு
கலைந்த கனவை தொடர எண்ணுதல் போல்
இன்னமும் நம்புகிறேன்
நீ மீண்டும் வருவாயென.