Tuesday, October 16, 2007

நீதி

காளிமுத்துவுக்கு விடியலிலேயே முழிப்புக் கொடுத்துவிட்டது. எழுந்தென்ன செய்துவிடப் போகிறோம் என்று எண்ணியதால் அசையாது படுத்திருந்தார். சூரியன் எழும்பியான பின்தான் வீட்டில் அரவம் கேட்டது. மெல்ல எழுந்து வீட்டைச் சுற்றிக் கொண்டு கிணற்றடிக்குப் போய் பல்துலக்கி முகம் கழுவி விட்டு வருகையில் வீட்டு உள்ளாலேயே வந்தார். அது அவர் தனது மருமகளுக்கு தான் எழுந்தாயிற்றென்பதை உணர்த்தச் செய்வது. எதிர்பார்த்தது போலவே சற்றே நீர்க்கத் தயாரான காபி கட்டிலுக்கருகிலிருக்கும் ஸ்டூல் மேல் வைக்கப் பட்டது. சாரதம், அவரது தர்மபத்தினி, அவளிருக்கையில் இவ்வகையான காபி வேலைக்கு வரும் பெண்மணிக்குத்தான் வழங்கப்பட்டு வந்தது இவ்வீட்டில். இவர் கூட குஷியாய் இருக்கையில் அவளை இதைச் சொல்லி கிண்டுவார். அவள் மூக்கு விடைக்க "ஆமா, நீங்க கப்பலோட விடறதை நான் கொட்டை நூத்துதானே சேக்க வேண்டியிருக்கு" என்று பதில் கொடுக்கத் துவங்கினால் சிரித்துக் கொண்டே நழுவி விடுவார். அவருக்குத் தெரியும் தன் பெருந்தன்மையென்று எண்ணிச் செய்யும் பல செயல்கள் அவள் வரையில் ஏமாளித்தனமென்று. வாதிட்டு அவளுக்கு விளக்கிவிட முடியாது - எது பற்றிப் பேசினாலும் அவரது அம்மாவின் கொடுமையிலிருந்துதான் பதில் பேசவே ஆரம்பிப்பாள். அதும் வளர்ந்த பிள்ளைகள் முன்னால் பழசைக் கிளறி சண்டையெல்லாம் போட்டால் நல்லாவா இருக்கும் என்று பேசாது சிரித்தே மழுப்பி விடுவார் அவளை எப்போதும். அந்த மகராசி போன பின்னால் மருமகள் கையில் வீட்டு அதிகாரம் போய்ச் சேர்ந்தது. அதன் பின் இந்த இரண்டாந்தர காபியும், வேலை ஒழிந்த நேரத்தில் சோறும்தான் அவருக்குக் கிடைத்தது. அதுவும் பென்ஷனென்று ஒன்று வருகிறதோ, இந்த மட்டிலாவது பிழைப்பு ஓடுகிறதோ என்று எண்ணிக் கொண்டார்.

பேரப் பிள்ளைகள் பள்ளிக்குக் கிளம்பியான பின் பின்கட்டு ஒழிந்திருக்கும் நேரமாய்ப் போய் குளித்து முடித்து வந்தார். பையனும் சைக்கிளை மிதித்துக் கொண்டு அலுவலகம் கிளம்பிப் போனான். போகும் முன் செய்தித் தாளை கொண்டு வந்து அவரது கட்டிலருகே வைத்துவிட்டுப் போனான். அதை எடுத்து வரிவிளம்பரம் வரை ஒரு எழுத்து விடாது படித்து முடித்தார். மருமகள் கமலம் வாசல்படியருகே வந்து நின்று திண்ணையை எட்டிப் பார்த்து "சாப்பிட வாங்க" என்றாள். "ம்.ம்.." என்று முனகிக் கொண்டு படித்துக் கொண்டிருந்த தாள்களை மெல்ல நீவி பக்கங்களை வரிசையாய் அடுக்கி மடித்து எடுத்துக் கொண்டார். எழுந்து கூடத்தை நோக்கி நடக்கத் துவங்கினார். சாப்பாடு முடிந்து வந்து கட்டிலில் உட்கார்ந்தவருக்கு மீண்டும் ஒரு சந்தேகம் வரவே மீண்டும் வீட்டினுள் சென்று பத்திரிக்கையை எடுத்து வந்து ஒரு குறிப்பிட்ட செய்தியை மீண்டும் படிக்கலானார். உயர்நீதிமன்றத்தில் நடந்து முடிந்த ஒரு வழக்கைப் பற்றிய செய்தி அது. ஒரு மூலையில் 10 வரிகளுக்கு மிகாமல் அதிக விவரமில்லாது போடப்பட்டிருந்தது.

