Wednesday, April 18, 2007

அழகுகள் ஆயிரம் - அதில் சில...

ஆட்டத்துக்கு சேர்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க மங்கை. என் வரையில் அழகு என்பது எப்பவுமே ஒரு வரையறுக்கப்பட்ட விஷயம் இல்லை. அது ஒரு மனோபாவம். ஒருத்தருக்கு வானம் அழகுன்னால், பக்கத்திலிருப்பவருக்கு பூமிதான் அழகாத்தெரியும். சோ... நான் அழகுன்னு சொல்றதெல்லாம் உங்களுக்கும் அழகாத்தெரியணும்னு அவசியமில்லைதான். இருந்தாலும் ஆட்டம்னு வந்துட்டதால எனக்கு அழகுன்னு தோணற சில விஷயங்களை இங்கே பட்டியலிடறேன்.

ஊர்ல எங்க வீடு ரொம்ப பழைய காலத்து மாடல்ல இருக்கும். நாட்டு ஓடுதான் கூரை. தரைக்கு மட்டும் எங்க அப்பா பெரிய மனசு பண்ணி சிமென்ட் போட்டு அதுல சிவப்பு கலர் சிங்குச்சா நீலக்கலர் சிங்குச்சான்னு கலர் வேற போட்டு விட்டிருக்கார். வீட்டுக்கு நடுவுல திறந்தவெளியா கொஞ்ச இடம் இருக்கும் - முற்றம்ன்னு சொல்வோம் (பேச்சுவாக்கில் மித்தம்னுதான் பெரும்பாலானவங்க சொல்வாங்க.) இந்த இடம்தான் வீட்டுலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். இது ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு அழகை தொடர்ந்து வெளிப்படுத்திக்கிட்டே இருக்கற இடம். எங்க வீட்டு முற்றத்தில் இரும்புக்கம்பிகளை பாதுகாப்புக்காக போட்டு வைத்திருப்போம். மழை நின்ற பின் அந்த கம்பிகள்ள தொங்கும் நீர்த்திவலைகள் அப்படியே முத்துக்களை கோர்த்தாற்போல இருக்கும். அப்போ சூரிய வெளிச்சம் மேல பட்டால் அப்படியே ஜொலிக்கும். அப்போ பார்த்து லேசான காற்று அடிச்சு அதுல அந்த நீர்த்துளிகள் மெதுவாய் ஆடினால்... எப்படி சொல்றதுன்னு தெரியலை. வைத்த கண் வாங்காம பார்த்துக்கொண்டே இருக்க வைக்கும். இரவு நேரத்தில் மின்சாரம் நின்று போய்விட்டால் இந்த முற்றத்தை சுற்றியுள்ள பகுதியில்(தாழ்வாரம் என்போம் இதை) வந்து எல்லோரும் அமர்வோம். சுத்தமாய் மின்சாரமே இல்லாததால் இருள் இன்னும் அடர்த்தியாய் தெரிய, நிலாக்காலமெனில் நிலவொளியும் அது இல்லாத நாளில் நட்சத்திரங்களின் ஜொலிப்புமாய் வானம் பாரதியின் 'பட்டுக்கருநீலப்புடவை, பதித்த நல்வயிரங்கள்' அப்படின்ற வரிகளை நினைவுபடுத்தும். சிறு வயதில் தினமுமே இரவு சாப்பாடானதும் அப்பா என்னை தாழ்வாரத்தில் உட்கார வைத்து தான் முற்றத்தில் ஒரு ஈஸிச்சேரில் அமர்ந்த வண்ணம் தினம் ஒரு கதை சொல்வார் (அப்பா ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் - அதுவும் ஆரம்பப்பள்ளி ஒன்றில் வேலையில் சேர்ந்த நாள் முதல் தலைமை ஆசிரியராவதற்கு முன்வரை தொடர்ந்து ஒன்றாம் வகுப்புக்கே ஆசிரியராய் இருந்தவர். ஆகையினால் எனக்கும் தினம் ஒரு கதை கிடைக்கும் சின்ன வயசில்). கதை மட்டுமில்லைங்க, பாரதியார் பாடல்கள், குறள் , கம்பரின் பாடல்கள் அப்படின்னு எனக்கு தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ததும் என் அப்பாதான். செய்த இடம் இதே முற்றம்தான். பாரதியாரோட எங்கிருந்தோ வந்தான் பாடலை கேட்டிருப்போம். அப்பா அந்த பாடலின் துவக்கத்திலிருந்து சொல்வார். அது 'கூலிமிகக்கேட்பார்' அப்படின்னு வேலையாட்கள் சிலர் செய்யும் அடாவடித்தனங்களை பற்றி புலம்பியபடி ஆரம்பித்து பின் கண்ணன் கிடைத்ததும் எவ்வளவு சவுகரியங்கள் கிடைத்ததுன்னு சொல்லும் பாடல் - ஒரு கதை போல இருக்கும். இப்படி பல அற்புதமான பாடல்கள், ராமாயண மகாபாரத கதைகள் (அதுலயும் இந்த மகாபாரதம் இருக்கே அது ஒரு கதைச்சுரங்கம். கதைக்குள்ள கதைக்குள்ள கதைன்னு போயிகிட்டேயிருக்கும். பெரியவங்க எல்லாம் எப்படித்தான் கதாபாத்திர பெயரிலிருந்து சகலத்தையும் நினைவு வச்சுக்கறாங்களோ தெரியலை. அது தெரிஞ்சிருந்தா ஒழுங்கா படிச்சு கிழிச்சிருக்க மாட்டோமா நாம...) எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது இந்த முற்றத்தில்தான். நிமிர்ந்து பார்த்தால் எங்கள் தோட்டத்து தென்னையும் பக்கத்து வீட்டு தோட்டத்து வேப்பமரமும் தெரியும். இன்னும் சற்று நிமிர்ந்தால் வயிரம் பதித்த கருநீலப்பட்டுப்புடவை - அதான் நம்ம வானம் தெரியும். எல்லரையும் போல எனக்கும் குழந்தைப்பருவம்தான் வாழ்வின் பொற்காலம் இப்போ வரை.

