Monday, September 10, 2007

படித்ததில் பிடித்தது (7)

புத்தகம் - திரைகளுக்கு அப்பால்
ஆசிரியர் -
இந்திரா பார்த்தசாரதி
முதல் பதிப்பு - 1974
சமீபத்திய பதிப்பு - ஜூலை, 2006.
பதிப்பகம் - கிழக்கு

இந்த நாவல் 1971ல் தினமணிக் கதிரில் தொடராக வந்து, பின் பாதியில் நிறுத்தப்பட்டது - காரணம் நம் கலாச்சாரக் காவலர்களின் கைங்கர்யம்தான். வழக்கமான இ.பாவின் அறிவுஜீவித்தனம் ததும்பும் பாத்திரங்கள் நிறைந்த இக்கதையில் அவர்களின் உறவுச்சிக்கலும்தான் மைய இழை. நாவலின் மையப் பாத்திரம் ஒரு பெண் - அதுவும் கருப்பாய் பிறந்துவிட்ட ஒரு பெண். அவளைப் பற்றிய அறிமுகம் இது.

கருப்பு நிறம்! அவள் இன்று இப்பொழுது டில்லியில் ரிவோலி வாசலில் நின்று கொண்டிருப்பதற்கு அதுதான் காரணம். அவளுக்குப் பதினேழு வயதில் கல்யாணம் நடந்தது. தாலி கட்டிய தடியனுக்கு அவள் அப்பா அச்சமயத்தில் அவளுக்குப் போட்டிருந்த நகைகள் தெரிந்தன. அவளது கருப்பு தெரியவில்லை. கல்யாணமாகிக் குடித்தனம் வைத்தபிறகுதான் அவன் சுபாவம் அவளுக்குப் புரியத் தொடங்கியது. அவளுடைய அந்தஸ்தைவிடக் குறைந்தவன் என்பதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை. கருப்புக்கு தாலி கட்டிய தியாகச் சிலுவை. அவள் அவனுடன் குடித்தனம் நடத்திய ஒரு வருடம் முழுவதும் ஒயாத சண்டை. ஒருநாள் அவன் அவளை ஊரில் கொண்டுபோய் விட்டதும் சொன்னன் "கருப்பாயிருந்தாலும் பரவாயில்லை. முரடு. எனக்குச் சரிப்பட்டு வராது."

அதற்குப் பிறகு அவள் அவனை பார்க்கவேயில்லை.


பொதுவாகவே கதைகளில் ஒரு பெண் அல்லது ஆண் கதாபாத்திரத்தின் பாத்திரம் அறிமுகமாகும் போதேவோ இல்லை வெகுசீக்கிரத்திலோ யாருக்கும் யாருக்கும் ஜோடி சேர்ப்பதாக கதாசிரியர் உத்தேசித்திருக்கிறார் என்று அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இந்த கதையில் அவ்விதமெல்லாம் நமது யூகங்கள் பயன்படாது. சடார் சடாரென்று மாறும் உறவுகள், அவர்களில் உணர்ச்சிப் பிணைப்புகள் என்று சற்றே சிக்கலான கதை - இப்போது புரிந்திருக்குமே, ஏன் இந்தக் கதை தினமணிக் கதிரில் பாதியில் நிறுத்தப் பட்டதென்று?

தான் கருப்பு என்கிற ஒரே காரணத்துக்காக அவளுக்கு கிடைக்கவிருந்த வெளிநாட்டு வாய்ப்பு அவளது அலுவலகத்தில் தட்டிப்பறிக்கப் படுகிறபோது மேலதிகாரியைப் பார்த்து பொறிவதும் பின் அதனால் எனக்கு வேலை போகாது - ட்ரான்ஸ்பர்தான் கிடைக்கும் அதுவும் ப்ரமோஷனோடு என்று அடித்துச் சொல்வதுமாய் எதைப் பற்றியும் கவலைப் படாது தன்னிச்சையாய் செயல்படும் பூமா, மற்றவர்கள் அவளை ஒரு வனதேவதை என்று வர்ணிப்பதற்கேற்றவாறே நடந்து கொள்கிறாள்.

அவளை ஒரு தேவதையாகவே பூஜிக்கும் ஒரு மனிதர் - ஜெயின். அவரை ரொம்பவுமே அலட்சியமாய் பூமா நடத்த, உள்ளூற அதை வெறுத்தாலும் வெளியில் காண்பித்து பூமா மனதை நோகடிக்க வேண்டாமே என்று மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு புழுங்குகிறார். விளைவு - மனநோயாளியாகிறார். அவரை பார்க்கப் போகுமிடத்தில் அறிமுகமாகும் அவரது மைத்துனரான அகர்வால் எனும் இளைஞன் பூமாவோடு ஏற்படுத்திக் கொள்ளும் உறவு, அது அவளுடன் பழகி வந்த அனைவருக்கும் தரும் எதிர்பாராத அதிர்ச்சி - இப்படி எதிர்பாராத பல திசைகளில் போகும் கதையின் சுவாரசியமே அடுத்து இப்படித்தான் நிகழும் என்று நம் மனதிலிருக்கும் யூகங்கள் உடைவதில்தான்.

ஆண் பெண் உறவுச் சிக்கல்கள் பற்றிய கதைகள் தமிழில் புதிதில்லை. இவ்வுறவிலேற்படும் எந்த சிக்கலுக்கும் தலைவலிக்கு அனாசின், ஜூரமென்றால் க்ரோசின் என்பது போல வரையறுக்கப்பட்ட தீர்வுகள் இல்லை. கதைகளிலும் சினிமாவிலும் தங்கள் வாழ்க்கைக்கு தீர்வு தேடும் நம் மனோபாவத்தின் விளைவுதான் - ரொமான்ஸ் ரகசியங்கள் போன்ற தொடர்கள். அப்படியான வாசகர்கள் இந்த கதையை படித்தால் ஏற்படும் அதிர்ச்சியை எண்ணிப் பார்க்க சுவாரசியமாகத்தான் இருக்கிறது. அதுவும் 1970களில், இதை ஒரு வெகுஜனப் பத்திரிக்கையில் எழுதினார் என்பது இ.பாவின் துணிச்சலை காண்பிக்கிறது.

ஆனால் எனக்கு எப்போதுமே இ.பாவின் கதைகளின் முடிவு பற்றி ஒரு அதிருப்தி உண்டு - வாழ்வே ஒரு வியர்த்தம் என்று அழுத்திச் சொல்வதாக இருக்கும். மேலும் அவரது பாத்திரங்களின் அதிபுத்திசாலித்தனமான உரையாடல்கள் படிக்கும் வேகத்தை குறைத்து சற்றே எரிச்சலேற்படுத்துவதுண்டு. அந்த எரிச்சல் இக்கதையிலும் அங்கங்கே ஏற்படத்தான் செய்கிறது. ஆனாலும் சம்பிரதாயங்களை உடைத்தெறியும் உண்மையை உரக்கக் கூறும் நேர்மையை உடையவர்கள் அவரது பாத்திரங்கள். அதுவே அக்கதைகளின் பலம். இக்கதையிலும் பெரும்பாலான பாத்திரங்கள் அப்படித்தான்.

2 comments:

said...

இந்த புத்தகத்தையும், அந்த எழுத்தாளரையும் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுகிறது உங்கள் பதிவு. - நன்று. நன்றி..

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரஞ்சித். நீங்க தமிழில் உங்க கருத்துக்களை பகிர்ந்துக்க ஆரம்பிச்சது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.