காளிமுத்து ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர். வேலையிலிருந்த போது வாங்கிய சம்பளத்தில் பாதி பென்ஷனாய் கிடைக்கும் என்கிற அளவில்தான் அவரது புரிதல் இருந்தது. வேலை பார்க்கும்போதே கூட அவர் இந்த சம்பளக் கமிஷனால் இவ்வளவு உயரும் என்பது போன்ற கணக்குகளில் எல்லாம் ரொம்பவே ஞானசூனியம்தான். ஏதோ வந்தது வரட்டுமென்பதுதான் அவரது சித்தாந்தம். சம்பள உயர்வு பற்றி செய்தித்தாளில் வரும் போதெல்லாம் "நமக்கு எவ்வளவுங்க வரும்?" என்ற மனைவியின் கேள்வியை மதித்து பதில் சொன்னதில்லை அவர். "இந்தா, போன மாசம் வந்ததை விட இந்த மாசம் கூட வர்ரது வேணும்னா நடக்குமே ஒழிய வாங்கிக்கிட்டிருக்கும் காசு குறையவா போகுது?" என்பதுதான் அலட்சியமாய் அவர் சொல்லும் பதில். பின்னே அரைக்காசு உத்தியோகம்னாலும் அரசாங்க உத்தியோகமென்றெல்லாம் இதைக் கொண்டாடுவது எதற்காம்? மாசமானா காசு, எந்த ராசா எந்தப் பட்டினம் போனாலும் வந்து விழுந்துடாதா நம்ம கையில என்பது போன்ற அவரது பாமரத் தனமான நம்பிக்கைகளெல்லாம் ஒரு நாள் உடைந்து போனது. திடீரென ஒரு நாள் அரசுக் கருவூலத்திலிருந்து ஒரு பழுப்பு உறை அவர் பெயருக்கு வந்தது பதிவுத் தபாலில். கையெழுத்திட்டு வாங்கினார். படித்தவர்தான் என்றாலும் கூட அரசாங்கக் கடிதங்களுக்குகேயுரிய அந்த நடையும் அலங்காரங்களும் அவரைக் குழப்பின. அவருக்குப் புரிந்ததென்னவோ வரும் பென்ஷன் அடுத்த மாதம் முதல் குறையும் என்பதுதான்.

கை கால் பதற அதை எடுத்துக் கொண்டு டவுனில் இருக்கும் தனக்குத் தெரிந்த வக்கீல் அலுவலக எழுத்தரான தன் நண்பரைத் தேடிக் கொண்டு ஓடினார். ஏற்கனவே தனக்கும் தன் மனைவிக்கும் அந்த வீட்டில் கிடைக்கும் மரியாதையின் லட்சணம் அவருக்குத் தெரிந்துதான் இருந்தது. சாரதம் ஒரு இடிதாங்கி போல பல பிரச்சனைகளைத் தன்வரையிலேயே சமையற்கட்டுக்குள்ளேயே அல்லது அதிக பட்சம் வீட்டுக் கூடத்தோடு தீர்த்துவிடுவாள். திண்ணையில் கட்டிலில் அமர்ந்திருக்கும் காளிமுத்துவிடம் எதையும் கொண்டு வருவதில்லை அவள் - அவர் மனம் நோகுமேயென்று. அவளுக்கு மகன் சிவநேசனிடமும் செல்வாக்கு அதிகம்.

எது எப்படியோ, சாரதம்தான் ஓய்வுக்குப் பின்னும் கூட அவருக்கு கிடைத்து வந்த எந்தச் சலுகையும் அந்த வீட்டில் குறையாது பார்த்துக் கொண்டாள் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது. இவரது பென்ஷன் முழுதும் பெண் கல்யாணி கல்யாணத்திற்காய் வாங்கிய கடனுக்கு மாதத் தவணை கட்டவே சரியாக இருந்தது. சிவநேசன் சம்பளத்தில்தான் வீடு ஒடுகிறது. அதில் கமலத்தின் தலையில் இரு கண்ணுக்குப் புலனாகாத கொம்புகள் முளைத்திருப்பதும் அவ்வப்போது சாரதத்தை அது குத்துவதும் திண்ணையிலிருந்தாலும் அவருக்குப் புரியத்தான் செய்தது. தனக்குண்டான மரியாதை மட்டும்தான் மிச்சமிருந்தது - அதுவும் இப்போது கல்யாணக் கடனுக்கே சிவநேசனிடம் கேட்டால் போய்விடுமே என்பது அந்த முதியவரின் அடிவயிற்றைக் கலக்கியது.