அடுத்த அழகு எங்க அம்மாவோட சுங்கடி புடவைகள். அம்மா நல்ல நிறம். அதுலயும் கொஞ்சம் அடர் வண்ணங்களில்தான் சுங்கடி வகை காட்டன் புடவைகள் வாங்குவார். அதுல சிலதுல நல்ல ஜரிகை வேலைப்பாடு இருக்கும். தினப்படிக்கு சாதாரண டிசைன் கொண்ட புடவைகள், விசேஷங்களுக்கு ஜரிகை வேலைப்படுகள் கொண்ட புடவைகள்ன்னு வைத்திருப்பார். மற்ற பெண்கள் பட்டிலும் வைரத்திலும் மின்ன நடுவில் அம்மா இந்த வகையிலான சுங்கடி புடவைகளில் அசத்துவார். புடவையின் அழகும் அம்மா அதை உடுத்தும் பாங்கும் இந்த புடவைக்கு பல புது வாடிக்கையாளர்களை உருவாக்கியதென்றால் அது மிகையல்ல. அதிலும் அம்மாவிடம் அரக்கு வண்ணத்தில் கருப்பு கரை வைத்த புடவை ஒன்று உண்டு - கரையில் மட்டும் ஜரிகை வேலை செய்தது. எனக்கு மிகப்பிடித்த புடவை அது. கல்லூரிக்கு நானும் அந்த புடவையை சில சமயம் கட்டிக்கொண்டு சென்றிருக்கிறேன். ஆனால் கண்ணாடியில் பார்க்கும் போது அம்மாவுக்கு அந்த புடவை எப்படியிருந்தது என்று ஒப்பிட்டுக்கொள்ளத்தோன்றும் - அது கான மயிலாட பாடலை வேறு நினைவு படுத்துமா, எனவே அந்த புடவையை மட்டும் சுடும் எண்ணத்தை கைவிட்டு விட்டேன். மற்றபடி சிந்தடிக் புடவை என்றால் அம்மாவே எனக்கென எடுத்து வைத்து விடுவார்(ச்சோ ஸ்வீட் :) ).

அடுத்த அழகு எங்க அம்மாவோட குங்கும பொட்டு - நல்ல பெரிய வட்டமாய் நெற்றியிலும், சிறிது உச்சி வகிட்டிலும் இட்டுக்கொள்வார். சுகந்தா குங்குமமும் Eyetex - இன் ஆஷா எனப்படும் மெழுகும் உபயோகிப்பார். முதலில் ஆஷாவினால் சிறிய வட்டம் வைத்து அதன் பின் அதன் மேல் குங்குமம் வைப்பார். விரலில் மிச்சமிருக்கும் குங்குமம் உச்சி வகிட்டிற்கு. எப்படித்தான் அப்படி சிறு பிசிறு கூட இல்லாமல் வட்டமாய் வைப்பாரோ தெரியாது. பல நாள் பக்கத்திலிருந்து பார்த்திருந்தாலும் என்னால் செய்ய முடிந்ததில்லை.

ரொம்பவே கொசுவத்தி சுத்திட்டேன்னு நினைக்கறேன். அதுனால இப்போதைக்கு பக்கத்திலிருக்கும் அழகு ஒன்னு - என் வீடு. வாங்கி ஒரு 8 மாதம்தான் ஆகிறது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சில்லையா? மத்தவங்களுக்கு ஒரு சாதாரண வீடா மட்டுமே இது தெரியலாம். ஆனால் எனக்கு தாய்மடி போல, கதவைத்திறந்து உள்ளே நுழையும் போதெல்லாம் ஆசுவாசம் தருவது இது.

சரி. விட்டால் இந்த பட்டியல் முடிவே இல்லாமல் நீளும் அபாயமிருப்பதால், இங்கே ஒரு பிரேக் அடிக்கறேன். அப்புறமா சந்தர்ப்பம் கிடைக்கும் போது மீதியை பார்க்கலாம். இப்போ இந்த ஆட்டத்தை தொடர நான் அழைப்பது மதுரா அக்காவையும் ,செல்வ நாயகி அவர்களையும், மகா அவர்களையும்.