வேலுவுக்கு வெகுநாட்களுக்குப் பிறகு தன் நண்பனைக் காண்பதில் ஆனந்தம். டீயெல்லாம் வரவழைத்துத் தந்தார். காளிமுத்து அந்தக் கடிதத்தை எடுத்து அவரிடம் காட்ட, கண்ணாடியைத் தேடியெடுத்து அணிந்துகொண்டு படித்துப் பார்த்தார். "காளிமுத்து, உனக்கு சம்பள உயர்வெல்லாம் கொடுத்தாங்க இல்ல, அதுல ஒரு முறை சம்பள விகிதம் நிர்ணயம் செய்யறதுல எதோ தப்பு நடந்து போச்சாம். அதுனால ரொம்ப ஜாஸ்தியா சம்பளம் சில வருஷங்களா உனக்கு கொடுத்திருக்காங்களாம். அத்தோட இல்லாம அந்த தப்பான சம்பளத்தை அடிப்படையா வச்சே இவ்ளோ நாளா உனக்குப் பென்ஷன் வேற கொடுத்திருக்காங்க இல்லையா? அதுனா இப்ப கணக்குப்படி அதிகப்படியான தொகை மட்டுமே சுமாரா 2 லட்சம் வருதாம். இப்ப உன்னோட சரியான சம்பளத்துக்கு கிடைக்க வேண்டிய பென்ஷன் மட்டுந்தான் இனி உனக்கு கிடைக்கும். அதோட இல்லாம இந்த அதிகப்படி தொகையவும் மாசம் கொஞ்சமா உன் பென்ஷன்லேர்ந்து கழிச்சுக்கப் போவுதான் அரசாங்கம்." காளிமுத்துவுக்கும் ஒரளவுக்கு இது புரிந்துதான் இருந்தது. ஆனால் இப்படிக்கூட நடக்குமா என்ற அங்கலாய்ப்பும் விவரம் தெரிந்த நண்பனாவது "இதெல்லாம் சாத்தியமில்லைடா, எதோ தவறுதலா உனக்கு இந்தக் கடிதம் வந்திருக்கு" என்று சொல்லிவிட மாட்டானா என்ற நப்பாசையும்தான் அவரை இவ்வளவு தூரம் ஓடிவர வைத்தது. இப்போது ரொம்பவே நிராசையுடன் "சரியா கணக்குப் போட்டுச் சொல்லியிருக்காங்களான்னு கொஞ்சம் பாத்துச் சொல்லிடுப்பா. அதுல போட்டிருக்கற தொகை ரொம்பவே கம்மியா இருக்கே. முன்ன வாங்கினதுல நாலுத்துல ஒரு பங்கு கூட இல்லையே?" என்று குரல் நடுங்கச் சொன்னார்.

வேலு பென்சிலையும் கொஞ்சம் வெள்ளைத் தாள்களையும் எடுத்து கொண்டு போதாதற்கு தன் பையனின் கேல்குலேட்டரையும் தூக்கிக்கொண்டு வந்து உட்கார்ந்தார். மெல்ல கணக்குப் போட்டு நிமிர்ந்தவர் உற்சாகமிழந்தவராய்ச் சொன்னார் "சரியாத்தாண்டா இருக்கு." கூடவே ஆறுதலாய் "3 வருஷந்தானேடா... அதுக்கப்புறம் உனக்கு நியாயமா கிடைக்க வேண்டியது கிடைக்க ஆரம்பிச்சுடும்." என்று முடித்தார். காளிமுத்து அலுப்புடன் "ஆமா , அதுவரைக்கும் நா இருந்தாப்பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு காகிதங்களைப் பொறுக்கி மீண்டும் தன் பையில் வைத்துக் கொண்டு கிளம்பினார். வாசல் வரை வந்த வேலு "மனச வுட்டுடாதப்பா..." என்றார். ஒரு நைந்து போன சிரிப்புதான் பதிலாய் கிடைத்தது காளிமுத்துவிடமிருந்து.

அந்த ஊரில் அவர் வேலை பார்த்த அந்த ஒரு பள்ளி மட்டுமே இருந்தது. எல்லா பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு டியூஷன் வைப்பதும் ஒரு கட்டாய சடங்கு என்றே நினைத்தனர். பள்ளியிலிருந்த எல்லா ஆசிரியர்களும் தனியே வீட்டில் வகுப்பெடுத்தும் வந்தனர் - சொல்லப் போனால் பள்ளியில் பாடம் நடத்துவதை விட ட்யூஷன் வகுப்புகளில் மட்டுமே நடத்தும் ஆசிரியர்களும் உண்டு. ஆனால் வெளியூரிலிருந்து வந்து விட்டுப் பறக்கும் ஆசிரியர்களின் வகுப்பு மாணவர்கள் மட்டும் இந்தக் கொடுமையிலிருந்து தப்பி மாலை முழுவதும் விளையாட்டு என்று களித்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்டு பொறுக்குமா தாயுள்ளங்கள்? அப்படிப்பட்ட ஒரு குழு அவ்வப்போது காளிமுத்துவை வந்து கேட்பதுண்டு "சும்மாத்தானே மாமா இருக்கீங்க? பசங்களுக்கு சாயந்தரம் கொஞ்ச நேரம் பாடமெடுத்தா குறஞ்சா போய்டுவீங்க? " என்று. அவர் வேலை பார்க்க ஆரம்பித்த புதிதிலெல்லாம் படிப்பில் கொஞ்சம் சோடையாக இருக்கும் பசங்களை மட்டும் தேர்வுகளுக்கு கொஞ்சம் முன்னால் வீட்டிற்கு வரச்சொல்லி தயார் செய்வார். பழைய தேர்வுகளின் தாள்களை எல்லாம் கொடுத்து பயிற்சி செய்யச் சொல்வதும் முக்கியமான பாடங்களை இன்னும் ஒரு முறை நடத்திப் புரிய வைப்பதுமாய் தயார் செய்வார். அதை என்றுமே தொழில் முறையில் செய்வதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. எல்லோரும் அதை தொழில் முறையில் செய்ய ஆரம்பித்தபின்னும் கூட அவர் சில சமயம் கொஞ்சம் படிப்பில் பின் தங்கிய அதே சமயம் ட்யூஷன் என்னும் ஆடம்பரத்துக்கெல்லாம் வழியில்லாத பசங்களை அவ்வாறே கவனித்துத் தேற்றி விடுவதுண்டு. இதனால் எல்லாம்தான் ஊரிலுள்ளோர் மட்டுமல்லாது சாரதம் கூட அவரை பிழைக்கத் தெரியாதவர் என்றே அழைப்பது. அவர் பெண் கல்யாணி கூடச் சில முறை கேட்டுப் பார்த்தாள் "ஏம்ப்பா, காசில்லாதவங்க கிட்ட வாங்க வேணாம் - சரி. காசுள்ளவங்க கிட்டயாச்சும் காசு வாங்கிகிட்டு சொல்லித்தரலாமில்ல?" என்று. மையமாய் சிரித்து மழுப்பி விட்டுப் போய்விடுவார்.

அவ்வளவு நாளாய்த் தான் செய்யக் கூசி வந்த அந்தக் காரியத்தை செய்யத் துவங்குவது ஒன்றே வழியென்று பட்டது. அவரிருந்த வீடு பிதுரார்ஜிதமாய் வந்த சொத்து. தன் பங்குக்கு வீட்டின் முன் பகுதிக்கு மட்டும் அதாவது வீட்டுத்திண்ணைக்கும் அதற்குப் பின்னாலிருக்கும் இரு அறைகளுக்கும் மட்டும் மாடி எடுத்து ஒட்டியிருந்தார். அதற்கு பக்கவாட்டிலிருந்து படிகளும் இருந்தது. வெறும் மொட்டை மாடியாய் நின்ற அது துணி உணர்த்தவும் வற்றல் வடகம் போடவுமே பயன் படுத்தப் பட்டு வந்தது. அங்கே கையிலிருந்த சேமிப்பில் ஒரு கீற்றுக் கொட்டகை போட்டு கொஞ்சம் பெஞ்சுகளும் ஒரு நாற்காலியும் வாங்கிப் போட்டார்.

மெல்ல அவரிடமும் கூட்டம் சேரத்துவங்கியது. காலை மாலை என்று இருவேளையும் பிள்ளைகளை வரச்சொல்ல ஆரம்பித்தார். இந்த விஷயத்தை முதலில் பிரஸ்தாபித்தபோது சிவநேசன் "எதுக்குப்பா வயசான காலத்துல சிரமப்படணும்? கல்யாணி கல்யாணக் கடன் தவணைதானே? அதையும் நானே எப்படியாச்சும் சமாளிச்சுக்கறேன்பா." என்றபோது அவன் ஒப்புக்குத்தான் சொல்கிறானென்பது அவருக்குப் புரிந்தே இருந்தது. "இல்லைப்பா. என் கடமைய நான் செஞ்சுடணும் இல்லையா? நான் என்ன எங்க சாப்பாட்டுக்கேவா கணக்குப் பண்ணி உன்னை கேவலப்படுத்தறேன்? இந்தக் கடன் இன்னும் ஒரு வருஷத்துல முடிஞ்சுடும். அதுக்கப்புறம் நீயே சொன்னாலும் நான் இதெல்லாம் செய்யல, போதுமா? " என்று அவனுக்கு ஆதரவாகப் பேசி முடித்தார். ஒரு வருடம் இரு வேளையும் வகுப்பெடுத்தவர் பின் கடன் தவணையெல்லாம் முடிந்ததும் அதைக் குறைத்து காலையில் மட்டும் என்று வைத்துக் கொண்டார். மூன்று வருடத்துக்கெல்லாம் முழுப் பென்ஷெனும் வரத்துவங்கிய பின் அதையும் நிறுத்தி விட்டார் - முழுப் பென்ஷெனென்றாலும் முதலில் வாங்கியதில் பாதிதான். அதற்குள் அவர் மனைவி போய்ச் சேர்ந்திருந்தார். அத்தோடு கமலாவே மனமிரங்கி "இன்னும் எதுக்கு மாமா இப்படி தொண்டைய வரள அடிச்சுகிட்டு? பேசாம ராமா கிருஷ்ணான்னு உக்காருங்க" என்றாள். அவளும் மனமாரத்தான் சொல்கிறாள் என்று அவருக்குப் புரிந்தது. எனவே அந்த வருட கோடை விடுமுறையோடு மாடியிலிருந்த கொட்டகையை பிரித்துவிடச் சொன்னார். பேரப்பிள்ளைகளுக்கு மட்டும் 5 வகுப்பு வரை முடிந்த வரை சொல்லிக் கொடுத்துவந்தார். அவர்களும் அதற்குபின் யாரோ ஒரு சாரிடம் ட்யூஷன் போகத் துவங்கினர்.

கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு இன்று அவர் செய்தித்தாளில் பார்த்த விஷயம் அவருக்கு இதையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்தது. அவரைப் போன்றே ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் இதே போல் பாதிக்கப் பட்டவர் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அதில் அவருக்கு சாதகமாய் தீர்ப்பாகியிருந்ததாக அதில் போட்டிருந்தது அவர் மனதைக் கிளர்ச்சியுற வைத்திருந்தது. கணிசமான ஒரு தொகை தனக்குக் கிடைக்கக் கூடும் என்பதையும் விடத் தன் நம்பிக்கை பொய்யாகிவிடவில்லை என்பதுதான் அவரது சந்தோஷத்திற்குக் காரணம். அரசாங்கமென்ன அடுத்த வீட்டுக்காரன் போலவா - ஒருத்தரை ஏமாத்தி காசு சேக்க? என்றெல்லாம் சின்னச் சின்னதாய் தனக்குத் தானே தன்னைத் தானே தட்டிக் கொடுத்துக் கொள்வது போல நினைத்துக் கொண்டார்.

ஓய்வூதியம் பெறுவோர்க்கான சங்கம் அவ்வூரின் கடைத்தெருவை ஒட்டிய ஒரு தெருவுக்குள் இருந்தது. எந்நேரமும் அங்கே யாராவது நாலு பேர் உட்கார்ந்து எதாவது செய்தித்தாளைப் புரட்டியபடியோ இல்லை ஊர் உலக நடப்புகளைப் பேசியபடியோ இருப்பார்கள். இருந்தாலும் வெயில் தாழ பெருமாள் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு அப்படியே அங்கே போனால் தன்னோடு படித்து, தன்னோடே ஒன்றாய் வேலையில் சேர்ந்து, ஒன்றாய் ஓய்வு பெற்றுப் பின் தான் பட்ட இந்த பணப்பிடிப்பு பிரச்சனையையும் அனுபவித்த கோபாலன் போன்ற ஆட்களைப் பார்த்துக் கலந்து கொண்டு எதுவானாலும் செய்யலாம் என்று முடிவு செய்து கொண்டார்.
எல்லோருமாய்ச் சேர்ந்து அரசுக் கருவூலத்திற்குப் போய் விவரம் சொல்லி அடுத்த மாதத்திலிருந்தாவது தங்களுக்குப் பழையபடி பென்ஷன் கிடைத்து விடுமா எனக் கேட்டபோது அந்த அதிகாரி சற்றே ஏளனமாய் சிரித்துவிட்டுச் சொன்னார் "ஐயா, நாங்க பேப்பர பாத்து வேலை செய்ய முடியாதுங்க. எங்களுக்கு மேலதிகாரிங்க கிட்டேர்ந்து உத்தரவு வர்ரதைப் பொறுத்துதான் வேலை செய்ய முடியும்." என்ன பதில் சொல்வதென்று தெரியாது விக்கித்துப் போய் நின்றார்கள் அந்த நான்கு பெரியவர்களும். அந்த முகங்களைப் பார்த்து பேசினவரே சற்று நெகிழ்ந்து போய்விட்டார். மெல்லச் சொன்னார் "ஒன்னு செய்யுங்க. உங்க கோரிக்கைய ஒரு மனுவா எழுதித் தாங்க. நான் மேலிடத்துக்கு அனுப்பிப் பாத்துட்டுச் சொல்றேன், அவ்ளோதான் என்னாலானது." என்றார். சரியென்று அங்கேயே உட்கார்ந்து நிதானமாய் நான்கு பேரும் சேர்ந்து யோசித்து ஒரு மனுவை எழுதி அவர் கையில் தந்துவிட்டு வெளியே தளர்ந்து போய் வந்தார்கள்.

"என்னய்யா இது? சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையா இல்ல இருக்கு? ஹைகோர்ட்டே சொன்னப்புறமும் இவனுங்க இப்படி ஆடறானுக..." என்று அங்கலாய்த்தார் கோபாலன். காளிமுத்து மெல்ல தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னார் - "அவரு சரியாத்தானே சொன்னாரு? நாமெல்லாம் ஏதொ மழை புயல்னா ரேடியோவிலும் பேப்பரிலும் சொல்றதைப் பாத்துட்டு பள்ளிகூடத்தை மூடிருவோம். அதுனால ஒன்னும் குடி முழுகிப் போயிடப் போறதில்லை. இது காசு விஷயமாச்சே? நாளைக்கு எதுனா பிரச்சனைன்னா இந்த துண்டு பேப்பரையா வச்சு அவரு வாதாட முடியும்? மேலதிகாரிங்க உத்தரவு அதும் எழுத்து மூலமா இருந்தாத்தானே எதும் செய்ய முடியும் அவராலயும்? ஆக்கப் பொறுத்தோம், ஆறப் பொறுக்க மாட்டோமா என்ன?" என்று இதமாய்ச் சொன்னார். அவர் சொல்வதிலும் ஒரு அர்த்தமிருப்பதை உணர்ந்து கொண்டனர் மற்றவர்கள். அமைதியாய் நடந்து அவரவர் வீடு சென்று சேர்ந்தனர். வாரம் ஒரு முறை கருவூலத்துக்குப் போய் யாரேனும் ஒருவர் நிலவரம் கேட்டு வருவது என்று முடிவாயிற்று. நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு ஏ.ஜி.எஸ் அலுவலகம் வரை போன அவர்களின் மனு ஒரு சிறு குறிப்புடன் அவர்கள் ஊர் கருவூலத்துக்கே திரும்பி வந்தது. ஒவ்வொருவரும் அவரவர் கணக்கில் நேர்ந்த பிழைக்குத் தனித்தனியே உயர்நீதிமன்றத்தை அணுகவும் என்று குறிப்பில் இருந்தது.

முதலில் இந்த ஒற்றை வரி பதில் அவர்களுக்குப் புரியவேயில்லை. இவ்வளவு சிறுபிள்ளைத்தனமான பதிலை எப்படி அரசின் முக்கியமான ஒரு துறையால் சொல்ல முடிகிறதென்று குழம்பிப் போயினர். இத்தனைக்கும் இவர்கள் தங்கள் மனுவிலேயே உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிச் சொன்னதோடில்லாமல் அந்தத் தீர்ப்பின் நகலையும் இணைத்திருந்தனர். இத்தனைக்குப் பிறகும் ஒவ்வொருவரும் தனித்தனியே கோர்ட்டுக்கு அலைய வேண்டுமென்று ஒரு வக்ரம் பிடித்த மனது மட்டுமே சொல்ல முடியும் அதுவும் முதுமையின் வடிவமாய் நிற்கும் மனிதர்களை வதைத்துப் பார்க்க எப்படித் தோன்றும் ஒருவருக்கு? மனதில் இரக்கத்தைப் பசை போட்டுத் துடைத்துவிட்டுத்தான் அரசாங்க உத்தியோகத்துக்கு வருவார்கள் போலும். அல்லது ஒவ்வொரு பதவி உயர்வுக்கும் இவ்வளவு தூரம் என்று வரம்பு கட்டிக்கொண்டு மனிதாபிமானத்திலிருந்து விலகி விட்டிருக்க வேண்டுமோ? ஒரேயடியாய் அப்படிச் சொல்லிவிடவும் முடியவில்லைதான். முதலில் கடுகடுப்பாய் பேசிக்கொண்டிருந்த கருவூல அலுவலர்கூட இப்போதெல்லாம் இந்த வயோதிகக் கூட்டத்திடம் ஒரு அனுதாபத்துடன்தான் நடந்து கொண்டிருந்தார். நேரில் பார்க்கையில் கொஞ்சம் கொஞ்சம் மனிதாபிமானம் எட்டிப் பார்த்துவிடத்தான் செய்கிறது. இப்போது இந்த சேதியைக் கூட ரொம்பவே அனுதாபத்துடன்தான் கூப்பிட்டுச் சொன்னார். சொல்லிவிட்டு தான் எதுவும் செய்யமுடியாதிருப்பதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். யாரிடம் காட்டுவது என்றே தெரியாத ஊமைக் கோபத்தோடு வெளியே வந்தார்கள் நால்வரும்.

இரண்டாம் நாளே எல்லோருமாய் கிளம்பிப் போய் வக்கீல் ஒருவரைப் பார்த்தார்கள். அவரிடம் ஆதியோடந்தமாய் எல்லாவற்றையும் சொல்ல, அவர் தனக்குத் செய்தித்தாளில் குறிப்பிட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட வக்கீலையே தெரியுமென்றும் அவரிடமே இவர்களின் வழக்குகளையும் எடுத்துக் கொள்ளச்சொல்வதாயும் சொன்னார். சற்றே பழைய நம்பிக்கை காளிமுத்துவுக்குச் சுடர் விட்டது. வழக்கு விவரமெல்லாம் பேசி முடிந்தபின் அந்த வக்கீலிடம் கோபால் கேட்டார் "வக்கீல் சார், எல்லாஞ்சரி. ஆனா பேப்பர்ல நாலு மாசத்துக்கொருக்கா பெரிய பெரிய ஜட்ஜுங்களே கோர்ட்லல்லாம் நிறைய கேசுங்க தேங்கிக்கிடக்குன்னு லட்சக்கணக்குல புள்ளிவிவரத்தோட ஆதங்கப் பட்டுக்கறாங்க இல்ல? இந்த மாதிரி பொதுப்படையான கேசுலல்லாமாச்சும் தெளிவா இதே போல பாதிக்கப் பட்டவங்க எல்லாருக்குமா சேத்து உத்தரவு போடலாமில்ல? இப்ப இதே மாதிரி கேசுங்க மட்டும் ஒரு ஆயிரமாச்சும் புதுசா சேராதா? இவ்ளோ படிச்ச ஜட்ஜுமாருங்களுக்கு இவ்வள்வு சின்ன விஷயம் கூடவா புரியாது?" நியாயமான அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாத வக்கீல் "அப்படி போட்டுட்டா எங்களை மாதிரி வக்கீலுங்க பொழப்பு போயிடுமேன்னுதான் ஒவ்வொன்னுக்கும் புதுக் கேசு போடச்சொல்றாங்க போல - ஜட்ஜுங்களும் முன்னாள் வக்கீலுங்கதானே? அந்த விசுவாசம் போல" என்று விளையாட்டாய் சமாளித்தார். மெல்ல யோசித்துவிட்டுப் பின் சொன்னார் - "வழக்கு எதுக்காகப் போட்டிருக்காங்களோ அதுக்குத்தானே தீர்ப்பு சொல்ல முடியும்? அந்த மனுஷன் தன்னோட கணக்கைச் சரி பண்ணச் சொல்லித்தானே கேஸ் போட்டிருக்கார். அதுனால அதுக்கு மட்டும் தீர்ப்புச் சொல்லியிருக்காங்க போல. பொதுநல வழக்கா எல்லாருக்கும் சேத்து யாராச்சும் கேஸ் போட்டா அதுக்குத் தகுந்தாப்பல தீர்ப்புச் சொல்லுவாங்களாயிருக்கும்."

கோபாலனும் விடுவதாயில்லை - நக்கலுடன் கேட்டார் "ஏனுங்க வக்கீலய்யா, பந்த் பத்தி கேசு போட்டா ஆட்சிய கலைக்கறதப் பத்தியும் சேத்துத்தானே பேசறாங்க உங்க ஜட்ஜுங்க? அப்போ வர சமூக அக்கறை ஏன் இந்த மாதிரி ஏழபாழங்க விஷயத்துல எல்லாம் வர்ர மாட்டேங்குது?" இதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாதென்று உணர்ந்த வக்கீல் சமாதானக் கொடியோடு "நீங்கல்லாம் பெரியவங்க. உங்ககிட்ட பேசியாகுமா? அத்தோட நானே மொத்த நீதித்துறைக்கும் சப்பை கட்டு கட்ட முடியுங்களா? இதெல்லாம் பெரிய விஷயங்க. நம்மள மாதிரி சாதாரண ஆளுங்க என்ன செய்ய முடியும் சொல்லுங்க?” என்று தன்னையும் அவர்களோடு இணைத்து இணக்கமாய்ப் பேசி முடித்தார். சென்னைக்குப் போய் கேஸ் நடத்த எவ்வளவு செலவாகும், அந்த வழக்கில் தீர்ப்பு வர எவ்வளவு நாளாகும், அவ்வளவு நாள் நாமெல்லாம் இருப்போமா, பணம் வந்து அதைக் கண்ணால் காணப்போகிறோமா என்றெல்லாம் நிறைய விடை தெரியாத கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தது அவர்களனைவரின் மனங்களும். ஆனால் யாரும் எதையும் வாய்விட்டுப் பேசி அடுத்தவரின் மனநிம்மதியைக் குலைத்துவிட வேண்டாமேயெனும் எண்ணம் அவர்களின் வாயைக் கட்டி விட்டது. மௌனமாய் வீடு திரும்பினர் அனைவரும்.

7 comments:

said...

எழுத்துப் பிழைகளை சுட்டிக் காட்டியதன் மூலம் என்னையும் அக்காவாவே நினைப்பதா சொல்றது வெறும் வார்த்தைக்கு இல்லைன்னு நிரூபிச்சதுக்கு நன்றி மோகன். :)

said...

அருமையான கதை லக்ஷ்மி.

அந்த இறுதிப் பகுதிகளை படிக்கும் போது அந்த முதுமைப் பருவத்தின் தவிப்பு மெல்ல மெல்ல நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

கதை கொஞ்சம் பெரிசா போய்டுச்சு. ஆனால் ஆரம்ப கட்டங்களில் அந்த விவரிப்புகள் தான் அப்படியே ஒரு நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டில் நடப்பவையை காட்டி இருக்கிறது.

கடைசியாய் கேட்டிருக்கும் கேள்வி மிக மிக நியாயமான ஒன்றுதான். வெறும் ஆதங்கம் மட்டும்தான் எழுகிறது.

(அனேகமா இந்த பதிவின் மூலம் எந்தப் பிரச்சினையும் வராது என்றுதான் நினைக்கிறேன்.)

said...

கும்முற இடுகையா இருக்கும்னு வேகமா வந்தேன்..அது எப்பங்க ரிலீஸ்?
***---***
இந்தியாவின் நீதி மற்றும் அரசு இயந்திரங்கள் எவ்வளவு இயந்திரத்தனமா இருக்குங்கிறத சமீபத்தில ஒரு ஆவணப்படத்தில பதிவிச்சிருந்தாங்க..வெறுப்பும் கோபமுமா வந்தது..(படம் பார்ன் இன் டு ப்ராத்தல்ஸ்.. பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான புணரமைப்பு நடவடிக்கைகளில ஈடுபடும் வெளிநாட்டுப் பெண்ணொருத்தி சம்பந்தப்பட்ட குழந்தைகளின் ரேசன் கார்டு பாஸ்போர்ட் இவைகளுக்காய் அரசாங்க அதிகரிகளின் பின்னால் அலைவது குறித்தான பதிவு..)

****----****
என்ன மோகனுக்கு அக்காவா....இதெல்லாம் ஓவருங்க :)

said...

நந்தா, அய்யனார் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆமாம் நந்தா, கதையின் நீளம் தெரிந்தே இருந்தது. ஆனாலும் நம் சமூகத்தில் முதியவர்களுக்கு அந்தப் பணம் எவ்வளவுக்கு அவர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள அவசியமென்பதை உணர்த்தவே அவ்வளவு விவரணைகளும் தந்திருந்தேன்.

அய்யனார் - அரசின் பல்வேறு முகங்களின் மேல் வெறுப்பும் கோபமும் பல சந்தர்ப்பங்களில் வந்ததுண்டுதான். ஆனாலும் நீதித்துறையின் மேல் எழும் அதிகப்படி கோபத்துக்குக் காரணம் செய்வதெல்லாம் செய்துவிட்டு அவர்கள் போட முயலும் நல்ல பிள்ளை வேஷம்தான். இந்த அதிகப்படி வழக்குகள் தேங்கியிருப்பதைப் பற்றி பேசாத நீதிபதிகளே இருக்க மாட்டார்கள். இதே அவர்களிடம் போய் நீதிமன்றத்திற்கு எதற்காக கோடை விடுமுறை - அதை எடுத்துவிடலாமா என்று மட்டும் கேட்டுப்பாருங்கள். அப்போது தெரியும் அவர்களின் நிஜமுகம். பிறகு எதற்காக இந்த அனாவசிய அங்கலாய்ப்பு? முதுகெலும்பில்லாத அரசாங்கங்கள், பொறுப்புணராத அதிகாரிகள், ரோஷமே வராத பொதுமக்களாகிய நாம்.. என்று மாறும் இவையெல்லாம் என்பதுதான் தெரியவில்லை.

அய்யாமார்களே, ரெண்டு பேர் ஒத்துமையா இருந்தா பொறுக்காதா உங்களுக்கெல்லாம்? கண்ணுபோடாதீங்க எங்க பாசமலர் ரேஞ்சிலான பாசத்து மேல.. :)

அப்புறம் அதிமுக்கிய குறிப்பு - கும்முவதற்கேற்ற சூப்பர் இடுகை ஒன்னு அடுத்த வாரம் ரிலீஸ் பண்ணப்போறேன்.. கவலை வேண்டாம்...

said...

நிதர்சனத்தை நிலை நிறுத்தியிருக்கிறீர்கள்....அருமை.

said...

மனசே கனமாப்ப் போச்சு லக்ஷ்மி.

இதுதானே யதார்த்தம்.
நீளமானதாக இருந்தாலும் தொய்வில்லை.கரு அந்த மாதிரி.

said...

மதுரையம்பதி, வல்லி அம்மா - பொறுமையாப் படிச்சுக் கருத்தும் சொன்னதுக்கு ரொம்ப நன்றி.